LOTR: The Series – 14 – Gollum

by Karundhel Rajesh September 1, 2011   war of the ring

பனிபடர்ந்த மிஸ்டி மலைகள். இந்த மலைகளின் எண்ணிலடங்கா குகைகளில் ஒன்று. இருள் படர்ந்திருக்கும் வேளை. திடீரென ஒரு ஓலம், காற்றைக் கிழித்துக்கொண்டு எழுகிறது. கொடூரமான ஒரு மிருகம், சித்ரவதை செய்யப்படுவதைப் போன்ற ஓலம் அது.

“Thief! Thief, Baggins! We hates it, we hates it, we hates it forever!!”

உருவத்தில் சிறிய மனிதன் ஒருவன், குகைக்குள்ளிருந்து ஓடி வருகிறான். அவனது கை, அவனது சட்டையின் பாக்கெட்டை அழுந்திப் பிடித்திருக்கிறது.

மிடில் எர்த்தின் தலையெழுத்தே முற்றிலுமாக மாறிய வினாடி அது.

ஒரு மணி நேரத்துக்கு முன்

தனது நண்பர்களிடமிருந்து வழிதவறிப் பிரிந்த பில்போ பேகின்ஸ் என்ற ஹாபிட், மிஸ்டி மலைகளுக்குள் நடந்துசெல்கிறான். அப்போது, பிசாசைப் போன்ற ஜந்து ஒன்று, அவனைச் சந்திக்கிறது. தனது பிறந்த நாள் அன்று தன்னிடம் வந்துள்ள இந்த ஹாபிட்டைத் தின்றுவிடுவது என்ற முடிவுக்கு வரும் அந்த ஜந்து, அந்த ஹாபிட்டிடம் இருக்கும் ‘Sting’ என்ற கத்தியைக் கண்டு பயந்து, ஒரு யோசனை சொல்கிறது. ஒரு சிறிய விளையாட்டை விளையாடவேண்டும் என்றும், அந்த விளையாட்டில் இந்த ஜந்து ஜெயித்தால் அந்த ஹாபிட்டைத் தின்றுவிடுவது என்றும், அந்த ஹாபிட் ஜெயித்தால், குகைகளை விட்டு வெளியே சென்றுவிடுவது என்றும் முடிவெடுக்கின்றனர். கேள்வி பதில் விளையாட்டு துவங்குகிறது.

மொத்தம் பத்து கேள்விகள். ஒருவர் மாற்றி ஒருவர் கேள்விகளைக் கேட்க, மற்றொருவர் பதில் சொல்ல வேண்டும். ஜந்து கேட்கும் கேள்விக்கு, பில்போ பதில் சொல்லிவிடுகிறான். இதைப்போலவே, பில்போ கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும், அந்த ஜந்து சரியாக பதில் சொல்லி, ஒவ்வொரு அடியாக நெருங்கி வருகிறது. கடைசிக் கேள்வி – இதற்கும் அந்த ஜந்து பதில்சொல்லிவிட்டால், பில்போ, அந்த ஜந்துக்கு இரையாக வேண்டிய சூழல். முகமெல்லாம் வெளிறி, பயத்தில் பற்கள் தந்தியடிக்க, பில்போவின் வாய் மெல்ல அசைகிறது.

“என் பாக்கெட்டில் என்ன இருக்கிறது?”

அந்த ஜந்து விழிக்கிறது. இப்படியொரு புதிரை, அது அக்குகைகளில் வாழ்ந்த 500 வருடங்களில் கேள்வியே பட்டதில்லை.

திருதிருவென விழிக்கும் ஜந்து, தன்னிடமுள்ள சக்திவாய்ந்த மோதிரம் ஒன்றை எடுத்துவந்து, அந்த மோதிரத்தின் சக்தியால் இந்த ஹாபிட்டைத் தின்றுவிடலாம் என்ற நோக்கத்தில், குகைக்குள் செல்கிறது. ஆனால், மோதிரம் இருக்கும் இடத்தில் அதனைக் காணவில்லை. அப்போதுதான், பில்போ கேட்ட கேள்வியின் அர்த்தம், அந்த ஜந்துக்குப் புரிகிறது. கோபம் தலைக்கேற, திரும்பிவரும் ஜந்தின் முன், பில்போ இல்லை. பில்போவைத் தேடிக்கொண்டே குகையின் வாசல் வரை செல்லும் ஜந்து, வெளியே எட்டிப் பார்க்க, தடால் என்று அந்த ஜந்தின் மீது எதுவோ மோதுகிறது. அந்த ஜந்தின் மீது ஏறி, மறுபக்கம் இறங்கி, யாரோ ஓடுவது அந்த ஜந்துக்குத் தெரிகிறது. ஆனால், மோதிரத்தை அணிந்துகொண்டு மாயமாக மறைந்து ஓடும் பில்போவை எப்படிப் பிடிப்பது என்று தெரியாததால், கொடூரமான ஓலத்தை எழுப்புகிறது அந்த ஜந்து.

அந்த நாளில், ஐந்நூறு வருடங்கள் அந்த ஜந்தின் பிடியில் இருந்த மோதிரம், பில்போ பேகின்ஸின் கட்டுப்பாட்டுக்குள் வந்து சேர்ந்தது.

அந்த ஜந்தின் பெயர் – கோல்லும் (Gollum).

கோல்லுமின் கதை

ஸ்மீகோல் என்ற ஹாபிட், தனது உறவினன் டீகோல் என்ற இன்னொரு ஹாபிட்டுடன் மீன் பிடிக்கச் செல்வதோடு, ஸ்மீகோலின் கதை ஆரம்பிக்கிறது. ஒரு பெரிய மீன் தூண்டிலை இழுத்துச் செல்வதால் ஆற்றுக்குள் விழும் டீகோல், அங்கே மூழ்கிக்கிடக்கும் தங்க மோதிரம் ஒன்றைக் கண்டுபிடிக்க, உடனடியாக அந்த மோதிரத்தைக் காணும் ஸ்மீகோல், மோதிரத்தின் சக்தியால் பீடிக்கப்பட்டு, டீகோலைக் கொலைசெய்துவிட்டு, மோதிரத்தைத் தன்னுடனேயே வைத்துக்கொண்டுவிடுகிறான்.

அன்றிலிருந்து அந்த மோதிரத்தை, தன்னுடைய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரைப் பயமுறுத்தப் பயன்படுத்த ஆரம்பித்தான் ஸ்மீகோல். நினைத்தபொழுதில் மாயமாக மறையும் மனிதனைக் கண்டு யாருக்குத்தான் பயம் இருக்காது? எப்போது பார்த்தாலும், ‘கோல்லும், கோல்லும்’ என்ற சத்தத்தை எழுப்பிக்கொண்டே இருந்ததால், ஸ்மீகோலின் பெயர், கோல்லும் என்றே மாறியது. ஒரு நாள், தனது உறவினர்களால் ஊரை விட்டே அடித்துத் துரத்தப்பட்ட கோல்லும், மிஸ்டி மலைகளில் தஞ்சம் புகுந்தான். அன்றிலிருந்து, ஐந்நூறு வருடங்கள் அங்கேயே வாழ்ந்தான். சிறுகச்சிறுக அவனது தோற்றம் மாறியது. ஹாபிட்டைப் போல் இருந்த கோல்லும், மெதுவே ‘ஆர்க்’ என்று அழைக்கப்பட்ட அரக்கர்களைப் போல் மாற ஆரம்பித்தான். அவனது கண்கள், முட்டை போலவே வளர ஆரம்பித்தன. இருளிலும் நன்றாகப் பார்க்கும் திறனைப் பெற்றான் கோல்லும். முதுகு வளைந்தது. நான்கு கால்களால் நடக்கும் ஒரு மிருக ஜந்துவைப் போல் மாறினான். மலைகளின்பக்கம் வழிதவறி நடமாடும் மனிதர்கள், ஹாபிட்கள், ஆர்க்குகள், மிருகங்கள் ஆகியவையே அவனது உணவாக மாறின.

மோதிரம், தனது சக்தியால் கோல்லுமை மாற்றியது. ஸ்ப்ளிட் பெர்சனாலிடியாக மாறிப்போனான் கோல்லும். அவனது ஒரு வடிவம், பழைய உறவினர்களையும், நண்பர்களையும் அவ்வப்போது நினைத்துப் பார்த்து, கண்ணீர் விடும். இந்த உருவத்தின் பெயர், ஸ்மீகோல். இந்த மனநிலையில் இருக்கையில், ஸ்மீகோல், கோல்லுமிடம் பேசும். அதைப்போலவே, மோதிரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கையில், கொடிய, குரூர மனம் படைத்த ஒரு வடிவத்துக்கு மாறிவிடுவான். இந்த வடிவத்துக்கே கோல்லும் என்று பெயர்.

இப்படியாக, கோல்லும் என்ற பெயரில் அந்த ஜந்து, மலைகளில் வாழ்ந்து வந்தது. பில்போ அதன் மோதிரத்தைத் திருடும் வரை.

மோதிரம் பறிபோனபின், சில வருடங்கள், பில்போவைத் தேடி அலைந்தது கோல்லும். ஆனால், பில்போவை எங்குமே அதனால் கண்டுபிடிக்க இயலவில்லை. இப்படி ஒவ்வொரு இடமாக அலைகையில், மார்டோருக்கும் சென்றது கோல்லும். அங்கே, ’ஷெலோப்’ (Shelob)’ என்ற பெயருடைய ராட்சத சிலந்தியிடம் அகப்பட்டுக்கொண்டது. தனது இயல்புப்படி வஞ்சகமாகப் பேசி சிலந்தியிடம் இருந்து தப்பித்த கோல்லும், அன்றிலிருந்து, சிலந்திக்கு இரைகளைக் கொண்டுவந்து தர ஆரம்பித்தது. ஒருநாள், மார்டோரின் காவலாளிகளாகிய ஆர்க்குகளிடம் பிடிபட்ட கோல்லும், அவர்களின் சித்ரவதை தாளாமல், மோதிரத்தைப் பற்றியும், “பேகின்ஸ்”, “ஷையர்” ஆகிய இரண்டு வார்த்தைகளையும் வாய்விட்டு அலற, இதற்குள் தனது இடமான மார்டோருக்கு வந்திருந்த ஸாரோனுக்கு, இவ்வார்த்தைகள் பழைய நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தின.

தனது ஏழு தளபதிகளான நாஸ்கூல்களை, ஷையரை நோக்கிக் கட்டவிழ்த்தான் ஸாரோன். கோல்லுமை விடுவித்தான். அங்கிருந்து தப்பிய கோல்லும், காண்டால்ஃபின் கைகளில் மாட்டியது. காண்டால்ஃபிடம் மோதிரத்தின் முழுக்கதையையும் சொல்லிய கோல்லுமை, சிறைவைத்தார் காண்டால்ஃப் (பில்போவின் மோதிரத்தைப் பார்த்தபின்னரே காண்டால்ஃப் கோல்லுமைப் பிடித்தார் என்பது இதற்குள் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் விசிறிகளுக்குப் புரிந்திருக்கும்). கோல்லுமைச் சிறைவைத்துவிட்டு, ஸாருமானிடம் ஆலோசனை கேட்க காண்டால்ஃப் செல்கையில், தப்பித்த கோல்லும், அருகிலேயே இருந்த பாதாளப் பகுதியான மோரியாவினுள் தஞ்சம் புகுந்தது.

இதன்பின், நமது ஃபெலோஷிப், மோரியாவினுள் பிரவேசிக்க, அவர்களிடம் மோதிரம் இருப்பதைப் புரிந்துகொண்ட கோல்லும், அவர்களைத் தொடரவும் ஆரம்பித்தது. கோல்லுமைப் பலமுறைகள் இடையே பார்த்திருந்தாலும், காண்டால்ஃபும் அரகார்னும் அதனை ஒன்றும் செய்வதில்லை. ஃபெலோஷிப் ஆஃப் த ரிங் பட இறுதியில், ஃபெலோஷிப்பை விட்டுப் பிரிந்து, மார்டோரை நோக்கிச் செல்லும் நண்பர்களான ஃப்ரோடோவையும் ஸாமையும் பின் தொடர ஆரம்பித்தது கோல்லும்.

இரண்டாம் பாகமான ‘டூ டவர்ஸில்’ ஸாமுடன் சண்டையிடும் கோல்லுமை, ஃப்ரோடோ , தனது மாமாவான பில்போ பரிசளித்த ‘Sting’ என்ற அவரது கத்தியின் உதவியோடு வீழ்த்த, பயந்துபோன கோல்லும், இவர்களுக்கு மார்டோரைக் காட்ட சம்மதிக்கிறது. ஆனால், அதே சமயத்தில், இவர்களைக் கொன்று, மோதிரத்தை எடுக்கவும் பிரயாசைப்படுகிறது. தனது தோழியான ஷெலோப் சிலந்தியை ரகசியமாகச் சந்தித்து, இருவரையும் கொல்லச்சொல்லி, ஃப்ரோடோவை சிலந்தியிடம் தள்ளிவிடுகிறது கோல்லும். இதன்பின் அங்குவரும் ஸாம், சிலந்தியை வீழ்த்த, நண்பர்களின் பயணம் தொடர்கிறது.

இதன்பின், மார்டோரின் டூம் மலையில், மோதிரத்தை அழிக்கப்போகும் அயனான சந்தர்ப்பத்தில் ஃப்ரோடோ மீது பாயும் கோல்லும், அவனது கைவிரலைக் கடித்துத் துப்பி, மோதிரத்தை மீட்டெடுக்கிறது. சந்தோஷ மிகுதியில் நடனமாடிக்கொண்டே, எரியும் குழம்பில் விழுந்து, மோதிரத்தோடு சேர்ந்து அழிகிறது கோல்லும்.

இப்படிப்பட்ட ஒரு ஜந்துவை, திரையில் கொண்டுவர, என்ன செய்தார் ஜாக்ஸன்?

தொடரும் . . .

பி.கு – மேலே சொல்லப்பட்ட கேள்வி பதில் விளையாட்டைப் பற்றிப் படிக்க, The Hobbits படிக்கவும், அல்லது படம் வரும்வரை காத்திருக்கவும்.

  Comments

7 Comments

  1. hayaaa…..
    romba naal achu ponga boss…..

    Reply
  2. Patta Jilebi..,

    Reply
  3. waiting for other part 🙂

    Reply
  4. வட, ஜிலேபி கமென்ட்களுக்கும் சுடு சோறு கமென்ட்களுக்கும் என்ன வேறுபாடு ??
    ஒரு வரிக்கு மிகாமல் விடையளிக்கவும்

    Reply
  5. இதெல்லாம் ஒண்ணுமே தெரியாமதான் இந்த படங்களை பாத்தேன்…..ஆக, இந்த தகவல்களை எல்லாம் வெச்சு ஒரு மார்க்கமா இனி – எழுத்துக் கூட்டி – நாவல படிச்சிறலாம்னு நெனைகிறேன்

    கோலும் – மோதிரத்த பார்க்கும் போதெல்லாம் – ஒரு வெறி கண்ணுல தெரியும். எங்கிருந்து அதுக்கு அசைவு தந்த ஆள புடிச்சாங்கன்னு தெரியல………………

    Reply

Join the conversation