கருந்தேள் டைம்ஸ் – 4

by Karundhel Rajesh January 17, 2011   Announcements

கருந்தேள் டைம்ஸின் அடுத்த பகுதி வந்தே பல நாட்களாகி விட்டன. இந்த ஆண்டின் முதல் வாரத்தில் இருந்து இப்போது வரை, பல வேலைகள். எனவே, கிட்டத்தட்ட பதினைந்து நாட்களாக எந்தப் பதிவும் எழுத முடியவில்லை. இப்பொழுதும் நேரம் இல்லை என்பதே உண்மை. இருந்தாலும், ஒரு சந்தோஷமான செய்தியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியதால், இதோ கருந்தேள் டைம்ஸ் நான்காவது பகுதி.

தமிழ்மணம் நிர்வாகத்தினர் நடத்திய சிறந்த வலைப்பதிவுகள் – 2010 போட்டியில், நமது பதிவான ‘கோமல் கந்தார்’ திரைப்பட விமர்சனம், உலக சினிமா பிரிவில், முதல் பரிசு வாங்கியுள்ளதாக, இன்று காலையில்தான் தமிழ்மணத்தைப் படித்துத் தெரிந்துகொண்டேன். இது, உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திதான். இதன் காரணம், ரித்விக் கட்டக், எனக்குப் பிடித்த இயக்குநர்களில் ஒருவர். அவரது படங்கள், மெல்ல மெல்ல மக்களின் கவனத்தைத் தற்போது பெற்றுக்கொண்டிருப்பது, உலக சினிமா ரசிகர்களுக்கு ஆனந்தம் அளிக்கக்கூடிய செய்தியாகும். இது ஏனெனில், இந்தியாவில், மாற்று சினிமா என்ற ஒன்றைத் துவக்கி வைத்த பெருமை, அவரையே சாரும். சத்யஜித் ரேவெல்லாம், ரித்விக் கட்டக்குக்குப் பின் தான். இருப்பினும், ரேவுக்குத் தான் அந்தப் புகழ் கிடைத்தது. ரித்விக் கட்டக்கைப் பற்றி யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. இதற்குப் பின் பல காரணங்கள் இருப்பினும், தனது கொள்கைகளுக்காக எதையுமே விட்டுக்கொடுக்காத பிடிவாத சித்தமுடையவராக கட்டக் இருந்ததே பிரதான காரணம்.

ரித்விக் கட்டக்கின் ‘மேகே தக்க தாரா’ படம்தான் தமிழில் ‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. இதனால் பாலசந்தருக்குக் கிடைத்த புகழில் ஒரு பகுதிகூட கட்டக்குக்குப் போய்ச் சேரவில்லை.

எனவே, தமிழ்மணம் எனக்கு அளித்திருக்கும் இந்த முதல் பரிசை, ரித்விக் கட்டக்கைப் பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியாகத்தான் நான் பார்க்கிறேன். இந்தப் பதிவையே நான் எழுதக் காரணமாக இருந்த ரித்விக் கட்டக்கை இந்நேரத்தில் அன்புடன் நினைவுகூர்கிறேன். தமிழ்மணத்துக்கு எனது நன்றிகள். என்னுடன் இரண்டாம் பரிசு வாங்கிய நண்பர் முரளிகுமார் பத்மனாபனுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். உடான், எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று. அதேபோல், இரண்டு பரிசுகள் வாங்கிய நண்பர் செ. சரவணக்குமாருக்கும் அன்பு வாழ்த்துகள். அவரது இரண்டு பதிவுகளும் அட்டகாசம் !

கடந்த மூன்று தினங்களாக, கூர்க்கில் இருபத்தைந்து உறவினர்களோடு ஜாலியாகப் பொழுதைக் கழித்தோம். இந்த ஆண்டு பொங்கலையும், அங்கேயே கொண்டாடியது ஒரு மறக்க இயலாத நினைவு. எங்கள் உறவினர்களிடையே, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, எல்லாருமாகச் சேர்ந்து ஒரு சுற்றுலாத்தளத்தில் சந்திப்பது வழக்கம். அனைவருமெ சம வயதுடைய இளைஞர்கள். பெற்றோர்களுக்கு அனுமதி இல்லை. இதன் மூலமாக, அத்தனை உறவினர்களுக்கும் ஒருவரையொருவர் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் உறவும் வளர்கிறது. சமுதாயத்தில் பல்வேறு வேலைகளில் இருக்கும் நாங்கள் அனைவருமே, ஒவ்வொருவரது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டு பேசுவது எல்லோருக்குமே மனதுக்கு நிறைவாகவும் இருக்கிறது. எங்களது இந்த ரீதியிலான சந்திப்புகள் அத்தனையிலும், ஊர் சுற்றுவது ஒரு முக்கிய விஷயமாக இருந்தாலும், அதைவிட முக்கியமாக, அனைவரும் சேர்ந்து அமர்ந்து ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிப் பேசி, அனைவருமே அவர்களது கருத்தையும் பகிர வேண்டும் என்பது அவசியம். ஒரு குறிப்பிட்ட விஷயத்தை எடுத்துக்கொண்டால், அதில் எவ்வளவு மாற்றுக்கருத்துகள் இருக்கின்றன என்பது இதனால் தெரியவருகிறது. அதேபோல், இதில் எழுப்பப்படும் கேள்விகளும் சரி, பதில்களும் சரி, அனைவருக்குமே உதவியாகவும் இருக்கின்றன. அதேபோல், கூர்க்கின் பல்வேறு இடங்களுக்கும் போய் வந்தோம். துபாரேவில், ரிவர் ராஃப்டிங் போனது அட்டகாசமாக இருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்னரே கூர்க் சென்றிருந்தாலும், இரண்டாம் முறை சென்றது போலவே இல்லை.

இந்த இடைப்பட்ட பதினைந்து நாட்களில் பல திரைப்படங்கள் காணும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒன்று தான் வல்லவன். முதல்முறையாக இப்படத்தை, நேற்று கூர்க்கிலிருந்து பெங்களூர் வரும் வழியில் பார்த்தோம். படத்தைப் பார்த்து முடிக்கையில் என் மனதில் எழுந்த கேள்வி – ‘படத்தில் சைக்கோ ரீமாவா அல்லது சிம்புவா?’ என்பதே. கொடுமையான ஒரு மொக்கைப்படம் அது. சிம்புவின் மன வக்கிரத்தை, திரைப்படமாக எடுத்து, தேனப்பன் செலவில் கும்மியடித்துவிட்டார் என்பது நன்றாகவே தெரிந்தது. என்ன கொடுமை சார் இது !

அதேபோல், ’நான் மகான் அல்ல’ படத்தையும் முதல்முறையாகப் பார்க்க நேர்ந்தது. படம் எனக்குப் பிடித்திருந்தது. எந்த வழவழா கொழகொழாவும் இல்லாமல், முதலிலிருந்து கடைசிவரை பற்றவைத்த பட்டாசு போன்ற வேகத்தில் சென்றது படம். படத்தில் வரும் சில நிகழ்வுகள் கொடூரமானவை என்ற ஒரு கருத்து எழுந்தது. ஆனால், அவையெல்லாமே நாம் தினந்தோறும் செய்தித்தாளில் படித்தது தானே? அக்கம்பக்கத்திலேயே இதைவிட குரூரமான நிகழ்வுகள் எல்லாமே நடக்கின்றன அல்லவா? படத்தில் வில்லன்களாக நடித்த இளைஞர்கள் படை, அட்டகாசமாக நடித்திருப்பது படத்தின் ப்ளஸ். கமலின் ‘சத்யா’ படத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிரகு, அமலா அப்ஸ்காண்ட் ஆகிவிடுவார். அதேபோல், இதிலும் காஜல் அகர்வால் அப்ஸ்காண்ட்.

நான் பார்த்த இன்னொரு படம், ஒரு கிம் கி டுக் படம். வழக்கப்படியே அற்புதமாக இருந்தது. அதேபோல், ஒரு புதிய ஆங்கிலப்படத்தையும் பார்த்தேன். இரண்டு படங்களின் விரிவான விமர்சனமும் விரைவிலேயே வரும்.

Well.. What else? தமிழ்மண முதல் பரிசின் வழியாக இந்தப் புத்தாண்டு நன்றாக ஆரம்பித்திருக்கிறது. எப்படிப் போகிறது பார்ப்போம். வெகு விரைவிலேயே ஒரு புதிய கட்டுரையில் சந்திப்போம். bye bye…

  Comments

25 Comments

  1. நீங்கள் பார்த்த கிம் கி டுக் படம் bi-mong ( dream) தானே ???

    (என்னை கலவரப்படுத்திய ஒன்றது. அற்புதமான கதை என்றாலும் கிம் கி டுக் ஒரு sadist என்று எண்ண வைத்த ஒன்று அல்லவா !!!)

    Reply
  2. வாழ்த்துக்கள் பாஸு .. 🙂

    Reply
  3. கோயமுத்தூரில் முக்கிய நபர் கைது என்ற தகவலுக்கு பிறகு ஒரு அப்டேட்டும் இல்லையே என்று பார்த்தால் கூர்க்கில் கொண்டாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறாரா அவர்?

    எனிவே, வாழ்த்துக்கள்.

    Reply
  4. வாழ்த்துக்கள்.பரிசுக்குறிய அந்த விமர்சனத்தையும் கருந்தேள் டைம்சில் இணைத்து வெளியிட்டிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்போம்.

    Reply
  5. வாழ்த்துக்கள் தலைவரே

    Reply
  6. நண்பா,வாழ்த்துக்கள்.
    மிக நல்ல துவக்கம்,கோமல் கந்தாருக்கு கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி,கட்டக்கிற்கு அஞ்சலிகள்.
    சரவணகுமாருக்கு கிடைத்தமைக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சிகள்.

    Reply
  7. வாழ்த்துகள் தேள்… உங்களுடைய தொடர்ந்த சிறப்பான எழுத்துக்கள் பரிசுக்கு உரியவை 🙂

    ஏன் இவ்வளவு காலம் தள்ளி ‘வல்லவன்’ படம் பார்த்து மொக்க வாங்கணும்… அதெல்லாம் நான் தியேட்டர்-ல பார்த்த கொடுமை..

    கிம் கி டுக் மற்றும் அந்த ஆங்கில படமுடன் சேர்த்து ‘நான் மகான் அல்ல’ படத்தை பற்றியும் விரிவாக போடலாமே??? தமிழில் வந்திருக்கும் ஒரு நல்ல படம். நீங்கள் எழுதினால் பல பேரை சென்றடையும் தேள்… எனது சென்ற வருடத்தின் மிக விருப்பமான படம் அது..

    அதே போல் ‘ஆடுகளம்’ படத்தை தவறவிடாதீர்கள்… அட்டகாசமான படம் 🙂

    Reply
  8. வாழ்த்துகள் நண்பா. மிக்க மகிழ்ச்சி.

    கூர்க் பயணம் பற்றிய பகிர்வும் மிக நன்று. கிம் கி டுக்கின் பட விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன்.

    Reply
  9. வாழ்த்துக்கள் ராஜேஷ்!!!

    How to Read a Film படித்துவிட்டீர்களா? There is no limit for improvement. எனவே இன்னும் சிறந்த விமரிசனங்களை எதிர்பார்க்கிறேன்.

    ஆமாம், Bylakuppe போனீர்களா?

    Reply
  10. மனமார்ந்த வாழ்த்துக்கள்! தாங்கள் சொன்னது போல கட்டக் பற்றிய விழிப்புணர்வாக இதை கொள்ளலாம்தான்! எனக்கெல்லாம் உங்கள் பதிவு மூலம்தான் அப்படி ஒருவர் இருப்பதே தெரியும்!

    Reply
  11. you deserve it … congrats…

    Reply
  12. வாழ்த்துக்கள் நண்பரே …வல்லவன் பார்த்த மன தைரியத்தையும் பாராட்டுகிறேன்

    Reply
  13. வாழ்த்திய அத்தனை அன்பு நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இதோ அடுத்த கட்டுரை வந்துவிட்டது. இந்த விவாதத்தில் பங்கேற்க உங்களை அழைக்கிறேன்

    Reply
  14. யூத் எல்லாம் ஆட்டம் போடுறிங்க .enjoy

    Reply

Join the conversation