iru mugan (2016) – Tamil

by Karundhel Rajesh October 20, 2016   Cinema articles

அக்டோபர் 2016 காட்சிப்பிழையில் எழுதிய கட்டுரை இங்கே.


தமிழில் ‘மசாலா’ என்ற வகையினுள் இடம்பெறும் படங்கள் பற்றி ஏற்கெனவே காட்சிப்பிழையில் விரிவாக எழுதியிருக்கிறேன். இவற்றில் பெரும்பாலான படங்கள், தமிழில் மசாலாப்படங்களில் இன்னின்ன அம்சங்கள் இருந்தே ஆகவேண்டும் என்று பட்டியல் போடப்பட்டு (அல்லது ஏற்கெனவே பல படங்களில் உபயோகிக்கப்பட்ட பட்டியல்களை அப்படியே எடுத்து) உருவாக்கப்படுபவை. இப்படிப் படம் எடுப்பதால் என்ன பிரச்னை என்றால், அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான் இருக்கும் என்று நமக்கே எளிதாகப் புரிந்து, படம் முடியும்வரை முழுக்கதையையும் நம்மால் எளிதில் கூறமுடிந்துவிடுவதுதான்.

வணிகப்படம் என்றால் என்ன? பார்ப்பவர்களை சுவாரஸ்யப்படுத்தி, இறுதிவரையில் திரையரங்கில் முணுமுணுப்பு காட்டாமலோ, எழுந்து ஓடிவிடலாம் என்ற பீதியை வரவழைக்காமலோ, வீட்டில் கேஸ் அணைத்துவிட்டோமா, நாளை அலுவலகத்தில் என்ன செய்யலாம் போன்ற எண்ணங்கள் வரவழைக்காமலோ இருப்பதே ஒரு நல்ல வணிகப்படம். ஆனால் இரு முகன் பார்க்கையில், இவற்றைத்தவிரவும் ஏராளமான எண்ணங்கள் எழுந்து, சலிப்பு/பீதி/கோபம்/கழிவிரக்கம் ஆகிய எல்லா உணர்ச்சிகளும் மனதில் கதகளி ஆடின. சலிப்பு, முப்பது வருடங்கள் முன்னரே கமல்ஹாஸன் நடித்து வெளிவந்த ‘விக்ரம்’, சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்துத் தமிழகத்தில் பிய்த்துக்கொண்டு ஓடிய ‘ரேம்போ 3’ ஆகிய படங்களின் காட்சிகளை மறுபடியும் திரையில் பார்க்கிறோமே என்பதால் ஏற்பட்டது. பீதி என்பது, துளிக்கூட மனதில் ஒட்டாத காட்சிகள் படம்முழுக்க வந்துகொண்டே இருந்ததால் வந்தது. கோபம், இப்படி ஒரு படத்தைக் கோடிகளைக் கொட்டி எடுத்திருக்கிறார்களே என்பதால் உருவானது. திரைக்கதை என்ற வஸ்துவைத் துளிக்கூடத் தயார் செய்துகொள்ளாமல், விக்ரம் என்ற நாயகன், பலகோடி பட்ஜெட், வெளிநாட்டில் எடுக்கப்பட்ட பாடல்கள், படம் நெடுக நகைச்சுவை என்ற பெயரில் கழுத்தை அறுக்கும் காமெடியன், வில்லனும் நானே ஹீரோவும் நானே என்ற அரதப் பழைய தமிழ் நாயக டெம்ப்ளேட், இதற்கு முன் வந்துள்ள படங்களில் இருந்து உருவப்பட்ட காட்சிகள் ஆகிய ’மசாலா’ அயிட்டங்கள் அனைத்துமே இம்மி பிசகாமல் இடம்பெற்று உருவாகியிருக்கும் இப்படத்தைப்போன்ற பல படங்களைப் பார்த்து சவுக்கடி வாங்கியிருந்தாலும் மறுபடி மறுபடி நம்பி நம்பி ஏமாறுகிறோமே என்ற உணர்வால் கழிவிரக்கம்.

கீழே இருக்கும் காட்சியைப் பாருங்கள். இதுதான் ரேம்போ 3ல் இருந்து சுடப்பட்ட இருமுகன் துவக்கக்காட்சி.

படத்தைப் பற்றி மேலும் பார்க்கப்போகுமுன் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். ஒரு படம் நன்றாக இருக்கிறது/இல்லை என்பது படத்தின் வசூலைப் பொறுத்ததே அல்ல. இதை நாம் நன்றாக உணர்ந்துகொள்ளவேண்டும். இரு முகன் வசூல் நன்றாக இருக்கிறது. ஆனால் அதைமட்டும் வைத்துக்கொண்டு படம் நன்றாக இருக்கிறது என்ற முடிவுக்கு நாம் வந்தால், நாய்கள், யானைகள் ஆகியவை பேசி, ஆடி நடித்த பேபி ஷாம்லி படங்களை ஒட்டுமொத்தமாகத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடத் தயாராக இருக்கவேண்டும். இதனால் அப்படங்கள் மோசமானவை என்று சொல்லவரவில்லை. வணிகப்படம் என்றால் என்ன என்ற புரிதல் இயக்குநர்களுக்கே மிகமிகக் குறைவாக இருப்பதைக் குறித்துதான் பேச்சு. ‘நோகாமல் நோம்பி கும்பிடுவது’ என்பது இப்படிப்பட்ட படங்களை உருவாக்குவதால்தான். திரைக்கதைக்காக மண்டையை உடைத்துக்கொள்ளவேண்டியதில்லை. ஏற்கெனவே வந்துள்ள படங்களின் காட்சிகளை அப்படியே உருவி வைத்துவிட்டால் படம் ரெடி. இதுதான் இரு முகனின் மிகப்பெரிய பிரச்னை. இதையும், இப்படத்தின் பிற பிரச்னைகளையும் பற்றித்தான் இனி பார்க்க இருக்கிறோம்.

அருண்குமார் விக்ரம் ஒரு உளவுத்துறை அதிகாரி. இவர், இந்தியாவுக்கே பெரிய தலைவலியாக விளங்கும் ஒரு வில்லனைப் பிடிக்கவேண்டும் என்று இவரது மேலதிகாரி நினைக்கிறார். அப்போது விக்ரம் தேநிலவில் இருக்க, அந்த வில்லனின் அடியாளால் இவரது மனைவி நெற்றியில் சுடப்பட்டு உயிரிழக்க, வீறுகொண்டு எழும் விக்ரம் வில்லனை ஒரு பெண்ணின் துணையோடு அழிக்கிறார். இதுதான் கமல்ஹாஸன் நடித்த ‘விக்ரம்’ படத்தின் கதை. இதை அப்படியே உருவி, லொகேஷனை மாற்றித் தயார்செய்தால் இருமுகன் படத்தின் கதையாக மாறிவிடும். விக்ரம் படம் பார்த்தவர்களுக்கு இதில் வரும் நாசர், நித்யா, நயன்தாரா, லவ் என்ற பெயரில் வில்லனாக வரும் விக்ரம் ஆகியவர்களுக்கும் விக்ரம் படத்துக்கும் உள்ள ஒற்றுமை அப்படியப்படியே புரிந்துவிடும். இருமுகனில் நாசர் விக்ரம் பற்றி ஆரம்பத்தில் சொல்ல ஆரம்பிக்கும்போது, ‘விக்ரம் பண்ணுவான். ஆனா கொஞ்சம் கஷ்டம்’ என்று சாருஹாஸன் ராணுவ அதிகாரிகளிடம் ஒரு ஃபைலைத் திறந்து பேசும் காட்சி அப்படியே உருவப்பட்டிருப்பது புரியும். அந்தக்காலத்தில் ப்ரொஜெக்டர் இருந்திருந்தால் ஒருவேளை அப்போதே விக்ரமின் ப்ரொஃபைலை ப்ரொஜெக்டரில் ஸ்க்ரீன் செய்திருக்கலாம்.

இதிலிருந்து, உளவுத்துறை வேலை வேண்டாம் என்று ஹீரோ ஒதுங்கி இருப்பது, அம்பிகா இறப்பது, ஹீரோவின் கோபம், வேறு ஒரு நாயகியுடன் கூட்டு சேர்வது ஆகிய சகல அம்சங்களும் விக்ரமில் இருந்து இருமுகனில் அப்படியே வெட்டி ஒட்டப்பட்டுள்ளன. போதாக்குறைக்கு ரேம்போ 3யில் ஹீரோ தாய்லாந்தில் ஆரம்பக் காட்சியில் கூண்டுக்குள் வெறித்தனமாக சண்டையிடும் காட்சி, அப்போது அவனது பழைய தலைமை அதிகாரி தாய்லாந்து வந்து அவனை மீண்டும் பணியில் அமர்த்துவது, அவனுக்கு அசைன்மெண்ட் கொடுப்பது என்ற சீக்வென்ஸ் அப்படியே உருவப்பட்டுள்ளது. இப்போதைய இண்டர்நெட் யுகத்தில், மிக எளிதில் அடையாளம் கண்டுகொள்ளப்படும் காட்சிகளைக்கூட எந்த உழைப்பும் இல்லாமல் உருவி வைப்பதைத்தான் நோகாமல் நோம்பி கும்பிடுவது என்று ஏற்கெனவே குறிப்பிட்டேன். அதேபோல, இரண்டாம் பாதியில், லவ் என்ற கதாபாத்திரம் நர்ஸ் வேடம் போட்டு மருத்துவமனைக்குள் வரும்போது ஒலிக்கும் பின்னணி இசை, The Dark Knight படத்தில் ஜோக்கர் வரும்போதெல்லாம் ஒலிக்கும் Why so Serious என்ற இசைக்குறிப்பின் டிங்கரிங் செய்யப்பட்ட இசை. இது படம் பார்க்கும்போதே மிகத்தெளிவாகப் புரிந்துவிடுகிறது.

இவைதவிர, இப்படத்தின் பாடல்கள் எங்கிருந்தெல்லாம் உருவி வைக்கப்பட்டுள்ளன என்று இணையவாசிகள் ஏற்கெனவே பட்டியல் இட்டுவிட்டனர். இப்படி, இருமுகன் படத்தின் அஸ்திவாரமே பிற படங்களில் இருந்தும் பாடல்களில் இருந்தும் உருவி எடுக்கப்பட்டு நோகாமல் உருவாக்கப்பட்டதுதான்.

சரி – இவற்றை மறந்துவிடுவோம். இதெல்லாம் கவனிக்காமல், படம் எப்படி?

இப்போது முதல் பத்தியைப் படித்துக்கொள்ளவும். எந்தவிதமான சுவாரஸ்யமும் இல்லாத காட்சிகள்; அப்படி வரும் காட்சிகளையே கவனிக்க விடாமல் கொட்டாவி வரவழைக்கும் பாடல்கள் (ஸ்பீட்ப்ரேக்கர்கள்); எரிச்சல் வரவழைக்கும் நகைச்சுவை; அடுத்து நடக்க இருக்கும் காட்சிகளை நன்றாக யூகிக்க முடிதல் ஆகிய அம்சங்களின் கலவையே இருமுகன்.

தமிழ் இயக்குநர்களுக்கு ஒரு பிரச்னை உண்டு. பெரிய பட்ஜெட் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததுமே, ’தமிழ்நாட்டின் கிராமங்கள் உட்பட எல்லா இடங்களிலும் இந்தப் படம் ஓட வேண்டும்’ என்ற சிந்தனை. இதனால் அந்தத் திரைக்கதையின் வகை (Genre) என்னவோ அதை மட்டும் சிறப்பாக செய்யாமல், உலகில் உள்ள அத்தனை வகைகளையும் உள்ளே போட்டுக் குழப்பி எடுப்பது. இதனால் படம் ரொமாண்டிக்  படமா, ஆக்‌ஷன் படமா, திரில்லரா, நகைச்சுவைப் படமா, சயன்ஸ் ஃபிக்‌ஷனா – இப்படி எதுவுமே தெரியாமல், அரைவேக்காடாக அந்தத் திரைக்கதை அமைந்துவிடுகிறது. இதுதான் இருமுகனின் பிரச்னை. விக்ரம், நயன் தாரா, நித்யா ஆகியவர்கள் இருந்துவிட்டால் போதுமா? கதை உறுதியாக இருக்கவேண்டாமா? இத்தனைக்கும் ஆனந்த் ஷங்கரின் முதல் படமான ‘அரிமா நம்பி’ பரபர என்று ஓடக்கூடிய த்ரில்லர். இன்னும் பலருக்கும் நினைவிருக்கும் படம். அப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டு, இப்போது பொதேலென்று இப்படி ஒரு படம் எடுக்கும் நிலைக்கு ஆனந்த் ஷங்கர் தள்ளப்பட்டிருக்கும் காரணம் என்ன? ஆண்டவனுக்கே வெளிச்சம் (ஆனால் அரிமா நம்பியிலும் சந்தேகமே இல்லாமல் ‘Bourne Supremacy’ படத்தில் இருந்து  அந்தக் குறுகலான குடியிருப்பில் நடக்கும் சேஸிங் காட்சி வெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் வரும் கண்ட்ரோல் அறையில் நிகழும் trackingகும் அதே படத்தில் இருந்துதான் காப்பியடிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் எந்த சந்தேகமும் இல்லை. எனவே அரிமா நம்பியிலேயே ஒரு சில காட்சிகளை சுட்டுத்தான் இருக்கிறார் ஆனந்த் ஷங்கர். அதையேதான் இருமுகனில் பெரிதாகச் செய்திருக்கிறார்).

இப்படித்தான் ‘மாரி’ படம் வெளியானது. படம் விமர்சன ரீதியில் படுதோல்வி. இருந்தும் ஓரளவு பணம் சம்பாதித்ததால், அதன் இயக்குநரே, ஒரு மேடையில் இதன் இரண்டாம் பாகத்தை எழுதிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். ஆடியன்ஸுக்கும் இயக்குநர்களுக்கும் இருக்கும் இந்த மிகப்பெரிய இடைவெளியைப்பற்றி இயக்குநர்களுக்கே தெரியாததன் அனர்த்தம் இது என்றுதான் சொல்லமுடியும். அப்படித்தான் இப்போது இருமுகனையும் எடுத்திருக்கிறார் ஆனந்த் ஷங்கர் என்றே தோன்றுகிறது.

இருமுகனில் ஒரு ‘முக்கியமான’ ட்விஸ்ட் என்று முன்னிறுத்தப்படும் காட்சியைப் படம் பார்த்தவர்கள் நினைத்துப் பார்க்கலாம் (Spoiler alert). நாயகி அத்தனை பெரிய இடத்தில் இருந்து குண்டுபட்டுக் கீழே விழுந்தபின்னரும், ஆதிவாசிகளால் காப்பாற்றப்பட்டு அம்னீஷியாவால் பாதிக்கப்படுவதெல்லாம் எத்தனை பழைய டெம்ப்ளேட்? இப்படித்தான் வரும் என்று எளிதில் யூகிக்கமுடிகிறதே? எத்தனை படங்களில் இதைப் பார்த்துவிட்டோம்? (தலையில் குண்டு பட்டதால் நடந்ததை மறந்துவிடும் கதாநாயகன் என்பது ஏற்கெனவே ராபர்ட் லுட்லும் எழுதிய ‘Bourne Identity’ நாவலில் வந்து, அதை உருவி வெற்றிவிழா திரைப்படத்திலும் வந்துவிட்டது. தமிழில் ‘ரத்தப்படலம்’ என்ற பெயரில் லயன் காமிக்ஸில் எக்கச்சக்க பாகங்கள் வந்து பிரமாத வெற்றியடைந்த காமிக்ஸும் உண்டு).

vikram-nayanthara-iru-mugan-movie-stills-3-1

படத்தின் முக்கியமான காட்சிகளாக முன்னிறுத்தப்படும் காட்சிகள் எவற்றிலுமே துளிக்கூட ஆடியன்ஸை நம்பவைத்து உள்ளிழுக்கும் தன்மையே இல்லையே? (Suspension of disbelief). உதாரணமாக, வில்லன் லவ்வை அடைத்துவைத்திருக்கும் சிறைச்சாலை ஏன் அவ்வளவு சாதாரணமாக, பார்த்தாலே செட் என்று சொல்லத்தகுந்த வகையில் உள்ளது? லவ் தப்பிக்கும் காட்சிகள் எல்லாமே சிரிப்பை வரவழைக்கவில்லையா? உடல்நிலை சரியில்லாததுபோல் நடித்து, துவண்டு விழுந்து, மருந்தை உபயோகப்படுத்தித் தப்புவதெல்லாம் கற்பனை வறட்சியா இல்லையா? மலேஷிய போலீஸ் படம் முழுக்கவே காமெடியன்கள் போலவேதான் வருகின்றனர். லாஜிக் வறட்சி என்றுதான் இதையெல்லாம் சொல்லமுடியும். மருந்தால் பாதிக்கப்படும் ஹீரோ, உடனடியாக வீறுகொண்டு எழுந்து வர எப்படி முடிகிறது? உலகின் அத்தனை பேரின் புகைப்படங்களும் அடங்கிய டேடாபேஸா? அடப்பாவிகளா? இது உலக ரீலாக இருக்கிறதே? அதிலும் அது மின்னல் வேகத்தில் வேறு தகவல்களைத் தேடித் தருகிறதே? இதைக் காட்டலாம்தான். ஆனால் இப்படி ஒரு டேட்டாபேஸ் இடம்பெறுவதற்கான பின்னணியைத் தெளிவாக்கிவிட்டால் பிரச்னை இருக்காது. ஆனால் இதுதான் பிரபல ஸ்டார் நடிக்கும் ‘அக்மார்க்’ மசாலா ஆயிற்றே?  நல்லவேளை.. டபக்கா டபக்கா என்று முதுகில் திடீரென்று தோன்றும் இறக்கைகளை உபயோகித்து விக்ரம் வானில் பறப்பதைப் போலக் காட்டவில்லை. அந்தமட்டில் ஓரளவு பிழைத்தோம். எம்.ஜி.ஆர் படங்களில்கூட இப்படியெல்லாம் லாஜிக் மீறப்படாது.

வில்லனாக (வில்லி?) வரும் லவ் என்ற கதாபாத்திரம் யார்? திருநங்கையா? அல்லது gayவா? லவ் வில்லனாக ஆனது ஏன்? என்ன காரணம்? எதுவும் கிடையாது. விக்ரம் நடிக்க விரும்பியதால் அப்படி ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. அவ்வளவுதான். காரணம் தமிழ் மசாலா.

எந்தப் படமாக இருந்தாலும், அடிப்படையில் உணர்வுரீதியாக ஆடியன்ஸுடன் கனெக்ட் ஆவது மிகவும் முக்கியம். அதுதான் வருடங்கள் பல சென்றாலும் ஆடியன்ஸ் மனதில் அந்தப் படத்தை மறந்துபோகாமல் நிலைநிறுத்தும். ஆனால் அப்படி எதுவுமே இருமுகனில் இல்லை. இன்னும் ஓரிரண்டு மாதங்கள் கழித்து யோசித்துப் பார்த்தால்கூட இருமுகன் பற்றி எதுவும் நினைவு வராது என்றே தோன்றுகிறது.

விக்ரம் போன்ற ஒரு பெரிய ஸ்டாரின் கால்ஷீட் கிடைத்தும், மறக்கமுடியாத ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாக்குவதை விட்டுவிட்டு, எளிதில் மறக்கக்கூடிய படமாக இருமுகனை உருவாக்கியிருப்பதுதான் படம் பார்த்துமுடித்தபின்னர் பெரிய பிரச்னையாக இருந்தது. இது இருமுகனின் பிரச்னை மட்டும் இல்லை. பெரும்பாலும் அஜீத், விஜய், தனுஷ் போன்ற சூப்பர்ஸ்டார்களின் படங்களுமே இப்படியே உருவாக்கப்படுபவைதான். வெறித்தனமான ரசிகர்கள் ஆரவாரம் செய்யவேண்டும் என்றே உருவாக்கப்படும் காட்சிகளால்தான் இவர்களின் படங்கள் பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றன. எனவே எளிதில் மறக்கப்பட்டும் விடுகின்றன. இணையத்தில் பரவலாகக் கிண்டலும் செய்யப்படுகின்றன. இருந்தும் இயக்குநர்கள் விழித்துக்கொள்ளுவதற்கு எந்த அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் தெரியக்காணோம். கபாலியுமே மிக மிக மெதுவாக நகரும் படமாகவே இருந்தது என்பதை இதைப் படிப்பவர்கள் நினைத்துப் பார்க்கலாம்.

இத்தனை பிரச்னைகள் இருப்பதால், இந்தப் படத்தில் துளிக்கூட என்னால் ஒன்ற முடியவில்லை. தட்டையான, உட்புறம் எதுவும் இல்லாமல் வெறுமே சத்தம் மட்டும் போடும் படங்களுக்கு இருமுகனைத்தான் இனி உதாரணம் சொல்லவேண்டும். தேவையில்லாத ஸ்பீட்ப்ரேக்கர் பாடல்கள், அடிமட்ட மொக்கையான நகைச்சுவை, பல படங்களில் இருந்து உருவப்பட்ட, எந்தவித உணர்ச்சியையும் மனதில் தோற்றுவிக்காத காலியான காட்சிகள் போன்றவற்றை வைத்துப் படம் எடுத்தால் இருமுகன் போலத்தான் இருக்கும். இனியும் பல படங்கள் இப்படி வருவதற்கே சாத்தியக்கூறுகள் அதிகம். காரணம் பணம் ஒன்றை மட்டும் வைத்தே எதையும் யோசிக்கும் தயாரிப்பாளர்கள், உயிரைக்கொடுத்து ஒரு திரைக்கதையை எழுதாமல் நோகாமல் நோம்பி கும்பிட ஆசைப்படும் இயக்குநர்கள் மற்றும் இத்தகைய இயக்குநர்களை நம்பும் ஸ்டார்கள். உண்மையில் ஹாலிவுட்டில் மலிவான இயக்குநர்களாகக் கருதப்படும் மைக்கேல் பே, ரென்னி ஹார்லின் முதலியவர்களின் கொடூர மொக்கைகளை எடுத்துப் பார்த்தால்கூட இருமுகனை விடவும் நேர்த்தியாகத்தான் எழுதப்பட்டிருக்கும். ‘தரம்’ என்பது இங்கே நடிக நடிகையர்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியவர்கள் கொடுக்கும் பில்டப்களில் மட்டுமே உள்ளது என்பதுதான் அடிப்படைப் பிரச்னை.

இனியாவது லாஜிக் மீறப்படாமல், எடுத்துக்கொண்ட சப்ஜெக்ட்டில் விறுவிறுப்பு கலந்து, படம் பார்ப்பவர்களுக்கு எந்த அலுப்பும் இல்லாமல் அவர்களைப் படத்தில் ஒட்டுமொத்தமாக ஒன்றவைக்கும் படங்கள் இத்தகைய சூப்பர்ஸ்டார்களை வைத்து வருமா என்று யோசித்தால், நிலைமை மிகுந்த கவலைக்கிடம் என்றே புரிகிறது. இதுதான் தமிழ் வணிக சினிமாவின் தலையாய பிரச்னை. இது முதலில் சரியாக வேண்டும். அதற்குக் கதாநாயகர்கள் வானில் பறக்காமல் தரைக்கு வரவேண்டும். ஒழுங்காகக் கதை கேட்கவேண்டும். அப்போதுதான் மறக்கமுடியாத பல படங்கள் (ஆக்‌ஷன் படங்களே கூட) வெளிவரும்.

  Comments

8 Comments

  1. கானல் நீரை அள்ளிப் பருகுவது கூட சாத்தியம் ஆகலாம், ஆனால் நீங்கள் நினைப்பது ஒரு போதும் நடக்காது. நீங்கள் பேராசை கொள்கிறீர்கள்(;P). நாங்கள் ஒருபோதும் தமிழ் சினிமாவை ஹாலிவுட்டிற்கு மேலாகவோ அல்லது அதற்கு நிகராகவோ உருவாக்க‌மாட்டோம். RIP Story, RIP Screenplay, RIP Logic, RIP Music, RIP Stunt, RIP EVERYTHING

    Reply
  2. narendran

    இதுக்கே இப்படின்னா, நீங்க ‘ரெமோ’ பாக்கலியே… பாத்துராதீங்க..
    ‘Train to Busan’ பாத்துடீங்களா?

    Reply
    • Hey super. thanks for the information. I trusted that film, but now I don’t, thanks to your links.

      Reply
      • ambit kaur

        Dear Mr Rajesh, I would like to see your review about “Thani oruvan”. I am waiting for your comments. Please will you…thanks

        Reply
  3. srini karthi

    you do it first.and next to do the critism

    Reply
    • Oh. So you mean to say, we need to rape first, to talk about rape? Or we need to kill first, to talk about murders? This is the most funniest comment I had read today. BTW, do you know anything about me? About my work in films? Even as per my career in films, I am well qualified as per your ‘intelligent’ statement 😀

      Reply
  4. Sivakumar Viswanathan

    Dear Rajesh,
    Myself Sivakumar, did MA in screenwriting from London Birkbeck university. I would love to talk to you please. I live in Norwich city UK. I watched almost all of your videos, you are doing an amazing job. Would like to talk deeper about screenwriting. My number is 00447889442541

    Reply

Join the conversation