Jeepers Creepers (2001) – English

by Karundhel Rajesh January 19, 2010   English films

இந்தமுறை, வெகு நாள் கழித்து, ஒரு பேய்ப்படம். இந்தப்படம், நம்மை பயப்பட வைத்தாலும், சற்று சிரிக்கவும் வைக்கும் அளவுக்கு ஜாலியாகச் செல்லும் ஒரு எண்டர்டெயினர். ஒரு மிகப்பழைய படத்தில் வந்த ஒரு பாடலே இந்த ஜீப்பர்ஸ் க்ரீப்பர்ஸ் என்ற பெயர். அதை எடுத்து இப்படத்தின் பெயராக வைத்துவிட்டனர். அந்தப் பாடலும் இப்படத்தின் மிக்கிய இடங்களில் ஒலிக்கும்.

சரி. அது என்னய்யா ஜீப்பர்ஸ் க்ரீப்பர்ஸ்? பாட்டாவே இருக்கட்டும். அந்தப் பேர ஏன் இந்தப்படத்துக்கு வெக்கணும்? என்றால், அதுதான் இப்படத்தின் முக்கிய அம்சம். நம்ம கும்பகர்ணன் எப்படி ஆறு மாதத்துக்கு ஒருமுறை முழித்துக்கொண்டு பேய்த்தீனி தின்பானோ, அதே போல், ஒரு ஜந்து இருக்கிறது. அது, 23 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழித்துக்கொண்டு, கிடைப்பவர்களையெல்லாம் அடித்துத் தின்னும். அது மட்டும் இல்லாது, அவர்களின் உடல் பாகங்களை எடுத்து, தன்னுடலில் தைத்துக்கொள்ளும் வேறு. இப்படிப்பட்ட ஜந்து, நம்மருகில் வரப்போகிறது என்றால், நம் காதில் இந்தப் பாட்டு கேட்கும் (அதுசரி) . . அதனால், இந்த ஜந்துவுக்கும் அந்தப்பெயரே வைத்துவிட்டார்கள்.

படத்தின் துவக்கத்தில், ஒரு அக்காவும் தம்பியும் காரில் சென்றுகொண்டிருக்கின்றனர். ஆளே இல்லாத நெடுஞ்சாலையில், திடீரென்று பின்னால் இருந்து வரும் ட்ரக் ஒன்று, அவர்களை இடிக்கப் பார்க்கிறது. மிரண்டுபோகும் இவர்கள் இருவரும், எப்படியோ அந்த டிரக்கின் பிடி (இடி)யிலிருந்து தப்பித்துவிடுகின்றனர். இவர்களைத் தாண்டிப் பேய் வேகத்தில் செல்லும் அந்த ட்ரக், மறைந்தே விடுகிறது. மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும் இவர்கள், ஓரிடத்தில், சற்றுத் தொலைவில், அந்த ட்ரக் நின்றுகொண்டிருப்பதையும், அதன் அருகில் ஒரு ஆஜானுபாகுவான ஆள் நின்றுகொண்டு, பெரிய பெரிய பார்சல்களை, அங்கிருக்கும் ஒரு பெரிய ட்யூப் போன்ற ஒன்றில் திணித்துக்கொண்டிருப்பதைக் காண்கின்றனர். இவர்கள் கார் அந்த இடத்தைத் தாண்டும்போது, அந்த ஆள் தங்களையே உற்றுப் பார்ப்பது போன்ற ஒரு பிரமை இவர்களிக்கு ஏற்படுகிறது.

சற்றுத்தொலைவு சென்றவுடன், மீண்டும் பின்னால் ஹாரன் சத்தம். பிசாசு வேகத்தில் அதே ட்ரக் ! இம்முறையும் அவர்கள் தப்பித்துவிடுகின்றனர். ட்ரக் இவர்களைத் தாண்டிச் சென்று மறைகிறது. உடனே அந்தத் தம்பியான டேரில், திரும்பிப்போய், அந்த உருவம் என்ன செய்தது என்று காணவேண்டும் என்று தன் அக்காவான ட்ரிஷ்ஷிடம் நச்சுகிறான். இருவரும், அந்த இடத்துக்குச் செல்கின்றனர்.

அங்கு, அந்த உருவம் பார்சல்களை உள்ளே தள்ளிய இடத்தில், அந்தப் பெரிய இரும்பு ட்யூபினுள் டேரில் நுழைகிறான். அதனுள்ளே சென்று நிலவறைக்குள் விழும் அவன், அந்தக் கும்மிருட்டில் சுற்றுமுற்றும் பார்க்கிறான்.

அங்கே . . . . . !!!!!

பயத்தின் உச்சத்தை அடையும் டேரில், எப்படியோ தப்பித்து வெளியே வந்து விடுகிறான். இருவரும் அந்த இடத்தை விட்டே ஓடிவிடுகின்றனர். போகும் வழியில், போலீஸுக்கும் தகவல் சொல்லி விடுகின்றனர். அப்போது அவர்களிடம் பேசும் ஒரு உள்ளூர் சூனியக்காரி ( ஆங்கிலத்தில் மீடியம் என்ற வார்த்தையைத் தமிழில் எழுத முடியாமல், இந்த வார்த்தையை உபயோகிக்க வேண்டியிருக்கிறது), இவர்கள் இருவரும் பயங்கர ஆபத்தில் இருப்பதாகச் சொல்லி, பீதியைக் கிளப்புகிறாள். அப்போதுதான் அவள் இந்த ஜீப்பர்ஸ் க்ரீப்பர்ஸ் பாடலைச் சொல்லி, இப்பாடல் கேட்கும்போதெல்லாம் ஆபத்து அவர்களின் மிக அருகில் இருக்கும் என்று சொல்கிறாள். அப்போது போலீஸ் அங்கு வருவதால், இவர்களும் போலீஸுடனேயே செல்கின்றனர். அந்த நிலவறை முற்றிலும் போலீஸால் எரிக்கப்படுகிறது.

அவர்கள் கார்கள் சென்றுகொண்டிருக்கும் வழியில், திடீரென்று ஏதோ அவர்கள் காரைத் தாக்குகிறது. இவர்களுக்கு மட்டும், அது யாரென்று தெரிந்து விடுகிறது. அவர்கள் முன்பு பார்த்த அதே உருவம் தான் ! அத்தனை போலீஸ்காரர்களையும் கொன்றுவிடும் அந்த உருவம், அவர்களது உடல்களை அந்தட் ட்ரக்கினுள் திணிக்கிறது. அந்த நேரத்தில், இவர்கள் இருவரும், அந்த உருவத்தின் மேல் காரை ஏற்றிவிடுகிறார்கள். அசைவற்றுக் கிடக்கும் உருவத்தின் அருகில் சென்று பார்த்தால், அதன் முதுகில் இருந்து இரண்டு இறக்கைகள் வேறு தன்னிச்சையாக அடித்துக்கொள்ள ஆரம்பிக்கின்றன. பயத்தில், இருவரும் எஸ்கேப்!

இருவரும் போலீஸ் ஸ்டேஷனை அடைந்து, ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்கள். அப்போது அங்கும் வரும் அந்த சூனியக்காரி, இந்த ஜந்துவைப் பற்றிய உண்மைகளைச் சொல்கிறாள். 23 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயித்தெழும் அந்த ஜந்து, கிடைப்பவர்களை எல்லாம் அடித்துக் கொன்று, அவர்களது உடல்களைக் கிழித்து, அந்தப் பாகங்களைத் தனது உடலில் பொருத்திக்கொள்ளும் என்று கூறுகிறாள். அந்த ஜந்து, எதையெல்லாம் தின்கிறதோ, அவையெல்லாம் அதன் உடல் பாகங்களாக ஆகிவிடும்.

தனது இரையை, பயத்தின் மூலமே அது தேர்ந்தெடுக்கும் என்று அவள் சொல்கிறாள். அதற்குத் தேவையான ஏதோ ஒன்று இவர்கள் இருவரிடமும் இருப்பதால்தான் இவர்களைத் துரத்துகிறது என்றும் சொல்கிறாள்.

போலீஸ் ஸ்டேஷனுக்கும் அந்த ஜந்து வந்து விடுகிறது. கண்டபடி எல்லாரையும் தாக்கி, இவர்கள் இருவரின் அருகில் வருகிறது. .

அதன்பின் என்ன ஆயிற்று? அந்த ஜந்து தேடியது அதற்குக் கிடைத்ததா? ட்ரிஷ்ஷும் டேரில்லும் என்ன ஆனார்கள்? வித்தியாசமான க்ளைமாக்ஸை, டி வி டி திரையில் காணுங்கள்.

இப்படத்தை, அறியாத வயசில் (படம் ரிலீஸானது 2001. அப்போ எனக்கு ரொம்பச் சின்ன வயசாக்கும்) பார்த்துவிட்டு பயந்தது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. இப்படத்தை (வழக்கப்படி) ஹெச் பி ஓ வில் பார்த்துவிட்டு, பின் டி வி டியிலும் உடனே பார்த்தேன். இந்தப்படத்தில், பயத்தோடு கொஞ்சம் காமெடியும் இருப்பது இதன் பிளஸ் பாயிண்ட்.

இப்படத்துக்கு, ஒரு இரண்டாம் பாகம் வேறு உண்டு. ஜீப்பர்ஸ் க்ரீப்பர்ஸ் 2. அது, இப்படத்தை விடவும் ஹிட். இரண்டு படங்களுமே, கிட்டத்தட்ட மூன்று மில்லியன் செலவில் எடுக்கப்பட்டு, அறுபது மில்லியன் சம்பாதித்துக் கொடுத்தன. எனவே, தற்போது மூன்றாம் பாகத்தை எடுத்துக்கொண்டிருக்கின்றனர். அது அடுத்த ஆண்டில் ரிலீஸ். அத்ற்குப் பிறகு, நாலாம் பாகமும்.

இப்படத்தை, யாருமற்ற தனிமையில் இரவில், இருட்டில் பாருங்கள். ஜாலியாக இருக்கும்.

Jeepers Creepers படத்தின் டிரைலர் இங்கே.

  Comments

22 Comments

  1. எப்பா தனியா இந்த ராத்திரில படிச்சேனே எனக்கு எதாவது சிறப்பு பரிசு உண்டா?

    Reply
  2. நான் 2 பாகங்களும் பார்த்துள்ளேன் …2-ம் பாகம் மிக அருமை…
    (medium – ஊடகம்)

    மற்றும் ஒரு நல்ல விமர்சனம்… 🙂

    ராஜ்.

    Reply
  3. நண்பரே,

    இரண்டாம் பாகம் பார்த்திருக்கிறேன். ஒரு பஸ்ஸில் செல்லும் மாணவர்கள் இந்த சிருஷ்டியிடம் மாட்டிக் கொள்ளுவதாக கதையிருக்கும். நல்ல விறுவிறுப்பாகவே இருந்தது. தற்போது இவ்வகையான படங்களின் மீது ஆர்வம் குறைந்து விட்டது. சிறப்பான விமர்சனம்.

    Reply
  4. எனக்கு விருப்பமே இல்லாத டைப் இந்த மாதிரிப் படங்கள். இதோட வெற்றியை புரிஞ்சிக்க முடியலை.

    //இந்த வார்த்தையை உபயோகிக்க வேண்டியிருக்கிறது),//

    ஆவி அமுதாவோட “தங்கச்சி”-ன்னு சொல்லுங்க.

    இல்லைன்னா.. ‘விக்கிரவாண்டி’ ரவிச்சந்திரன் பேத்தி.

    Reply
  5. தமிழ்மணத்தில் எப்ப உங்க ஓட்டை.. உங்களுக்கு போடப் போறீங்க தல? நான் மட்டும்தான் அதுக்கு ஓட்டு போடுறேன்.

    Reply
  6. நான் 2ம் பாகந்தேன் பாத்துருக்கேன்.1ச்ட் ஒரு சின்னப் பையன்,அப்புறம் ஒரு வாத்தியார்,பஸ் டிரைவரு,
    கோச்,…..இப்பிடி அல்லாரையும் சாப்புடும்.சோக்கா இருக்கும் படம்.நன்றி.

    Reply
  7. @ அண்ணாமலையான் – உங்களுக்கு ஹாரர் கொண்டான்னு ஒரு பட்டம் (ஏற்கெனெவே அது கிரிக்கு குடுத்தாச்சு) குடுத்துரலாம் . . 🙂

    @ ராஜாதி ராஜ் – சூப்பர் ! எனக்கும் ரெண்டாம் பாகம் பிடிக்கும் . . ஜாலியா பாக்கலாம் . . 🙂 நன்றி

    @ காதலரே – நான் அவ்வப்போது இம்மாதிரி படங்கள் பார்த்து சிரித்துக்கொள்வதுண்டு. . எப்போதுமே சீரியஸ் மற்றும் உலகப்படங்கள் பார்த்து, மூடு சீரியசாகும் வேளையில், இந்த மாதிரி ஜாலிப் படங்கள் பார்ப்பேன் 🙂 . . எனக்கும் இரண்டாம் பாகம் பிடிக்கும் . . 🙂

    @ பாலா – அது வேறே ஒண்ணுமில்ல . . மக்களுக்கு ஒரு விறுவிறுப்பும் ஜாலியும் அப்பப்ப தேவைப்படுது. அதான் இந்த டைப் படங்கள் சக்சஸ் ஆகுது . .
    அப்பறம், அந்த ஆவி அமுதா மேட்டர் பயங்கர காமெடி. . இனிமே அப்புடித்தான் சொல்லணும் . . 🙂

    அப்பறமா, இந்த தமிழ்மணம் பத்தி . . நெசம்மாவே இத்தன நாளு, நானு ஜஸ்ட் ஒரு போஸ்ட் போட்டாலே அதுல வோட்டு உளுந்துருதுன்னு நெனைச்சிகினு இருந்துட்டேன் . . நானு என்னோட முதல் பதிவுல உங்ககிட்ட சொன்னமேரி, எனக்கு இந்த மாதிரி சைட்ல பொய் வோட்டு போடுறதே அவ்வளவா தெரியாது . . 🙁 அதான் தானாவே வோட்டு உளும்னு நெனைச்சிகினு இருந்துட்டேன் . . இனிமே அதா R & D பண்ணி, ஒட்டு போடுறேன் . . நன்றி தல..

    @ லிமட் – கருத்துக்கு நன்றி. . அடிக்கடி இந்தப்பக்கம் வாங்க பாஸு . . 🙂

    @ மயில்ராவணன் – ஆமாங்க . . அது கொஞ்சம் தமாசா வேறே இருக்கும் . . . அதெப்புடி பாஸு.. அடுத்தவன அது கொன்னு திங்கும்போது நமக்கு ஒரு புளகாங்கிதம் வருது . . ஹீ ஹீ

    Reply
  8. @ உண்மைத்தமிழன் – மிக்க நன்றி . . ரொம்ப நாள் கழிச்சி இந்தப்பக்கம் வந்துருக்கீங்க போலயே . . அடிக்கடி வாங்க தல . . 🙂

    Reply
  9. இத இருட்டுல பாத்தா ஜாலியா?

    Reply
  10. பயந்து வருதுங்க. இந்த மாதிரி படம் பார்த்தா பயந்துடுவேன். உங்களோட தேள் படத்த பார்த்தாலே எனக்கு பயம்ம்ம்மா இருக்கு. இதுல இந்த மாதிரி படம் வேறயா ?

    Reply
  11. @ பின்னோக்கி – ஒரு ரகசியம் சொல்றேன் . .நானும் அப்புடித்தான் . . கண்டபடி பயப்படுவேன்.. எதைப்பார்த்தாலும் . .தெனாலி மாதிரி. . சும்மா எளுதுறது தான் வீரத்தனமா . . 🙂 அந்தத் தேளு படம் எல்லாரையும் பயமுறுத்தத்தான் . . ஹீ ஹீ ஹீ

    Reply
  12. ஐ. தல போனவாரம் தான் இதன் 2 பாகம் பார்த்தேன். காமெடி + விறுவிறுப்பு. ஆரம்ப காட்சிகள் ரொம்ப நல்லாருக்கும்… நல்லா பயப்படற மாதிரி ஒரு ஹாரர் படம் சொல்லுங்க தல…பயந்து ரொம்ப நாளாச்சு… 🙂

    Reply
  13. போன மாசம்தான் படத்தோட பேறே வித்தியாசமா இருக்கேன்னு டோரண்ட்ல இறக்கி பார்த்தேன்.

    உங்க விமர்சனங்கள தொடர்ந்து படித்துகொண்டு வருகிறேன். ஆனா கமெண்ட் எப்பவாசும் தான். Motor Cycle dairies புத்தகமா படிச்சிருக்கேன். அத படமா பாக்குறப்போ ஒரு பது அனுபவமா இருந்தது. Motor Cycle dairies, Che 1 & 2 இரண்டு படங்களையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. வரலாற்றுப் படங்களையும் நிறைய அறிமுகப்படுத்துங்க.

    Reply
  14. கருந்தேள், இந்த படத்தை பற்றி டாரண்ட் தளங்களில் அடிக்கடி பார்த்திருக்கிறேன்… ஏதோ லோ க்ளாஸ் மூவி என்று ஒதுக்கி வைத்திருந்தேன்.உங்கள் பதிவிற்கு பிறகு ஒரு பாகமாவது பார்த்துட்டு முடிவு பண்ண வேண்டியதுதான்.

    சொல்ல போனால், முன் இருந்தது போல இவ்வகை படங்கள் தற்போது பயத்தை விட காமடியை தான் அதிகம் தருகின்றன… கடைசியாக ஒரு நல்ல பேய் படம் பார்த்து ரொம்ப நாளாச்சுப்பா 🙂

    Reply
  15. @ நாஞ்சில் பிரதாப் – டெம்ப்ளேட் இன்னும் மாத்தலன்னு கோவத்துல நீங்க ஒதுங்கிட்டீங்களோன்னு நெனைச்சிட்டேன் . .:-) நல்லா பயப்படுற மாதிரின்னா . . நான் சமீபத்துல பார்த்து ரொம்ப பயந்தது Drag me to Hell தான் . .நீங்க அத பார்தாச்சுன்னு நெனைக்குறேன் . .எனவே, The Shining பாருங்க . .இப்பல்லாம் பேய்ப் படங்களே நல்ல வர்றதில்ல பாஸு . . 🙁

    @ ஜீவன் பென்னி – எப்புடிங்க கரெக்டா பாயிண்ட புடிச்சீங்க . .இந்த வீக் எண்ட்ல ஒரு நல்ல சரித்திரப்படம் தான் . . எடுத்து வெச்சிருக்கேன் . . சூப்பர் !!

    @ ரபீக் – அமாம் . . இந்த நாட்கள்ல , ஒரு நல்ல பேய்ப் படமே வர்றதில்ல. . நம்ம பாலா கிட்டே கேட்டா ஏதாவது சொல்வாரு. . கேட்டுரலாம் . .அதே மேரி, இந்தப்படத்தையும் பார்த்தா சிரிப்பு வரும். . ஆனா, அந்த ஜந்து பண்ணுற சேஷ்டைனால தான் . . 🙂

    Reply
  16. முதல் முறைய நா பார்த்த படம்…, நா நைட் ஷோ பார்த்து பயந்துட்டேன் எட்டாவது படிக்கும் போது…

    Reply
  17. அட.. நீங்களும் யூத்துல தான் இந்தப்படத்த பாத்துருக்கீங்களா.. . 🙂 என்னிய மாதிரி . . . ஹீ ஹீ

    Reply
  18. ஹஹஹ இல்ல கண்ணாயிரம் அடிக்கடி வர்றதுண்டு. இனிமே ஒழுங்கா கமண்ட் போடுறேன்.
    டெம்ப்ளேட் ரொம்ப டெரரா இருக்கு பாஸ் அதான் சொன்னேன்.

    DRAG ME TO HELL படம் நீங்க சொன்ன அன்னிக்கே பார்த்துட்டேன்..பரவாயில்ல..

    THE SHINNING படம் பார்த்தாச்சு… அது எங்கதல பயப்படற மாதிரி இருக்கு…படுமொக்கையா இருக்கு…சுத்தமா புரியவும் மாட்டுது… சரிமொக்கை…டைம் வேஸ்ட் பண்ணிட்டேன் தல…

    Reply
  19. அடப்பாவி . .ஷைனிங் பத்தி இப்புடி சொல்லிட்டீங்களே . .பாலா கிட்டே உங்கள மாட்டி உட்றவேண்டியதுதான் . . 🙂 . . ஃப்ரீயா உடுங்க . .எதாவது நல்ல பேய்ப்படம் மாட்டுனா சொல்றேன் . . . 🙂

    உங்களுக்காகவே டெம்ப்ளேட் சீக்கிரமே மாத்திர்ரேன் பாஸு . . . ஒக்கே வா . .அடுக்குக் கொஞ்ச நேரம் உக்காரணும். . .அதுக்கு நேரம் கிடைப்பேனாங்குது . . .

    Reply

Join the conversation