The Last Lear (2007) – Hindi

by Karundhel Rajesh January 11, 2010   Hindi Reviews

இம்முறை, ஒரு மாறுதலுக்காக, ஒரு அருமையான ஹிந்திப் படம். இந்தப் பதிவுக்குக் கிடைக்கப்போகும் வரவேற்பை அனுசரித்து, எப்போதாவது ஒரு நல்ல ஹிந்திப்படத்தைப் பற்றி எழுதலாமா வேண்டாமா என்று முடிவு செய்வேன். ஹிந்திப்படம் என்பதைப் படித்தவுடன், நண்பர்கள் இப்பக்கத்தைக் ‘கிலோஸ்’ (நன்றி: மிஸ்டர் பாரத் ரஜினி) செய்யாமல், மேலே படித்துப் பார்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் பரந்துபட்ட உலகத்தில், பல கலைஞர்கள் உள்ளனர். ஒவ்வொருவருக்கும், தாங்கள் ஈடுபட்ட கலையின் பேரில் தீராத காதல் இருந்துகொண்டுதான் இருக்கும். தான் படைப்பின் உச்சத்தில் இருந்த அந்தப் பழைய நாட்களை எண்ணி அசைபோட்டுக்கொண்டே, நிகழ் உலகின் அலைக்கழிப்புக்குத் தன்னை மாற்றிக்கொள்ளாமல், பிடிவாதத்தோடு வாழ்ந்த ஒரு மனிதரைப் பற்றிய அருமையான, நெஞ்சைத் தொடும் படம்தான் இந்த , ‘த லாஸ்ட் லியர்’.

இயக்குநர் சித்தார்த்தின் புதிய படம் வெளியிடப்படுவதுடன், இப்படம் தொடங்குகிறது. ஷப்னம் (ப்ரீத்தி ஜிந்தா), இப்படத்தின் நாயகி. ஆனால், படத்தின் சிறப்புக்காட்சிக்கு வராமல், யாரையோ பார்க்கக் கிளம்பிக்கொண்டிருக்கிறாள். அவள் கணவன் ஒரு சந்தேகப்பேர்வழி. அலங்காரம் செய்துகொண்டு யாரைப் பார்க்கப் போகிறாய் என்று அவளை அடிக்கிறான். ஷப்னம் வெளியே ஓடி வருகிறாள். எங்கோ தனது காரில் கிளம்பிச் செல்கிறாள்.

அங்கே, படத்தின் சிறப்புக்காட்சியில், இயக்குநர் சித்தார்த், படத்தைத் தனியே அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆபரேட்டரிடம், எந்தக் காட்சிகளையெல்லாம் வெட்டி ஒட்ட வேண்டும் என்று சொல்கிறார். வெளியே எங்கும் கொண்டாட்டம். அது ஒரு தீபாவளி. ஆனால், சித்தார்த் மட்டும் அந்தக் கொண்டாட்டத்தில் பங்கு பெறாமல், தீவிரமாக எதையோ யோசித்த வண்ணம் இருக்கிறான். அப்போது அவனது நெருங்கிய நண்பனும், இப்படத்தில் பணிபுரிந்தவனுமான கௌதம் அங்கு வருகிறான். கௌதமின் மூலமாக, அப்படம் எடுக்கும்போது நடந்த நிகழ்ச்சிகள், மெதுவாக நம் கண்முன் விரிகின்றன.

நாம் ஹாரியைப் பார்க்கிறோம். ஹாரி (அமிதாப் பச்சன்), ஒரு மிகச்சிறந்த நாடக நடிகர். ஷேக்ஸ்பியரின் முக்கிய நாடகங்களில் நடித்து, அந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்தவர். ஒருகாலத்தில், கொடிகட்டிப் பறந்தவர். ஆனால், பல வருடங்களாக, எந்த நாடகத்திலும் நடிக்காமல், தன் வீட்டை விட்டு வெளியே போகாமல், வாழ்ந்து வருகிறார். ஒருமுறை, கௌதம், ஒரு பத்திரிகைக்காக, இன்னொரு நாடக நடிகரைப் பற்றி ஹாரியின் கருத்தைப் பேட்டி எடுப்பதற்காக, அவரது வீட்டுக்கு வருகிறான். அப்போது, ஹாரி சொல்லும் சில ஷேக்ஸ்பியரின் வசனங்களைப் புரிந்து கொள்ளாமல், அதில் வரும் பெயர்களைத் தவறாகப் புரிந்து கொண்டு விடுகிறான். இதனால், ஹாரி அவனை வீட்டை விட்டே துரத்திவிடுகிறார்.

அதே நேரத்தில், சித்தார்த், தனது புதிய படத்துக்காக, ஒரு கதாநாயகனைத் தேடிக்கொண்டிருக்கிறான். அந்தக் கதாநாயகன், ஒரு வயது முதிர்ந்த புதுமுகமாக இருக்கவேண்டும் என்பது அவனது எண்ணம். கௌதம், அவனிடம் ஹாரியைப் பற்றிச் சொல்ல, ஆச்சரியமாகும் சித்தார்த் (அவனே ஒரு ஷேக்ஸ்பியர் வெறியன் தான்), ஹாரியின் வீட்டுக்குச் செல்கிறான். ஹாரி, இவனது அழைப்பை நிராகரிக்கிறார். ஆனாலும், மெதுவாக அவருடன் பழகிப்பழகி, அவரை ஒத்துக்கொள்ள வைத்துவிடுகிறான்.

நிகழ்காலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளும், இடையே காட்டப்படுகின்றன. வெளியே கிளம்பிய ஷப்னம், நேராக ஹாரியின் வீட்டை அடைகிறாள். அங்குள்ள ஒரு பெண், அவளை வெறுப்புடன் நடத்துகிறாள். இருந்தும், அங்கு கட்டிலில், கைகால்கள் செயலிழந்த நிலையில் கிடத்தப்பட்டிருக்கும் ஹாரியைப் பார்க்கவேண்டும் என்று சொல்கிறாள். ஹாரியின் வீட்டிலிருக்கும் வந்தனா என்ற அந்தப்பெண்தான் ஹாரியைக் கவனித்துக்கொள்கிறாள். அங்கு ஒரு நர்ஸும் இருக்கிறாள். அவள், தனது காதலன் சிறிதுநேரத்தில் அவளை அழைத்துச் செல்ல வந்துவிடுவான் என்பதால் பரபரப்புடன் கிளம்பிக்கொண்டிருக்கிறாள். அன்று இரவு அவர்கள் ஊரைவிட்டே ஓடிப்போய், ஒரு புதுவாழ்க்கை தொடங்க உத்தேசித்திருக்கிறார்கள். ஆனால், அந்தக் காதலன், இந்த நர்ஸை நம்புவதே இல்லை என்று அவள் சொல்கிறாள். தொழில்நிமித்தமாக அவள் எங்கு சென்றாலும், யாரைப் பார்க்கச் செல்கிறாய் என்று அவன் அவளை உளவியல் ரீதியாக சித்ரவதை செய்வதாக ஷப்னத்திடமும் வந்தனாவிடமும் சொல்லிப் புலம்புகிறாள். ஷப்னமும் அவளிடம், தானும் இவ்வாறே தனது கணவனிடம் சித்ரவதைப்படுவதாகச் சொல்கிறாள்.

மறுபடிப் பழைய நிகழ்வுகள் காட்டப்படுகின்றன. படப்பிடிப்பு, ஒரு மலைப்பகுதியில் நடக்கிறது. ஷப்னம், தனது கணவனின் சித்ரவதை தாங்காமல், ஒரு தனிமையான இடத்தில் அமர்ந்துகொண்டு, ஒரு இயந்திரத்தைப் போல, அவளது வசனங்களை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறாள். அப்போது அங்கு ஹாரி வருகிறார். அவளது துக்கத்தைப் புரிந்து கொண்டு, வசனங்களை உணர்ச்சிபூர்வமாகப் புரிந்துகொண்டால்தான் இயல்பாக நடிக்க முடியும் என்று அவளிடம் விடாப்பிடியாகச் சொல்லி, ஒரு சமயத்தில் அவளை முற்றிலும் அழ வைத்துவிடுகிறார். அதன்பின் அவள் மனம் லேசாகிறது.

இருவரும் நல்ல நண்பர்கள் ஆகின்றனர். ஹாரி, அவளுக்கு ஷேக்ஸ்பியரின் பல நல்ல வசனங்களைப் படித்துக் காட்டுகிறார். இப்படிப் போகையில், அந்தப்படம் க்ளைமாக்ஸை நெருங்குகிறது. ஒரு நாள் ஹாரியும் சித்தார்த்தும் மது அருந்திக்கொண்டிருக்கையில், க்ளைமாக்ஸிற்கு ஒரு டூப்பைப் போட்டிருப்பதாக சித்தார்த் சொல்கிறான். ஹாரிக்கோ இது ஒரு தாங்க முடியாத அதிர்ச்சி. ஏனெனில், அவரது வாழ்வில், இதுவரை அவர் நடித்த நாடகங்களில், எப்படிப்பட்ட காட்சியாக இருந்தாலும், அவரே தான் நடித்திருக்கிறார். அவருக்காக நாடகங்களில் எந்த டூப்பையும் போட்டிருக்கவில்லை. சித்தார்த்திடம் சண்டை பிடிக்கிறார் ஹாரி. விடாப்பிடியாக மறுக்கும் சித்தார்த்தின் கால்களைப் பிடித்துக் கெஞ்சுகிறார். மனம் இளகும் சித்தார்த், அவரையே க்ளைமாக்ஸில் நடிக்க வைக்க சம்மதிக்கிறான்.

இதன்பின் என்ன நடந்தது? அந்தக் க்ளைமாக்ஸ் தான் என்ன? கடைசியில் என்ன ஆனது? படத்தைப் பாருங்கள்.

மிக மிக இயல்பான ஒரு கவிதையைப் போல எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில், அமிதாப் பச்சன் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். ஒரு குழந்தைத்தனமான பிடிவாதக்காரரின் வேடத்தை, இவரை விடச் சிறப்பாகச் செய்ய யாருமில்லை. ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரங்களின் பெயர்களை சரியாக சொல்லத்தெரியாத கௌதமை அடித்துத் துரத்துவதிலிருந்து, வீட்டின் முன் ஒரு வித்தியாசமான அழைப்பு மணியைப் பொருத்தி, அதை அடிக்கும் சித்தார்த்தைப் பாராட்டி, வந்தனாவிடம் “இது யாருக்கும் தெரியாது என்று சொன்னாயே. . இப்பொழுது பார் ! இதைப் புரிந்துகொள்பவர்கள் இங்கு வந்தால் எனக்குப் போதும்” என்று சொல்வது, வீட்டின் வெளியே ஒரு கேமராவை மாட்டி, அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை வீட்டின் உள்ளேயே டிவியில் பார்ப்பது, முதன்முறையாக கேமராவின் முன் நடிக்கும் பதட்டத்தை வெளிக்காட்டுவது, சித்தார்த் சொல்லிக்கொடுக்கும் நடிப்பை, ஈகோவை விட்டுவிட்டு நடிக்க முயல்வது, ப்ரீத்தியை சமாதானப்படுத்துவது, சித்தார்த்தின் காலில் விழுந்து இறைஞ்சுவது எனப் பல இடங்களில் பின்னி எடுத்திருக்கிறார்.

ப்ரீத்திக்கும் இவருக்கும் இடையேயான ஒரு மிக மெல்லிய காதலை இப்படம் அருமையாகப் பதிவு செய்திருக்கிறது.

இப்படத்தின் இயக்குநர் ரிதுபர்ணோ கோஷ். இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர். இவரது படங்கள், வாழ்வின் அருமையான தருணங்களை, அற்புதமாகப் பதிவு செய்யும். இவர், சினிமாவின் எஸ். ராமகிருஷ்ணன் என்று தயங்காமல் சொல்லலாம். இவரது ‘ரெய்ன் கோட்’ என்ற படத்தைப் பார்த்துவிட்டு, மூன்று நாட்கள் வேறு நினைவு எதுவுமின்றி அலைந்தது எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. அந்தப்படம், அஜய் தேவ்கன் மற்றும் ஐஸ்வர்யா ராயின் அருமையான நடிப்பில் வெளிவந்த படம்.

ஒரு நல்ல படம். ஒரு நல்ல இயக்குநர். ஒரு நல்ல நடிகர். ‘த லாஸ்ட் லியர்’, எனது நினைவுகளில் இன்னமும் நீங்காமல் நிற்கும் ஒரு அருமையான படம்.

த லாஸ்ட் லியர் டிரைலர் இங்கே

  Comments

13 Comments

  1. ஆமா தமிழ்ல பொம்மலாட்டம்னு ஒரு படம் வந்ததே? அதுக்கும்..?

    Reply
  2. அடடே, நெஞ்ச நக்கிட்டீங்க!

    மீ த ஃபர்ஸ்ட் புத்தி போகாது எங்களுக்கு.

    Reply
  3. @ அண்ணாமலையான் – சரிதான் . . இன்னிக்கி நாந்தான் விக்டிமா. . 🙂 இப்புடி ஒட்டிப்புட்டீங்களே பாஸு . . . அவ்வ்வ்வவ்வ்வ்வவ் . . .

    @ பப்பு – அது !! எங்கயும் துள்ளிக்குதிச்சி எனர்ஜெடிக்கா இருக்குறவந்தான் தமிழன். . (அய்யோ அய்யையோ ஏற்கனவே பாலா போஸ்ட்ல இந்தியனப்பத்தி கமென்ட் அடிச்சதுக்கே நம்ம ஒரு தீவிரவாதி ரேஞ்சுல பாக்குராயிங்க . .இப்போ தமிழன பத்தி வேறே சொல்லிபுட்டேனே . .நமக்கு வாயில தான் பிரச்னை) . . 🙂

    Reply
  4. அண்மைலதான் இந்தப்படம் பாத்தேன். இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கு. ஆங்கிலப்படமா இந்திப்படமான்னு சந்தேகம் வர்ற அளவுக்கு ஆங்கில வசனங்கள்

    Reply
  5. கருந்தேள்,

    என்னுடைய ஆச்சர்யம் என்னவென்றால் விடாபிடியாக ஸ்டார் ஆக மட்டுமே இருந்த அமிதாப் (இரண்டாவது இன்னிங்க்சில் கூட அவருக்கு ஜோடி,மனிஷா, சவுந்தர்யா, ஷில்பா ஷெட்டி) பின்னர் அமைதியாக நடிப்புக்கு மாறியது தான்.

    இந்த மாற்றமே ஹிந்தி சினிமாவின் முன்னேற்றத்துக்கு காரணம். இப்போது அவருக்காக கதைகள் எழுதப்படுகின்றன.

    Reply
  6. @ சின்ன அம்மிணி – வணக்கம் . . நீங்க இத பார்த்தது குறிச்சி சந்தோஷம். . எனக்கு என்ன தோணுதுன்னா, இது விறுவிறுப்பு கருதி எடுக்கப்பட்ட ஒரு படம் இல்ல. . இது நேச்சுரலான ஒரு படம். . ரியலிஸ்டிக். . இந்த மாதிரி படங்க கொஞ்சம் மெதுவாதான் போகும் இல்லையா? அதான் . . அடிக்கடி இந்த பக்கம் வாங்க . . 🙂

    @ விஷ்வா – அது ஒரு ஆச்சரியகரமான மாற்றம் தான் . .செகண்ட் இன்னிங்க்ஸ் ல அவருக்கு அத்தன படமும் பிளாப் . .அதுக்கு அப்புறம், உக்கார்ந்து யோசிச்சிருப்பாரு போல . .மனுஷன் ஜம்முனு ஒரு இடத்த புடிச்சிட்டாரு . . இந்த மாதிரி நம்ம தமிழ் சினிமால இருக்குறவங்க செஞ்சா எவ்ளோவ் நல்லா இருக்கும் . .

    Reply
  7. நல்லா இருக்குனு சொல்றிங்க, பாத்துட்டு வர்றேன்….

    🙂

    Reply
  8. என்ன தேள் … வேலை இல்லையா ஒரே பதிவா இருக்கு ??
    அருமையான விமர்சனம் …:)
    பார்க்க வேண்டிய பட்டியல் நீண்டுகொண்டு போகுது… எப்படியாவது பார்த்திடவேண்டியதுதான்…. :))

    Reply
  9. @ mahee – ஹீ ஹீ . .இப்போல்லாம் கொஞ்சம் ஆபீசுல வேலை கம்மிதாங்க . . 🙂 அதான் இப்பூடி – -:-)
    கட்டாயமா பார்த்துட்டு சொல்லுங்க…

    @ காதலரே – நன்றி.. உங்கள் ஆதரவோடு தொடர்ந்துவிடுவோம்.. 🙂

    @ உலவு.காம் – உங்களுக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள் . .

    Reply
    • kavi arasan

      சிவாஜியைப் போன்ற நடிகர்கள் இருக்கிறார்கள் என தமிழ்சினிமாவைத் தாண்டித்தான் தெரிய வேண்டியுள்ளது.சிவாஜியைப் போன்று ஹீரோ வேடங்களுக்கு ஓய்வு தந்துவிட்டு கதாப்பாத்திர நடிகர்களாய் மாறிய திலீப்குமார்,சஞ்சீவ் குமார்,அசோக் குமார்,அமிதாப் பச்சன் ஆகியோரைப்போல பல நடிகர்கள் முன்வந்தால் நலம்,உங்கள் கட்டுரை மீண்டும் ஒருமுறை படம் பார்க்கத் தூண்டுகிறது.ஹாரி பாத்திரம் முழுமையாக ரசிக்கப்பட்ட ஒன்று.”கேமரா முகத்தைக்காட்டும் போது உங்கள் மற்ற அங்கங்கள் என்ன செய்யும்?”என்ற ஹாரியின் கேள்வி நாடக நடிப்பை மிகையென கேலி பேசுவோரை சிந்திக்கத் தூண்டும்.

      Reply

Join the conversation