The Lake House (2006) – English
இன்று நாம் பார்க்கப்போகும் திரைப்படம், நான்கு வருடங்களாக எழுதவேண்டும் என்று அவ்வப்போது நான் நினைக்கும் ஒரு படம். நான் ஆங்கில blogகில் எழுதிக்கொண்டிருந்தபோதே இப்படத்தைப் பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், எப்படியோ அது தள்ளிக்கொண்டே போய், மறந்தும் விட்டது. நேற்று இரவு இப்பட விசிடியை (நான்கு வருடம் முன்னர் வாங்கியது) மறுபடி பார்த்தேன். கட்டுப்படுத்தமுடியாத அளவு பழைய நினைவுகள் பொங்கியதால், இன்று எழுதிவிடலாம் என்று முடிவு செய்தேன்.
இக்கட்டுரையை மேற்கொண்டு படிக்குமுன், ஒரு விஷயம். எந்த மனிதனாக இருந்தாலும், அவனது வாழ்வில் மறக்கமுடியாத திரைப்படங்கள் சிலவும், பாடல்கள் சிலவும் இருக்கும். இந்தப் படங்களும் பாடல்களும் மற்றவர்களுக்கு சாதாரணமாக இருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் அவற்றின் அருமை, நமக்கு மட்டுமே தெரியும். அந்தப் படங்களையும் பாடல்களையும் எத்தனை நாட்கள் கழித்துப் பார்த்தாலும் அல்லது கேட்டாலும் சரி, அவற்றுடன் பிணைந்துள்ள நினைவுகள், பசுமையாக மறுபடி நமக்குள் எழும். அந்த உணர்ச்சிகளின் கனத்தை எழுதுவது கடினம். அனுபவித்தால் மட்டுமே அது தெளிவாக விளங்கும்.
அப்படி என்னால் மறக்கவே இயலாத ஒரு படம் தான் The Lake House.
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, ஒரு ரொமாண்டிக் படத்தைப் பார்க்கப்போகிறோம்.
‘Speed‘ படத்தில் நடித்த க்யானு ரீவ்ஸ் மற்றும் ஸான்ட்ரா புல்லாக் ஜோடி, அதன்பின் பனிரண்டு வருடங்கள் கழித்து மறுபடி இணைந்த படம் இது. அதேபோல், ‘il Mare‘ என்ற, 2000 ல் வெளியான கொரியப் படத்தின் ஆங்கில ரீமேக் இது. கொரியப் படங்களில் காண்பிக்கப்படும் உணர்வுகளின் வெளிப்பாடு, ஆங்கில மற்றும் ஃப்ரெஞ்ச் படங்களைவிடவும் நமது வாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பதைப் பலமுறை கவனித்திருக்கிறேன். அப்படி ஒரு அருமையான கொரியப் படத்தின் ரீமேக் என்பதால், இப்படம் இன்னமும் அழகு பெறுகிறது.
நம்மில் காதலில் சிக்காதவர்கள் எத்தனை பேர்? காதல் என்பது, இரண்டு பக்கங்களில் இருந்தும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் அன்பாக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. யாராவது ஒருவர், மற்றொருவரின் மேல் அன்பு வைத்தாலே போதுமானது. அப்படி அன்பு செய்பவர்களின் மனதில் வாழ்நாள் முழுக்கத் தங்கிவிடும் அந்த ஆழ்ந்த காதல் உணர்ச்சியே போதும். அப்படிக் காதல் செய்யப்படும் இன்னொருவரின் பரஸ்பர அன்பு சில சமயங்களில் தேவையே இல்லை. இன்னொருவரைக் காதல் செய்யும் அந்தத் தருணங்களில், நமது மனதின் ஆழத்தில் இருந்து பொங்கி வரும் சந்தோஷத்தை உணர்ந்திருக்கிறீர்களா? எத்தனை தனிமையான, அலுப்பான ஆளாக இருந்தாலும், அந்தத் தருணங்களில் ஒரு கனிவான மனிதனாக மாறுவது தவிர்க்கவே முடியாதது. எவ்வளவு வார்த்தைகளைப் போட்டாலும், அந்தக் கனிவையும் அன்பையும் காதலையும் எழுதிவிட முடியாது. ஒவ்வொரு மனிதனும் தவறவே விடக்கூடாத அனுபவம் அது. ஏனெனில், காதல், திருமணத்தில் முடிந்தாலும் சரி, அல்லது நம்மால் காதலிக்கப்பட்டவர் இன்னொருவரை மணந்தாலும் சரி – மனதில் தங்கிவிடும் அந்த உணர்வே போதுமானது என்பேன். அது, ஒரு புதிய ஜன்னலைத் திறந்துவிடும். அன்றிலிருந்து, வாழ்வின் இறுதிவரை அந்த ஜன்னல் திறந்தே இருக்கும். அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகள், நம்மை ஒரு புதிய மனிதனாக மற்றவர்களுக்குக் காட்டும்.
என்றாவது ஒருநாள், காதலிக்கையில் நாம் பார்த்து வியந்த ஏதாவது ஒரு திரைப்படம், அல்லது ஏதாவது ஒரு பாடலை மறுபடி கேட்டால், படீரென்று அந்த அன்பு உணர்ச்சி மனதிலிருந்து வெடித்து மேலெழுவதைக் கவனித்திருக்கிறீர்களா? அந்த நேரத்தில், நம்மால் காதலிக்கப்பட்டவர் இந்த நொடியில் எங்கு, என்ன செய்துகொண்டிருக்கிறாரோ என்று மனம் யோசிக்கத் தொடங்குவதைத் தடுக்கவே முடியாது. அந்த உணர்வு, நீண்ட நேரம் இருக்கும். அப்போது, அந்த உணர்வினை மேலும் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்றும் தோன்றும். இதுபோன்ற சின்னச்சின்ன சுவாரஸ்யங்கள், வாழ்வில் அவசியம் தேவை என்று தோன்றுகிறது.
ஒருவேளை இப்படத்தை நீங்கள் பார்க்கவேண்டும் என்று விரும்பினால், உங்களுக்குப் பிடித்த மதுபானம் ஒன்றை அமைதியானதொரு இரவில் ஒன்றிரண்டு கோப்பைகள் அருந்திவிட்டு, அதன்பின் பார்க்கத் துவங்கலாம். மதுபானம் அருந்தும் பழக்கம் இல்லாதவர்கள், உங்களுக்குப் பிடித்த பாடல்கள் சிலவற்றைக் கேட்டுவிட்டுப் பார்க்கத் தொடங்குங்கள்.
கேட் ஃபார்ஸ்டர் என்ற பெண், ஒரு மருத்துவர். மிக அழகானதொரு நதிக்கரையில் கட்டப்பட்டுள்ள கண்ணாடிகளால் சூழப்பட்ட வீடு ஒன்றில் தனிமையில் வாழ்ந்துவருபவள். அந்த வீட்டை விட்டு, சிகாகோ நகருக்கு வேலை நிமித்தமாகச் செல்ல வேண்டிய சூழலில், வீட்டைக் காலி செய்கிறாள். அந்தச் சமயத்தில், அடுத்து அந்த வீட்டுக்குக் குடிவரப் போகும் நபருக்கு ஒரு கடிதம் எழுதி அங்கே வைக்கிறாள். இனிமேல் சில நாட்கள் இவளது பெயருக்கு வரப்போகும் கடிதங்களைத் தனது முதிய முகவரிக்கு அனுப்பி வைக்க முடியுமா என்று கேட்கும் ஒரு கடிதம் அது. அதே கடிதத்தில், வீட்டின் வாசலில், பெயின்ட்டில் உறைந்த நாய் ஒன்றின் காலடித்தடங்கள் எப்படி வந்தது என்று தனக்குத் தெரியாது என்றும், அது தன்னுடைய தவறு அல்ல என்றும் அவள் குறிப்பிட்டிருக்கிறாள்.
அந்த வருடம், 2006.
காட்சி மாறுகிறது. அலெக்ஸ் வைலர் என்ற ஆர்க்கிடெக்ட், அதே வீட்டுக்குக் குடிவருகிறான். நீண்ட நாளாக யாருமே வாழாமல், தூசிபடிந்திருக்கும் வீட்டை சுத்தம் செய்கையில், கேட்டின் கடிதம் அவனுக்குக் கிடைக்கிறது. வீட்டுக்கு முன்னால், ஆற்றிலிருந்து வீட்டை இணைக்கும் சிறிய பாலம் ஒன்றுக்கு அப்போதுதான் அவன் பெயின்ட் அடித்துவிட்டிருக்கிறான். கேட்டின் கடிதத்தை அவன் படித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென்று எங்கிருந்தோ ஒரு நாய் ஓடிவந்து, அந்தப் பெயிண்ட்டை மிதித்துக்கொண்டே, வீட்டினுள் ஓடிவிடுகிறது. வாசலில், அந்த நாயின் காலடித்தடங்கள். அலெக்ஸ், ஆச்சரியத்தில் உறைந்துபோகிறான்.
அந்த வருடம், 2004.
கேட்டின் கடிதத்துக்கு பதில் எழுதும் அலெக்ஸ், அந்த வீட்டில் பல வருடங்களாக யாருமே குடிவரவில்லை என்றும், ஒருவேளை கேட் பக்கத்தில் இருக்கும் ஒரு காட்டேஜில் வாழ்ந்துவந்து, ஏதேனும் தவறாக முகவரியைக் கொடுத்திருக்கிறாளோ என்று வினவுகிறான். அந்தக் கடிதத்தை, வீட்டின் முன் இருக்கும் தபால்பெட்டியில் வைக்கிறான். மறுநாள் கேட்டின் பதில் அவனுக்குக் கிடைக்கிறது. அதில், தான் வாழ்ந்த வீட்டைத் தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் இடத்தைப் பற்றியும் கேட் அலெக்ஸுக்குத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறாள். அதில், தற்போதைய வருடம் 2006 என்றும், 2004 அல்ல என்றும் எழுதியிருக்கிறாள்.
அப்போதுதான் அலெக்ஸுக்கு உறைக்கிறது. ஏதோ ஒரு கால இடைவெளியில், இரண்டு வருடங்கள் கழித்து வாழ்ந்துகொண்டிருக்கும் கேட்டின் கடிதங்கள் அவனுக்குக் கிடைத்துக்கொண்டிருக்கின்றன என்று. இதைக் கேட்டுக்கும் புரியவைக்கிறான் அலக்ஸ். அவளுக்கும் ஆச்சரியம்.
கேட்டின் தற்போதைய முகவரிக்குச் செல்கிறான் அலெக்ஸ். அந்த இடத்தில் ஒரு பிரம்மாண்டமான அபார்ட்மென்ட் அப்போதுதான் கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அதைக் கட்டிமுடிக்க இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும் என்று அலெக்ஸ் தெரிந்துகொள்கிறான்.
இதன்பின், மேலும் பல விபரங்களை அலெக்ஸும் கேட்டும் பரிமாறிக்கொள்கிறார்கள். மிக மிக இயல்பாக. நமக்குத் தெரிந்த ஒரு நபரிடம் மனம் விட்டுப் பேச ஆரம்பிக்கையில், எப்படி உணர்வோம்? அதுபோல.
அலெக்ஸ் வாழும் 2004ல், அந்தக் குறிப்பிட்ட மாதத்தில் திடீரென்று அடித்த பனிப்புயலைப் பற்றிக் கேட் சொல்கிறாள். அவனை பத்திரமாக இருக்கச்சொல்லி, அவனுக்காக ஒரு சிறிய ஸ்கார்ஃபையும் அந்தத் தபால்பெட்டியில் வைக்கிறாள். அதேபோல் திடீரென்று பனிப்புயல் அடித்து, அந்த வீட்டினுள்ளேயே அலெக்ஸ் பல நாட்கள் இருக்கவேண்டிய சூழல். கேட்டுக்குமே இரவில் வேலை அதிகரிப்பதால், அவளால் அலெக்ஸுக்குக் கடிதங்கள் எழுதுவது முடியவில்லை.
பல நாட்கள் கழித்து, வேலையின் காரணமாக எழுத முடியாத சூழலைப் பற்றி அவனுக்குக் கடிதம் எழுதுகிறாள். உடனே பதில் கிடைக்கிறது. வருங்காலத்துக்கும் அலெக்ஸுக்கும் இருக்கும் ஒரே பாலம் கேட்தான் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறான் அலெக்ஸ். தங்களுக்குப் பிடித்தமான விஷயங்களைப் பற்றி இருவரும் தகவல்கள் பரிமாறிக்கொள்கிறார்கள். மெலிதான ஒரு அன்பு, இருவருக்குமிடையில் உருவாகத் துவங்குகிறது.
அந்த வார இறுதியில், தன்னோடு அந்த நகரைச்சுற்றி ஒரு walk வரமுடியுமா என்று அலெக்ஸ் கேட்டைக் கேட்கிறான். அது எப்படி சாத்தியம் என்று கேட் குழம்ப, அவளுக்குக் கிடைக்கிறது அலெக்ஸ் அனுப்பும் ஒரு map. அதில், எந்த வழியாக அவள் வரவேண்டும் என்று குறித்திருக்கிறான் அலெக்ஸ். இப்படியாக, இரண்டு வேறு வேறு வருடங்களில், ஒரே பாதையில், ஒரே நேரத்தில் இருவரும் நடக்க ஆரம்பிக்கின்றனர். ஒரு சிறிய சந்தின் சுவரில், அலெக்ஸ் எழுதிவைத்திருக்கும் வாசகங்கள் கேட்டின் கண்களில் தென்படுகின்றன.
‘கேட்…. எப்பொழுதையும் விட இப்போது நான் உனக்கு மிகவும் நெருக்கமாக உணர்கிறேன். என்னுடன் நடப்பதற்கு மிக்க நன்றி’
இரண்டு வருடங்கள் முன்னர் அலெக்ஸ் எழுதிவைத்த இந்த வாசகங்கள், அங்கங்கே அழிந்திருந்தாலும், அலெக்ஸின் அன்பின் கதகதப்பைக் கேட்டுக்கு உணர்த்துகின்றன.
அலெக்ஸின் தந்தை, ஒரு புகழ்வாய்ந்த ஆர்க்கிடெக்ட். சில கசப்பான நிகழ்ச்சிகள் நடந்திருப்பதால், அவருக்கும் அலெக்ஸுக்கும் இடையே ஒரு சுவர் நிற்கிறது. அவரது நோக்கமோ, தன்னை விட, தனது மகன்கள் இருவரும் தொழிலில் முன்னேறி, தன்னைப் பெருமையடையச் செய்யவேண்டும் என்பதாக இருக்கிறது.
கேட்டிடமிருந்து அலெக்ஸுக்கு ஒரு கடிதம் வருகிறது.
“டியர் அலெக்ஸ். . இரண்டு வருடங்கள் முன்பு, இதே நாளில், ரயில்வே ஸ்டேஷனில், என் தந்தை எனக்குப் பரிசளித்த ஒரு புத்தகத்தைத் தவறவிட்டுவிட்டேன். அந்தப் புத்தகம், என் உயிருக்கு ஒப்பானது. அவரது நினைவுகளை என்னுள் எப்போதும் நீங்காமல் துளிர்க்கச்செய்த ஒரு பொருள். அதனை உங்களால் கண்டுபிடிக்கமுடியுமா? அப்படி முடிந்தால், தபால்பெட்டியில் வைக்கவும். அந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன்.”
தனது மனதுக்கு மிக நெருக்கமான ஒரு பெண், இப்படி ஒரு கோரிக்கை வைத்ததும், அலெக்ஸ் ரயில்வே ஸ்டேஷனுக்கு விரைகிறான். அங்கே, ஒரு பெண், யாரையோ முத்தமிட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான் (நீங்கள் காதலித்துக்கொண்டிருக்கும் பெண், வேறு ஒரு ஆணுடன் நெருக்கமாகப் பேசுவதைப் பார்த்திருக்கிறீர்களா?). ரயில் கிளம்புகிறது. ஓடிச்சென்று ஏறும் அப்பெண், அங்கேயுள்ள பெஞ்ச்சில் ஒரு புத்தகத்தை மறந்துவிட்டது அலெக்ஸுக்குத் தெரிகிறது. புத்தகத்தை எடுத்துக்கொண்டு ரயிலின் பின்னால் ஓடுகிறான் அலெக்ஸ். அப்பெண், ரயிலில் இருந்து பரிதவிப்புடன் அவனை நோக்குவது தெரிகிறது. ரயில் வேகமாகச் சென்று மறைகிறது.
மறுநாள் கேட்டுக்கு இதனைத் தெரிவிக்கிறான் அலெக்ஸ். ஆனால், அலெக்ஸின் காலமான 2004ல் அலெக்ஸ் யாரென்றே கேட்டுக்குத் தெரியாததால், அவளுக்கு ரயிலின் பின்னால் ஓடிவந்த மனிதனைப் பற்றிய நினைவுகள் மறந்துபோய்விட்டிருக்கிறது. புத்தகம் பத்திரமாக இருப்பதாகவும், அவளைச் சந்திக்கும் தினத்தில் அவளுக்குப் பரிசாக அது வந்துசேரும் என்றும் அலெக்ஸ் சொல்கிறான்.
அலெக்ஸ் ஒரு நாள், ஓடும் தனது நாயைத் துரத்திக்கொண்டு செல்லும்போது ஒரு மனிதனைப் பார்க்கிறான். தன்னை ‘மார்கன்’ என்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் அம்மனிதன், ஆற்றின் ஓரமாக ஏதேனும் வீடு கிடைத்தால் நல்லது என்றும், தனது காதலிக்கு இப்படிப்பட்ட வீடுகள் மிகவும் பிடிக்கும் என்று சொல்கிறான். தனது காதலியின் பெயர், கேட் என்றும், அவள் ஒரு மருத்துவர் என்று மார்கன் சொல்கையில், தனது தேவதைதான் அப்பெண் என்பது அலெக்ஸுக்குப் புரிகிறது. ஆனால், இரண்டு வருடம் கழித்துத்தானே தன்னை அவளுக்குத் தெரியவரப்போகிறது? இப்போது சென்று இந்தக் கடிதக் கதையைச் சொன்னால், இவன் ஒரு பைத்தியம் என்று அவள் முடிவுகட்டிவிடக்கூடுமே?
அன்று இரவு, கேட்டின் பிறந்தநாள் என்று சொல்லும் மார்கன், அலெக்ஸை வரச்சொல்கிறான்.
காட்சி மாறுகிறது. காலம் 2006 . அன்று கேட்டின் பிறந்தநாள். தனியாக, தனது தோழியுடன் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருக்கிறாள் கேட். அலெக்ஸ் பற்றியும், அவர்களது கடிதத் தொடர்பு பற்றியும், அவர்களின் விசித்திர நிலை பற்றியும் சொல்கிறாள் கேட். அப்போது, அலெக்ஸ் ஒரு ஆர்க்கிடெக்ட் என்றும், ஆற்றோரம் இருக்கும் வீட்டில் வாழ்பவன் என்றும் சொல்லும் கேட்டின் மூளையில், இரண்டு வருடங்கள் முன்னர் நடந்த சம்பவம் ஒன்று பளிச்சிடுகிறது. தன கையில் இருந்த வாய்ப்பைத் தவறவிட்டது, அப்போதுதான் அவளுக்குத் தெரிகிறது. உடைந்துபோகிறாள் கேட்.
காலம் – 2004 .
இரவு. கேட்டின் வீடு. அனைவரும் குழுமியிருக்க, மார்கன், அலெக்ஸை கேட்டுக்கு அறிமுகப்படுத்துகிறான். தனது தேவதையை அவ்வளவு நெருக்கத்தில் பார்க்கும் அலெக்ஸுக்கு நெஞ்சம் விம்முகிறது. ஆனால், கேட்டுக்கு அவனை யாரென்றே தெரியாத சூழல்.
தன்னந்தனியாக வெளியே அமர்ந்திருக்கிறான் அலெக்ஸ். அங்கே கேட்டும் வருகிறாள். தனிமை விரும்பியான அவளுக்கு, இந்தக் கூட்டம் பிடிப்பதில்லை.
தனது காதலி. இரவு. நிலவு. தனிமை. ஆனால், காலமோ, இரண்டு வருடங்கள் முன்னர்.
மெதுவாக அவளிடம் பேச ஆரம்பிக்கிறான் அலெக்ஸ்.
“பிறந்தநாள் வாழ்த்துகள்” – நன்றி.
“வரும் வருடம், உங்களுக்கு மிகவும் இனிமையாக அமையும் என்று எண்ணுகிறேன்” – நன்றி.
“நான் தான் அலெக்ஸ். ஆற்றோரம் இருக்கும் வீட்டில் வாழ்பவன்” – ஓ. நீங்கள்தான் எனக்கு ஒரு வீடு பிடித்துத் தரப்போகிறீர்கள் அல்லவா?
“அப்படித்தான் நினைக்கிறேன்”. – நீங்கள் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டா?
“இல்லை. ஜஸ்ட் அங்கே வாழ்பவன். அவ்வளவே” – ம்ம்ம்ம்
“நான் அந்த வீட்டில் இருந்து சென்றதும், நீங்கள்தான் அங்கே வாழப்போகிறீர்கள்” – அப்படியா?
இந்தத் தருணத்தில், கேட் அவனிடம் ஒரு நாள் கடிதத்தில் அவளுக்கு மிகப் பிடித்தமான புத்தகம் என்று சொல்லியிருந்த ஒரு புத்தகத்தை – Persuasion என்ற ஜேன் ஆஸ்டின் புத்தகம் – படித்ததுண்டா என்று கேட்கிறான் அலெக்ஸ். சடாரென்று மின்னல் அடித்ததுபோல் உணர்கிறாள் கேட். இவளுக்கு மிகப் பிடித்த புத்தகத்தைப் பற்றி ஜஸ்ட் லைக் தட் கேட்கிறானே இவன்?
அதன் கதை, இளவயதில் காதல்வயப்படும் இருவரைப் பற்றியது. வெகு வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கிறார்கள் இருவரும்.
அதனைப்போல் எந்த அனுபவமாவது கேட்டுக்கு இருக்கிறதா என்று கேட்கிறான் அலெக்ஸ். தான் சிறுவயதில் காதலித்த ஒரு பையனைப்பற்றிச் சொல்லத்துவங்குகிறாள் கேட். இருவரது காதலும் முறிந்துவிட்டதாகவும், அதுதான் அவளது முதல் காதல் என்றும் அவள் சொல்ல, அவள் பேசுவதையே கேட்டுக்கொண்டிருக்கும் அலெக்ஸின் மனதில் எதுவோ கரைகிறது.
சட்டென்று எழுகிறாள் கேட். உள்ளே செல்ல. அவள் பின்னாலேயே செல்கிறான் அலெக்ஸ். அப்போது என்ன நடக்கிறது என்பதை, இந்தப் பாடலில் காணலாம். Beatles குழுவினரில் ஒருவராக இருந்த பால் மெக்கார்ட்னியின் அருமையான பாடல் இது.
This never happened before – Paul McCartney
தன்னை மறந்த நிலையில், தனது இரு கரங்களாலும் தனது வாழ்வின் தேவதையைப் பற்றிக்கொண்டு முத்தமிடுகிறான் அலெக்ஸ். அந்தச் சூழ்நிலையின் அடர்த்தியில் கனிந்த மனதுடன், அவனை முத்தமிடுகிறாள் கேட்.
‘கேட்’ !!
மார்கனின் குரல், இருவரையும் பிரிக்கிறது. திடுக்கிட்டுப் பிரியும் அலெக்ஸ், அங்கிருந்து சென்றுவிடுகிறான்.
அலெக்ஸுக்குக் கடிதமெழுதும் கேட், அன்று தன்னை முத்தமிடும்போதே உண்மையை ஏன் சொல்லவில்லை என்று கேட்க, அப்போது சொல்லியிருந்தால், அது அவளுக்குப் புரிந்திருக்காது என்று சொல்கிறான் அலெக்ஸ்.
அந்த நேரத்தில், அலெக்ஸின் தந்தை மிகவும் நோய்வாய்ப்பட்டு இருப்பதாக மருத்துவமனையில் இருந்து செய்தி வருகிறது. இதன்பின் விஷயத்தை அலெக்ஸின் கடிதம் மூலம் கேள்விப்படும் கேட், தனது மருத்துவமனையில் இரண்டு வருடங்கள் முன்னர் இருந்த ரெகார்டுகளைத் தேடிப்பார்க்க, விரைவிலேயே அவனது தந்தை இறந்துவிடுவார் என்பது அவளுக்குத் தெரிகிறது. சில நாட்களுக்கு முன்னர் (2006ல்) பதிப்பிக்கப்பட்ட ஒரு புத்தகத்தை அவனுக்கு தபால்பெட்டி மூலம் அனுப்புகிறாள் கேட். அதில், தனது தந்தையுடன் நிற்கும் சிறுவயதுப் புகைப்படம் ஒன்று இருப்பதைக் கண்டு, தந்தையை நினைத்து அழத்துவங்குகிறான் அலெக்ஸ்.
சில நாட்களில், இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்கின்றனர். il Mare (கொரியத் திரைப்படத்துக்கு tribute) என்ற ரெஸ்டாரெண்ட்டில் சந்திக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள். ஆனால் எப்படி? இருவரும் வெவ்வேறு காலகட்டங்களில் அல்லவா வாழ்கிறார்கள்?
அலெக்ஸ், 2004 ல் வாழ்வதால், அன்றிலிருந்து இரண்டு வருடங்கள் கழித்து – கேட்டின் காலமான 2006ல், ஒரு நாள் அந்த ரெஸ்டாரெண்ட்டில் ஒரு மேஜையை புக் செய்கிறான். அந்த நாள், கேட்டுக்கு ஜஸ்ட் அடுத்த நாளாக இருக்கிறது. ஆனால், அலெக்ஸுக்கோ அது இரண்டு வருடங்கள் கழித்து வருகிறது. அந்த நாளில், கேட் அங்கு சென்று காத்திருக்க, அலெக்ஸ் வருவதில்லை.
மறுநாள், கடிதம் மூலம் என்ன ஆயிற்று என்று கேட்க, அலெக்ஸுக்கும் காரணம் தெரிவதில்லை. அப்போதுதான் கேட்டுக்கு இந்த உறவு சாத்தியமில்லை என்று புரிகிறது. தாங்கள் இருவரும் சந்திக்க வாய்ப்பே இல்லாததால், இனிமேல் தொடர்பு கொண்டு பிரயோஜனமில்லை என்று முடிவு செய்யும் கேட், இனிமேல் தன்னைத் தொடர்பு கொள்ளவேண்டாம் என்று சொல்லிவிடுகிறாள். அலெக்ஸ் எழுதும் பல கடிதங்களுக்கும் பலனே இல்லாமல் போகிறது.
இதன் பின் என்ன ஆயிற்று?
படத்தில் காணலாம். நான் சொல்லாத ஒரு ட்விஸ்ட் இப்படத்தில் இருக்கிறது. ஆரம்பக் காட்சிகளையும், இறுதியையும் கவனித்தால் அந்த ட்விஸ்ட் தெரியும்.
அருமையான பாடல்கள் நிறைந்த படம் இது. இப்படத்தில் என்னைக் கவர்ந்த விஷயம், அலெக்ஸுக்கும் கேட்டுக்கும் இடையே நிலவும் உறவு. மிக அழகாக அது காட்டப்பட்டிருக்கிறது. காதல் ததும்பும் காட்சிகள் பல இப்படத்தில் உள்ளன.
இப்போதே சொல்லிவிடுகிறேன். எனக்கு இப்படம் மிகப்பிடித்தது போலவே, சிலருக்கு இப்படம் பிடிக்காமலே போகவும் வாய்ப்புண்டு. ஆகவே, உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், ஃப்ரீயாக விட்டுவிடவும். Hope Floats படம் உங்களுக்குப் பிடித்ததா? அப்படியென்றால், இதுவும் பிடிக்க வாய்ப்புண்டு.
க்யானு ரீவ்ஸ், படு மெச்சூர்டாக அடக்கி வாசித்திருக்கும் படம் இது. அவருக்கு சற்றும் சளைக்காமல் ஸான்ட்ரா புல்லாக் நடித்திருப்பார். எனக்கு மிகப்பிடித்த நடிகையாக அவர் மாறியது இப்படத்துக்குப்பிறகுதான். படத்தில், காதல் நிரம்பி வழியும் பல குட்டிக்குட்டிக் காட்சிகள் உண்டு. கேட், பழைய வீட்டின் அருகே இருந்த மரங்களை இன்னமும் நினைத்துக்கொண்டிருப்பதாகக் கூற, உடனே சென்று அவளது கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் அபார்ட்மென்ட் வாசலில் அம்மரங்களில் ஒன்றை நடுவான் அலெக்ஸ். பெரும் மழையில் சிக்கி, அபார்ட்மென்ட் வாசலில் கேட் ஒதுங்குகையில், திடீரென்று அங்கே அந்த மரம் முளைக்கும். நெகிழ்ந்து போவாள் கேட்.
The Lake House படத்தின் ட்ரெய்லர் இங்கே.
உங்கள் விமர்சனத்துக்கு நன்றி….
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
நண்பா, முந்திகிட்டிங்க போங்க, 🙂
கிட்டதட்ட ஒரேபோல நான் ரெண்டு வருஷம் முன்னாடி பார்த்தேன். அப்புறமா மூணு முறை பார்த்தேன். புரியாம….
பிடித்தமான மதுபானத்தை குடித்துவிட்டு என்று சொல்லியிருக்கிறீர்கள், எனக்கு இந்தப்படம் பார்த்ததிலிருந்து மரப்பாலத்தில் கட்டி ஏரிக்குள் தூங்கும் பியர்பாட்டில்கள் நியாபகத்திற்கு வருகிறது. குடிச்சா அப்படி குடிக்கனும்…. ம்ம்ம் 🙂
ஹா ஹா ஹா 🙂 . அட்டகாசம் ! ஏரில நாம போயி தொங்கவுட்டா, வேற எவனாவது குடிச்சிபுடுவானே :-). அதையும் செய்வோம் சீக்கிரமே 🙂 . உங்களுக்கும் இது புடிச்சது குறிச்சி சந்தோஷம் முரளி . ..
கண்ஸ் – தூள் தல…செமயாக இருக்கு உங்க பகிர்வு…கண்டிப்பாக குழப்பம் வரும்..அதுல இருந்து வெளிவர உங்க பதிவு உதவியாக இருக்கும். நன்றி 😉
@ முரளி தல
\அப்புறமா மூணு முறை பார்த்தேன். புரியாம….\
உங்களுக்கே 3 தபாவா…அப்போ எனக்கு எல்லாம்..! 😉
கதை ரொம்ப வித்யாசமா இருக்கு. நான் கேள்விப்பட்டதே இல்லை. முரளி சார் கிட்ட வாங்கி பார்க்கனும். இந்தமாதிரி ரொம்பநாளா எழுதனும்னுட்டு இருக்கன படங்களையெல்லாம் சீக்கிரம் எழுதுங்க. நன்றி
its a beautiful movie
//ஒருவேளை இப்படத்தை நீங்கள் பார்க்கவேண்டும் என்று விரும்பினால், உங்களுக்குப் பிடித்த மதுபானம் ஒன்றை அமைதியானதொரு இரவில் ஒன்றிரண்டு கோப்பைகள் அருந்திவிட்டு, அதன்பின் பார்க்கத் துவங்கலாம்.// அருந்திவிட்டேன் … துவங்குகிறேன் …
i even had the same kind of feeling. but i don’t know how to express. i really felt amazing, when i read those lines, thank you so much “யாராவது ஒருவர், மற்றொருவரின் மேல் அன்பு வைத்தாலே போதுமானது. அப்படி அன்பு செய்பவர்களின் மனதில் வாழ்நாள் முழுக்கத் தங்கிவிடும் அந்த ஆழ்ந்த காதல் உணர்ச்சியே போதும். அப்படிக் காதல் செய்யப்படும் இன்னொருவரின் பரஸ்பர அன்பு சில சமயங்களில் தேவையே இல்லை. இன்னொருவரைக் காதல் செய்யும் அந்தத் தருணங்களில், நமது மனதின் ஆழத்தில் இருந்து பொங்கி வரும் சந்தோஷத்தை உணர்ந்திருக்கிறீர்களா? எத்தனை தனிமையான, அலுப்பான ஆளாக இருந்தாலும், அந்தத் தருணங்களில் ஒரு கனிவான மனிதனாக மாறுவது தவிர்க்கவே முடியாதது. எவ்வளவு வார்த்தைகளைப் போட்டாலும், அந்தக் கனிவையும் அன்பையும் காதலையும் எழுதிவிட முடியாது. ஒவ்வொரு மனிதனும் தவறவே விடக்கூடாத அனுபவம் அது”
அப்புறம் என்ன பார்த்துட வேண்டியதுதான். ரொம்ப குழப்பிடாதே?
கொஞ்சம் பழைய – outdated quote என்றாலும் கூட,இந்த பதிவ படிச்சப்ப இதான் ஞாபகம் வந்துச்சு..
“Poetry is the spontaneous overflow of powerful feelings.It takes its origin from emotion recollected in tranquility “
ரொம்ப உணர்ச்சிமயமா எழுதியிருக்கீங்க………
ரொமாண்டிக் படம் எது எழுதுனாலும் ” எனக்கு மிகப் பிடித்த ” ன்னு எல்லா படங்களையும் சொல்லக் காரணம் என்ன ?
நீங்க பதிவுலகின் கமலஹாசன்…………அதாவது காதல் இளவரசன்……….
என்னமோ source code, inception, memento மாதிரியான படம் மாதிரி தெரியுது.. ஏன் இப்படி சுத்தி சுத்தி உடறீங்களோ… அப்புறம் sandra bullock நடையிருக்கே அழகு… நிறைய bollywood kollywood நடிகைங்க காப்பி அடிச்சியிருக்காங்க… என்னமோ மேனன் படத்தல வர்ற… அடியே கொல்லுதே ஞாபகம் வருது 🙂
அப்புறம் சொல்ல மறந்துட்டேன் … ரொம்பதான் ரசிச்சு எழுதியிருக்கீங்க…. 😉
@ கோபிநாத் – குழப்பம் அந்த அளவு வராது :-). லவ்வுதான் அதிகமா வரும். இருந்தாலும் பரவால்ல 🙂
@ Ravikumar Tirupur – முரளிய புடிங்க :-). படத்தை பாருங்க. இதுமாதிரி நினைவில் இருக்கும் படங்கள் பல இருக்கு. அப்பப்ப ரிலீஸ் பண்ணுவேன் 🙂
@ Subash – fantastic !!
@ Prakash – படம் பிடிச்சதா?
@ mageshp – அட்டகாசம் ! அந்த ஃபீலிங் யாரா இருந்தாலும் ஒருவாட்டியாவது வரணும் பாஸ். லைஃப் சூப்பரா போவும் அதுக்கப்புறம்…. அப்பப்ப அந்த நினைவுகள் வந்தே ஆகணும்
@ இளங்கன்று – கட்டாயம் கொழப்பாது. இனிமையா இருக்கும் படம்.
@ கொழந்த – நீங்க quote பண்ணுன லைன்ஸ், எனக்கும் ரொம்பப் புடிச்ச லைன்ஸ். அப்பப்ப அதை சொல்லுவேன்..
and, ரொமாண்டிக் படங்கள் புடிக்காத ஆட்கள் யாரு இருக்காங்க? (ஒருத்தர் இருக்காரு. ஜாக்ஸன்வில்ல). இந்த மாதிரி மென்மையான படங்கள், மனசுல இருக்குற பழைய நினைவுகளை வெளிய கொண்டுவரும். அந்த எண்ணங்கள், சுகமா இருக்கும். எப்பவாவது ஒருவாட்டி அப்புடியெல்லாம் நினைச்சிப் பார்க்கணும். அதான்யா வாழ்க்கை சுவாரஸ்யமாகுறதுக்குக் காரணமே 🙂
காதல் இளவரசன் ? – சான்ஸே இல்ல. நானெல்லாம் காதலின் கரையில் நின்றுகொண்டு கூழாங்கல் பொறுக்குபவன். இன்னும் எதிரே இருக்கும் பிரம்மாண்ட சமுத்திரம் கண்டறியப்படாமல் இருக்கிறது 🙂
@ D.R. Ashok – அந்த அளவு கொழம்பாது தலைவா. இனிமையா, அன்பா, ரொமாண்டிக்கா இருக்கும். ஸாண்ட்ரா புல்லாக் விசிறியா நீங்க? கையைக் குடுங்க. அண்டவெளிலயே எனக்கு மிகப்பிடித்த நடிகை அவர். அவரது சிரிப்பு, அவரது மூக்கழகு, பேச்சு – காதல் !!! அப்புடி ஒரு படம் பார்த்தா, கருணாநிதியே மயங்கிருவாருன்னு தோணுது 🙂
Anubavichu ezhudhi irukeenga boss. Sarakku vangiachu..download um potachu… Il Mare !!
Dear karundhel
miga arumaiyana padam paarkka muyarchikkiraen. different line of story and film making. nice review.
btw express daily il Tamil top grossing films / critically acclaimed films all were rejected for nomination of official entry for oscar from india endru pottullaargal. the simple reason said by the jury: all films are lifted from various originals. (shame) how dare the producers/directors/actors are sending these lifted versions ? because to get name and fame and selling the distribution rights (overseas) was the reply. mudinthal padikkavum. date i forgot (last week front page) thanks
sundar g chennai
@ Arun – சூப்பர் பாஸ் :-). அடிச்சி பட்டைய கிளப்புங்க 🙂
@ சுந்தர் ஜி – நீங்க சொன்ன ஆர்டிகிள் நானும் படிச்சேன். அதைவிட அசிங்கம் வேற என்ன? இப்பக்கூட நம்மாளுங்க திருந்த மாட்டாங்க. காப்பிகள் தொடரும். சர்வதேச விலாக்கல்ல அவமானப்பட்டு அசிங்கப்படட்டும். அப்பவாவது திருந்துராங்களான்னு பார்ப்போம்.
ரொம்ப நாளா பாக்கனும்னு நெனச்சு மிஸ் ஆகிட்டே இருக்க படம்.. கண்டிப்பா பாக்குறேன் தல..
என்ன, சான்ட்ரா புல்லாக்-க நெனச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு.. ஒரு நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி தான் The Proposal பார்த்தேன்.. பாட்டிம்மா ரொம்பவே பயமுறுத்திட்டாங்க.. 🙂
@ பிரசன்னா கண்ணன் – Sandra Bullock , Meryl Streep மாதிரி. She’s aging gracefully 🙂
நான் Il mare பார்த்திருக்கேன் தல.. மேலும் கொரியப்படங்களை ரீமேக்கும் ஹாலிவுட் படங்களை பார்க்ககூடாதென்றும் நினைத்திருக்கிறேன்.. அதனாலேயெ இந்த படத்தை பார்க்கவில்லை.. :))
>>எனக்கு இப்படம் மிகப்பிடித்தது போலவே, சிலருக்கு இப்படம் பிடிக்காமலே போகவும் வாய்ப்புண்டு. ஆகவே, உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், ஃப்ரீயாக விட்டுவிடவும்.
ஹா ஹா , அதெல்லாம் முடியாது பாஸ், சண்டைக்கு வருவோம்
பாஸ், ஸ்டில்ஸை பார்த்தாலே இது ஒரு கவிதைக்கதைன்னு தெரியுதே,, விமர்சனம் செம டீட்டெயியில்டு
Hi Rajesh….
This is one of my most fav film. and that song too… whatever you have written here, i felt the same when i saw this movie and still. “This never happened before” is a wonderful song… even the trailer of this movie is great.
and you know what.. i’m gonna watch it again now..! 🙂