காற்று வெளியிடை (2017)

by Karundhel Rajesh April 13, 2017   Tamil cinema

மணி ரத்னத்தின் படங்களைப் பற்றி விரிவாக அனலைஸ் செய்து நான் எழுதிய கட்டுரையை முதலில் படிக்க விரும்புபவர்கள் படித்துக்கொள்ளலாம் – Mani Ratnam – The Waning Trajectory?

இந்தக் கட்டுரையில் நான் எழுதியிருந்த இறுதிப் பத்தி இங்கே.

‘தனது படத்துக்காக ‘டைம்’ பத்திரிக்கையின் உலகில் சிறந்த நூறு படங்கள் பட்டியலில் இடம்பெற்ற மணி ரத்னம், அவரது பாணியை அழுத்தமாகப் பதிக்கும் சிறந்த படம் ஒன்றை எடுக்கப்போவதற்காகத் தமிழ்த்திரை ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அதற்கு அவர் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.  மணி ரத்னம் தமிழ்த்திரை ரசிகர்களிடம் ஏற்படுத்திய தலைமுறை மாற்றங்கள் அப்படிப்பட்டன. ஏற்கெனவே ‘நாயகன்’, ‘இருவர்’ போன்ற அற்புதமான படங்களைக் கொடுத்திருக்கும் மணி ரத்னத்தால் அது இன்னமும் முடியும் என்றே மனதில் தோன்றுகிறது.  மூளையோ, இனிமேல் அவரால் அப்படியெல்லாம் எடுத்தல் முடியாத காரியம் என்கிறது. பொறுத்துப் பார்க்கலாம்’.


மீண்டும் ஒரு முறை காதலைப் பரிசோதித்துப் பார்த்திருக்கும் மணி ரத்னத்தின் திரைப்படம். மணி ரத்னத்தின் அத்தனை முந்தைய திரைப்படங்களிலும் காதல் முக்கியமான பங்கு வகித்திருக்கிறது. படத்தில் கையாளப்படும் பிரச்னை பம்பாய்க் கலவரமாக இருந்தாலும் சரி, தீவிரவாதமாக இருந்தாலும் சரி, இன்னும் தாயைத் தேடும் குழந்தை, தொழிலதிபராக நினைக்கும் கிராமத்து ஆள், இரண்டு அரசியல்வாதிகளின் போட்டி, பெரும்புதையல் கிடைத்த கிராமவாசிகள் என்பதுபோல எதுவாக இருந்தாலும் சரி, அவரது பெரும்பாலான படங்களில், காதல் ஒரு தனி எபிஸோடாகவே வந்திருக்கிறது. எனக்குத் தெரிந்து அஞ்சலி மட்டும்தான் காதல் அவ்வளவாக explore செய்யப்படாத மணி ரத்னத்தின் படம். ஆனால் அதிலும் வேறுவகையான, லேசான காதல் ஒன்று உண்டு. இந்த அத்தனை படங்களிலும் படத்தின் பிரச்னை பேசப்படுகிறதோ இல்லையோ, காதல் அழுத்தமாகவே பேசப்பட்டிருக்கிறது. மணி ரத்னத்தின் படங்களில் காண்பிக்கப்படும் பிரச்னைகள் அழுத்தமாக இராது. அவற்றைச் சரியாகக் காண்பிப்பதில் அவருக்கு ஏதேனும் குழப்பங்களோ தயக்கங்களோ இருக்கிறதா என்றும் தெரியவில்லை. ஆனால் இதெல்லாம் சரியாக இல்லை என்றாலும், இதுவரை அவரது படங்களில் காதல் மேலோட்டமாகக் காட்டப்பட்டதே இல்லை. கடும் திராபையான ராவணனிலும் கூட ஓரளவு அழுத்தமான காதல் இடம்பெற்றிருந்தது. எல்லோராலும் விமர்சிக்கப்பட்ட கடல் படத்தில்கூட, காதல் comparitively நன்றாகவே காட்டப்பட்டிருந்தது. ஓ காதல் கண்மணி மேலோட்டமான படம்தான். ஆனால் படம் முழுக்கக் காதலே முக்கியமான பிரச்னை.

இப்படி, எந்தப் படமாக இருந்தாலும் காதலை அழுத்தமாகக் காட்டியிருந்தவர் மணி ரத்னம். வேறு பிரச்னைகளைக் கையாளும் படங்களிலேயே இப்படி என்றால்,  காதல் பற்றிய படமாக இருந்தால்? பல்லவி அனுபல்லவி, மௌன ராகம், கீதாஞ்சலி (இதயத்தைத் திருடாதே), தில் ஸே, அலைபாயுதே என்று காதல் படங்களில் பிரம்மாதமான காட்சிகளை அமைத்தவர் மணி ரத்னம். அலைபாயுதேவில், திருமணத்துக்குப் பின் தாலியை மாதவன் ஒளித்து வைக்கும் காட்சி எப்படி? கேஷுவலாக, இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னையை விமர்சித்திருப்பார். தில் ஸேயில், மனதுக்குப் பிடித்த பெண்ணோடு வட இந்தியாவில் நீண்ட தூரம் பயணிக்கும் சீக்வென்ஸ் ஒன்று உண்டு. இப்போது பார்த்தாலும் மனதைக் கவ்வும். இருவரில் எவ்வளவு அழுத்தமான காட்சிகள் இருந்தன? குரு படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரம், தனது கணவனுடன் ஓடிவரும் காட்சி எப்படி? கணவனுடன் படுத்துக்கொண்டே அவனுடன் போலியாகச் சண்டை போட்டு, அளவில்லாக் காதலுடன் முடியும் காட்சி எப்படி இருந்தது? தளபதியில் ரஜினியிடம், தனக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டதை ஷோபனா சொல்லும் காட்சி இன்னும் எனக்கு நன்றாக நினைவுள்ளது. இதேபோல் நாயகன், மௌன ராகம், கீதாஞ்சலி, அக்னி நட்சத்திரம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்தியாவில் காதலைக் கையாண்ட வணிக இயக்குநர்கள் பலர் உள்ளனர். அவர்களில் கட்டாயம் முதல் சில இடங்களுக்குள் மணி ரத்னத்தை அவசியம் வைக்க இயலும்.

எனவே, காற்று வெளியிடை என்ற, காதலை முன்வைத்து எடுக்கப்படும் திரைப்படம் வெளியாகப்போகிறது என்றதுமே, என் எதிர்பார்ப்பு இப்படித்தான் இருந்தது. படத்தில் எதைப் பேசினாலும் சரி, காதல் கட்டாயம் தனி எபிஸோடாக, அழுத்தமாகக் காண்பிக்கப்படப்போகிறது என்றுதான் நினைத்தேன். இதனாலேயே, படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களைக் கண்டுகொள்ளவில்லை. குடும்பத்தோடு (ஐந்து பேர்) இன்று மாலை படம் பார்த்தோம். எங்களில் ஒருவருக்குக் கூட, படம் திருப்தி அளிக்கவே இல்லை. நானாவது அவ்வப்போது வந்த சில ஷாட்களை ரசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் Shreeக்கும் சரி, அவளது பெற்றோருக்கும் சரி, படம் தலைவேதனை அளித்தது என்று அறிந்துகொண்டேன். படம் பார்த்ததில் ஒரே நன்மை, ஒன்றரை வயது நிலா, கைதட்டி ஆரவாரம் செய்து படம் முழுக்கப் பார்த்ததுதான். இதுதான் அவளது முதல் படம். துளிக்கூட அழாமல், சிரித்துக்கொண்டே பார்த்தாள்.

படம் ஏன் எனக்குப் பிடிக்கவில்லை என்று விரிவாகச் சொல்ல முயல்கிறேன்.

1.  படத்தின் கரு 

ஆணாதிக்க மனப்பான்மை உடையவன் ஒருவனுக்கும், மனம் முழுக்க இனிமை நிரம்பிய ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டால் என்ன ஆகும்? இதுதான் படத்தின் கரு. அப்படி ஆணாதிக்க மனப்பான்மை உடையவன் ஒரு போர் விமானி. அந்தப் பெண் ஒரு மருத்துவர். இவர்களுக்கு அறிமுகம் நேரும் காட்சி நன்றாக இருக்கிறது. விபத்தில் படுகாயம் அடைந்த விமானியை, புதிதாக மருத்துவமனைக்கு வந்திருக்கும் அந்தப் பெண் சிகிச்சை அளித்துக் குணமாக்குகிறாள். ஆனால் இந்தக் காட்சிக்குப் பின்னர், வேறு எந்தக் காட்சியிலும் அழுத்தம் இல்லை. மிகவும் மேலோட்டமாக எழுதப்பட்ட காட்சிகளாகவே அவை இருந்தன. ஏர்ஃபோர்ஸ் தலைமையகத்தில் நடக்கும் நடனக்காட்சி, அதன்பின் நாயகன் வருண் சக்கரபாணிப் பிள்ளை (தேவையே இல்லாத சாதி reference வேறு நடுவில் வந்து குதிக்கிறது), நாயகி லீலாவை விமானத்தில் அழைத்துச் செல்வது, இருவருக்கும் காதல் வருவது, லீலாவைத் தொடர்ந்து வ.ச பிள்ளை அவமானப்படுத்திக்கொண்டே இருப்பது, இருவரும் பிரிய நேர்வது, பின்னர் சேர்வது ஆகிய எந்தக் காட்சியிலும், நின்று நிதானித்து நகரக்கூடிய அழுத்தம் இல்லை. அவசரமாகவே காட்சிகள் நகர்கின்றன. இதனால் அந்தக் காட்சிகளில் ஒன்ற முடிவதில்லை (இந்த இடத்தில் ஒரு பழைய நினைவு – நாம் மேலே பார்த்தோமே, குருவின் மனைவிக்கும் குருவுக்கும் கட்டிலில் நேரும் செல்லச்சண்டை, அதை மறுபடி ஒருமுறை பாருங்கள் – நான் சொல்வது புரியும். அதில் சொல்லப்படும் உணர்ச்சிகள் அத்தனை இருக்கும்). காட்சிகளில் ஒன்ற முடியாததால், அவர்களின் பிரச்னையை நாம் தள்ளி நின்று தூரமாகக் கவனிக்கும்படி நேர்கிறது. இதனால் துளிக்கூடப் படத்தோடு ஒன்ற முடிவதில்லை.

கூடவே, நாயகன் போர்விமானி என்பது எதற்காக? நாயகன் சார்ந்த விமானக் காட்சிகள் படத்தில் எங்கேயும் முக்கியமான பங்கு வகிக்கவில்லையே? உதாரணமாக, நாயகனில், ஹீரோ தாதா என்றால், அவனது தாதா வேலைகள்தான் படத்தில் முக்கியமானவை. அதனுள் ஆங்காங்கே பிற சம்பவங்கள் காட்டப்படும். போர்விமானி என்பது, ஜாலியாக வேலைக்குச் செல்வதுபோன்ற விஷயம் இல்லை. அது கட்டாயம் தனிப்பட்ட, வித்தியாசமான வேலைதான். அப்படி ஒரு வேலையில் இருக்கும் நாயகன், அது சார்ந்த எதையுமே செய்யாமல் ஹீரோயின் பின்னாலேயே சுற்றிக்கொண்டு இருக்கிறானே? அது ஏன்? ஏதோ சடங்கு போல, குண்டுவீசச்சென்று கைதாகிறான். அந்தப் பாகிஸ்தான் எபிஸோடிலும் அழுத்தம் இல்லையே? சிறையில் ஜாலியாக ஹீரோ மழையில் வாக்கிங் செல்கிறான்; சுவற்றை நோண்டுகிறான்; தப்பிக்கிறான். அதுகூடப் பரவாயில்லை. தப்பித்தபின்னர் என்ன செய்கிறான்? முன்பு இருந்ததை விடவும் கேஷுவலாக, ஏதோ இன்பச்சுற்றுலா செல்வதுபோல பஸ் பயணம் செய்து ஆஃப்கன் எல்லையை அடைகிறான். பிடித்துவைக்கப்பட்டுள்ள இடத்தில் இன்னும் ஜாலியாக பாம் செய்து வெடிக்கிறார்கள். பின்னால் வீரர்கள் துரத்துகிறார்கள். வழியில் ஒரு லாரியில் ஏறித் தப்பிக்கிறான். உடனேயே பின்னல் துரத்தும் கமாண்டர் என்ன சொல்கிறார்? “அவனைச் சுடாதீர்கள். அவன் உயிரோடு வேண்டும்”. அடப்பாவிகளா? எந்த ஊர் ராணுவத்தில் இவ்வளவு நல்ல கமாண்டர்கள் கிடைக்கிறார்கள்?

சிறையில் இருந்து தப்பிக்கும் பகுதிகள் எல்லாமே நிஜக்கதைதான். ஃப்ளைட் லெஃப்டினண்ட் திலீப் பாருல்கர் என்பவர், 1971 பங்களாதேஷ் போரின்போது இதேபோல் பிடிக்கப்பட்டு இதைப்போலவே சுவற்றில் ஓட்டை போட்டு பஸ்ஸில் தப்பித்திருக்கிறார். ஆனால் நான் சொல்லவந்தது, அப்படிப்பட்ட சம்பவங்களை மேலோட்டமாகக் காண்பித்திருக்கத் தேவையே இல்லை. பாகிஸ்தான் எபிஸோடெல்லாம் தனிப்படத்துக்கான சம்பவங்கள். அதேபோல் ஆணாதிக்க வெறியுள்ள நபர் ஒரு பெண்ணைக் காதலிப்பதெல்லாம் இன்னொரு தனிப்படம். இரண்டு படங்களையும் இணைத்து அரைவேக்காட்டாக ஆக்கிவிட்டார் மணி ரத்னம் என்றுதான் படம் முடிகையில் தோன்றியது.

2. கதாபாத்திரங்கள்

கதாநாயகனாக வரும் வ.ச பிள்ளை எப்படிப்பட்ட நபர்? ஈகோயிஸ்ட். அப்படிப்பட்ட ஒரு நபர், ஒரு பெண்ணைக் காதலிக்கும்போது கட்டாயம் பல பிரச்னைகள் ஏற்படும்தான். ஆனால் அவைகளையெல்லாம், மிகவும் தட்டையாக, அந்தப் பெண்ணைப் பலர் முன்னிலையில் கத்துவது, சொன்ன தேதிக்கு ரிஜிஸ்டர் திருமணம் செய்ய வராமல் இருப்பது போன்ற சம்பவங்களிலேயே எஸ்டாப்ளிஷ் செய்ய முயன்றிருப்பதுதான் படத்தை அலுப்புள்ளதாக்குகிறது. உண்மையில் இந்த ஒட்டுமொத்தப் படத்தின் கதையையும் ஒரே மணிநேரத்தில் சொல்லிவிடமுடியும். அவ்வளவுதான் தாங்கும். அப்படிப்பட்ட, குறைவான கனமுடைய கதையை இரண்டேகால் மணி நேரம் சொன்னால் எப்படி எடுபடும்?

படத்தின் ஹீரோ இயல்பிலேயே பெண்களை இஷ்டத்துக்குக் கையாள்பவன் என்றுதான் வசனங்களிலேயே சொல்லியாயிற்றே? பின் எதற்கு வ.ச பிள்ளையின் தந்தை பெரிய பிள்ளையை வேறு காட்டி, அவர்கள் குடும்பத்தைக் காட்டி, அவர் தனது மனைவியை எடுத்தெறிந்து பேசுவதைக் காட்டி, ‘ஆகமொத்தத்தில் வ.ச பிள்ளையின் முரட்டுக்குணம் எங்கிருந்து வந்தது தெரியுமா? அவன் தந்தை பெரிய பிள்ளையிடமிருந்துதான்’ என்று காட்டுவதற்காக எதற்கு அந்த மருத்துவமனைக் காட்சி? அதிலும் பெரிய பிள்ளையின் குடும்பமே பாஸந்தியில் முக்கியெடுத்த சேட்டுகள் போலவே இருக்கிறார்கள் வேறு. அப்படி இருந்தாலும், நாயகன் தமிழண்டா என்று நிரூபிப்பதற்குத்தான் பெரிய பிள்ளையைக் காட்டினார்கள் போலும். சாதிப்பெயரைப் படத்தில் திணிப்பது என்று முடிவெடுத்தபின்னர், நாயகனுக்குப் பேசாமல் நான் முதலிலிருந்து எழுதுவதுபோல, வ.ச பிள்ளை என்றே பெயர் வைத்திருந்தால் முடிந்தது. தமிழன் லிங்க் எஸ்டாப்ளிஷ் ஆகியிருக்கும். இத்தனை பெரிய சேட்டுக்குடும்பத்தைக் காட்டி, மன்மோகன்சிங் தமிழ் பேசுவது போல ஒரு கலர் கலர் பாட்டை வேறு கா……ட்டியிருக்கத் தேவையே இல்லை என்று தோன்றியது. அந்தக் குடும்பம் சார்ந்த காட்சிகள் முழுக்க முழுக்க திராபைகளாகவே இருந்தன (இன்னொரு ஒப்பீட்டை செய்யாமல் இருக்க முடியவில்லை. தில் ஸே படத்திலும் ஒரு பெரிய குடும்பம் நாயகனுக்கு இருக்கும். ஆனால் அவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளை யோசித்துப் பாருங்கள். எவ்வளவு இயல்பானவை அவை?)

அதேபோல், இந்தப் படத்திலும் பாரதியார் வெறி. ராவணனில், நாயகியைக் கடத்தும் வில்லன், பாரதியார் பாட்டை எசப்பாட்டாகப் பாடிக்கொண்டுதான் நாயகியைக் கடத்துவான். அப்போதே பயங்கர எரிச்சல் வரும். இதிலும், துவக்கத்திலேயே, பாரதியார் பாட்டை வ.ச பிள்ளை பாடத் துவங்கியதுமே அதே கடுப்பு எழுந்தது. அனேகமாகப் படத்தின் வேறு காட்சிகளிலும் இது வரும் என்று நினைத்தேன். நல்லவேளையாக அப்படியெல்லாம் வரவில்லை. மீன்குழம்புடன் பாரதியார் பாடலை ஊட்டி வளர்த்த தாய், ராஷ்ட்ரபாஷாவில் இறுதி பண்டிட் பரீட்சையெல்லாம் பலமுறை எழுதித் தேர்ச்சி பெற்றிருப்பவர் போலவே தோன்றியது. எனவே அந்த வசனம் வந்ததும் சிரிப்பு வந்துவிட்டது. பிள்ளை, பாரதியார் பாடல் என்ற ரெஃபரன்ஸ் எல்லாமே நாயகன் பச்சைத் தமிழன் என்று எஸ்டாப்ளிஷ் செய்வதற்குத்தானா? ஆம் எனில் எடுபடவில்லை என்றுதான் சொல்லமுடியும்.

உலகிலேயே, மணி ரத்னம் படத்தில்மட்டும்தான் நாயகன், ‘என் ஆசை ராணியே.. பச்சக்கிளியே’ என்றெல்லாம் நாயகியை அழைப்பான் போலும். எத்தனை செயற்கையான வசனங்கள் இவை? கேட்கும்போதே எரிச்சல் வந்தது. இதையெல்லாம் யாருமே மணி ரத்னத்திடம் சொல்வதில்லையா? ஆனால் இதெல்லாமே ராவணனில் இருந்துதான் என்பது குறிப்பிடத்தக்கது (??!!).

அடுத்ததாக, நாயகி. நாயகியின் பின்னணிக்கு மணி ரத்னம் கஷ்டமெல்லாம் படவில்லை. எப்படி மணி ரத்னத்தின் சிஷ்யர் அழகம்பெருமாள், வி.கே.ராமசாமியை டும் டும் டும்மில் வைத்தாரோ, அப்படி டெல்லி கணேஷை ஒரு செட் ப்ராப்பர்ட்டியாக வைத்துவிட்டார். முடிந்தது கதை. இவ்வளவுதான். மேலும் அவளது குடும்பம் பற்றி ஓரிரு தகவல்கள் மட்டுமே வருகின்றன. அவளது அண்ணன், அவள் பனிரண்டாவது படிக்கும்போதே இறந்துவிட்டான் என்பது கட்டாயம் ஒரு முக்கியமான, கனமான தகவல்தான். ஆனால் அதுவுமே திரைக்கதைக்குப் பயன்படவே இல்லை. ஓரிரு இடங்களில் ஹீரோ பரிதாபமாக வசனம் பேசுவதற்கு மட்டுமே உதவுகிறது.

எனவே, ஹீரோ, ஹீரோயின் ஆகிய இருவரின் பின்னணிகளுமே தட்டையாக உள்ளன. ஆனால் மணி ரத்னத்தின் பிற படங்களில் ஹீரோ ஹீரோயின்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். மௌன ராகம் டைட்டில்களிலேயே ரேவதியின் சிறுவயதுப் புகைப்படங்கள் இருக்கும். அவற்றின்மூலம் நாயகியின்மீது ஆடியன்ஸுக்கு ஒரு பரிவு வந்திருக்கும். அலைபாயுதேவில் ஹீரோ ஹீரோயின்களின் பின்னணி எவ்வளவு அழுத்தமாக இருந்தது? ஏன்? சமீபத்திய ஓ காதல் கண்மணியில் கூட அது நன்றாகவே இருந்தது. ஹீரோ ஹீரோயின்களின் பின்னணி தட்டையாக இருந்தால், இயல்பிலேயே அவர்கள் மீது நமது கவனம் செல்லாது. இந்தப் படத்திலும் அவர்கள் மீது நம் கவனம் செல்லவில்லை.

3. நடிப்பு

ஹீரோ வருண் சக்கரபாணிப் பிள்ளையாக கார்த்திக். இந்தப் படம் பார்க்கையில்தான் எனக்கு மிகப்பெரிய உண்மை ஒன்று விளங்கியது. இத்தனை காலம் கார்த்திக்கை மீசை இல்லாமல் பார்த்ததே இல்லை என்பதால், அவரது நடிப்பில் பெரிய குறைகள் எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால் இதில் மீசையில்லாமல் அவர் வசனம் பேசி நடிக்கையில்தான், இத்தனை நாள், மீசை அவரது முகபாவங்களை மறைத்து திசைதிருப்பியுள்ளது என்று புரிந்தது. தெளிவாகச் சொல்கிறேன். கார்த்தி இயல்பாகச் சிரிக்கையில், அவரது வாய் லேசாகக் கோணிக்கொள்கிறது. மீசை இருந்ததால் அது நமக்குத் தெரியவில்லை. மீசை இல்லாமல் முகமே மொழுக்கட்டீர் என்று இருப்பதால் இப்படத்தில் அந்தக் கோணல் நன்றாகத் தெரிகிறது. இதுவேதான் அவரது பிற முகபாவங்களுக்கும். மீசைதான் கார்த்தியின் காவலன். இனி மீசை இல்லாமல் கார்த்தி நடித்துவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அட்லீஸ்ட் ஒட்டுமீசையாவது ஓக்கே. எனவே, க்ளோஸப் மற்றும் மிட்ஷாட்களைத் தவிர்த்து லாங்ஷாட், முதுகைக் காண்பிப்பது ஆகியவற்றில் அவரது நடிப்பு பரவாயில்லை.

நாயகியாக நடித்துள்ள அதிதி ராவ் ஹைதரி (ஹைதாரி என்று நினைத்தேன். டைட்டிலில் ஹைதரி என்றுதான் போடுகிறார்கள்) மட்டும்தான் என்னைப்பொறுத்தவரையில் படத்தைத் தாங்குகிறார். அவரது முகபாவங்கள் பிரமாதம். குறிப்பாக, முதன்முதலில் வ.ச பிள்ளையோடு ஃப்ளைட்டில் ஏறிச்செல்லும்போது, ‘கத்தட்டுமா’ என்று கேட்டுவிட்டு, ஒரு கணம் தயங்கிவிட்டுக் கத்தும் காட்சி அட்டகாசம். அந்தத் தயக்கத்தைக் கவனித்துப் பாருங்கள். நான் சொல்வது புரியும். இப்படிப் பல காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கிறார் அதிதி. எனவே அவரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது.

அலைபாயுதேவில் இரண்டே காட்சிகளில் வீணடிக்கப்பட்ட விவேக் போல, இதில் ‘வீரத்தமிழர்’ ஆர்.ஜே.பாலாஜி. ஸ்கோப்பே துளிக்கூட இல்லாத கதாபாத்திரம். அந்த ‘ஓ’ காட்சி மட்டும் நன்றாக இருந்தது.

இவர்களைத் தவிர, வேறு எந்தக் கதாபாத்திரமும் நினைவில் கூட வரவில்லை.

படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கொஞ்சம் கூட சுவாரஸ்யம் இல்லாமல், தேமே என்று நான் பார்த்த இரண்டாவது மணி ரத்னம் படம் இது (அப்படிப்பார்த்த முதல் படம், ராவணன்). ராவணனிலாவது பாடல்கள் நன்றாக இருந்தன. இதிலோ நிஜமாகவே பாடல்கள் மிகவும் ஆவரேஜாகத்தான் இருந்தன. ஒரே ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லை. ரஹ்மான், யாரோ புதுமுக  இயக்குநருக்கு அவசரமாகப் போட்டுக்கொடுத்ததுபோலவே இருந்தன பாடல்கள்.  மிகமிக average பாடல்கள். பின்னணி இசை நன்றாக இருந்தது. குறிப்பாகக் க்ளைமேக்ஸில் அந்தக் குட்டிப்பெண் வருகையில் வரும் இசை. அது ரஹ்மானின் குரல்தானே?

ஒளிப்பதிவும் பிரமாதம். ரவிவர்மன் அனுபவித்துச் செய்திருக்கிறார்.இந்தப் படம் பேசப்படுகிறது என்றால் அது இவரால் மட்டுமே என்பது என் கருத்து. அதிலும், ரெவனண்ட் போல மிகவும் செயற்கையான ஒளிப்பதிவு அல்ல ரவிவர்மனுடையது. காட்சிகளோடு சேர்ந்த இயல்பான ஒளிப்பதிவு என்பதால் மிகவும் பிடித்தது.

4. படத்தின் பிரச்னை

படத்தின் தலையாய பிரச்னை, இதன் கரு. உண்மையில் மிகவும் நல்ல கரு இது. பெண்களைப் பொருள்களைப் போல உபயோகிப்பவனுக்கு ஒரு பெண்ணின் மீது காதல் வந்தால் எப்படி இருக்கும்? இதில் explore செய்ய ஏராளமான விஷயங்கள் உண்டு. அவற்றை மட்டுமே கவனித்து ஆழமாக எழுதியிருந்தால், அவசியம் இது நல்ல படமாக வந்திருக்கும். இந்த சப்ஜெக்ட்டில் எனக்கே ஆழமான அனுபவங்கள் எல்லாம் உண்டு. அதை விட்டுவிட்டு, நாயகன், பைலட், பாகிஸ்தான், எஸ்கேப் என்றெல்லாம் கதை தாறுமாறாக வழிதவறியதால், எடுத்துக்கொண்ட சப்ஜெக்ட் படுத்துவிட்டது. அதிலும், இப்படிப்பட்ட ஒரு ஈகோயிஸ்ட் ஒரு பெண்ணைக் காதலிக்கும்போது, இப்படத்தில் வருவதுபோலமட்டும்தானா நடக்கும்?உண்மையில் இந்தப் பிரச்னை படத்தில் பேசப்படவே இல்லை என்றுதான் சொல்வேன். மணி ரத்னமா இதை எழுதினார்? ஆச்சரியமாக உள்ளது. நான் முதலிலேயே சொன்னதுபோல, உளவியல் பிரச்னைகளை அத்துபடியாகக் கையாளக்கூடிய திறமைபெற்றவர் அவர். ஏதோ அவசரகதியில் ஏன் இப்படியெல்லாம் தட்டையாக எழுதவேண்டும்? புரியவில்லை. போலவே, இறுதிக் காட்சியில், சந்தூர் சோப் விளம்பரத்தில் நாம் பல வருடங்களாகப் பார்க்கிறோமே? அப்படி, நாயகனும் நாயகியும் பேசுகையில் ஒரு குழந்தை ஓடிவந்து ‘மம்மீ’ என்று அழைக்கிறது. ‘அம்மாவா? இவளா?’ என்று அந்த சோப் விளம்பரத்திலேயே பலமுறை பார்த்தாயிற்று. சொல்லவருவது, துளிக்கூட ஒட்டாத பல காட்சிகளை வம்படியாக இதில் மணி ரத்னம் புகுத்தியுள்ளார் என்பதே.

படத்தின் இரண்டாம் பிரச்னை அந்த பாகிஸ்தான் விவகாரம். ஏற்கனவே சொன்னதுபோல, இது ஒரு உண்மைச் சம்பவம். அதைப் படத்தில் வைக்க மணி ரத்னம் விரும்பியிருக்கிறார். எனவே, இரண்டு தனிப்பட்ட கதைகளை ஒன்றிணைத்து வெளியிட்டுவிட்டார். அதுதான் பிரச்னை. இரண்டு கதைகளும் சேரவே மாட்டேன் என்கின்றன. விடாப்பிடியாக இரண்டையும் பிடித்து இணைத்திருக்கிறார். படாரென்று இணைப்பு பிய்ந்து, இரண்டு கதைகளும் தெறித்துக்கொண்டு இரண்டுபக்கமும் ஓடிவிட்டன என்பது படம் பார்க்கையில் புரிகிறது.

படத்தின் மூன்றாம் பிரச்னை, கார்த்தியை மீசையை மழிக்க வைத்தது. அட்லீஸ்ட் மீசையோடாவது கார்த்தி நடித்திருந்தால், இப்போது அவரது முகபாவங்களைக் கழுவி ஊற்றுபவர்கள் அமைதியாக இருந்திருக்கலாம். இனி மீசையை எடுத்துவிடவேண்டாம் என்றுதான் நம்மால் கோரிக்கை விடுக்கமுடியும் (இந்தப் பிரச்னை சூர்யாவுக்கு இல்லை என்பது கொஞ்சம் ஆசுவாச செய்தி).

ஒரே ஒரு பாடல் கூடப் பிடிக்காமல், திரையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த முதல் மணி ரத்னம் படம் இது. கூடவே, average காட்சிகளும் சேர்ந்துகொண்டு, மிக மிக அலுப்பான, அசுவாரஸ்யமான ஒரு உணர்வையே அளித்தன. ஒரு மணி நேர டெலிஃபிலிமைப்போய் இரண்டேகால் மணி நேரம் எடுத்து, நம் பொறுமையைச் சோதித்துவிட்டாரே இந்த மணி ரத்னம் என்ற ஆற்றாமையும் தோன்றியது (படத்தில் ஒருசில நல்ல காட்சிகள் உண்டு. அறிமுக மருத்துவமனைக் காட்சி, முதன்முறை வானில் பறப்பது,  பனிப்புயல் வருகையில் நாயகனும் நாயகியும் பேசிக்கொள்வது, க்ளைமேக்ஸின் வசனங்கள் என்று. ஆனால் படத்தின் நெகட்டிவ் அம்சங்கள் இவற்றையெல்லாம் மறைத்துவிட்டன).

மணி ரத்னம் எப்போதும் bounce back செய்யக்கூடிய ஆள்தான். கடல் முடிந்ததும் ஓ காதல் கண்மணியை எடுத்தார். எந்த ஆடியன்ஸுக்காக அதை எடுத்தாரோ, அவர்கள் அப்படத்தைக் கொண்டாடவே செய்தார்கள். அப்படி, அனேகமாக அடுத்த படத்தில் குறிப்பிட்ட ஆடியன்ஸை அவர் குறிவைக்க முயலலாம். பொறுத்துப் பார்க்கலாம்.

 

  Comments

1 Comment;

Join the conversation