Ishq (2019) – Malayalam
Trauma எனப்படும் பிரச்னைகளை நமது வாழ்க்கையில் சில தருணங்களில் நாம் சந்திக்கக்கூடும். மனதில் ஆழமான வடுவை உண்டாக்கி, வாழ்க்கை முழுதுமே அந்த சம்பவங்களை நினைத்தாலேயே உடலும் மனமும் நடுங்கக்கூடிய பிரச்னைகள். உதாரணமாக, நடுராத்திரி வண்டியில் நாம் செல்கையில், ஒரு கும்பல் நம்மை வழிமறித்துத் தாக்கினால்? அப்படித் தாக்கும்போது, நம்மால் எதுவுமே செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டால்? (இது பெங்களூரில் ஒவ்வொரு New year அன்றும் இரவில் நடக்கும்). இதைப்போல் நம்மில் பலருக்கும் பல traumaக்கள் இருக்கும். வன்முறை என்பது பல வடிவங்களில் நம் வாழ்க்கையில் நடந்துகொண்டே இருக்கிறது. சிலருக்கு அது, உறவினர்களோ அல்லது வேறு நபர்களோ நம்மை மீறிச் சிறுவயதில் நம்மீது பாலியல் பலாத்காரத்தை இறக்கும்போது நடக்கும். சிலருக்கு, மரணங்களில் அது நடக்கலாம். சிலருக்கு எதிர்பாராத விபத்துகள். இப்படிப் பல சம்பவங்களைச் சொல்லலாம்.
அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தால் என்ன நடக்கிறது என்பதுதான் Ishq. நான் கதையை இங்கே சொல்லப்போவதில்லை. ஆனால், ஏதாவது ஒரு சம்பவத்தில், எதுவுமே செய்ய முடியாமல் மாட்டிக்கொள்ளும்போது நம் மனம் எப்படிக் காயமடையும்? தலைக்கு மேல் கோபம் வரக்கூடும். ஆனால் அந்தக் கோபத்தை வெளியே காட்டவே முடியாது. அப்படிக் காட்டினால் அவசியம் நாம் அந்த இடத்தில் பாதிக்கப்படுவோம் என்னும்போது, அது நம்மை எப்படிப்பட்ட செயல்களைச் செய்யவைக்கிறது?
இது ஒரு புறம் இருக்க, நமது நாட்டில் பெண்களை நாம் எப்படிப் பார்க்கிறோம்? இரவில் எங்கும் செல்லக்கூடாது; உடைகளைப் பார்த்துப்பார்த்து அணியவேண்டும்; பிறருடன் சிரித்துப் பேசக்கூடாது – இப்படியெல்லாம் இன்னும் ஆயிரம் விதிமுறைகளை அவர்கள் மேல் திணித்துத்தானே நாம் இதுவரை வந்திருக்கிறோம்? நாம் என்று நான் இங்கே சொல்வது, misogynistic என்று சொல்லப்படும் பெரும்பாலானவர்களைக் கொண்ட நமது சமுதாயத்தைத்தான். பெண்கள் மீது ஆழமான விரோதம் – ஆனால் அதை வெளிப்படுத்தமுடியாமல், கிடைத்த சந்தர்ப்பத்தில் எப்படியாவது அதை அவர்கள் மேல் கொட்டிவிடுவது – இதனால் அவர்களின் மனங்களில் ஆழமான காயத்தை உண்டுசெய்துவிடுவது என்பதுதான் இப்படிப்பட்ட சமுதாயத்தின் செயல்திட்டம். இதை அறிந்து செய்பவர்களும் உண்டு – அறியாமல், மனதில் பதிந்துவிட்ட ஆணாதிக்கக் கருத்துக்களால் தலைமுறை தலைமுறையாக பாதிக்கப்பட்டு செய்பவர்களும் உண்டு. எப்படி இருந்தாலும், பெண்களின் மீது வைக்கப்படும் கேள்விகளின் ஆழத்தில் ஒரே ஒரு கருத்துதான் உண்டு – அவன் கூட நீ என்ன செஞ்ச? அல்லது செய்யப்போற? இதை வெளிப்படையாகக் கேட்கத் தயங்கியே, பலவிதமான கேள்விகளின் மூலம் அதைப் பூசி மெழுகி, விடையைத் தெரிந்துகொள்ளப் பார்க்கிறார்கள். யோசித்துப் பாருங்கள். கணவர்கள், பாய்ஃப்ரெண்ட்கள் ஆகிய யாருக்குமே, ஏதோ ஒரு சமயத்தில், இன்னொரு ஆணுடன் பேசிக்கொண்டிருக்கும் மனைவி – காதலி ஆகியவர்களைப் பற்றிய இந்தச் சந்தேகம் நம்மூரில் வந்தே தீருகிறதுதானே? ராமாயணமே அதைத்தானே சொல்கிறது? அந்தக் காலத்தில் இருந்தே பெண்களுக்குப் பலவிதமான விதிமுறைகளை விதித்தவர்கள்தானே நாம்?
தற்போது அதிகரித்துக்கொண்டே வரும் வன்முறைச் சம்பவங்கள் என்னென்ன? ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தில் மூக்கை நுழைத்து, இதைச் செய்யாதே அதைச் செய்யாதே என்று சொல்லியே வன்முறையை வீசுவதுதானே இந்த எல்லாச் சம்பவங்களுக்கும் அடிப்படை? இதில் கலாச்சாரத் தாலிபான்கள், மதவெறியர்கள், சாதி வெறியர்கள், ஆணவக்கொலைகள், தனிப்பட்ட விரோதம், பாலியல் வன்முறை ஆகிய எல்லாமே வந்துவிடும்.
இப்படிப் பாதிக்கப்பட்ட நபர்கள், ஒன்று – எதுவுமே செய்ய முடியாமல், முடங்கி, மனதளவில் பாதிக்கப்பட்டு, வாழ்க்கை முழுதுமே நடைப்பிணங்களாக (அட்லீஸ்ட் மனதளவில்) நடமாடப் பல வாய்ப்புகள் உண்டு. வெளியே என்னதான் இயல்பாக இருக்க நினைத்தாலும், இந்தச் சம்பவங்களின் பாதிப்பு அவர்களை இயல்பான மனிதர்களாக ஆக முடியாமல் தடுத்துக்கொண்டே இருக்கும். வெளியே நடமாடுகையில், தனியாகவோ அல்லது எங்காவது அசந்தர்ப்பமான சமயங்களிலோ, அவசியம் அந்த பயம் வெளியே வந்தே தீரும். எத்தனை கவுன்சிலிங் கொடுத்தாலும் அந்த வடு முழுதாகச் சரியாவது மிகவும் கடினம்.
அடுத்ததாக, அப்படிப் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு, அந்தப் பாதிப்பை சரிசெய்யும் வாய்ப்பு கிடைத்தால்? நான் சொல்வது, பாதிப்பிலிருந்து முற்றிலுமாக வெளிவந்து இயல்பு வாழ்க்கையை வாழ்வது அல்ல. அந்த பாதிப்பு நடந்த சூட்டோடு சூட்டாகவே, தன்னை பாதித்தவர்களின் ஒரு பலவீனமான தருணத்தில் அவர்களை நேருக்கு நேராகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால்? உதாரணமாக, ஹே ராம் படத்தில், சாகேத்ராமின் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த டெய்லரைத் தேடி சாகேத் ராம், கலவரம் நடக்கும் கல்கத்தாவின் தெருக்களில் அலைகிறான் இல்லையா? அப்படி. இது நடந்தால், அப்போது, பாதிக்கப்பட்டவர்களின் மனம் என்ன சொல்லும்? அடிக்கு அடி, உதைக்கு உதை, ரத்தத்துக்கு ரத்தம் என்று சொல்லுமா? அல்லது மன்னித்து விட்டுவிடலாம் என்று சொல்லுமா? இது ஆளுக்கு ஆள் மாறும் அல்லவா?
இந்த விஷயங்கள் எல்லாமே, Ishq திரைப்படத்தைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றின.
படத்தில் மொத்தம் நான்கே நான்கு முக்கியமான கதாபாத்திரங்கள்தான். பாக்கி அனைவரும் ஒரு சில காட்சிகளில் வருவதோடு சரி. இந்த நான்கு பேருக்குள் நடைபெறும் உரையாடல்களும், செயல்களும்தான் படம். எந்தக் காட்சியும் அலுக்காமல், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதிலேயே படம் பயணிக்கிறது. இவர்கள் அனைவருமே பிரம்மாதமாக நடித்திருக்கின்றனர்.
க்வெண்டின் டாரண்டினோ, ஒரு விறுவிறுப்பான திரைக்கதை எப்படி இருக்கவேண்டும் என்று சொல்கையில், ஒரு ரப்பர்பேண்டை எத்தனை இழுக்க முடியுமோ அத்தனை இழுக்கவேண்டும் – ஆனால் அது பிய்ந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும் என்பார். முடிந்தவரை முழுக்க இழுத்துவிட்டு, டப்பென்று அதை விட்டுவிட்டால் எப்படி இருக்குமோ அதுதான் ஒரு நல்ல திரைக்கதையின் அடையாளம் என்பது அவரது கருத்து. அதற்கு ஏற்றபடியே, அவரது படங்களில் நீளமான சீக்வென்ஸ்கள் இருக்கும். ஆனால் அவை அலுக்கவே அலுக்காது. அதேபோல், இந்தப் படத்தில் மிக முக்கியமான இரண்டு மிகப்பெரிய சீக்வென்ஸ்கள் உள்ளன. அந்த சீக்வென்ஸ்கள்தான் படமே. அந்த இரண்டு சீக்வென்ஸ்களையும், மிகக் கச்சிதமாக, மிகவும் விறுவிறுப்பாக, பார்க்கும் நமது மனம் பதைபதைக்கும்படி எழுதி, அதை அருமையாக எடுத்திருப்பதுதான் இந்தப் படத்தின் ப்ளஸ்.
படத்தில் நடக்கும் சம்பவங்களைத் திரைக்கதையில் எழுதியவர்களின் பாயிண்ட் ஆஃப் வியூ இல்லாமல், கதாபாத்திரங்களின் பாயிண்ட் ஆப் வியூவாகவே அமைத்திருப்பது படத்தின் அடுத்த சிறந்த விஷயம். எனக்கு வன்முறை பிடிக்காது -எனவே படத்தில் வன்முறை வரக்கூடாது என்றெல்லாம் எண்ணாமல், சம்பவங்கள் – அதற்கு எதிர்வினையான சம்பவங்கள் என்றே எழுதி எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் நமக்கு சில விஷயங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவை நம்மை யோசிக்கத் தூண்டுகின்றன. இப்படித்தான் இந்தப் படம் எனக்குத் தோன்றியது.
இந்தப் படத்தைத் தமிழில் எடுப்பது மிகக்கடினம். காரணம் படத்தின் இரண்டாம் பாதி பார்க்கும்போது உங்களுக்குத் தெரியும். எடுத்தாலும் தமிழில் இப்படிப்பட்ட காட்சிகள் மிகமிக மேலோட்டமாகவேதான் எடுக்கப்படும்.
ஒருவகையில் மலையாளத்தில் இது வந்திருப்பது ஆச்சரியமே இல்லை. அவர்கள் பரிசோதனை முயற்சிகளையும் தாண்டி, இயல்பான ஒரு திரைக்கதையையே எங்கோ கொண்டுசென்றுவிட்டார்கள். அந்த இடத்துக்கு வேறு யாராலும் போட்டிபோடவே முடியாது என்பது என் உறுதியான கருத்து.
முடிந்தால் பார்க்க முயற்சி செய்யலாம். எல்லாவற்றையும் மறந்துவிட்டு, படம் பாருங்கள். பல கேள்விகளை இப்படம் எழுப்பும் என்றே நம்புகிறேன். Moralistic point of view என்று ஒன்று உண்டு. அதாவது, குழந்தைகள் டிவியில் வன்முறைக் காட்சிகளைப் பார்க்கக்கூடாது; நல்லவனாகவே இருக்கவேண்டும்; யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்றறெல்லாம். ஆனால், மனித மனம் என்பது எத்தனை விசித்திரமானது என்பதும், அது எதையெல்லாம் செய்யுக்கூடியது என்பதும் இப்படத்தில் பேசப்பட்டிருக்கின்றன. படம் பார்க்கையில், ஆங்காங்கே கோபம், பயம், எரிச்சல் போன்ற உணர்ச்சிகள் எழுந்தன. ரத்தம் சூடாவதை என்னால் உணர முடிந்தது.
இக்காலத்தில் சீதை வாழ்ந்திருந்தால், ராவணனுடன் பலகாலம் இருந்தாயே? உன் கற்பை நீ நிரூபி என்று ராமன் சொன்னதற்கு அவளது பதில் என்னவாக இருந்திருக்கும் என்பது இப்படத்தின் க்ளைமேக்ஸில் அட்டகாசமாக சொல்லப்பட்டிருக்கிறது.
பி.கு – இந்தப் படத்துக்கு எப்படி டிரெய்லர் கட் செய்திருக்கமுடியும் என்று ஆச்சரியமாகப் போய்விட்டது. ஆனால் அதையும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
எழுதிய ரதீஷ் ரவியும், இயக்கிய அனுராஜ் மனோகரும் அவசியம் பாராட்டத்தக்கவர்கள்.