Iron man 3 (2013) – 3D – English

by Karundhel Rajesh April 28, 2013   English films

சென்ற வருடம் அவெஞ்சர்ஸ் படத்தைப்பற்றி விரிவாக அலசினோம். அந்த அவெஞ்சர்ஸில் இன்றியமையாத ஒரு கதாபாத்திரமான அய(ர்)ன்மேன் என்கிற டோனி ஸ்டார்க் பற்றியும் அந்தக் கட்டுரைகளில் விரிவாகப் பார்த்தோம். இருந்தாலும், இதோ இந்த இணைப்பை க்ளிக் செய்து அந்த தொடர் கட்டுரைகளைப் படிக்கலாம்.

The Avengers – a short series in karundhel.com

ஏற்கெனவே இரண்டு பாகங்கள் வெளிவந்துவிட்ட இந்த Iron Man ஸீரிஸில் இப்போது மூன்றாவது பாகம். ஓகே. இந்தப் படத்தில் இரும்புக் கவசங்கள், வெறிபிடித்த வில்லன், ஹீரோவின் காதலி, டமால் டுமீல் குண்டுகள், ஹீரோ பேசும் பகடிமிக்க வஜனங்கள், லாஜிக் இல்லாத சண்டைக்காட்சிகள், ஹீரோவுக்கு உதவும் சின்னஞ்சிறு பையன் போன்றவை இருக்கின்றன. இந்த வரிசையை அப்படியே பல ஹாலிவுட் படங்களில் பார்க்கலாம். இருந்தாலும், Iron Man ரசிகர்களை இந்தப் படம் கவருமா?

உண்மையை சொல்லப்போனால், Iron Man 2 படமே கொஞ்சம் தள்ளாட்டமாகத்தான் இருந்தது. முதல் பகுதி உருவாக்கிய பிரம்மாண்டமான வெற்றியை இரண்டாவது பாகம் தக்கவைத்துக்கொண்டது ஆச்சரியம்தான். முதல் பாகத்தின் புகழே காரணம். அதனாலேயே மக்கள் வெள்ளம் இரண்டாவது பாகத்தையும் ஓடவைத்தது. அதுதான் இந்தப் பாகத்துக்கும் நடக்கப்போகிறது.

பொதுவில், ஹாலிவுட் படங்களை எடுத்துக்கொண்டால், மூன்றாவது பாகம் என்று எடுக்கப்பட்ட முக்கால்வாசிப் படங்கள் சுவாரஸ்யமாக இருந்ததில்லை என்பது தெரியும். Jurassic Park 3, Austin Powers in Goldmember, Lethal Weapon 3 (இந்த சீரீஸ் நான்கு பாகங்கள். இதன் அட்டகாசமான முதல் பாகம்தான் தமிழில் சூரசம்ஹாரம் என்ற பெயரில் கொத்துபரோட்டா செய்யப்பட்டது. இன்னொரு குறிப்பிடத்தகுந்த விஷயம், இந்த லீதல் வெபன் படத்திற்கு திரைக்கதை எழுதிய Shane Black தான் Iron Man 3 படத்தை இயக்கியிருக்கிறார்), The Dark Knight Rises, Beverly Hills Cop 3, Blade : Trinity, The Matrix Revolutions, The Mummy : Tomb of the Dragon Emperor (அரத மொக்கை), Ocean’s 13, Rush Hour 3, Spider-Man 3, Transformers: Dark of the Moon, Underworld 3: Rise of the Lycans, Resident Evil: Extinction போன்றவை என் மனதுக்குத் தோன்றிய மூன்றாம் பாக மொக்கைகள். இவைகளில், அத்தனை பாகங்களும் கொடுமையாக எடுக்கப்பட்ட Twilight படங்களை சேர்க்கவில்லை.

எனக்குத் தெரிந்து மூன்றாம் பாகம் அட்டகாசமாக இருந்தது Return of the King மட்டுமே. அதற்குக் காரணம் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் என்பது ஒரு நாவல். அது மூன்று பாகங்களாக எழுதப்பட்டதால் அவைகள் மூன்று படங்களாக எடுக்கப்பட்டன. இதற்கு அடுத்ததாக Star Wars Episode VI: Return of the Jedi. அதேபோல், மூன்றாம் பாகம் கொஞ்சம் பரவாயில்லை என்றால் Back to the Future 3, The Godfather 3, Men in Black 3, Naked Gun 331/3: The Final Insult (இது வேண்டுமென்றே எடுக்கப்பட்ட படம்), Toy Story 3, Pirates of the Caribbean: At world’s End போன்ற படங்கள்.

பொதுவாக, மூன்றாம் பாகம் என்பது பணத்தை மட்டுமே மனதில் வைத்துத்தான் எடுக்கப்படுகிறது. மிகச்சில விதிவிலக்குகளாக ரிடர்ன் ஆஃப் த கிங் மற்றும் ரிடர்ன் ஆஃப் த ஜெடாய் படங்களை சொல்லலாம் (ஆச்சரியகரமாக, இரண்டு படங்களுமே ‘Return of the’ என்றே தொடங்குகின்றன). இந்த இரண்டு படங்களை எடுத்த பீட்டர் ஜாக்ஸன் மற்றும் ஜார்ஜ் லூகாஸ் ஆகியவர்கள், எப்போதாவது மட்டுமே தோன்றக்கூடிய visionary என்று சொல்லக்கூடிய இயக்குநர்கள். இந்த இரண்டு படங்களை இன்னும் பலப்பல ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் அலுக்காது. மேலே உள்ள லிஸ்ட்டில் உள்ள மொக்கையான மூன்றாம் பாகங்களை எடுத்தவர்களை கவனித்தால் ஒன்று தெரியும். ஸாம் ரெய்மி (ஸ்பைடர்மேன் 3) மற்றும் க்ரிஸ்டோஃபர் நோலன் (த டார்க் நைட் ரைஸஸ்) ஆகியவர்களுமே இந்த பணத்துக்கான போட்டியில் தலைகுப்புற விழுந்து மண்ணைக் கவ்வியவர்கள்தான் (இந்த இரண்டு படங்களும் நன்றாக ஓடினாலும், இந்த இயக்குநர்களின் ரசிகர்களை அவர்களால் திருப்திப்படுத்த இயலவில்லை. ரசிகர்கள் இவர்களது பணம் பண்ணும் முயற்சியை இனம்கண்டுகொண்டார்கள்). இங்குதான் சிறந்த இயக்குநருக்கும் நல்ல இயக்குநருக்குமான வித்தியாசம் புரிபடுகிறது. பீட்டர் ஜாக்ஸன் & ஜார்ஜ் லூகாஸ் ஆகியவர்கள் சிறந்த இயக்குநர்கள் என்பதும் தெரிகிறது (ஜார்ஜ் லூகாஸ் சும்மா இருக்காமல், மேலும் மூன்று ஸ்டார் வார்ஸ் படங்களை எடுத்து வெளியிட்டார். ஆனால் அவைகள் மொக்கைகள் அல்ல. அதேபோல் பீட்டர் ஜாக்ஸன் இப்போது ஹாபிட் படங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார். இதுவரையில் வெளிவந்திருக்கும் ஹாபிட் படத்தின் முதல் பாகம் நன்றாகவே இருக்கிறது. திடீரென ஹாபிட் படங்களை இரண்டிலிருந்து மூன்றாக ஜாக்ஸன் அறிவித்ததும், எனக்கு இவரும் பணத்துக்கு விலைபோய்விட்டாரோ என்று தோன்றியது. ஆனால் மூன்றாம் பாகத்தில் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கதைகளுக்கும் ஹாபிட்டின் முடிவுக்குமான பல தொடர்புகள் விளக்கப்படும் என்று ஜாக்ஸன் சொல்லியிருக்கிறார். இவைகள் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் புத்தகத்தின் அப்பெண்டிக்ஸ்களில் உள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம். இதிலும் பீட்டர் ஜாக்ஸனுக்கும் ஜார்ஜ் லூகாஸுக்கும் உள்ள ஒற்றுமை தெரிகிறது. ஒரே கதையின் ஆறு பாகங்களை எடுத்தவர்கள் இந்த இருவரும் என்பது ஜாக்ஸன் ஹாபிட்டின் மூன்றாம் பாகத்தை வெளியிட்டதும் உலகெங்கும் பரவப்போகும் செய்தி. ஜாக்ஸனுக்கு லார்ட் ஆஃப் த ரிங்ஸ். லூகாஸுக்கு ஸ்டார் வார்ஸ். இதிலும் உள்ள ஒற்றுமை புரிகிறதல்லவா? எப்படி ஸ்டார் வார்ஸ் படங்கள் முதலில் வெளிவந்து, அதன்பின் அவற்றின் முன்கதைகள் மூன்று படங்களில் பின்னர் வெளிவந்தனவோ அதேபோல் முதலில் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்கள் வெளிவந்து, அதன்பின் அவற்றின் முன்கதையான ஹாபிட் படங்கள் வரப்போகின்றன).

இப்படிப்பட்ட மூன்றாம் பாகங்களின் நீண்ட வரலாறு ஏனெனில், தற்போது வெளிவந்திருக்கும் Iron Man 3 படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கத்தான். இதுவரை படித்துவந்த நண்பர்களுக்கு, படம் எப்படி என்று புரிந்திருக்கும். முதல் பாகம் அட்டகாசம் என்றால், மூன்றாம் பாகம் படுமோசம். இந்த ரீதியிலான ஆக்‌ஷன் படங்களின் மேலே சொன்ன டெம்ப்ளேட்டிலேயே இந்தப் படம் எடுக்கப்பட்டு, இனிமேல் Iron Man என்ற பெயரில் எதாவது படம் வெளிவந்தால் குதிகால் பிடறியில் தெறிக்க கண்களை மூடிக்கொண்டு வெறித்தனமாக திரையரங்குக்கு எதிர்த்திசையில் ஓடிவிடவேண்டும் என்ற எண்ணத்தையே இப்படம் ஏற்படுத்துகிறது.

இதில் நடித்திருக்கும் ராபர்ட் டௌனி ஜூனியர், முதல் பாகத்தில் இருந்த சுறுசுறுப்பை இழந்து, எப்போதடா படப்பிடிப்பு முடியும் என்று எண்ணிக்கொண்டு தினமும் மூன்று லார்ஜ்கள் அடித்துவிட்டு இரவு முழுக்க யோசித்தவர் போலவே காணப்படுகிறார். அவரது காதலியாக வரும் க்வைனத் பால்ட்ரோ, ராபர்டை விடவும் வயதான பெண்மணி போலவே இருந்து, மருந்துக்குக் கூட ஆடியன்ஸின் மனதில் எந்த உணர்ச்சியையும் தூண்டாமல் இருக்கிறார் (வெய்ட். எந்த உணர்ச்சியையும் என்பது தவறு. எரிச்சல் என்ற உணர்ச்சி அதிகம் மேலிடுகிறது). வில்லனாக நடித்திருப்பதோ ஹாலிவுட்டின் முதுகிழடுகளில் ஒருவரான பென் கிங்ஸ்லி. கேட்க வெண்டுமா? பிள்ளையில்லாத வீட்டில் கிழவர்கள் ‘துள்ளி’ விளையாடிய கதை என்பது இதுதான்.

இதில், படத்தில் ட்விஸ்ட் போன்ற ஒரு வஸ்து, தடவு தடவு என்று தடவிக்கொண்டிருக்கும்போது கண்களில் லேசாக அகப்படுகிறது. படத்தின் வில்லன் கை பியர்ஸ் (Guy Pearce), மெமெண்டோவில் நடித்த நடிகர். ஆனால் இந்தப்படத்தில், முகமூடியில் நட்டு கழண்ட காமெடி வில்லன் நரேனைப் போலவே கனகச்சிதமாக அதே நடிப்பை நல்கி, வெடிச்சிரிப்பை வரவழைக்கிறார் (முகமூடியைப் போலவே இந்தப் படத்தின் க்ளைமேக்ஸும் ஹார்பரில் எடுக்கப்பட்டிருக்கிறது. மிஷ்கின் கவனிக்க. காப்பி உஷார்). அப்படியென்றால் பென் கிங்ஸ்லி? அவர் நடித்ததிலேயே இதுதான் பயங்கர காமெடி வேடம். மனிதரை கூப்பிட்டு அனுப்பி அவமானப்படுத்திவிட்டார்கள் என்பது தெரிகிறது.

இந்தப் படத்தில் ரசிக்கும்படியாக எதுவும் இல்லையா?

Absolutely not. ரசிக்கும்படியான ஒரே காட்சி, இந்தப் படத்தின் டைட்டில்கள் ஓடிமுடித்தபின் வழக்கமாக அவஞ்சர்ஸ் கதாபாத்திரங்கள் நடிக்கும் படங்களில் வருவதுபோலவே (Post-credits) இதிலும் வருகிறது. அந்தக் காட்சி மொத்தம் ஒரே நிமிடம் ஓடுகிறது. அவ்வளவே. அதைப் பார்ப்பதற்காகவே ஐநாக்ஸில் அமர்ந்துகொண்டிருந்தவர்கள், என்னையும் சேர்த்து ஐந்து பேர். படம் ஹௌஸ்ஃபுல். இருந்தாலும் அத்தனை கூட்டமும் டைட்டில்கள் ஆரம்பித்தவுடன் எஸ்கேப்.

எனவே, இந்தப் படத்துக்கு ஏதேனும் எதிர்பார்ப்பு என்று மனதின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஃபீலிங்கோடு சென்றீர்கள் என்றால், கடுமையாக பாதிக்கப்படுவீர்கள் என்பது நிச்சயம். எதுவுமே எதிர்பார்க்காமல் சும்மா கொஞ்சம் ஆக்‌ஷன் காட்சிகள் பார்க்கலாம் என்று நினைத்தால் கூட இதயம் நின்றுபோகும் அளவு லாஜிக் ஓட்டைகள் இதில் உள்ளன. இத்தனைக்கும் படத்தை இயக்கியிருக்கும் Shane Black, ஹாலிவுட்டின் பிரபல ஆக்‌ஷன் பட திரைக்கதையாளர்.

இனிமேல் இந்த அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்கள் நடிக்கும் படங்களை பார்க்காமல் எஸ்கேப் ஆகிவிடலாமா என்று தோன்றுகிறது. இதில் அக்டோபரில் எனக்குப் பிடித்த அவெஞ்சர்ஸ் கதாபாத்திரமான Thor ’வெடிக்கும்’ Thor 2: The Dark World’ படம் வேறு வருகிறது. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

பி.கு – இந்தப் படத்திலும் ஸ்டான் லீயின் ஒரே நொடி cameo இருக்கிறது.

இதோ Thor: The Dark World படத்தின் ட்ரெய்லர்.

  Comments

10 Comments

  1. Prasanna

    ராஜேஷ்,

    மூணாவது பாகம்ன்னு மட்டும் எடுத்துக்கிட்டா, எனக்கு Bourne Ultimatum ரொம்ப பிடிக்கும்..

    Even, I would say that’s the best of entire Bourne series. 😉

    Reply
  2. mayvee

    ஆமா, இப்புடி தான் கேப்டன் அமெரிக்கா படத்தை அவெஞ்சர்ஸ் வரிசைல வருதேன்னு பார்த்து மொக்கை வாங்கினேன்.

    அதே மாதிரி அயர்ன் மேன் முத பாகத்தை பார்த்து, அந்த நினைப்புல இரண்டாம் பாகத்தை பார்த்து பல்ப் வாங்கினேன். மூன்றாம் பாகத்தை பார்க்கவே பயமா இருக்கு. நல்ல வேலை நேத்து டிக்கெட் கிடைக்கல.

    Reply
  3. Saravanan

    Ennomo rajesh, enna mathiri biscothu pasangalakku intha mathiri template padam pidichi irukkay

    Reply
  4. Novak

    Die Hard 3, Harry Potter 3, The Good the bad & ugly, MI-3, X Men- Last Stand?… 🙂

    Reply
  5. “Lethal Weapon 3 (இந்த சீரீஸ் நான்கு பாகங்கள். இதன் அட்டகாசமான முதல் பாகம்தான் தமிழில் சூரசம்ஹாரம் என்ற பெயரில் கொத்துபரோட்டா செய்யப்பட்டது. ”
    திரு ராஜேஷ் அவர்களுக்கு, சூரசம்ஹாரம் தி விட்னெஸ் என்ற கெவின் காஸ்ட்னர் நடித்த படத்தின் காப்பி என்று நினைக்கிறேன். இரண்டிலுமே ஒரு கொலையைப் பார்த்துவிட்ட சிறுவனை வைத்தே கதை நகரும். வழக்கம் போல தமிழில் கமலஹாசன் தன் ஆளுமையை ஒவ்வொரு பிரேமிலும் காண்பித்திருப்பார்.

    Reply
    • Saravanan

      soora samharam is based on witness, – Harrison ford but it had fight sequences based on Untouchables railway station scene and lethal weapon

      Reply
  6. Sathish

    நீங்க சொன்னதையும் மீறி படம் பார்த்ததுக்கு நான் வாங்குனேன் மொக்க.
    Shane Black நம்பி போனேன்.

    மருந்துக்கு கூட லாஜிக் இல்ல.

    உண்மையிலே காமிக்ஸ்ல mandarin கேரக்டர் என்ன ராஜேஷ்? Mandarin ரொம்ப எதிர்பார்த்தேன்.

    கடைசியில் ராபர்ட் டௌனிக்காக படத்த முடிசிருக்காங்கலொ தெர்ல.அவரோட அக்ரீமெண்ட் முடியுதுன்னு நினைக்கிறேன்.

    Reply
  7. ஐ நாக்ஸ் ல பாத்தா தான் தூங்குவேன்னு 200 திர்ஹம் (கிட்டதட்ட நம்ம ஊரு காசு 3000 கிட்ட ) கொடுத்து படத்த பார்த்து பலப் வாங்கினேன் . இன்னும் தூக்கம் வரல !!

    Reply
  8. நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த பீட்டர் ஜாக்ஸன், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுந்துவந்த இயக்குனர்களிலேயே மிகப் பெரிய கடின உழைப்பாளி என்று நான் நினைக்கிறேன். அந்த வகையில் நான் அவரை ஒரு ரோல் மாடலாகவே கருதுகிறேன். அவருடைய மூன்று “லார்ட் ஆஃப் த ரிங்ஸ்” படங்களும் எத்தனை பிரம்மாண்டமானவை, சிக்கலானவை, தேர்ந்த தொழில்நுட்பமும், கலை நேர்த்தியும் கொண்டவை என்பதைப் பார்த்தவர்கள் யாரும் உணர முடியும். ஒவ்வொரு படமும் இரண்டு படங்களுக்குச் சமமானவை. மூன்று படங்களையும் சேர்த்தால் சுமார் 10 மணிநேரம் ஓடக்கூடும். அத்தனை பெரிய படைப்பை அவர் உருவாக்கிய வேகம் ஒரு பெரும் ஆச்சர்யமே.

    Reply

Join the conversation