LOTR: The Series – 13 – Screenplay & Editing & Rohan

by Karundhel Rajesh August 11, 2011   war of the ring

இதுநாள்வரை, ஃபெலோஷிப் ஆஃப் த ரிங் படத்தில் உபயோகப்படுத்தப்பட்ட அம்சங்களைப் பார்த்தோம். இப்போது, மறுபடி ஃபெலோஷிப் படத்தின் கதைக்குள் ஒரு deep dive அடிப்போம். படத்தின் திரைக்கதையை சற்றே அலசவே இந்த டீப் டைவ். அப்படியே, படத்தின் கதையிலுள்ள அதிமுக்கிய அம்சங்களைப் பார்த்துவிடலாம்.

திரைக்கதை

படத்தின் ஒன் லைன் – அதாவது – இந்தப் படத்தின் கதையை ஒரு வரியில் சொல்ல நேர்ந்தால், அது இப்படி இருக்கும் – உலகிற்கு அழிவைக் கொண்டுவர இருக்கும் மோதிரத்தை அழிக்க, அது உருவான இடத்துக்கே செல்ல முயலும் ஒரு ஹாபிட்டின் கதை. இந்த ஒரு வரிக் கதையை, திரைக்கதையாக ஜாக்ஸனும் அவரது மனைவி ஃப்ரான் வால்ஷும், அவர்களது தோழி பிலிப்பா போயன்ஸும் எழுதியபோது, அது (புத்தக சைஸில்) மொத்தம் நூற்றி இருபது பக்கங்களுக்கு விரிந்தது. இந்தத் திரைக்கதை, டால்கீன் எழுதிய நாவல்களில் இருந்து எழுதப்பட்டது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். பொதுவாக, ஒரு புதிய திரைக்கதை எழுதப்படுகையில், திரைக்கதையாசிரியருக்கு இருக்கும் சுதந்திரம், அளவற்றது. காரணம்? அந்தத் திரைக்கதையின் எல்லை, எதனை நம்பியும் இல்லை; எதுவேண்டுமானாலும் எழுதப்படலாம் என்பதே. ஆனால், ஏற்கெனவே இருக்கும் ஒரு நாவலைத் திரைக்கதையாக எழுத முற்படுகையில், அந்தத் திரைக்கதையாசிரியரின் கைகள் கட்டிப்போடப்பட்டுவிடுகின்றன. அவரால், நாவல் என்ன சொல்ல முயல்கிறதோ, அதை மட்டுமே எழுத முடியும். புதிதாக எதையும் எழுத இயலாது. மட்டுமல்லாது, பல நூறு பக்கங்களுக்கு விரிந்திருக்கும் அந்நாவலை, மொத்தம் நூற்றுசொச்சம் பக்கங்களுக்குள் கொண்டுவந்துவிடவேண்டும் என்ற பொறுப்பு வேறு சேர்ந்துகொள்கிறது. ஆகவே, இது கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு பணி.

சரி. ஏன் நூற்றுசொச்சம் பக்கங்கள்? ஏன் இருநூறு அல்லது முன்னூறு பக்கங்களாக இருக்கக்கூடாது?

ஹாலிவுட்டின் திரைக்கதை விதிகளில் தலையாய விதி என்னவெனில், ஒரு திரைக்கதை, மொத்தம் நூற்றிருபது பக்கங்களுக்குள் அடங்கிவிடவேண்டும் என்பதே. திரைக்கதையின் ஒரு பக்கத்தின் திரைநேரம் என்பது, ஒரு நிமிடம். ஆகவே, நூற்றிருபது பக்கங்கள் என்பது, நூற்றிருபது நிமிடங்களுக்குச் சமம். இரண்டு மணி நேரம். அப்பொழுதுதான் மல்டிப்ளெக்ஸ்களில் அதிகபட்ச ஷோக்கள் ஓட்ட முடியும். படத்துக்கு லாபமும் கிடைக்கும். பொதுவாக, ஹாலிவுட்டில் வெளிவரக்கூடிய படங்கள், 140 நிமிடங்களே அதிகபட்சமாக இருப்பதை, திரைப்பட விரும்பிகள் அறிந்திருக்கலாம். இதுதான் காரணம்.

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவல்களை முழுக்கப் படித்து, அவைகளைச் சுருக்கமாகத் திரைக்கதையின் பக்கங்களுக்குள் அடைக்கும் பணியைத் துவக்கினார் ஜாக்ஸன். கூடவே, அவரது மனைவி ஃப்ரான் வால்ஷும், அவர்களது தோழி பிலிப்பா போயன்ஸும். இதில், பிலிப்பா போயன்ஸ், தனது வாழ்நாளில் இதுவரை ஒரு வரி கூட எழுதியதில்லை. ஆனால், இந்த மூன்று நாவல்களையும் பலமுறை படித்து, டால்கீன் ஸ்பெஷலிஸ்ட்டாகத் திகழ்ந்தார். எனவே, அவரது உதவி அவசியம் தேவைப்படும் என்று எண்ணிய ஜாக்ஸன், படம் முழுவதும் அவரைத் தன்னுடனே வைத்துக்கொண்டார். ஜாக்ஸன் எண்ணியது போலவே, படத்தின் பல காட்சிகளில் பேருதவி புரிந்தார் போயன்ஸ். பல எல்விஷ் மொழிப் பாடல்களையும் எழுதிக் கொடுத்தார்.

படத்தின் திரைக்கதையை எழுதுகையில், ஒரே ஒரு விஷயத்தில் படு தெளிவாக இருந்தார் ஜாக்ஸன். இந்தப் படங்களின் ஒன்லைன் – அதாவது, ஒரே வரியில் இப்படத்தை விளக்கவேண்டும் என்றால் அது என்ன? ‘மோதிரத்தை அழிக்க, அது உருவான இடத்துக்கே செல்ல முயலும் ஒரு ஹாபிட்டின் கதை’. எனவே, இந்த நோக்கத்துக்குத் துணையாக இருக்கும் விஷயங்கள் மட்டுமே படத்தில் காண்பிக்கப்படவேண்டும். இதைத்தவிர பாக்கியிருக்கும் விஷயங்கள், படத்துக்குத் தேவையில்லை. இதுதான் ஜாக்ஸன் எடுத்த முடிவு. இதனாலேயே, நாவலின் சில முக்கிய அம்சங்கள் திரைப்படத்தில் இருக்காது. ஆனால் அவை, படத்தின் தன்மையைப் பாதிக்கவில்லை.

ஆக, ஜாக்ஸன், இப்படத்தின் திரைக்கதையைத் தெளிவாக அமைத்தார். திரைக்கதை, சில முக்கியமான சம்பவங்களால் கோர்க்கப்பட்டது. அவைகள் இங்கே:

  1. மோதிரத்தின் முன்கதை
  2. கோல்லுமிடம் இருந்து பில்போ பேகின்ஸின் கைகளுக்கு மோதிரம் கிடைப்பது
  3. பில்போவிடம் இருந்து ஃப்ரோடோவுக்கு மோதிரம் செல்லுதல்
  4. ஸாரோனின் எழுச்சி – மோதிரத்தை அவன் தேடுதல்
  5. காண்டால்ஃப் மோதிரத்தைப் பற்றி அறிதல்
  6. ஃப்ரோடோவின் பயணம் ஆரம்பம்
  7. அரகார்ன் ஃப்ரோடோவைச் சந்தித்தல்
  8. The council of Elrond
  9. Mines of Moria
  10. Lothlorien – கலாட்ரியலுடன் சந்திப்பு
  11. Parth Galen – ஃபெலோஷிப் பிரிதல்
  12. Battle of Helm ‘s Deep
  13. கோல்லும் ஃப்ரோடோவை சந்திப்பது
  14. மினாஸ் திரித் முற்றுகை
  15. சிரித் உங்கோல் ராட்சத சிலந்தி
  16. மினாஸ் திரித்தில் பெலோஷிப்பின் வெற்றி
  17. க்ளைமேக்ஸ்

இந்த முக்கிய சம்பவங்களை மையமாக வைத்து, படத்தின் திரைக்கதை பின்னப்பட்டது. இந்தச் சம்பவங்களை ஒன்றோடொன்று இணைப்பதே இப்படத்தில் திரைக்கதையின் வேலையாக இருந்தது.

முடிந்தவரை, நண்பர்கள் இப்படங்களின் திரைக்கதைகளைப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன். இணையம் எங்கிலும் திரைக்கதை கிடைக்கிறது. படித்தால், எவ்வளவு அருமையாக இக்கதை பின்னப்பட்டிருக்கிறது என்பது தெரியவரும்.

எடிட்டிங்

திரைப்படங்களில் எடிட்டிங் என்பது இன்றியமையாத இடத்தை வகிக்கிறது என்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். அதிலும், ஒரு பிரம்மாண்டமான காவியத்தை – ஒரே சமயத்தில் மூன்று பாகங்களையும் படமாக்குகையில் – எவ்வளவு கடினமான பணியாக அது இருந்திருக்கும்?

இதனாலேயே, ஜாக்ஸன், ஒவ்வொரு பாகத்துக்கும் வேறுவேறு எடிட்டர்களை உபயோகப்படுத்திக்கொண்டார். ஒரே சமயத்தில் மூன்று படங்களை எடிட் செய்ய, வெவ்வேறு எடிட்டர்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம் அல்லவா?

ஒவ்வொரு நாளும் படமாக்கப்பட்ட காட்சிகள் வந்து சேர, அவைகளை வரிசைப்படுத்தி எடிட் செய்யும் மிகக் கடினமான பணி, மூன்று வருடங்களுக்கும் தொடர்ந்தது. ஜாக்ஸனே பெர்சனலாக எடிட்டிங்கை மேற்பார்வை செய்தார். அவர் விரும்பியவண்ணம் காட்சிகள் இன்டர்கட் ஆவது சவாலான பணியாக இருந்தது. முடிவில் பல காட்சிகள் உபயோகப்படுத்தப்படாமலே வெட்டி எறியப்பட்டன.

ஒரு உதாரணமாக, ஃபெலோஷிப் ஆஃப் த ரிங் படத்திலிருந்து ஒரு காட்சி. எல்ராண்டின் மேற்பார்வையில், ஃபெலோஷிப் உருவாகும் காட்சி. இதில், ஒவ்வொரு கதாபாத்திரமாக முன்வந்து பேசுவார்கள். இந்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் காட்சிகளும் தனித்தனியாக எடுக்கப்பட்டவை என்பது திரைப்பட உத்தி. அப்படித்தான் எடுக்க முடியும். முடிவாக, எடிட்டிங் செய்கையில், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் காட்சியும் மற்ற கதாபாத்திரங்கள் பேசும் காட்சிகளோடு எடிட் செய்யப்பட்டு, முழுவடிவக் காட்சி நமக்குக் கிடைக்கிறது. ஃபெலோஷிப் ஆஃப் த ரிங் extended version ல் , இந்தக் காட்சியின் டெமோ உள்ளது. அது, எடிட்டிங்கில் இருந்த கஷ்டத்தை நமக்குப் படு சுலபமாகப் புரிய வைக்கும்.

ரோஹான்

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கதை நடந்த காலகட்டத்தில், அப்போதிருந்த நாடுகளில், தனக்கென ஒரு படைபலம் பெற்றிருந்த பெரிய நாடுகள் இரண்டுதான். காண்டோர் மற்றும் ரோஹான். இவற்றைத் தவிர வேறு பல பிராந்தியங்களும் மிடில் எர்த்தில் நிறைந்திருந்தாலும் (உதாரணம்: Eriador , Rhovanion , Rhun , The lost realm of Arnor ), அவற்றில் பல இடங்கள் காடுகளாக மாறிவிட்டன. மீதமிருந்த சில இடங்களில், குறைந்த அளவு மனிதர்களே நிறைந்திருந்தனர். அவர்களும், ஒரு பலம்வாய்ந்த மன்னன் இல்லாமல், ரேஞ்சர்கள் என்று அழைக்கப்பட்ட சில போராளிகளினாலேயே பாதுகாக்கப்பட்டு வந்தனர். ஒரு உதாரணமாக, Arnor பகுதியை எடுத்துக்கொண்டால், அதில்தான் ஷையர் வருகிறது. அப்பகுதியைக் காவல் புரியும் (நாவலில் வரும்) ரேஞ்சர்கள், படத்தில் இடம்பெறவில்லை.

ஆக, படைபலம் மிகுந்து, தங்களது நாடுகளிலும் மக்களை அதிக அளவில் கொண்டிருந்த இந்த நாடுகளான காண்டோர் மற்றும் ரோஹான் இரண்டும், எப்படி ஒருங்கிணைந்தன என்பது, இப்படங்களின் உபகதை. இறுதியில்தான் இணைந்தன என்றால், அதுவரை இந்த நாடுகளின் உறவு எந்நிலையில் இருந்தது?

மிடில் எர்த்தின் சரித்திரத்தில், முதலில் உருவான நாடு, காண்டோர். ஆதியில், எலெண்டில் என்ற மனிதன், தனது நாடான ந்யூமெனோர் கடலில் மூழ்கியவுடன், தனது இரு மகன்களான இஸில்டோர் மற்றும் அனாரியன் ஆகியவர்களுடன் வந்து இறங்கி, ஒரு புதிய நாட்டை உருவாக்கிய இடமே, காண்டோர். இதன்பின் இஸில்டோர் மற்றும் அனாரியன் ஆகியோர், மினாஸ் இதில் மற்றும் மினாஸ் அனோர் ஆகிய இரண்டு நகரங்களை ஸ்தாபித்ததையும், இந்த இரண்டு நகரங்களின் தலைநகரமான ஆஸ்கிலியாத் என்ற நகரம், இவைகளின் நடுவில் உருவாக்கப்பட்டதையும், முன்னரே கண்டிருக்கிறோம். இப்படி உருவாக்கப்பட்ட காண்டோர், செழித்து வளர்ந்தது.

ஒரு சமயம், காண்டோர், தாக்குதலுக்குள்ளானபோது, மிக அருகில் இருந்த ஒரு குறிப்பிட்ட இனத்தாரிடம் உதவி வேண்டி காண்டோரின் அரசன் அனுப்பிய செய்திக்கு அந்த இனத்தினர் மதிப்பளித்து, காண்டோருக்கு உதவினர். காண்டோரும் வென்றது. ஆகவே, அந்த இனத்தாரே காண்டோருக்கு அருகில் இருந்த பிராந்தியத்தை ஆண்டுகொள்ளலாம் என்று காண்டோரின் அரசன் அனுமதியளித்தான். அந்தப் பிராந்தியமே பிற்காலத்தில் ‘ரோஹான்’ என்று அழைக்கப்பட்டது.

இந்த ரோஹான் நாட்டின் பிரஜைகள், ‘ரோஹிர்ரிம்’ (Rohirrim) என்று அழைக்கப்பட்டனர். அவர்கள், குதிரைகளைப் பராமரிப்பதிலும், போரிடுவதிலும் வல்லவர்கள் ஆதலால், அந்த நாட்டின் கொடியே, குதிரையைத் தன்னுள் கொண்டிருந்தது (இவர்களைப் பற்றிப் படத்தின் இரண்டாம் பகுதியைப் பார்க்கும்போது விரிவாகக் காணலாம்).

ஸாருமான் இந்த ரோஹான் நாட்டின் எல்லையில்தான் தனது பாசறையை அமைத்து இருந்தார்.

காண்டாரில் இருந்து உருவானதால், ரோஹான் நாட்டு மன்னர்கள், காண்டோருக்கு மிகுந்த விசுவாசமுள்ளவர்களாகவே இருந்தனர். காண்டோர் நாடு மன்னர்களால் ஆளப்பட்டுவந்தவரையில் இந்த ரோஹான் விசுவாசம் தொடர்ந்தது. எப்போது காண்டார் மன்னர்களின் அமைச்சர்களால் ஆளப்பட ஆரம்பித்ததோ, அப்போதிலிருந்து மிக மெதுவே இந்த இரு நாட்டு நட்பு நலியத்துவங்கியது. அதிலும், ரோஹானின் தற்போதைய மன்னரான தியோடன், எப்போது ஸாருமானால் பீடிக்கப்பட்டாரோ, அதிலிருந்து காண்டோர் ரோஹானை முற்றிலும் புறக்கணித்தது.

இதுகுறித்த சுவையான தகவல்களை, இரண்டாம் பாகம் பற்றிய கட்டுரைகள் ஆரம்பிக்கையில் காண்போம்.

ரோஹான் தீம் இசை நன்றாக இருக்கும்.

தொடரும் . . .

  Comments

8 Comments

  1. பெல்பாட்டம் மொதலாளி இப்ப யோஹானாகிட்டார். வடை நாம சுட்டு.. அவரை வெறுப்பேத்துவோம்.

    ரைட் பேக்

    Reply
  2. 🙂 super appu…

    Reply
  3. to be frank, எனக்கு இந்த எபிஸோட் ஜம்புள் ஆன மாதிரி ஒரு ஃபீலிங் இருக்குங்க.

    ஒருவேளை கதைக்குள் டீப்டைவ்-ன்னு சொல்லிட்டு நேரா ஸ்க்ரீன்ப்ளே-வுக்கு போய்ட்டீங்களே. அதனாலயோ தல?

    பட், இந்த டெடிகேஷனை… வேற யார்கிட்ட பார்க்க முடியும்?!! த ஒன் அன் ஒன்லி கருந்தேள்!! 🙂 🙂

    Reply
  4. அருமை நண்பரே..!

    Reply
  5. @ பிரபல பதிவரே – கரெக்டா புடிச்சீங்க. எனக்கே இந்த எபிசொட் ஜம்பிள் ஆனாமேரி ஒரு பீலிங்கி இருந்திச்சி. அந்த சந்தேகத்தோடயேதான் பப்ளிஷ் பண்ணேன். இருக்கட்டும். இதை அடுத்த போஸ்ட்ல சரி பண்ணிப்பிடலாம் 🙂 . . அப்பால, அது என்னா டெடிகேஷன் அது இதுன்னுக்கினு 🙂 .. . . எல்லாமே நம்ம கூடவே பொறந்ததாச்சே 🙂 . . ஹீ ஹீ

    யோஹான் இங்க வரமாட்டாரு. அதான் நீங்க வட போட்டீங்களே 🙂

    @ சம்பத் & நிரோஷ் – நன்றி. மீண்டும் வருக 🙂

    Reply
  6. அட்டகாசம் திரைக்கதையை பத்தி பூந்து விளையாடிருக்கிங்க…. உங்க dedication பிரம்மிக்க வைக்குது… சூப்பர் தல..பதினேழு பாயின்ட் செம தெளிவு… பிரபல பதிவர் சொன்ன மாறி லைட்டா ஜம்புல் ஆனா மாறி தான் இருக்கு…

    Reply
  7. நண்பரே!கோவை புத்தக்கண்காட்சியில் பிசியாக இருப்பதால் உங்கவலைப்பக்கம் வர முடியவில்லை.
    முடிந்தால் புத்தகக்கண்காட்சிக்கு வாருங்கள்.

    Reply
  8. அட, நீங்க கோவையா? நான் நேற்று கோவை புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தேன், அடடா, ஜஸ்ட் மிஸ்..

    Reply

Join the conversation