கிம் டாட்காமும் காப்புரிமை மீறலும்

by Karundhel Rajesh January 31, 2012   Copies

ஜனவரி 20 ம் தேதி, கிம் டாட்காம் என்ற கிம் ஷ்மிட்ஸ், ந்யூஸிலாண்ட் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இது வெறும் செய்திதான். ஆனால் இதன்பின்னால் இருக்கும் விஷயங்கள் அத்தனையும் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக, SOPA மற்றும் PIPA பற்றித் தெரிந்துவைத்திருக்கும் நபர்களுக்கு. காப்புரிமை மீறல் என்ற குற்றம் விளைவித்திருக்கும் தண்டனைதான் இது. காப்புரிமை மீறல் பற்றி அவ்வப்போது நாம் பார்த்து வந்திருப்பதால், இதைப்பற்றித் தெரிந்துகொள்வது நமக்கு முக்கியமானதாகிறது.

Megaupload என்ற தளத்தைப் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கும். இணையத்தில் மிகப்பிரபலமான ஃபைல் ஷேரிங் தளம் இது. இதில் பலவிதமான தகவல்கள் – பெரும்பாலும் திரைப்படங்கள், மென்பொருட்கள் ஆகியன – பகிரப்பட்டன. இந்தத் தளத்தின் உரிமையாளர் தான் கிம் டாட்காம். இவர்தான் ஜனவரியில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இவர் கைது செய்யப்பட்டதற்குக் காரணம், அமெரிக்க சட்டத்துறை, காப்புரிமை மீறல் சம்மந்தமாக இவர் மேல் போட்ட வழக்குதான். பொதுவாக, அமெரிக்காவில் வழக்கு போடப்பட்டால் அவ்வழக்கின் காரணமாக வெளிநாட்டில் இருக்கும் ஒரு நபர் கைது செய்யப்படுவது சற்றே அரிது. இருப்பினும், மெகா அப்லோட் தளம் விளைவித்த பல மில்லியன் டாலர் நஷ்டத்தின் காரணமாக, இவ்வழக்கு மிகத்தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அதன் விளைவாக, ந்யூஸிலாண்டில் வாழ்ந்துவந்த கிம் டாட்காம் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இவரோடு சேர்ந்து மொத்தம் நான்கு பேரை அமேரிக்கா அள்ளியிருக்கிறது.

இந்தக் கைது, SOPA மற்றும் PIPA ஆகிய காப்புரிமை மீறல் தடைச்சட்டங்கள் ஒப்புக்கொள்ளப்படுவதற்கு முன்னரே நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல, இந்த இரண்டு மசோதாக்களும் சட்டங்களாக மாறினால், இணையத்தில் மிகக்கடுமையான தணிக்கை முறை அமல்படுத்தப்படுவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் உள்ளன. ஆனால், அப்படி அவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னரே இந்தக் கைது நடந்திருப்பது, அமேரிக்கா இனியும் காப்புரிமை மீறலை சும்மா விட்டுவிடாது என்பதையே உணர்த்துகிறது.

மெகா அப்லோட் தளமும், அதனைச் சார்ந்த பிற தளங்களும் உடனடியாக முடக்கப்பட்டுவிட்டன. அந்தத் தளங்களில், FBI வெளியிட்டிருக்கும் செய்தி இணைக்கப்பட்டுள்ளது.

மெகா அப்லோட் தளத்துடன் ஒப்பிடக்கூடிய வகையில் வேறு சில தளங்களும் உள்ளன. Rapidshare பற்றி இதைப்படிக்கும் நண்பர்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அந்தத் தளத்தில் இல்லாத திரைப்படங்களே இல்லை என்னும் அளவுக்கு அதில் காப்புரிமை மீறல் நடந்துகொண்டிருக்கிறது. கிம் டாட்காமின் கைதைத் தொடர்ந்து, இதைப்போன்ற பிற ஃபைல் ஷேரிங் தளங்கள் நடுக்கத்தில் உள்ளன. என்னதான் ரேபிட்ஷேர் நிர்வாகிகள் தங்களுக்கும் இந்தக் கைதுக்கும் சம்மந்தமோ வருத்தமோ இல்லை என்று அறிக்கை விட்டிருந்தாலும், எந்த நேரத்திலும் இவைகளும் முடக்கப்படலாம் என்றே தெரிகிறது.

இந்தத் தளங்கள் முடக்கப்பட்டதில் உள்ள பிரச்னை என்னவெனில், பல இணையதள உபயோகிப்பாளர்கள் அப்லோட் செய்திருந்த தனிப்பட்ட ஃபைல்களும் முடக்கப்பட்டுவிட்டதுதான். பல பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை அப்லோட் செய்திருந்த அவர்களது ரெகார்ட்கள் மொத்தமாக முடக்கப்பட்டுவிட்டன.

என்னதான் அமேரிக்கா ஒரு முதலாளித்துவ நாடு என்றாலும், அதன் இந்தக் குறிப்பிட்ட செயல், அவசியம் தேவையான ஒன்றுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால், நான் ஏற்கெனவே எழுதியிருந்ததைப்போல், SOPA மற்றும் PIPA சட்டங்களை உபயோகப்படுத்தி, தேவையில்லாத பிரச்னைகளை அமேரிக்கா செய்துவிடக்கூடாது. அந்தச் சட்டங்களே தேவையில்லை என்பதே இன்னமும் என் நிலைப்பாடு. அதனை, அந்தச் சட்டங்கள் வருமுன்னரே நடந்துவிட்ட இந்தக் கைது நமக்குத் தெரியப்படுத்துகிறது. அந்தச் சட்டங்களே இல்லாமல் இதைப்போன்ற காப்புரிமை மீறல்களைத் தடுத்துவிட முடியும். அந்த இரண்டு சட்டங்கள் வந்தால், யாரை வேண்டுமானாலும் எந்தக் கேள்வியும் இல்லாமலேயே கைது செய்துவிட முடியும் என்பது ஆபத்தான ஒன்று.

இது ஒரு ஆரம்பம் தான். இணையதளத்தில் பரவலாக இருக்கும் காப்புரிமை மீறலை ஒரு பிடி பிடித்துவிட்டு, அமேரிக்காவின் பார்வை, திருட்டுத்தனமாகக் காப்பியடிக்கப்படும் திரைப்படங்களை நோக்கித் திரும்ப அத்தனை வாய்ப்புகளும் உள்ளன என்றே அமேரிக்காவின் இந்த மூவ்கள் தெரிவிக்கின்றன. அப்படி மட்டும் ஒரே ஒரு முறை நடந்துவிட்டால், அதற்குப் பின் இந்தியாவில் -குறிப்பாக ஹிந்தியிலும் தமிழிலும் – இப்படிப்பட்ட காப்பிகள் வெளிவராமல் நின்றுவிடும். ஆரோக்கியமான திரைப்படங்கள் வெளிவர அது வழிவகுக்கும்.

எப்பொழுதெல்லாம் தமிழ்ப்பட காப்பிகளைப் பற்றி நான் எழுதியிருக்கிறேனோ, அப்பொழுதெல்லாம் காப்பிகளை ஆதரித்தே எழுதும் சில ‘பிரபல’ நண்பர்களைக் கவனித்து வந்திருக்கிறேன். அவர்களுக்கு இந்தக் கட்டுரையை டெடிகேட் செய்கிறேன். அவர்களை, SOPA, PIPA மற்றும் கிம் டாட்காமின் கைதைப்பற்றி மேலும் தகவல்களைப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பி.கு 1 – கோவாவில் இருந்து நான் திரும்பி வந்ததும் சுடச்சுட இந்தச் செய்தியைப் பகிர்ந்த முரளிக்கு நன்றி.

பி.கு 2SOPA மற்றும் PIPA என்பவை என்ன? ஏதேனும் கால்பந்து அணிகளா என்று கேட்கும் நண்பர்களுக்கு, நான் எழுதிய இந்தக் கட்டுரையைப் பரிந்துரை செய்கிறேன்.

  Comments

8 Comments

  1. உண்மையில் SOPA, PIPA தேவையான ஒரு விடயம் தான். ஆனாப் பாருங்க ஹாலிவுட்ல ரிலீஸ் ஆகுற எத்தன புதுப் படங்கள் இந்தியாவுல ரிலீஸ் ஆகுது?

    அதுவும் இலங்கையில் இது ரொம்ப ரொம்ப மோசம். இங்கு மிகக் குறைவான அளவு படங்களே வெளியாகும். சில நேரங்களில் ஒரிஜினல் காப்பி வந்து படமும் பார்த்துமுடித்தபின் தான் தியேட்டர்ல ரிலீஸ் ஆகும். ஒரிஜினல் டிவிடிக்கள் பரவலாக இங்கு விற்கப்படுவதில்லை. நூற்றுக்கு தொண்ணுாறு வீதமானவை திருட்டுக் காப்பிகளே.

    நான் வாழும் இடத்தில் பெரிதாக தியேட்டர் வசதிகள் இல்லை. அப்படியே போட்டாலும் தமிழ்ப்படங்கள் தான்.

    SOPA, PIPA வெளிவந்தால் நம்ம பாடு அதோகதி தான்.

    Reply
  2. SOPA மற்றும் PIPA பதிவே சிறப்பாக இருந்தது.கொஞ்ச நாளா எந்த பதிவும் காணுமென்று எண்ணிருந்தேன்.அதற்கு ஏதுவாக தற்போது பரவ;லாக பேசப்படும் விஷயத்தையே பதிவாக்கி நல்ல தகவலாய் வழங்கி இருக்கிறீர்கள்..விரைவில் ஒரு நல்ல படத்தையும் அறிமுகம் செய்யுங்கள்.காத்திருக்கிறேன்.நன்றி.

    Reply
  3. இந்தியால யாரவது மாட்டுற மாதிரி அறிகுறி இருக்கிறதா ?

    Reply
  4. அய்யய்யோ………முடிஞ்ச அளவுக்கு முக்கிய – தேவையானத மொதல்ல டவுன்லோட் செய்யணும்……

    // //ஹிந்தியிலும் தமிழிலும் – இப்படிப்பட்ட காப்பிகள் வெளிவராமல் நின்றுவிடும். ஆரோக்கியமான திரைப்படங்கள் வெளிவர அது வழிவகுக்கும். //

    இதுக்கு வாய்ப்பு மிக மிக கம்மின்னு தான் தோணுது. தவிர, நம்மாளுங்க தான் ஹாலிவுட்ல இருந்து இப்ப கொஞ்சம் முன்னேறி கொரியன் – ஐரோப்பிய சினிமான்னு முன்னேறிகிட்டு இருக்காங்க.அது பொறுக்கலையா உங்களுக்கு.

    Reply
  5. அது என்ன பேரு – கிம் டாட்காம் ??

    Reply
  6. மிகவு நல்ல பதிவு .. நன்றி

    Reply
  7. @ ஹாலிவுட் ரசிகன் – SOPA & PIPA வந்தா, சும்மா ஏதாவது ஒரு போட்டோவை போட்டாலே அது காப்பிரைட் வயலேஷன்னு சொல்லி, சம்மந்தப்பட்டவரை விசாரணையே இல்லாம உள்ள தள்ள முடியும். அதுனால, அந்த ரெண்டும் தேவையே இல்லை. இப்ப இருக்குற சட்டத்தை வெச்சிதான் கிம் டாட்காமை உள்ள தள்ளிருக்காங்க. அதுனால அதுவே போதும்.

    படமே ரிலீஸ் ஆகாத இடங்களைப் பத்தி….அது நிஜமாவே ஒரு பிரச்னை தான். டாரண்ட் தான் உதவும். ஒப்புக்கறேன்.

    @ குமரன் – படங்களைப் பற்றி சீக்கிரம் போட்டு விடலாம். நன்றி

    @ The Chennai Pages – இந்தியாவை எல்லாம் இப்ப அவங்க கவனிக்கல. அவங்க நோக்கம் காப்பிரைட் வயலேஷனுக்காக இணையத்தை மானிட்டர் பண்ணுறதுதான். அதையெல்லாம் முடிச்சிட்டு இந்தப் பக்கம் வருவாங்கன்னு ஒரு நம்பிக்கை இருக்கு. பார்ப்போம்.

    @ கொழந்த – //இதுக்கு வாய்ப்பு மிக மிக கம்மின்னு தான் தோணுது. தவிர, நம்மாளுங்க தான் ஹாலிவுட்ல இருந்து இப்ப கொஞ்சம் முன்னேறி கொரியன் – ஐரோப்பிய சினிமான்னு முன்னேறிகிட்டு இருக்காங்க.அது பொறுக்கலையா உங்களுக்கு.//

    அப்படி நடக்கும்னு சொல்லல. நடந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன் (வஜன உபயம் – கமலஹாச சாஸ்திரி) .

    கிம் டாட்காம் என்பது, நம்ம வைகோ மாதிரி. ஒரிஜினல் பேரான கிம் ஸ்மிட்ஸ் என்பதை டாட்காம்னு அதிகார பூர்வமாகவே மாத்திகிட்டார்.

    @ pranavan G – நன்றி தலைவா

    Reply

Join the conversation