Kadal (2013) – Tamil

by Karundhel Rajesh February 2, 2013   Tamil cinema

நேற்றிலிருந்து இணையதளமெங்கும் தமிழ் பைபிள் வசனங்கள் பரவ ஆரம்பித்திருக்கின்றன. பைபிளிலிருந்து எடுத்துப் போடப்பட்ட வசனங்கள் (‘கோட்டானுகோட்டி நன்றி ஏசப்பா’, ‘ஆமென்’, ‘தோத்திரம்’ இத்யாதி). கூடவே, கடல் திரைப்படம் சரியில்லை என்றும் பல பதிவுகள், செய்திகள், ஸ்டேட்டஸ்கள். இன்று காலையில் கருடா மாலின் ஐநாக்ஸில் கடல் பார்த்தேன்.

தாந்தேவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். புகழ்பெற்ற இடாலியன் கவிஞர். இவரது ‘Divine Comedy’ என்ற கவிதையைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கலாம். நரகம், சொர்க்கம் மற்றும் இதனிடையே இருக்கும் purgatory என்ற மூன்று உலகங்களுக்குள் தாந்தேவின் பயணத்தைப் பற்றிச் சொல்லும் ஒரு நீண்ட கவிதை இது. இந்தப் படத்துக்காக அந்தக் கவிதையைப் படித்துப் பார்த்தேன். மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்தக் கவிதையில், சொர்க்கத்தில் தாந்தேயின் பயணத்தை வழிநடத்திச் செல்லும் பெண்ணின் பெயர் – Beatrice. சொர்க்கத்தில் பல்வேறு புனிதர்களையும் சந்தித்துப் பேசுகிறார் தாந்தே. பியாட்ரிஸ் என்ற இந்தக் கதாபாத்திரம், தாந்தேவின் நிஜவாழ்வில் அவருக்கு மிகவும் பிடித்தமான பெண்ணின் பெயர். இந்தப் பெண்ணை தாந்தே இரண்டே தடவைகள் மட்டுமே சந்தித்திருக்கிறார். இருந்தும் பியாட்ரிஸின் மீதான அவரது காதலை அவரது படைப்புகளில் வெளியிடும் அளவு அவருக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துப் போயிருந்தது.  அவரது டிவன் காமெடியில் பியாட்ரிஸ், அன்பின் மொத்த உருவமாக சித்தரிக்கப்படுகிறாள். அதேபோல், கடவுளிடம் நேரடியாகப் பேசக்கூடிய ஒரு உயரிய நிலைக்கு (beatific vision)  தாந்தேவை உயர்த்தவும் செய்கிறாள் பியாட்ரிஸ்.

‘கடல்’ படத்தைப் பற்றிப் பேசாமல், தாந்தே, பியாட்ரிஸ் என்று நான் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது, இந்த பியாட்ரிஸ் தான் கடல் படத்தில் வரும் கதாநாயகி. இதை படத்தின் கதை & திரைக்கதையை எழுதிய ஜெயமோகன் சொல்லியிருக்கிறார்.

விமர்சனங்களில் பார்த்ததுபோல், நன்மை X தீமை அல்லது கடவுள் X சைத்தான் என்ற போராட்டம்தான் திரைப்படம்.

முதல் காட்சியில் இருந்தே படத்தின் கதையை ஆரம்பிப்பது மணிரத்னத்தின் பாணி. அதேபோல் இதிலும் ஆரம்பித்திருக்கிறது.  நன்மையின் வெளிப்பாடாக வருவது ஸாம். மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, யேசுவின் மேல் இருக்கும் பற்றினால் பாதிரியார் ஆக விரும்புபவன். அங்கே, தீமையின் வெளிப்பாடாக விளங்கும் பெர்க்மான்ஸ், ஸாமை சந்திக்கிறான். இருவருமே ஒரே பாதிரியார் பயிற்சிப் பள்ளியில் பயில்கிறார்கள். ஆனால், பெர்க்மான்ஸுக்கு ஸாமைப் பிடிப்பதில்லை. எங்குமே, எப்போதும் அமைதியாக, படித்துக்கொண்டே இருப்பவர்கள், பிறரின் கண்ணில் விழுந்த மணலாக இருப்பார்கள் இல்லையா? அப்படி. வேண்டுமென்றே வந்து வம்பிழுக்கும் பெர்க்மான்ஸை ஒரு புன்னகையோடு தவிர்க்கிறான் ஸாம். ஆனால், தவிர்க்க முடியாத சில சம்பவங்கள் நடந்து, இருவருக்கும் இடையே மிகப்பெரிய பிளவு விழுகிறது. இந்தப் பிளவில்தான் ‘கடல்’ துவங்குகிறது. பெர்க்மான்ஸை ஸாம் மறந்துவிடுகிறான். ஆனால் பெர்க்மான்ஸோ எப்போது பார்த்தாலும் ஸாமையே நினைத்துக்கொண்டிருக்கிறான். இருவருக்கும் இடையே இருக்கும் கணக்கை சரிசெய்யவேண்டும் என்பது அவனது வெறி.  இதன்பின் நடக்கும் சம்பவங்களே படத்தை நகர்த்துகின்றன.

பொதுவாக, மணிரத்னத்தின் படங்களில் ஒரு டெம்ப்ளேட் இருக்கும். கதையை முதல் காட்சியில் இருந்தே ஆரம்பிப்பது, விஷுவலில் ஓரிரு காட்சிகள் அட்டகாசமாக, ஒரு புகைப்படத்தைப் போல் அமைப்பது (அலைபாயுதே – ‘எவனோ ஒருவன்’ பாடலில் மிகத்தொலையில் பஸ் நிற்கும் காட்சி நினைவிருக்கிறதா?), கதாநாயகன், அவன் செய்யும் தொழிலில் மேலெழும்போது பின்னணியில் விறுவிறுப்பான இசையுடன் பாடல் வைப்பது (ஆய்த எழுத்தில் மாதவன் கேஸ் ஏஜென்ஸி ஆரம்பிக்கும்போது வரும் துடிப்பான பாடலைப்போன்ற இசை, குரு படத்தில் அபிஷேக் பச்சன் வியாபாரம் ஆரம்பிக்கும்போது பின்னணியில் வரும் இதே ரீதியிலான இசை), தமிழ்நாட்டு சூழலில் ஆடும் கதாநாயகன் மற்றும் அவனது நடனக் குழுவில் இருப்பவர்களின் அசைவுகள் ஹிந்திப் படங்களை ஒத்திருப்பது,  சற்றே செயற்கையான வட்டார மொழியை கதாபாத்திரங்கள் பேசுவது இத்யாதி. இந்தப் படத்தில் இம்மி பிசகாமல் இதே டெம்ப்ளேட் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த டெம்ப்ளேட் மணிரத்னத்தின் படங்களில் இடம்பெற ஆரம்பித்தது, ஆய்த எழுத்தில் இருந்துதான் என்று எண்ணுகிறேன். அதற்கு முந்தைய படங்களில் இதெல்லாம் இல்லாமல், இயல்பாக அவரது படங்கள் நகரும். ஆய்த எழுத்தில் இப்படிப்பட்ட சில காட்சிகள் வந்தபோது அது எனக்குப் பிடித்திருந்தது (படமல்ல. சில காட்சிகள் மட்டுமே). அதுதான் முதல் என்பதால். ஆனால் போகப்போக அதே டெம்ப்ளேட் அப்படியப்படியே அவரது பிற படங்களில் வருவதனால், மிக எளிதாக அதனைக் கண்டுபிடித்துவிட முடிகிறது. படத்திலிருந்து துருத்திக்கொண்டு இந்தக் காட்சிகள் தெரிகின்றன.

வழக்கமான மணிரத்னம் படங்களில், படம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அதில் காதல் மிக அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும். மௌனராகத்தில் ஆரம்பித்த இந்த வகையான சித்தரிப்பு, அவரது ஒவ்வொரு படத்திற்கும் அமைந்த பெரும் பலமாக இருக்கும். ஒரு உதாரணமாக, ‘குரு’ படத்தை எடுத்துக்கொண்டால், அதில் படம் முழுவதும் குருபாயின் வளர்ச்சி காண்பிக்கப்பட்டாலும், மிகச்சில காதல் காட்சிகள் அதில் உண்டு. அந்தக் காட்சிகள் படத்தின் பிற அம்சங்களோடு ஒப்பிடும்போது வெகுசில நிமிடங்களே வரும். இருந்தாலும் அக்காட்சிகளில் பொங்கி வழியும் காதல், மறக்கமுடியாதது (ரயிலில் குருபாயுடன் ஓடிவந்து ஏறும் சுஜாதா, குருபாயின் படுக்கையில் இருவரும் குறும்பாக விளையாடும் நிமிடங்கள் etc..), படத்தையே தாங்கி நிற்கும் அம்சமாகவும் அவை இருக்கும். இந்தப் படத்திலும் அது இருக்கிறது. ஆனால் அவரது பிற படங்களைப் போல் இதில் பல காதல் காட்சிகள் இல்லை. ஆனால் மிகச்சில காட்சிகளிலேயே அந்த effect தெரிகிறது. இந்தக் காட்சிகளில் வரும் பின்னணி இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பெரும்பாலும் ‘நெஞ்சுக்குள்ளே’ பாடலின் அழகிய இசைதான் இப்படி பின்னணியாக வருகிறது.

படத்தின் அத்தனை பாடல்களும் மிகவும் அழகாக இப்படத்தில் பொருந்துகின்றன. இது ஒரு கமர்ஷியல் படம் என்பதை மறக்கவேண்டாம். தமிழில் ஒரு கமர்ஷியல் படத்தில் பாடல்கள் எப்படி உபயோகப்படுத்திக்கொள்ளப்பட்டிருக்குமோ அப்படித்தான் இந்தப் படத்திலும்.  கடற்கரை என்பதால் மட்டும் படு கிராமத்து இசைதான் படத்தில் இருக்கவேண்டும் என்பதில் எனக்கு ஒப்புதல் இல்லை.  அதேபோல், என்னதான் படத்தின் கதாபாத்திரங்கள் வட்டார வழக்கில் பேசத் திணறினாலும், படத்தின் வசனங்களும் எனக்குப் பிடித்தன. குறிப்பாக முதல் பாதி. படத்தின் lead characters தவிர பாக்கியுள்ள அத்தனை கதாபாத்திரங்களும் இயல்பாக நடித்தும் பேசியும் இருக்கின்றனர்.

படத்தின் ஒரு நெகடிவ் அம்சமாக எனக்குத் தோன்றிய ஒரு விஷயத்தைப் பற்றி இனி. ஆய்த எழுத்து படத்திலும் இதே பிரச்னை இருந்தது. அதாவது, தனது சகோதரனைக் கொன்ற வில்லனிடமே, மாதவன் கதாபாத்திரம் சென்று சேர்ந்துகொள்வதாக அதில் காட்டப்பட்டிருக்கும். அது ஒரு லாஜிக் ஓட்டை. அதேபோல் இதில் படத்தின் நாயகன் தாமஸ், தன்னை வளர்த்த ஸாமை வஞ்சித்த பெர்க்மான்ஸிடமே போய் சேர்ந்துகொள்ளும் காட்சி இருக்கிறது. எப்படி மாதவனின் கதாபாத்திரம் ‘செல்வாக்கு வேணும், power வேணும்’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வில்லன் அரசியல்வாதியிடம் சேருகிறதோ, அதேபோல் இந்தப் படத்தில் கதாநாயகன் தாமஸ், வில்லன் பெர்க்மான்ஸிடம் சேர்கிறான். ஆனால் அதற்கான காரணங்கள் எடுபடுவதில்லை. ஊரே தன்னை முறைதவறிப் பிறந்தவனாக பழிக்கிறது என்பது அவனுக்கான காரணமாக இருக்கிறது. தன்னை வளர்த்து, ஒரு நல்ல மேய்ப்பவனாக இருந்த பாதிரியார் ஸாமிடம் இருந்து வெளியேறி, பெர்க்மான்ஸிடம் வந்துசேரும் தாமஸ் மேல் நமக்கு பரிவு ஏற்படுவதில்லை. காரணம், அதற்கு முன்னால் ஊரே அவனை பழிக்கும் காட்சி, பலவீனமாக இருப்பதாக எனக்குப் பட்டது. நான் ஏற்கெனவே சொன்னதுபோல, இது போன்ற காட்சிகளில் மணிரத்னம் தனது டெம்ப்ளேட்டை வலிந்து நுழைக்கிறார் என்பது எனக்குத் தோன்றிய விஷயம். இந்தக் காட்சிகளுக்கான காரணங்கள் வலுவானதாக இல்லை.

இந்தப் படம் ஒரு மணிரத்னம் படம் அல்ல. மணிரத்னம் தனது ஐடெண்டிடியை இழந்து பல காலம் ஆகிறது என்று தோன்றுகிறது.  அலைபாயுதேவிற்குப் பிறகு அவரது படங்களை எடுத்துக்கொண்டால், ஆய்த எழுத்து (Amores Perros), கன்னத்தில் முத்தமிட்டால், ராவணன் ஆகிய மூன்று படங்களுமே எனக்குப் பிடிக்கவில்லை. அப்படங்களில் மணிரத்னத்தின் அதற்கு முந்தைய படங்களில் இருக்கக்கூடிய அம்சங்கள் எதுவுமே இல்லாமல் இருப்பதாக எனக்குப் பட்டது.  ’குரு’‘ ஒன்றே இந்தப் படங்களில் சிறந்தது. ’கடல்’, ஜெயமோகனின் படம். ஜெயமோகனின் கதையில் மூக்கை நுழைத்து மணிரத்னம் அவரது டெம்ப்ளேட்களை உள்ளே தள்ளி, படத்தின் இரண்டாம் பாதியை சுவாரஸ்யமின்றி எடுத்துச் சென்றிருப்பதாகவே நான் நினைக்கிறேன். காரணம், படத்தின் கதை – ஒரு தேவதையால், தனது பாவங்களிலிருந்து வெளியேறி மேலெழும் மனிதனின் கதை- முதல் பாதியில் நன்றாகவே சொல்லப்பட்டிருப்பது புரிகிறது. இதில் மணிரத்னத்தின் தலையீடுகள் குறைவு. அந்த மனிதனுக்குத் துணையாக இருப்பது கடவுள்.  அந்தக் கடவுளின்மேல் வீண்பழியை சாத்தான் சுமத்தி, மனிதனிடமிருந்து கடவுளை தனிமைப்படுத்துகிறான். ஆனால், இதன்பின் – எப்படி அந்த மனிதன் அவனுடைய வாழ்வில் அவனுக்கு உதவவேண்டும் என்ற நோக்கம் கூட இல்லாமல், தனது வெறும் இருப்பினாலேயே அவனை கடவுள்தன்மையை நோக்கி உயர்த்தும் தேவதையினால் உயர்கிறான் என்ற அம்சம், இரண்டாம் பாதியில் சரியாகக் காண்பிக்கப்படவில்லை. அல்லது ஒருவேளை அப்படிப்பட்ட காட்சிகள் வெட்டப்பட்டு தூக்கியெறியப்பட்டுவிட்டனவா? அது தெரியவில்லை. என்ன இருந்தாலும், இதற்கு ஜெயமோகன் காரணம் அல்ல என்பதும் படத்திலேயே தெரிகிறது. இது மணிரத்னத்தின் தவறு என்பதே என் புரிதல். இந்தத் தவறு, மிக obviousஸாக படத்தின் இரண்டாம் பாதியில் இருப்பதால், படத்தின் பிரதான நெகடிவ் அம்சமாக இரண்டாம் பாதி இருக்கிறது.

கூடவே, படத்தில் வில்லனாக வரும் பெர்க்மான்ஸ்,  தான் ஒரு வில்லன் என்பதை இரண்டாம் பாதி முழுக்கவே சொல்லிக்கொண்டே இருக்கிறான். இது, அந்தக் கதாபாத்திரத்தின் மீதான ஈடுபாட்டை குறைக்கிறது. முதல் பாதியில் பெர்க்மான்ஸ் ஸாமுக்கு செய்யும் துரோகம் அட்டகாசமாக படமாக்கப்பட்டிருக்கிறது. மிகவும் subtleலான பாத்திரமாகவே முதல் பாதியில் பெர்க்மான்ஸின் கதாபாத்திரம் இருக்கிறது. அப்படித்தான் படம் முழுக்க இருந்திருக்கவேண்டும். எப்படி தேவதையின் இருப்பினாலேயே கதாநாயகன் தாமஸ் படத்தின் முடிவில் மனம் மாறுகிறானோ, அப்படி பெர்க்மான்ஸின் இருப்பினாலேயே அவனது சாத்தான் தன்மை வெளிப்பட்டிருப்பதாக இருந்திருந்தால் படம் நன்றாக வந்திருக்கக்கூடும் என்றும் நினைக்கிறேன்.

படத்தின் இன்னொரு நெகட்டிவ் அம்சம் – கதாநாயகி துளசி. படப்பிடிப்பு துவங்குகையில் மிகவும் குண்டாக இருந்ததாகவும், மணிரத்னம் சொல்லியே எடையைக் குறைத்ததாகவும் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் சரிவர எடையைக் குறைக்கவில்லை என்பதும் படத்திலேயே தெரிகிறது. போலவே அவரது லோ-கட் உடை சில காட்சிகளில் உறுத்துகிறது. ஞாநியின் கட்டுரை நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை.

படத்தின் வெளிப்படையான ப்ளஸ் பாயிண்ட், ரஹ்மான். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பின்னணியில் விளையாடியிருக்கிறார். ‘நெஞ்சுக்குள்ள’ பாடலின் இசை, காதல் காட்சிகளில் பின்னணியில் அருமையாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. கூடவே, படத்தின் மொக்கையான க்ளைமேக்ஸில் கூட பின்னணி இசை அபாரம். பாடல்களும் அருமை.

எனவே, மணிரத்னம் என்ற இயக்குநரை எதிர்பார்த்து இந்தப் படத்துக்கு சென்றால், எப்படி ராவணன் உங்களை ஏமாற்றியதோ, அதேபோல் இந்தப் படமும் உங்களை ஏமாற்றும். இது ஒரு ஜெயமோகன் படம். அந்த விஷயத்தில் படம் நன்றாகவே வந்திருக்கிறது. ஜெயமோகனின் கதை எனக்குப் பிடித்திருந்தது. வசனங்களும். இது ஒரு ஆர்ட் ஃபில்ம் இல்லை; கமர்ஷியல் படம்தான் என்பதால், அதன் வரையறைகளுக்கு உட்பட்டு ஜெயமோகன் அவரது பணியை நன்றாகவே செயல்படுத்தியிருக்கிறார். இந்தக் கதையை மணிரத்னம் execute செய்த பாணிதான் (இரண்டாம் பாதி) படத்தின் மீதான நெகட்டிவ் விமர்சனங்களுக்குக் காரணம் என்று நினைக்கிறேன்.  முதல் பாதியில் ஜெயமோகனின் இருப்பே படத்தைக் காப்பாற்றுகிறது. போலவே இரண்டாம் பாதியில் மணிரத்னத்தின் இருப்பே படத்தை சொதப்புகிறது. இரண்டாம் பாதி முழுக்கவே ஆயிரத்தெட்டு மணிரத்ன டெம்ப்ளேட்கள்.

படத்தைப் பாருங்கள். எதனால் படம் பிடிக்கவில்லை என்று யோசித்தீர்கள் என்றால், நான் இங்கே சொல்லியிருக்கும் காரணங்கள்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

மணிரத்னத்தின் படங்களில் கட்டக்கடைசியாக எனக்குப் பிடித்தது – குரு. அதற்கு முன்னர் அலைபாயுதே. இனிமேல் மணிரத்னத்தால் அப்படி எடுக்க முடியுமா? முதலில் அவரது சமீபகால டெம்ப்ளேட்களை அவர் உதறிவிட்டாலே போதும்  என்று தோன்றுகிறது.

  Comments

6 Comments

  1. me the first

    Reply
  2. ellorukum sila kalamdhan, balachandar, baradi raja, s.p muthuraman, bakya raj next mr.mani rathnam

    Reply
  3. ராஜேஷ் , உங்கள் விமர்சனம் அருமை ….படம் பார்க்க யோசித்துள்ளேன் …..ஒரு படத்திற்கு விமர்சனம் எழுதும்பொது அந்த படத்தின் இயக்குனரின் தற்போதைய நிலைப்பாட்டை முழுமையாக எழுதுகிறீர்கள் …..நானும் மணிரத்னம் இயக்கத்தில் குரு திரைபடத்தை மிகவும் ரசித்தேன் ….இராவணன் மிகவும் ஏமாற்றியது…..அவர் படத்தில் நான் திருடா திருடா விரும்பி பார்த்த படம் (பலருக்கு அப்படம் பிடிக்காது ), எனக்கு பெரும்பாலும் ஆங்கில படங்கள் அப்போது பார்க்க பிடிக்கும். திருடா திருடா ஆங்கில பட சாயலில் இருந்ததாய் ஞாபகம் ….அதனால் அப்படம் பிடித்திருந்தது ….எனக்கு அவர் படத்தில் பிடிக்காத ஒரு விடயம் …கதாபாத்திரங்கள் பேசும் தமிழ் . இது திருடா திருடாவிலிருந்து ஆரம்பித்து விட்டது..தமிழ் நாட்டில் எங்கு இப்படி பேசுகிறார்கள்???…….உங்கள் வலை தலத்தில் ஒரு மாதம் முன் துவங்கி பெரும்பான்மை (90%) கட்டுரைகள் படித்து விட்டேன் …..நான் விரும்பிய பல படங்களை பற்றி எழுதியிருக்கிறிர்கள் …உங்கள் பதிவுகளை படித்து சில படங்களை பார்த்தாயிற்று , நன்றி ….வாய்ப்பு கிடைத்தால் நிறைய படங்களை பற்றி பேச வேண்டும்….

    Reply
  4. maniratnam’s best is Iruvar

    Reply
  5. kadal 2nd half opening and climax was the drawback of the film i think, is it?…

    Reply
  6. Maakkaan

    //தமிழ்நாட்டு சூழலில் ஆடும் கதாநாயகன் மற்றும் அவனது நடனக் குழுவில் இருப்பவர்களின் அசைவுகள் ஹிந்திப் படங்களை ஒத்திருப்பது, சற்றே செயற்கையான வட்டார மொழியை கதாபாத்திரங்கள் பேசுவது//

    100% true….

    Reply

Join the conversation