Joker (2016) – Tamil

by Karundhel Rajesh August 18, 2016   Tamil cinema

ஒரு கமர்ஷியல் படத்தில் சமகாலத்தில் நடக்கும் பிரச்னைகளை வசனங்களின் மூலமோ காட்சிகளின் மூலமோ முழுக்க முழுக்க உணர்த்துவது தமிழில் மிகவும் அரிது. உதாரணமாக, ’கத்தி’ படத்தில் அலைக்கற்றை ஊழல் சம்மந்தமாக ஒரே ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும். அதையே நம் ரசிகர்கள் ஓஹோ என்று குறிப்பிட்டு மகிழ்ந்தனர். ஏனெனில் அது சமூக விழிப்புணர்ச்சியை வலியுறுத்தியதாம். இதுபோல இன்னும் சில படங்களில் மிக மிக லேசாக சமகாலப் பிரச்னைகளைக் கோடிட்டுக் காட்டும் வசனங்கள் உண்டு. அவை வரும்போதெல்லாம் ஆடியன்ஸின் ரியாக்‌ஷன் ஏதோ சத்ய யுகமே திரும்பிவந்துவிட்டதுபோல இருக்கும். இதற்கு, அந்த வசனத்தைப் பேசும் நடிகர் யார் என்பதும் மிகவும் முக்கியமாக ஆடியன்ஸால் கவனிக்கப்படுகிறது. ரஜினிகாந்த் வந்து ‘நான் கோட் சூட் போடுவேண்டா’ என்று டிக்ளேர் செய்யும் வசனமும் இப்படிக் கொண்டாடப்பட்டதுதான்.

ஆனால், ஒரு கள்ளக்கடத்தல் செய்யும் கேங்ஸ்டர், இப்படி ஒரு வசனத்தை உச்சரிப்பதன் காரணம் என்ன என்று நம்மில் பலரும் யோசிக்கவில்லை. ஏனெனில், அவனும் சரி, அவனுக்கு எதிரிகளாக இருப்பவர்களும் சரி – முக்கியமான தொழிலாகக் கள்ளக்கடத்தலையே செய்பவர்கள். அப்படியென்றால் அவர்கள் கெட்டவர்கள். சமூகத்துக்குத் தவறான முன்னுதாரணங்கள். அப்படிப்பட்டவர்கள் என்ன உடை போட்டால்தான் என்ன? அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் ஆனாலும், அவர்களின் உடையால் அவர்கள் சாதி முன்னுக்கு வந்துவிடுமா? ஒரு கேங்க்ஸ்டர் அப்படி முன்னுக்கு வரவேண்டும் என்றால் அந்த முன்னேற்றமே தேவையில்லையே? சமூகத்தை முன்னேற்றவேண்டும் என்றால், செய்துகொண்டிருக்கும் கள்ளக்கடத்தலை நிறுத்திவிட்டு,  அம்பேத்கர் செய்ததுபோலச் சமூக மக்களுக்காக ரோட்டில் வந்து போராடு. படி. முன்னேறு. அதைவிட்டுவிட்டு, அம்பேத்கர் கோட் சூட் போட்டார் என்பதால் கள்ளக்கடத்தல் தாதாவான நீயும் கோட் சூட் போட்டுக்கொண்டு, அப்படியே உன் தொழிலையே செய்துகொண்டிருக்கும் ஆட்களிடம் ‘போடுவேண்டா’ என்று கர்ஜிப்பதால் என்ன நன்மை?

ஆனால் இந்த வசனத்தைப் பேசுபவர் ரஜினிகாந்த் என்பதால் நாம் இதை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து புளகாங்கிதம் அடைந்துகொண்டிருக்கிறோம். இந்த வசனத்தின் பின்னால் இருக்கும் மாபெரும் அரசியல் அபத்தம் நமக்கு விளங்குவதில்லை.

சரி. இதையெல்லாம் ஏன் ஜோக்கர் பட விமர்சனத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றால், கத்தி, கபாலி போன்ற படங்களில் எப்படி சமூகப் பிரச்னைகள் மிக மிக லேசாகப் பேசப்பட்டனவோ – அந்தப் படங்களின் வசூலுக்காக மட்டுமே எப்படி சமூகப் பிரச்னைகள் வேண்டுமென்றே ஊறுகாயாகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டனவோ,  அதற்கு நேர் எதிராக, சமகாலத்தில் நம்மைச் சுற்றியே நடந்துகொண்டிருக்கும் அத்தனை பிரச்னைகளும் செருப்பால் அடித்ததுபோல் உறுதியாகப் பேசப்பட்டிருக்கும் படம்தான் ஜோக்கர். ஆனால் ஜோக்கர் படத்தை நாம் வரவேற்கப்போவதில்லை. ஏனெனில் இப்படத்தில் ரஜினியோ விஜய்யோ நடிக்கவில்லை. முருகதாஸோ ரஞ்சித்தோ இயக்கவில்லை. ஹீரோயினாகக் காஜல் அகர்வாலோ ராதிகா ஆப்தேவோ நடிக்கவில்லை. மெகா பட்ஜெட் படமும் இது இல்லை. வந்ததே தெரியாமல், அப்படியே மறைந்துபோகக்கூடிய படமாகத்தான் இது இருக்கப்போகிறது (இதற்கு இன்னொரு வலுவான, கதை சார்ந்த காரணமும் உண்டு. அது அடுத்த பத்தியில்).

அதேசமயம், ஜோக்கர் ஒரு க்ளாசிக்கும் இல்லை. ஜோக்கரில் ஒரு திரைப்படமாக சில பிரச்னைகள் இருக்கின்றன. எந்தப் படமாக இருந்தாலும், திரைமொழி என்பது அதில் அவசியம். என்னதான் சமூகப் பிரச்னைகள் என்றாலும், ஒரு திரைப்படமாக, ஆடியன்ஸை அந்தப் படம் சுவாரஸ்யப்படுத்தவேண்டும். கதையில் இடம்பெறும் சம்பவங்கள் ஆடியன்ஸின் மனதைத் தொடவேண்டும். உதாரணமாக Fandry படத்தைச் சொல்லலாம். Court படமும் இப்படிப்பட்டதே. ’விசாரணை நம் மனதைத் தொட்டதா இல்லையா? Thithi படத்தைப் பார்த்தீர்கள் என்றால், அதில் சொல்லப்படும் பிரச்னைகளைத் தாண்டி, படத்தின் கதாபாத்திரங்கள் நம் மனதைத் தொடுவதை உணரமுடியும். ஏன்? ’வீடு’ படத்தை இப்போது பார்த்தால்கூட அதில் வரும் உணர்ச்சிகள் நம்மால் மறக்கமுடியாதவையாக இல்லையா? ’தண்ணீர் தண்ணீர்’ இன்னொரு அருமையான உதாரணம். ஜோக்கரில் வரும் கழிப்பறைப் பிரச்னை போலவே அதில் தண்ணீர்ப் பிரச்னை. ஆனால் தண்ணீர் தண்ணீரை இப்போது ஒரு முறை பாருங்களேன் – அதில் வரும் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் சுரீர் என்று நம் மனதில் உறைக்கும். நம்மால் அக்கதையை உணர்வுபூர்வமாகப் பார்க்கவும் முடியும்.

ஜோக்கரில் இந்த அம்சம் குறைவு. ஒரு டாக்குமெண்ட்ரியைப் பார்ப்பதுபோலத்தான் பல சம்பவங்களும் வந்துசெல்கின்றன. ராஜு முருகனின் மனதில் எதையெல்லாம் சொல்லவேண்டும் என்று நினைத்தாரோ அவை அத்தனையையும் ஜோக்கரின் திரைக்கதையில் கொட்டியிருக்கிறார். எனவே, ஒன்றுக்கொன்று கோர்வையான தொடர்பில்லாத சம்பவங்களின் தொகுப்பாகவே ஜோக்கர் முடிந்துபோய்விடுகிறது.  ஜோக்கரில் வரும் ஃப்ளாஷ்பேக் மட்டுமேதான் ஓரளவு வலுவான கதையோடு, உணர்வுபூர்வமான சம்பவங்களோடு விளங்குகிறது. இந்த ஃப்ளாஷ்பேக்குக்கு முன்னாலும் பின்னாலும் வரும் காட்சிகள், வித்தியாசமாக இருந்தாலும் படம் பார்க்கையில் நம் மனதோடு ஒட்ட மறுக்கின்றன. அதேபோல் படத்தின் லாஜிக்கிலும் ஒருசில கேள்விகள் உள்ளன. உதாரணமாக, மன்னர்மன்னனின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பிரச்னை உள்ளது. இருந்தும் படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அந்தப் பிரச்னையால் அவன் மனதில் நிகழும் போராட்டம் வரவே இல்லையே? ஓரிரு வசனங்கள் மூலம் (ரிபோர்ட்டர்கள் கேட்கும் வசனம் & மன்னர்மன்னனே சிறையில் அவனது வாழ்க்கையைப் பற்றிக் கூறும் வசனம் etc..) இந்தப் பிரச்னை சொல்லப்பட்டாலும், அது போதவில்லை. ஏனெனில் படத்தின் துவக்கத்தில் இருந்தே மன்னர்மன்னன் ஒரு ஜோக்கர் போலவே செயல்படுகிறான். அவன் மூலம் அவனைச் சுற்றியிருக்கும் சமுதாயப் பிரச்னைகள் பேசப்படுகின்றன. அக்காட்சிகளில் எல்லாம் அவன் எங்குமே வீட்டில் இருக்கும் அவனது வாழ்க்கையின் மிகப்பெரிய பிரச்னையைப் பற்றிய ஒரு சிறு சுணக்கம் கூடக் காட்டவில்லை. யாராக இருந்தாலும் இந்தப் பாரம் மிகவும் பெரிதுதானே? என்னதான் மன்னர்மன்னனின் மனநிலையில் பிரச்னை என்றாலும் கூட, ஆரம்பத்தில் ஒரே ஒரு வசனம் மூலம் அவனுக்கு இருக்கும் பிரச்னை பற்றிச் சொல்லப்படுவது அவசியம் போதவில்லை. எனவே மன்னர்மன்னனின் ஃப்ளாஷ்பேக்கில் உயிரோட்டமாக வரும் அவனது கதாபாத்திரத்தை நாம் ரசிப்பது, அதற்கு முன்னும் பின்னும் இருக்கும் காட்சிகளில் இல்லை.

போலவே, படத்தின் பின்பாதியில் மன்னர்மன்னன் தில்லிக்குச் செல்வதெல்லாம் நமக்கு சம்மந்தமில்லாமல், ஏதோ திரையில் எதுவோ ஓடும் உணர்வையே கொடுக்கிறது. நான் சொன்ன திரைமொழிதான் காரணம். அதில் பேசப்படும் பிரச்னை உலக அளவில் மிக முக்கியமானது. ஆனால் அதன் தாக்கம் படத்தில் மிக மிக லேசானதாக இருக்கிறது. எனவே படத்தின் அந்தந்தக் காட்சிகளை மனதில் இருத்த முடியவில்லை.

இருந்தாலும், தமிழில், இத்தனை பிரச்னைகளை மிகவும் வெளிப்படையாகப் பேசிய படம் இதுவரை வரவே இல்லை என்பதே நிஜம். படத்தின் வசனங்களிலும் சரி – காட்சிகளிலும் சரி, யாரையும் விட்டுவைக்கவில்லை ராஜு முருகன். திமுக, அதிமுக, சாதிக்கட்சிகள், மதங்கள், அரசு அலுவலகங்களில் நிரம்பிவழியும் மெத்தனம், ஊழல், அரசியல்வாதிகளும் பெருமுதலாளிகளும் நீதியை விலைக்கு வாங்குதல், சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாத இந்த முதலாளிகளின் போக்கு, சமுதாயத்துக்காகப் போராடுபவர்களை மக்களே புரிந்துகொள்ளாமல் ஏளனம் செய்வது, சாராயத்தையும் பிரியாணியையும் போட்டே ஓட்டுகளை வளைக்கும் அரசியல் கட்சிகள், சமுதாயப் பிரச்னைகளைக் கொஞ்சம் கூட கவனிக்காமல் சினிமாவையே மையமாக வைத்து இயங்கும் ஊடகங்கள் (டைம்பாஸ் பத்திரிக்கையின் பெயர் ஒரு வசனத்தில் வருகிறது. ஆச்சரியம்! இதெல்லாம் பிறரால் செய்யமுடியுமா என்றே சந்தேகமாக இருக்கிறது. இதுவரை நாம் பார்த்த இயக்குநர்கள், தமிழில் வெளிப்படையாகப் பேசத் தயங்கி, பயந்துகொண்டு மேலோட்டமான வசனங்களை வைத்தே படம் எடுத்தவர்கள்தான். எனவே ராஜு முருகன் அவசியம் பாராட்டப்பட வேண்டியவரே. அதிமுகவை நக்கல் அடிக்கும் அதே நேரத்தில், திமுகவையும் ராஜு முருகன் விட்டுவைக்கவில்லை. படம் மட்டும் இன்னும் இரண்டு மாதம் கழித்து வந்திருந்தால், தற்போது சட்டசபையில் நிகழும் கோமாளித்தனமான நிகழ்வுகளையும் விட்டு வைக்காமல் கிழித்திருப்பார் என்றே தோன்றியது) என்றெல்லாம் உண்மையில் நடுநிலையாக நாம் நின்றுகொண்டு கவனித்தால் என்னென்ன தெரியுமோ அவைகளையெல்லாம் படத்தில் வைத்திருக்கிறார். அவற்றையும் வெளிப்படையாக, எந்தவிதப் பூசிமெழுகுதலும் இல்லாமல் பளீரென்று அடித்திருக்கிறார். இது தமிழில் ஒரு நல்ல ஆரம்பம். அவசியம் இன்னும்கூடப் பிற இயக்குநர்கள் இனி இதைச் செய்யமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு ஒரு சார்பு நிலை தேவை. அதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல் இறங்கி வெளுத்திருக்கிறார் ராஜு முருகன். இப்படிப்பட்ட வசனங்கள்/காட்சிகளுக்காக மனமார்ந்த பாராட்டுகள்.

மன்னர்மன்னன் கதாபாத்திரமாக வந்து அலட்டுவதிலும், ஃப்ளாஷ்பேக்கில் அப்பாவித்தனமாக வந்து கதலிப்பதிலும் குரு சோமசுந்தரம் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். அவரது உடல்மொழியில் காணப்படும் வித்தியாசம் குறிப்பிடத்தக்கது. அவரது நடிப்புக்கு இணையாக, படம் முழுதும் ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் பாடல்களும் அருமையாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளன என்பதிலும் சந்தேகமே இல்லை. மன்னர்மன்னனுக்காக ஒரு பாடல் இருக்கிறது. ’எங்க கண்ட பெண்ணே எங்க கண்ட’ என்ற பாடல் அது. கும்மியடி பெண்ணே கும்மியடி என்ற பாரதியார் பாடலின் மெட்டில் அமைக்கப்பட்டுள்ள பாடல். மன்னர்மன்னனின் கதாபாத்திரத்துக்கான தேவையைக் கச்சிதமாக விளக்கும் பாடல். இதே போலத்தான் ‘ஓல ஓலக் குடிசையில’ பாடலும் அருமையாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஃப்ளாஷ்பேக்கில் வரும் இன்னொரு பாடலான ‘ஜாஸ்மின்னு’ பாடலின் பின்னணி பிரமாதம். இருப்பினும், படத்தின் மிகச்சிறந்த பாடல், ‘செல்லம்மா’தான். அப்பாடலின் பின்னணி அப்படி. படம் பார்த்துவிட்டு வந்தபின்னரும் மனதிலேயே சுற்றிக்கொண்டிருந்தது அப்பாடல். ஷான் ரோல்டனிடம் இருக்கும் குரல், ஒரு பொக்கிஷம் போன்றது. அதை மிகச்சரியாக இப்பாடலில் உபயோகித்திருக்கிறார். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இந்தப் பாடலை மறக்கவே முடியாது.

பவா செல்லதுரை, மு.ராமசாமி ஆகியோர்கள் அருமையாக நடித்துள்ளனர். மு.ராமசாமி படம் முழுக்க வருகிறார். படமே அவரது வசனத்துடன்தான் முடிகிறது. ஒரு களப்போராளியாக அவரது உடல்மொழி, வசனங்கள், நடிப்பு ஆகிய அனைத்துமே அருமை.

இருந்தாலும், நான் முதலிலேயே சொன்னபடி, ஒரு திரைப்படமாக ஜோக்கர் என்னைக் கவரவில்லை. காரணம் அதன் கோர்வையாக இல்லாத காட்சிகள். . இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுமே இயல்பானவை. அவைகளை வைத்துக்கொண்டு உலகநாடுகளிலெல்லாம் வலம்வரும் படம் ஒன்றை அவசியம் எடுத்திருக்கமுடியும். அதைத்தான் இப்படத்தில் ராஜு முருகன் செய்யாமல் விட்டுவிட்டார். நான் இந்தப் படத்தைப் பாராட்டுவதற்கான நோக்கம், படத்தில் கையாளப்பட்டுள்ள சமூகப் பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசிய நேர்மைக்காக மட்டுமே. ஜோக்கரை அனைவரும் சென்று காணவேண்டும் என்பது என் ஆசை. காரணம், நம்மால் உணரமுடியாத பிரச்னைகளை ஒரு படமாக ஜோக்கர் நமது முகத்திலேயே செருப்பால் அடிக்கிறது. இப்பிரச்னைகளை உள்ளபடி புரிந்துகொண்டால் நம்மால் அவசியம் இனி நமக்காகப் போராடமுடியும். இப்படி ஒரு படத்தில் வெளிப்படையாக எக்கச்சக்கமான பிரச்னைகளைப் பற்றிப் பேசியதன்மூலம், இனி அப்பிரச்னைகளோடு அழுத்தமான தொடர்புடைய கதைகள் எழுதப்படுவதற்கான துவக்கமாக ஜோக்கர் அமையலாம்.

குக்கூவை விட ஜோக்கர் அழுத்தமானதுதான். ஆனால் வலுவான கதை இல்லாததால், வெறும் சம்பவங்களின் தோரணமாகவே முடிந்துபோய்விடுகிறது. எனவே முக்கியமான காட்சிகளில் நம்மால் கதாபாத்திரங்களுடன் ஒன்றமுடியவில்லை. இதுதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம். இதுமட்டும் சரிசெய்யப்பட்டிருந்தால் ஜோக்கர் கட்டாயம் இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு வெளியான படங்களில் மிக முக்கியமான படமாக மாறியிருக்கும்.

  Comments

6 Comments

  1. Vikatan has given 50 marks! I was planning to watch it! Happy to see that you have mentioned ‘Thithi’, a simple but great movie.

    Reply
  2. அருமையான விமர்சனம்…
    விரிவாய்… ரொம்பத் தெளிவான பார்வை…
    வாழ்த்துக்கள்.

    Reply
  3. காத்தவராயன்

    அருமை வாழ்த்துக்கள்

    Reply
  4. Ravikumar

    It has been more than one month after you written this review. Please write more, at least 2 per a month.

    Reply
  5. நண்பன்

    வணக்கம். தங்கள் விமர்சனம் அருமை ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தை தவறாக புரிந்திருக்கிறீர்கள். நீங்கள் “படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அந்தப் பிரச்னையால் அவன் மனதில் நிகழும் போராட்டம் வரவே இல்லையே” என்று கூறுகிறீர்கள்.

    சரி, ரிபோர்ட்டர்கள் மற்றும் சிறை இருக்கட்டும். படத்தின் ஆரம்பத்தில் இருந்து மன்னர்மன்னன் தன் வீட்டை விட்டு செல்லும் ஒவ்வொரு காட்சியிலும் தனது மனைவியுடன் பேசுகிறார். சந்தோஷத்தை சீக்கிரம் தருகிறேன் என்று கூறுகிறார். பாட்டு போடுகிறார். நமக்கு வீட்டில் எதோ மர்மம் இருப்பது தெரிகிறது. சரி அதை விடுங்கள். அவர் மனைவியிடம் பேசிக்கொண்டே “emergency order” எழுதுகிறார். இது படத்தில் ஒரு முக்கியமான காட்சி. சரி அதுவும் பதியவில்லை அன்று வைத்துக்கொள்வோம். ஒரு மனிதன் தன்னை தானே “president” என்று சொல்லிக்கொண்டு அலைவதே மனதில் நிகழும் போராட்டம் இல்லையா? இதையும் தாண்டி தெரியவில்லை என்றால் காதல் படம் மாதிரி “ஞ ஞ ஞ” என்றல்லவா அலைய வேண்டியிருக்கும்!

    மற்ற எல்லா விஷயங்களிலும் தங்கள் விமர்சனம் நன்றே. ஆனால் படம் முதல் பாதியில் “மனதில் நிகழும் போராட்டம் வரவே இல்லை” என்று கூறுவது பின்னங்கால் வைத்ததாக இருந்தது.

    Reply
    • Muhammad Shahabudeen

      ஜோக்கர் படத்துக்கு முன்னோடி சோவின் துக்ளக் தான்.சமகால மற்றும் இக் கால அரசியல் தகிடுதத்தங்களை தைரியமாக போட்டு உடைத்துள்ளார் சோ.

      Reply

Join the conversation