Law Abiding Citizen (2009) – English

by Karundhel Rajesh September 7, 2011   English films

It’s not about what you know. It’s about what you can prove in court – Nick Derby.

காட்சி ஒன்று :

“ரூபர்ட் ஆமெஸ் . . இறுதியாக எதையாவது சொல்ல விரும்புகிறீர்களா?”

ஆமெஸ், பயத்தால் வெளிறிய தனது முகத்தைத் துடைக்க முயல்கிறான். ஆனால், அவனது கைகள், கட்டப்பட்டிருக்கின்றன. கால்களும். மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யும்போது அணியும் உடை போன்ற ஒன்று அவனுக்கு அணிவிக்கப்பட்டிருக்கின்றது. பரபரப்பாகத் தனது வாயைத் திறந்து மூடும், ஆமெஸ், தனது வாழ்க்கையின் இறுதி வார்த்தைகளைப் பேசத் தொடங்குகிறான்.

“இங்கு கிளாரன்ஸ் டெர்பி இல்லை. நான் மட்டுமே இருக்கிறேன். எந்த விதத்திலும் இது நியாயமில்லை. எல்லாவற்றையும் செய்தது அவன். அவனுடன் சென்றது மட்டுமே நான் செய்த தவறு. அவன் ஒரு கொடியவன். அவனளவு நான் தவறு செய்யவில்லை. ஆனால், இப்போது அவன் என்னைக் காட்டிக்கொடுத்துவிட்டான். இப்போது வெளியுலகத்தில் சந்தோஷமாக இருக்கிறான். ஆனால், எதுவுமே செய்யாத நான், இறக்கப்போகிறேன்”.

ஆமெஸ்ஸின் அருகே நிற்கும் மனிதர், சைகை செய்கிறார்.

ஆமெஸ்ஸின் உடலோடு பிணைக்கப்பட்டிருக்கும் மூன்று வால்வுகளில் முதல் வால்வு மெல்ல இயங்குகிறது. அதனுள் இருக்கும் வெளிர்நிற திரவம், ஆமெஸ்ஸின் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. அதன்பின் இரண்டாவது வால்வு. பின் மூன்றாவது வால்வு.

என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாததால், கண்களை மட்டும் இறுக மூடிக்கொள்கிறான் ஆமெஸ். கண்களின் ஓரத்தில் இருந்து கண்ணீர் வழிகிறது. அவனது உடல், கடினமாகிறது.

முதல் நிமிடம் கழிகிறது.

திடீரென, ஆமெஸ் துடிக்க ஆரம்பிக்கிறான். கைகால்கள் கட்டப்பட்டிருக்கும் அவனது உடல், கட்டுக்கடங்காமல், கடுமையாக மேலும் கீழும் புயலில் அகப்பட்டதைப்போல் துடிக்கிறது. ஆமெஸ்ஸின் முகம், விகாரமாக மாறுகிறது. அவனது கழுத்து நரம்புகள், கருப்பாக மாறி, அவனது சிவப்பான முகத்தில் தழும்புகளைப் போல் மாறுகின்றன. ஆமெஸ்ஸின் அலறல், அந்த மூடப்பட்ட அறையெங்கும் எதிரொலிக்கிறது.

‘ஈயாய்ய்ய்ய்ய்யய்ய்ய்ய்ய்ய்யய்ய்ய் ‘

தடாலென்று அவனது உயிரற்ற உடல் அவனைப் பிணைத்துள்ள கட்டிலின் மேல் விழுகிறது.

ஆமெஸ் இறந்துபோகிறான். அவனுக்கு அளிக்கப்பட மரணதண்டனை, நிறைவேற்றப்படுகிறது.

கண்ணாடியால் சூழப்பட்ட அந்த அறையின் வெளியே, ஆமெஸ்ஸின் துடிதுடிப்பைப் பலர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அனைவரின் முகத்திலும் பயம் கலந்த ஆசுவாசம்.

காட்சி இரண்டு :

இரவு. பழைய ஷெட். மேஜையில், கிளாரன்ஸ் டெர்பி கிடத்திவைக்கப்பட்டிருக்கிறான். அவனது அருகில், ஒரு மனிதன்.

“அசைய முடியவில்லையா? ”

“உன் உடலில், நரம்புகளை செயலிழக்க வைக்கும் மருந்து ஒன்றைச் செலுத்தியிருக்கிறேன். உன்னால் கட்டாயம் அசைய முடியாது. ஆனால், அது மட்டும்தான். மற்ற எல்லாமே, உன்னால் முடியும். குறிப்பாக, வலி. வலியை , ஒவ்வொரு அணுவிலும் உன்னால் உணர முடியும்.”

“……………………….”

“இது, கட்டிங் ப்ளேயர். உனது பற்களை ஒவ்வொன்றாகப் பிடுங்கி எடுக்க”

“……………….!!!!!”

“இது, ரம்பம். உனது விரைகளை வெட்டியெடுக்க”

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ….. ………………………..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!”

“இது, கத்தி. உனது கண்ணிமைகளைப் பிடுங்க. அப்போதுதான், உன்னால் கண்களை மூடிக்கொள்ள முடியாது”

மெதுவே அந்த மனிதன், ஒரு முழுநீள கோட்டை மாட்டிக்கொள்கிறான். முகத்தில் ஒரு முகமூடியையும் மாட்டிக்கொள்கிறான். அவனது கையில், ஒரு மின்சார ரம்பம். அது விர்ர்ரர்ர்ர் என்று இயங்கும் சத்தம், கட்டிப்போடப்பட்டுள்ள கிளாரன்ஸ் டெர்பிக்கு, அவனது வாழ்வின் உச்சபட்ச பயத்தை வரவழைக்கிறது. அவனது வாய் கட்டிப்போடப்பட்டிருந்தாலும், பெரிதாக அவன் அலறுவது, நமக்குக் கேட்கிறது.

“முதலில், உனது காலில் இருந்து தொடங்கலாம். அதன் பின் கைகள். ஆணுறுப்பு. விரைகள். கண். காதுகள். தலை எல்லாமே”

வேகமாகச் சுழலும் ரம்பத்தை, டெர்பியின் காலில் வைத்து அழுத்துகிறான் அந்த மனிதன். ரத்தம் தெறிக்கிறது. டெர்பியின் ஓலம் அந்த அறையெங்கும் எதிரொலிக்கிறது.

காட்சி மூன்று :

“யுவர் ஹானர்…நான் ஒரு சட்டத்தை மதித்து நடக்கும் குடிமகன். இதுதான் என் மீது இதுவரை சுமத்தப்பட்டுள்ள முதல் குற்றச்சாட்டு. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் போலீசாரால் கொடுக்க இயலவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். எனவே, எந்த ஆதாரமும் இன்றி என்னை கஸ்டடியில் வைத்திருப்பது, நமது நாட்டு சட்டப்படி குற்றம் மட்டுமல்ல. அவமானகரமானதும் கூட. ஆகவே, ஆதாரங்கள் கிடைக்கும்வரை என்னை விடுவிக்க வேண்டுகிறேன்.”

ஜட்ஜ்: “குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் சொல்லும் வாதத்தை ஏற்றுக்கொண்டு, அவருக்கு பெயில் வழங்குகிறேன்.”

“யுவர் ஹானர். நான் சொன்ன விஷயத்தை வைத்து எனக்குப் பெயில் வழங்கிவிட்டீர்கள். இதுதான் இங்கே பிரச்னை. ஒரு குற்றத்தை செய்திருந்தாலுமே – அது எவ்வளவு கொடூரமானதாக இருந்தாலும் கூட – ஆதாரம் இல்லை என்று நான் சொன்னவுடன், நீங்களும் அதனை ஒப்புக்கொண்டு, கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள என்னை வெளியே விட சம்மதித்துவிட்டீர்கள். எத்தகைய அவலம் இது! இதைத்தான் தவறு என்கிறேன். நீங்கள் அத்தனை பேருமே, நாட்டுக்கு நல்லது செய்வதில்லை. வெறும் சட்டங்களை நம்பிக்கொண்டு குற்றவாளிகளை விடுவித்தும், அப்பாவிகளை உள்ளே தள்ளியும் வேடிக்கை காட்டுகிறீர்கள். என்ன நடக்கிறது இங்கே? நீதி என்பதைப் பற்றி எதுவாவது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் ஆட்டுமந்தைக் கும்பலால்தான் குற்றங்கள் இன்னமும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. நீதியை, நீங்கள் உங்களது குடிமக்களுக்கு மறுக்கிறீர்கள். ”

“குற்றவாளிக்கு பெயிலை ரத்து செய்கிறேன். சிறையில் அடையுங்கள் இந்த சைக்கோவை!”

இதுதான் Law Abiding Citizen .

வெகுநாட்கள் ஆகிவிட்டன இப்படி ஒரு படத்தைப் பார்த்து. படத்தின் முதல் நொடியிலேயே , கதை ஆரம்பித்துவிடுகிறது. கொஞ்சம் கூட அலுக்காத திரைக்கதை. படம் போவதே தெரியாமல் பார்த்தோம்.

திரைக்கதை மன்னர் Frank Darabont (Shawshank Redemption) செதுக்கிய திரைக்கதை இது. கடைசி நிமிடத்தில் படத்தை இயக்கும் பொறுப்பிலிருந்து வெளியே வந்துவிட்டாலும், டாரபான்ட்டின் திரைக்கதையை இன்னமும் கொஞ்சம் செதுக்கி, எடுக்கப்பட்டுள்ள படமே இது.

மறுக்கப்பட்ட நீதி, அதன் விளைவாக விளையும் கொடூரங்கள் என்ற கருவை வைத்துப் பின்னப்பட்ட இந்தப் படம், திரைக்கதையில் என்னை அசத்தியது. படம் முழுக்கவே , சம்பவங்களின் கோர்வையாகவே எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம்.

படத்தைப் பற்றி வேறு எதுவும் சொல்லப்போவதில்லை.

Law Abiding Citizen – ட்ரைலர் இங்கே.

  Comments

6 Comments

  1. I saw this movie a year back and was spellbound by the performance of Gerard Butler and the neatly woven script…

    Reply
  2. அடடா………..Gerald BUtler இருந்ததால இதவொரு மொக்க படம்னு நெனச்சு, HBOல பல தடவ போட்ட போதும் பாக்காம போயிட்டேன்…….

    // Frank Darabont செதுக்கிய திரைக்கதை// என்பதே இப்பதான் தெரியுது…………..

    நீங்க கூட அன்னிக்கு மெசஜ்ல ன்னு ரிப்ளை பண்ணதும் எங்க வாப்பா : சிட்டிசன் படத்த தான் சொல்றீங்களோன்னு நெனச்சேன்……………

    Reply
  3. கதை ரொம்ப நல்லாயிருக்கு. பார்க்கனும்.

    Reply
  4. டவுன்லோட் இப்போதான் போட்டுருக்கேன்!!coincidence!!சாம்பிள் பாத்தப்போ ஒருத்தன் கழுத்துல குத்துனவுடன் ரத்தம் பவுண்டேயின் மாதிரி வருது(நாங்கெல்லாம் எப்பவுமே unrated தான் பார்ப்பது வழக்கம்!!) சூப்பர்!!இந்த மாதிரி ரத்த வெறியாவே பாத்து பழகிடுச்சி!

    Reply
  5. இந்த படம் டி‌வில தான் பார்த்தேன். தெரிஞ்ச நடிகர்கள் தான்னு பார்த்தேன். படத்தின் முடிவு ஹாப்பி எண்டிங்கா இருந்திருக்கலாமோனு தோணுது…

    சமீபத்தில் பார்த்ததில் பிடித்தது…

    Im Juli – German – Predictable story but கதாநாயகியின் பாத்திரம் நன்றாக சித்தரிக்க பற்றிருக்கும்

    Offside – Farsi

    Reply

Join the conversation