John Wick: Chapter Two (2017) – English
ஜான் விக் படத்தின் முதல் பாகம் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது. படத்தை இயக்கியவர்கள் ஹாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் சாட் ஸ்டாஹெல்ஸ்கியும் டேவிட் லெய்ட்ச்சும் (Chad Stahelski & David Leitch). திரைக்கதை எழுதியவர் டெரெக் கோல்ஸ்டாட் (Derek Kolstad). முதல் பாகம்தான் அவரது முதல் முக்கியமான திரைக்கதை. இதெல்லாம் எனது முதல் பாக விமர்சனத்தில் நீங்கள் படித்துக்கொள்ளலாம். முதல் பாகத்தைப் பற்றி விரிவாக அதில் எழுதியிருக்கிறேன்.
இம்முறை, போன படத்தை இயக்கிய இருவரில் ஒருவரான சாட் ஸ்டாஹெல்ஸ்கி மட்டும் தனியாகக் களத்தில் இறங்கியிருக்கிறார். திரைக்கதை, அதே டெரெக் கோல்ட்ஸ்டாட்தான்.
நான் இந்த இரண்டாம் பாகத்துக்காகப் பல வாரங்கள் காத்திருந்தேன். ஹாலிவுட்டில், இரண்டாம் பாகம் என்பது பெரும்பாலும் மொக்கையாக இருப்பதற்குப் பல்வேறு சாத்தியக்கூறுகள் உண்டு. என்றாலும், முதல் பாகத்தின் ஸ்டண்ட்கள் அவ்வளவு அருமையாக இருந்தன. கூடவே திரைக்கதையும் மிக வேகமாகச் சென்றது. எனவே, இரண்டாம் பாகத்தில் திரைக்கதை மொக்கையாக இருந்தாலும், ஸ்டண்ட்களுக்காகவே எப்படியும் படத்தைப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
உண்மையில் படம் முதல் பாகத்தின் அளவு நன்றாக இருக்கிறது. எங்கும் சொதப்பவில்லை. முதல் பாகத்தில் எப்படியெல்லாம் கியானு ரீவ்ஸின் ஜான் விக் கதாபாத்திரத்துக்கு டயலாக்கிலேயே பில்டப் வைத்திருந்தார்களோ, அதே டயலாக் அப்படியே இதிலும் வருகிறது (I once saw him kill three people in a bar, with a pencil). அதே பாபா யாகாவாக (the BoogeyMan) கியானு வருகிறார். அந்தக் கதை முடிந்து ஒரு சில நாட்களிலேயே இந்தக் கதை துவங்கிவிடுகிறது. முதல் பாகத்தின் இறுதியில், வில்லன் விக்கோவை ஜான் விக் மரண அடியோடு விட்டுவிட்டுப் போய்விடுவான். விக்கோ இறந்துவிடுவான் என்று அர்த்தம். அதில் இருந்து துவங்குகிறது இந்தப்பாகம். தனது கார் இன்னும் விக்கோவின் சகோதரன் ஆப்ராமிடம் இருப்பதால், அவனைத் தேடி ஜான் விக் செல்கிறான். அவனது ஆட்கள் அனைவரையும் கொன்றுவிட்டு, ஆப்ரமிடம் இருக்கும் காரை எடுத்துக்கொண்டு, ஆப்ரமை சந்தித்து, சமாதான உடன்படிக்கை செய்துகொண்டு விடைபெறுகிறான். இதுதான் படத்தின் ஓப்பனிங் சீக்வென்ஸ். ஒவ்வொரு ஷாட்டும் அதிரடியோடு, துப்பாக்கிக்குண்டுகள், ஸ்டண்ட்கள் ஆகியவையோடு அடி பிரிக்கிறது இந்த சீக்வென்ஸ்.
இதன்பின் கதை துவங்குகிறது. சாண்டினோ டி அண்டோனியோ என்ற இடாலியைச் சேர்ந்த பிரபல தாதாவின் உதவியால்தான் அடிதடியில் இருந்து ரிடையர் ஆகி, தனது காதலியைக் கைப்பிடிக்க ஜான் விக்கால் முடிகிறது (இது முதல்பாகத்துக்கும் முதலில் நடந்த prequel story. வசனங்களால் மட்டுமே உணர்த்தப்படுகிறது). எனவே, பதிலுக்கு, க்ரைம் உலகின் முக்கியமான புள்லியாக விளங்கும் அவனது சகோதரியைக் கொல்லவேண்டும் என்ற கோரிக்கையோடு ஜான் விக்கை சாண்டினோ சந்திக்கிறான். ஆனால், தொழிலிலிருந்து ரிடையர் ஆகிவிட்டதால் இனி அடிதடியில் இறங்க முடியாது என்று ஜான் விக் மறுத்துவிட, அவனது வீட்டை எரித்துவிடுகிறான் சாண்டினோ. இவர்களின் அடிதடித் தொழிலில் சில விதிகள் உண்டு. ந்யூ யார்க்கின் காண்டினெண்டல் ஹோட்டலின் நிறுவனர் வின்ஸ்ட்டன்தான் தொழிலின் முக்கியப் புள்ளி. விதிகள் அவர் உருவாக்கியவை. அதன்படி, blood oath என்ற, இன்றியமையாத உதவியை யார் செய்திருந்தாலும், அவருக்கு அதை நாம் திருப்பிச் செய்தாகவேண்டும். எனவே, வேறு வழியின்றி, சாண்டினோவின் சகோதரியைக் கொல்ல ரோம் செல்கிறான் ஜான் விக்.
இதுதான் படத்தின் துவக்கம். இதன்பின் என்ன நடந்தது என்பதைப் படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.
கிட்டத்தட்ட ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம் போல பில்டப் கொடுக்கிறது ஜான் விக் சாப்டர் டூ. ஆனால் அப்படத்தில் இருப்பதுபோன்ற lighter moments இதில் கிடையாது. பற்றவைத்த பட்டாசு போல, சர்ரென்று துவங்கி முடிகிறது படம். ரோமில் சாண்டினோவின் சகோதரியைக் கொல்வது சாதாரண விஷயம் கிடையாது என்று ஜான் விக்குக்குத் தெரியும். எனவே, நன்றாகத் தன்னைத் தயார் செய்துகொள்கிறான். ஒவ்வொரு ஆயுதமாக, தற்காப்புக்கான அத்தனையையும் சேகரித்துத் தயாராக வைத்துக்கொள்கிறான். இதெல்லாம் அப்படியே பாண்ட் படம்தான். மிஸ்டர் Q போல இதில் பலர் உண்டு. அனைவருக்கும் ஜான் விக்கைத் தெரியும். அனைவரும் அவன்மீது மரியாதையும் பயமும் வைத்துள்ளனர். The Ghost, BoogeyMan என்றெல்லாம் பல பெயர்கள் ஜான் விக்குக்கு உண்டு. ஜான் விக் ரோமுக்கு வந்துவிட்டான் என்ற தகவல் தெரிந்ததும், போப்பைக் கொல்லத்தான் வந்திருக்கிறானோ என்றெல்லாம் சந்தேகப்படும் மனிதர்கள் படத்தில் உண்டு.
சாதாரண மனிதர்களைப்போலவே, கொள்ளைக்கூட்டத்தாருக்கும் உறுதியான விதிகள் உண்டு என்பது ஜான் விக் universeஇன் முக்கிய அம்சம். இந்த விதிகள்தான் படத்தை சுவாரஸ்யம் ஆக்குகின்றன. இந்த விதிகளால்தான் இறுதியில் ஜான் விக் அனைவரிடமும் இருந்து தப்பித்து ஓடமுடிகிறது. இதே விதிகள்தான் அவனை இப்படத்தின் இறுதியில் the most wanted criminal ஆகவும் ஆக்குகின்றன (போலீஸால் அல்ல. பிற கிரிமினல்களால். அவன் தலைமேல் ஏழு மில்லியன் டாலர் தொகை விலையாக வைக்கப்படுகிறது).
படத்தின் ஸ்டண்ட் கோ ஆர்டினேட்டர் J.J Perry. இப்படத்தின் ஒவ்வொரு ஸ்டண்ட்டும் பல்வேறு பரிசீலனைகளுக்குப் பிறகே கோரியோக்ராஃப் செய்யப்பட்டுள்ளது. ஜு-ஜிட்ஸு, ஜூடோ மற்றும் சாம்போ (Sambo – a Russian martial arts variety) ஆகிய மூன்றோடு, மூன்றுவிதமான துப்பாக்கிகளையும் (ரைஃபிள், ஷாட்கன் & பிஸ்டல்) வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஸ்டண்ட்கள் இவை. படத்தின் ஸ்டண்ட்களின் ஸ்பெஷாலிடி என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் பொருட்களையும் சேர்த்துக்கொண்டே சண்டைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன (ஒரு பென்சிலை வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் எதிராளியைக் கொல்லலாம் என்பதற்கு இதில் கிட்டத்தட்ட முடிவின் அருகே வரும் ஒரு சீக்வென்ஸ் உதாரணம்). இவைகளால், முதல் பாகத்தை விடவும் பிரம்மாண்டமாக இல்லாமல், அதே போன்ற flavorஓடு இப்படம் இருக்க முடிகிறது. இரண்டுக்கும் எந்தப் பெரிய வித்தியாசமும் இல்லை. முதல் பாகத்திலேயே ஜான் விக் என்னவெல்லாம் செய்துவிடுவான் என்பது நமக்கு நன்றாகவே சொல்லப்பட்டுவிடுவதால், இதில் அவன் கொல்லும் ஏராளமான அடியாட்களைக் கண்டு நமக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை.
அதேபோல், படத்துக்காகக் கியானு ரீவ்ஸ், மூன்றரை மாதம் கடும் பயிற்சி மேற்கொண்டுள்ளார். ஸ்டண்ட்கள் மட்டுமல்லாமல், உலகின் சிறந்த துப்பாக்கி மேதைகளும் கியானுவுக்குப் பல டிப்ஸ்களை அளித்துள்ளனர். அதேபோல், பாண்ட் படங்கள் போல இதில் நம்பமுடியாத ஸ்டண்ட்கள் எல்லாம் இல்லை. மாறாக, கியானு பல தடவைகள் சுடப்படுகிறார். காயம் அடைகிறார். நம்பும்படியாகத்தான் இவையெல்லாம் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், துப்பாக்கிகளின் ரிதத்தை வைத்து இதன் soundtrackகில் ஆங்காங்கே இசைக்கோர்ப்புகளும் எழுதப்பட்டுள்ளன.
கீழுள்ள வீடியோவில், கியானு எப்படியெல்லாம் துப்பாக்கிப் பயிற்சி செய்கிறார் என்று கவனியுங்கள். அவரது aim துல்லியமாக இருப்பதையும் கவனிக்கலாம்.
இந்த வீடியோவில், எப்படியெல்லாம் பயிற்சிகளை கியானு மேற்கொண்டார் என்று பார்க்கமுடியும்.
இதனாலேயே, படத்தின் ஸ்டண்ட்கள் அவ்வளவுமே மிகவும் நம்பத்தகுந்த வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. படத்தைப் பார்த்தால் புரிந்துகொள்வீர்கள்.
இதோ, படத்தின் துவக்கத்தில் இடம்பெறும் கார் சேஸ் காட்சி. முழுக்க நான்கு நிமிடங்கள் ஓடக்கூடியது. ஆக்ஷன் பிரியர்களுக்குக் கட்டாயம் பிடிக்கும்.
ஒட்டுமொத்தமாக, முதல் பாகம் பிடித்தால் கட்டாயம் இதுவும் உங்களுக்குப் பிடிக்கும். எனக்கு மிகவும் பிடித்தது. படத்தின் அத்தனை பின்னணித் தகவல்களும் முதல் பாகக் கட்டுரையிலேயே உண்டு. அதையும் ஒருமுறை படித்துவிடுங்கள்.
பி.கு
1. படத்தின் க்ளைமேக்ஸ், ப்ரூஸ் லீயின் எண்டர் த ட்ராகன் படக் க்ளைமாக்ஸுக்கு ஒரு tribute. படம் பார்க்கையில் புரிந்துகொள்வீர்கள்.
2. ஒரிஜினல் ஜாங்கோவில் ஜாங்கோவாக நடித்த Franco Nero இதிலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
3. படத்துக்கு அவசியம் மூன்றாம் பாகம் உண்டு. அது கட்டாயம் நன்றாகவும் இருக்கும்.
thanks bro we waiting for logan review (then only go see movies) thanks
Very soon I shall post it 🙂
உங்களிடம் இருந்து நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறேன். ஆனால் ஒவ்வொரு பதிவிற்கும் நிறைய கால இடைவெளி எடுத்துக்கொள்கிறீர்களே?