அனுபவம் புதுமை….
ஜனவரி மாத காட்சிப்பிழையில் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத கவர்ச்சி நடிகைகளைப் பற்றி எழுதிய கட்டுரை இங்கே.
திருச்செங்கோட்டில் 1907ல் பிறந்த ராமலிங்கம் சுந்தரம் என்பவர், இங்லாந்தில் பி.எஸ்.ஸி முடித்துவிட்டு இந்தியா திரும்பி, ஏஞ்சல் ஃபிலிம்ஸ் என்ற திரைப்பட நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தார். அவர் அப்போது எடுத்தவை அக்காலத்திய வழக்கப்படி புராணப்படங்களே. தமிழகத்தில் திரைப்படங்கள் தயாரிக்க ஸ்டுடியோக்கள் இல்லாததால் ‘த்ரௌபதி வஸ்த்ராபரணம் (1934)’, ‘துருவா (1935)’ மற்றும் ‘நல்லதங்காள்’ (1935) ஆகிய ஏஞ்சல் பிலிம்ஸின் படங்கள் எல்லாமே கல்கத்தாவிலேயே எடுக்கப்பட்டன. இந்தப் படங்களுக்குப் பின்னர், ஏஞ்சல் ஃபிலிம்ஸில் இருந்து பிரிந்து வந்து தனது சொந்த நிறுவனத்தை 1935ல் ஆரம்பித்தார் சுந்தரம். அந்த நிறுவனத்தின் பெயர் – மாடர்ன் தியேட்டர்ஸ். சேலத்தில் ஒரு பெரிய ஸ்டுடியோ உருவாக்கி, கச்சிதமான திட்டமிடலுக்குப் பின்னர் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் படங்கள் எடுத்து, தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட ஹாலிவுட் திரைப்படங்களின் தயாரிப்பு முறையை முதலில் கொண்டுவந்தவர் இவர்தான். மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் என்றால் தெரியாத நபர்களே இல்லையல்லவா?
தமிழ் சினிமாவின் கவர்ச்சிக்கன்னிகளைப் பார்ப்பதற்கு முன்னர் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்தைப் பார்ப்பதற்குக் காரணம் இருக்கிறது.
மாடர்ன் தியேட்டர்ஸ் வாயிலாக சுந்தரம் எடுத்த முதல் படம் – ‘சதி அஹல்யா’ (1937). இந்தப் படத்துக்குக் கதாநாயகியை சுந்தரம் தேடிவந்த காலம். யாழ்ப்பாணத்தில் பிறந்து வசதியாக வளர்ந்திருந்த தவமணி தேவி என்ற பெண், அக்காலத்திய மதராசப் பட்டினத்துக்கு வந்திருந்த காலகட்டம். வசதியான பெற்றோரால் சுதந்திரமாக வளர்க்கப்பட்ட தவமணிதேவி, மதராஸில் பரத நாட்டியமும் பாட்டும் கற்றுக்கொண்டிருந்தார். இயல்பாகவே, தனது படத்துக்குக் கதாநாயகியைத் தேடிவந்த சுந்தரம் தவமணிதேவியால் கவரப்பட்டு, அவருக்கே அந்த வாய்ப்பையும் வழங்கினார். அப்போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், தவமணி தேவியின் புகைப்படத்தை சுந்தரம் அவர்களுக்கு வழங்க, அதில் நீச்சல் உடையில் சாய்ந்து அமர்ந்திருந்த தவமணி தேவியைப் பார்த்துப் பத்திரிக்கையாளர்கள் அசந்துவிட்டதாக அறிகிறோம். இதுமட்டுமல்லாமல் அந்தப் புகைப்படம் பத்திரிக்கைகளிலும் வெளிவந்து பொதுமக்களின் கவனத்தையும் கவர்ந்தது. 1937ல் ஒரு நடிகையின் நீச்சலுடைப் புகைப்படம் வெளிவந்தால் எப்படி இருந்திருக்கும்?
இதனால் படம் வெளிவரும் முன்னரே தவமணி தேவிக்கு எக்கச்சக்கப் புகழ் கிடைக்க, அதன்பின் வெளியான ‘சதி அஹல்யா’ படம் வெற்றியும் அடைந்தது. அன்றில் இருந்து தவமணி தேவி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார். அதன்பின் அவர் நடித்த ‘வனமோஹினி’ (1940) திரைப்படத்தில் ஹவாய் பாணியில் அமைந்த சாரோங் என்ற சிறியதொரு உடையை அணிந்து அவர் நடித்தது பெருமளவில் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. டோரதி லமார் நடித்திருந்த ‘Her Jungle Love’ என்ற படமே தமிழில் வனமோஹினியாக எடுக்கப்பட்டிருந்ததால், அந்த உடையும் அவரது பாத்திரம் அணிந்திருந்த உடையேதான். வனமோஹினியின் சிறப்புகளில் இன்னொன்று, படத்தின் டைட்டில்கள் போடும்போது முதலில் கதாநாயகன் எம்.கே ராதாவின் பெயரோ தவமணி தேவியின் பெயரோ வரவில்லை. ‘சந்துரு’ என்ற பெயர்தான் முதலில் வந்தது என்று ராண்டார் கை இப்படத்தைப் பற்றி எழுதிய கட்டுரையிலிருந்து அறிகிறோம். அந்தப் படம் மூலம் எக்கச்சக்கப் புகழ் அடைந்த சந்துரு, ஒரு யானை! அக்காலத்தின் கவர்ச்சிகரமான படங்களில் வனமோஹினியே முதலிடம் வகிக்கிறது.
இதன்பின் பல படங்களில் நடித்துப் புகழடைந்த தவமணி தேவி, 2001ல் தனது எழுபத்தாறாம் வயதில் காலமானார். தமிழ்த் திரைப்படங்களின் முதல் கவர்ச்சிக்கன்னி இவரே.
தவமணி தேவிக்குப் பின் தமிழில் பிரகாசித்த நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் தஞ்சாவூர் ரங்கநாயகி ராஜாயீ என்ற டி.ஆர். ராஜகுமாரி. 1922 பிறந்து, தமிழில் ‘குமார குலோத்துங்கன்’ (1939) படத்தில் முதலில் நடித்தார் ராஜகுமாரி. இதன்பின்னர் ‘மந்தாரவதி படத்திலும் நடித்தார். அப்போதுதான் பிரபல இயக்குநர் கே. சுப்ரமண்யம் ராஜகுமாரியை சந்திக்க நேரிட, அவரது ‘கச்ச தேவயானி’ 1941) படத்துக்கு ராஜகுமாரியைத் தேர்வு செய்தார். இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் முதலில் வெளிவந்தது கச்ச தேவயானியே. அந்தப் படத்தில் நாயகன் கொத்தமங்கலம் சீனு. கச்ச தேவயானியில் நடித்திருந்த புதுமுகம் ராஜகுமாரியை ரசிகர்கள் உடனடியாக ஏற்றுக்கொண்டனர். தமிழின் முதல் ‘கனவுக்கன்னி’ பட்டம் இவருக்கே கிடைத்தது. இதன்பின்னர் வரிசையாகப் பல படங்கள் நடித்தார். அவற்றில் ‘சிவகவி’ (1943) முக்கியமானது. அப்போதைய சூப்பர்ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதர் பொய்யாமொழிப் புலவராக நடித்த படம். இதில் ‘கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே’ பாடலில் அரசவை நடனப் பெண்ணாக ராஜகுமாரியும், பொய்யாமொழிப் புலவராக பாகவதரும் நடித்திருப்பார்கள். படத்தில் கதாநாயகியாக நடித்தவர் எஸ். ஜெயலக்ஷ்மி என்றாலும் ராஜகுமாரி மிகவும் பிரபலம் அடைந்த படம் இது.
இதற்குப்பின்னர்தான் பாகவதரும் டி.ஆர். ராஜகுமாரியும் நடித்து இன்றுவரை புகழுடன் விளங்கும் ‘ஹரிதாஸ்’ வெளிவந்தது. ஹரிதாஸ் பற்றி யாருமே எதுவுமே எழுதத் தேவையில்லை என்ற அளவில் பக்கம்பக்கமாக இதுவரை எழுதப்பட்டுவிட்டது. சென்னை ப்ராட்வே தியேட்டரில் மூன்று தீபாவளிகளைக் கொண்டாடிய படம். பாகவதரின் அக்கால வழக்கப்படி எல்லாப் பாடல்களும் ஹிட். பாபநாசம் சிவனின் பாடல்களின் இசையும் ஜி.ராமநாதனின் பின்னணி இசையும் மறக்கமுடியாதவை. குறிப்பாக ‘மன்மதன் லீலையை வென்றார் உண்டோ’ பாடல் உச்சபட்ச ஹிட்டாக மாறியது. இன்றுவரை இந்தப் பாடல் தமிழகத்தின் ஊடகங்களில் எதாவது ஒரு வழியில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது என்பதுதான் இந்தப் பாடலின் சிறப்பு. இதில் பாகவதருடன் ராஜகுமாரியே நடித்திருந்தார். அக்காலத்தில் இல்லாத வழக்கமாக இந்தப் பாடலில் ராஜகுமாரி பாகவதருக்கு ஒரு ஃப்ளையிங் கிஸ் வேறு கொடுப்பார். என்.ஸி. வசந்தகோகிலம் பாகவதரின் மனைவியாக நடித்திருந்தாலும், ராஜகுமாரியே இதிலும் மிகப்பிரபலம் அடைந்தார்.
இதன்பின்னர் சில படங்களில் நடித்தாலும், ராஜகுமாரியின் திரைவாழ்க்கையின் உச்சபட்ச சாதனை, அவர் நடித்த ‘சந்திரலேகா’ (1948) படம்தான். எஸ்.எஸ். வாசன் இயக்கித் தயாரித்த இந்தப் படம்தான் அப்போது இந்தியாவின் மிகப் பிரம்மாண்டமான படம். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் (1943-1948) தயாரிப்பில் இருந்து, இதுவரை இல்லாத பல அம்சங்களுடன் இந்தியா முழுவதும் அட்டகாசமாக ஓடிய படம். கதாநாயகி சந்திரலேகாவாக ராஜகுமாரியே நடித்தார். வீரசிம்மனாக எம்.கே. ராதாவும், சசாங்கனாக ரஞ்சனும் நடித்தனர். இதன் பேரிகை நடனம் இன்றும் பலரால் சிலாகிக்கப்படுவதைக் காணலாம். 1948ல் தென்னிந்தியா முழுதும் 40 திரையரங்குகளில் (அப்போதைய சாதனை அது) வெளியானது. ஜப்பானில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட முதல் தமிழ்ப்படம் இதுதான் (1954 ஏப்ரல்). டென்மார்க்கிலும் படம் வெளியிடப்பட்டதை இணையத்தின் வாயிலாக அறிகிறோம்.
பாகவதர், சின்னப்பா, டி.ஆர். மஹாலிங்கம், ஹொன்னப்ப பாகவதர் என்று அக்காலத்திய தமிழ்த்திரையின் அனைத்து நட்சத்திரங்களுடனும் நடித்தவர் டி.ஆர். ராஜகுமாரி. நன்றாகப் பாடவும் செய்தது இவரது இன்னொரு சிறப்பம்சம். இவரது தலைமுறை மட்டும் அல்லாமல் இவருக்கு அடுத்த தலைமுறை நடிகர்களான எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் ஆகியவர்களுடனும் நடித்திருக்கிறார். ‘மனோகரா’ (1954) படத்தில் வசந்தசேனையாக இவரது பாத்திரம் புகழ்பெற்றது. அதில் மன்னனாக நடித்த சதாசிவ ராவின் ஆசை நாயகியாக நடித்து, அரசாட்சியை அவரிடமிருந்து கைப்பற்றும் கொடூரமான பாத்திரம் ராஜகுமாரியினுடையது.
பிந்நாட்களில் ஆர்.ஆர். பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை இவரது சகோதரர் டி.ஆர். ராமண்ணாவுடன் துவக்கி, ‘குலேபகாவலி’, ‘கூண்டுக்கிளி’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘பறக்கும் பாவை’ முதலிய படங்களை எடுத்தார். இப்படியாகத் தமிழ்த் திரையுலகின் இன்றியமையாத கதாநாயகியாகவும் பின்னர் தயாரிப்பாளராகவும் விளங்கிய ராஜகுமாரி, 1999ல் மறைந்தார்.
இவருக்குப் பின்னர் அஞ்சலி தேவி, சாவித்ரி, சௌகார் ஜானகி, பானுமதி, லலிதா, பத்மினி, ராகினி எம்.என்,ராஜம், ராஜசுலோசனா, ஜமுனா, வைஜெயந்திமாலா, தேவிகா ஆகியவர்கள் ஐம்பதுகளில் மிகவும் பிரபலம் அடைந்தவர்கள். இக்காலகட்டத்தில் நடிப்பினால் இவர்கள் அனைவரும் ரசிகர்களைக் கவர்ந்தார்கள். இவர்களுக்கென்று கவர்ச்சியான பாடல்கள் பெருமளவில் இல்லை. இருந்தாலும், கிட்டத்தட்ட பானுமதிக்கு ஒரு சில பாடல்கள் அப்படி அமைந்தன. ‘என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே’, ‘அழகான பொண்ணுதான்’ போன்ற பாடல்களே அவை. போலவே ‘ஓ ரசிக்கும் சீமானே’ போன்ற பாடல்களும் அக்காலத்தில் வெளிவந்தாலும், தமிழில் அடுத்த கவர்ச்சிக்கன்னி என்ற பட்டம் கொடுக்க ரசிகர்கள் இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருந்தனர்.
இந்தக் காலகட்டத்தில்தான் ஸ்ரீதரின் வருகை நிகழ்ந்தது. அக்காலகட்டத்தில் இருந்துவந்த தமிழ்ப்படங்களின் பாணியில் இருந்து முற்றிலும் விலகி, நாடகத்தனமான, நீளமான வசனங்கள் இல்லாமல் இயல்பாகவும் நகைச்சுவை கலந்தும் அவரது படங்கள் இருந்தன. அக்காலத்தில் கல்லூரி மாணவ/மாணவியருக்குப் படங்கள் எடுத்தது அவராகத்தான் இருக்கும் என்றே தோன்றுகிறது. ஸ்ரீதரின் படங்களில் கதாநாயகிகள் கவர்ச்சி கலந்த நடனங்கள் ஆடும் வழக்கம் இருந்தது. ’காதலிக்க நேரமில்லை’ படத்தின் ’அனுபவம் புதுமை’ பாடல் அப்படிப்பட்டதே. பின்னர் ‘வெண்ணிற ஆடை’ படத்திலும் ‘அம்மம்மா காற்று வந்து ஆடைதொட்டுப் பாடும்’ பாடலும் இதேபோன்றதுதான். ’ஊட்டி வரை உறவு’ படத்தின் ‘தேடினேன் வந்தது’ இன்னொரு உதாரணம். சச்சுவை ‘காதலிக்க நேரமில்லை’ மற்றும் ‘சிவந்த மண்’ படங்களில் இதுபோன்ற பாடல்களுக்கு ஆடவிட்டிருப்பார். இது அவரது பெரும்பாலான படங்களில் தொடர்ந்தது. ரசிகர்களுக்கும் அது பிடித்தே இருந்தது. அவரது படங்கள் இளைஞர்களைக் கவர்ந்தன.
தமிழில் தொண்ணூறுகளில் வெளிவந்த ‘இதுதாண்டா போலீஸ்’, ‘நாந்தாண்டா சி.ஐ.டி’, ‘எவனா இருந்தா எனக்கென்ன?’, ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ போன்ற தெலுங்குப் படங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் அறுபதுகளிலேயே இப்படிப்பட்ட டப்பிங் படங்கள் தமிழில் நன்றாகவே ஓடியிருக்கின்றன. அப்படங்களில் பெரும்பாலும் நடித்தவர் விஜயலலிதா. கிட்டத்தட்ட 1967ல் இருந்து எழுபதுகளின் நடுப்பகுதிவரை தென்னிந்திய மொழிகளில் இவர் மிகவும் பிரபலம். ‘ரிவால்வர் ரீட்டா’ (ஒரிஜினலின் பெயர் ‘ரிவால்வர் ராணி’), ‘கன்ஃபைட் காஞ்சனா’, ‘புல்லட் ராணி’ என்றெல்லாம் இவரது படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நன்றாகவும் ஓடின. இப்படங்களில் வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்ட பெண்ணாக இருந்து கொடியவர்களைப் பழிவாங்கும் பெண் கௌபாயாக நடித்திருப்பார் விஜயலலிதா. இதே விஜயலலிதா, மாடர்ன் தியேட்டர்ஸின் படங்களிலும் நடித்தார். ‘வல்லவன் ஒருவன்’ படத்தின் ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ பாடல் பலருக்கும் நினைவிருக்கும்.
அக்காலத்திய தமிழ் ரசிகர்களை இப்படிப்பட்ட ஆங்கிலபாணிப் படங்களில் நடித்துக் கவர்ந்த விஜயலலிதா குறிப்பிடத்தக்கவர். பட்டணத்தில் பூதம், எதிரொலி, திருடன் (இப்படத்தில் அவருக்குப் பெயர் ரீட்டா), சொர்க்கம் (இப்படத்தில் ‘பொன்மகள் வந்தாள்’ பாடலுக்கு சிவாஜியுடன் இவர் ஆடிய நடனம் மிகவும் புகழ்பெற்றது), சவாலுக்கு சவால் போன்ற சில தமிழ்ப்படங்களிலும் நடித்தார். அதே மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் சி.ஐ.டி சகுந்தலாவும் நடித்தார். சி ஐ டி சங்கர் படத்தில் நடித்ததால் அப்பெயர் அவருடன் ஒட்டிக்கொண்டது. தமிழ்ப்பட காபரேக்களில் இவரது பங்கும் மறக்கமுடியாதது. க்ளப் டான்ஸ்கள் என்ற புகழ்பெற்ற அம்சம் தமிழ்ப்படங்களில் இடம்பெற்றது இக்காலகட்டத்தில்தான்.
இந்தக் காலகட்டத்தில்தான் தமிழில் தனியாகப் பாடல்களுக்கு ஆடும் நடிகைகள் உருவாயினர் (முதன்முதல் பேசும் தமிழ்ப்படமான காளிதாஸிலேயே டி.பி.ராஜலக்ஷ்மி குறத்தி நடனம் ஆடியிருக்கிறார். மட்டுமல்லாமல் தமிழின் முதல் குறும்படமான ‘குறத்தி பாட்டும் நடனமும்’ என்பதிலேயே அதற்குமுன்னரும் அவர் குறத்தி நாடனம் ஆடியிருக்கிறார். இதுபோன்று அவ்வப்போது அரிதாக நிகழ்ந்தவைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது). அப்படி உருவானவர்களில் ஜோதிலக்ஷ்மி முதன்மையானவர். ‘பெரிய இடத்துப் பெண்’ படத்தின் மூலமாக 1963ல் நடிகையாக அறிமுகமாகி, அதன்பின்னர் பல படங்களில் பாடல்களுக்கு நடனம் ஆடியிருக்கிறார். அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளிலும் மிகவும் பிரபலமடைந்தவர் இவர். இவரைப் போலவே இவரது இளைய சகோதரி ஜெயமாலினியும் ரசிகர்களிடையே பிரபலம். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஏராளமான தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்திப் படங்களிலும் பாடல்களிலும் தவறாமல் இடம்பெற்றவர் ஜெயமாலினி. ஜோதிலக்ஷ்மியும் ஜெயமாலினியும்தான் பல ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழில் கவர்ச்சிக்கன்னி அவதாரம் எடுத்தவர்கள் என்று தோன்றுகிறது. ஆனால் இவர்கள் பாடல்களுக்கு மட்டுமே பெரும்பாலும் ஆடிச்சென்றனர். நடிப்பு என்பது இவர்களிடம் ஆரம்பத்தில் இருந்தாலும் பின்னர் அது மெதுவாக மறைந்தது. விட்டலாச்சார்யாவின் ‘ஜெகன்மோகினி’ படத்தில் ஜெயமாலினி முக்கியமான பிசாசு வேடத்தில் நடித்தார். தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் படம் பிய்த்துக்கொண்டு ஓடியது.
ஜெயமாலினி எழுபதுகளில் பிரபலமாக இருந்த காலகட்டத்தில்தான் தமிழில் புதிதாக ஒரு நடிகை அறிமுகமானார். அறிமுகமான குறுகிய காலகட்டத்திலேயே அவருக்கு உருவான ரசிகர் படை கொஞ்சநஞ்சமில்லை. அப்போதிலிருந்து தற்கொலை செய்துகொண்டு இறந்த காலகட்டம் வரை தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சில் கனவுக்கன்னியாக வலம்வந்த சில்க் ஸ்மிதா அவசியம் குறிப்பிடத்தக்கவரே. தமிழில் வினு சக்ரவர்த்தியால் கண்டுபிடிக்கப்பட்டு ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் ‘சில்க்’ என்றே பெயர்வைக்கப்பட்ட ஸ்மிதாவை உடனடியாக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். ‘அலைகள் ஓய்வதில்லை’ முதலிய சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தாலும், அவருக்குக் கவர்ச்சி நடிகை என்ற பதமே நிலைத்தது. அவரும் பாடல்களில் நடனமாடுவதை சந்தோஷமாகவே ஏற்றுக்கொண்டார். வண்டிச்சக்கரத்துக்குப் பின்னர் பல மலையாளப் படங்களில் நடித்துவிட்டு அலைகள் ஓய்வதில்லையில் நடித்திருந்தார் ஸ்மிதா. அதன்பின் ‘மூன்றாம் பிறை’ வெளியானது. ‘பொன்மேனி உருகுதே’ பாடல் அப்போதைய சூப்பர்ஹிட்டானது. இதன்பின் ‘சகலகலா வல்லவன்’ படத்தில் ‘நேத்து ராத்திரி யம்மா’ பாடல் வெளியாக, ஏற்கெனவே பிரபலமாக இருந்த ஸ்மிதா புகழேணியின் உச்சத்துக்கு எழுந்தார். இதன்பின் ரஜினிகாந்த்துடன் ‘தனிக்காட்டு ராஜா’, ‘ரங்கா’, ‘மூன்று முகம்’, ‘பாயும்புலி’, ‘துடிக்கும் கரங்கள்’, ‘தாய்வீடு’, ‘தங்கமகன்’ என்று ஏராளமான படங்கள். பின்னர் ஹிந்தியிலும் ஒருசில படங்கள் நடித்தார். அவற்றில் ‘ஜீத் ஹமாரி’, தாய்வீட்டின் ஹிந்தி ரீமேக். ரஜினிகாந்த்தான் ஹீரோ. தமிழில் செய்த அதே பாத்திரத்தை ஹிந்தியில் செய்தார்.
இதன்பின்னர் ‘சில்க் சில்க் சில்க்’ வெளியானது. ஆங்கிலத்தில் ‘டாக் டே ஆஃப்டர்னூன்’ என்று அல் பசீனோ நடித்து வெளியான படத்தின் பாதிப்பில் உருவான இந்தப் படத்தில் ரகுவரனும் பானுசந்தரும் நடித்திருந்தனர். ரகுவரன் வில்லன். இதிலும் சில்க்கின் வேடம் பெரிதாகப் பேசப்பட்டது. யோசித்துப் பார்த்தால் தமிழில் ஒரு நடிகரின் பெயரில் வெளியான படங்களில் இதுதான் முதல் என்று தோன்றுகிறது. இதற்குப் பின்னர்தான் பிரியமுடன் பிரபு, அன்புள்ள ரஜினிகாந்த், மிஸ்டர் கார்த்திக் போன்றவையெல்லாம் வெளியாயின.
தென்னிந்தியாவின் அத்தனை மொழிகளிலும் நடித்து எப்போதுமே முதலிடத்தில் இருந்தவர் சில்க் ஸ்மிதா. அதேசமயம், அவருடனேயே அறிமுகமாகி, தங்களுக்கு என்று தனி இடங்களையும் சிலர் பிடித்தனர். அவர்களில் அனுராதா குறிப்பிடத்தக்கவர். மலையாளத்தில் கே.ஜி ஜார்ஜ்ஜின் அறிமுகத்தில் ‘இனி அவள் உறங்கட்டே’ படத்தில்தான் முதன்முதலில் நடித்ததாக அனுராதாவே சொல்லியிருக்கிறார். இதன்பின்னர் ஒருசில மலையாளப்படங்களில் நடித்துவிட்டுத் தமிழில் ஸ்ரீதரின் ‘மோகனப்புன்னகை’ படத்தில் சிவாஜி, கீதா, ஜெயபாரதி போன்றவர்களுடன் நடித்தார். பின்னர் மலையாளத்தில் ‘காளியமர்த்தனம்’ என்ற படத்தில் ‘புஷ்யராக தேரில் வரும்’ என்ற பாடலில்தான் முதன்முதலில் கவர்ச்சியாக நடித்ததாகவும் அனுராதா சொல்லியிருக்கிறார். அந்தப் படத்துக்குப் பின் எக்கச்சக்கமான பாடல்கள் அனுராதாவைத் தேடிவந்தன. இதன்மூலம் சில்க் ஸ்மிதாவைப் போலவே அதே காலகட்டத்தில் அனுராதாவும் புகழ்பெற்றார். இருவருக்குமே தனித்தனி ரசிகர்கள் உருவாயினர் என்று தெரிகிறது. பின்னர் எண்பதுகளின் இறுதியில் ரதீஷ்குமார் என்ற நடன இயக்குநரைத் திருமணம் செய்துகொண்டு நாளைய செய்தி, இன்னிசை மழை போன்ற படங்களில் நடனம் அமைப்பதில் அவருக்கு உதவியிருக்கிறார். ஒரு கொடூரமான விபத்தில் 1996ம் வருடத்தில் ரதீஷ்குமார் சிக்கிக்கொண்டு அதன்பின்னர் படுத்த படுக்கையானார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து இறந்தார். அனுராதாவின் மகள் அபினயஸ்ரீ மலையாளத்தில் ‘ஃப்ரெண்ட்ஸ்’ மூலம் அறிமுகமாகி, அதே வேடத்தைத் தமிழிலும் செய்து சில படங்களில் நடித்தும் பாடல்களில் நடனமாடியும் இருக்கிறார். தற்போது அனுராதா தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
‘விஜயபுரி வீரன்’ என்று 1960ல் ஜோஸஃப் தளியத்தின் இயக்கத்தில் ஒரு திரைப்படம் வெளிவந்தது. அதில் அறிமுக நடிகர் சி.எல். ஆனந்தன் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப் படம் பெருவெற்றியடைந்ததால் ‘விஜயபுரி வீரன் ஆனந்தன்’ என்றே அழைக்கப்பட்டார். பின்னர் ‘கொங்கு நாட்டு தங்கம்’, ‘வீரத்திருமகன்’ (‘ரோஜா மலரே ராஜகுமாரி’ பாடல் இப்போதும் பலருக்கும் நினைவிருக்கலாம்), ‘யானை வளர்த்த வானம்பாடி’ போன்ற பல படங்களில் நடித்தவர். பின்னர் ‘ஆனந்தன் மூவீஸ்’ என்ற திரைப்பட் நிறுவனத்தைத் துவக்கி, ‘நானும் மனிதன் தான்’ என்ற படம் எடுத்தார். படம் ஓடவில்லை. இன்னும் சில படங்களில் நடித்துவிட்டு, 1989ல் மறைந்தார். அவருடைய மகள்தான் டிஸ்கோ சாந்தி. எண்பதுகளின் மத்தியில் திரைப்படங்களில் அறிமுகமாகி, சில்க் ஸ்மிதாவைப் போலவே கவர்ச்சி நடனங்கள் ஆடியவர். சில்க் ஸ்மிதா,அனுராதா மற்றும் டிஸ்கோ சாந்தி ஆகிய மூவருமே புகழுடன் விளங்கியவர்கள். இவரும் சில்க்கைப் போலவே ஹிந்தியிலும் நடித்திருக்கிறார். இவரது தங்கை லலித குமாரியும் சில படங்களில் நடித்தவர். பிரகாஷ் ராஜைத் திருமணம் செய்துகொண்டவர். பின்னர் இருவருக்கும் விவாகரத்தும் ஆகியது.
புகழின் உச்சத்தில் இருந்தபோது 1996ல் தெலுங்கு வில்லன் நடிகர் ஸ்ரீஹரியைத் திருமணம் செய்துகொண்டார் டிஸ்கோ சாந்தி. 2013 அக்டோபரில் பிரபுதேவா இயக்கத்தில் ‘ராம்போ ராஜ்குமார்’ ஹிந்திப் படத்தில் நடித்தபோது கல்லீரல் பிரச்னையால் மும்பையில் மரணமடைந்தார் ஸ்ரீஹரி.
சில்க்கும் அனுராதாவும் டிஸ்கோ சாந்தியும் கோலோச்சிவந்த காலகட்டத்திலேயே அறிமுகமாகியவர் குயிலி. அமீர்ஜான் இயக்கிய முதல் படம் பூவிலங்கில் முரளியுடன் சேர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டவர் குயிலி. இதன்பிரகு சில படங்கள் நடித்தாலும், ‘நாயகன்’ படத்தின் ‘நிலா அது வானத்து மேலே’ பாடல் இவரை மிகவும் பிரபலமாக்கியது. அதன்பின் முழுநேரக் கவர்ச்சி நடனங்கள் பல படங்களில் ஆடினார். கமல்ஹாஸனுடன் ‘சூரசம்ஹாரம்’ படத்தில் ‘வேதாளம் வந்திருக்குது’ இவர் ஆடிய பாடலும் பிரபலமடைந்தது. பின்னர் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தார். அரசியலிலும் ஈடுபட்டார். அ.தி.மு.கவுக்காக பிரச்சாரங்கள் செய்தார்.
சில்க் ஸ்மிதா மறைந்த காலகட்டத்தில் கதாநாயகிகளே பிற படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஆரம்பித்துவிட்டனர் (அதற்கும் முன்னரே கூட ஷோபனா போன்றவர்கள் கதாநாயகியாக நடித்துக்கொண்டே தனது படத்திலேயே கவர்ச்சி நடனம் ஆடியிருக்கின்றனர். ஊர்வசியும். இது பாக்யராஜ் ஸ்டைல்). கௌதமி ‘ஜெண்டில்மேன்’ படத்தில் ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடலுக்கு ஆடி இதனைத் தொண்ணூறுகளில் துவக்கினார். இவருக்குப் பின்னர் ரம்யா கிருஷ்ணன், சிம்ரன், ஸ்ரேயா, ரீமா சென், மாளவிகா, மீனா, கிரண், நயன்தாரா, நக்மா போன்ற பலரும் ‘ஐட்டம் சாங்ஸ்’ என்று இதற்குள் பெயர் வைக்கப்பட்டுப் புகழடைந்த கவர்ச்சிப் பாடல்களில் ஆடிவிட்டனர்.
தொண்ணூறுகளின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு அடுத்த சில வருடங்களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மிகவும் பிரபலமடைந்த இன்னொரு நடிகை இருக்கிறார். அவர்தான் மும்தாஜ். அவரை அறிமுகப்படுத்தியவர் டி.ராஜேந்தர். 1999ன் ‘மோனிஷா என் மோனலிசா’ படத்தில் கதாநாயகியாக நடித்து, பின்னர் ‘மலபார் போலீஸ்’, ‘பட்ஜெட் பத்மநாபன்’ போன்ற படங்களில் துணை கதாநாயகியாக நடித்தவர். இயக்குநர் எஸ்.ஜே சூர்யா, தனது ‘குஷி’ (2000) படத்தில் இவரை ஒரு கவர்ச்சி நாயகியாக மாற்றினார். அந்தப் படத்தின் ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ பாடல் தமிழ்நாடு முழுதும் பிரபலமடைந்தது. அந்தப் படத்தில் இருந்து அடுத்த சில வருடங்களுக்குத் தமிழகத்தின் கனவுக்கன்னியாக மாறினார் மும்தாஜ். அதே டி.ராஜேந்தரின் படமான ‘வீராச்சாமி’யில் கதாநாயகியாக நடித்து, பின்னர் தற்போது அவ்வளவாகப் படங்கள் இல்லாமல் இருக்கிறார்.
இதன்பின் ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் ‘சிரிச்சி சிரிச்சி வந்தா சீனாதானா டோய்’ பாடலில் ஆடி மிகப் பிரபலமடைந்த ரகஸியா, ‘கந்தசாமி’ படத்தின் ‘என் பேரு மீனாகுமாரி’ பாடலுக்கு ஆடிய முமைத்கான் போன்றவர்கள் சிலகாலம் பிரபலமாக இருந்தவர்கள். இவர்களைப் போலவே கன்னட நடிகை நிகிதா, ஹிந்தி நடிகை ஸோஃபி, தெலுங்கு நடிகை மேக்னா நாயுடு மற்றும் இன்னும் பலர் ஏராளமான பாடல்களில் ஆடியிருக்கின்றனர்.
தமிழில் கவர்ச்சி நடனம் என்பது இவ்வாறாக தவமணி தேவியில் துவங்கி இன்றைய கதாநாயகிகள் வரை இத்தனை பேரைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறது எனலாம்.
ஆரம்ப காலத்தில் இருந்து இப்போதுவரை இத்தகைய கனவுக்கன்னிகளைப் பற்றி யோசித்துப் பார்த்தாலேயே நமது சமுதாயத்தின் ரசனை எவ்வாறாக மாறிவந்திருக்கிறது என்பதை அறிந்துகொண்டுவிடமுடியும். தவமணி தேவியையும் டி.ஆர். ராஜகுமாரியையும் கவனித்தால், தவமணி தேவி அக்காலகட்டத்தை ஒப்பிடுகையிலுமே குறைந்த உடைகளை அணிந்தே நடித்திருப்பதை அறிகிறோம். அதேசமயம் டி.ஆர். ராஜகுமாரி, தனது நடிப்பு மற்றும் உடல்மொழியாலேயே படம் பார்ப்பவர்களை சுண்டி இழுத்திருக்கிறார். அவரைப்பற்றிய கட்டுரைகள் அனைத்துமே இந்த விஷயத்தை வலியுறுத்துகின்றன. நிறத்தில் பளிச்சென்று இருப்பவர்கள்தான் திரைப்படங்களில் நடிக்கவேண்டும் என்ற மாயை அப்போதிலிருந்து இப்போதுவரை இருந்துகொண்டிருந்தாலும், டி.ஆர். ராஜகுமாரி மாநிறத்தையே கொண்டிருந்தார். இயக்குநர் கே.சுப்ரமண்யம் ராஜகுமாரியை முதலில் சந்தித்தபோது அவரது நிறத்தாலேயேதான் கவரப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார். அதனால்தான் ‘கச்ச தேவயானி’ வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. கூடவே தன்னை எப்படி வெளிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதும் ராஜகுமாரிக்கு நன்கு தெரிந்தே இருந்தது என்பதை அவரது படங்களைப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். ‘ஹரிதாஸ்’ படத்தின் ‘மன்மதன் லீலையை வென்றார் உண்டோ’ பாடலில் தியாகராஜ பாகவதரின் வரிகளுக்குத் தக்க அபிநயம் பிடித்துக்கொண்டே மெல்ல அவரருகே வந்து, ’’உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ?’ என்று பாகவதர் பாடுகையில் ‘முத்தம்’ என்ற இடத்தில் அதை அவர் பாடுமுன்பே டக்கென்று ஒரு ஃப்ளையிங் கிஸ்ஸை அபிநயம் பிடிப்பார் ராஜகுமாரி. உடனடியாக பாகவதர் ஆச்சரியமடைந்து திகைப்பார். இதெல்லாமே நன்கு ஒத்திகை செய்யப்பட்டு நடிக்கப்பட்டவை என்றாலும் அங்கே ராஜகுமாரியின் உடல்மொழியும் எதிர்வினைகளும் அவ்வளவு துள்ளலாக இருக்கும்.
இதுவேதான் அவரது எல்லாப் படங்களிலிருந்தும் நாம் அறியும் செய்தி. ’கவர்ச்சி’ என்பது உடையில் இல்லை; மாறாக நடிப்பவரின் உடல்மொழியிலும் பார்வையிலும் முகபாவங்களிலும்தான் உள்ளது என்பதற்கு ராஜகுமாரியை விடவும் சிறந்த உதாரணம் இல்லை.
தவமணி தேவிக்கும் ராஜகுமாரிக்கும் உள்ள வித்தியாசம் இதுவே. இந்த இரண்டு விதமான நடிப்பின் வெளிப்பாடுகளிலும் தவறே இல்லை. இருவரையுமே அப்போதைய ரசிகர்களுக்குப் பிடித்தே இருந்தது. இந்தக் காலகட்டத்துக்குப் பின்னர் மெல்ல, ’திரைப்படங்களில் இப்படிப்பட்ட கவர்ச்சி வேடங்களில் நடிப்பவர்கள் ஒழுங்கானவர்கள் இல்லை; தீய பழக்கங்கள் உள்ளவர்கள்; அவர்களுக்கும் மங்களகரமான வேடங்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் மலையளவு வேறுபாடுகள் உண்டு’ என்றெல்லாம் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் நிலவியே வந்திருக்கின்றன. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் க்ளப் நடனங்கள், வில்லனின் அடியாட்கள் மகிழ அவ்வப்போது அவனது பாசறையில் நடனம் ஆடி அவர்களை மகிழ்விக்க, அவர்களுடன் சேர்ந்து மது அருந்த, சிகரெட் பிடிக்க, நல்ல கதாநாயகனை நடனமாடி மயக்கி அவனிடம் இருக்கும் சொத்தைக் கொள்ளையடிக்கவே இப்படிப்பட்ட பாத்திரங்கள் உருவாக்கப்பட, இந்த வேறுபாடு இன்னும் அதிகரிக்கவே செய்தது எனலாம். நடிகை சாவித்திரியை ஒருமுறை ஒரு பத்திரிக்கையில் பேட்டிகண்டபோது இப்படிச் சொல்லியிருக்கிறார்.
‘இப்போ வர்ற படங்களுக்கு கதாநாயகிகள் ‘கிளாமரா’ இருந்தாப் போதும். ஜீன்ஸ், பெல்பாட்டம், மினி ஸ்கர்ட் எல்லாம் போட்டாப் போதும். நான் நடிச்ச வரை பாவாடை, தாவணி, புடவை இவ்வளவு தான் எங்களுக்குத் தெரியும். அதான் எங்க லிமிட்!
ஒருநாள் திடீர்னு தயாரிப்பாளர் ஒருத்தர், ‘ஸ்டன்ட் படம் ஒண்ணு எடுக்கப்போறேன். நடிக்கி றீங்களா?’னு கேட்டார்.நானே முன் கோபக்காரி… எனக்குக் கோபம் வரக் கேட்கவா வேண் டும்?என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேக்கிறதுக்கு உங்களுக்கு என்ன தைரியம்? இந்த மாதிரி ரோலுக்கு விஜயலலிதா, ஜோதிலட்சுமி இருக்காங்க… போட்டுக்கங்க’னு சொல்லி, ஒரு கப் காபி கொடுத்து அனுப்பிவைத்தேன்!’
இந்தப் பதிலிலேயே அக்காலத்திய ‘சாந்தமான’ பாத்திரங்கள் நடித்த நடிகைகள் துணிச்சலான வேடங்களில் நடித்தவர்களைப் பற்றி வைத்திருந்த அபிப்பிராயம் தெரியவரும். சாவித்திரியே இப்படிச் சொல்லியிருந்தபோது பிற நடிகையர்களில் பெரும்பான்மையினருக்கும் இப்படிப்பட்ட கருத்துதானே இருந்திருக்கும்? அப்படியேதான் ரசிகர்களும் நினைத்துவந்தனர் என்பதும் புரிகிறது.
கவர்ச்சி வேடங்களில் நடித்த நடிகைகள் அனுபவித்த பிரச்னைகள் கொஞ்சநஞ்சமல்ல என்பதையும் அறிகிறோம். உதாரணமாக, சில்க் ஸ்மிதா எண்பதுகளில் கொடுத்த ஒரு பேட்டியில், ஒரு படப்பிடிப்பின்போது உடைமாற்றிக்கொள்ளவோ அல்லது இயற்கை உபாதைக்காகவோ படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு அருகே இருந்த ஒரு மறைவிடத்துக்குச் சென்றபோது அங்கே சில சிறுவர்கள் அவரை எட்டிப் பார்த்ததாகவும், அவர்களின் கண்களில் தெறித்த வெறியை அவரால் மறக்கவே முடியாது என்றும் சொன்னதை நான் படித்திருக்கிறேன். போலவே அந்தக் காலகட்டத்தில் ஒரு பிரபல நடிகையை ஒரு பத்திரிக்கையாளர் அணுகி, சில்க் ஸ்மிதாவைப் போன்ற நடிகைகள் திரைப்படங்களில் நடிக்கையில் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றிக் கருத்து கேட்டபோது, ‘அந்தக் கதையெல்லாம் எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் தேவையே இல்லை’ என்று உடனடியாக அவர் சொன்னதையும் படிக்கிறோம். இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுள்ள, சம மரியாதையும் ஆதரவும் பெரும்பாலும் இல்லாத ஒரு சூழ்நிலையில்தான் அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. எல்லாச் சமயங்களிலும் எல்லா நேரங்களிலும் இல்லை. ஆனால் பெரும்பாலும் அப்படித்தான் என்று தோன்றுகிறது. சில்க் ஸ்மிதா வெளிப்படையாகப் பேசக்கூடியவர் என்பதால் அவரைப் பற்றி நமக்குத் தெரிகிறது.
ரசிகர்களை மகிழ்விக்கவே கவர்ச்சிகரமான வேடங்களை ஏற்று நடித்த நடிகைகள் பிற நடிகைகளுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. ’சினிமா’ என்பதையே சற்று மரியாதைக் குறைச்சலாகப் பார்க்கும் சமூகம், அந்தச் சினிமாவிலும் கவர்ச்சி வேடங்களை ஏற்று நடித்த நடிகைகளைமட்டும் எப்படிப் பார்க்கும்? சமூகத்தில் நிலவும் இதுபோன்ற பாரபட்சமுடைய முன்முடிவுகள் அவசியம் விலகவேண்டும். சினிமாவைப் பற்றி நிலவும் கருத்துகளேதான் நம்முடைய சுற்றுப்புறத்தில் இருக்கும் நபர்களைப் பற்றியும் இயல்பாக நமக்குத் தோன்றுகின்றன. எனவே ‘நல்லது’ ‘கெட்டது’, ‘ஒழுக்கம்’ ‘ஒழுக்கமின்மை’ போன்ற போலியான கருத்துத் திணிப்புகளும் நிகழ்கின்றன. இதெல்லாம் முற்றிலும் மாறினால்மட்டுமே நம்மால் இயல்பான ஜீவனாக இருக்கமுடியும் என்றே தோன்றுகிறது.
you missed namitha i guess…
தேளு… நல்ல மேட்டர்… சும்மா தகவல்கள மட்டும் சொல்லிட்டு போடாம அவங்களோட மனோ நிலையையும், அவங்களை எப்படி நடத்தினாங்க, இது மாதிரி மேட்டரையும் சொல்லி இருக்கீங்க… இப்படியான ஒரு கட்டுரையை இதுக்கு முன்னாடி படிச்சதில்லை… ரொம்ப நன்றி…
🙂 அருமை….
Superb matter thanks
—-1937ல் ஒரு நடிகையின் நீச்சலுடைப் புகைப்படம் வெளிவந்தால் எப்படி இருந்திருக்கும்?
— இதன்பின் பல படங்களில் நடித்துப் புகழடைந்த தவமணி தேவி, 2001ல் தனது எழுபத்தாறாம் வயதில் காலமானார்.
That means her swimsuit photo was taken when she was only 12?