ஜாக்கி நம் தோழன்

by Karundhel Rajesh October 12, 2016   Cinema articles

அந்திமழையில் ஜூலையில் வெளிவந்த கட்டுரை இது. அந்திமழை வலைத்தளத்திலும் இந்தக் கட்டுரையை இங்கே படிக்கலாம்.


இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் ஜாக்கி சானுக்கு இருக்கும் பிரம்மாண்ட ரசிகர் பட்டாளம், வேறு எந்த வெளிநாட்டு நடிகருக்கும் இருந்ததில்லை என்பதை அவசியம் அடித்துச் சொல்லலாம். ப்ரூஸ் லீ படங்களை ரசிப்பவர்கள் வேறு; அவருக்கு ரசிகர்களாக இருப்பவர்கள் வேறு. இதுவேதான் ஜெட்லிக்கும். எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தமிழகத்தில் ஜாக்கி சான் அலையே வீசியது. எங்கள் ஊரான கோவையில், என் பள்ளி நாட்களில் ஒவ்வொரு ஜாக்கி சான் படமும் மாருதி தியேட்டரிலேயே திரையிடப்படும். ஒவ்வொரு முறை இப்படங்கள் வரும்போதெல்லாம் தியேட்டரில் கூட்டம் ஏதோ புதிய படம் போல அமர்க்களப்படுவதைக் கண்டிருக்கிறேன். குறிப்பாக அக்காலகட்டத்தில் போலீஸ் ஸ்டோரி படங்களும் ஆர்மர் ஆஃப் காட் படமும் சூப்பர் ஹிட்கள். மாருதியில் இவ்விரு படங்களுக்கும் நூறாவது நாள் ஷீல்டே வைத்திருப்பார்கள்.

உலக அளவில் ஜாக்கி சான் போல மார்ஷல் ஆர்ட்ஸ் படங்களில் சூப்பர்ஸ்டாராக விளங்குபவர்கள் மிகவும் சொற்பமே. ப்ரூஸ் லீ துவக்கிவைத்த இந்தப் பாரம்பரியத்தை உலக அளவில் வெற்றிகரமாக அவருக்குப் பின் சாதித்துக் காட்டியவர் ஜாக்கி சான். அவருக்குப் பின்னர் ஜெட் லியும் ஸ்டீஃபன் சோவும் டோனி ஜாவும் இதை சாத்தியமாக்கிக்கொண்டு இருக்கின்றனர். இருந்தும், இவர்கள் அனைவரை விடவும் ஜாக்கி சானின் ஸ்டைல் முற்றிலும் மாறுபட்டது. மார்ஷல் ஆர்ட்ஸோடு தனது பிரத்யேகமான நகைச்சுவையையும் கலந்து அளித்ததே இவரது ஸ்டைல். இதைப் பிந்நாட்களில் ஸ்டீஃபன் சோவும் சரியாகச் செய்தார் (ஸிஜியை மார்ஷல் ஆர்ட்ஸில் புகுத்தியதில் ஸ்டீஃபன் சோவின் பங்கு மிகவும் முக்கியமானது).

ஹாங்காங்கில் 1954 ஏப்ரல் எழாம் தேதி பிறந்த ஜாக்கி சானுக்கு சான் கோங் சாங் என்ற பெயர் வைக்கப்பட்டது. சிறு வயதிலேயே, இவரது தந்தை அவரது மனைவியுடன் வேலைக்காக ஆஸ்த்ரேலியா சென்றுவிட, ஹாங்காங்கில் உள்ள பிரசித்தி பெற்ற பீகிங் ஆப்ரா பள்ளியில் விடப்பட்டார் ஜாக்கி சான். அங்கே பத்து வருடங்கள் தங்கி, மார்ஷல் ஆர்ட்ஸ், நாடகம், அக்ரோபாடிக்ஸ் மற்றும் இசை/பாட்டு ஆகியவற்றைக் கற்றார் (ஜாக்கி சான் உண்மையில் ஒரு நல்ல பாடகர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அவரது படங்களில் வரும் டைட்டில் பாடல்களைப் பெரும்பாலும் அவரேதான் பல்லாண்டுகளாகப் பாடிவருகிறார். ஜாக்கி சான் பாடும் வீடியோக்கள் யூட்யூபில் ஏராளம் உண்டு. அவற்றைத் தேடிப்பிடித்து அவசியம் பார்க்கலாம்).

பள்ளியில் இக்கலைகளில் மிகச்சிறந்து விளங்கியதால், அங்கேயே சக சிறுவர்களுடன் ஒரு குழு பள்ளியின் சார்பில் ஆரம்பிக்கப்பட்டு, தங்களின் கலைகளை இச்சிறுவர்கள் டெமான்ஸ்ட்ரேட் செய்து காட்டுவது நடந்தது. இந்தச் சமயத்தில்தான் 1962வில் அவரது முதல் படத்தில்(Big and Little Wong Tin Bar) குழந்தை நட்சத்திரமாக ஜாக்கி சான் அறிமுகமாகிறார். அப்போது அவருக்கு வயது எட்டு. இதைத்தொடர்ந்து, இன்னும் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கிறார்.

1971ல் படிப்பை முடித்துவிட்டு, திரைப்படங்களில் ஸ்டண்ட் மேனாக நடிக்க ஆரம்பிக்கிறார். அப்போதே, பிறர் செய்யத் தயங்கும் பல ஸ்டண்ட்களை ஜாக்கி சான் மனமுவந்து செய்ததாக அறிகிறோம். அப்போது ஹாங்காங்கின் சூப்பர்ஸ்டாராக விளங்கிய ப்ரூஸ் லீயின் ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி (1971) படத்தில் சான் யுவென் லுங் என்ற பெயரில் பதினேழு வயதில் நடித்தார் ஜாக்கி சான். இந்தப் படத்தில், அப்போதைய சைனீஸ் படங்களிலேயே மிக அதிக உயரத்தில் இருந்து அவர் விழுந்து சாதனை படைத்ததாக அவரைப்பற்றிய குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் ப்ரூஸ் லீயின் பாராட்டும் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது எண்டர் த ட்ராகன் படத்திலும் ஸ்டண்ட் மேனாக ஜாக்கி சான் பணிபுரிந்தார். இவற்றைத்தொடர்ந்து இன்னும் சில படங்களில் ஸ்டண்ட் மேனாக ஜாக்கி சான் நடிக்க, அவரது தொழில் நேர்த்தி, அப்போதைய பிரபல இயக்குநரான லோ வெய்யின் கவனத்தைக் கவர்ந்தது. லோ வெய் சாதாரண இயக்குநர் அல்ல. ப்ரூஸ் லீயின் ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரியின் இயக்குநர் இவர். ஜாக்கி சான் நடித்திருந்த Hand of Death (1976) படத்தில், நடிகராக மட்டுமன்றி, ஹீரோவுக்கு ஸ்டண்ட் டபிளாகவும் பல காட்சிகளில் இவர் துடிப்புடன் பணியாற்றியிருந்தது லோ வெய்க்குத் தெரியும். இதனால் ஜாக்கி சானை அழைத்து, New Fist of Fury என்ற படத்தை இயக்குகிறார். இதுதான் ஜாக்கி சான் ஹீரோவாக நடித்த முதல் படம். இது, ப்ரூஸ் லீயின் படத்துக்கு இரண்டாம் பாகம் என்றே விளம்பரப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் மிக சீரியஸான ப்ரூஸ் லீ டைப் கதாபாத்திரத்திலேயே ஜாக்கி சான் நடித்திருப்பார்.

ந்யூ ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி ஓடவில்லை. ப்ரூஸ் லீயின் இடத்தில் புதிய நடிகர் ஒருவரை வைத்துப் பார்க்க மார்ஷல் ஆர்ட்ஸ் ரசிகர்கள் விரும்பவில்லை. இருந்தாலும், வரிசையாக இதன்பின் சில மார்ஷல் ஆர்ட்ஸ் படங்களை ஜாக்கி சானை வைத்தே லோ வெய் இயக்கினார். அந்தப் படங்கள் அனைத்துமே சரியாகப் போகாதவையே.

இதன்பின் தான் Snake in the Eagle’s Shadow (1978) படம் வெளிவருகிறது. இது தமிழ்நாட்டு மார்ஷல் ஆர்ட்ஸ் ரசிகர்களுக்குப் பரிச்சயமான படம். சென்னையில் ஓரளவு நன்றாகவே ஓடியது. இந்தப் படத்தில்தான், அதுவரை ப்ரூஸ் லீயின் நிழலிலேயே அவரைப்போலவே நடித்துக்கொண்டிருந்த ஜாக்கி சான், முதன்முறையாக அவரது ஸ்டைலை மாற்றியமைத்துக்கொண்டார். கங் ஃபூவுடன் நகைச்சுவையை சேர்த்தார். இந்தப் புதிய ஸ்டைல் நன்றாக எடுபட்டு, ஜாக்கி சானுக்கு அவரது முதல் ஹிட் கிடைத்தது (இதற்கு முன்னர், இரண்டு படங்களில் செக்ஸ் காட்சிகளில் கூட ஜாக்கி சான் நடித்துப் பார்த்தார்.. ம்ஹூம். எந்தப் பயனும் இல்லை. போலவே, கங் ஃபூ காமெடி என்பது இதற்கும் முன்னரே 1975ல் Spiritual Boxer படத்திலேயே முயற்சிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் ஜாக்கி சான் வந்துதான் இந்த வகையான படங்கள் உயிர்த்தெழவேண்டும் என்பது விதி போலும்).

இந்தப் படத்துக்குப் பின்னர்தான் இன்றும் நினைவுகூரப்படும் Drunken Master (1978) படம் வெளியானது. இது ஜாக்கி சானின் ஸ்டார் ஸ்டேட்டஸை உறுதி செய்தது. இதன்பின் வரிசையாக இதுபோன்ற கங் ஃபூ காமெடிகள் வெளியாகி நன்றாக ஓடின. இதனால் ஹாங்காங்கின் நம்பர் ஒன் மார்ஷல் ஆர்ட்ஸ் ஸ்டார் என்ற இடத்தை ஜாக்கி சானால் அடைய முடிந்தது.

1980ல் ஹாலிவுட்டில் தனது தடத்தை முதன்முறையாகப் பதிக்க முயன்றார் ஜாக்கி சான். The Big Brawl படத்தில் நடித்தார். படம் ஓடவில்லை. இதன்பின் Cannonball Run படத்தின் இரண்டு பாகங்களிலும் ஜாக்கி சான் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இருந்தும் பயனில்லை (இந்த இரண்டு படங்களையும் தூர்தர்ஷன் சென்சார் செய்யாமல் படங்களை ஒளிபரப்பிய தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெள்ளி இரவு கண்டிருக்கிறேன். ‘சென்சார் செய்யப்படாமல்’ என்று எழுதியதன் காரணம், இவற்றில் இடம்பெறும் குட்டியான nude காட்சிகளே).

1980ல் ஹாங்காங்கில் வசூல் சாதனை படைத்த படம் ஒன்று வெளியானது. The Young Lord என்ற அந்தப் படம், இதற்கு முன்னர் தனது படங்களால் ப்ரூஸ் லீ செய்திருந்த வசூல் சாதனைகளை முறியடித்த படம். இதன்பின் ஹாங்காங்கிலேயே பல படங்களில் ஜாக்கி சான் நடித்தார். அவைகளில் பல படங்கள், அத்தனை தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானவையே. Project A (1983), Police Story (1985), and Armor of God (1986) ஆகிய படங்கள் ஆசியாவெங்கும் சூப்பர்ஹிட்கள் ஆயின.  அதேபோல் அவரது ஸ்டண்ட் காட்சிகளும் மிகவும் பிரபலம் ஆயின. தனது படங்களின் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் தோன்றுவது ஜாக்கி சானுக்கு இயல்பான விஷயமாக ஆகிப்போனது. ஆனால் அவற்றுக்கு அவர் கொடுத்த விலை அதிகம். உதாரணமாக ஆர்மர் ஆஃப் காட் படத்தில், நாற்பதடி உயரத்தில் இருந்து கீழே உள்ள ஒரு மரக்கிளையைப் பிடித்துக்கொள்ளக் குதிக்கும் ஸ்டண்ட் ஒன்றில் அவரது மண்டையோட்டில் விரிசல் ஏற்பட்டது.

ஜாக்கி சான் படங்களில் இடம்பெறும் இப்படிப்பட்ட ஸ்டண்ட் காட்சிகளால் (குறிப்பாக போலீஸ் ஸ்டோரி), பல ஸ்டண்ட் நடிகர்கள் அவரது படங்களில் நடிக்கமுடியாது என்று மறுத்ததும் நிகழ்ந்தது. இதனால் Jackie Chan Stuntman Association என்ற அமைப்பை அவர் நிறுவி, பல ஸ்டண்ட் நடிகர்களுக்குப் பயிற்சி அளித்தார். அவர்களின் மருத்துவ செலவையும் அவரே ஏற்றார். போலீஸ் ஸ்டோரி படத்துக்கும் ட்ரங்கன் மாஸ்டர் படத்துக்கும் பல பாகங்களை எடுத்து வெளியிட்டார். அனைத்துப் படங்களும் ஹிட்கள் ஆயின.

1995ல் ஜாக்கி சான், தனது காமிக்ஸ் கதாபாத்திரத்தை வெளியிட்டார் (Jackie Chan’s Spartan X சீரீஸில் இடம்பெறும் ஜாக்கி சான் கதாபாத்திரம் இது). அதே வருடத்தில், M TV விருது வழங்கும் நிகழ்ச்சியில், க்வெண்டின் டாரண்டினோ, ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனை விருதை வழங்கினார். அடுத்த வருடத்தில், Rumble in the Bronx வெளியானது. இதுதான் ஜாக்கி சானின் முதல் அமெரிக்க ஹிட். இதன்பின்னர் சில வருடங்களில் Rush Hour படம் 1998ல் வெளியாகி, உலகம் முழுக்கப் பிரமாதமாக ஓடியது. 2000ல் Shanghai Noon படமும் இதேபோல் ஹிட் ஆனது. இந்த இரண்டு ஹாலிவுட் படங்களுக்கும் இரண்டாம் பாகங்களும் எடுக்கப்பட்டு வெளியாகின (ரஷ் ஹவருக்கு மூன்றாம் பாகமும் எடுக்கப்பட்டது). ரஷ் ஹவர் வெளியான காலகட்டத்தில் அவரது சுயசரிதையையும் ஜாக்கி சான் வெளியிடுகிறார் (I am Jackie Chan).

ரஷ் ஹவர் வெளியாகும்போதே உலகம் முழுக்க ஜாக்கி சான் ஒரு சூப்பர்ஸ்டார். எனவே அவரது அடுத்தடுத்த படங்கள் உலகம் முழுக்க வெளியாகி ஓடியதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் ரஷ் ஹவர் சீரீஸ் மற்றும் ஷாங்காய் நூன் சீரீஸைத் தவிர்த்து அவர் நடித்த ஹாலிவுட் படங்களான The Tuxedo (2002) மற்றும் The Medallion (2003) ஆகியவை மிகவும் சுமாராகவே ஓடின. இவற்றில் கதையம்சமோ, ஜாக்கி சானுக்கான வித்தியாசமான வேடங்களோ, அவரது நகைச்சுவை கலந்த ஸ்டண்ட்களுக்கான முக்கியத்துவமோ இருக்காது. இந்தப் படங்களில் யார் வேண்டுமானாலும் நடித்திருக்க முடியும் என்பதே இவற்றின் தோல்விக்குக் காரணம்.

கூடவே, ஹாலிவுட்டில், ஜாக்கி சானுக்குத் திரைப்படங்கள் எடுப்பதில் முழு அதிகாரம் வழங்கப்படவில்லை. அவை பெரும்பாலும் தயாரிப்பாளர்கள் சார்ந்த படங்களாகவே இருந்தன. ஆனால் ஹாங்காங்கிலோ, கிட்டத்தட்ட நாயகனாக நடிக்க ஆரம்பித்திருந்த எழுபதுகளின் முடிவிலிருந்தே ஜாக்கி சானின் கையில்தான் அவரது அத்தனை திரைப்படங்களும் இருந்தன. இதுவும் மேலே சொன்ன படங்களின் தோல்விக்குக் காரணம்.

இதன்பின்னர் ஹாங்காங் திரும்பி, தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தை ஜாக்கி சான் துவங்கினார் (JCE Movies Limited- Jackie Chan emperor Movies Limited). இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான படங்கள் ஹாங்காங்கில் நன்றாக ஓடின (New Police Story, The Myth, Rob-B-Hood முதலானவை). இதன்பின், ஹாங்காங்கின் மற்றொரு சூப்பர்ஸ்டாரான ஜெட்லியோடு சேர்ந்து ஜாக்கி சான் நடித்த முதல் படம் – The Forbidden Kingdom வெளியானது.

இதன்பின் ஜாக்கி சானின் அடுத்த ஹாலிவுட் படம் – The Spy Next Door வெளியாகி, சுமாராக ஓடியது. பின்னர் வெளியான The karate Kid(2010) படத்தில்தான் ஜாக்கி சான் முதன்முறையாக, ஹாலிவுட்டில் உணர்ச்சிபூர்வமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். இதன்பின் ஜாக்கி சானின் 100வது படமான 1911, 2011ல் வெளியானது. இப்படத்துக்குப் பின்னர், இனி ஆக்‌ஷன் காட்சிகளில், உடல்நிலை காரணமாக அதிகமாகக் கவனம் செலுத்தப் போவதில்லை என்று ஜாக்கி சான் அறிவித்தார்.

ஜாக்கி சான் உலகம் முழுக்க ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாகப் பிரபலம் அடைந்ததற்கான காரணங்களை ஏற்கெனவே பார்த்துவிட்டோம். தற்போது, அவர் எந்த நிலையில் இருக்கிறார்? எப்படிப்பட்ட படங்களை எடுக்க விரும்புகிறார்?

‘பல ஆண்டுகளுக்கு முன்னர், கட்டிடங்களின் மாடியில் இருந்தும், ஓடும் பஸ்களில் இருந்தும் கண்டபடி குதித்து ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துக்கொண்டிருந்தேன். அவற்றை இப்போது நினைத்தால் எனக்கே மிகவும் நகைச்சுவையாக உள்ளது. எனது படங்களின் டைட்டில்களில் இருந்து இறுதிக் காட்சி வரையிலுமே ஸ்டண்ட்களை செய்துகொண்டே இருந்துவிட்டேன். இனி, நடிப்பில் அதிகக் கவனம் செலுத்த விரும்புகிறேன். இப்போதைய காலகட்டத்தில், கதை என்பதில் ஆடியன்ஸ் கவனமாக இருக்கிறார்கள். இதனால் எனது ஸ்டைலை மாற்றிக்கொள்ளவே விரும்புகிறேன். மிக அழுத்தமான கதை இருந்தால், ஒரே ஒரு பஞ்ச்சை வைத்தாலே ஆடியன்ஸ் கரகோஷம் எழுப்பி அதை ஆதரிப்பதைப் புரிந்துகொண்டிருக்கிறேன்’ என்பதே இப்போதைய ஜாக்கி சானின் கருத்து.

இதற்கேற்ப, அவரது 2015 படமான Dragon Blade படத்தில் இவரது குறும்புத்தனங்கள் இல்லாமல் சீரியஸான வேடம் ஒன்றில் நடித்திருப்பார். அதேபோல், 2013ல் வெளியான Police Story 2013 படத்திலும் ஒரு மிகவும் சீரியஸ் கதாபாத்திரத்தை செய்திருப்பார். 2010ன் கராத்தே கிட் படத்திலிருந்தே அவரது வேடங்கள் பெரும்பாலும் இப்படியே இருக்கின்றன (அனிமேஷன் படங்களான கங் ஃபூ பாண்டா சீரீஸில் மட்டும் இன்னும் நகைச்சுவையான பாத்திரமான Monkey என்பதற்கு ஜாக்கி சான் குரல் கொடுத்திருப்பார்). எப்போதோ ஒரு முறை பழையபடி ஆக்‌ஷன் காமெடிகளில் நடிக்கிறார். ஜூலையில் வெளியாக இருக்கும் Skiptrace படம் இப்படிப்பட்டதே. இதேபோல் Kung Fu Yoga என்ற படம் வரும் ஆண்டு இந்தியாவில் வெளியாகிறது. இதுவும் ஆக்‌ஷன் காமெடிதான்.

வயதாகிவிட்டாலும், ஜாக்கி சானின் கால்ஷீட் 2020 வரையிலுமே ஃபுல்தான். எராளமான படங்கள் ஹாங்காங்கிலும் யுனைடட் ஸ்டேட்ஸிலும் அவருக்காகக் காத்திருக்கின்றன. போலவே, இன்னமும் ஹாங்காங்கில் ஜாக்கி சானின் பல படங்கள் வருடம்தோறும் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவரது பழைய படங்கள் போலப் புதிய படங்களை அவர் நடிப்பதில்லை. அதனால் என்ன? எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ஜாக்கி சானைக் கிட்டத்தட்டத் தமிழகத்தின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராகவே பாவித்து நடத்திவந்த நமக்கு, அவரது பழைய படங்கள் இருக்கவே இருக்கின்றன.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் நமது பள்ளி/கல்லூரி நாட்களைப் பரவசப்படுத்திய ஸ்டார்களில் முதன்மையானவர் என்ற முறையில், ஜாக்கி சான் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து பல படங்கள் நடிக்க வாழ்த்துவோம்.

 

 

  Comments

1 Comment;

  1. Parthiban

    Who Am I ? படத்தை மறந்துடீங்களே

    Reply

Join the conversation