கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014) – Analysis

by Karundhel Rajesh August 16, 2014   Tamil cinema

இந்த விமர்சனத்தில் எந்த முக்கியமான பாயிண்ட்களும் விவாதிக்கப்படவில்லை என்பதால் அவசியம் முழுதும் படிக்கலாம்.[divider]

கண்ணன் என்பவன் ஒரு பஸ் கண்டக்டர். பஸ்ஸில் வரும் பெண்களை சைட் அடித்துக்கொண்டு, இரவானால் டாஸ்மாக்கில் சரக்கடித்துக்கொண்டு ஜாலியான வாழ்க்கை வாழ்ந்துவரும் கதாபாத்திரம். அப்படிப்பட்ட கண்ணன் ஒருநாள் ஒரு திருமணத்துக்குச் செல்கிறான். அங்கே பூவு என்ற பெண்ணை சந்திக்கிறான். பார்த்தவுடன் அவனுக்கு அவள்மேல் காதல் வருகிறது. ஆனால் பூவுக்குக் கண்ணன் யார் என்பதே தெரியவில்லை. மறுபடியும் பூவுவை சந்திக்கவேண்டும் என்று அவள்மேல் வெறியனாக மாறுகிறான் கண்ணன். சிறுகச்சிறுக அவளைப் பற்றிய விபரங்களைச் சேகரிக்க ஆரம்பிக்கிறான். அப்போதுதான் பூவுவுக்கு ஒரு அக்கா இருப்பதாகவும், அவள் ஒரு LIC ஏஜெண்ட் என்பதையும் கண்டுபிடிக்கிறான். அவளை ஒருநாள் எதேச்சையாகக் கண்ணன் சந்திக்க நேர்கிறது. அவள் யார் என்ற உண்மையை அப்போது கண்ணன் கண்டுகொள்கிறான். அவனது வாழ்க்கையில் சில வருடங்களுக்கு முன்னர், கல்லூரி முடித்துவிட்டு ஊதாரியாகத் திரிந்தபோது அவன் காதலித்திருந்த பெண் அவள். அவளை சுற்றிச்சுற்றிப் பாடல்கள் பாடிக் (ஏ கலா கலா) காதலித்திருந்தது அவனது நினைவில் இருக்கிறது. அவளும் இதை உணர்கிறாள். ஆனால் பிரச்னை என்னவென்றால், அவள்மீது கண்ணனுக்குத் துளிக்கூடக் காதல் இப்போது இல்லை.

இந்த நேரத்தில், கண்ணன் தனது அம்மாவுக்கு உடல்நிலை மோசமாக இருந்ததால் ஒரு ரவுடியிடம் பணம் கடன் வாங்க நேர்கிறது. அந்த ரவுடியின் பெயர் சீதாராமன். அந்த சீதாராமன் செய்யாத பாவம் இல்லை. பல பெண்களின் வாழ்க்கையை அழித்திருக்கிறான். செத்த பிணத்தின் நெற்றியில் இருந்து ஒரு ரூபாயை எடுத்துக்கொண்டு பீடி வாங்குபவன் அவன். அந்தப் பணத்தைக் கண்ணனால் கொடுக்க முடிவதில்லை. கண்ணனின் வாழ்க்கையில் நேரடியாகக் களம் இறங்குகிறான் சீதாராமன். பூவுவைக் கடத்துகிறான். பூவுவின் அக்காவைப் பாலியல் பலாத்காரம் செய்கிறான். இந்தச் சூழலில், வேறு வழியில்லாமல் கண்ணன் அவனுக்குத் தெரிந்த ஒரு போலீஸ் கமிஷனரை அணுகுகிறான். அவர் பெயர் கஜா. அவரது மனைவியின் பெயர் மீனா. அந்தப் பெண்ணும் போலீஸ்தான்.

கஜாவும் கண்ணனும் மீனாவும் சேர்ந்து சீதாராமனை எப்படி அழிக்கிறார்கள்?[divider]

மோட்டிவே இல்லாமல் கொலை செய்ய முடியுமா? நாம் பாட்டுக்கு ஜாலியாக தெருவில் நடக்கிறோம். நமது பாக்கெட்டில் வீட்டு சமையலுக்காக அப்போதுதான் வாங்கிய கத்தி இருக்கிறது. அதை எடுத்து சரேல் என்று எதிரில் வருபவரைக் குத்திக் கொன்றால் அது மோட்டிவ் இல்லாத கொலை என்று சிலர் வாதாடக் கூடும். ஆனால் கத்தியை எடுத்துக் குத்தவேண்டும் என்று ஒரு எண்ணம் எழுந்ததல்லவா? கொலை செய்வதற்குச் சில கணங்கள் முன்னர்தான் அந்த எண்ணம் எழுந்திருக்கிறது. எனவே அதுதான் அந்தக் கொலையின் காரணம். மோட்டிவ். எனவே மோட்டிவ் இல்லாமல் கொலை செய்வது என்பது கனவில் கூட நடக்காத வேலை. இது common sense. அதைப்போலவே கதையே இல்லாமல் ஒரு படம் எடுக்க முடியுமா? ஏற்கனவே பல வருடங்களாகத் தமிழில் அப்படித்தான் பல படங்கள் வந்திருக்கின்றன. என்றாலும் அவையெல்லாம் ‘கதை’ என்ற ஒரு வஸ்து இருக்கிறது என்று தயாரிப்பாளரை நம்பவைத்து எடுக்கப்பட்ட ஸ்பூஃப்கள். ஆனால் இதனாலேயே அப்படங்களில் கதை இருக்கிறது என்று ஒரு முடிவுக்கும் ஆடியன்ஸாகிய நாம் அவசரப்பட்டு வந்துவிடமுடியாது. இப்படி ஆரம்பத்திலேயே இரண்டுவிதமான முரண்கள் அந்தப் படங்களின் கதையில் இருப்பதால் அது ஒருவிதமான பின்நவீனத்துவ முயற்சி என்று ஆகிறது. ஆனால் அது பின்நவீனத்துவ முயற்சி என்பதே அந்தப் படம் எடுத்த இயக்குநருக்குத் தெரியாது. காரணம் இலக்கியப் பரிச்சயம் இல்லாமை. இதனால் பின்நவீனத்துவத்தையே கேலிக்குள்ளாக்கும் படுபயங்கர பின்-பின்நவீனத்துவ முயற்சிகள் தமிழ்ப் பட உலகில் பல வருடங்களாக சம்மந்தப்பட்டவர்களுக்கே தெரியாமல் நடந்துகொண்டு இருக்கின்றன.

ஆனால் ஆர். பார்த்திபன் என்ற ராதாகிருஷ்ணன் பார்த்திபன் எடுத்த இந்தப் படம் அப்படி அல்ல. படத்திலேயே ஒரு கதாபாத்திரம், கதை இல்லாமல் படம் எடுத்தால் என்ன என்று கேட்கிறது. எனவே இதில் ஒருவித intertextuality இருக்கிறது. அதாவது பிரதிக்குள் பிரதி. ஜிகர்தண்டாவில் படத்துக்குள் படம் எடுப்பார்களே அப்படி. படத்தின் ஆடியோ ரிலீஸிலேயே கதையில்லாமல் கதை என்ற விவாதத்தை நடத்தியவர் பார்த்திபன். அப்போது அந்த செய்தியைக் கேள்விப்பட்டதுமே மேலே சொன்ன ‘மோட்டிவ் இல்லாத கொலை’ என்பதுதான் எனக்குத் தோன்றியது. அது நடக்காத காரியம் என்று. ஆனால் படம் பார்த்தபின் அது நடக்கக்கூடிய காரியம்தான் என்று புரிந்தது. இது ‘கதை இருக்கிறது’ என்று தயாரிப்பாளரை நம்பவைத்து கதையே இல்லாத படத்தை ஆடியன்ஸின் தலையில் கட்டக்கூடிய ஸ்பூஃப் அல்ல. படம் எடுக்கும்போதே படத்தில் கதை இல்லை என்பதைப் பார்த்திபன் தயாரிப்பாளரிடம் சொல்லிக் கன்வின்ஸ் செய்துதான் படம் எடுத்திருக்கிறார்.[divider]

சரி. கதையே இல்லாத இந்தப் படம் எப்படி இருக்கிறது?

நன்றாக, ஜாலியாக இருக்கிறது. இது ஒரு பார்த்திபன் படமே இல்லை என்ற ஒரு உணர்வைப் படம் முழுக்க உள்ளே வைத்திருக்கிறார் பார்த்திபன். ஆனால் அப்படிப்பட்ட சந்தேகங்கள் அடிக்கடி மனதில் எழும்போதெல்லாம் திரையில் பார்த்திபனாகவே தோன்றி, இது பார்த்திபன் படம்தான் என்பதைத் தெளிவாகவும் ’புரிய’ வைக்கிறார். மிக விரைவில் வெளியாக இருக்கும் ‘Sin city: A dame to kill for’ படத்தில் இப்படி இயக்குநர்கள் ராபர்ட் ரோட்ரிகஸும் ஃப்ராங்க் மில்லரும் ஒரு காட்சியில் அவர்களாகவே (இயக்குநர்களாகவும்) வருகிறார்கள்’ என்று படித்திருக்கிறேன். அந்த வகையில் இது அவசியம் ஒரு ஜாலியான முயற்சிதான். பார்த்திபனின் இந்தக் கேமியோ எனக்கு மிகவும் பிடித்தது. அதனாலேயே சில மாற்றங்களையும் ஒரு இயக்குநராக ஆன் த ஸ்பாட்டில் படத்தில் செய்கிறார் பார்த்திபன். இதுவுமே ஒருவித intertextuality தான். ஆனால் அதையெல்லாம் விட்டுத்தள்ளுவோம். அதையெல்லாம் எப்படியும் இலக்கியவாதிகள் விமர்சனம் எழுதும்போது கவனித்துக்கொள்வார்கள் (அவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தால்). ’கல்லுக்குள் ஈரம்’ படத்தில் பார்த்திபனின் தாத்தா பாரதிராஜாவே ஒரு இயக்குநராக வரவில்லையா? (தாத்தா என்பது குரு பரம்பரையில் குரு, குருவின் குரு என்ற முறையில் உபயோகப்படுத்தப்படும் பதம் என்று அறிக). ஆனால் அவர் வேறு ஒரு இயக்குநரின் படத்தில்தான் அப்படி (கல்லுக்குள் ஈரம் ஒரு நிவாஸ் படம்) வந்தார். அவராகவே வரவில்லை. வந்து படத்தின் காட்சிகளை மாற்றவில்லை.

பார்த்திபனின் இந்த ரீ எண்ட்ரி ஒரு குறிப்பிடத்தகுந்த முயற்சி என்பதை அவசியம் சொல்வேன். ஒரு திரைப்பட ரசிகனாக, என் பார்வையில் ஒரு திரைப்படம் என்பது என்னை முழு இரண்டு மணி நேரமும் அதனோடு ஒன்றச்செய்யவேண்டும். அலுப்பு தட்டவைக்கக்கூடாது. எரிச்சல் வரவைக்கக்கூடாது. படத்தில் எத்தகைய க்ளிஷேவுமே வரட்டும். ஆனால் அந்த இடத்தில் அது எடுபடுகிறதா இல்லையா என்பதுதான் ஒரே விஷயம் (மேல்விபரங்களுக்கு தினகரனில் நான் எழுதிய ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ தொடர் விரைவில் புத்தகமாக வரும்போது அதில் ரெஃபர் செய்துகொள்க). இதுதான் எனது ஒரே rule. அந்த விதிப்படி ’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்னை அவசியம் கவர்ந்தது. படம் முழுக்க அதனோடு ஒன்ற வைத்தது. சிறிதுகூட அலுப்புத் தட்டவைக்கவில்லை.

படத்தில் பல திரைப்பட மேதைகளுக்கான Homageகள் உள்ளன. பல திரைப்பட ஜாம்பவான்களைப் பற்றிய விபரங்கள் வருகின்றன. கூடவே நான் தினகரனில் எழுதிய ஒரு விஷயமும் அப்படியே வருகிறது (நான் ஈ, ஜுராஸிக் பார்க் போன்ற படங்கள் எப்படி ஓடின என்பதை ஒரு அனாலிஸிஸாக எழுதியிருந்தேன். கிட்டத்தட்ட அதே வரிசையில் அப்படியே ஒரு சிறுகுறிப்பு படத்தில் வந்தது. இரண்டு ஜீனியஸ்கள் ஒரே போன்று சிந்திப்பதில்லையா என்ற கேள்வி எழுந்ததால் அதை ஜாலியாக விட்டுவிட்டேன்). கலைஞானம் கலைஞானமாகவே வருகிறார் (யார் இவர் என்று வினவும் ஆட்கள் ரஜினி நடித்த பைரவியைப் பற்றி இணையத்தில் தேடுக. அந்தப் பெயர் வந்ததுமே எனக்கு அவரைப் பற்றித் தெரிந்துவிட்டது என்பது பின்குறிப்பு. தமிழ் சினிமாவில் ஒரு Cinephileஆக இருப்பதன் நன்மை). சேரன் சேரனாகவே வருகிறார். ஆர்யா ஆர்யாவாகவே வருகிறார். விஜய் சேதுபதி விஜய் சேதுபதியாகவே வருகிறார்.  தனஞ்செயன் தனஞ்செயனாகவே வருகிறார். இன்னும் பலரும் இன்னும் பலராகவே வருகிறார்கள்.

பார்த்திபன் ஜாக் டேனியல்ஸை (அல்லது அவருக்குப் பிடித்த ஒரு மாக்டெய்லை – குடி குடியைக் கெடுக்கும். குடிப்பழக்கம் தீமையானது) அட்டகாசமாக அருந்திவிட்டு ஆடியிருக்கும் ஒரு Ballet+contemporary+jazz+salsa+hiphop+tap இது. பொதுவாகத் திரைப்பட இயக்குநர்களைப் பற்றி ஒரு விஷயம் உலகில் உண்டு. வயது ஆக ஆக அவர்களின் திறமை மங்கும். ஸ்கார்ஸேஸியே அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் பார்த்திபன் மிகுந்த இளமையுடன் இப்போதுதான் பிறி கட்டி அடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இப்படியே அவர் தொடரவேண்டும் என்பது என் எண்ணம். பொறுத்துப் பார்ப்போம் (உடனே ‘பார்த்திபனும் ஸ்கார்ஸேஸியும் ஒண்ணாடா?’ என்ற மோஸ்தரில் அமைந்த அவசரமான கீபோர்டு நடன கமெண்ட்கள் வரவேற்கப்படுகின்றன).

இந்தப் படத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று பார்த்தால் அவசியம் பலருக்கும் பிடிக்கும் என்று தோன்றுகிறது. பாருங்கள். அவசியம்.

பி.கு

1. பார்த்திபன் மட்டும்தான் அஜபுஜாக்ஸாகக் காட்சிகளை அமைக்கவேண்டுமா? ஒரு விமர்சகனாக நான் அப்படி அமைத்த காட்சிகள்தான் முதல் சில பேராக்களில் நீங்கள் படித்த கதை. அதில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் இதுவரை பார்த்திபன் படங்களில் வந்த பாத்திரங்களே (இதை சொல்லக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் தமிழ் படிக்கும் நல்(கெட்ட)உலகம் இப்படி சொல்லாவிட்டால் அதை உண்மை என்று எண்ணிக்கொண்டு வடக்கிருந்து உயிர்விட்டுவிடக்கூடும் என்பதால் சொல்லநேர்ந்துவிட்டது).

2. படத்தின் ஒரே பிரச்னை – ஆங்காங்கே பார்த்திபன் நுழைத்திருக்கும் ’அக்மார்க் நயம் பார்த்திபன் பாணி’ வசனங்கள். ஆனந்த விகடனுக்கு ஒருமுறை பார்த்திபன் விளம்பர இன்புட் கொடுத்தார். பல ஆண்டுகளுக்கு முன். அதன் விளம்பரம் டிவியில் இப்படி இருக்கும். ’ஆனந்த விகடன்… நந்த விகடன்.. ந்த விகடன்.. த விகடன்.. விகடன்.. கடன்.. டண்டணக்கர டடண்டன்’… இதுதான் பார்த்திபன் பாணி. இந்த மாதிரியான பல வசனங்களைப் படம் முழுக்கக் கேட்க நேர்ந்தது.

3. தம்பி ராமையா வழக்கமான க்ளிஷே கதாபாத்திரத்தில் க்ளிஷேவாகத்தான் நடித்திருக்கிறார் என்றாலும் அவரது பாத்திரமும் நடிப்பும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கதையில் அது எடுபடுவது ஒன்றே காரணம்.

4. ஆங்காங்கே தம்பி ராமையா உச்சரிக்கும் வசனங்களில் ஸிட் ஃபீல்டைப் படித்த நண்பர்களுக்கு சில இன்புட்கள் உள்ளன.

5. பார்த்திபனைப் பற்றி இதில் பெரிதாக எழுதவில்லை. காரணம், எனது ‘எண்பதுகளின் தமிழ்ப்படங்கள்’ வரிசையில் பார்த்திபன் பற்றி எழுதலாமா என்று ஒரு எண்ணம்.

  Comments

16 Comments

  1. sekar

    ஜி . சீக்கிரம் புத்தகத்த ரிலீஸ் பண்ணிடுங்க . இல்லனா இதே மாதிரி ஜீனியஸ் லாம் அதிகமா உருவாக வாய்ப்பிருக்கு. இன்னைக்கு ப்ரீ தான். பார்த்துட்டு சொல்றேன்..

    Reply
  2. vinodh

    Neenga mela eluzhuthana kathaiyae…yar sooda porangolo…

    Reply
  3. Murale

    இன்று பார்த்து விடுகிறேன்

    Reply
  4. tulsi

    This movie look like child’s scribble sometimes look like good and sometimes not ….

    Reply
  5. Padaththai nambi paarkkalam pola ..nandri bro..

    Reply
  6. vivek

    பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென…

    ஒரே ஒரு சீன் ரொம்ப சூப்பர்ர்…

    ஆமா, நீங்க எடுக்கற படத்தை எல்லாம் போட்டு பாக்காமயேவா ரிலிஸ் பண்ணுவீங்க?
    இல்ல, ஒன்னுக்கு நூறுதடவ போட்டு பாத்துட்டுதான் ரிலிஸ் பண்ணுவோம்…
    அப்புறம் ஏன் ரொம்ப படம் வந்த நாள்லயே ஊத்திகிது?..

    Reply
  7. Abarajithan

    செம அனாலிசிஸ். முதல் பேராவைப் பார்த்து கலங்கின வயிறு டிஸ்கில தான் கிளியராச்சு….

    இந்த மாதிரிப் படங்களுக்கு அதே இம்பாக்ட்-டோட விமர்சனம் எழுத உங்களை மாதிரி கொஞ்சம் பேர்தான் இருக்காங்க. ஸ்வதேஸ், இதர படங்களுக்கு உங்க விமர்சனமே படத்தோட உணர்வுல இருக்கும். இதெல்லாம் ஏன் சொல்றேன்னா எல்லா பதிவர்களையும் மாதிரி VIP போல சராசரி சினிமாவை மெனக்கட்டு கழுவி ஊத்தற நேரத்துல அப்படிப்பட்ட அழகான விமர்சனங்களை எழுதினா படிக்கற எங்களுக்கு ஒவ்வொரு அனுபவமா இருக்கும்.

    உங்க current style க்கு ஏதும் வியாபார ரீதியான நோக்கம் இருக்கும்னு நான் நம்ப விரும்பல. அப்படி இருந்தாலும் படைப்பாளியோட சுதந்திரத்துல தலையிட முடியாது. எனவே கிடைக்கற கேப்புல கலக்குங்க பாஸ்…. :))

    Reply
  8. raman

    superji

    Reply
  9. vivek

    LIVE THE MOMENT…
    அடுத்த சீனே தெரிய வேணாம்…..

    இந்த படத்துக்கு ஒரு கத…இருக்கு ஆனா இல்ல.,

    வெள்ளித்திரை-ன்னு ஒரு படம் வந்துச்சு.. அதோட சாயல் அல்லது உங்கள் வார்த்தையில் இன்ஸ்பிரேசன் லேசாக இந்த படத்தில் ஓரிரு இடங்களில் தெரிந்தது..

    ஒரு சில திறமையான ஆசிரியர்கள், மாணவர்களின் மனதில் தோன்றிய எண்ணங்களை ஒன்று சேர்த்து பாடத்தில் ஒரு பகுதியில் வெளிப்படுத்தி, ஆமா நானும் இதை கவனிச்சேன் என்று சொல்லுவார்கள்.., அதே போன்று பார்த்திபனும் சொல்லி இருக்கிறார்.

    மிகவும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு நல்ல ப்ளே பார்த்த அனுபவம் கிடந்திருக்கிறது., அதுதான் பார்த்திபனின் புதுமை..

    Reply
  10. Accust Here

    The Dark Knight Rises திரைப்பட பதிவுல The Dark Knight Returns அப்படிங்கற comics பத்தி சொல்லி இருந்திங்க அந்த தழுவி ஒரு animation படம் 2012ல் வந்ததா இன்னிக்கு கேள்விப்பட்டேன் அத பத்தி ஏதும் விமர்சனம் எழுதி இருக்கிகீரா அல்லது அது நன்றாக உள்ளதா இல்லையா என்றாவது சொல்லவும்

    Reply
    • Rajesh Da Scorp

      It came as a 2 part series boss. But I have not seen both of them, and hence I do not know if that movie is good. But the comics is fantastic. I can vouch for it 🙂

      Reply
      • Accust Here

        இரண்டையும் பார்த்துவிட்டேன் முதல் பாகம் பெரிதளவில் எனக்கு பிடிக்கவில்லை ஆனால் இரண்டாவது பாகம் அட்டகாசமாக உள்ளது, இறுதி சண்டைக்காட்சி சூப்பர். முன்கதை கொஞ்சம் தெரியவில்லை ( ராபின் இறந்து விட்டதாக தெரிவது, எதற்காக retire ஆனாய் என்று நினைவுஇருகிறதா என்று superman கேட்பது) அதை பற்றி ஏதாவது படம் வந்துள்ளதா

        Reply
  11. lingamvijay

    Rajesh ji, It is a very good analysis. But I found scenes are mis-edited. I am sorry, I am a oridinary cinema viewer. And, I am expecting your review on ‘SARABAM’ movie. I enjoyed the movie after ‘Jigirdhanda’ movie.
    Thanks,
    Vijay.

    Reply
    • Rajesh Da Scorp

      Dear Vijay,

      I will not write about Sarabham, as it’s a scene by scene copy of a japanese film called ‘Game(2003)’. Hence I lost my interest to see it. Cheers.

      Reply
      • lingamvijay

        Ji, really superb ji. I really stunned about your knowledge about cinema particularly world cinema. I am restricted myself watching Hollywood movies not other language movies. So I am not aware of it. Thanks for the reply ji. I am eagerly waiting for your screenplay book ji.

        Thanks,
        Vijay.

        Reply
  12. FATHI FAZIL

    திருநங்கைகளைப் பற்றிய உலக திரைப்படங்களின் பட்டியலை இங்கு முடியுமா??

    Reply

Join the conversation