The Lives of Others (2006 ) – German

by Karundhel Rajesh December 28, 2009   world cinema

நமது வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். எந்தச் சிக்கலும் இல்லாமல் இன்பமாக உள்ளது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். நமது நண்பர்கள், மனைவி, உறவினர்கள் இப்படி எல்லாரோடும், தினம் ஒரு பார்ட்டி என்று அனுபவித்துக்கொண்டிருக்கும் வேளையில், இது அத்தனையையும் – நம் வாழ்வில் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் – யாரோ ஒட்டுக்கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு திடுக்கிடும் உண்மை நமக்குத் தெரியவந்தால், எப்படி இருக்கும்? அதுவும், அந்த வார்த்தைகள் கோப்புகளில் வேறு தொகுக்கப்பட்டு, அந்தக் கோப்புகள் அரசின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது என்று வேறு நமக்குத் தெரிந்தால்? (நமது நாட்டில், இந்த விஷயம், ‘தொலைபேசி ஒட்டுக்கேட்பு’ என்று மீடியாவில் அடிக்கடி அடிபடுவது வேறு விஷயம்!).

ஒரு கொடுங்கோல் அரசின் அடக்குமுறைகளை வெளிச்சம்போட்டுக் காட்டும் படம்தான், ‘லைவ்ஸ் ஆஃப் அதர்ஸ்’ என்ற ஜெர்மானியப்படம்.

படம், 1984ல், கிழக்கு ஜெர்மனியில் ஆரம்பிக்கிறது. அந்நாட்களில், ஸ்டாஸி (STASI) என்ற அரசின் உளவு அமைப்பு, நாட்டில் உள்ள, சந்தேகத்துக்கிடமான நபர்களை, தீவிரமாகக் கண்காணித்து வந்தது. அவர்களது ஒவ்வொரு அசைவும் பதிவு செய்யப்பட்டு, ஏதேனும் புரட்சி நடத்த வாய்ப்புகள் இருக்கும்பட்சத்தில், அதனை முளையிலேயே கிள்ளி எறிவதே அவர்கள் நோக்கம். அத்தகைய அமைப்பைச் சேர்ந்த கேப்டன் வைஸ்லர் என்ற ஒருவர், ஒரு மனிதனை விசாரித்துக்கொண்டிருக்கும் காட்சியில் இருந்து, படம் தொடங்குகிறது. பின்னர், இதே விசாரணையை, இளம் அதிகாரிகளிடம் போட்டுக்காட்டும் வைஸ்லர், ஒரு போராளியை அடையாளம் காட்டுவது எப்படி என்று விளக்குகிறார். இந்த நபர் ஒரு போராளி என்றும், அவன் மீண்டும் மீண்டும் பலமணிநேரமாக ஒரே விதமான வார்த்தைகளை ஒப்பித்துக்கொண்டிருப்பதே இதனை விளக்குகிறது என்றும் சொல்கிறார்.

ஸ்டாஸியில், கர்னல் க்ருபிட்ஸ் ஒரு முக்கியமான நபர். ஒரு பார்ட்டியில், ஒரு நாடகத்தைக் கண்டுகொண்டிருக்கும் வேளையில், ஜெர்மானிய அமைச்சர் ஒருவர் – பெயர் ஹெம்ஃப் – க்ருபிட்ஸிடம், அந்த நாடக ஆசிரியரான ட்ரேமேன் என்பவரைக் கண்காணிக்கச் சொல்கிறார். க்ருபிட்ஸ், அந்த வேலையை நம்ம வைஸ்லரிடம் ஒப்படைக்கிறார். நாட்டுப்பற்று மிக்க வைஸ்லரும், உடனடியாக வேலையை ஆரம்பிக்கிறார். ட்ரேமேன் வீட்டில் இல்லாத தருணத்தில், அவர் வீட்டுக்குச் செல்லும் வைஸ்லர், ஒட்டுக்கேட்கும் உபகரணங்களை, வீடெங்கும் பொருத்துகிறார். அந்த வீட்டின் மேற்கூரையில் ஒரு ரகசியமான இடத்தையும் நிர்மாணிக்கிறார். அங்கு ஒரு ஆளையும் போட்டு, வீட்டில் நடக்கும் அனைத்து உரையாடல்களையும் ஒட்டுக் கேட்டு, கோப்புகளில் பதிவும் செய்ய ஏற்பாடு செய்கிறார். அவருமே அங்கு ஒவ்வொரு நாளும் வந்து, இந்த வேலையில் பங்கெடுத்துக் கொள்கிறார்.

நம் ட்ரேமேனின் வீட்டில், ஒரு நாள் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்யப்படுகிறது. அரசினால் ‘போராளி’ என்று முத்திரை குத்தப்பட்டு, கட்டம் கட்டப்பட்ட ‘ஜெர்ஸ்கா’ என்ற எழுத்தாளரும் அங்கு வருகிறார். அவர் ட்ரேமேனின் நெருங்கிய நண்பர் வேறு. இதையும் வைஸ்லர் பதிவு செய்கிறார்.

இப்பொழுது கதையில் ஒரு சிறிய ட்விஸ்ட். ட்ரேமேனை ஒட்டுக்கேட்கச் சொன்ன அமைச்சர் ஹெம்ஃப், ட்ரேமேனின் காதலியான க்ரிஸ்டா-மரியாவின் மீது இரண்டு கண்களையும் வைத்திருக்கும் ஒரு ஆள். க்ரிஸ்டா-மரியா ஒரு நடிகையும் கூட. எனவே, பட்சியை எப்போது மடக்கலாம் என்றே காத்துக்கொண்டிருப்பவர். அவரின் இந்த மோகம் பற்றி நம்ம வைஸ்லருக்குத் தெரிய வருகிறது. அவர் ஒரு தீவிரமான சோஷலிஸவாதி. எனவே, ஒரு அரசு அமைச்சர் இப்படி ஒரு பெண்ணின் பின்னால் சுற்றுவது அவருக்குத் தலைசுற்றலை ஏற்படுத்துகிறது. அமைச்சரின் மேல் கோபமும் வருகிறது. எனவே, ஒருநாள், அந்த அமைச்சர், தனது காரிலேயே க்ரிஸ்டா-மரியாவை வற்புறுத்தி ஏற்றிக்கொண்டு, அவளிடம் தவறாக வேறு நடக்க முயற்சி செய்து, வீட்டின்முன் இறக்கிவிடும் காட்சியை, தனது சாதுர்யத்தினால், ட்ரேமேனைக் காண வைத்துவிடுகிறார்.

ட்ரேமேனுக்கு, க்ரிஸ்டா-மரியாவின் மேல் சந்தேகம் வருகிறது. சிலநாட்கள் கழித்து, க்ரிஸ்டா-மரியாவிடம் இதுகுறித்து சண்டையிடுகிறார். அவள், அரசைப் பகைத்துக்கொண்டால், இருவரையும் தீர்த்த்துக்கட்டி விடுவார்கள் என்றும், எனவே தான் வேறு வழியில்லாமல், அமைச்சரை அனுமதிப்பதாகவும் சொல்கிறாள். அமைச்சர், அன்று அவளை வரச்சொல்லியிருப்பதாகவும், அவள் செல்லவில்லையென்றால், இருவரையும் கொன்றுவிடுவார்கள் என்றும் சொல்லி, வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அவள் செல்லும் ஒரு பாருக்குச் செல்லும் வைஸ்லர், அவளிடம் பேச்சுக்கொடுத்து, தான் அவள் ரசிகன் என்று சொல்லி, அவள் மனத்தை மெதுவாக மாற்றிவிடுகிறார்.

தன்னந்தனியாக வாழ்ந்துவரும் வைஸ்லர், ட்ரேமேன் பியானோவில் வாசிக்கும் சிம்பொனியைத் தினமும் (ஒட்டுக்)கேட்டுக்கேட்டு, வாழ்வில் ஒரு அர்த்தத்தை உணர ஆரம்பித்துவிடுகிறார். மெதுவாக, ட்ரேமேன் வீட்டில் இல்லாத நேரங்களில், அவரது புத்தகங்களைத் திருடிப் படிக்கிறார். மெல்ல மெல்ல மனது மாறுகிறார்.

ஜெர்ஸ்கா, திடீரென்று தற்கொலை செய்துகொள்கிறார். கோபமடையும் ட்ரேமேன், அரசைப் பகிரங்கமாக எதிர்க்கத் தொடங்குகிறார். அரசைப் பற்றி ஒரு தீவிரமான கட்டுரை ஒன்றை, மற்ற எழுத்தாளர்கள் உதவியோடு தயார் செய்கிறார். அதை வெற்றிகரமாக மேற்கு ஜெர்மனிக்குக் கடத்தி, ஒரு பிரபலமான பத்திரிக்கையில் பதிப்பித்துவிடுகிறார். இதையெல்லாம் தெரிந்தும், வைஸ்லர் அதை ரிப்போர்ட் செய்யாமல் மறைத்துவிடுகிறார். அவருக்கு, கொஞ்சம் கொஞ்சமாக ட்ரேமேன் மீது உருவாகி வரும் மரியாதையும் பரிவுமே காரணம்.

இந்நிலையில், க்ரிஸ்டா-மரியா தன்னை விட்டு விலகுவதை உணர்ந்த அமைச்சர், அவளின் எதிர்காலத்தை அழிக்கத் திட்டமிட்டு, க்ருபிட்ஸிடம் உத்தரவிடுகிறார். அவள், தடை செய்ய்யப்பட்ட மருந்தை வாங்கும்போது அவளைக் கைதுசெய்யும் க்ருபிட்ஸ், அவளிடம் அந்தக் கட்டுரையைப் பற்றிக் கேட்டு நிர்ப்பந்திக்க, கடைசியில் அதைப் பற்றிய உண்மையை ஒத்துக்கொண்டுவிடுகிறாள் க்ரிஸ்டா-மரியா. மேலும், தான் அரசு உளவாளியாக ஆவதாகவும் எழுதிக் கொடுக்கிறாள். உடனே ட்ரேமேன் வீட்டில் சோதனை செய்ய்யப்படுகிறது. ஆனால் எதுவும் கிடைப்பதில்லை.

இண்டெராகேஷனில் வித்தகரான வைஸ்லர் வரவழைக்கப்பட்டு, அவரிடம் க்ரிஸ்டா-மரியாவை விசாரிக்கும் பணி ஒப்படைக்கப்படுகிறது. தர்மசங்கடத்தில் சிக்கிக்கொள்ளும் வைஸ்லர், ரகசியமாக, அன்றொருநாள், தான் அவளிடம் பேசியதை நினைவுபடுத்துகிறார். அவள், அந்தக் கட்டுரை டைப் செய்ய்யப்பட்ட டைப்ரைட்டர் எங்கு ஒளித்துவைக்கப்பட்டுள்ளது என்ற உண்மையைச் சொல்லிவிடுகிறாள். வீட்டுக்குச் செல்லும் க்ருபிட்ஸிடம் எதுவும் சிக்குவதில்லை. முன்பே அங்கு சென்றுவிட்ட வைஸ்லர், அதை அகற்றிவிட்டதே காரணம்.

மனக்குமுறலோடு அங்கு ஓடிவரும் க்றிஸ்டா, ஒரு ட்ரக்கில் அடிபட்டு இறந்துவிடுகிறாள். அங்கு வரும் வைஸ்லர், அந்த டைப்ரைட்டரை, தான் தான் ஒளித்துவைத்ததாக அலறுகிறார். உடனே, அவர் பணி-இறக்கம் செய்ய்யப்பட்டு, வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுவிடுகிறார்.

நாங்கு வருடங்களும் ஏழு மாதங்களும் கழித்து, ஒரு பாடாவதி அரசு அலுவலகத்தில், கடிதங்களைத் திறக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வைஸ்லருக்கு, ஜெர்மன் சுவர் இடிக்கப்பட்ட செய்தி கிடைக்கிறது.

அதற்கு இரண்டு வருடங்கள் கழித்து, க்ரிஸ்டா-மரியா பல வருடங்களுக்கு முன் நடித்த ஒரு நாடகத்தைப் பார்க்கையில், ட்ரேமேன், முன்னாள் அமைச்சரும் இந்நாள் தொழிலதிபருமான ஹெம்ப்பை சந்திக்கிறார். புரட்சி எழுத்தாளனான தன் வீட்டை ஏன் கண்காணிக்கவில்லை என்று அவரிடம் கேட்கிறார். ட்ரேமேனின் வீட்டை இரவுபகலாகக் கண்காணித்ததாகவும், அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் கோப்புகளில் பதிவு செய்ததாகவும் ஹெம்ப் சொல்ல, அதிர்ச்சியாகிறார் ட்ரேமேன். தன் வீட்டைக் கண்காணித்தும், தான் எழுதிய கட்டுரைக்காகத் தன்னை ஏன் கைது செய்யாமல் விட்டார்கள் என்று குழம்பும் அவர், அரசுக் கோப்பகத்துக்குச் சென்று, தனது கோப்பை எடுத்துப் பார்க்கிறார். அதில், தான் மற்ற எழுத்தாளர்களோடு சேர்ந்து அந்தக் கட்டுரை எழுதிய விவரங்கள் எதுவும் இல்லாததைக் கண்டு, அந்த அதிகாரியால் தான் அவர் உயிரோடு இருப்பதை உணர்கிறார். அந்த அதிகாரியின் சங்கேத எண், ‘HGW XX/7’ என்ற விவரம் மட்டுமே அவருக்குக் கிடைக்கிறது.

இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து, ஒரு தபால்காரராக இருக்கும் வைஸ்லர், ஒரு வீதியில் சென்றுகொண்டிருக்கும்போது, ட்ரேமேனின் புதிய புத்தகத்தின் போஸ்டரைப் பார்க்கிறார். அவரது மனம் கவர்ந்த எழுத்தாளராக ட்ரேமேன் இருப்பதால், அந்தப் புத்தகத்தை, கடையில் சென்று பார்க்கிறார். அந்தப் புத்தகம், ‘HGW XX/7’ என்ற நபருக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதைக் கண்டு, உணர்ச்சிவசப்படும் வைஸ்லர், அப்புத்தகத்தை வாங்குகிறார். அப்போது அந்தக் கடைக்காரர், புத்தகத்தைப் பார்சல் செய்யவேண்டுமா என்று கேட்க, அதற்கு வைஸ்லர், வேண்டாம் என்றும், அந்தப் புத்தகம், அவருக்காகத் தான் என்றும் கூறும் க்ளோஸப்போடு, படம் முடிகிறது.

ஒரு அடக்குமுறை அரசில், ஒரு எழுத்தாளனின் பங்கைப் பற்றியும், அந்த அரசில் வேலை செய்யும் இரக்கமே இல்லாத அதிகாரிகளைப் பற்றியும், மெதுவாக மனம் மாறும் அத்தகைய ஒரு அதிகாரியின் மனிதாபிமானம் பற்றியும் நெஞ்சைத் தொடும் வகையில் படமாக்கப்பட்ட இந்தப் படம், ஜெர்மானிய இயக்குநர் ‘Florian Henkel Von Donnersmark’ (உஸ்.. அப்பாடா) என்பவரின் முதல் படம். இப்படத்திற்காக ஒன்றரை வருடங்கள் கடும் ஆய்வு மேற்கொண்ட இந்த இயக்குநர், திரைக்கதையையும், இரண்டு வருடங்களில் ஐந்துமுறை மாற்றியமைத்தார். இப்படம் நடந்த காலகட்டத்தில், ஸ்டாஸி அமைப்பு, மொத்தம் 274,000 ஆட்களை, இந்தக் கண்காணிப்பு வேலைக்காக அமர்த்தியிருந்தது வரலாறு.

இப்படம் எடுத்ததற்கான மூலக்கூறு, லெனின் சொன்ன ஒரு வாக்கியத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று இந்த இயக்குநர் கூறுகிறார். ‘நான் மட்டும் பீத்தோவனைக் கேட்டுக்கொண்டிருந்தால், ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, ஒரு கலாரசிகனாக மாறிவிடுவேன்’ என்ற அந்தக் கூற்றினால் தான் இந்தப்படம் எடுக்கும் யோசனை அவருக்கு வந்தது. இப்படத்திலும், ட்ரேமேன் வாசிக்கும் சிம்ஃபனி இசையைக் கேட்கத்தொடங்கும் வைஸ்லரின் உள்ளத்தில், மெதுவாக மனிதாபிமானமும் அன்பும் துளிர்ப்பது அழகாகக் காட்டப்பட்டிருக்கும்.

இப்படத்தின் இன்னொரு முக்கிய அம்சம், இதன் இசை. அமைத்தது, புகழ்பெற்ற ஃப்ரெஞ்சு இசையமைப்பாளர் காப்ரியல் யாரெத். இந்த இயக்குநர், அவரது இசைதான் வேண்டும் என்ற காரணத்தினால், திரைக்கதையை ஃப்ரென்ச்சில் மொழிபெயர்த்து, அவருக்கு அனுப்பி, அவரைச் சம்மதிக்க வைத்தார். வைஸ்லரின் மனம் மாறும் அந்தக் குறிப்பிட்ட காட்சியில், “இந்த இசையைக் கேட்ட நொடியில், ஹிட்லரின் மனம் மாற வேண்டும். அத்தகைய ஒரு இசையை இக்காட்சியில் நீங்கள் அமைக்க வேண்டும்” என்று சொல்லி, ஒரு அருமையான இசையைக் கேட்டு வாங்கினார் இந்த இயக்குநர். இப்படத்திற்கு, சிறந்த வெளிநாட்டுப்படத்திற்கான ஆஸ்காரும் (2007 )கிடைத்தது.

ஆகமொத்தம், ஒரு அருமையான படம். இப்படத்தைப் பார்த்து, இசையின் மகிமையையும், ஒரு புரட்சி எழுத்தாளனின் கோபத்தையும், ஒரு மிருகத்தின் மனமாற்றத்தையும் உணருங்கள்.

இப்படத்தின் டிரைலர் இங்கே.

  Comments

8 Comments

  1. நண்பரே,

    மிகுந்த நம்பிக்கை தரும் ஒரு சினிமாப் பதிவாளராக உருமாறி வருகிறீர்கள். இது மிகவும் மகிழ்வான ஒரு விடயம். அருமையான படம் குறித்து சிறப்பான பதிவு. கால இடைவெளியை முன்னிறுத்தாது பதிவுகளின் தரம் குறித்து அக்கறை பேணும் வலைப்பூக்களில் ஒன்றாக உங்கள் வலைப்பூ மாறிவருகிறது அது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. தொடருங்கள்.

    Reply
  2. காதலரே. .. நீங்கள் என் மீது வைத்திருக்கும் இந்த நம்பிக்கைக்கு நன்றி. என் பணி விமர்சனம் செய்து கிடப்பதே. . இனிமேலும் எனக்கு நல்ல படங்கள் என்று தோன்றுவனவற்றை அறிமுகம் செய்துகொண்டே இருப்பேன். . . உங்கள் ஊக்கத்துக்கு எனது வணக்கங்கள். ..

    Reply
  3. இந்தப் படத்தைப் பத்தி முன்னாடியே கேள்விப் பட்டிருக்கேன் கருந்தேள். நம்ம ப்ளாகர்ஸ் யாரோ எழுதியிருந்தாங்க.

    நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்குதான்னு பார்த்துடுறேன். இப்படியே லிஸ்ட் அதிகமாய்ட்டு போனா.. என்னைக்கு பார்த்து முடிக்கிறது? 🙂

    ஹோல்ம்ஸ் வந்துடுச்சா ஊருக்கு?

    Reply
  4. பாலா – இன்னும் பெங்களூருக்கு ஹோம்ஸ் வரல . . 🙁 எப்போ வரும்னும் தெரியல.. இங்க இன்னும் அவதார் ஓடிட்டு இருக்கு.. சோ அதுக்கு அப்புறம்தான்னு நெனைக்குறேன்.. விடமாட்டேன் . .

    அப்பறம், உங்க லிஸ்டும் தான் பெருசாயிட்டே போவுது. . எங்களுக்கும் அதே பிரச்னை தான் . . 🙂 ஆனா கரும்பு திங்க கூலியா? 🙂

    Reply
  5. You are rocking man!!! Keep it up your good work!

    Reply
  6. அருமையான விமர்சனம்.. கட்டாயம் பாத்துட வேண்டியதுதான்…

    Reply
  7. A Fantastic movie.. One of my favorites..

    Reply
  8. A Fantastic movie.One of my favorites which had a deep effect in the league of Shawshank Redemption , The Bridge on the River Kwai etc..

    Reply

Join the conversation