Kabali (2016) – Tamil
கபாலியைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் எப்படிச் சொல்லலாம்? இது ஒரு outright கேங்க்ஸ்டர் படம் என்று அவசியம் சொல்ல முடியாது. இது ஒரு மெலோட்ராமா என்றும் சொல்லமுடியாது. ஆக்ஷன் படம் என்றோ, டாகு-ஃபிக்ஷன் என்றோ – எப்படியுமே இதைச் சொல்ல இயலாது. ஆக்ஷன், ட்ராமா, செண்டிமெண்ட்ஸ் என்று எல்லாமே இந்தப் படத்தில் உள்ளன. ஆனால் இவை அத்தனையும் சேர்ந்தபின்னர் கூட, ஒரு முழுமையான படமாகக் கபாலி தோன்றவில்லை. இது ஒரு குழப்பமான படமாகவே உள்ளது. குழப்பம் என்றால், படத்தைப் புரிந்துகொள்வதில் குழப்பமே இல்லை. என்ன சொல்கின்றனர் என்பது தெளிவாகவே புரிகிறது. ஆனால் அப்படிப் புரிவது, மிக மிக மிக மெதுவாக இருப்பதுதான் பிரச்னை. கூடவே, பல காட்சிகளில் நம்மால் உள்ளூறச் சென்று ரசிக்க இயலவில்லை. அழுத்தமான கதை இதில் இல்லை. அந்தக் கதையை, படம் பார்ப்பவர்களுக்கு விளக்கும் சுவாரஸ்யமான திரைக்கதை இதில் குறைவு. இவைதான் கபாலியின் பிரச்னைகள்.
விரிவாகக் கவனிக்கலாம். ஒருசில ஸ்பாய்லர்கள் இருக்கலாம். எனவே, படம் பார்க்காதவர்கள் (இதற்குள் கதை தெரிந்திருந்தாலும்), படிக்கவேண்டாம் என்று நினைத்தால் விலகிவிடலாம்.
கபாலியில் ஒருசில பின்னணிகள் சொல்லப்படுகின்றன. மலேஷியாவில் வாழும் தமிழர்கள் என்பது அவற்றில் முதன்மையானது. என்ன பிரச்னைகளைக் கபாலி முன்வைக்கிறது?
- மலேஷியத் தமிழ்த் தொழிலாளிகளின் நிலை. அங்கேயே இருக்கும் மலாய் மக்கள், சீனர்கள் ஆகியவர்களிடையே தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள்? அவர்களுக்கான பின்னணி என்ன? இது ஒன்று
- தலித்தாக இருக்கும் ஒரு தமிழன், பிற தமிழர்களின் முன்னிலையிலும், பிற நாட்டு மக்களின் முன்னிலையிலும் எப்படிக் கருதப்படுகிறான்? இது இரண்டு
- மலேஷியாவில், கேங்க்ஸ்டர்களோடு இருந்து, பின்னர் மனம் மாறித் திருந்தி, நல்ல வாழ்க்கை வாழ விரும்பும் தமிழர்களின் கதை. இது மூன்று
- முதல் மூன்று பிரச்னைகளோடு சம்மந்தப்பட்ட கபாலி என்ற மனிதனுக்குத் தனது மனைவியும் குழந்தையும் கிடைத்தார்களா இல்லையா? இது நான்கு
இந்த ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு, கபாலி திரைப்படம் இந்தப் பிரச்னைகளை எப்படிக் கையாள்கிறது என்று கவனிக்கலாம்.
முதலில், மலேஷியத் தமிழ்த் தொழிலாளர்களின் நிலை
இப்படத்தில், கபாலி என்ற மனிதன், தொழிலாளியாக இருந்து, மக்களுடைய பிரச்னைகளை அறிந்துகொண்டு, சீனத் தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் அதே சம்பளம் தங்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்று பிரச்னை செய்து வெல்கிறான். அந்தத் தொழிலாளிகளுக்கு மத்தியில் ஒரு குட்டித் தலைவனாக உருவெடுக்கிறான். இது படத்தில் வரும் கதை. இந்தக் கதையின் பிரச்னை என்னவென்றால், இது ஒரு தகவலாக மட்டுமே மாறிவிட்டது. அதாவது, ஒரு செய்தியாக. செய்திகளைப் படங்களில் அப்படியே காட்டினால் அவை சுவாரஸ்யமாக இருக்காதுதானே? கபாலி என்ற மனிதனின் பின்னணி என்ன? இதுபற்றி இந்தச் சம்பவம் வரும்வரை நமக்கு எதுவுமே தெரியாது. இந்தச் சம்பவம் சொல்லப்படும்போதுகூட, மிக மேலோட்டமாகவேதான் இது காட்டப்படுகிறது. ஒரு சிறிய உதாரணமாக, நாயகன் படத்தில், குப்பத்து மக்களைக் காலிசெய்துவிட்டுச் செல்லும்படி ஒரு சேட் அலட்சியமாகப் பேசுவார். அந்தக் குப்பத்து மக்களின் பிரதிநிதி என்று கருதப்படும் நபரோ, சேட்டிடம் பணம்வாங்கிவிட்டு, சேட்டுக்கு சாதகமாகவே பேசி, இவர்களைக் காலிசெய்யச்சொல்வார். அப்போது வெகுண்டெழும் வேலு, தனது நண்பர்கள் மற்றும் குப்பத்தில் வசிப்பவர்களை அழைத்துச்சென்று, சேட்டின் வீட்டை துவம்சம் செய்வான்.
நாயகன் படத்தில் இந்தச் சம்பவம் இப்போது பார்த்தாலும் அடிமனம் வரை சென்று தைக்கும் தன்மையுடையது. அந்தக் குப்பத்து மக்களின் பிரச்னையை உடனடியாக நம்மால் புரிந்துகொள்ளமுடிகிற காட்சி இது.
ஆனால், கபாலியில், கபாலி தனது சக தொழிலாளர்களுக்குச் சீனத் தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் அதே சம்பளம் வேண்டும் என்று வெள்ளைக்கார முதலாளியை டிமாண்ட் செய்யும்போது – போராடும்போது, நமக்கு எந்தவிதமான உணர்வுகளும் எழாமல், வெறுமனே ஏன் அமர்ந்திருக்கிறோம்? காரணம், இந்தக் காட்சிக்குப் பின்னணியில் எந்த உணர்வுகளும் இல்லாமல், இது ஒரு செய்தியாக மட்டுமே சொல்லப்படுகிறது என்பதே. இந்தக் காட்சி ஒரு ஃப்ளாஷ்பேக். எனவே இதைப் பெரிதாகக் காட்டமுடியாது. இருப்பினும்கூட, இப்படிப்பட்ட காட்சிகள் – ஒரு கதாபாத்திரத்தின் அடியாழமான உணர்வுகளை முதன்முதலில் விளக்கும் காட்சிகள், இவ்வளவு லேசான காட்சிகளாக வந்தால் அவசியம் பிரச்னைதான். கபாலி என்ற நபரின் முழுப்பின்னணியும் ஆடியன்ஸுக்குப் புரியும் முதல் காட்சி இது. ஆனால் அதற்கான முக்கியத்துவம் இல்லாமல், மிக மிக லேசான, ஆழமில்லாத காட்சியாக இது இருக்கிறது.
எனவே, மலேசியத் தமிழ்த் தொழிலாளிகளின் நிலையும் நமக்கு விளங்காமல், செய்தியாகவே நின்றுவிட்டது. வெறும் வசனங்களில் ஓரிரு இடங்களில் மட்டும்தான் இது சொல்லப்படுகிறது. மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்த கபாலி என்னும் ஒரு டான், அவனது வாழ்நாள் முழுதும் அவனது இனத்துக்காகப் போராடும் ஒரு பிரச்னை, ஏன் இப்படி எந்தவிதமான முக்கியத்துவமும் இல்லாமல் வருகிறது? இப்படி வருவதால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லைதானே? தமிழர்களுக்குப் பிரச்னை, பிரச்னை என்று சொல்லிக்கொண்டே இருந்தால் எப்படி? அதைக் காட்டவேண்டும் அல்லவா? இல்லையெனில் பிரச்னையின் வீரியம் எப்படி நமக்குப் புரியும்?
கபாலியின் பின்னணி
சரி. கபாலியின் பின்னணி என்ன? அவன் எப்படி வளர்ந்தான்? அவன் என்ன படித்தான் என்பது கூட நமக்குச் சொல்லப்படுவதில்லை. ‘படித்தான்’, ‘படித்தவன்’ என்றுமட்டுமே நாம் அறிகிறோம். அவனது பூர்வீகம் பற்றி ஒரே ஒரு வசனம் மட்டுமே வருகிறது. இதைத்தவிர, கபாலியின் பின்னணி பற்றிப் படம் முடியும்வரை நமக்கு எதுவுமே தெரியாது. கபாலியாக ரஜினிகாந்த் நடிப்பதாலேயே அந்தக் கதாபாத்திரத்துக்குக் கனம் ஏறிவிடுமா? முடிந்தவரை அந்தக் கதாபாத்திரத்தின் மீதான பிடிப்பை ஆடியன்ஸூக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்தானே? அது கபாலியில் இல்லை என்றே தோன்றியது. எனவே கபாலியுடன் என்னால் ஒன்ற முடியவில்லை. இடைவேளைக்குப் பிறகுதான் கபாலியின் மீது ஒரு பிடிப்பு எனக்கு வந்தது. ஏனெனில் கபாலியின் உணர்வுபூர்வமான பக்கம் அங்கே கிடைத்தது.
இதில் ரஜினி நடிக்காமல் கபாலியாக வேறு யாராவது நடித்திருந்தால் உங்களுக்கு எப்படித் தோன்றியிருக்கும் என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். அப்போதுதான் நான் சொல்லவரும் கருத்து புரியும். கேங்க்ஸ்டராகச் சொல்லப்படும் ஒரு கதாபாத்திரம் மீது பிடிப்பு வரவேண்டும் என்ற விஷயத்துக்கு, ரஜினி நடித்த தளபதியே சிறந்த உதாரணம். அந்தக் கதாபாத்திரம் எத்தனை தெளிவாக எழுதப்பட்டிருந்தது என்று யோசித்துப் பார்க்கலாம். முதல் காட்சியில் இருந்தே சூர்யாவுடன் எப்படி நம்மால் ஒன்றமுடிந்தது? அப்படிக் கபாலியுடன் நாம் ஒன்றினோமா என்பதை இதைப் படிக்கும் நண்பர்கள் யோசித்துப் பார்க்கவேண்டும் (இன்னொரு உதாரணமாக, சித்தார்த் அபிமன்யுவை நமக்கு ஏன் பிடித்தது? அரவிந்த்ஸ்வாமி நடித்ததாலா? அல்லது அந்தக் கதாபாத்திரத்தின் பின்னணி மிகத் தெளிவாக எழுதப்பட்டதாலா?)
தலித் தமிழன்
அடுத்ததாக, ஒரு தலித் தமிழனின் நிலை. இதுவுமே வில்லன்கள் கபாலியிடம் ஆவேசமாகப் பேசும் வசனங்களில் (நீயெல்லாம் பொறந்திருக்கவே கூடாது, நீ என் நாயா இருக்கணும் etc…) மட்டுமே சொல்லப்படுகிறது. மலேசியாவில் தமிழர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதே காட்டப்படாதபோது, அங்கே ஒரு தலித்தின் நிலை மட்டும் நமக்கு எப்படித் தெரியும்? எனவே, கபாலி எந்த சாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலுமே நமக்கு உள்மனதில் எந்தவித மாற்றமும் உண்டாகப்போவதில்லை என்பது புரிகிறது. கபாலி தலித்தாகக் காட்டப்படவேண்டும் என்றால் அதன் முக்கியத்துவம் என்ன? ’கஜினி’ படத்தில் சஞ்சய் ராமசாமி இடதுகைப்பழக்கம் உடையவராகக் காட்டப்படுவார். ஆனால் அந்தப் பழக்கத்தால் அந்தப் படத்தில் எந்தவித உபயோகமும் இருக்காது. ஜஸ்ட் லைக் தட் ஒரு வித்தியாசமான வழக்கம் என்பதே சஞ்சய் ராமசாமி ஒரு லெஃப்டீ என்பதற்குக் காரணமாக இருந்தது. இப்படித்தான் கபாலியின் சாதிப் பின்னணியும் எனக்குப் பட்டது. ஏனெனில், அதில் வலு இல்லையே?
‘அட்டக்கத்தி’ மற்றும் ‘மெட்ராஸ்’ படங்களில், கதாநாயகர்களின் சாதி ஒரு முக்கியமான இடத்தை வகித்தது. அந்த இரண்டு படங்களிலும் அது அவசியம் தேவை. ஹௌஸிங் போர்ட்களில் வசிக்கும் மக்களின் நிலை, அவர்களின் ஆசாபாசங்கள், பின்னணிகள் ஆகியவை அட்டகாசமாக சொல்லப்பட்ட படங்கள் அவை. ஆனால் கபாலியில் தலித்களைப் பற்றி மிகச்சில வசனங்கள் தவிர வேறு எதுவுமே இல்லையே? ரஞ்சித்தின் forte என்பது முதலிரண்டு படங்களில் இருந்த இயல்புத்தன்மை. குறிப்பாக நாயகர்களின் தலித் பின்னணி – அதன் முக்கியத்துவம் என்பது. கபாலியில், நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல், எப்படி நாயகனின் கேங்க்ஸ்டர் பின்னணி சொல்லப்படவில்லையோ அப்படி அவனது சாதியப் பின்னணி பற்றியும் எந்த மென்ஷனும் பெரிதாக இல்லை என்றபோது, தலித்தியம் சார்ந்து வைக்கப்பட்டுள்ள வசனங்கள் செயற்கையாகத்தான் தோன்றின. சம்மந்தமே இல்லாமல், ‘நீ என்ன ஆண்ட பரம்பரையாடா?’ என்று வீரசேகரன் கபாலியைப் பார்த்துக் கேட்கும் வசனம் சமகாலத்தில் கட்டாயம் முக்கியமான ஒன்றுதான். ஆனால், மலேசிய கேங்க்ஸ்டர் ஒருவரைப் பார்த்து இப்படிக் கேட்பதற்கான முக்கியத்துவம், நாயகனின் பின்னணியை உணர்வுபூர்வமாக ஆடியன்ஸின் மனதில் நுழைத்திருந்தால் எடுபட்டிருக்கும். அப்படி நடக்கவில்லை என்பதால் இதுபோன்ற வசனங்கள் எல்லாமே இந்தப் படத்தில் வேண்டுமென்றே நுழைக்கப்பட்டவையாகவே தோன்றின.
அடுத்ததாக, கபாலி படத்தில் Free Life Foundation என்ற ஒரு அமைப்பு வருகிறது. அடிதடிகளிலும், போதைமருந்துக் கடத்தலிலும் – சுருக்கமாக அடியாட்களாக இருந்து வெளியேறும் தமிழர்களுக்கு நல்வாழ்க்கை அமைத்துத் தரும் அமைப்பாக இது அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பின் முக்கியத்துவம் என்ன? உண்மையில் இந்த அமைப்பு டீல் செய்யும் cause மலேஷியாவில் மிக முக்கியமான ஒன்று. அங்கே இப்படி வெளியேறும் நபர்கள் பலர். அவர்கள் ஒவ்வொருவரின் பின்னணியும் மிகவும் கொடுமையானது. அந்தப் பின்னணி, டைகர் மற்றும் மீனாவின் பின்னணியாகப் படத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் அதுவுமே சர்ரென்று கடந்துபோய்விடுகிறது. இந்த ஃபௌண்டேஷன் தவிர, கபாலி என்னும் கேங்க்ஸ்டர் செய்யும் தொழில் என்ன? அவனுக்கு எப்படிப் பணம் வருகிறது? கபாலி இத்தனை பேரை மெயிண்டெய்ன் செய்வதற்கான source of income என்ன? கபாலி நல்ல தாதா என்றும், போதை மருந்து உள்ளே வரக்கூடாது என்றும் உறுதியாக இருக்கும் ஆள். அப்படியென்றால் extortion, ஆயுதக் கடத்தல், தீவிரவாதம் – என்னதான் மெயின் தொழிலாகக் கபாலி செய்கிறார்? இதுவும் படத்தில் எங்கேயும் காணோம். அப்படி தாதா தொழில் செய்தால், அவர் ஒருவித ஆண்ட்டி ஹீரோதானே? ஏன் காந்தி போலவே ஒரு இமேஜ் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது?
தமிழ்நேசன் & கபாலி
’தமிழ்நேசன்’ என்ற தலைவரைப் பற்றிய கதை, ஃப்ளாஷ்பேக்கில் வருகிறது. அவர்தான் கபாலியின் குருநாதர். ஆதர்சத் தலைவர். இவருமே ஒரு கேங்ஸ்டர் தான் என்பது புரிகிறது. ஆனால் முற்றிலும் நல்லவனாக எந்த கேங்க்ஸ்டர் இருக்கமுடியும்? அப்படி நல்லவனாகவே இருந்தால் அவன் கேங்க்ஸ்டரா? தமிழ்நேசனுமே என்ன செய்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. இப்படி, ஹீரோவின் பின்னணி எந்த வகையிலும் படத்தில் இல்லவே இல்லை. படம் முழுக்கக் கபாலி நல்லவர், நல்லவர் என்றே சொல்லிக்கொண்டிருப்பதால், நல்லவனுக்கு கேங்க்ஸ்டரா என்ன வேலை? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை (மறுபடியும் தளபதி/நாயகன் உதாரணங்களுக்கு மன்னிக்க. நாயகனில் வேலு போதை மருந்தே கடத்துவான். அவன் என்ன செய்கிறான் என்பது தெளிவாக இருக்கும். தளபதியில், சூர்யா தேவாவுக்கு வலதுகரமாக செய்யும் வேலைகள் தெளிவாக இருக்கும். இந்த இரண்டுமே நெகட்டிவ் ஷேட்கள் உள்ள கதாபாத்திரங்களே. முற்றிலும் நல்லவர்கள் இல்லை).
தமிழர்களுக்காகப் போராடுபவர்தான் தமிழ்நேசன் என்பதுமட்டுமே நமக்கு சொல்லப்படுகிறது. வேலு நாயக்கர் போல. அதுதவிர வேறு எந்தவிதமான தகவல்களும் தமிழ்நேசன்/கபாலி கேங் பற்றி நமக்குக் கடைசிவரை தெரிவதில்லை. அதிலும், தமிழ்நேசனாக நடித்திருக்கும் நாஸர், இருவரில் அவர் செய்த அய்யா வேலுத்தம்பி கதாபாத்திரத்தையே தூசுதட்டி நடித்திருக்கிறார் போலும். அவ்வப்போது ‘நீ வரணும் தம்பி’, ‘போராடுவோம்’ என்பதைமட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறார். ஒரிரண்டு காட்சிகளில் எல்லாம் இத்தனை பிரம்மாண்டமான ஒரு போராட்டத்தையும், இனத்தையும், அவர்களுடன் கைகோர்த்து நிற்கும் தலைவர்களையும் அவ்வளவு எளிதில் உணர்வுபூர்வமாக ஆடியன்ஸின் மனதில் ஏற்றிவிட இயலாது. அதற்குச் சற்று நேரம் தேவைப்படும். அப்படி இல்லாமல், இவை எல்லாமே தடதடவென்று வந்துபோய்விடுவதால், மனதில் எந்தவித மாற்றத்தையும் impactஐயும் இவை ஏற்படுத்தத் தவறுகின்றன. எனவே, இவை வெறும் செய்திகளாக மட்டுமே மாறிவிடுகின்றன.
உண்மையில் கபாலி என்ற படத்துக்கு முதுகெலும்பாக விளங்கவேண்டிய இந்தப் பிரம்மாண்டமான, முக்கியமான பின்னணிகள், வெறும் செய்திகளாகவே படம் முழுக்க வருவதால், கபாலி என்ற மனிதனுக்கும், அவன் முன்னிறுத்தும் causeக்கும் எந்தவிதமான நன்மையும் இவை செய்யவில்லை. அதனால்தான் இந்தப் படத்தில் கபாலி என்னும் கதாபாத்திரம் நமது மனதில் நிற்கத் தவறுகிறது (’ரஜினி’ என்று மட்டும் பார்க்கவேண்டாம். இந்தக் கதாபாத்திரம், கதை என்ற ரீதியில் யோசித்துப் பாருங்கள்).
கபாலி செய்வது என்ன?
அடுத்ததாக, கபாலி இந்தப் படத்தில் என்ன செய்கிறார் என்று கவனித்தால், ஜெயிலிலிருந்து வருகிறார். தனது சகாக்களிடம் பேசுகிறார். உடனடியாக எதிர் கேங்கில் ஒரு முக்கியமான மனிதன் இருக்கும் இடத்துக்குச் செல்கிறார். அவனை அடி பின்னியெடுத்து, ‘டோனி லீயும் வீரசேகரனும் என் முன்னால வந்தாகணும்’ என்கிறார். இதுவரை படம் எவ்வளவு வேகமாக இருந்தது? யாராக இருந்தாலும், இந்தக் காட்சி வரை ‘அட்டகாசம்.. செம்ம படமா இருக்கப்போவுது’ என்றுதான் நினைத்திருப்பார்கள். ஆனால் இதன்பின் என்ன ஆகிறது? ஒரு நீளமான ஃப்ளாஷ்பேக். கபாலி ஜெயிலிலிருந்து வந்த ஆரம்பக் காட்சிகளின் வேகம் அப்படியே மட்டுப்பட்டு, நெருப்பு போலப் பற்றிக்கொண்டிருக்கவேண்டிய காட்சிகள் மிக மிக மிக மெதுவாகப் பல நிமிடங்கள் ஓடுகின்றன. இடையில் ஒரே ஒரு ஆளின்மீது காரை ஏற்றிக் கொல்கிறார். அங்கே அவரது மனைவியைக் கொன்ற வேலு என்பவன் பற்றித் தெரிகிறது. அவ்வளவே.
இதன்பின், மலேஷியாவிலேயே பிரம்மாண்டமான கேங், கபாலியைக் கொல்ல என்ன ப்ளான் போடுகிறது என்று யோசித்தால்….யாரோ யோகி என்ற பெண்ணைக் கூப்பிட்டு, அவளிடம் அசைன்மெண்ட் கொடுக்கின்றனர். இந்த யோகி யார் என்றும் நமக்கு சொல்லப்படுவதில்லை. ஒரு பெண் கதாபாத்திரம். அவ்வளவே. ஏன்? கபாலியின் மகளாக வரும் கதாபாத்திரம் உயிரோடு இருக்கவேண்டும். எனவே யோகியை உருவாக்கியாகிவிட்டது. இப்படித்தான் எனக்குத் தோன்றியது. இப்படி திடீர் திடீரென உருவாகும் கதாபாத்திரங்கள் இப்படத்தில் மிக அதிகம். இத்தனை கதாபாத்திரங்களுக்கான தேவை எதுவுமே இல்லை என்பதே பிரச்னை. இதில் திடீரென்று குமரன் என்ற கதாபாத்திரம் வேறு உள்ளேயும் இல்லாமல் வெளியேயும் இல்லாமல் கதையை இழு…க்கிறது.
மலேஷியாவின் பிரபல கேங்கே பயந்துகொள்ளும் தாதா கபாலி. ஆனால் அவரது வாழ்க்கை தாதா வாழ்க்கையாகவா இருக்கிறது? யார் வேண்டுமானாலும் கபாலியின் வீட்டுக்குள் நுழைந்து அவரை சுட்டுவிடலாம் என்பதைப்போலத்தானே உள்ளது? அவரைச் சுற்றியிருக்கும் ஆட்களும் ஜான் விஜய், கலையரசன் போன்ற ’சாதா’ ஆட்கள்தானே? (அந்த வகையில் ஒரு சமாதானம், நாயகன் & தளபதியிலும் இதேபோன்ற சா(சோ)தா ஆட்கள்தான் வேலுவையும் தேவாவையும் சுற்றி இருப்பார்கள்).
படத்தின் இடைவேளை block சற்றே வித்தியாசமானதே. ஆனால், ரஜினியை ஹீரோவாகப் போட்டுவிட்டு, இடைவேளையில் ஐந்து குண்டுகளை அவரது உடலில் பாய்ச்சிவிட்டு, இடைவேளை முடிந்து ஒரு சில காட்சிகளில், சில நாட்கள் கழித்து ஜாலியாக அவரை உயிரோடு கொண்டுவருவதில் என்ன விறுவிறுப்பு உள்ளது என்பது புரியவில்லை. ‘சிவாஜி’ படத்தில் இப்படி சிவாஜியை fakeஆகக் கொன்றுவிடுவார்கள். ஆனால் உள்ளே வருவது எம்.ஜி.ஆர். அந்தக் காட்சிகள் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தன. என்ன சொல்ல வருகிறேன் என்றால், ரஜினியைச் சுடுவது, எந்தப் பிரயத்தனமும் இல்லாமல் ஜாலியாக அவர் மீண்டு வருவது ஆகிய காட்சிகள் மிகவும் சாதாரணமாகவே இருந்தன.
கபாலியின் ப்ளஸ் பாயிண்ட்
படத்தின் ஒரே ப்ளஸ்- இதன்பின் வரும் காட்சிகள். தனது மனைவிக்காகக் கபாலி வெளிப்படுத்தும் உணர்வுகள், அவளைத் தேடிச் செல்வது, அவளைக் கண்டுபிடிப்பது, அதன்பின் இருவருக்கும் இடையே நிகழும் உணர்ச்சிபூர்வமான அன்புப் பரிமாற்றம் ஆகியவை. இந்தக் காட்சிகள் கட்டாயம் அனைவருக்கும் பிடிக்கும். காரணம் இவற்றில் இருந்த உணர்ச்சிகள். ஒட்டுமொத்தப் படத்திலேயே ஆடியன்ஸின் மனதைத் தொடும் உணர்வுகள் இந்த காட்சிகளில் மட்டுமே உண்டு. ’சொல்லவருவது ஆக்ஷன் கதை இல்லை’ என்ற முடிவை எடுத்தபின், படத்தின் பெரும்பகுதி இத்தகைய உணர்வுகளில் பயணித்திருந்தால் அவசியம் கபாலி அனைவராலும் கொண்டாடப்பட்டு, தளபதிக்கு அடுத்து ரஜினியின் பெயர் சொல்லும் படமாக மாறி, ஒரு cult classicஆக மாறியிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இந்தக் காட்சிகளில் ரஜினி & ராதிகா ஆப்தே ஆகிய இருவரும் பிரமாதமாக நடித்திருக்கின்றனர். நமக்குமே, பல்லாண்டு காலம் கழித்து ரஜினி இயல்பாக நடிப்பதை முதன்முறையாகப் பார்ப்பதால் இக்காட்சிகள் மனதை உருக்குகின்றன (பல்லாண்டு காலம் கழித்து என்று சொல்கையில், வீட்டை விட்டு, சொத்துகளை எல்லாம் இழந்து மழையில் அழுதுகொண்டே ரஜினி போவது போன்ற ‘செண்ட்டிமெண்ட்’ காட்சிகளை நான் சொல்லவில்லை). ரஜினியை இப்படி நடிக்க வைத்தமைக்காக அவசியம் ரஞ்சித்தைப் பாராட்டியே ஆகவேண்டும்.
படத்தின் இன்னொரு பலவீனம் – க்ளைமேக்ஸுக்குப் பின்னர், கபாலி சந்தோஷமாக இருக்கையில் வரும் சம்பவம். இந்தச் சம்பவத்தால் என்ன சொல்லவருகிறார் ரஞ்சித் என்று தெரியவில்லை. அந்தச் சம்பவத்துக்குக் காரணம், மிகக் கனமான பின்னணியெல்லாம் கூட இல்லை. ஜஸ்ட், டைகர் ஜெயிலில் இருக்கிறான்.. வெளியே வரவேண்டும் என்றால் அவன் ஒரு அசைன்மெண்ட் செய்யவேண்டும். அவ்வளவுதான். ஏன் இந்தக் காட்சி? அதைக் காட்டியதிலாவது நேர்மையாக என்ன நடந்தது என்று சொல்லவேண்டாமா? ஏன் இந்த ஒளிவுமறைவு? இதனால் ரஞ்சித் சொல்லவருவது என்ன? ஒன்றும் புரியவில்லை. கட்டாயம் இந்தக் காட்சி, நம்மை முகத்தை சுளிக்க வைக்கிறது.
யாரைப் பாராட்டுவது?
’படத்தில் ரஜினி நடித்திருக்கிறார்’, ‘இது ரஞ்சித் படம்’ போன்ற விஷயங்களுக்கு மட்டுமே, இத்தனை பிரச்னைகளை எளிதில் ஒதுக்கிவிட்டுப் படத்தை எப்படிப் பாராட்டுவது என்று இதைப்படிக்கும் நண்பர்களே சொல்லலாம். ரஜினி இதில் இதற்கு முந்தைய பல படங்களைவிடவும் நன்றாகவே நடித்திருக்கிறார் என்பது சந்தேகமில்லாத உண்மைதான். ஆனால் அதற்காக மட்டும் எப்படி ஒட்டுமொத்தப் படத்தையும் பாராட்டுவது? அந்தந்தப் பகுதிகளை வேண்டுமானால் பாராட்டலாம். பாராட்டிவிட்டேன். ’தங்களது அபிமான நடிகர்’ என்று மட்டும் யோசிக்காமல், அதிலிருந்து வெளியே வந்து, ஒரு திரைப்படம் என்ற முறையில் இந்தக் கருத்துகளைப் பற்றி நண்பர்கள் யோசித்துப் பார்க்கவேண்டும்.
படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, படம் வெளியாகும் வரை, போஸ்டர்கள், பேட்டிகள், டீஸர், பாடல்கள் என்று எல்லா டிபார்ட்மெண்ட்களிலும் சொல்லி அடித்த படம் இது. இவை எதிலுமே எந்தவிதமான குறையும் இல்லாமல் (குறிப்பாகப் போஸ்டர்கள். ரஜினியை இப்படி இதுவரை எந்தப் படத்திலும் யாரும் காட்டியதில்லை. வின்சி ராஜ் அவசியம் பலத்த பாராட்டுக்குரியவரே. அதேபோல் சந்தோஷ் நாராயணன். படத்தில் ரஜினிக்கு அவர் உபயோகப்படுத்தியிருக்கும் விசில் தீம், என்னியோ மாரிகோனியின் ரசிகனாக எனக்கு மிகவும் பிடித்தது. பாடல்களும் பிரமாதம். பின்னணி இசையை நண்பர்கள் கவனித்துப் பாருங்கள். ஆங்காங்கே மௌனங்கள் நிரம்பிய நல்ல இசை) அட்டகாசமாகப் பின்னியெடுத்த படம் இது. பொதுவாக எனக்கு எந்தப் படம் பார்க்கும்போதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செல்வதே வழக்கம். எனவே, ரஜினி என்ற எக்ஸைட்மெண்ட் என்னைப் பாதிக்கவில்லை. இருப்பினும், ரஞ்சித் போன்ற மிகத்திறமையான இயக்குநர் ஒருவர் ரஜினி படத்தைக் கையில் எடுத்திருப்பது எனக்கு சற்றே நம்பிக்கை அளித்தது. அது ஒன்றே ஒன்றுதான் நான் இரண்டாம் நாளே காலையிலேயே இப்படம் பார்த்ததற்குக் காரணம்.
ரஜினிக்கு என்ன கதை சொல்லலாம்?
ரஜினி என்ற நடிகருக்கு எந்த விதமான கதையைச் சொல்வது என்ற குழப்பம் இன்றும் நம்மிடையே இருக்கிறது. தனது வழக்கமான டெம்ப்ளேட்டை லிங்கா படத்துக்குப் பின் உதறிவிட்டு, வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் கபாலியில் ஒரு இளம் இயக்குநரின் கையில் தன்னை அவர் ஒப்படைத்திருப்பது அவசியம் உண்மைதான். ஆனால் அதற்காக மட்டும், கபாலியை மிகச்சிறந்த படம் என்று எப்படிச் சொல்வது? அப்படி வரும் படம், சுவாரஸ்யமாக இருந்தால்தானே அப்படிச் சொல்லமுடியும்? படத்தில் ஒருசில வசனங்கள் நன்றாக உள்ளன (பறவை.. காந்தி & அம்பேத்கர்.. நமக்குள்ள ஒற்றுமை மட்டும்? Etc..). அதற்காகவும், ஒட்டுமொத்தப் படத்தையும் எப்படிப் பாராட்ட இயலும்? அவைகளை மட்டும் பாராட்டலாம். தப்பே இல்லை.
ஆடியன்ஸின் மனதில் நிற்காத ஏராளமான கதாபாத்திரங்கள்; அவற்றுக்காக உருவாக்கப்பட்ட சுவாரஸ்யம் இல்லாத கதைகள், இவற்றையெல்லாம் கலந்து உருவாக்கப்பட்ட திரைக்கதை; இடையே ஒருசில நல்ல காட்சிகள் – இவற்றின் கலவைதான் கபாலி. என்னைப்பொறுத்தவரை.
ரஞ்சித் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களில் ஒருவர். ‘அட்டக்கத்தி’ மற்றும் ‘மெட்ராஸ்’ படங்களில் அவர் கையாண்ட களங்களை இதுவரை யாரும் தொட்டதில்லை. அப்படியே கபாலியிலும் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை உணர்வுகள் நிறைந்த ஒரு கதையையும் திரைக்கதையையும் இப்படத்தில் அவர் கொண்டுவந்திருப்பாரானால், கபாலி அவசியம் மக்களால் மறக்க இயலாத ஒரு காவியமாக உருவாகியிருக்கும். ஆனால், ஆரம்பத்தில் சொல்லியதுபோல, இது எந்த வகையான படம் என்றே புரியாத குழப்பம் படம் நெடுகிலும் தெளிவாகத் தெரிகிறது. எப்படியும் அடுத்து வரவிருக்கும் எந்திரன் 2, ரஜினியின் டிபிகல் சூப்பர்ஹீரோ படமாகவே இருக்கும் வாய்ப்பு மிக அதிகம் என்பதால், அடுத்து எப்போதுதான் வயதுக்கேற்ற, அருமையான, உணர்வுபூர்வமான கதை ஒன்றில் ரஜினி இனி நடிப்பார் என்ற ஆதங்கம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. அமிதாப் எப்போதோ செய்ய ஆரம்பித்து இப்போது பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் ஒரு ஸ்பேஸ் அது.
லிங்கா வந்த சமயத்தில் ரஜினி பற்றிய விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையைக் கீழே காணலாம். அதில் அமிதாப் & ரஜினி பற்றிய மிக விரிவான ஒரு ஒப்பிடல் உண்டு.
ரஞ்சித்தின் அடுத்த படத்துக்காக அவசியம் காத்திருக்கிறேன். ரஜினி என்ற நல்ல நடிகரை இக்காலத் தலைமுறை பார்த்ததே இல்லை. அவர்களுக்கு அந்த வாய்ப்பு ஒருவேளை கிட்டலாம் என்ற லேசான ஆசையில், எந்திரன் 2வுக்குப் பிறகான ரஜினியின் அடுத்த படத்துக்கும்.
பி.கு
ஜாஸ் சினிமாஸ் கபாலியை வாங்கியபின், இப்படத்தின் டிக்கெட் விற்பனையில் இதுவரை தமிழகம் காணாத அளவு ஆயிரக்கணக்கில் விலை வைத்து விற்கப்பட்டது. ரஜினியின் உண்மையான எளிய ரசிகர்களே அவரது பலம். அவர்களில் பலர் படம் பார்க்கமுடியாமல் நொந்துகொண்டதும் நிதர்சனம். வெளிநாடுகளிலும் – குறிப்பாக யுனைடட் ஸ்டேட்ஸில் கிட்டத்தட்ட 25-30 டாலர் விலை ! கபாலியை முன்வைத்து, தயாரிப்பாளர் தாணு ஆடிய இந்த மிகப்பெரும் வியாபார ஆட்டம் அவசியம் ரசிகர்கள் பலரையும் நோகடித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. இது வன்மையாகக் கண்டிக்கப்படக்கூடியதே. ஒருவேளை கபாலி வசூல் பாதித்தால் அதற்கு இதுதான் பிரதான காரணமாக உணரப்படும்.
I feel this movie is good and superstar has played his role well according to his age.Appreciate Rajini’s dare decision in taking up this role and acting.He has set a trend in cinema for youngsters.
Kabali ending – the same indian cop who was helping kabali throughout the movie, arranges for Tiger to execute kabali. That is how the cops deal with gangs. Which refers back to “we will deal with him our way” (as said by the top cop in the opening scene). Basically no one ultimate power should remain, and the cops still are the ultimate powers.
Kabali ending in Malaysia – shows a screen note that kabali surrenders to the police. This is the cops and censorship at its best showing what they want you to see. Sure do a movie about the gangs but remember the cops are in control at the end of the day. Which is actually the truth.
மிக மிக அருமையானதொரு விமர்சனம்….
கபாலி யார சுட்டாலும் அடுத்த நாள் டிவில போலீஸ் துப்பாக்கிசூடுன்னு போட்றாங்க,வீரசேகரன் மட்டும் பூஜை சீன்ல ஒரு டயலொக் சொல்லறாரு.
Pet shopல சீனு கிட்ட அந்த நம்பியார் வசனம் தேவையேயில்ல ஏதோ ஒரு சிங்கம் போய் எலி கிட்ட டேய் நா கபாலிடா நெருப்புடா னு தம்பட்டம் அடிக்கறமாறி இருக்கு எப்பவும் ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்துக்கிட்டாதான் சண்டைக்கு போகும் மத்த பிராணிகள வேட்டையாடும்.
அப்பறம் வீரசேகரன்:டோனி நாட்டுல இல்ல வந்ததும் பாத்துக்கலாம் னு சொல்றான் நானும் டோனி வந்தா வீரசேகரனுக்கு இன்னும் வெய்ட்டு இருக்குடோய்னு பாத்தா பூஸ்ஸ்
சரிபோ டோனியாவது ரண கொடூரமா இருப்பான்னு பாத்தா ரங்கீலா ஹோட்டல் சர்வர் மாதிரி இருக்கான்.
சரி தன் மனைவியை தேடி பாண்டிசேரி வந்தா அங்க ஒரு செக்யுரிட்டி அதெல்லாம் உள்ளவிட முடியாதுங்கறான் இதுக்கு ஒருநாள் வைட்டிங்கு(டேய் நா கபாலிடா காங்ஸ்டர்டா மலேசியாவுக்கே நான்தான்டா)
இன்னும் இருக்கு போதும் பாஸ
ராஜேஷ், நலமா ? We have interacted sometime back, shortly after Endiran, over Emails. எனக்கு நீங்கள் லிங்கா மற்றும் கோச்சடையான் விமர்ச்சனங்கள் ஞாபகம் இல்லை. ஏனென்றால் எங்களுடைய gang அந்தப்படங்களுக்கு ஒன்றாக செல்லவில்லை. படங்களுடைய result என்னாயிற்று என்று நான் சொல்ல தேவையில்லை. ஆனால் கபாலி ஏற்கனவே 2 முறை பார்த்தாகி விட்டது. ஒரு முறை 25 பேர். இன்னொரு முறை 16 பேர். Mantri மால் screen 6. அட்டகாசமான சௌண்ட் effect . இன்று மீண்டும் ஒருமுறை லிடோ -ல் புக் செய்திருக்கிறோம். ரஜினி எங்களை எல்லா ம் சேர்ந்து கொண்டாட வைக்கும் ஒரு சக்தி. ஒரு ultimate மாஸ். அண்ணாமலை or பாட்சா . நான் அண்ணாமலை. Chantramuki or சிவாஜி . நான் Chantramuki . உங்கள் விமர்சனம் எனக்கு உங்கள் பார்வை மட்டும் தான் . எனக்கு இந்த படத்துல ஒரு 25 காட்சிகள் ரொம்ப பிடிச்சிருக்கு . ஒரு ரஜினி படம் பொறுமையாக அவருடைய ஆக்ட்டிங் ஸ்கில் -ஆல் move ஆகிறது ரொம்ப பிடிச்சிருக்கு . Unlike 3 நிமிடம் சிங்கள் ஷாட் in அண்ணாமலை “மலடா … அண்ணாமலை ” டு அசோக். நீங்கள் சொன்னது போலே கேரக்டர் எஸ்டாபிளிஷ் ஒரு shortcome . ஆனால் அதற்காகவெல்லாம் இது நல்ல படம் இல்லை என்று ஒதுக்கி விட முடியாது. இங்கே அவர் ஒவொரு முறை மகிழ்ச்சி என்று சொல்லி விட்டு ஒரு gesture குடுக்கும் போதும் ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும் சப்-title -ஐ கவனிப்பேன். எனக்கு புரிவதும் அதேதான். எனக்கு தெரிந்ததெல்லாம் 2 ட்ராக். ஒன்று வில்லன்களை எதிர்ப்பது. இரண்டு தன் உள்ளணர்வுக்கு மதிப்பளித்து அகைன்ச்ட் ஆல் odds மனைவி மற்றும் மகளை தேடுவது. இது ஒரு crime /லவ் திரில்லர். ரஞ்சித் oda அரசியல் ( நான் தலித்தியதை சொல்ல வில்லை. அவர் தான் தன் எதிரிகளுக்கு சொல்லவந்ததை ரஜினி மூலமாக சொல்வதும் (அதாவது 3 வது படமே ரஜினி படமா இவன்னுக்கு )) மற்றும் கடைசி 5 நிமிடம் ஒட்டவில்லை. மற்றபடி நீங்கள் சந்தோஷ் நாராயணை பற்றி இன்னும் அதிகமாக எழுதுவீர்கள் என்று பார்த்தேன். அவருடைய மாய நதி அப்படியே உருக்குகிறது. நெருப்புடா BGM தெறிக்குது.
உனக்கே இது ஓவரா தெரியலயப்பா.. நீ முதல்ல கடைசியாக பார்த்த நல்ல படம் 5 சொல்லு பார்ப்பம்.. எத்தனை பேர்டா இப்படி கிளம்ப்பிருக்கீங்கள்.. ரசனி்என்ன interstellar படமா நடித்திருக்கார்.. தேவையில்லாத வேலைய விட்டுட்டு உங்க ஊர்ல எத்தனையோ ஏரிகள் மூடப்பட்டு கிடக்கு அவற்றையெல்லாம் பியுஸ் மனுஸ் ஸோடு சேர்ந்து தூர் வாரு. போ ஓடு..
super review sir 🙂 ranjithaaa pathi innum solirukalam.
Very good review….today only in office i shared my thoughts between God father (1972)…and Kabali… especially a hospital scene….
“Michael and Enzo then wait on the steps of the hospital. Because of their menacing appearance, when a car stops, the thugs inside see what they think are Don Vito’s guards and drive off.”
compared with pondicherry scenes….kabali…. ha…ha… good fun….
கபாலி படக்கதை எனக்கு Django Unchained படக்கதை யை நினைவு படுத்தியது. அடிமை நீக்ரோக்கள்-மலேசிய தமிழர்கள் , மனைவியை தேடும் கணவன் , அந்த climax gun fight என சில ஒற்றுமைகள்.
Enakkum thaanungo.
Yes it is django… even get up is of dr king Schultz. But starting portion characters are from gran torino. clints finger gun style in intro. Rithika is the neighbor girl and dinesh the neighbor boy. His mother asks kabali to take with him like gran torino. Kalaiarsan is the pastor character
KABALI REVIEW :
An argument between Pa. Ranjith (as Representative of Tamilians) and Rajini (as Shivaji Rao, who struggled to become a star (super star))
And some other elements to make a story (May be)
1) Attakathi Dinesh ( as a senseless Rajini fan )
– We do laugh due to his activity
– He ran behind Rajini’s car like a dog
– He cuts through the crowd ( actually 10 people ) for Rajini
– He is chasing the people who troubled Rajini, and get into trouble himself
– His hands were cut off (DIRECTOR’S JUSTICE)
2) At the end, Rajini is happy with his family, the people’s who helped him ALL are dead
3) At the terrace, someone’s 100th birthday celebration meeting
KISHORE’S (43 gang – TAMIL FILM INDUSTRY) dialogue something like this——–
“Tamilnadu la irunthu POLAIKKA vantha kasu pathutu poga vendiyathana da…. Inge irunthu engaluke THALAIVAN aagalam nu pakuriya…”
4) Rajini’s counter—–
“Naa munneri varadhu than unaku perchana-na Naa munneri varuven da…. Kaal mela kaal poduven da… style ah geth ah….
5) Remember the songs
“Ulagam ORUVANUKKA illai Ulazhaipavanuk-ka vidai tharuvan Rajini than… ”
“Nanga enga porantha ada unakenna poda Tamilanukaga vanthavan Tamilanda….”
6) 43 gang ( Tamil Film Industry )
Which supplies drugs
Most of the Tamil films promoting drinking alcohol is coooollll……
They don’t like the presence of RAJINI (Kabali ) in their REGION only
Because they can’t do business
7) Once the people who supported 43 gang, now they need ( may be demanding ) FREE LIFE ( FREE LIFE ) from Rajini.
8) In every movie Rajini’s dialogues were meant to
– Work hard
– Enjoy the life
But in this movie ” RAJINI HATES TO BE BORN AS A HUMAN IN NEXT LIFE ”
9) Every Goosebumps scenes were cutted down before it gives the Goosebumps ( DIRECTOR’S CHOICE )
10) At the climax , Rajini asking the FREE LIFE members ( some lazy, crazy, shit talking tamilans )
” So, what should i do for your growth ..? ”
and Johnny shot him ( DIRECTOR’S CHOICE and END ) Directed by Pa. Ranjith
Rajini shot Johnny ( FAN’S END )
கபாலி குப்பை படம்ன்னு விமர்சனம் செஞ்சா ‘ஆண்டை ஜாதி ஆணவம்’னு திட்ராராங்ய பாஸு. என்னத்த சொல்ல.
இந்த படத்துக்கு இம்புட்டு நீள விமர்சனம் தேவையே இல்லை. ரஞ்ஜித்… சினிமாவை விட்டு விலகினால் தமிழ் சினிமாவும், தலித் மக்களும் நலமுடன் வாழ்வாவார்கள்
K for wat all movies u have reviewed. Pls share those links
Nadunilai Paarvai… Vazhthukal…