The Jim Corbett Omnibus
‘A Tiger is a large-hearted gentleman with boundless courage and that when he is exterminated, India will be the poorer by having lost the finest of her animals’ – Jim Corbett.
கிட்டத்தட்ட 90 வருடங்கள் முந்தைய இந்தியாவில் வடபகுதியில் இப்போதைய உத்தர்கண்ட் மாநிலம், குமாவோன் என்றும் கர்வால் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ள பகுதி. இந்த இரண்டு பகுதிகளில் வடக்கே திபெத்தாலும், கிழக்கே நேபாளாலும், தெற்கே உத்தரப்பிரதேசத்தாலும் எல்லைகள் வகுக்கப்பட்ட பகுதியே குமாவோன். ஹிமாலய மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள இடம் இது. பல்வேறு சிறிய கிராமங்களும், சின்னச்சின்ன நகரங்களும் உள்ள பகுதி. நூறு வருடங்களுக்கு முந்தைய காலகட்டம் என்பதால் மின்சாரமும் குறைவு. ரயில்வண்டிகள் அப்போதுதான் அறிமுகமாகிக்கொண்டிருந்தன. எங்கேயாவது செல்லவேண்டும் என்றால் குதிரைச்சவாரி அல்லது நடைப்பயணம்தான் மக்களின் தேர்வாக இருந்தது. அரசு அலுவலர்கள், வெள்ளைக்காரர்கள் ஆகியவர்கள் குதிரைச்சவாரி செய்ய, பிறருக்குப் பெரும்பாலும் நடைப்பயணம்தான் வழி. இந்தப் பகுதியில் காடுகள் மிக அதிகம்.
இத்தகைய பகுதியில் 1875ல் பிறந்து, 1907ல் இருந்து 1938 வரை முப்பத்தோரு வருடங்கள் கிட்டத்தட்ட ஒரு legendடாக வாழ்ந்து மக்களிடையே மரியாதை பெற்ற நபர்தான் ஜிம் கார்பெட் (Carpet அல்ல. Corbett). நைனிடாலில் பிறந்து வளர்ந்து, அங்குள்ள காடுகளில் சுற்றித்திரிந்து, காடுகளில் உள்ள பறவைகள், மிருகங்கள் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டவர். ஜிம் கார்பெட்டின் முதல் முப்பது வருட வாழ்க்கை நமக்கு முக்கியமில்லை. முப்பது வயதுக்குப் பின் அவர் என்ன செய்தார் என்பதுதான் முக்கியம். அதைத்தான் இனி பார்க்கப்போகிறோம்.
மனிதர்களை உண்ணும் மிருகமாக ஒரு புலி எப்போது மாறுகிறது? இயற்கையிலேயே தனக்கு அந்நியமான, மாறுபட்ட ஒரு உணவான மனிதனை எப்படிப் புலியால் தின்ன முடிகிறது? தொண்ணூறு சதவிகிதக் காரணம், ஒரு புலிக்கு ஏற்படும் காயங்கள். குறிப்பாக அக்காலத்தில் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தப்பட்ட புலி, துப்பாக்கிக்குண்டு உள்ளேயே இருப்பதால் கால்களையோ உடலையோ அசைக்கும்போது வலி ஏற்பட்டுப் பிற மிருகங்களை வேட்டையாட முடியாமல் போகிறது. அதேபோல் சில சமயங்களில் முள்ளம்பன்றிகளை வேட்டையாடும்போது அதன் முட்கள் கால்களில் நன்றாக உள்ளே தைத்துவிடுவதாலும் அந்தக் காயங்கள் பெரிதாகி, பிற மிருகங்களைத் துரத்த முடியாமல் பல நாட்கள் பட்டினி கிடக்கும் சூழல் புலிகளுக்கு ஏற்படுகிறது. இந்தச் சூழலில் தற்செயலாகக் காடுகளில் சுள்ளிகள் சேகரிக்க வரும் மனிதர்களைப் பார்க்கும் புலிகள், எதேச்சையாக அவர்களைக் கொல்ல நேரிட்டு, முதன்முறையாக மனித மாமிசத்தை சாப்பிட்டுப் பழகி, இதன்பின் மனிதர்களை எளிதில் கொல்லமுடியும் என்று தெரிந்துகொண்டே மனித வேட்டையர்களாக மாறுகின்றன.
இல்லையெனில், வயதாகும் காரணத்தாலும் புலிகள் மனிதனை வேட்டையாடத் துவங்குகின்றன. புலிகளுக்கு வேட்டையாடும்போது பெரிதும் உதவுவது, மிருகங்களைத் தாக்குவதில் உள்ள வேகம்தான். இதன்பின்னர்தான் அதன் பற்களும் நகங்களும். சராசரியாக எட்டு அடி நீளமும் 250 கிலோ எடையும் உள்ள ஒரு புலி, மிகவேகமாக ஒரு மிருகத்தின் மீது பாய்ந்து அதனை அடிக்கும்போது ஒரே நொடியில் அந்த மிருகம் இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம். இப்படித் தாக்கும்போது முதலில் அந்த மிருகத்தின் குரல்வளையை ஆழமாகக் கடிக்கிறது புலி. இதன்பின் அந்த மிருகத்தைக் காட்டுக்குள் எங்காவது தூக்கிச்செல்கிறது. நன்கு வளர்ந்த ஒரு எருமைமாட்டின் பின்னங்கழுத்தையோ அல்லது முதுகையோ கடித்து வாயாலேயே அதனைப் பல மைல்கள் புலிகள் தூக்கிச்சென்றிருப்பதை ஜிம் கார்பெட் பார்த்து எழுதியும் வைத்திருக்கிறார். புலிகள் அத்தனை பலசாலிகள்.
எனவே, அதன் நகங்களும் பற்களும் எதாவது ஒரு சூழ்நிலையில் உடைந்துவிழும்போது இரையை நன்றாகக் கடித்து வேட்டையாடப் புலிகளால் முடியாமல் போகிறது. இதனாலும் ஏமாளி மனிதர்களை வேட்டையாட ஆரம்பிக்கின்றன. ஆனால், என்னதான் மனிதர்களைத் தின்றாலும், இயல்பில் மனிதன் என்பவன் புலியின் மெனுவில் இல்லவே இல்லை. எனவே மனிதனை ஒரு புலி வேட்டையாடுகிறது என்றால் அது முற்றிலும் சந்தர்ப்பசூழ்நிலையால் ஆனதுதான் என்பதே ஜிம் கார்பெட்டின் முடிவு.
உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட புலி (முக்தேசர் ஆட்கொல்லிப் புலி) மிகவும் இளம் வயதான பெண் புலி. ஒரு நாள் முள்ளம்பன்றி ஒன்றை வேட்டையாடுகையில் அதன் முன் பாதங்களில் கிட்டத்தட்ட ஐம்பது பெரிய ஐந்தங்குல முட்கள் நன்றாக ஏறி உள்ளே தைத்து எலும்பில் பட்டு வளைந்து வெளியே வந்திருக்கின்றன. இதனால் சரியாக நடக்க இயலாமல், அந்த முட்களை வாயால் கடித்து வெளியே இழுக்க முயற்சி செய்திருக்கிறது அந்தப் புலி. அப்போது இன்னும் காயங்கள் பெரிதாகியிருக்கின்றன. ஒரு புதருக்குள் அமர்ந்து இப்படிச் செய்துகொண்டிருந்தபோது, அங்கே ஒரு பெண் அந்தப் புதரின் செடிகளை அறுக்க வந்திருக்கிறாள். முதலில் அந்தப் பெண்ணைப் புலி கண்டுகொள்ளவில்லை. காரணம் அந்தப் பகுதியில் மனிதர்களைப் புலிகளும், புலிகளை மனிதர்களும் எதிரிகளாகப் பாவிப்பதில்லை. காட்டுக்குள் மனிதர்கள் நடமாடும்போது எதிர்ப்படும் புலி அவர்களைக் கடந்து நடந்துபோவதெல்லாம் சர்வசாதாரணம். ஆனால் அந்தப் பெண், புலியை வெகுவாக நெருங்கி, கையில் உள்ள அரிவாளால் வேகமாகச் செடிகளை வெட்ட ஆரம்பிக்க, அந்தப் பெண்ணைத் தனது முன்னங்கையால் சற்றே வேகமாகத் தள்ளிவிட்டிருக்கிறது அந்தப் புலி. உடனேயே தன்னை அடித்தது எது என்றே தெரியாமல் அந்த நொடியிலேயே அவள் மண்டை நொறுங்கி இறந்துவிட்டாள். இதைப் பார்த்து பயந்த அந்தப் புலி அங்கிருந்து நொண்டிக்கொண்டே ஓடி, ஒரு மைல் தொலைவில் இருந்த ஒரு பெரிய மரத்தின் அடியே இருந்த ஒரு பெரிய பொந்தில் தங்கிவிட்டது. ஆனால் விதிவசத்தால் மறுநாள் அங்கேயே வந்து ஒரு ஆள் அந்த மரத்தை வெட்டத் தொடங்க, அவனது முதுகில் ஒரு பலத்த அறை விட்டு அவனை அந்தப் புலி கொன்றிருக்கிறது. ஆனால் அப்படி அறைந்தபோது அவன் முதுகில் இருந்து வழிந்த ரத்தம் ஏற்கெனவே காய்ந்த வயிற்றோடு இருந்த புலியின் பசி உணர்வைத் தூண்ட, அவனது முதுகைக் கடித்துப் பார்த்திருக்கிறது. இதன்பின் மறுநாள் வேண்டுமென்றே இன்னொரு மனிதனைத் தானாகக் கொன்று தின்றிருக்கிறது அந்தப் புலி. அன்றிலிருந்து மொத்தம் 24 மனிதர்களைக் கொன்ற அந்தப் புலி, இறுதியில் ஜிம் கார்பெட்டால் வேட்டையாடப்பட்டது.
(முள்ளம்பன்றிகளைக் கொல்வது பற்றி ஜிம் கார்பெட்டின் சுவையான ஒப்பீடு ஒன்று உள்ளது. பொதுவாகப் புலிகள் முள்ளம்பன்றிகளின் மேலே பாய்ந்தே அவற்றைக் கொல்லும். இதனால் முன்னங்கால்கள், நெஞ்சு போன்ற இடங்களில் முட்கள் தைப்பது சர்வசாதாரணம். ஆனால் சிறுத்தைகள் எப்போதும் முள்ளம்பன்றியின் முன்னால் போய் அவற்றின் முகத்தைக் கடித்தே அவற்றைக் கொல்லும். இதனால் அவற்றின் உடலில் ஒரு முள் கூடத் தைக்காது. இயல்பிலேயே மிகவும் புத்திசாலியான மிருகமான புலிக்கு ஏன் இந்த எளிய உண்மை தெரியாமல் போய்விட்டது என்பது ஜிம் கார்பெட்டின் கேள்வி)
சரி. புலிகள் ரத்தவெறி பிடித்தவை என்பது உண்மையா? இல்லவே இல்லை என்பது ஜிம் கார்பெட்டின் கருத்து. தனக்குப் பசிக்கும்போது மட்டும்தான் புலிகள் வேட்டையாடும். அதேபோல், கொல்லப்படும் வேளையை வைத்தே கொன்றது புலியா அல்லது சிறுத்தையா என்பதைக் கண்டுபிடித்துவிடமுடியும் என்கிறார் கார்பெட். பகலில் கொன்றிருந்தால் அது புலி. காரணம் மனிதர்களைக் கொல்ல ஆரம்பித்ததில் இருந்து புலிக்கு மனிதன் மேல் இருக்கும் பயம் போய்விடுகிறது. ஆனால் சிறுத்தைக்கு என்னதான் மனிதர்களைக் கொன்றாலும் பயம் போவதில்லை. எனவே இரவில் மட்டும்தான் சிறுத்தை மனிதனைக் கொல்லும்.
ஜிம் கார்பெட் சிறுவனாக இருந்தபோது பல புலிகளைப் பார்த்திருக்கிறார். அவற்றில் ஒன்றுகூட காட்டில் தனியாகத் திரிந்துகொண்டிருந்த கார்பெட்டை சீந்தவில்லை. ஒரு புதரைத் தாண்டும்போது அதில் படுத்திருந்த புலி ஒன்று நிதானமாகச் சிறுவன் கார்பெட்டைப் பார்த்தபோது, ‘டேய் பொடியா.. இந்த நேரத்தில் இங்கே என்னடா செய்துகொண்டிருக்கிறாய்?’ என்ற உணர்ச்சி அதன் முகத்தில் எழுதி ஒட்டியிருந்ததைப் பற்றி எழுதுகிறார் கார்பெட். அது பாட்டுக்கு அதன்பின் மெதுவாக நடந்து மறைந்துவிட்டது. அந்தக் காலகட்டத்தில் அந்தப் பகுதியில் எக்கச்சக்கப் புலிகள் இருந்த நேரம் அது. எனவே, தன்னை யாராவது சீண்டினால் மட்டுமே புலி திருப்பித் தாக்கும்; இல்லையேல் அதனால் யாருக்கும் எந்தத் தீங்கும் இல்லை என்பது கார்பெட்டின் உறுதியான முடிவு.
தேவையில்லாமல் புலிகளைக் கொல்லக்கூடாது என்ற இயல்புடையவர் கார்பெட். எப்போது ஒரு புலி மனிதர்களைக் கொல்ல ஆரம்பிக்கிறதோ, அப்போதுதான் அவற்றைக் கொல்லலாம் என்பது கார்பெட்டின் கருத்து. அப்போதுகூட நூறு மடங்கு உறுதியாகப் புலியை அடையாளம் தெரிந்தால்தான் கொல்லவேண்டும் என்பது அவர் கொள்கை. அதையும் மீறி இரண்டு சாதாரணப் புலிகளைத் தெரியாமல் கொன்றது பற்றி மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.
புலிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள அவை விட்டுச்செல்லும் தடயங்கள் மிக அவசியமானவை. இந்தத் தடயங்களைக் கிட்டத்தட்ட ஷெர்லக் ஹோம்ஸ் போலத் துப்பறிந்து புலிகளைப் பற்றிக் கண்டுபிடிப்பது கார்பெட்டின் இயல்பு. அதன் பாதத்தின் தடத்தை வைத்தே அது ஆண்புலியா பெண்புலியா, அந்தப் புலியின் வயதும் எடையும் என்ன, அந்தப் புலிக்கு என்ன பிரச்னை (அல்லது) எதனால் அது ஆட்கொல்லிப் புலியாக மாறியது என்பதெல்லாம் கச்சிதமாகக் கண்டுபிடிப்பது கார்பெட்டுக்குக் கைவந்த கலை. அதேபோல் காட்டில் பல தடங்கள் இருந்தாலும் தான் தேடிவந்த புலியின் தடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடுகிறார் கார்பெட்.
புலிகள், காட்டின் செடிகொடிகளோடு இயைந்துகொண்டு மறைவதில் கில்லாடிகள் என்பது கார்பெட்டின் அவதானிப்பு. மிகமிகப் பக்கத்தில் நின்றிருந்த புலியைக் கண்டுபிடிக்கமுடியாமல் சில முறைகள் தேடியிருக்கிறார். அதேபோல் பல சமயங்களில் இவர் தேடிவந்த புலிகள் இவரையே பதுங்கிப்பதுங்கித் தொடர்ந்திருக்கின்றன. அப்போதெல்லாம் புலி தனக்குப் பின்னால் இருந்துகொண்டு தன்னையே கவனிக்கிறது என்பது அவரது கழுத்தில் ஏற்படும் குறுகுறுப்பு (அல்லது) ஆறாம் அறிவின் மூலம் எப்படியும் தெரிந்துவிடும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் குறுகுறுப்பாலேயே தன்மேல் பாய இருந்த புலிகளை கவனமாகவும் தவிர்த்திருக்கிறார். மறுநாள் அதே இடத்துக்கு வந்து பார்க்கும்போதெல்லாம் அந்த இடத்தில் இவரது தடங்களின்மேல் பதிந்திருந்த புலியின் தடங்கள் இதனை உறுதிசெய்திருக்கின்றன. இதில் கார்பெட் தவறியதே இல்லை.
மிக அருகே புலி ஒளிந்துகொண்டிருக்கிறது என்னும்போது அதனிடம் இருந்து தப்பிக்க என்னசெய்யவேண்டும்? முதலில் எந்த அசைவும் இருக்கக்கூடாது. புலி எப்போதும் பின்னால் இருந்துதான் பாயும் என்பதால் சற்று நேரம் அசையாமல் நின்றுவிட்டுப் பின்னர் மெதுவாக நகர ஆரம்பித்து, புலி எந்தப்பக்கம் இருக்கிறதோ அந்தப்பக்கம் பார்த்துக்கொண்டே அந்த இடத்தைத் தாண்டும்வரை பக்கவாட்டிலேயே நடக்கவேண்டும். மீறிப் புலிக்கு முதுகைக் காட்டிவிட்டால் ஒரே பாய்ச்சலில் நம்மைக் கொன்றுவிட்டு, கவ்விக்கொண்டு ஓடிவிடும். அப்படி நடப்பதிலும் மிக மிக எச்சரிக்கையுடன் மெதுவாகத்தான் செல்லவேண்டும். வேகமாக நகர்ந்தாலும் ஆபத்து. இப்படித்தான் பல சமயங்களில் புலிகளைக் கடந்து தப்பித்திருக்கிறார் கார்பெட்.
சில சமயங்களில் காட்டில் புலி எங்கே இருக்கிறது என்பது தெரியாது. அப்போதெல்லாம் சீதால் (Chital or Cheetal) என்ற மான்களின் குரல்தான் வழிகாட்டி. புலிகளைப் பார்த்துவிட்டால் இந்த மான்கள் குரைப்பதை (ஆம். இந்த மான்கள் குரைக்கும் வகையைச் சேர்ந்தவை) நிறுத்தாது. இதனால் சீதால் விடாமல் குரைத்தால் அங்கே புலியோ சிறுத்தையோ உள்ளது என்பது அர்த்தம். அதேபோல் மரத்தில் இருக்கும் குரங்குகளும் புலியோ சிறுத்தையோ வந்தால் கத்திக் கூப்பாடு போட்டு அவற்றைக் காட்டிக்கொடுத்துவிடும். அதேசமயம் மனித நடமாட்டம் இருந்தாலும் இவை கத்தும் என்பதால் புலிக்கும் மனிதனின் இருப்பை இவை காட்டிக்கொடுத்துவிடும் தன்மை உடையன.
ஒரு புலி எப்படி வேட்டையாடும்? பொதுவாகப் புலிகள் காட்டில் வீசும் காற்றை இயல்பாகவே பயன்படுத்தும் தன்மை வாய்ந்தவை. அதாவது, காற்று வீசும் திசையில்தான் எப்போதும் புலிகள் முன்னேறும். இதனால், காட்டில் ஒரு வேட்டைக்காரர் நுழையும்போது அங்கே வீசும் காற்றின் தன்மை தெரிந்தால்தான் புலியை வெல்லமுடியும். உதாரணமாக, புலியைத் தேடிக் காட்டுக்குள் நுழையும்போது காற்று வீசும் திசையிலேயே வேட்டைக்காரர் நடந்துசென்றால், புலி அவருக்குப் பின்னால் எங்கோ பதுங்கியிருக்கிறது என்றுதான் அர்த்தம். மெல்ல மெல்லக் காற்றுவீசும் திசையிலேயே அது அவரைப் பின்தொடரும். இதிலிருந்து தப்பிப்பது எப்படியென்றால், காற்றுவீசும் திசையில் எதிராகத் திரும்பிக்கொண்டு பின்னாலேயே நடந்து செல்வதன் மூலம்தான். புலி எப்போதும் முகத்துக்கு நேராகப் பாயாது. அதேபோல் ஒரேயடியாகக் காற்றுவீசும் திசையை நோக்கி நடந்துசெல்லாமல், சற்றே பக்கவாட்டில் திரும்பி நடப்பதன்மூலம் பின்நால் இருக்கும் புலியை இடப்புறமோ வலப்புறமோ இருக்கும்படிச் செய்துகொண்டு நடக்கமுடியும்.
புலியோடு போராடி வென்ற மனிதர்களைச் சந்திப்பது மிகக்கடினம். அப்படி ஒரு நபரையும் கார்பெட் பார்த்திருக்கிறார். ஒருமுறை மரக்கிளையில் அமர்ந்து வெட்டிக்கொண்டு இருந்த மனிதன் ஒருவனைக் கீழே இருந்து பின்னங்கால்களால் நின்றுகொண்டு முன்னங்கைகளால் இழுத்துக் கீழே தள்ளி, அவனது தலையைத் தனது வாயால் கவ்விக்கொண்டு, அவன் வயிற்றின்மேல் படுத்திருக்கிறது ஒரு பிரம்மாண்டமான புலி (புலியின் நீளம் குறைந்தபட்சம் எட்டரை அடி. அதன் எடையோ 250 கிலோ இருக்கலாம்). அவனது தலை கொடூரமாக வலித்துக்கொண்டிருக்கிறது. அதன் பற்கள் இவன் மண்டையோட்டுக்குள் பதிந்திருக்கின்றன. மெல்ல உள்ளேயும் இறங்குகின்றன. இந்த ஆள் நல்ல உயரம். அதற்கேற்ற எடையும் கூட. வலியில் திமிறிக்கொண்டே, இரண்டு கால்களின் பாதங்களையும் மெல்லப் புலியின் வயிற்றில் பதித்து, அதனை உதைத்துக்கொண்டே எழுந்து நின்றிருக்கிறான். அதாவது, புலி அவன் மேல் படுத்திருக்கிறது – அப்படியே அதனை உதைத்துக்கொண்டே எழுந்து நின்று, ஒரே தள்ளாக அதைக் கீழே இருக்கும் பள்ளத்தில் தள்ளியிருக்கிறான். அவனது முகம் முற்றிலும் சிதைந்துவிட்டது. புலியின் வாயோடு அவனது முகத்தின் சதை சென்றுவிட்டது. இருந்தாலும் உயிர்பிழைத்து, கிராமத்துக்கு ஓடியிருக்கிறான். அங்கிருந்து பல மைல் தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அவனை கிராம மக்கள் எடுத்துச் சென்றிருக்கின்றனர். மிகமிக ஆச்சரியகரமாக, காயம் செப்டிக் ஆகாமல் இருக்கிறது. உயிரும் பிழைத்துவிட்டான்.
ஒருமுறை, யாருமற்ற ஒரு கிராமத்தின் அருகே மரத்தின்மேல் புலிக்காகக் காத்திருக்கிறார் கார்பெட். அப்போது நடுராத்திரியில் ஒரு மனிதன் உச்சபட்சமாக அலறும் ரத்தத்தைச் சில்லிடவைக்கும் சத்தம் கிராமத்துக்குள்ளிருந்து கார்பெட்டுக்குக் கேட்கிறது. புலி அந்த கிராமத்தில் யாரையோ கொன்றுவிட்டது என்று எண்ணுகிறார். ஆனால் கிராமத்தில் யாரும் இல்லை என்பது சர்வநிச்சயமாகக் கார்பெட்டுக்குத் தெரியும். அப்படியென்றால் அந்த அலறல் யாருடையது? மறுநாள் சென்று பார்க்கிறார். இவர் நினைத்தபடியே அங்கே யாருமில்லை. எந்த ரத்தக்கறையும் இல்லை. பிறருக்கு அந்தச் சத்தமும் கேட்கவில்லை. அந்த அமானுஷ்யமான அலறல் எப்படி எழுந்தது என்றே அவருக்குப் புரியவில்லை என்று சொல்கிறார்.
இன்னும் இதுபோன்ற எக்கச்சக்கமான மிகச் சுவாரஸ்யமான சம்பவங்கள் இந்தப் புத்தகத்தில் உண்டு. ஜிம் கார்பெட் எழுதிய ஆறு புத்தகங்கள் மொத்தம் இரண்டு வால்யூம்களாக வெளிவந்திருக்கின்றன. அவற்றில் Man eaters of Kumaon, The Temple Tiger and more Man eaters of Kumaon, The Man Eating Leopard of Rudraprayag என்ற மூன்று புத்தகங்களின் தொகுப்புதான் இந்த Jim Corbett Omnibus. புத்தகத்தை நான் 2009ல் சென்னை லாண்ட்மார்க்கில் வாங்கினேன். அன்றிலிருந்து இந்தப் புத்தகத்தை இரண்டு மூன்று முறைகள் முழுதும் படித்துவிட்டேன். ஒவ்வொருமுறையும் கொஞ்சம் கூட அலுக்காத புத்தகம் இது. புத்தகத்தைப் படித்தால் புலிகளைப் பற்றி எக்கச்சக்கமாகத் தெரிந்துகொள்ளலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, நூறு வருடங்களுக்கு முந்தைய இந்தியாவைப் பக்கம்பக்கமாக அனுபவிக்கலாம்.
தற்காலத்தில் பலரும் பறவைகள் பார்ப்பதைப்போல் ஜிம் கார்பெட் சர்வசாதாரணமாகப் புலிகளைப் பார்த்திருக்கிறார். பல புகைப்படங்களும் எடுத்திருக்கிறார். தனது 16 MM கேமராவை வைத்து வீடியோவும் எடுத்திருக்கிறார். தனது முப்பது வருடப் புலி வேட்டையில் அவர் கொன்ற புலிகள் + சிறுத்தைகளின் எண்ணிக்கை இருபதுக்கும் மேல் இருக்கும் (இவற்றில் இரண்டு சிறுத்தைகள் அடக்கம்). இந்தப் புலிகளும் சிறுத்தைகளும் மொத்தமாக 1500 மனிதர்களுக்கும் மேலாகக் கொன்று தின்றிருக்கின்றன.
இந்தப் புத்தகத்தைப் படித்தால் புலிகளை வேட்டையாடுவது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் என்பது உறுதி. அதேசமயம் ஜிம் கார்பெட் புலிகளின் மீது அன்போடும் பரிவோடும்தான் வாழ்ந்திருக்கிறார் என்பதும் தெரிகிறது. அதற்கு சாட்சியாக ஜிம் கார்பெட்டின் முழுமுயற்சியின் பலன் – ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா கம்பீரமாக நிற்கிறது.
மிக எளிய இங்லீஷில் ஜிம் கார்பெட்டால் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் தவறவே விடப்படாதது. அவசியம் படித்துப் பாருங்கள். நான் மொழிபெயர்க்க விரும்பும் புத்தகங்களில் இதுவும் ஒன்று (ஆனால் ‘அதற்கேற்ற’ பணம் கிடைத்தால் மட்டுமே).
பி.கு
1. The Ghost and the Darkness படத்தைப் பற்றிய என் கட்டுரையை டைட்டிலைக் க்ளிக் செய்து படிக்கலாம். அது இரண்டு சிங்கங்களைப் பற்றிய நிஜமான சம்பவம். புத்தகத்துக்குத் தொடர்புடையது. அவசியம் தவறவிடக்கூடாத படங்களில் ஒன்று.
2. Man eaters of Kumaon என்ற ஜிம் கார்பெட்டின் புகழ்பெற்ற புத்தகத்தை ஒட்டி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை இங்கே காணலாம்.
Jim Corbett Images courtesy – http://forums.nitroexpress.com/printthread.php?Cat=0&Board=HuntAsia&main=168341&type=thread
Eye of the Tiger poster courtesy – http://ferociousstrength.com/wp-content/uploads/2012/06/eye-of-the-tiger-13.jpg
There is another series of book which fully represents the Landmark of Bangalore, Salem, parts of Andhra forests written by Kenneth Anderson.
You can read those books to understand the forest life of South India. There are some sub-stories in those books — Mambuttiyan and the stories of forest pujari’s…
Available in flipcart fyi
Please frequently post movie review articles too. Visiting the site daily but no posts 🙁 back to form rajesh. Guess ur too busy with other work.
Sure boss. point taken. you are right. Movie reviews are pending. I will start very soon. Cheers.
அட்டகாசமான கட்டுரை…
Thanks for the article… Trying to buy the book in flipkart.
Excellent Mr.Rajesh…like always, an in depth analysis.I love corbett too.If u r a lover of english writers,kindly give us ur analysis about P.G.Wodehouse & Sir Arthur conan doyle.And you might be aware that Mr.Conan doyle has written quiet a few novelettes involving other characters(like Sir Nigel) apart from his favourite (yours too) sleuth Mr.Holmes.Looking forward to it….with regards,Senthil
ஜிம் கார்பெட் டின் புத்தகம் படிக்க மிக ஆவலாக இருந்தேன்….காலப்போக்கில் அதை மறந்தும் விட்டேன்..
உங்களின் அந்த புத்தகம் பற்றிய விவரணை மிக அருமை….
திரும்ப படிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டாகிவிட்டது..
அதை விட உங்களின் அழகான விவரிப்பு மிக அருமை..
நீங்கள் சொல்லியடி நீங்களே எப்படியாவது மொழியாக்கம் செய்தால் மிக சிறப்பாக இருக்கும்….