Jafar Panahi & Taxi (2015)
தமிழ் ஹிந்துவுக்காக எழுதப்பட்டு அவர்கள் சார்பில் சென்னைத் திரைப்பட விழாவில் விநியோகிக்கப்பட்ட கட்டுரை இது.
பிரபல இரானிய இயக்குநரான அப்பாஸ் கயரோஸ்தாமியின் உதவி இயக்குநராக இருந்தவர்; கான் படவிழாவில் கேமரா டோர் ( Caméra d’Or) விருது வாங்கிய முதல் இரானியப் படத்தின் இயக்குநர்; இரானில் தடை செய்யப்பட்ட படங்களை இயக்கியவர்; தனது படங்களின் மூலமாக இரானிய அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு 2010ல் கைது செய்யப்பட்டு, இருபது வருடங்கள் படமே எடுக்கக்கூடாது/நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற அடிப்படையில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டவர்; அப்படிக் கைது செய்யப்பட்டு வீட்டில் இருந்தத அனுபவத்தையே ‘This is not a Film’ என்ற பெயரில் டாக்குமெண்ட்ரியாக எடுத்து, ரகசியமாக ஒரு பென் ட்ரைவில் போட்டு, ஒரு கேக்கினுள் மறைத்து வைத்து 2011 கான் திரைவிழாவுக்கு அனுப்பியவர்; இப்படிப் பல வித்தியாசமான பெருமைகளை உடையவர்தான் ஜாஃபர் பனாஹி.
சென்ற 2015ல் ஜாஃபர் பனாஹியின் புதிய படமான ‘டாக்ஸி’ (Taxi) வெளியானது. இந்தப் படம் 2015 பெர்லின் திரைப்பட விழாவில் தங்கச்சிங்கம் விருது வாங்கியது. தனது இருபது வருடத் தடையை மீறி இந்த ஆறு ஆண்டுகளில் பனாஹி எடுத்த மூன்றாவது படம் இது. ’என்ன நடந்தாலும் நான் திரைப்படங்கள் எடுப்பதை யாராலும் தடுக்க இயலாது; என்னை முடக்கி வைக்க எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியின்போதும், திரைப்படங்களை உருவாக்கும் வெறி இன்னும் அதிகமாக எனக்குள் கிளர்ந்தெழுகிறது’ என்பது பனாஹியின் கூற்று.
அரசால் தடை செய்யப்படும் அளவு பனாஹியின் படங்களில் அப்படி என்ன இருந்தது?
இரானிய அரசைப் பொறுத்தவரை, திரைப்படங்களில் இன்றுவரையிலும் மிகக்கடுமையான தணிக்கைமுறை அமல்படுத்தப்பட்டுவருகிறது. குழந்தைகள் திரைப்படங்கள் மட்டுமே அங்கே எந்தப் பிரச்னைகளும் இல்லாமல் வெளிவரக்கூடியவை. இயல்பான மனிதர்கள், சமூகத்தில் அவர்களுக்கு நேரும் பிரச்னைகள் என்றெல்லாம் படங்கள் எடுத்தால் உடனடியாக அத்தகைய படங்கள் அரசால் தடைசெய்யப்பட்டுவிடும். அதாவது, ஒன்று: உண்மையான, மனதைத்தொடும் உணர்வுகள் அடங்கிய திரைப்படங்களை எடுத்து, தணிக்கையின்கீழ் படமே வெளிவராமல் செய்வது; அல்லது ஜனரஞ்சகமான படங்களை எடுத்து வெளியிடுவது. இதுதான் இரானியத் திரைப்படத்துறையின் நிலை. திரைப்படங்கள் மட்டும் இல்லாமல், இணையம், ஊடகங்கள், அரசியல் என்று பல்வேறுவகையான துறைகளிலும் மிகக்கடுமையான தணிக்கைமுறை அங்கே உள்ளது. இதனால் வெளிப்படையான கருத்துகளை அங்கே வெளியிட இயலாது.
இத்தகைய ஒரு இடத்தில் இருந்துகொண்டு இரானிய அரசின் பல கொள்கைகளையும் தடைகளையும் விமர்சித்துப் படம் எடுத்தவர்தான் ஜாஃபர் பனாஹி. இதனால்தான் இவருக்கு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
சரி. மஜித் மஜிதி, மொஹ்சான் மக்ஹ்மல்பஃப், முஹம்மத் ரஸலூஃப்ஃப், ஜாஃபர் பனாஹியின் குருநாதர் அப்பாஸ் கயரோஸ்தாமி ஆகியவர்களுக்கு வழங்கப்படாத தண்டனை ஏன் ஜாஃபர் பனாஹிக்கு வழங்கப்பட்டது?
காரணம் உள்ளது. இவர்களில் பலரும் குழந்தைகள் திரைப்படங்கள் & வெளிநாடுகளில் இருந்துகொண்டு இரானியப் படங்கள் என்று எடுப்பவர்கள். அல்லது இரானில் இருந்துகொண்டே அரசின் கொள்கைகளுக்கு மடிந்துகொடுத்துத் திரைப்படம் எடுப்பவர்கள். ஆனால் ஜாஃபர் பனாஹியோ. கலைஞனுக்கு ஏது கட்டுப்பாடுகள் என்ற நிலையில் இருந்துகொண்டு வெளிப்படையான படங்கள் எடுக்கும் நபர். ஒருவேளை இந்தியாவில் இவர் இருந்திருந்தால், இந்திய மனநிலையில் இவரை ஒரு நக்ஸலைட் என்றே குற்றம்சாட்டிக் கேள்வியே கேட்காமல் மரணதண்டனையை அரசு கொடுக்கும். அப்படிப்பட்ட ஒரு உண்மையான நபர்தான் பனாஹி.
ஒருவேளை சமகால இந்திய அரசை விமர்சித்து இங்கே உண்மையான திரைப்படம் ஒன்று வெளியானால், அந்தப் படத்துக்கு அரசின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அரசு எடுக்கும் எல்லா முடிவுகளும் வெளிப்படையான முடிவுகள் என்று எடுத்துக்கொள்ள முடியுமா? இல்லையல்லவா? அப்படிப்பட்ட முடிவுகளை நடுநிலையாக விமர்சித்துத் தெளிவான விமர்சனத்தைத் திரைப்படமாக ஒருவர் எடுத்தால் என்ன ஆகும்? அதேதான் ஜாஃபர் பனாஹிக்கு நிகழ்ந்தது. வீட்டுச்சிறை. திரைப்படங்கள் எடுக்கத் தடை.
ஆனால், 2014ல் இரானிய ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி பதவியேற்றபின், முந்தைய அரசு விதித்த கலாச்சாரக் கட்டுப்பாடுகள் தளர்விக்கப்பட்டுள்ளன என்பதும் உண்மையே. இதனால் பனாஹியின் மீது விதிக்கப்பட்டுள்ள தடை இன்னமும் இருக்கும்போதிலும், அவர்மீது இருந்த வீட்டுச்சிறை தளர்க்கப்பட்டுள்ளது. இதனால்தான் அவரால் கைதுக்குப்பின் மூன்று படங்கள் எடுத்து வெளியிட முடிந்துள்ளது.
இருந்தாலும், ’டாக்ஸி’ திரைப்படம், ரகசியமாகவே எடுக்கப்பட்ட படம். ஒரு டாக்ஸியின் விண்ட்ஷீல்டில் மூலமாக, டெஹ்ரான் நகரைக் கண்ணுறும் பார்வையாளனின் பார்வையில் எடுக்கப்பட்ட படம். பனாஹியே ஒரு டாக்ஸி ட்ரைவரைப்போலவே அவரது வண்டியை டெஹ்ரான் நகரெங்கும் ஓட்டும் வகையிலான படம். இப்படத்தில் அந்நியர்கள், தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியவர்களை டாக்ஸியின் மூலமாக சந்திக்கும் நிகழ்வுகளை வைத்தே எடுக்கப்பட்ட படம் இது. இந்நிகழ்வுகளின் மூலம் சமகால இரானின் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையை வெளிப்படையாக விமர்சித்துள்ளார் ஜாஃபர் பனாஹி. இரானிய அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஒரு தெளிவான சிந்தனை உடைய குடிமகனின் எதிர்வினையே டாக்ஸி (மற்றும் பனாஹியின் அத்தனை படங்களும்). இவரது படங்களான The White Balloon, The Mirror, The Circle, Crimson Gold, Offside, This is not a Film, Closed Curtain ஆகிய அனைத்துப் படங்களிலுமே இவரது எதிர்க்குரலைக் கவனிக்கமுடியும்.
உண்மையில், உலகெங்குமே, அடக்குமுறை கட்டவிழ்க்கப்படும்போதெல்லாம் மக்களின் எழுச்சி நிகழ்ந்தேறும். இந்தியாவின் சரித்திரத்தில் ப்ரிட்டிஷ் அரசு உள்ளூர் பெரும்பாலான மதவாத அமைப்புகளின் உதவியோடு நிகழ்த்திய கொடுங்கோல் ஆட்சி ஒரு உதாரணம். பல தென்னமெரிக்க நாடுகளும் இக்கொடுங்கோல் ஆட்சிக்கு உதாரணங்கள். குடிமக்களின் வாழ்க்கையை பொம்மை அமெரிக்க அரசின் பிரதிநிதி சுரண்டியதால் ஏற்பட்ட புரட்சிதான் இந்நாடுகளின் வரலாறு. கிட்டத்தட்ட இதேபோல், குடிமக்களின் கலாச்சாரத்தை அடக்கியாள நினைக்கும் ஒரு அரசை எதிர்த்துச் சாதாரணக் குடிமகன் ஒருவன் நிகழ்த்திக்கொண்டிருக்கும் புரட்சியே ஜாஃபர் பனாஹியின் திரைப்படங்கள்.
இம்முறை, இந்த ஆண்டுத் திரைப்பட விழாக்களில் பனாஹியின் ’டாக்ஸி’ திரைப்படம் பரவலாக இந்தியாவெங்கும் திரையிடப்படுகிறது. சென்னைத் திரைப்பட விழாவிலும். நல்ல திரைப்படம் காணவேண்டும் என்று நினைக்கும் அனைவரும் இப்படத்தைக் காணவேண்டும். இப்படத்தைக் கண்டபின்னர் ஜாஃபர் பனாஹியின் பிற படங்களையும் ஒன்றுவிடாமல் பார்க்கவேண்டும். அப்போதுதான் ஒரு அரசு, கடுமையான தணிக்கையின்மூலம் தனது ஆட்சியின் பிரச்னைகள் உலகின் பார்வைக்குச் செல்லாமல் தடுப்பதன் அரசியலை உணரமுடியும். மதவாதம் என்பது இந்தியா உட்படப் பல நாடுகளில் சாதாரணமே என்பதை உணர்ந்துகொண்டாலொழிய இந்தத் தீய உணர்வை நம்மால் ஒழிக்க இயலாது. அதற்கு ஜாஃபர் பனாஹி போன்ற உண்மையான கலைஞர்களின் படைப்புகள் உதவும். உதவவேண்டும்.
இவரைப் பற்றி ஏற்கெனவே ஒரு வீடியோ நேர்காணலில் சொல்லியிருந்தீர்கள். இந்தக் கட்டுரை இன்னும் விரிவாக, பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. அவருடைய படங்களை தேடியெடுத்து பார்க்க முயல்வேன். நன்றி!
கேமரா டோர் ( Caméra d’Or) விருது. இதை “கேமரா த்’ஓர்” என்று எழுதலாமே? பிரெஞ்சு மொழியில் ‘ட’ (da) இல்லை, ‘த’ தான். “கேமரா தெ ஓர்” என்பதுதான் உயிரெழுத்துப் புணர்ச்சியில் காரணமாக “கேமரா த்’ஓர்” ஆகியிருக்கிறது. :))).
மிக்க நன்றி கவிஞரே. அந்த வார்த்தையை கேமரா டோர் என்றே நினைத்தேன். காரணம் அதன் உச்சரிப்பைச் சிலமுறைகள் எப்படி எழுதப்படுகிறது என்று கவனித்ததே. இனி திருத்தி விடுவேன். இனிமேல் நீங்கள் சொன்னபடி த்தை உள்ளே கொண்டுவந்துவிடுகிறேன் 🙂