Interstellar and Black Holes

by Karundhel Rajesh February 19, 2014   English films

சென்ற கட்டுரையில் இண்டெர்ஸ்டெல்லார் படத்தின் லீக் செய்யப்பட்ட திரைக்கதையில் என்னவெல்லாம் வருகின்றன என்று பார்த்தோம். நோலன், திரைக்கதை லீக் செய்யப்பட்டது தெரிந்ததுமே அவரது திரைக்கதையை மாற்ற ஆரம்பித்துவிட்டார் என்றும், இப்போது படப்பிடிப்பை முடித்தது மாற்றிய திரைக்கதையை வைத்துதான் என்றும் இணைய செய்திகள் சொல்கின்றன. எது எப்படி இருந்தாலும், முழுத் திரைக்கதையை மாற்றுவது கடினம். எப்படியும் ஒரிஜினல் திரைக்கதையில் 60% அப்படியே இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

அடுத்த Black Hole பற்றிய கட்டுரையை எழுதலாம் என்று நினைக்கும்போது வைரல் ஃபீவர். கடந்த ஐந்து நாட்களாக தூக்கம் மட்டுமே. தற்போது சற்றே தெளிவாக இருப்பதால் இந்தக் கட்டுரை.

ஓகே. Black Hole என்பது என்ன என்று பார்ப்பதற்கு முன்னர், அந்த வார்த்தையைப் பற்றிப் பார்ப்போம். சில வார்த்தைகள் அளிக்கும் அர்த்தத்துக்கும், அந்தப் பொருளைப் பார்க்கும்போது நமக்குக் கிடைக்கும் நேரடி அர்த்தத்துக்கும் சில வேறுபாடுகள் இருக்கும். விமானத்தில் இருக்கும் Black Box என்பது அப்படிப்பட்டதுதான். இதைப்போன்றதுதான் Black Hole. இந்த வார்த்தையை உருவாக்கியவர், ஜான் வீலர் என்ற அமெரிக்க விஞ்ஞானி (John Wheeler). உருவாக்கிய ஆண்டு – 1969. அதற்கு முன்னர், கருந்துளை என்ற கான்ஸெப்ட் உருவான காலத்தில் அது Dark Star என்று அழைக்கப்பட்டது.

1783ல், ஜான் மிஷெல் (John Michell) என்ற ஜியாலஜிஸ்ட், Philosophical Transactions in the Royal society of London என்ற பத்திரிகையில்தான் முதன்முதலில் கருந்துளைகளைப் பற்றி எழுதினார். பொதுவாக ஒளி என்பது முற்றிலும் துகள்களால் ஆனது என்றும் (ந்யூட்டன் இதற்கு ஆதரவளித்தார்), ஒளி என்பது அலைகளால் ஆனது என்றும் இரண்டு தியரிகள் அப்போது இருந்தன. தற்போதைய விஞ்ஞானம், எல்லா துகள்களுக்கும் அலைகளாலான ஒரு வடிவமும் உண்டு என்று சொல்கிறது. ஆனால் அக்காலத்தில் இந்த இரண்டில் எது உண்மை என்று நிரூபிக்க கடும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. அப்படி ஒரு காலத்தில், ‘ஒளி என்பது ஒருவேளை துகள்களால் ஆனது என்பது உண்மையானால், அந்தத் துகள்கள் புவியீர்ப்பு விசையால் எப்படியும் பாதிக்கப்படும்’ என்று ஒரு கருத்தை முன்வைத்து ஜான் மிஷெல் ஒரு பேப்பரை எழுதினார்.

தனது நிறை மிக அதிகமாகவும், வடிவம் மிகச் சிறியதாகவும் இருக்கும் ஒரு நட்சத்திரம், தன்னிடமிருந்து வெளியேறும் ஒளியைக் கூட தப்பிக்க விடாது; அந்த ஒளியை உள்ளே இழுத்துக்கொள்ளக்கூடிய கடுமையான ஈர்ப்பு விசை அந்த நட்சத்திரத்துக்கு உண்டு என்பதே ஜான் மிஷெல் சொன்ன கருத்து. இதுபோன்ற நட்சத்திரங்கள் எக்கச்சக்கமாக விண்வெளியில் இருக்கலாம் என்றும் அவர் சொன்னார். அப்போதைய காலத்தில் அவை யார் கண்ணுக்கும் தெரியாமல் இருந்தன. காரணம் நட்சத்திரங்களுக்கும் பூமிக்கும் இருக்கும் கற்பனைக்கெட்டாத தூரங்கள். அந்த தூரங்களில், நட்சத்திரங்களின் ஒளி நம்மை எட்டாமலும் போகலாம். ஆனால், இத்தகைய நட்சத்திரங்களை, அவைகளின் ஈர்ப்பு விசையை வைத்துக் கண்டுகொள்ளலாம். அதாவது, இந்த நட்சத்திரம் பக்கத்தில் இருக்கும் இன்னொரு நட்சத்திரத்தின்மீது செலுத்தும் ஈர்ப்பு விசையால் அந்த இன்னொரு நட்சத்திரம் இதனைச் சுற்றும். அப்போது இந்த நட்சத்திரத்தைக் கண்டுபிடித்துவிடலாம்.

இப்படித்தான் கருந்துளைகளைப் பற்றிய ஆராய்ச்சி துவங்கியது.

Black Hole என்பது இதுதானா?

ஒரு நட்சத்திரம் உருவாகும் முறையைப் பார்த்தால், கருந்துளையின் கான்ஸெப்ட்டை எளிதில் புரிந்துகொண்டுவிடலாம். அதிக அளவிலான வாயுக்கள் (பெரும்பாலும் ஹைட்ரஜன்) ஒன்றுசேர்ந்து, அதன் அணுக்கள் ஹீலியத்தை உருவாக்குகின்றன. இப்படி உருவாக்கப்படுவதுதான் நட்சத்திரம். எரிந்துகொண்டிருக்கும் ஹீலியம், அந்த நட்சத்திரத்திரத்தின் உள்ளிருக்கும் அழுத்தத்தை சமன் செய்கிறது. ஒருவேளை ஹீலியம் எரியவில்லை என்றால் அந்த நட்சத்திரம் சுருங்கிவிடும். எரியும் ஹீலியம், அப்படி அது சுருங்கிவிடாமல் பாதுகாக்கிறது. ஆனால் எத்தனை காலம்தான் இப்படி அந்த நட்சத்திரம் எரிந்துகொண்டே இருக்கமுடியும்?

தன்னிடம் இருக்கும் வாயுக்கள் தீர்ந்தவுடன், அந்த நட்சத்திரத்தின் கதி என்ன?

இது தெளிவாக உலகுக்குப் புரிந்த காலம், 1920க்களின் இறுதி. ஒரு இந்தியரின் மூலமாக. அவரது பெயர் – சுப்ரமண்யம் சந்திரசேகர். இதைச் சொல்லும்போது அன்னாரின் வயது – 19.

தன்னிடமிருக்கும் எல்லா எரிபொருளும் தீர்ந்தபின்னரும், ஒரு நட்சத்திரம் தன்னை தன்னிடம் இருக்கும் ஈர்ப்பு சக்தியிடமிருந்தே எப்படிக் காத்துக்கொள்ளமுடியும் என்று அவர் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். ஈர்ப்பு சக்திக்கும் எரிபொருளின் அழுத்தத்துக்கும்தான் நேரடிப் போட்டி என்பதைப் பார்த்தோம். ஈர்ப்பு சக்தி என்பது தீரவே தீராதது. எரிபொருள் என்பது எப்படியும் தீர்ந்துவிடும். எனவே, எரிபொருள் தீர்ந்ததும் அந்த நட்சத்திரத்தின் கதி என்னாகும் என்பதற்கு சந்திரசேகர் ஒரு தியரியைக் கண்டுபிடித்தார். எரிபொருள் தீர்ந்த ஒரு நட்சத்திரத்தின் மொத்த நிறை, சூரியனின் நிறையை விட ஒண்ணரை மடங்கு குறைவாக இருந்தால் (உண்மையில் அது சூரியனின் நிறையில் 1.4 பங்கு. இதுதான் ’சந்திரசேகர் லிமிட்’ – சந்திரசேகர் கணக்கிட்ட எண்), அந்த நட்சத்திரம் சுருங்குவதை நிறுத்திவிட்டு, White Dwarf என்ற ஒரு குறிப்பிட்ட நட்சத்திரமாக ஆகிறது. இதன் சுற்றளவு சில ஆயிரம் மைல்களாகவும், நிறை, ஒரு cubic inchல் பல நூறு டன்களாகவும் இருக்கும். இதனால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அதுபாட்டுக்கு அப்படியே இருந்துவிட்டுப் போகிறது. சந்திரசேகர் லிமிட்டை விடக் குறைவாக ஒரு நட்சத்திரத்தின் நிறை இருந்தால் பிரச்னை இல்லை என்பது சுருக்கம்.

ஆனால், ஒருவேளை இப்படி எரிபொருளைத் தீர்த்துவிட்ட நட்சத்திரத்தின் நிறை, சூரியனின் நிறையைப் போல் ஒண்ணரை மடங்கு அதிகமாக இருந்துவிட்டால்? அதாவது சந்திரசேகர் லிமிட் என்ற எண்ணைவிட அதிகமாக இருந்துவிட்டால்?

அப்படிப்பட்ட நட்சத்திரத்துக்கு, அதன் சொந்த ஈர்ப்புவிசையில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு கிடையாது. சிலமுறை அவை வெடிக்கலாம். அல்லது அதன் பரப்பளவிலிருந்து எக்ஸ்ட்ரா எடையை வெளியே வெடிப்புகள் மூலமாக வீசியெறிந்து, சந்திரசேகர் லிமிட்டுக்குள் வந்துவிடலாம். ஆனால், இதெல்லாம் அதற்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள்? ஒரு நட்சத்திரத்துக்கு, தன் எடையைக் குறைத்தால்தான் அழிவிலிருந்து தப்பலாம் என்பது எப்படித் தெரியும்? சில முறை இவை ஆக்ஸிடெண்ட்டலாக நடக்க வாய்ப்பு இருக்கிறது.

பெரும்பாலும், இப்படிப்பட்ட நட்சத்திரங்கள் ஒரு கட்டத்தில் ந்யூட்ரான் நட்சத்திரங்களாகவோ (அளவில் மிகமிகச் சிறிய, ஆனால் நிறையில் மிகமிகப் பெரிய நட்சத்திரங்கள்), அல்லது டுமீலென்று எக்கச்சக்கமாக சுருங்கி, கருந்துளைகளாகவோ மாறுகின்றன என்பதே சந்திரசேகர் சொல்லிய புதிய தியரி. இதைக் கேட்டவுடன், முப்பதுகளின் விஞ்ஞானிகள் எரிச்சல் அடைந்தனர். ‘என்னய்யா இந்தாள் பாட்டுக்கு நட்சத்திரம்ன்றான், புள்ளியா மறையும்ன்றான்? இதெல்லாம் எப்படி சாத்தியம்? பிஸிக்ஸ் உலகில் இதெல்லாம் நடக்காது. எதாவது ஒரு சக்தி (???!!) அப்படி நடக்காமல் தடுத்துவிடும்’ என்றே அந்த விஞ்ஞானிகள் பேசினர். ஐன்ஸ்டைன் கூட, அந்தக்காலத்தில் அப்படி நடக்கச் சாத்தியமில்லை என்று ஒரு பேப்பர் எழுத, சுப்ரமண்யம் சந்திரசேகர் விஞ்ஞான உலகால் உதாசீனப்படுத்தப்பட்டார். முடிந்தவரை மென்மையாக தனது வாதத்தை நிரூபித்த சந்திரசேகரை ஒருவரும் கண்டுகொள்ளாததால், மனமுடைந்து வேறு சில ஆராய்ச்சிகளில் ஈடுபடத் துவங்கினார். முப்பதுகளில் அவர் propose செய்த இந்தக் கருத்துக்கு 1983ல் நோபல் பரிசு கிடைத்தபோதுதான் அவரைப்பற்றியே பலருக்கும் தெரிந்தது.

சரி. இதுவரை பார்த்ததை வைத்து, கருந்துளைகள் எப்படி இருக்கும் என்பதை கவனிப்போம். எல்லா எரிபொருளும் தீர்ந்துபோன ஒரு நட்சத்திரம், தனது நிறை, சூரியனின் நிறையில் ஒண்ணரை மடங்குக்கும் மேலாக இருந்தால், படபடவென்று சுருங்க ஆரம்பிக்கிறது. அதே சமயத்தில் அதன் ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பிக்கிறது. எரிபொருள் தீர்ந்தபின்னர் அந்த நட்சத்திரம் வெடித்தும் சிதறும். அப்படி வெடித்தபின்னர், நட்சத்திரத்தில் என்ன பாக்கி இருக்கும்? Core என்று நாம் அழைக்கும் அதன் உட்புறம். இந்த உட்புறம்தான் சுருங்கிக்கொண்டே வருகிறது. அதேசமயம் ஈர்ப்பு விசை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுதான் கருந்துளை. கருந்துளைக்கு உள்ளே எதுவும் இல்லாத பாழ்வெளி என்பது உண்மையில்லை. உள்ளே இருப்பது முன்பு ஒரு காலத்தில் இருந்த நட்சத்திரத்தின் core. இப்போதும் அது இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் என்ன? அதன் சைஸ் சுருங்கிக்கொண்டே வருகிறது. எதுவரை இந்த சைஸ் சுருங்கும்? இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் அளவைகளில் மிகச்சிறியது Planck Length என்பதை சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்த சைஸ் வரை சுருங்குவதை அளவிடலாம். ஆனால் இதற்கு மேல் சுருங்கிவிட்டால் அதை அளவிடமுடியாது. அதேசமயம், அத்தனைக்கத்தனை அதன் ஈர்ப்பு அதிகமாகவே இருக்கும்.

இப்படிப்பட்ட ஒரு வஸ்து, தன்னருகே எது இருந்தாலும் லபக்கென்று உள்ளே இழுத்துக்கொண்டுவிடும். அதேசமயம் உள்ளே சென்ற அந்தப் பொருள், பீஸ் பீஸாகக் கிழிக்கப்படும். காரணம், உச்சபட்ச ஈர்ப்பு. இந்தக் coreல் இருந்து ஒளி வெளியேறுகிறது என்றால், அதுவும் உள்ளே இழுத்துக்கொள்ளப்பட்டுவிடும். இதுதான் கருந்துளையின் இயல்பு. ஆகவே, கருந்துளை என்பது பாழ்வெளி என்று யாராவது சொன்னால், அவர்கள் தலையில் குட்டி, உள்ளே இருப்பது பழைய நட்சத்திரத்தின் core என்று சொல்லலாம்.

இந்தக் கருந்துளையின் தன்மைகள் என்னென்ன?

முதலாவதாக, பழைய நட்சத்திரம் சுற்றிக்கொண்டு இருந்தால் இந்தக் கருந்துளையும் சுற்றும். அதன் கோர் சிறியதாக ஆக, சுற்றும் வேகம் மிக அதிகம் ஆகும். கருந்துளைக்கு வெளியே, ஈவண்ட் ஹொரைஸன் (Event Horizon) என்று அதன் எல்லைக்குப் பெயர். இந்த எல்லைக்கும் வெளியே, Ergosphere என்று ஒரு ஏரியா, கருந்துளையின் சுழற்சியால் உருவாகும். இந்த எர்கோஸ்பியரில் நாம் சென்று ஜம்மென்று அமர்கிறோம் என்றால், நாம் பார்க்கும் காட்சிகள் அருமையாக இருக்கும். இந்த இடத்தில் இருந்து காலம் கண்டபடி மாறுகிறது. கருந்துளையின் சுழற்சி, நாம் சென்ற கட்டுரையில் பார்த்தபடி, நமது காலத்தைக் குறைக்கிறது. காரணம் இங்கே ஒளியின் வேகத்துக்கு மேல்தான் எதுவுமே நடக்கும். இதனால் பூமியில் இருக்கும் காலத்தைவிட நம் காலம் மிகவும் குறைகிறது. ஒளியின் வேகத்தைத் தாண்டினால், இங்கே ஒரு நாள் என்பது பூமியில் ஒரு வருடம்.

கூடவே, கருந்துளை என்றால் இருண்டுபோய் இருக்கும் என்பதும் இல்லை. கருந்துளை எக்கச்சக்கமான வெளிச்சத்தை உமிழக்கூடிய தன்மையுடையது. கருந்துளைக்குள்ளிருந்து ஒளியே வெளியே வர முடியாது என்றால், இந்த வெளிச்சம் எங்கிருந்து வரும்? அதன் வெளி எல்லையான ஈவண்ட் ஹொரைஸனிலிருந்துதான். சில முறை, நேரடியாக கருந்துளைக்குள்ளே விழாமல், அதனைச் சுற்றியும் பொருள்கள் விழுவது உண்டு. இப்படிப்பட்ட பொருட்கள் ஒன்றோடொன்று சுழற்சியில் உராய்ந்து ஒளி பிறக்கும். அந்த ஒளியும், ஈவண்ட் ஹொரைஸனில் இதேபோன்று உருவாகும் ஒளியும் சேர்ந்து அந்தக் கருந்துளையை பிரகாசமாக ஒளிரவும் வைக்கும்.

இப்படிப்பட்ட ஒரு கருந்துளையில் நிகழும் ஒரு பிரம்மாண்ட ந்யூட்ரான் நட்சத்திரத்தின் வெடிப்பில் இருந்து கிளம்பும் அலைகள், அங்கிருக்கும் ஒரு Wormhole மூலமாக பூமிக்கு வருவதில் இருந்துதான் இண்டெர்ஸ்டெல்லாரின் திரைக்கதை துவங்குகிறது. இதன்பின் பூமியில் இருந்து கிளம்பும் விண்கலம், இந்தக் கருந்துளையின் சுழற்சியில் சிக்கிக்கொண்டு அதனால் அவர்களின் காலம் மாறுவதைப் பற்றியும் திரைக்கதையில் இருக்கிறது.

கருந்துளைகளில் எழுபதுகளில் இருந்து குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளைச் செய்துவந்திருப்பவர் ஸ்டீஃபன் ஹாக்கிங். இவரால்தான் கருந்துளைகளைப் பற்றிய ஒரு awareness எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் நிகழ்ந்தேறியது. இவர் எழுதிய A Brief History of Time என்ற புத்தகத்தில் கருந்துளைகளைப் பற்றிய எக்கச்சக்கமான தகவல்கள் உள்ளன. இவரது வேறு பல ஆராய்ச்சிக்கட்டுரைகளுமே கருந்துளைகளைப் பற்றிய பல தகவல்களைத் தருவன.

இண்டர்ஸ்டெல்லார் படத்தில், ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் சக விஞ்ஞானியான Kip Thorne கருந்துளைகளைப் பற்றி முன்வைத்த சில கருத்துகள் இருக்கின்றன. இவருமே கருந்துளைகளைப் பற்றி எக்கச்சக்கமான ஆராய்ச்சிகளைச் செய்த நபர். குறிப்பாக அண்டவெளியின் சில வஸ்துக்களை கருந்துளைகள் இயங்க வைக்கின்றன என்ற இவரது கருத்து பிரசித்தமானது (Membrane Paradigm). கூடவே, இண்டெர்ஸ்டெல்லார் படத்தில் wormholeகளைப் பற்றி வருவது எல்லாமே கிப் தார்னின் ஆராய்ச்சிகள்தான்.

சில நாட்களுக்கு முன்னர், ஹாக்கிங் ஒரு ஆராய்ச்சிக்குறிப்பை வெளியிட்டார். அதன்படி, கருந்துளைகள் என்பதே இல்லை என்று ஹாக்கிங் சொல்லிவிட்டதாக உலகெங்கும் உள்ள மீடியாக்கள் பிரச்னையைக் கிளப்பின. (இந்தியாவில் இது வரவே இல்லை என்று நினைக்கிறேன். நமக்கு அரசியலே போதும்). ஆனால் உண்மை அதுவல்ல. மிக மிக எளிதாக இதை அறிய முயற்சிக்கலாம்.

எழுபதுகளில், ஹாக்கிங் இந்தக் கருந்துளைகளைப் பற்றி ஒரு பேப்பர் எழுதினார். அதில், கருந்துளைகளின் core சுருங்கிக்கொண்டே வந்து, சிறுகச்சிறுக ஒரு கட்டத்தில் மாயமாகிவிடும் என்று சொல்லியிருந்தார். அப்படியென்றால், அதுவரை அந்தக் கருந்துளைக்குள் ஈர்க்கப்பட்ட வஸ்துக்களின் நிலை? அந்த வஸ்துக்கள் உடனடியாகவே அழிந்துவிடும் என்றாலும், அவற்றின் தன்மைகள் – அவற்றின் ரசாயன வடிவங்கள், அவற்றின் structure போன்றவை – உள்ளேயேதான் இருந்துகொண்டிருக்கும். அப்படி அந்தக் கருந்துளை இறுதியில் அழியும்போது இவையும் சேர்ந்து மறைந்துவிடும். இதுதான் ஹாக்கிங் எழுபதுகளில் சொல்லியிருந்தது.

இது, ஒரு சிறிய குழப்பத்தை அப்போது தோற்றுவித்திருந்தது. இது சாத்தியமா? கருந்துளைக்குள் சென்ற வஸ்துக்களின் நிலை என்ன என்பது இப்போதுவரை குழப்பம்தான். அந்தக் குழப்பத்தின் பெயர் – Information Paradox.

தனது பல்லாண்டுகளின் கருந்துளை ஆராய்ச்சியின் விளைவாக அவ்வப்போது பேப்பர்களை எழுதுவது ஹாக்கிங்கின் வழக்கம். தற்போது அவர் எழுதியிருக்கும் லேட்டஸ்ட் பேப்பரில், இந்தப் பிரச்னைக்கு வழி சொல்ல முயன்றிருக்கிறார். என்ன சொல்லியிருக்கிறார் என்றால், அப்படி ஒரு கருந்துளை அழியும்போது அந்தச் செய்திகள் அழியாமல், தற்காலிகமாக ஒரு இடத்தில் சேமித்து வைக்கப்படுகின்றன. அந்தச் செய்திகள் அதன்பின் வெளியே அனுப்பவும் படுகின்றன. இதனால், எப்போதோ கருந்துளைக்குள் சென்று அழிந்த ஒரு வஸ்துவின் விபரங்கள், கருந்துளை அழிந்தபின் அதனால் வெளியேற்றப்பட்ட செய்திகளை ஆராய்ந்தால் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். அப்படி அந்தச் செய்திகள் சேமித்து வைக்கப்படும் இடம்தான் Apparent Horizon. ஏற்கெனவே நாம் பார்த்த ஈவண்ட் ஹொரைஸன் என்பது இல்லை.

இப்படி ஹாக்கிங் சொல்லியிருப்பதால், எல்லாவற்றையும் கபளீகரம் செய்து அமுக்கி வைத்திருக்கும் கருந்துளைகள் என்றில்லாமல், உள்ளே சென்றதை வெளியேற்றும் கருந்துளைகள் என்று அவை மாறியிருக்கின்றன என்பதுதான் ஹாக்கிங்கின் ஆராய்ச்சி முடிவு. ஆனால் அவரது பல முடிவுகளைப் போல் இது தற்காலிகமானதாகக்கூட இருக்கலாம். காரணம் அவ்வப்போது அவர் பதிப்பித்து வரும் ஆராய்ச்சி முடிவுகள்தான். எனவே, வருங்காலத்தில் இந்தத் தியரியை அவர் மாற்றக்கூடும். எது எப்படி இருந்தாலும், அவரது ஆராய்ச்சி முடிவுகள் வெளிவருவது நமக்கு நல்லதுதான். இதெல்லாம் உண்மையா என்று கருந்துளைக்குப் பக்கத்தில் சென்று ஆராய இன்னும் பல நூறு வருடங்கள் ஆகலாம். அப்போது ஆராய்ந்துகொண்டிருக்கும் விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது அதன் காலமே முடிந்து மனித இனமே அழிந்திருக்கலாம் (கருந்துளையைச் சுற்றும் விண்கலத்தின் ஒரு வருடம், பூமியில் நூறு வருடத்துக்குச் சமம்). இதுதான் இண்டர்ஸ்டெல்லாரின் கரு.

கருந்துளைகளைப் பற்றி எனக்குத் தெரியும் என்றாலும், என் கருத்தை இன்னும் தெளிவாக்கிக்கொள்ளும் பொருட்டு, இந்தக் கட்டுரைக்காக A Brief History of Time புத்தகத்தை முழுமையாக மறுபடியும் படித்தேன். வைரல் ஃபீவரில் எப்போதும் படுத்துக்கொண்டே இருந்ததால் அது எளிதாக முடிந்தது. மேலும் உதவிய referenceகளை இங்கே கொடுத்திருக்கிறேன். காரணம், அது படிப்பவர்களுக்கு அவசியம் உதவலாம்.

References:

1. A Brief History of Time by Stephen Hawking
2. Chandrasekhar Limit – Wikipedia and the internet
3. What Hawking meant when he said ‘There are no black holes’
4. Hawking: Black Holes do Exist. Now the complicated part – Time magazine

  Comments

23 Comments

  1. Dany

    எனக்கு கருந்தேள் மட்டும்தான் தெரியும் பாஸ்.

    Reply
  2. Dany

    உங்கள் கடின உழைப்பு தெரிகிறது
    Mr.rajesh…thank you…
    உங்கள் பழைய தொடர்களை தொடருங்கள்
    ராஜேஷ்…நன்றி…

    Reply
    • Rajesh Da Scorp

      Thank you Dany 🙂

      Reply
  3. ஹாய் ராஜேஷ்.

    முதலில் ஓர் Hats off. அர்ப்புதமான பதிவு. இதுவரை கருந்துளை பற்றிய பல நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ள முடிந்தது. இதுநாள்வரை இது எதோ ஒரு இருட்டான ஓட்டை என்ற ரீதியில்தான் நம்பிக்கொண்டிருந்தேன். மிகவும் சுருக்கமாக அதே சமயம் விளக்கமாகவும் எழுதியதற்கு நன்றி.

    சுப்ரமண்யம் சந்திரசேகர்னு ஒரு தமிழன், நோபல் prise வாங்கியிருக்கார்ங்கற விஷயமே இப்போதான் தெரியும். . எனக்கு A Brief History of Time புத்தகத்தை Landmarkல் பார்க்கும்போதுதெல்லாம் வாங்கி படிக்க ஆசை. ஆனா என்ன பண்றது.. என்னோடு ஆங்கில அறிவு அவ்வளவா இடம் கொடுக்காது. அதான், இந்தமாதிரி விஷயங்களை தமிழில் வந்தால் விடுவதில்லை.

    நீங்கள் ஏன் மேலும் தொடர்ந்து இதுபோல அறிவியல் விஷயங்களை எழுதக்கூடாது.

    Reply
    • A Brief History of Time book is available in Tamil… It was translated by Nalankilli.. Published by International Tamil language foundation.. Price was Rs.100 when I bought it..

      Reply
      • Wow.. really…?
        Thank you so much Rajavel… will buy & finish it..

        Reply
    • Rajesh Da Scorp

      Hi Jegan Nath,

      நன்றி. சின்ன வயசுல இருந்தே ஃபிஸிக்ஸ்ல இண்ட்ரஸ்ட் உண்டு. எனக்கும் உங்களுக்கு இருந்த அதே பழைய நம்பிக்கைகள் இருந்தன. அதையெல்லாம் மாற்றியவர் ஸ்டீஃபன் ஹாக்கிங் தான். முடிஞ்சவரை இனிமே இப்படிப்பட்ட தகவல்களை எழுத முயற்சிக்கிறேன். Cheers.

      Reply
      • Rajesh Da Scorp

        Thank you Rajavel for the details.

        Reply
  4. நம்முடைய தமிழ் அறிவியல் எழுத்தாளர்களிடம் ஒரு பிரச்னை. relativity theory பற்றி நாலு பக்கம் விளக்கமா எழுதிஇருப்பாங்க. ஆனா அதை பற்றி எந்த புரிதலும் வாசகனிடத்தில் ஏற்படாது. அதனுடைய coreய் விட்டுவிடுவார்கள். படிப்பவனுக்கு எதோ புரிந்தும் புரியாமலும் இருக்கும். அந்த விஷயத்தில் நீங்கள் great. எந்த போலித்தனமும் இல்லாமல் தேவையில்லாத வர்ணனைகளை விட்டு அளவாக எழுதுகிரீர்கள். Continue …

    Reply
  5. Ahori

    Fanstastic. Keep going.

    Reply
  6. Mr.A

    you are good reader and learner ( i think so) this is one of the simplest and easiest explanation about time. are u student of physics?????

    Reply
    • Rajesh Da Scorp

      Actually I am not a student of Physics. Although I was an outright computer student, I was interested in Physics more than the computers, and that had helped now 🙂

      Reply
  7. why planet or stars shrinking if the mass size is bigger than sun size..

    Reply
    • Rajesh Da Scorp

      They shrink because their fuel runs out. Even the Sun will shrink in the future, after a few million years, once the fuel runs out

      Reply
  8. narayanan chormpet

    jagan ; tamil kalam’ ENDRA PEA_RIL-A vanducha kanna mozhia paru doomkku

    Reply
    • sorry.. onnum puriyal boss… 🙁

      Reply
  9. Abarajithan

    சார், ஹாக்கிங்கோட சில புத்தகங்கள்ல (A Theory of Everything – Various Lectures) கருந்துளையின் Event horizon உள்ளே இருக்கறது singularity ங்கற scientifically undefined state அப்படிங்கறாரே? அறிவியலின் விதிகளைப் பின்பற்றாத, predictability அற்றுப்போன இடத்தில், structure..etc போன்ற தகவல்கள் சேமிக்கப்பட முடியுமா?

    நல்ல பதிவு. சில படங்களை பார்க்கறதுக்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே எங்களைத் தயார்ப்படுத்துகிறீர்கள். 🙂

    Reply
    • Rajesh Da Scorp

      Yes. ஹாக்கிங் அதைத்தான் இப்போ சொல்லிருக்காரு. இத்தனை நாள், அந்த ஸ்ட்ரக்சர் டீட்டெய்ல்ஸ் கருந்துளைக்குள்ள இருக்கும்; ஆனா கருந்துளை அழிஞ்சதும் இவையும் அழிஞ்சிரும்னு சொன்னவரு, இப்போ இவையெல்லாம் வெளியே அனுப்பப்பட்டுவிடும்னு சொல்ல ஆரம்பிச்சிருக்காரு. பொறுத்துப் பார்த்தா அவரு என்னென்ன இனிமே deduce பண்ணுவாருன்னு தெரியும். ஹாக்கிங்கைப் பொறுத்தவரை, தகவல் சேமிப்பு இப்போ சாத்தியமே 🙂

      Reply
  10. Vivek Kanna

    Boss Superb post. I am happy that i came to know a lot about black holes after reading your post.
    Thanks for the post boss

    Reply
  11. Singara Velan

    Great article but இதையெல்லாம் எப்படித்தான் ஆங்கிலத்தில் படித்து தெரிந்து கொள்கிறீர்களோ

    Reply
  12. Vinothkumar Parthasarathy

    “சில நாட்களுக்கு முன்னர், ஹாக்கிங் ஒரு ஆராய்ச்சிக்குறிப்பை வெளியிட்டார். அதன்படி, கருந்துளைகள் என்பதே இல்லை என்று ஹாக்கிங் சொல்லிவிட்டதாக உலகெங்கும் உள்ள மீடியாக்கள் பிரச்னையைக் கிளப்பின. ”

    Leonard Susskindதான் black hole அழிந்தாலும் அதில் ஏற்கெனவே உள்வாங்கப்பட்ட information’s அழியாது என்று நிருபித்ததாக நினைவு. கடைசியில் hawking அதனை ஏற்றுகொண்டார். ஆனால் அது நடந்து பல வருடங்கள் ஆகிடுச்சுனு நினைக்கிறேன்

    Reply

Join the conversation