Kaashmora (2016) – Tamil

by Karundhel Rajesh November 3, 2016   Tamil cinema

காஷ்மோரா ஒரு ஃபேண்டஸி. தமிழில் ஃபேண்டஸிக்கள் குறைவு. பலத்த விளம்பரங்களுக்கு இடையே வெளிவந்திருக்கும் காஷ்மோரா எப்படி இருக்கிறது?

கார்த்தியின் காஷ்மோரா கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. அவர் துவக்கத்திலேயே எப்படிப்பட்டவர் என்பதைத் தெளிவாகக் காண்பித்துள்ளதால் படம் முழுக்க அவரோடு நாம் பயணிக்க முடிகிறது. அவர் பேசும் வசனங்களில் இருக்கும் நகைச்சுவை நன்றாக எடுபடுகிறது. இதுவேதான் விவேக்குக்கும். அவரது டைமிங் இதில் சில காட்சிகளில் நன்றாக வந்திருக்கிறது. சமகால சமூக வாழ்க்கையில் போலி சாமியார்கள்/ஆவியை வைத்து கல்லா கட்டும் நபர்கள் ஆகியோரைப் பற்றிய விமர்சனம் பக்கா. கூடவே பங்காரு அடிகளாரையும் கலாய்த்துள்ளனர். விவேக்=பங்காரு.

ஆனால் ஒட்டுமொத்தமாகப் படம் எப்படி?

முதலில், காஷ்மோராவின் மிகப்பெரிய பிரச்னை என்ன என்று கேட்டால், கதையின் முக்கியமான இடங்கள் மிகவும் மேலோட்டமாக எழுதப்பட்டுள்ளதுதான். இதை விரிவாகப் பார்க்கலாம். காஷ்மோராவின் கதை என்ன? (Spoiler Alert) ஆவிகள் நிபுணனாக ஊரை ஏமாற்றிப் பப்ளிசிடி தேடிக்கொண்டு ஃப்ராடு நபராக வலம்வரும் காஷ்மோரா, ஒரு நிஜமான ஆவியை சந்திக்கிறான். அந்த ஆவியோ, 700 ஆண்டுகளாக பூமியிலேயே கிடக்கும் தன்னை மேலுலகம் அனுப்பக் காஷ்மோராவால்தான் முடியும் என்று அவனை வரவழைத்துக் குடும்பத்தோடு சிறைப்படுத்திவிடுகிறது. அதிலிருந்து காஷ்மோரா எப்படித் தப்பிக்கிறான் என்பதுதான் கதை. இந்தக் கதையில், வில்லனாக ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. கதை காஷ்மோராவுக்கும் ராஜ் நாயக்குக்கும் இடையே மட்டும் நடந்தால் அலுப்பாக இருக்கக்கூடும் என்ற காரணம்தான் அரசியல்வாதி வில்லனை உருவாக்கியதற்குப் பின்னணியாக இருக்கமுடியும். கூடவே, கதையில் ஒருசில திருப்பங்கள் தேவை என்பதற்கும் அந்த வில்லனை உருவாக்கியிருக்கலாம்.

இந்தக் கதையில் சில சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன.

1. அரசியல்வாதி, சாமியாரைக் கேட்டுத்தான் கொலைகூட செய்வான். அவர் சொல்லும்படியே ஆயுதங்கள் இல்லாமல்கூடக் கொல்வான். அத்தனை தீவிரமான மூடநம்பிக்கை உடையவன்.

2. காஷ்மோரா, ஃப்ராடுத்தனம் செய்யக் கடைபிடிக்கும் வழிமுறைகள். Constantine Styleல் காஷ்மோராவின் கதாபாத்திரத்தை உருவாக்கியிருப்பது

3. படம் முழுக்கவும் காஷ்மோராவின் வசனங்கள். கரகாட்டக்காரன் ரெஃபரன்ஸுக்குத் தியேட்டரே அதிர்கிறது.

4. ராஜ்நாயக்கின் கதாபாத்திரத்தின் பின்னணி. பெண்களை அவனுக்கு மிகவும் பிடிக்கும் என்ற தகவல். இந்தக் கதாபாத்திரத்தை சந்திரமுகி வேட்டையன் ஸ்டைலில் உருவாக்கியிருப்பது.

ஆனால் இந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒருங்கிணைத்து, படம் பார்ப்பவர்களை இந்த ஃபாண்டஸியினுள் இழுக்கக்கூடிய திரைக்கதையில் பல பிரச்னைகள் இருக்கின்றன. படம் பார்க்கையில் என்ன உறுத்தியது என்றால், ஆரம்பம் முதல் இறுதிவரை கதை மிக மிக மேலோட்டமாகவே செல்கிறது என்பதுதான். எனக்கு இந்தப் படத்தில் சில கேள்விகள் இருக்கின்றன.

1. படத்தில் வரும் அரசியல்வாதி கதாபாத்திரம் அறிமுகக்காட்சியில் நன்றாக இருக்கிறது (சாமியாரைக் கேட்டுத்தான் கொலைகூட – அதுவும் அவர் சொல்லும்படியே-செய்பவன்). ஆனால் இந்தக் காட்சிக்குப் பின்னர் அந்தக் கதாபாத்திரம் முற்றிலும் காமெடியனாக மாறிவிடுகிறது. அதிலும், அந்த அரசியல்வாதி கதாபாத்திரம் வரும் காட்சிகளையெல்லாம் கவனித்தால், காஷ்மோராவுக்கும் அவன் குடும்பத்துக்கும் கதையில் பின்னால் சிக்கல்கள் வரவேண்டும்; அதனால் அவற்றை விளைவிக்கும் கதாபாத்திரமாக ஒரு ஆள் வேண்டும். எனவே அரசியல்வாதியை உருவாக்கலாம் என்ற நோக்கமே பெரிதாகத் தெரிகிறது. காரணம் இந்தக் கதாபாத்திரத்தில் கனம் இல்லை. ஒரு தட்டையான கதாபாத்திரமாக மாறிவிடுகிறது. ஏனெனில் கதையின் இரண்டாம் பாதியில் இந்தக் கதாபாத்திரத்துக்கு வேலையே இல்லை. காஷ்மோராவுக்கு சிக்கல்கள் அதிகமாகவேண்டும் என்ற நோக்கத்தை மறைத்து, அரசியல்வாதியை இன்னும் நன்றாக உருவாக்கியிருக்கலாம். இப்படிப்பட்ட குறைகள் தெரியாமல் மறைத்து ஆடியன்சை நைஸாக ஏமாற்றுவதுதானே திரைக்கதை?

2. அரசியல்வாதிக்குக் காஷ்மோரா பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் ரெய்டு வருகிறது என்றதுமே காஷ்மோராவின் வீட்டில்தான் 500 கோடியைப் பதுக்குவாரா? ஒரு அரசியல்வாதிக்கு- அதிலும் கொலை கூடச் செய்யத் தெரிந்த அரசியல்வாதிக்குப் பணத்தைப் பதுக்க வேறு இடமே இல்லையா? நானும் நீங்களும் இப்படித்தான் செய்வோமா? பணத்தைக் காஷ்மோரா வீட்டில் பதுக்கினால்தான் காஷ்மோராவின் தந்தை அதை எடுத்துக்கொண்டு ஓடுவார்; அப்போதுதான் எல்லோரும் பங்களாவில் மாட்டுவார்கள் என்பதற்காகவே உருவாக்கித் திணிக்கப்பட்ட காட்சி இது என்று எளிதில் புரிந்துவிடுகிறதே? (விவேக், பணத்தை அமுக்கிக்கொண்டு ஓடுவதாக கார்த்தியிடம் தெரிவிக்கும் காட்சி உண்மையிலேயே சிரிப்பை வரவழைத்தது).

3. ரத்னமஹாதேவி, ராஜ்நாயக்கைக் கொல்லவேண்டும் என்றே பல பிறவிகளாகத் துடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பிறவியில் எங்கோ ஒரு அமானுஷ்ய கோயிலில் உடனிருக்கும் தாத்தா சகிதம் எப்போது பார்த்தாலும் கறுவிக்கொண்டே இருக்கிறார். ரைட். அக்செப்டட். கட் செய்தால் இங்கே காஷ்மோரா ராஜ் நாயக்கிடம் மாட்டிக்கொண்டுவிடுகிறான். அந்த சமயத்திலேயே ரத்ன மஹாதேவி ஆவியாக வந்து ராஜ்நாயக்கைப் போட்டுத் தள்ளியிருக்கலாமே? காஷ்மோராவுக்குத்தான் ஆல்ரெடி பிணம் இருக்கும் காட்சிகளெல்லாம் விஷுவலாகவே டேட்டா ட்ரான்ஸ்ஃபர் செய்துவிட்டாரே? க்ளைமேக்ஸ் வரை காத்திருந்து அட்டாக் செய்யும் ரகசியம் என்ன? அன்றுதான் கதையில் சொல்லப்படும் புனித நாள் என்பதாலா? அப்போது தாக்கினால்தான் ராஜ் நாயக்கின் ஆவி பிரியுமா?

4. சரி. காஷ்மோராவின் ஆவியை அட்டாக் செய்யவேண்டும். க்ளைமேக்ஸில். கிளம்பி வந்துவிட்டார் ரத்னமஹாதேவி. ராஜ் நாயக்கின் லட்சியம் என்ன? பூவுலகில் ஆவியாகி அலைவதை விட்டுவிட்டு மேலுலகம் செல்லவேண்டும்/மறுபிறப்பு எடுக்கவேண்டும். அதற்குத்தானே இத்தனை பாடு? அதையேதானே ரத்னமஹாதேவியின் ஆவி இறுதியில் ராஜ்நாயக்கைக் கொன்று நிறைவேற்றி வைக்கிறது? அப்போது ராஜ்நாயக், கொண்ட லட்சியத்தில் வெற்றியடைந்துவிட்டான் என்றுதானே அர்த்தம்? இதற்குத்தான் தொண்டுகிழவர் சகிதமாக கறுவிக்கொண்டே இருந்தாரா ரத்னமஹாதேவி?

5. ராஜ்நாயக்கின் ஃப்ளாஷ்பேக் ஏன் இத்தனை வீக்காக இருக்கிறது? அவர் தளபதி. இளவரசி மேல் ஆசைப்படுகிறார். இளவரசியை மணம் புரிய முடிவுசெய்கிறார். இந்த சம்பவத்தை சொல்ல ஏன் அந்த மாபெரும் போர்க்களம்? ஒரே ஆளாக அனைவரையும் கொல்வது etc? வெறும் பில்டப்புக்காக உருவாக்கப்படும் இப்படிப்பட்ட காட்சிகளால் கதைக்கு என்ன நன்மை? இதற்கும், பிற டாப்ஸ்டார்கள் இதையே செய்வதற்கும் என்ன வேறுபாடு?

6. இளவரசியைக் காணவில்லை. எங்கே சென்றார் என்று யோசித்தால், காதலனுடன் கம்பி நீட்டிவிடுகிறார். இது எவ்வளவு சாதாரணக் காட்சி? இதைத் தடுக்க இரண்டு சேவகர்கள் போதுமே? கூடவே, இளவரசியைக் காணவில்லை என்றதும் எந்த ராஜா உடனடியாக என்ன ஏது என்றே விசாரிக்காமல், ராஜ்ஜியத்தில் பாதியைத் தருகிறேன்; இளவரசியை மணமுடித்து வைக்கிறேன் என்று அறிவிப்பான்? சுத்த முட்டாள் ராஜாவாக இருக்கிறாரே? அதிலும் மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபதி. கொஞ்சமாவது சுயசிந்தனை இல்லாமலா இருப்பார்? எல்லாவற்றுக்கும் தளபதிகளையே நம்பியிருப்பாரா? இளவரசி மேல் ராஜ்நாயக்குக்கு ஒரு கண் என்று இவருக்கே தெரியும். அதனால்தான் இளவரசியைக் காணவில்லை என்றதும் ராஜ்நாயக் தூக்கிக்கொண்டு ஓடியிருப்பான் என்று நம்புகிறார். அப்படிப்பட்ட ஒருவனை எளிதில் இவர் செய்ய நினைத்ததை செய்துவிடலாமே? எந்தத் திறமையும் இல்லாமல் ராஜாவாக இத்தனை பெரிய சாம்ராஜ்யத்துக்கு ஒரு அதிபதி இருப்பாரா? அப்படியென்ன ராஜ்நாயக் தோர், ஹல்க், பேட்மேன், முகமூடி ஆகியவர்களின் அவதாரமா? அரசவையில் ஒரு ஆள் கூடவா இவனை எதிர்க்க மாட்டார்கள்?

7. இளவரசி சாபம் கொடுக்கிறாள்; அது பலிக்கிறது என்பதெல்லாம் விட்டலாச்சாரியா கான்செப்ட் இல்லையா? அப்படி சாபம் கொடுக்க இளவரசி என்ன தெய்வப்பிறவியா? அதற்கேற்ற ஜஸ்டிஃபிகேஷன் என்ன? எதைக் காட்டினாலும் நாம் நம்ப வேண்டுமா? இது என்ன உலகமகா புருடாவாக உள்ளது?

8. அரசியல்வாதியின் பணம் முழுக்க இறுதியில் காஷ்மோரா குடும்பத்தால் சுருட்டப்படுகிறது. அந்த அரசியல்வாதி என்ன டொம்மை அரசியல்வாதியா? இழந்த பணத்தை ஒரே நொடியில் கைப்பற்றத் தெரியாத ஆளா அவர்? ஆரம்பத்தில் படு சீரியசாக இவரை அறிமுகப்படுத்திவிட்டு, இறுதியில் இப்படி கையாலாகாத காமெடியனாக மாற்றிவிடுகிறார்கள். இந்த அரசியல்வாதி உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? இந்தக் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் என்ன? Refer point #1.

9. ராஜ்நாயக் கதாபாத்திரத்தின் ஆவி படுபயங்கர சக்திவாய்ந்ததாக இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே பயங்கர ஆவி வேலையெல்லாம் செய்கிறது. தனக்குத்தானே யாகமும் நடத்துகிறது. மந்திர தந்திரம், யாகம் வளர்த்துதல் எல்லாம் தெரிந்த ஆவி போலும். இத்தனை சக்தி படைத்த ஆவிக்கு, பூமியில் இருந்து மேலே செல்ல முடிவதில்லை என்ற ஒரே ஒரு பிரச்னைதான் என்ற கருத்து கதையில் கன்வே ஆகவில்லை; அல்லது அது கன்வின்சிங்காக இல்லை.

நான் மேலே சொல்லிய அத்தனை பிரச்னைகளையும் மிக எளிதாகத் திரைக்கதையில் சரிசெய்திருக்கமுடியும். அப்படிச் செய்திருந்தால் படம் இன்னும் அட்டகாசமாக வந்திருக்கும். தமிழில் மறக்க முடியாத ஒரு ஃபேண்டஸியாக மாறியிருக்கும். இப்போதோ மிக சராசரியான ஒரு ஃபேண்டஸியாக மட்டுமே உள்ளது காஷ்மோரா.

காஷ்மோராவின் பெரிய பிரச்னை என்னவென்றால், இஷ்டத்துக்குக் கதையில் பல சம்பவங்களை வைத்து, எல்லாவற்றையும் ஆடியன்ஸ் எந்தக் கேள்வியும் இல்லாமல் நம்பிவிடுவார்கள் என்று நினைத்ததுதான். கேள்வியே கேட்காமல் இத்தனை பெரிய லாஜிக் ஓட்டைகளை எப்படிக் கடக்கமுடியும்? இப்படி எதிலுமே லாஜிக் இல்லாமல் ஒரு திரைக்கதை எழுதுவது மிக எளிது. எது கடினம் என்றால், இருக்கும் லாஜிக் ஓட்டைகளை நாமே நன்றாக அடைத்து, நம்பும்படி ஒரு ஃபேண்டஸியை உருவாக்குவது. அதுதான் இருப்பதிலேயே மிகவும் கடினமான காரியம். ஆனால் அப்படித்தான் பல நல்ல ஃபேண்டஸிகள் மாதக்கணக்கில் அமர்ந்து எழுதப்படுகின்றன. அப்படிச் செய்தால்தான் படம் அனைவரின் நினைவிலும் நிற்கும். காஷ்மோராவின் பிரச்னை இதுதான் என்பது என் கருத்து.

காஷ்மோராவில் வரும் பல இன்ஸ்பிரேஷன்களை இத்தனைக்கும் நான் சொல்லவே ஆரம்பிக்கவில்லை. காஷ்மோராவின் ஓப்பனிங் காட்சி, Constantine படத்தின் ஓப்பனிங் காட்சியிலிருந்து இன்ஸ்பையர் செய்யப்பட்டுள்ளது என்பது இரண்டு படங்களைப் பார்ப்பவர்களுக்கும் புரிந்துவிடும். காஷ்மோராவின் ட்ரெய்லர் வந்ததுமே இதை நான் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தேன். இதோ கான்ஸ்டண்டீன் படத்தின் துவக்கக் காட்சி.

அதேபோல்  ஹாரி பாட்டர் சீரீஸிலிருந்து இதில் இரண்டு இன்ஸ்பிரேஷன்கள் உள்ளன. கார் ஒன்று மரத்தின் உச்சியில் மாட்டிக்கொண்டு மரத்தால் சின்னாபின்னம் செய்யப்படும் காட்சி, மற்றும் தலையில்லா ராஜ்நாயக்கின் காட்சிகள்.. ஹாரி பாட்டரின் இரண்டாம் பாகமான Chamber of Secrets படத்தில் இதேபோன்றதொரு காட்சி உண்டு. அதை இங்கே காணலாம். ஆனால் புத்திசாலித்தனமாக, கார் பறப்பதெல்லாம் காட்டப்படாமல், இந்தக் காட்சியில் இருக்கும் முக்கியமான எலிமெண்ட் – மரத்தில் கார் சிக்குவது – மட்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் இது இன்ஸ்பிரேஷன் என்கிறேன். இது, முதல் இன்ஸ்பிரேஷன்.

அடுத்த ஹாரி பாட்டர் இன்ஸ்பிரேஷன், இதில் வரும் Nearly headless nick என்ற கதாபாத்திரத்தில் இருந்து எடுத்தது. ஹாரி பாட்டர் படங்கள் முழுதுமே இவர் வருவார். தனது தலையைக் கழற்றி எடுத்துக்கொண்டு உலவுவார். இவரும் ஒரு மன்னர். அரச உடையில்தான் சுற்றிக்கொண்டிருப்பார்.

அடுத்ததாக, ராஜ்நாயக் கதாபாத்திரத்தைப் பார்த்ததில் இருந்தே எனக்கு God of War கேமின் நாயகன் க்ராடோஸின் நினைவு வந்துகொண்டே இருந்தது. அவனும் ஒரு தளபதி. அவனும் ஒரு வெறியன். காட் ஆஃப் வாரில் க்ராடோஸ் பல பெண்களுடன் உறவு கொள்ளும் எக்ஸ்ப்ளிஸிட் காட்சிகளே உண்டு. இதோ க்ராடோஸ். நீங்களே பார்த்துக்கொள்ளலாம். எனக்கு மிகவும் பிடித்த கேம் இது. அதைப்பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறேன் —> God Of War Games Review

kratos

 

kratoslow

இவைகளில் இருந்து காப்பி அடிக்காமல், புத்திசாலித்தனமாக இன்ஸ்பையர் மட்டும் ஆகியிருக்கிறார்கள் என்பது என் கருத்து.

ஒட்டுமொத்தமாக, காஷ்மோரா சில காட்சிகளில் மட்டும் நம்மைச் சிரிக்க வைக்கிறது. கண்டிப்பாகக் காஷ்மோராவின் அட்டகாசமான ப்ளஸ் பாயிண்ட் அதன் வசனங்களே. வசனங்கள் எழுதிய ஜான் மகேந்திரன், ஆர். முருகேசன் மற்றும் கோகுல் பாராட்டப்படவேண்டியவர்கள். பல காட்சிகளின் பின் எந்த லாஜிக்கும் இல்லாமல் மனம்போனபோக்கில் எழுதப்பட்டுள்ளது. இதனாலேயே காஷ்மோரா முழுமையாக  நம் மனதைக் கவராமல் போய்விடுகிறது.

  Comments

5 Comments

  1. நாங்க நேத்து பாத்துட்டு வந்தோம்… டைம் போனதே தெர்ல…

    Reply
    • அது ஓக்கே.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்.. 🙂

      Reply
  2. செந்தேள் சென்காயிரம் ரயில் டிரைவர்

    என்ன தம்பி நலமா?

    Reply
  3. Parthiban

    அந்த ரோகினி நட்சத்திர விஷயத்தை மறந்துடீங்களே!

    Reply
  4. Paramesh

    Super bro…

    Reply

Join the conversation