Kamalhassan & Rajinikanth – the 80s

by Karundhel Rajesh March 3, 2016   Cinema articles

தமிழ் ஹிந்துவின் பொங்கல் மலர் – 2016க்காக ஜனவரியில் எழுதப்பட்ட கட்டுரை இது.


 

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே எந்தப் பத்து ஆண்டுகளை எடுத்துக்கொண்டாலும் அங்கே இரண்டு பிரபல நட்சத்திரங்கள் இருந்தே வந்திருக்கின்றனர். எம்.கே.தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா, எம்.ஜி.ஆர் – சிவாஜி என்று வரும் இந்த வரிசையில், ரஜினிகாந்த் – கமல்ஹாஸன் என்ற பெயர்களும் முக்கியமானவை. இவர்கள் இருவருக்குமே, எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியைப்போலவே வெறித்தனமான ரசிகர் படை இருந்தது (இன்னும் இருந்துகொண்டிருக்கிறது). இருவருமே தமிழ் சினிமாவின் போக்கைக் கட்டுப்படுத்திய முக்கியமான நடிகர்கள். இருவருக்குமே எக்கச்சக்கமான பிரம்மாண்டமான வெற்றிப்படங்கள் உண்டு. இருவருக்காகவுமே பல சினிமாக்கள் எழுதப்பட்டன. இவர்களில் ஒருவர், தன்னை நடிகர் என்று முன்னிறுத்தியபின்னர், பரிசோதனை முயற்சிகளுக்கு ஆட்படாமல், ஜனரஞ்சகமான திரைப்படங்களிலேயே இன்றுவரை நடித்துக்கொண்டிருக்கிறார். மற்றோருவர், திரைவாழ்க்கையில் நட்சத்திரமாக மாறிய ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பின்னர் ஓரளவு வித்தியாசமான வணிகப்பட முயற்சிகளை இன்றுவரை செய்துகொண்டிருக்கிறார். இவர்கள் இருவருமே புகழின் உச்சத்துக்கு ஏறிய காலகட்டமாக எண்பதுகள் (1980-1989) விளங்குகிறது. இந்தக் காலகட்டத்தில் அவர்களது வளர்ச்சி, அவர்கள் முன்னிறுத்திய பிம்பம், அவர்களின் திரைப்படங்கள் வாயிலாக சொல்லப்பட்ட கருத்துகள் என்று சற்றே விபரமாகக் கவனிப்போம்.

ரஜினிகாந்த்துக்கு 1980 ஒரு முக்கியமான வருடம். ஏராளமான வில்லன் படங்கள், கமல்ஹாஸனோடு இணைந்து நடித்த குணச்சித்திர வேடங்கள் என்பதையெல்லாம் தாண்டி, 1978ல் பைரவி திரைப்படம் மூலமாகக் கதாநாயகனாக ரஜினிகாந்த் அறிமுகம் ஆகி, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் மூலமாக ஒரு அழுத்தமான நடிகராக ரஜினிகாந்த் மாறியாயிற்று. இந்தக் காலகட்டத்தில், 1980 ஜனவரியில் ’பில்லா’ வெளியாகிறது. அமிதாப் நடித்த ‘டான்’ படத்தின் ரீமேக். தமிழில் பிரம்மாதமாக ஓடியது. ரஜினிகாந்த், ஒரு சூப்பர்ஸ்டார் ஆவதற்கான ஆரம்ப முயற்சிகளில் பலமான அஸ்திவாரம் பில்லாவே. இக்காலகட்டத்தில் சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோர்களே பழைய தலைமுறை ஹீரோக்கள். இவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, அலட்சியமான ஒரு உடல்மொழியோடு ரஜினிகாந்த் என்ற இளைஞனைக் கதாநாயகனாகத் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் கொண்டுசேர்த்தது பில்லா. பில்லாவுக்குப் பின்னர் அன்புக்கு நான் அடிமை, காளி, ஜானி, பொல்லாதவன் என்று வரிசையாக வெளிவந்த ரஜினிகாந்த்தின் அந்த வருடத்திய ஹிட்களுக்கு சிகரம் வைத்தாற்போல் 1980 டிசம்பரில் ‘முரட்டுக்காளை’ வெளியாகி, பிரம்மாண்ட ஹிட் ஆகிறது.

இதன்பின்னர் அடுத்த சில வருடங்களில் வெளியாகும் தொடர்ச்சியான சூப்பர்ஹிட்களால் இயல்பாகத் தமிழகத்தின் வணிக சினிமாவின் தலையாய இரண்டு இடங்களில் ரஜினிகாந்த்துக்கு ஒரு இடம் அமைகிறது. தமிழ் மட்டுமன்றி ஹிந்திக்கும் ரஜினிகாந்த் செல்கிறார். அவரது முதல் படமான ‘அந்தா கானூன்’ (சட்டம் ஒரு இருட்டறையின் ஹிந்தி ரீமேக்), 1983ல் வெளியாகி நன்றாக  ஓடுகிறது. இதன்பின்னர் வரிசையாக ஹிந்திப்படங்களில் நடிக்கிறார். எல்லாக் கதாபாத்திரங்களுமே தமிழில் அவர் செய்துவந்த ’பிரம்மாண்டமான ஹீரோ’ என்ற இமேஜை முன்னிறுத்துபவையே (வானில் சிகரெட்டைத் தூக்கிப்போட்டு துப்பாக்கியில் சுட்டுப் பற்றவைப்பதைப் போன்ற காட்சிகளை ஒரு ஹீரோ செய்வது). நூறாவது படமாக ‘ஸ்ரீ ராகவேந்திரர்’ 1985ல் வருகிறது. அதுவரை ரஜினிகாந்த் செய்துவந்த சூப்பர்ஹீரோ வேடமாக இல்லாமல், திடீரென ஒரு ஆன்மீகவாதியாக நடிக்கிறார். பின்னர் சரமாரியாக அவரது வழக்கமான பாணிப் படங்கள் வெளிவருகின்றன. இந்த நிலை இன்று வரை ரஜினிகாந்த்துக்குத் தொடர்கிறது. லிங்கா வரையிலுமே ரஜினிகாந்த் அவரது ஃபார்முலா படங்களில்தான் நடித்துவந்தார். லிங்கா பெற்ற விமர்சனங்களால், இனி வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார் என்பது ‘கபாலி’யின் போஸ்டர்களைப் பார்த்தால் தெரிகிறது. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் ரஜினிகாந்த்தின் படங்களை ஓரிரு பத்திகளில் அடக்கிவிடமுடியாதுதான். ஆனால் அவற்றைப் பட்டியல் போடுவது மட்டுமே நோக்கம் இல்லை என்பதால் கட்டுரையைத் தொடர்வோம்.

கமல்ஹாஸனை எடுத்துக்கொண்டால், 1973ல் அரங்கேற்றத்தில் இளைஞராகத் துவங்கிய கமல்ஹாஸனின் திரைவாழ்க்கை, தமிழிலும் மலையாளத்திலும் சரமாரியான படங்கள் மூலம் தொடர்ந்தது. மலையாளப் படமான ‘கன்யாகுமரி’யில் முதன்முதலில் கதாநாயக வேடம் (1975). இதைத்தொடர்ந்து பல மலையாளப்படங்களில் வரிசையாக நடிக்கிறார். அங்கே அவர்தான் அப்போதைய காலகட்டத்தில் இளைஞர். எனவே விஷ்ணு விஜயம், அப்பூப்பன், மதனோத்ஸவம் போன்ற படங்கள் பரவலாக அவரை மலையாளத் திரையுலகில் கொண்டு சேர்த்தன (இப்படங்களுக்கெல்லாம் பின்னர்தான் மம்மூட்டியும் மோகன்லாலும் அறிமுகமாயினர்).  தமிழிலும் அந்தரங்கம், மன்மதலீலை, உணர்ச்சிகள், அவர்கள், 16 வயதினிலே, மரோ சரித்ரா (தெலுங்கு), இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படித்தான் என்று வரிசையாக, நல்ல கதையம்சம் உள்ள படங்களிலேயே தொடர்ந்து நடித்துவந்தார் இளைஞர் கமல்ஹாஸன். கமல்ஹாஸனின் மலையாளப்படங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட எழுபதுகளின் முடிவில் குறைகின்றன. தமிழில் அவருக்கென்றே எழுதப்படும் வணிகப்படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

கமல்ஹாஸனின் திரைவாழ்க்கையின் முற்றிலும் முதல் கமர்ஷியல் படம் என்பது ‘சட்டம் என் கையில்’ (1978). டி.என். பாலு இயக்கிய படம். பிற்காலத்தில் தமிழ் வணிகப்படங்களில் தலையாய இரண்டு நடிகர்களில் ஒருவராகக் கமல்ஹாஸன் மாறப்போவதற்கு ஆரம்ப அச்சாணியாக இப்படத்தைக் கருதலாம். ஒரு கமர்ஷியல் பட நாயகனுக்கான அத்தனை அம்சங்களும் இதில் இடம்பெற்றிருக்கும்.

எண்பதுகளில் கமல்ஹாஸனின் படங்களைப் பார்ப்பதற்கு முன்னர் அவசியம் அதற்கு முந்தைய அவரது திரைவாழ்க்கையைப் பற்றித் தெரிந்தே ஆகவேண்டும். அப்போதுதான் இக்கட்டுரையின் இறுதியில் நாம் பார்க்க இருக்கும் சில விஷயங்கள் எளிதில் விளங்கும். எண்பதுகளின் ஆரம்பமாக ஐ.வி.சசியின் ‘குரு’ கமல்ஹாஸனுக்கு அமைகிறது. வெகுநாட்கள் எடுக்கப்பட்ட படம் என்றாலும், இப்படம் வெற்றிகரமாக ஓடியது. உடனடியாக வறுமையின் நிறம் சிவப்பு வருகிறது. இன்றுவரை கமல்ஹாஸனின் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது. அடுத்த வருடமான 1981ல் கமல்ஹாஸனின் 101வது படமான ‘ஏக் துஜே கேலியே’ ஹிந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டாகிறது (அப்போது கமலின் வயது 27தான். 100வது படம் – ராஜபார்வை. கமலின் முதல் தயாரிப்பு). இதன்பின்னர்  ஏராளமான, முற்றிலும் கமர்ஷியல் படங்களாக எடுக்கப்பட்ட படங்கள் வருகின்றன. உதாரணம்: சகலகலா வல்லவன். 1982ல் ’மூன்றாம் பிறை’, 1983ல் ’சாகர சங்கமம்’ (சலங்கை ஒலி) மற்றும் ’சத்மா’ (மூன்றாம் பிறையின் ஹிந்தி ரீமேக்) வருகின்றன. 1984ல் கிட்டத்தட்ட முழு வருடமுமே ஹிந்தியில் ஏழு படங்கள் நடிக்கிறார். அந்த வருடத்தில் வெளியான ஒரே தமிழ்ப்படம் எனக்குள் ஒருவன் மட்டுமே. தொடர்ச்சியான வணிகப்படங்களுக்கு இடையே 1986ல் ‘ஸ்வாதி முத்யம்’ (சிப்பிக்குள் முத்து) வெளிவருகிறது. 1987ல் ’நாயகன்’ வெளியாகி, கமல்ஹாஸனின் திரைவாழ்க்கையின் மிக முக்கியமான படமாக மாறுகிறது. மணி ரத்னம் என்ற இயக்குநர் (மௌன ராகத்தை அடுத்து) பரவலான கவனத்தைப் பெறுகிறார். டைம் பத்திரிக்கையின் உலகின் மிக முக்கியமான நூறு படங்களில் ஒன்றாக நாயகன் மாறுகிறது. அடுத்த வருடத்தில் ‘சத்யா’ (1985ல் வெளியான ‘அர்ஜுன்’ ஹிந்திப்பட ரீமேக்) வெளியாகிறது. இதற்கு அடுத்த வருடத்தில் ‘அபூர்வ சகோதரர்கள்’ வருகிறது. இப்படி எண்பதுகள் முழுதுமே பல்வேறு படங்களில் கமல்ஹாஸன் நடித்தார். கமர்ஷியல் படங்களாகவே இருந்தாலும் அவரது நடிப்பையும் இப்படங்கள் வெளிக்காட்டின.

எண்பதுகளில் கமல்ஹாஸன் மற்றும் ரஜினிகாந்த்துக்குக் கிடைத்த இயக்குநர்களும் அவர்களின் புகழுக்குக் காரணம் என்பதையும் நினைவுகொள்ளவேண்டும். ராஜசேகர், எஸ்.பி. முத்துராமன், ஜி.என். ரங்கராஜன், சிங்கீதம் சீனிவாசராவ், டி.என்.பாலு, கே. பாலசந்தர், கே.விஜயன், கே.விஸ்வநாத், ஐ.வி.சசி, சுரேஷ் கிருஷ்ணா முதலியவர்கள் கமல்ஹாஸனுக்கும், மகேந்திரன், ஐ.வி.சசி, முக்தா.வி. சீனிவாசன், எஸ்.பி. முத்துராமன், ராஜசேகர், ஏ.ஜெகன்னாதன், டி.ராமாராவ், கே.விஜயன், கே.பாலசந்தர் முதலிய இயக்குநர்கள் ரஜினிகாந்த்துக்கும் அமைந்தனர்.

எண்பதுகளின் இறுதியில் கமல்ஹாஸன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருமே தங்களது திரைவாழ்க்கையின் உச்சத்தில், தமிழ் வணிகப்படங்களின் முடிசூடா மன்னர்களாக விளங்கினர். தொண்ணூறுகளிலும் இது தொடர்ந்தது. இருவருக்குமே தொழிலில் போட்டி இருந்தாலும், இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் தொடர்கின்றனர். இவர்களில் ரஜினிகாந்த், அவருக்கே உரிய வணிக மசாலாப்படங்களில் தொடர்ந்து நடித்துவந்தார். அவரது திரையுலக வாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில் செய்த குணச்சித்திர வேடங்கள், நல்ல நடிப்பை வெளிப்படுத்தும் வேடங்கள் ஆகியவை அவரது திரைவாழ்க்கையில் இருந்து விடைபெற்றன. எப்போதாவது ஒரு தளபதி அவரது நடிப்பைப் பறைசாற்றப் பிந்நாட்களில் வெளியானது. இதன்விளைவாகவே இன்றுவரை தனது ‘இமேஜ்’ என்ற வட்டத்தில் சிக்கிக்கொண்டுவிட்டார் ரஜினிகாந்த் என்றே சொல்லமுடியும். ஹிந்தியில் அமிதாப் பச்சன் முதலியவர்கள் அவர்களது வயதுக்கு ஏற்ற வேடங்களில் அருமையான படங்களில் நடித்துக்கொண்டிருக்கின்றனர் (அக்ஸ், சீனி கம், ப்ளாக், லாஸ்ட் லியர் முதலியன). ஆனால் இன்றுவரை ரஜினிகாந்த் அப்படிப்பட்ட படங்களில் நடிக்க அவரது இமேஜ் தடையாக இருக்கிறது என்றே சொல்லமுடியும். இதன்விளைவாக, அவரது வழக்கமான பாணியில் அவர் நடித்த லிங்கா சரியாகப் போகாமல் போனது. இப்போது ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘கபாலி’யில் நடிப்பதை படையப்பாவுக்குப் பின்னர் செய்திருந்தார் என்றால் இன்று தமிழின் சிறந்த நடிகர்களில் ஒருவராக ரஜினிகாந்த் வந்திருக்க வாய்ப்புண்டு..  ஒருவேளை கபாலியுமே கூட ரஜினி பாணியிலான ஒரு வணிகப்படமாகவே இருக்கும் பட்சத்தில், கபாலிக்குப் பின்னராவது ரஜினி, தனது நடிப்புத் திறமையை முழுவீச்சில் வெளிப்படுத்த வேண்டும். அப்படிச்செய்தால், கமர்ஷியல் மசாலாக்களாக அவரது படங்களை இனிக் கருதாமல், நடிப்புக்காகவே அவரது படங்கள் பேசப்படும் நிலை உருவாகும்.

கமல்ஹாஸனை எடுத்துக்கொண்டால், தமிழின் பிரம்மாண்ட வணிக நாயகர்களில் ஒருவராக அவர் உருவாவதற்கு முன்பு ஏராளமான நல்ல கதையமைப்பு கொண்ட தமிழ் மற்றும் மலையாளப்படங்களில் நடித்துவந்தார் என்று முன்பே கவனித்தோம். தமிழின் வணிக நாயகர்களில் தலையாய இருவரில் ஒருவராக ஆனபின்னரும்கூட மூன்றாம் பிறை, சாகர சங்கமம், ஸ்வாதி முத்யம், நாயகன் என்று அவ்வப்போது கமல்ஹாஸன் நல்ல படங்களில் நடித்துவந்தார். இவையும் வணிகப்படங்களே என்றாலும், கதையம்சம் அழுத்தமாக இருந்த படங்கள். பிந்நாட்களில் வயதுக்கு ஏற்ற படங்களில் நடிப்பதையே கமல்ஹாஸன் தொடர்ந்து செய்துவந்தார். இன்றுவரை ‘இமேஜ்’ என்ற வட்டத்தில் சிக்காமல் இப்படியே கமல்ஹாஸன் நடித்தும் வருகிறார். தமிழின் சிறந்த நடிகராக வலம் வருகிறார்.

இருப்பினும், கமல்ஹாஸன்  தமிழில் செய்யாதது ஒன்று உள்ளது. பொதுவாக இந்தியாவில் இருந்து அருமையான உலகப்படங்கள் தொடர்ந்து வெளிவருவதில்லை. உலகப்படங்கள் என்றால், சமகால சமுதாயப் பிரச்னைகளை அலசி, மனிதனின் வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளை எழுப்பும் வகையிலான படங்கள் (கலைப்படங்கள் என்று ஒரே வகையில் இவற்றை அடைத்துவிட இயலாது என்பதாலேயே உலகப்படங்கள் என்று குறிப்பிட்டேன்). உலகெங்கும் மிகச்சிறந்த இயக்குநர்கள் பல நாடுகளில் இருந்து எடுக்கும் இப்படிப்பட்ட படங்களே இன்றும் திரைரசிகர்களால் நினைவுகூரப்பட்டுவருகின்றன. அப்படிப்பட்ட படங்கள் வங்காளம், கன்னடம், மராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து எடுக்கப்பட்டே வருகின்றன. குறிப்பாக வங்காளம். ரித்விக் கடக், சத்யஜித் ரே, ம்ருணாள் சென் முதலியவர்களால் எடுக்கப்பட படங்கள் ஒரு உதாரணம். தமிழில் இப்படிப்பட்ட படங்கள் உள்ளனவா என்றால் கேள்விக்குறிதான். எப்போதோ ஒரு படம் – ஒரு வீடு போலவோ, சந்தியாராகம் போலவோ, உதிரிப்பூக்கள் போலவோ, அக்ரஹாரத்தில் கழுதையைப் போலவோ (இவையுமே இந்தியாவுக்குள்தான் வலம் வருகின்றன), தற்போது கவனத்துக்குள்ளாகிக்கொண்டிருக்கும் விசாரணை, குற்றம் கடிதல், காக்கா முட்டை படங்களைப் போலவோ என்றோ ஓர்நாள் தான் வருகின்றன. இருப்பினும், தமிழகத்தின் பெயரை உலக சினிமா அரங்குக்கு உரக்கச் சொல்லக்கூடிய ஒரே ஒரு தமிழ்ப்படம் கூட இன்னும் தயாராகவில்லை என்பது வருந்தக்கூடிய விஷயமாகவே உள்ளது. ஒரு ரித்விக் கடக்கைப்போலவோ அல்லது சத்யஜித் ரேயைப் போலவோ உலகம் முழுக்கப் பாராட்டுகளைக் குவிக்கக்கூடிய படங்களையே சொல்கிறேன்.

‘மிகச்சிறந்த நடிகர்’ என்று ரசிகர்களால் கருதப்படும் கமல்ஹாஸன் – தனது ஆரம்பகட்டத் திரைவாழ்க்கையை கதையம்சம் உள்ள நல்ல படங்கள் மூலமே துவங்கிய கமல்ஹாஸன் – உலக சினிமாவைப் பற்றிய விபரங்களை விரல்நுனியில் வைத்திருக்கும் கமல்ஹாஸன் – இப்படிப்பட்ட, தமிழ்த்திரைப்படங்களை உலகெங்கும் கொண்டுசெல்லும் அருமையான ஒரே ஒரு உலகப்படம் ஒன்று எடுத்தாலே போதுமானது. அவரது பெயரைக் காலம் உள்ளவரை தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமா மட்டுமல்ல, உலகின் திரைரசிகர்கள் அனைவருமே நினைவுவைத்திருப்பர். கமர்ஷியல் படங்களையே இதுவரை எடுத்துவந்திருக்கும் கமல்ஹாஸனால் அதற்கான முயற்சிகளை இப்போதும் முன்னெடுக்க முடியும் என்றே தோன்றுகிறது.  அதற்கான திறன் அவரிடம் உண்டு. செய்தால் மகிழ்ச்சி.

  Comments

5 Comments

  1. காரிகன்

    கமல் மற்றும் ரஜினி இணைந்து நடித்த ஒரு சிறப்பான படத்தை குறிப்பிட மறந்துவிட்டீர்கள். இன்றுவரை அது தமிழில் வந்த வெகு அபாரமான படங்களில் ஒன்றாக பலரால் கருத்தப்படுகிறது. அந்தப் படம்; அவள் அப்படித்தான். கொஞ்சம் உலகத் தரம் கொண்ட அருமையான படம்.

    Reply
  2. நானும் கமல் ஹாசனிடமிருந்து ஒரு நினைவில் தங்கக்கூடிய படத்தை எதிர்ப்பார்க்கிறேன் … எனக்கு பிடித்த படமான ‘அன்பே சிவம்’ படத்திலும் கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தது. படம் விற்ப்பதற்க்காக பண்ணியிருப்பார். ‘காக்கா முட்டை’ எந்த கம்ப்ரமைசும் இல்லாம நல்லா ஓடி நல்ல பேர் வாங்கியிருக்கே. பயமில்லாமல் அவர் நல்ல படங்கள் பண்ணனும்.

    Reply
  3. காரிகன் !! you are right . Films at the starting stage of kamal and rajini are awesome !!! Thanks for this article buddy.

    Reply
  4. கமலஹாசன் ஒரு மிகத்திறமையான நடிகர். அவரது படங்களின் தரம் மிகவும் அதிகம். நிச்சயமாக அவர் உலகப்படம் ஒன்றை தமிழ் சினிமாவுக்கு தருவர். அவரது மருதநாயகம் படத்திற்காக அதீத ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

    Reply
  5. Udhay Sankar

    The way you dismiss Rajni as a could-have-been-good actor isn’t true. He has satisfied his potential as an actor. He has an unparalleled screen-presence and energy on screen, and doesn’t that come under acting skills? . The ability to demand attention and hold your gaze on screen is a gift that few possess. And why shouldn’t he continue with movies that satisfy his image. He continues to be a star/masala actor onscreen, and that gives joy to his fans. So, why should he change something that’s exceptional and working well? . Lingaa, Baba were just exceptions. And Kabali seems if not more, as commercial as a padayappa or basha was if we go by the trailer. Except that, it would be much better
    Cinema owing to ranjith’s craft.
    So, nothing has changed with kabali, his image is as strong as ever and ranjith will make sure that kabali accords to that image as well. And there’s nothing wrong in that.

    Reply

Join the conversation