John Wick (2014) – English
மனைவியைக் கேன்ஸரில் இழந்த ஒரு நபருக்கு இறக்குமுன் மனைவி அனுப்பிய கடைசிப் பரிசான ஒரு நாய், அவள் இறந்தபின்னர் கிடைக்கிறது. மனைவியின் நினைவாக அவன் அந்த நாயை வளர்க்க ஆரம்பிக்கிறான். இந்த நாயைச் சிலர் கொன்றுவிட்டு, அவனது அட்டகாசமான மஸ்டாங் காரையும் அவனை அடித்துப்போட்டுவிட்டுக் கொண்டுபோய்விட்டால் அவன் என்ன செய்வான் என்பதுதான் ஜான் விக். அந்த நபர் ஒரு கைதேர்ந்த கொலைகாரன் என்பது உபரித் தகவல்.
ஹாலிவுட்டில் 1970களிலும் எண்பதுகளின் நடுப்பகுதி வரையிலும் எக்கச்சக்கமான revenge படங்கள் வந்தன. அவற்றில் தலையாயது சார்லஸ் ப்ரான்ஸன் நடித்த Death Wish. தமிழில் ரஜினி நடித்து ‘நான் சிகப்பு மனிதன்’ என்று உருவப்பட்ட படம். இது மட்டும் இல்லாமல், இந்தக் காலகட்டத்துக்குப் பின்னர் கெவின் காஸ்ட்னர் நடித்த Revenge, ப்ரூஸ் லீயின் மகன் ப்ராண்டன் லீ நடித்த The Crow, ஆண்டோனியோ பெண்டரஸ் நடித்து ராபர்ட் ரோட்ரிகஸ் எழுதி இயக்கிய Desperado (எனக்கு மிகமிகப் பிடித்த படங்களில் ஒன்று), ஸ்டாலோன் நடித்த Get Carter, அதே ஸ்டாலோனின் சூப்பர்ஹிட் படமான First Blood, மெல் கிப்ஸனின் Payback, ஜெரார்ட் பட்லரின் Law Abiding Citizen, கர்ட் ரஸல் வயாட் ஆர்ப்பாக நடித்துப் பிரித்து மேய்ந்த TombStone (இதுவும் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று) போன்ற படங்கள் வெளிவந்திருக்கின்றன. க்வெண்டின் டாரண்டினோவின் கில் பில் இரு பாகங்களுமே Revenge படங்கள்தான் (நமது டாரண்டினோ சீரீஸில் இவற்றை இன்னும் சில வாரங்களில் விரிவாகப் பார்க்கப்போகிறோம்). எனக்குப் பிடித்த ரிவெஞ்ச் படங்களையே இங்கே கொடுத்திருக்கிறேன். ஐம்பதுகளிலேயே High Noon போன்ற ரிவெஞ்ச் படங்கள் ஹாலிவுட்டில் மிகவும் பிரபலம். நடுநடுவே க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டும் Hang em High, For a Few Dollars More போன்ற ரிவெஞ்ச் படங்களில் நடித்தார். அவரது Unforgiven கூட ஒருவகையில் ரிவெஞ்ச் படம்தான். ஸ்டாலோனுக்கு கெட் கார்ட்டர் இருக்கவே இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாப் பிரபல நடிகர்களுக்கும் பிரபலமான ரிவெஞ்ச் படம் ஒன்றாவது அங்கே இருக்கும்.
ரிவெஞ்ச் படங்களின் ப்ளஸ் பாயிண்ட் என்னவென்றால், ஆடியன்ஸும் அந்தப் படங்களில் ஒன்றிவிடுவார்கள். வில்லனை ஹீரோ கொடூரமாக இறுதியில் கொல்லும்போது ஆடியன்ஸுக்கு ஒருவித சந்தோஷம் கலந்த pleasure கிடைக்கும்.
கியானு ரீவ்ஸுக்கு அப்படிப்பட்ட ஒரு ரிவெஞ்ச் படம்தான் John Wick. படத்தில் அவருக்கு வசனங்கள் மிகக் குறைவு. மொத்தமே நான்கு பக்கங்கள் இருக்கலாம். மற்றபடி படத்தின் எல்லாக் காட்சிகளுமே துப்பாக்கிக் குண்டுகளால் மட்டுமே நிறைந்திருக்கின்றன. எக்கச்சக்க ரத்தம். வில்லன்களின் அடியாட்களை உடம்பின் அனைத்துப் பாகங்களிலும் சுட்டு ஓட்டை போடுகிறார் ரீவ்ஸ். ஸ்டண்ட் காட்சிகள் அருமையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இயக்குநர்(கள்) சாட் ஸ்டாஹெல்ஸ்கியும் டேவிட் லெய்ட்ச்சும் அப்படிப்பட்டவர்கள் (Chad Stahelski & David Leitch). இவர்கள் இருவரும் சண்டைக்காட்சிகள் அமைக்காத ஹாலிவுட் படமே இல்லை என்ற அளவு ஹாலிவுட்டின் மிகப்பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டர்கள் இவர்கள். முதன்முறையாக இருவரும் சேர்ந்து இயக்கியிருக்கும் படம் இது. இருவருமே பல நடிகர்களுக்கு ஸ்டண்ட் டபிளாகவும் இருந்திருக்கிறார்கள்.
படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பவர் டெரெக் கோல்ஸ்டாட் (Derek Kolstad). இதுதான் இவரது மெய்ன்ஸ்ட்ரீம் முதல் திரைக்கதை. இதற்கு முன்னர் டால்ஃப் டண்ட்க்ரென் நடித்த இரண்டு வீடியோ படங்களுக்கு எழுதியிருக்கிறார். டால்ஃப் டண்ட்க்ரென் படங்களுக்குத் திரைக்கதை எழுதிய ஒரு மனிதர்தான் இப்படிப்பட்ட படத்தை எழுதியிருக்க முடியும் என்று இப்படத்தைப் பார்த்தால் எளிதில் சொல்லிவிடமுடியும். காரணம் படத்தில் (சென்ற பத்தியில் ’துப்பாக்கிக் குண்டுகளால்’ என்று தொடங்கும் மூன்றாவது வாக்கியத்தை இனி படித்துக்கொள்க).
படத்தின் திரைக்கதை கியானு ரிவாஸூக்கு மிகவும் பிடித்துவிட்டது என்று அவரே சொல்லியிருக்கிறார். இதனால் திரைக்கதையை ஸ்டாஹெல்ஸ்கிக்கும் லெய்ட்ச்சுக்கும் அனுப்பியிருக்கிறார். படத்தின் ஸ்டண்ட்களை அவர்கள்தான் அமைக்கவேண்டும் என்பதற்காக. இருந்தாலும், திரைக்கதையைப் படித்துவிட்டு அவர்களே இப்படத்தை இயக்கலாம் என்றும் சரியாகக் கணித்திருக்கிறார். பின்னே? எல்லாப் படங்களிலும் 20-30 நிமிடங்களுக்குத்தான் மொத்தமே ஸ்டண்ட்கள் இருக்கும். ஆனால் இதில் ஆரம்பம் முதலில் இறுதிவரை படம் முழுதுமே ஸ்டண்ட்கள்தானே? கணித்தபடியே அவர்களுக்கும் திரைக்கதை பிடித்துவிட, படம் தயாராகிவிட்டது.
எனக்கு இதுபோன்ற படங்கள் எப்போதும் பிடிக்கும். இதில் ஆரம்பத்தில் கியானு ரீவ்ஸின் காரை ஒரு ரஷ்ய தாதாவின் மகன் பார்த்துவிட்டு, அதன் விலையைக் கேட்பான். அந்தக் காட்சியைக் கவனியுங்கள். படத்தின் revenge தீம் அங்குதான் துவங்குகிறது. அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டால் படத்தில் ரீவ்ஸ் செய்யும் கொலைகளுக்கு நம்மால் முகத்தை சுளிக்கவே முடியாது.
படத்தில் வில்லம் டாஃபோவும் உண்டு. தமிழில் சந்திரசேகர் எப்போதும் செய்யும் தியாகி பாத்திரம் இவருக்கு. ஜான் லெக்விஸாமோ ஒரே ஒரு காட்சியில் வந்துபோகிறார் (இவரை எனக்கு ஒரளவு பிடிக்கும்).
படத்தின் இன்னொரு ப்ளஸ் பாயிண்ட், ஒரு விறுவிறுப்பான தேர்ட் பெர்ஸன் ஷூட்டர் வீடியோகேம் போலவேதான் முழுக்கவும் செல்கிறது. வீடியோகேம் பிரியர்களுக்கு மாக்ஸ் பேய்ன் நினைவிருக்கிறதா? கிட்டத்தட்ட அப்படித்தான். குறிப்பாக மாக்ஸ் பேய்ன் 3யில் கப்பலில் ஒரு பாருக்குள் நடக்கும் ஒரு பெரிய சீக்வென்ஸ் உண்டு. எனக்கு இந்தப் படம் அந்த சீக்வென்ஸை நினைவுபடுத்தியது. இதைப்போலவே படத்தில் படம் நடக்கும் அந்த universe குறிப்பிடத்தக்கது. ஒரு போலிஸ் கூட இல்லாமல் (ஒரே ஒரு போலீஸ் வருகிறார். ஆனால் ஹீரோவைப் பார்த்ததும் பின்வாங்கிவிடுகிறார்), முழுக்க முழுக்க underworldதான். அதிலும் இந்த அண்டர்வேல்ட் ஆசாமிகள் தங்கி ரிலாக்ஸ் செய்ய மட்டுமே பிரத்யேகமான ஒரு மிகப்பெரிய விடுதி படத்தில் வருகிறது. பிணங்களைப் புதைக்கும் undertaker ஒருவரும் படத்தில் ஆங்காங்கே வருகிறார். இதெல்லாம் படத்தின் ஜாலியான உணர்வை இன்னும் தூண்டின. கிட்டத்தட்ட ஒரு கேம் போலவோ அல்லது காமிக்ஸ் போலவோதான் படம் எழுதப்பட்டிருக்கிறது.
ஹீரோ ஜான் விக்காக நடிக்கும் கியானு ரீவ்ஸின் அறிமுகம், வசனங்களில்தான். அவரைப்பற்றி வில்லன், தனது மகனிடம் சொல்லும் காட்சி அப்படியே தமிழ்ப்படங்களைப்போலத்தான் இருக்கிறது (I once saw him kill three people in a bar, with a pencil). செம்ம பில்டப். இரக்கமே இல்லாத கொலைகாரன் வேடம். சற்றே முடிவளர்த்த ஜான் கான்ஸ்டண்டைன் போலவே இருக்கிறார். எங்கும் சிரிப்பதில்லை. மனைவிக்காக அஸாஸின் வேலையை விட்டுவிட்டுச் சென்று, மனைவி இறந்ததும் அதே வேலைக்குத் திரும்பும் கதாபாத்திரம் (கமலின் ’விக்ரோம்’ போல).
தற்காலத்தின் ஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் ஸிஜியைச் சார்ந்தே வருகின்றன. தரமான ஆக்ஷன் என்பது மறக்கப்பட்டுவிட்ட கலையாகிவிட்டது. அதை மறுபடியும் டாரண்டினோ கில் பில்லில் உயிர்த்தெழ வைத்தார். அந்தப் படத்துக்குப் பக்கத்தில் கூட ஜான் விக் நெருங்க முடியாது என்றாலும், ஆக்ஷன் படங்கள் பார்த்து நீண்ட வருடங்கள் ஆகி, ஏங்கிக் கொண்டிருக்கும் திரைப்பட ரசிகர்கள் தவறவிட்டுவிடவே கூடாத படம் ஜான் விக். முதலிலிருந்து கடைசிக் காட்சி வரை ஆக்ஷன் மட்டுமே. இந்தக் கதாபாத்திரத்தை அம்பதுகளின் ஜான் வேய்னோ, அறுபதுகளின் சார்லஸ் ப்ரான்ஸனோ, எழுபதுகளின் இறுதியில் இருந்த க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டோ, எண்பதுகளின் ஸ்டாலோனோ, தொண்ணூறுகளின் மெல் கிப்ஸனோ மட்டுமேதான் அட்டகாசமாகச் செய்திருக்கமுடியும். அந்தப் பட்டியலில் கியானு ரீவ்ஸையும் இப்போது சேர்க்கலாம். எந்த லாஜிக்கும் இல்லை. அடி உதை மட்டுமே. எனவே அடி உதைப் பிரியர்கள் மட்டும் செல்லலாம்.
படத்துக்கு இன்னும் சில பாகங்கள் வரலாம். இப்போதைக்கு ஒரு டிவி சீரீஸ் உறுதி என்று தெரிகிறது. அதிலும் கியானு ரீவ்ஸ்தான்.
இந்தப் படத்தின் கதை கிட்டத்தட்ட தமிழ்ப்படம் போலத்தான் இருக்கிறது. தமிழை விட, தெலுங்குக்கு ஏற்ற சப்ஜெக்ட். பாலகிருஷ்ணா இதைப் படமாக எடுத்து சாவடிக்காமல் இருக்க வேண்டிக்கொள்ளுங்கள்.
பி.கு – கீழுள்ள ட்ரெய்லரில் வரும் பாடல், The Sonics குழுவுன் Have Love, will Travel பாடல் (1965). இதே பாடலைச் சுட்டுதான் MSV பாலசந்தரின் தில்லுமுல்லு படத்துக்கு டைட்டில் பாடல் அமைத்திருப்பார். இந்த ட்ரெய்லரை ஃபேஸ்புக்கில் இரண்டு வாரம் முன்னதாக ஷேர் செய்திருந்தேன். அப்போது ஒரு நண்பர் கமெண்ட்டில் சொன்ன தகவல் இது. அதைப் படித்தபின்தான் இரண்டுக்குமான ஒற்றுமை படீரென்று நினைவு வந்தது. நீங்களும் ட்ரெய்லர் பார்த்துவிட்டு தில்லுமுல்லு டைட்டில் இசையைக் கேளுங்கள்.