Kong: Skull Island-3D (2017) – English
காங்: ஸ்கல் ஐலாண்ட் படம், வார்னர் ப்ரதர்ஸ்/லெஜண்டரி பிக்சர்ஸ் வழங்கும் ஒரு மான்ஸ்டர் படம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், வழக்கமான மான்ஸ்டர் படங்களைப் போல் அல்லாமல், இப்படம் உலகெங்கும் நல்ல விமர்சனங்களைக் குவித்துக்கொண்டிருக்கிறது என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கக்கூடும். உண்மையில் ஜுராஸிக் வேர்ல்ட் படத்தோடு இதனை ஒப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள் விமர்சகர்கள். அப்படம் இதற்கு முன்னர் ஜுஜுபி என்பதுதான் ஏகோபித்த கருத்து. அது உண்மையா? படம் எப்படி?
முதலில், இந்த மான்ஸ்டர்வெர்ஸ் பற்றிய சில தகவல்கள். எப்படி மார்வெல் நிறுவனம், அவெஞ்சர்கள் சீரீஸை ஒவ்வொன்றாக வெளியிட்டு வெற்றி அடைந்ததோ (மார்வெல்லின் இந்த சக்ஸஸ் ஃபார்முலா ஹாலிவுட்டில் விரிவாக அலசப்பட்டுக்கொண்டிருக்கிறது), அப்படித்தான் லெஜெண்டரியும், தன்னிடம் உள்ள மான்ஸ்டர்களை வைத்து சில படங்கள் எடுக்க முடிவு செய்தது. அப்படி reboot செய்யப்பட்டதுதான் 2014ல் வெளியான Godzilla படம். ஆனால் இந்தப் படத்தின் திரைக்கதை எப்போதோ (தொண்ணூறுகளிலேயே) எழுதப்பட்டுவிட்டது. 1994ல் டெர்ரி ரோஸியோவும் டெட் எலியட்டும் இதனை எழுதி முடித்துவிட்டனர் (இந்த இருவரும் தற்கால ஹாலிவுட் திரைக்கதையில் ஜாம்பவான்கள். அலாதீனில் தொடங்கி, பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் முதல் மூன்று படங்கள் இவர்களின் கைவண்ணமே. ஆனால், படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக இருக்கவே, இந்தத் திரைக்கதை கைவிடப்பட்டது. அதன்பின்னர் ஒரு சில வருடங்கள் கழித்து, இண்டிபெண்டன்ஸ் டே படத்தை எடுத்துப் பிரம்மாதப்படுத்தியிருந்த ரோலாண்ட் எம்மரிச் மற்றும் டீன் டெவ்லினை அப்போது காட்ஸில்லாவின் உரிமம் பெற்றிருந்த ட்ரைஸ்டார் நிறுவனம் அணுகியது. அவர்கள் விதித்த ஒரே கண்டிஷன், பழைய திரைக்கதையை எடுத்துக்கொள்ளமாட்டோம் – எங்கள் இஷ்டத்துக்குத் திரைக்கதை எழுதுவோம் என்பதே. ட்ரைஸ்டார் ஒப்புக்கொள்ள, நாம் கண்ட காட்ஸில்லா (1998) வெளியானது.
அப்படத்தில் காட்ஸில்லா வில்லன். எனவே இறுதியில் இறந்துவிடும். ஆனால் உண்மையில் காட்ஸில்லாவின் பழைய திரைப்படங்களில் காட்ஸில்லா என்பது ஒரு ஹீரோ. தேசியச்சின்னமாகவே அறிவிக்கப்படக்கூடிய அளவு புகழ்பெற்றது. இதையொட்டியே டெர்ரி ரோஸியோவும் டெட் எலியட்டும் தங்களது திரைக்கதையை அமைத்திருந்தனர். ஆனால் அதை முற்றிலும் மாற்றி, ரோலாண்ட் எம்மரிச்சும் டீன் டெவ்லினும் காட்ஸில்லாவைக் குரூரமான வில்லனாக (வில்லியும் கூட. முட்டையிடும் காட்ஸில்லாவை நினைவிருக்கிறதா?) மாற்றிவிட்டனர்.
காட்ஸில்லாவை எடுத்த ட்ரைஸ்டாரின் உரிமையை அந்நிறுவனம் புதுப்பிக்காமல் விட்டுவிட்டது. எனவே 2003ல் அவ்வுரிமை பணால் ஆகிவிட, அதன்பின்னர் 2009ல் லெஜண்டரி நிறுவனம் காட்ஸில்லாவின் உரிமையை வைத்திருந்த ஜப்பானிய நிறுவனம் டோஹோவிடம் இருந்து ஹாலிவுட்டில் படமெடுக்கும் உரிமையைப் பெற்றது. அப்போது, ஏற்கெனவே டெர்ரி ரோஸியோவும் டெட் எலியட்டும் எழுதிக் கைவிடப்பட்டிருந்த ஒரிஜினல் திரைக்கதையை எடுக்கலாம் என்று லெஜண்டரி முடிவுசெய்தது. அதன்பின்னர் அந்தத் திரைக்கதையை வைத்துக்கொண்டு மேலும் அதில் பல மாற்றங்கள் செய்து வெளிவந்ததுதான் 2014ல் வெளியான காட்ஸில்லா. இக்கதையில் காட்ஸில்லாதான் ஹீரோ.
இப்படித்தான் லெஜண்டரியின் மான்ஸ்டர்வெர்ஸ் துவங்கியது.
இந்த சீரீஸில் அடுத்த rebootஆக, கிங்காங்கை உருவாக்க முடிவுசெய்தனர். காட்ஸில்லா கதைகளில் கிங்காங் இடம்பெறுவது அதன் ஜாப்னீஸ் படங்களைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். இதுமட்டுமல்லாமல் வேறு பல ராட்சத ஜந்துக்களும் காட்ஸில்லா கதைகளில் வரும். எனவே, இப்படிப்பட்ட ஜந்துக்களை வைத்து சில படங்கள் எடுக்கலாம் என்பது லெஜண்டரி நிறுவனத்தின் முடிவு.
கிங் காங் பற்றிக் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன். தமிழ்நாட்டு சினிமா ரசிகர்களுக்கு, எண்பதுகளில் இங்கே வெளியான கிங் காங் படம் நினைவிருக்கலாம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பழைய கிங்காங்கின் ரீமேக் அது. இந்தப் படத்தை அடுத்து, கிங் காங் லிவ்ஸ் என்ற இன்னொரு படமும் வெளியானது. அதுவும் நன்றாக நினைவிருக்கிறது. அப்படத்தில் கிங் காங்குக்கு இதய மாற்று அறுவைசிகிச்சை நடக்கும். அதற்கு ஒரு ஜோடியும் இருக்கும். இரண்டு ராட்சத apeகள் நகரில் அட்டகாசம் செய்யும். இறுதியில் இவர்களுக்கு ஒரு குட்டி பிறக்கும்.
கிங் காங் லிவ்ஸ் படத்துக்கும், நேற்று வெளியாகியிருக்கும் Kong: Skull Island படத்துக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டிலுமே, பிரச்னை செய்யும் ராணுவ மேஜரைக் கிட்டத்தட்ட ஒரே போன்றுதான் கிங்காங் கொல்லும். ஒரே அடி. சட்னி. ட்ரெய்லரில் கூட அதைக் கவனிக்கலாம்.
போலவே பீட்டர் ஜாக்ஸன் எடுத்த கிங் காங் படத்தையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.
படம் எப்படி?
கதை துவங்குவது எழுபதுகளில். எனவே, சென்ற படமான காட்ஸில்லாவுக்கு இது prequel. இக்கதை நடக்கையில் காட்ஸில்லா ஆர்ட்டிக்கில் தூங்கிக்கொண்டிருக்கிறது.
மான்ஸ்டர்களை வைத்துக்கொண்டு மொக்கையைப் போடாமல் நன்றாகவே இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தில் கிங்காங் இருக்கும் ஸ்கல் தீவில் வேறு பல ஜந்துக்களும் வாழ்கின்றன. சில நல்ல ஜந்துக்கள். பல கொடிய ஜந்துக்கள். டெர்ரோடாக்டில் போன்ற ரத்தவெறி பிடித்த பறவைகளும் உண்டு. இவற்றுக்கு நடுவே, கிங்காங் ஒரு மன்னனைப் போல வாழ்கிறது. அது ஓரளவு குட்டிதான். இன்னும் முழுமையாக வளரவில்லை (அதற்கே 104 அடி). அதன் பெற்றோர்களையும் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிற குரங்குகளையும், பூமிக்கு அடியே இருக்கக்கூடிய ஒரு பிரம்மாண்டப் பல்லி கொன்றுவிட்டிருக்கிறது. எனவே அந்த ஜந்துக்கள்மீது கொலைவெறியில் இருக்கிறது கிங்காங். ஸ்கல் தீவை ஆராய்ச்சி செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் தீவில் பல குண்டுகளைப் போட்டுவிடுகிறார்கள் நம் ஆராய்ச்சியாளர்கள். இதனால் பூமிக்கு அடியே வாழக்கூடிய அந்தக் கொடூரமான பல்லிகள் மேலே வந்துவிடுகின்றன. இவற்றால் நாசம் விளைகிறது. கிங்காங்குக்கும் இப்பல்லிகளுக்கும் சண்டை நடக்கிறது.
ஒரு மான்ஸ்டர் படம் என்றால் திரைக்கதை எப்படி இருக்கவேண்டும் என்று ப்ளேக் ஸ்னைடர் (‘Fade In முதல் Fade Out வரை‘) சொல்லியிருக்கிறார். அதை என் காட்ஸில்லா பதிவிலேயே பார்க்கலாம். சுருக்கமாக:
1. ஒரு வெறிபிடித்த ஜந்து.
2. அதைக் கொல்லத் துடிக்கும் மனிதர்கள்.
3. அந்த ஜந்து அதகளம் செய்ய ஒரு இடம்.
4. அந்த ஜந்து வெளிவந்து அதன் அட்டகாசத்தை ஆரம்பிக்க ஒரு சம்பவம். இந்தச் சம்பவம் பொதுவாக ஏதேனும் ஒரு பாவச்செயலாகத்தான் இருக்கும். சுயநலத்துக்காக யாராவது ஒரு மனிதன் செய்யும் இந்தப் பாவம்தான் அந்த ஜந்துவை வெளிக்கொண்டுவரும்.
5. அந்தப் பாவம் செய்தவர்களை எதேச்சையாகவோ அல்லது குறிப்பாகவோ அந்த ஜந்து வேட்டையாடும்.
6. இதற்குப் பிறகு எல்லாமே அந்த ஜந்துவை எப்படி நாயகன் துரத்துகிறான் என்பதில்தான் இருக்கிறது.
இது அனைத்துமே இதிலும் உண்டு. வெறிபிடித்த ஜந்து என்பது இங்கே ஓரளவு கிங்காங்கையும், பெருமளவு ராட்சதப் பல்லியையும் குறிக்கும். அதைக் கொல்லத் துடிக்கும் மனிதர்கள் கதையில் உண்டு. ஜந்து அதகளம் செய்யும் இடமாக, ஸ்கல் தீவு. மனிதர்களின் பேராசையில் போட்ட குண்டுகளின் பலனாகத்தான் பல்லிகளும் கிங்காங்கும் கடுப்பாகின்றன. அதேபோல், குண்டு போட்டவர்களை இரண்டுமே வேட்டையாடுகின்றன.
இவற்றைக் கட்டாயம் சுவாரஸ்யமாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நாம் இதுவரை பல மான்ஸ்டர் படங்களைப் பார்த்திருப்பதால் இப்படம் புதிதாக இல்லாமல் போக வாய்ப்பு உண்டு. இருப்பினும், ஜுராஸிக் வேர்ல்ட் படம் பிடித்திருந்தால் இதுவும் பிடிக்கும். ஸிஜி அட்டகாசமாக உள்ளது. 3டியில் நிஜமாகவே வேலை செய்திருக்கிறார்கள். ஜந்துக்களின் உருவாக்கத்தில் நல்ல க்ரியேட்டிவிடி.
An as usual film. But if you wanna go lose your mind on these monsters, this is a film for you. எனக்குப் பிடித்தது.
பி.கு
படத்தில் ஒரு போஸ்ட் க்ரெடிட் சீன் உண்டு. அதைப் பார்க்க மறக்காதீர்கள். அடுத்த படத்துக்கான ட்ரெய்லர் அது. இந்த சீரீஸில் அடுத்த படத்தின் ஹீரோ பற்றிய குறிப்புகள் இதில் உண்டு.
Rajesh,
சிறியதாக இருந்தாலும் சுவைபட எழுதியுள்ளீர்கள். டாரெண்டுக்கு காத்திருக்கிறேன். டவுன் லோட் செய்யணும்ல?
Very impressive writing.
Thank you Kaarigan 🙂