கத்தி (2014) – Review

by Karundhel Rajesh October 24, 2014   Tamil cinema

தமிழில் சமூகப் பிரச்னைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் வெற்றி அடைந்தே வந்திருக்கின்றன. முன்னரே தமிழில் இப்படிப்பட்ட படங்கள் வந்திருந்தாலும் (’தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ போன்றவை), எனக்குத் தெரிந்து சிவாஜி, கமல்ஹாஸன் நடித்து 1977ல் வெளிவந்த ’நாம் பிறந்த மண்’ படம்தான் ஒரு சூப்பர் ஹீரோவை சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வாக முன்னிறுத்தியது (இதே படம் பிந்நாட்களில் ’இந்தியன்’ என்ற பெயரில் ஷங்கரால் இயக்கப்பட்டது. ’படகோட்டி’, ‘நம் நாடு’ போன்ற எம்.ஜி.ஆர் படங்கள் இருந்தாலும், சூப்பர் ஹீரோ என்ற கதாநாயகனைப்பற்றித்தான் பேசுகிறேன்). அதன்பின் ’நான் சிவப்பு மனிதன்’ வெளிவந்தது. அதை இயக்கியவர் எஸ்.ஏ. சந்திரசேகர். அந்தப் படத்தின் உதவி இயக்குநராக இருந்த ஷங்கர்தான் இப்படிப்பட்ட படங்களை அதன்பின் வரிசையாக எடுக்க ஆரம்பித்தவர். அவருக்குப் பிறகு ‘சிடிஸன்’ படமும் இதே வார்ப்புருதான். ஆனால் அந்தப் படத்தில் தேவையே இல்லாமல் ஒன்பது வேடங்கள் நடித்தார் அஜீத். படத்தின் ஃப்ளாஷ்பேக் தவிர அந்தப் படத்தில் வேறு உணர்வுபூர்வமான காட்சிகளோ, பார்வையாளர்களைக் கவரும் அம்சங்களோ இல்லை. இதன்பின் பாலாஜி சக்திவேல், ‘சாமுராய்’ படத்தில் இதைக் கையில் எடுத்தார். ஆனால் அந்தப் படத்தின் தயாரிப்பு இரண்டு வருடங்கள் எடுத்துக்கொண்டு, பல சிக்கல்களைத் தாண்டி வெளிவந்து தோல்வி அடைந்தது. சீமானின் ‘தம்பி’ படமும் இதே ரகம்தான். படத்தில் மிகவும் தூக்கலான பிரச்சார நெடி இருந்தது.

படத்தைப் பார்க்குமுன் சற்றே பெரிய ஒரு முன்னுரை.

இதுபோன்ற படங்களை முற்றிலும் பொழுதுபோக்கைக் கொடுக்கும் வணிகப்படங்களாக மட்டுமே நினைத்துப் பார்த்தால் பிரச்னை இல்லை. மாறாக, படத்தில் நடிப்பவர்களும் படத்தை இயக்கிய இயக்குநரும் படத்தில் வரும் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களா? என்று எண்ணிக்கொண்டு மன உளைச்சல் அடைவது தேவையற்றது. இப்படிப்பட்ட விழிப்புணர்ச்சிக் கொள்கைகள் அடங்கிய படங்கள் எடுக்கப்படுவதே வெறுமே பணம் சம்பாதிக்க மட்டுமே. பணத்தை அள்ளவேண்டும் என்றால் மக்களுக்கு வாகான இடத்தில் சொறிந்துகொடுப்பதே சிறந்த வழிமுறை. அப்படிப்பட்ட சொறிதலைத்தான் இப்படிப்பட்ட so called ’சமூக விழிப்புணர்ச்சிப் படங்கள்’ செய்கின்றன. அதையேதான் ‘கத்தி’யும் செய்கிறது. எனவே, படம் பார்க்கச்செல்லுமுன்னர் உங்கள் மனதில் இருக்கும் வீராவேசமான கொள்கைப்பிடிப்புகளை எடுத்துத் தூர வீசிவிட்டுச் சென்றால் படத்தை நன்றாக ரசிக்க முடியும். மாறாக, ‘விஜய் கோக் விளம்பரத்தில் நடித்தாரே? இப்பொது அதே குளிர்பான நிறுவனத்தை நரம்பு புடைக்க வசனம் பேசி எதிர்க்கிறாரே? இது என்ன நியாயம்’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தால் பணம் சம்பாதிக்கும் இதுபோன்ற திரைப்பட வழிமுறைகள் உங்களுக்கு இன்னும் புரியவில்லை என்றே அர்த்தம். இதுபோன்ற திரைப்படங்களில் வரும் வசனங்களை நடிகர்/இயக்குநர்/வசனகர்த்தாக்கள் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றுவார்கள் என்றெல்லாம் கோமாளித்தனமாக நினைக்கும் நபர்களுக்குத்தான் ‘குசேலன்’ படத்தில் ஏற்கெனவே புட்டத்தில் சூடு வைத்து அனுப்பிவிட்டார்களே? (அதில் பத்திரிக்கையாளர் ஒருவர் ஹீரோவைக் கேட்கும் வசனத்தை நினைவுகூர்க). இதுவேதான் தயாரிப்பு நிறுவனமான லைகா பற்றியும் எழும் விமர்சனங்களுக்கும் பொருந்தும். கார்ப்பரேட்களைப் பற்றி ஒரு கார்ப்பரேட் எடுத்த படம் என்று இதனை வைத்துக்கொள்ளவேண்டியதுதான். ராஜபக்‌ஷவுடன் தொடர்புடைய நிறுவனம் என்று வைத்துக்கொண்டால், பல இந்திய நிறுவனங்கள் இலங்கையுடன் நேரடித் தொடர்பு வைத்திருக்கின்றனவே? அவற்றைப் பற்றிய நமது நிலைப்பாடு என்ன?

’கத்தி’ படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் – அதன் ஃப்ளாஷ்பேக். படம் துவங்கி ஏறத்தாழ ஐம்பது நிமிடங்கள் கழித்து இது வருகிறது. அந்த முதல் ஐம்பது நிமிடங்கள் அலுப்பாகத்தான் இருந்தன. வழக்கமான எல்லாத் தமிழ்ப்படங்களிலும் வரும் அதே போன்ற காட்சிகள் (ஹீரோவின் பிரம்மாண்டமான அறிமுகம், ஹீரோவின் கூடவே வரும் கோமாளிக் காமெடியன், இந்தக் காமெடியனை விடவும் கோமாளித்தனமான ஹீரோயின் அறிமுகம், ஹீரோ ஹீரோயின் பின்னால் சுற்றுவது) இதிலும் வந்ததே காரணம். இந்தக் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்கள் என்றுதான் சொல்வேன். காரணம் படத்தில் கதை துவங்குவது இந்த ஃப்ளாஷ்பேக்கில்தான். படம் துவங்கி ஐம்பது நிமிடங்கள் கதையே இல்லை என்றால் எப்படி இருக்கும்?

ஆனால் ஃப்ளாஷ்பேக் துவங்கியதும் அந்த எண்ணம் போய்விட்டது. மிக வலுவான கதை இதில் இருக்கிறது. நம்மைச்சுற்றி நிஜமாகவே நடந்துகொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்னை இதில் பேசப்படுகிறது. சரி – எல்லாப்பக்கமும் இது சொல்லப்பட்டுவிட்டதால் இங்கு சொல்வதில் தப்பில்லை – விவசாயிகளின் நிலங்கள் அவர்களிடமிருந்து அபகரிக்கப்படுதல், அந்த நிலங்களில் Multinational companies எனப்படும் மிகப்பெரிய நிறுவனங்கள் தங்களின் தொழிற்சாலைகளை நிறுவுதல், இதனால் விவசாயிகள் தற்கொலை என்ற பிரச்னைதான் அது. படம் பார்க்கும் நமக்கும் இது ஏற்கெனவே தெரிந்திருப்பதால் இந்தக் காட்சிகளை உணர்வுபூர்வமாகப் பார்க்கமுடிகிறது. அதுதான் இந்தப் படத்தின் பலம். இந்த ஃப்ளாஷ்பேக்கில் இருந்து படம் முடியும்வரை இதே உணர்வுபூர்வமான பிணைப்பு, ஆடியன்ஸுக்கும் படத்தும் உடையாமல் தொடர்கிறது. அதுதான் இந்தப் படம் வசூலில் வெற்றிபெறப்போவதன் அடையாளம்.

ஆனால் அப்படிப்பட்ட பிணைப்பு கிடைக்க நாம் ஐம்பது நிமிடங்கள் மகா அறுவையான காட்சிகளைத் தாங்கிக்கொண்டு அமர்ந்திருக்கவேண்டும் என்பதே இந்தப் படத்தின் மிகப்பெரிய பிரச்னை. ஒரு நிமிடம் கூட உட்கார முடியாமல் கழுத்தை அறுக்கின்றன இந்த முதல் ஐம்பது நிமிடக் காட்சிகள். என்னதான் கதிரேசன் என்ற கதாபாத்திரம் ஜீவா என்ற கதாபாத்திரத்துடன் ஆள் மாறாட்டம் செய்து அவன் இடத்துக்கு வருவதை சுவாரஸ்யமாகக் காட்ட நினைத்திருந்தாலும், அந்த சுவாரஸ்யம் அமையாத காட்சிகள் இவை. இலக்கே இல்லாமல் ஏனோதானோ என்று வெளிநாடு போக நினைக்கும் ஹீரோ, திடீரென்று ஏர்போர்ட்டில் அவனிடம் வந்து மனநிலை பாதிக்கப்பட்ட பெண் போலவே பேசி நெளியும் ஹீரோயின், அந்த ஹீரோயினிடம் பேசும்போதெல்லாம் ஏதோ வயிற்றில் பிரச்னை வந்ததுபோல நெளியும் ஹீரோ என்றே இந்தக் காட்சிகள் செல்கின்றன. இந்த ஐம்பது நிமிடங்களில் இரண்டு இரைச்சலான பாடல்கள் வேறு.

இவற்றையெல்லாம் தாண்டியபின்னர் ஃப்ளாஷ்பேக் தொடங்குகிறது. அங்கே துவங்கும் வேகம், படத்தின் க்ளைமேக்ஸ் வரை தொடர்கிறது. இடையே எங்குமே படம் தொய்வு அடைவதில்லை. இரண்டாம் பாகம் முழுவதுமே படுவேகமாகப் படம் செல்கிறது. முடிகையில் மிகவும் செயற்கையான ஒரு சண்டைக்காட்சி.

படத்தின் மிகப்பெரிய பலம், இரண்டாம் பாதியும், அதை மிகவேகமாக எழுதிய முருகதாஸுமே. இரண்டாம் பாதியில் வசனங்கள் பொறி பறக்கின்றன (ஆனால், ஏற்கெனவே பார்த்ததுபோல் சமுதாய விழிப்புணர்ச்சி அது இது என்று இந்தப் படத்தில் எந்த நோக்கமும் இல்லை. இப்படிப்பட்ட வசனங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கம் மட்டுமேதான் உள்ளது. எனவே இந்த வசனங்களைக் கேட்டுக் கண்டபடி உணர்ச்சிவசப்படவேண்டாம்). நிஜத்தில் நம்மைச்சுற்றி நடந்துகொண்டிருக்கும் பிரச்னைகள் இவை. என்னதான் பணம் சம்பாதிக்க மட்டுமே வைக்கப்பட்டிருந்தாலும், இந்தப் பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசியதன்மூலம், குறைந்தபட்சம் படம் பார்க்கும் மக்களின் மனதில் இவைகளைப் பற்றிய ஒரு கேள்வியை எழுப்பியிருக்கும் முருகதாஸுக்குப் பாராட்டுகள். இவைகளைப் பேசிவிட்டு அவர்கள் அடுத்த படத்தை நோக்கிச் சென்றாயிற்று. இனி ஆடியன்ஸும் ஒரு வாரம் இந்தக் கேள்விகளை நினைத்துப்பார்த்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடலாம். மொத்தத்தில் எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை. படத்தில் கேட்கப்படும் கேள்விகள் நிஜத்தில் கேட்கப்படவேண்டும் என்றால், கதாநாயகனாக நடித்த விஜய்யும், இந்த வசனங்களை எழுதிய முருகதாஸும் வெளியே வந்து ரோட்டில் இறங்கிப் போராடினால் அது சாத்தியம். ஆனால் அது நடக்காது. கைதட்டல் வாங்கவேண்டும் என்றே எழுதப்பட்ட வசனங்கள், அவை எழுதப்பட்ட நோக்கத்தைத் தமிழகத்தில் நடத்திவிட்டன.

படத்தின் மிகப்பெரிய பிரச்னை – விஜய்யின் நடிப்பு. எந்தக் காட்சியிலும் அவருக்கு நடிக்க வரவில்லை. இது நல்ல நடிப்பு தேவைப்படும் கதை. விக்ரம் போன்றவர்களுக்குச் சரியான சப்ஜெக்ட். விஜய்யால் இந்தக் கதைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. ஹீரோயினைப் பார்க்கும்போதெல்லாம் எப்போதும் எல்லாப் படங்களிலும் நெளிவது போலவே இதிலும் கண்டபடி நெளிந்திருக்கிறார். உணர்ச்சிகரமாக நடிக்கும் காட்சிகளில் ஒரு உணர்ச்சியும் இல்லாமல் கைகளை மேலும் கீழும் ஆட்டுகிறார். கதிர் பேசிக்கொண்டிருக்கும்போது அதை டிவியில் பார்த்துக்கொண்டிருக்கும் ஜீவாவின் முகத்தைக் கவனியுங்கள். எத்தனை செயற்கையான நடிப்பு என்பது புரியும். இவருக்கென்றே எழுதப்பட்ட பஞ்ச் வசனங்களும் ஆங்காங்கே இருக்கின்றன. அவற்றை உச்சரிக்கையில் வெறித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு மறுபடியும் கைகளை வேகமாக ஆட்டுகிறார். நடிப்பு ரீதியில் விஜய் இன்னும் பல படிகள் முன்னேறவேண்டி இருக்கிறது. விஜய்தான் இப்போது தமிழகத்தில் #1 நடிகர் என்பது உண்மையாக இருக்கும்போதிலும், அந்த இடத்தில் இதுவரை இருந்த மிக மிக weak நடிகர் இவர்தான். ’கில்லி’ படத்தில் நல்கிய குறைந்தபட்ச) நடிப்பைக்கூட இந்தப் படத்தில் அவர் வழங்கவில்லை. தனது நடிப்பை விஜய் மெருகேற்றிக்கொண்டால் இன்னும் பல படங்களில் அவர் சிறந்துவிளங்க முடியும். ஆனால் இதே பிரச்னைதான் அஜீத்துக்கும் உள்ளது என்பதை நினைத்துப்பார்த்தால் இப்போதைய தமிழ் நடிகர்களின் பிரச்னை இதுதான் என்று புரிகிறது.

சமந்தாவின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் தேவையே இல்லை. அவருக்குக் கதையில் எந்தத் தொடர்பும் இல்லை. வெறும் பாடல்களுக்கும், மனநிலை பிறழ்ந்த நடிப்பை வழங்குவதற்கும் மட்டுமே அவர் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறார். வில்லனாக வரும் நீல் நிதின் முகேஷைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. முருகதாஸ் படம் என்பதால் நடித்தார் போலும்.

இந்தப் படத்தின் இன்னொரு பிரச்னை- அதன் நீளம். கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம். இத்துடன் இடைவேளையையும் கணக்கிட்டால் மூன்று மணி நேரம். இப்போதெல்லாம் மூன்று மணி நேரம் ஒரு திரையரங்கில் அமர்ந்திருக்க யாராலும் முடியாது. அது XXX படமாக இருந்தால் கூட. முதல் ஐம்பது நிமிடங்களை வெட்டி வீசிவிட்டு, பாடல்கள் இல்லாமல் சுறுசுறுப்பாக எடுத்திருந்தால் இரண்டு மணி நேரங்களில் இந்தப் படத்தை முடித்திருக்கலாம். அது இன்னும் நன்றாக இருந்திருக்கும். போலவே படத்தின் இசை – ஒரு பாடல் கூட ரசிக்க முடியாதபடி இருந்தது. படத்தின் தீம் இசை ஆங்காங்கே வருவது நல்ல முயற்சி. பின்னணி இசையை நன்றாக அமைத்திருக்கும் அனிருத், பாடல்களில் கோட்டை விட்டுவிட்டார். பாடல்கள் படத்தின் வேகத்தைக் குறைக்கும் ஸ்பீட் ப்ரேக்கர்களாகவும் இருக்கின்றன.

இந்தப் படத்தைக் கவனித்தால் இன்னொன்று தெரிகிறது. ஒரு காலத்தில் படம் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை சுவாரஸ்யமாக இருக்கவேண்டும் என்று இருந்தது. அப்படிப்பட்ட படங்களையே அனைவரும் வழங்கினர். மாடர்ன் தியேட்டர்ஸிலிருந்து ஷங்கர் வரை. அதன்பின் இந்த ட்ரெண்ட் மெல்ல மெல்லக் குறைந்து, இப்போது படத்தின் 4-5 காட்சிகள் நன்றாக இருந்தாலே போதும் என்று வந்து முடிந்திருக்கிறது. இந்தக் காட்சிகளுக்கு இடையே பாடல்கள், சண்டைகள் என்று நிரப்பியே பல படங்கள் வருகின்றன. குறிப்பாக, பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள். அப்படியேதான் கத்தியும் வந்திருக்கிறது.

என்னதான் மேலே சொன்ன அத்தனை பிரச்னைகள் இருந்தாலும், மனதைத் தொடும் கதை ஒன்றை எடுத்துக்கொண்டு அதனை இரண்டாம் பாதி முழுக்க விவரித்திருக்கும் இந்தப் படம் அவசியம் வெற்றி அடையும் என்பதில் சந்தேகமில்லை. தனிப்பட்ட முறையில் உண்மையிலேயே எனக்குத் துப்பாக்கியை விட கத்திதான் பிடித்தது. துப்பாக்கி ஒரு முழுமையான கமர்ஷியல் படம். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை விறுவிறுப்பான காட்சிகள் அடங்கியது. ஆனால் கத்தி அப்படி இல்லை என்பதை மேலே பார்த்தோம். அலுப்பான துவக்கத்துடன் இருந்தாலும், முக்கியமான சமூகப்பிரச்னை ஒன்றைப் பற்றிப் பேசியிருக்கும் படம் இது. இனி எப்படியும் அவ்வப்போது மக்கள் மனதில் இது நினைவு வந்துகொண்டுதான் இருக்கும். அந்த வகையில், இனி எதுவுமே நடக்காது என்றபோதிலும் சராசரி கமர்ஷியல் படமாக இல்லாமல் இப்படி ஒரு பிரச்னையைப் பேசியதாலேயே இது எனக்குத் துப்பாக்கியைவிடவும் நல்ல படமாகத் தோன்றியது.

இப்போது படத்தைப் பற்றிய சில விஷயங்கள்.

இந்தப்படம் கோபி என்பவரிடம் இருந்து திருடப்பட்டு முருகதாஸ் எடுத்த படம் என்று பா.ஏகலைவன் என்பவர் எழுதியிருக்கிறார். இது உண்மையாக இருந்தால் இன்னொருவரின் உழைப்பில் இருந்து குளிர்காய்வது அவசியம் தவறுதான். தவறு என்பதைவிட, கேவலம் என்றே சொல்வேன். இதைப்பற்றிய விபரங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறேன். இதுவேதான் ‘மெட்ராஸ்’ படத்துக்கும் நிகழ்ந்தது. அப்படமும் இன்னொருவரின் உழைப்பு (கறுப்பர் நகரம்) என்று தினகரனில் ஒரு குற்றச்சாட்டைப் படித்தேன். மெட்ராஸ் படம் உண்மையிலேயே மிகவும் நல்ல படம். அந்தப் படம் அப்படி எடுக்கப்பட்டிருக்காது என்று நம்புகிறேன். ஒருவேளை அப்படி எடுக்கப்பட்டிருந்தால் அதுவும் மிகவும் கண்டிக்கத்தக்கதே.

போலவே படத்தின் இரண்டாம் பாதியில் சில வெளிப்படையான வசனங்கள் வருகின்றன. கோலா கம்பெனி, 5000 கோடி கடன் வைத்திருக்கும் பியர் நிறுவன அதிபர், ஒரு நாளுக்கு ஐயாயிரம் குழந்தைகள் இறப்பு, 2ஜி, ஸ்ட்ராபெர்ரி காண்டம், பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் ஃபேர்னெஸ் க்ரீம்கள் என்று. இத்தனை வெளிப்படையான வசனங்களை நான் தமிழில் கேட்டதே இல்லை. வசனம் எழுதிய முருகதாஸுக்குப் பாராட்டுகள். ஆனால் அதேசமயம், 2ஜியைப் பற்றி எழுதிய முருகதாஸ், சொத்துக்குவிப்பு வழக்கு பற்றி எழுதவில்லையே? அது ஏன்? சமீபத்தில் ஜெயலலிதாவுக்காக நடந்த உண்ணாவிரதம் ஒன்றில் முருகதாஸைப் பார்க்க முடிந்தது. அதுதான் காரணமா?

மூன்றாவதாக, நேற்றுச் சென்னை திருநின்றவூரில் ஸ்ரீ லக்‌ஷ்மி சினிமா ஹால் என்ற திரையரங்கின் உரிமையாளர் N. கிருஷ்ணன் என்ற 75 வயது முதியவர் கொல்லப்பட்டிருக்கிறார். தியேட்டர் வாசலில் நின்ற இவரை திடீரெனக் கூட்டம் முட்டித்தள்ளிக்கொண்டு உள்ளே வந்திருக்கிறது. வாசலில் இருந்த கண்ணாடி உடைந்து இவர் மேல் விழுந்து இறந்திருக்கிறார். கூட்டம் இவரை மிதித்துக்கொண்டு ஓடியிருக்கிறது. இப்படிப்பட்ட வெறியர்களைத்தான் ரசிகர்கள் என்ற பெயரில் தமிழ் சினிமா உருவாக்கி வைத்த்திருக்கிறது. இது மிகவும் மிருகத்தனமான சம்பவம். சினிமா வெறி அளவுகடந்தால் இப்படித்தான் ஆகும். இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  Comments

23 Comments

  1. //ஆனால் அதேசமயம், 2ஜியைப் பற்றி எழுதிய முருகதாஸ், சொத்துக்குவிப்பு வழக்கு பற்றி எழுதவில்லையே? அது ஏன்? சமீபத்தில் ஜெயலலிதாவுக்காக நடந்த உண்ணாவிரதம் ஒன்றில் முருகதாஸைப் பார்க்க முடிந்தது. அதுதான் காரணமா?
    தண்ணீரில் என்ன சம்பாதிக்க முடியும் என்ற ஒரு நிருபரின் கேள்விக்கான பதில் அது… காத்துல ஊழல் பண்ற ஊரு இது என்று சொல்வார்கள்…. காற்றுக்கும் அலைகற்றைக்கும் சம்பந்தம் இல்லை என்பது வேறு விஷயம்.
    //
    பிறகு விவசாயம் பாழாய் போனதற்கான காரணமாய் படத்தில் சொல்ல பட்டிருக்கும் கருத்துகள் ஒரு சதவிகிதம் தான்.
    உண்மையில் விவசாயிகளுக்கு பிரச்சனையே நம் அரசாங்கம் தான். Our very own government is the culprit.
    நீராதாரங்கள் சரியான முறைமை இல்லாமை; குளங்கள் தூர்வாறதல், நீர் சேமிப்பு பற்றிய அறிவின்மை
    அரசு இயந்திரங்கள் விவசாயத் துறையை முற்றிலுமாக கைகழுவி விட்டது இதுபோக விவசாயிகளின் அறியாமை ; இன்றைய தலைமுறை விவசாயத்தை வைத்து பணம் சம்பாதிக்க முடியாது என்று சீண்டாமல் விட்டது- இது போன்ற ஏராளமான காரணங்கள் உள்ளது. அதை விடுத்து ஒட்டுமொத்தமாக கார்போரேட் மீது பழி போடுவதெல்லாம் சுத்த அபத்தம்.

    முருகதாஸ் இது போன்ற அரைவேக்காடு அறிவோடு தான் தனது திரைப்படங்களை எடுத்து வருகிறார். தயவு செய்து அவர் சினிமா துறையை விட்டு விலகி இருக்கலாம்

    Reply
    • Bala

      You are absolutely correct

      Reply
  2. Theater owner death happened accidentally.It is not a murder.Your tone sounds like that.

    Reply
    • I actually didn’t mean so. It is purely accidental that my tone sounds like that

      Reply
      • But I wanted to tell something about those fanatics, who stampeded.

        Reply
  3. //சிவாஜி, கமல்ஹாஸன் நடித்து 1977ல் வெளிவந்த ’நாம் பிறந்த மண்’ படம்தான் ஒரு சூப்பர் ஹீரோவை சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வாக முன்னிறுத்தியது (இதே படம் பிந்நாட்களில் ’இந்தியன்’ என்ற பெயரில் ஷங்கரால் இயக்கப்பட்டது.// என்னால் இதை நம்பமுடியவில்லை. நான் ‘நாம் பிறந்த மண்’ படத்தை பார்க்கவும் இல்லை. அதுகூட காரணமாக இருக்கலாம். ஆனால் ‘நான் சிகப்பு மனிதன்’-க்கும் ‘அந்நியன்’ படத்துக்கும் அடிப்படையில் ஒற்றுமை உண்டு என்பதை உண்ர்கின்றேன். தன் குருநாதரிடமிருந்தே ‘அந்நியன்’ கதைக்கருவை கறந்திருக்கின்றார் ஷங்கர் என்பது எனது அபிப்பிராயம்.

    இந்தப் படத்திற்கு நானும் எனது பதிவில் விமர்சனம் போட்டேன். ( http://anpudanvarma.blogspot.com/2014/10/blog-post.html )ஆனால் உங்களுக்கும் எனக்கு இரு வேறு ரசனைகள் என்பதை ‘வேலை இல்லா பட்டதாரி’ விமர்சனத்திலும் இதிலும் உணர்ந்து கொண்டேன். அருமையான அலசல்.. வாழ்த்துக்கள்….

    Reply
  4. Avinash

    திரு. Rajesh பாலச்சந்தரின் “உன்னால் முடியும் தம்பி” ஒரு சிறந்த கமர்ஷியல் சமுக படம். உதயமூர்த்தி என்பவன் எவ்வாறு சமூகத்தின்மிது ஆர்வம் கொள்கிறான் என்று சொன்னவிதம் மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் பாடல்கள் உண்டு, காதல் உண்டு, சண்டை உண்டு, பாசமும் உண்டு. இதுபோன்ற படங்கள் இப்போது வந்தால் நன்றாக இருக்கும். கத்தி படம் கதை மட்டும்மே கூர்மை, திரைக்கதை மொண்ணை.

    பி.கு. இரண்டாம் பாதியும் ஏற்கனவே பார்த்த காட்சிகள் மாதிரியே இருந்தது. சுலபமாக யூக்கிக்கக் முடிந்தது, எனக்கு வேகமாகச் சென்றது என்று சொல்லமுடியாது. ஆரம்பத்தில் விட நடுவில் சற்று மேல்.

    Reply
  5. guru the barbaric act happens @ bangalore too fortunately owner escape. and the cops watching it without giving any protection. i found the movie a complete entertainer. nothing more than that.

    Reply
  6. VIJAYAKRISHNAN V

    நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனாலும் ஒரு கேள்வி. விஜய் இந்த இரண்டு வேடத்தில் வித்தியாசம் காட்டியிருக்கிறாரா? முன்னாள் இதே இரண்டுவேட படமான அ.த.ம. படு மொக்கையாக ஆனதற்கு விஜயின் நடப்பாரால் இன்னையே காரணம். முதலில் ஒரே ஆள் இரண்டு வேடத்தில் வருவாரேயானால் இரண்டு கதாபாத்திரங்களையும் நம் மனதில் பதியவைக்கவேண்டும். பின் ஆள்மாராட்டம் நடந்தபின் இரு காதாபாத்திரங்களையும் ஒன்றாக்கும் நடிப்பு வேண்டும். அதை கமல் மை.ம.கா.ரா. படத்தில் சிறப்பாக செய்திருப்பார்.

    Reply
  7. eeeshhh

    //படத்தின் மிகப்பெரிய பிரச்னை – விஜய்யின் நடிப்பு. எந்தக் காட்சியிலும் அவருக்கு நடிக்க வரவில்லை. இது நல்ல நடிப்பு தேவைப்படும் கதை. விக்ரம் போன்றவர்களுக்குச் சரியான சப்ஜெக்ட். விஜய்யால் இந்தக் கதைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது./// ….டாக்
    டர் விசய்க்கு நடிப்பு வராதது இந்த உலகத்திற்கே தெரியும்…ஆனால் அவர் ரசிகர்கள் மட்டும் ஒத்து கொள்ள மாட்டார்கள் …..

    Reply
  8. I feel last 40 mins only worth for watch. Because that scenes only i feel ARM touch.1st 2 hours are made me irritate…
    “Playground” is good but, the play is not well. dialogues are good,but that all are imposed. lots of big big logic mistakes. cinema templates,,,,

    Reply
  9. Fidel castro

    படத்தின் தீம் இசை திருடப்பட்டதே, வாத்தியங்களை மட்டுமே மாற்றி ஏமாற்றியிருக்கிறார் அனிருத்

    Reply
  10. வசங்களின் வெளிப்படை தமை எனக்கும் வியப்பாகத்தான் இருந்தது… நீங்க படம் எப்படி இருந்ததுன்னு கேட்டு ஒரு போஸ்ட் போட்டிருந்தப்போ நடிப்பு பத்தி எனக்கு தெரியலைன்னு சொல்லிருந்தேன்… நிஜமனே எனக்கு தெரியல.. இதை மாதிரி படங்கள பாத்த நடிப்புன்ன என்னனே மரத்துடவேண்டியதுதான் போலிருக்கு… நீங்க சொன்னமாதிரிதான் முதல் கொஞ்ச நேரம் நம்மள குனியவெச்சி நன்குநன்குனு நெரப்பிடரானுங்க… சமந்தா பற்றி எதிர் வீட்டு அக்காவின் கமென்ட்” விஜயவிட சமந்தாகுதான் அதிகமா கத்துரனுங்க அஞ்சான்ல தொடைய காட்டி எல்லாரையும் கவர் பண்ணிபுட்டா”
    //மூன்றாவதாக, நேற்றுச் சென்னை திருநின்றவூரில் ஸ்ரீ லக்‌ஷ்மி சினிமா ஹால் என்ற திரையரங்கின் உரிமையாளர் N. கிருஷ்ணன் என்ற 75 வயது முதியவர் கொல்லப்பட்டிருக்கிறார். தியேட்டர் வாசலில் நின்ற இவரை திடீரெனக் கூட்டம் முட்டித்தள்ளிக்கொண்டு உள்ளே வந்திருக்கிறது. வாசலில் இருந்த கண்ணாடி உடைந்து இவர் மேல் விழுந்து இறந்திருக்கிறார். கூட்டம் இவரை மிதித்துக்கொண்டு ஓடியிருக்கிறது. இப்படிப்பட்ட வெறியர்களைத்தான் ரசிகர்கள் என்ற பெயரில் தமிழ் சினிமா உருவாக்கி வைத்த்திருக்கிறது. இது மிகவும் மிருகத்தனமான சம்பவம். சினிமா வெறி அளவுகடந்தால் இப்படித்தான் ஆகும். இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//
    நண்பனுக்காக முதல் நாளே ரசிகர் மன்ற டிக்கெட் எடுத்து காலைல எழு மணி ஷோக்கு போய் நின்னா.. கவுண்டர் திறந்த உடனே என்னைய தள்ளிகிட்டு மேல ஏறி மிதிச்சிக்கிட்டு ஓடுனானுங்க பாருங்க….
    கொஞ்சம் சுதரிக்கலைன்னா என்பெரும் நியூஸ்ல வந்திருக்கும்.. இவங்க எல்லாம் ரசிகர்கள் இல்ல வெறியர்கள்..

    Reply
  11. படம் பார்த்து விட்டு தான் படிக்கணும்னு இருந்தேன். பார்த்தாச்சு. படிச்சாச்சு. ஒத்து போயாச்சு.

    Reply
  12. ragavan

    Mr.karundhel,
    you r a best crictic. naan oru varusama blog padikiran. but intha review totally otthupoga mutialay. all vijay padam (all existing movies except (kathalooku mariathiai and poovay unakaka) and upcoming movies are totally waste. i am not ajith fan but i am a good cienma fan. intha padam nalla illa boss. concept wise and also concept told wise. please read alex paul manon(IAS) http://tamil.oneindia.com/news/tamilnadu/alex-paul-menon-s-article-on-mater-management-tamil-nadu-213641.html review. dont support this film. ALL AJITH AND VIJAY FILMS ARE MADE TO CREATE AND BOOST THEIR IMAGES.

    Reply
  13. Dhaya

    Vanakkam,

    This is the first time I have read your article/review, as someone forwarded this to me. Here are some of my thoughts about your review.

    Just like the movie, your review fails to gets to the point. If your heading says “review” shouldn’t get to the point of being a review about this movie? Your review talks about history of Tamil cinema, artists personal life, events that happened at the theater, etc. What’s that got to do with a review of the movie? Not that I don’t agree with the points that are made, but think those points that you have made should be put under a different heading. This piece should have been just the review. Do you agree?

    In terms of the characterisation of the female lead, songs that interrupt the follow of a story, comedy track that deviates from the story all are unfortunately part of Indian cinema for a very long time, there has only been a few exceptions. So no point in going on about those factors in a review of a movie, it could be summarised in a sentence as usual commercial rubbish.

    Does any of the actors/directors care about our Tamil community? Not really. They are out to line their own pockets, there is nothing new about this. However, I for one welcome the fact that they brought some light to a very important issue. As you mentioned, people will move on talking about it, but at least this than nothing at all right?

    Finally, please don’t get me wrong I am not writing this to criticise, but I am just giving you my thoughts that is to compartmentalise your writing under appropriate topics, that’s all.

    All the best with your writing in the future.

    Reply
  14. srini

    awesome review brother, just happened to see your website just for intersteller review, read few post also, wondering how i missed you in social network till these days, your one of the honest reviewer, esp kathi i too felt that 50 mins is utter waste, please come to twitter and make your presence felt everywhere.

    Reply
  15. srini karthi

    tamil cinima politics dialogue vanthathu ila.but intha movie la vanthuruku.arm dialogue writter and vijay dialogue delivery good.intha flim marthri ajith,suriya,and vikram confidence ah act panamatanga.vijay only right…

    Reply
  16. srini karthi

    now cinima industry anybody who guts to ready or confidence to make tha flim like that/ much more than that… same as rajini, ajith,vikram ???? and some top directors ???

    Reply
    • Nope. I am not talking about guts/confidence or mojo. All I am concerned is the fact that the film is not interesting, and way too predictable. Please check my review again. I have given all the weak links in the film.the second half was good. the first half was not.

      Reply

Join the conversation