LOTR: The Series – 15 – Creation of Gollum

by Karundhel Rajesh September 14, 2011   war of the ring

‘கோல்லும்’ என்பது, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தின் இன்றியமையாத கதாபாத்திரம். கிட்டத்தட்ட பட நாயகன் ஃப்ரோடோ போலவே படம் முழுவதும் வரும் பாத்திரம். படத்தின் பல திருப்பங்கள், கோல்லுமாலேயே சாத்தியப்படுகின்றன. ஆகவே, கோல்லுமாக நடிக்கப்போவது யார்? ஜாக்ஸன், மிகக்கவனமாக கோல்லும் பாத்திரத்தைத் தேவு செய்ய ஆரம்பித்தார். அவரது சொந்தக் கூற்றுப்படி, கோல்லுமாக நடிக்கும் நடிகர், அந்தக் கதாபாத்திரத்தை முழுமையாக உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கப்படும் ஒரு கதாபாத்திரமாகவே கோல்லும் இருந்தால் மட்டுமே படத்தின் மொத்த பாரத்தையும் ஃப்ரோடோவோடு சேர்ந்து சுமக்க இயலும் என்று நினைத்தார்.

அப்படித் தேர்வுசெய்யப்பட்டவர்தான் ஆன்டி செர்கிஸ் (Andy Serkis).

பொதுவாக, எந்த கதாபாத்திரத்தையும் ஸிஜி செய்யவேண்டும் என்றால், கடைபிடிக்கப்படும் வழிகளில் ஒன்று – அந்தக் கதாபாத்திரத்தின் முழு உருவத்தில் ஒரு பொம்மை செய்து, அந்த பொம்மையை இன்ச் இஞ்சாக ஸ்கேன் செய்வது. அப்படி ஸ்கேன் செய்த டேட்டா, கணினியில் ஃபீட் செய்யப்படும். இப்படித்தான் கோல்லுமின் சிலை ஒன்று செய்யப்பட்டு, அதன் ஸ்கேன் செய்யப்பட்ட தகவல்கள் கணினியில் கொடுக்கப்பட்டன. கோல்லுமின் 3 -D கம்ப்யூட்டர் மாடல் இப்படியாக உருவாக்கப்பட்டது.

இப்படி ஒரு உருவத்தை கணினியில் உருவாக்கிய பின்பு, அந்த உருவத்தை இயக்க வேண்டுமல்லவா? கணினியில், அந்த உருவத்தின் எலும்புக்கூடு – ஃப்ரேம்வொர்க் – இப்படியாக உருவாக்கப்படுகிறது. அதாவது, இந்த உருவத்தின் அத்தனை பாகங்களையும் இலகுவாக இயக்கும் பொருட்டு, இப்படி ஒரு விபரமான கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இப்படி உருவாக்கப்பட்ட கட்டமைப்பின் உருவத்தில் ஏதாவது ஒரு இடத்தை இயக்கினால், அதனுடன் சம்மந்தப்பட்ட பிற இடங்களும் சேர்ந்து இயங்கும். அவ்வளவு தத்ரூபமாக அந்தக் கட்டமைப்பு இருந்தால் மட்டுமே நல்ல ஸிஜி சாத்தியம். எனவே, ஒரு பொம்மை போன்ற – பல்வேறு பாகங்களையும் சேர்த்து உருவாக்கப்பட்ட – ஒரு அமைப்பு தயாராகிறது. நம் விஷயத்தில், கோல்லுமின் ஸிஜி உருவம், இப்படியாக ரெடியானது.

சரி. உருவம் தயார். அதற்கு அசைவு கொடுக்கவேண்டுமே? அது பேச வேண்டுமே? அழ வேண்டுமே? பொம்மையை எப்படி இயக்குவது?

ஸிஜி உருவத்தின் ஒவ்வொரு பாகத்தையும் – பாகம் என்றால் கை, கால் மட்டும் அல்ல – ஒவ்வொரு மில்லிமீட்டர் பாகமும், கண்ட்ரோல் செய்யப்படுகிறது. இதற்காக, ‘Slider’ என்ற விஷயத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். Slider என்பது ஒரு object. அதாவது, கணினியில் ப்ரோக்ராமிங் செய்யும்போது, தகவலை ஒரு இடத்திலிருந்து மறு இடத்துக்கு அனுப்பவேண்டும் என்றால், அதற்கு உபயோகப்படும் கொள்கலனே இந்த ஆப்ஜக்ட். இப்படிப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு பொம்மலாட்ட பொம்மை இருக்கிறது. அதன் பல்வேறு இடங்களில் கயிறுகளைப் பிணைக்கிறோமல்லவா? அப்படிப் பிணைக்கப்படும் ஒவ்வொரு இடமும் ஒரு ஆப்ஜெக்ட். எத்தனை ஆப்ஜெக்ட்கள் இருக்கின்றனவோ, அத்தனை இலகுவாக அந்த பொம்மையை நம்மால் இயக்கமுடியும். கை, கால் மட்டும் கயிறுகள் கட்டப்பட்டால், அந்த பொம்மை இயங்குவது செயற்கையாகத் தெரியும். அதுவே, கை, கால்கள், உடல், தலை ஆகிய பல்வேறு இடங்களில் கயிறுகள் கட்டப்பட்டால், பொம்மையை இயக்குவது எவ்வளவு எளிது? இதுதான் ஆப்ஜெக்ட்.

இப்படி, கோல்லுமின் உருவத்தில், ஒவ்வொரு மில்லிமீட்டரிலும், ஒரு ஆப்ஜெக்ட் உருவாக்கப்பட்டது. ‘Slider’ என்ற இந்த ஆப்ஜெக்ட்களை வைத்துக்கொண்டு, கோல்லுமின் ஒரு தனி முடியைக்கூட நம்மால் இயக்க முடியும். அவ்வளவு தத்ரூபம் கட்டாயம் ஒரு ஸிஜி உருவத்தைக் காண்பிக்கையில் தேவைப்படும் என்பது பீட்டர் ஜாக்ஸனின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

இப்படி கோல்லுமின் ஸிஜி உடல் கண்ட்ரோல் செய்யப்படும் ஆப்ஜெக்ட்கள் தயாரானவுடன், பொம்மையை இயக்க ஆரம்பித்தனர். அதாவது, ஸ்லைடர்கள் – இவற்றை வைத்து, ஒவ்வொரு பாகத்தையும் இயக்க முடிந்தது. கோல்லும் நடக்கவேண்டும் என்றால், அதற்குத் தேவையான ஸ்லைடர்களை இயக்கினால், அது நடந்தது. ஆனால் இங்கே ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மறந்துவிடக்கூடாது. நடக்கவேண்டும் என்றால், படு இயற்கையான நடையாக அது இருக்கவேண்டும். தத்தக்கா புத்தக்கா என்று நடக்கக்கூடாது. ஆகவே, ஒவ்வொரு வேலைக்கும் தேவையான ஸ்லைடர்கள் எவை, அவை எப்படி இயங்குகின்றன என்பதில் மிகத்துல்லியமாக இருக்க வேண்டும். இது, கம்ப்யூட்டரால் மட்டும் சாத்தியம் இல்லை. ஒரு கைதேர்ந்த அனிமேட்டரால் மட்டுமே அது முடியும். அதாவது, ஸ்லைடர்களை எந்தவிதத்தில் இயக்கினால் தத்ரூபமான இயக்கங்கள் சாத்தியப்படும் என்ற முடிவை ஒரு அனிமேட்டரே எடுக்க முடியும். அப்படி முடிவு செய்து, தகவல்களை கணினியில் செலுத்தினால், கண்ட்ரோல் செய்யும் வேலையை கணினி செய்யும். அதாவது, கையை ஆட்ட வேண்டுமா? நாம் முன்னர் பார்த்த கட்டுமான எலும்புக்கூட்டை ஸ்லைடர் ஆட்டும். அந்த எலும்புக்கூடு, அதனைச் சுற்றியுள்ள சதையை ஆட்டும். அந்தச் சதை, அதன்மேலுள்ள முடியை ஆட்டும். இப்படி ஒரு வரிசையான செயலாக இந்த ஸ்லைடர்கள் கட்டுப்படுத்தப்படுவது நடக்கிறது.

இதன்பின், கோல்லுமின் சதைக்கு, தேவையான நிறத்தை அளித்து, உடைகளை மாட்டிவிடும் வேலை. இதையெல்லாம் முடித்தபின், நமக்குத் தேவையான கோல்லும் தயார் !

சரி. கோல்லுமின் ஸிஜி உருவம் எப்படித் தயார் ஆனது என்பதைப் புரிந்துகொண்டோம். அதற்கு அசைவுகளைக் கொடுப்பதில் இரண்டு விதங்களை WETA கையாண்டது. அவையே Key Frame மற்றும் Motion Capture. அவைகளையும் விபரமாகப் பார்த்துவிட்டால், கோல்லும் தயாரான விதத்தைப் பற்றி முற்றிலும் தெரிந்துகொண்டுவிடலாம்.

Key Frame என்பது, நாம் மேலே பார்த்த விஷயம். ஸ்லைடர்களை வைத்து, ஒரு உருவத்தின் அசைவுகளை கணினியில் கொடுத்து, அதன் மூலம் அந்த உருவத்தை அசைப்பது. இப்படி ஒரு உருவத்தை அசைக்கவேண்டும் என்றால், அதன் ஸிஜி உருவத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு கயிறு – அதாவது ஸ்லைடர் என்ற ஆப்ஜெக்ட் – பதிக்கப்படவேண்டும் என்பதை முன்னரே கண்டோம். இந்தக் கயிறுகளை ஆட்டுவதன்மூலம் அந்த உருவத்தை நாம் நினைத்த வகையில் செயல்பட வைக்கமுடியும். ஒரு ஸிஜி உருவத்தின் உடல் முழுவதும் கிட்டத்தட்ட நூறு கயிறுகள் (ஸ்லைடர்கள்) இருக்கலாம் என்பதையும், அதன் முகத்தில் மட்டும் இன்னொரு நூறு ஸ்லைடர்கள் இருக்கமுடியும் என்பதனையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், அவைகளை இயக்குவது எவ்வளவு கடினம் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

Motion Capture என்பது, ஜீன்ஸ் படத்தின் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாடலின் மூலம் கடைக்கோடி திரைப்பட ரசிகர்களுக்கும் புரிந்துவிட்ட விஷயம். அதாவது, ஒரு நிஜமான நடிகரை நடிக்க வைத்து, அந்த அசைவுகளைக் கணினியின்மூலம் ஸிஜியில் உருவாக்கப்பட்ட உருவத்துக்குக் கொடுத்து, அந்த உருவத்தை அசையவைப்பது. இங்கேதான் ஆன்டி செர்கிஸின் அற்புதமான நடிப்பாற்றல், ஜாக்ஸனுக்குக் கைகொடுத்தது. படத்தின் பல காட்சிகளில், தனது உடலில் motion capture suite என்ற விசேஷ உடையை மாட்டிக்கொண்டு நடித்தார் செர்கிஸ். இந்த உடையில் இருக்கும் சென்ஸார்கள் மூலமாக அவரது அசைவுகள் பதிவுசெய்யப்பட்டு, கணினியில் செலுத்தப்பட்டு, ஸிஜியில் உருவாக்கப்பட்ட கோல்லும் கதாபாத்திரத்தின் கயிறுகளாகிய ஸ்லைடர்களை அசையவைப்பதன்மூலம் இயக்கப்பட்டது.

திரைப்படத்தில் இந்த இரண்டு விஷயங்களுமே பயன்படுத்தப்பட்டன. கோல்லுமின் முகத்துக்கு மட்டும், Key Frame animation முறை பயன்படுத்தப்பட்டது.

சிப்ஸ்: லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தின் ஸிஜி காட்சிகளுக்கென்று, மொத்தம் 3200 கம்ப்யூட்டர்கள், இருபத்துநான்கு மணிநேரமும் முழுவீச்சில் பயன்படுத்தப்பட்டன.

படத்தில் கோல்லுமால் ஜாக்ஸனுக்கு ஏற்பட்ட பெரியதொரு சவால் – கோல்லும் கதாபாத்திரத்தை, மற்ற நடிகர்களோடு நடிக்கவைப்பது. இதற்கு ஜாக்சன் கடைபிடித்த வழியைக் கேட்டால் தலை சுற்றும்.

முதலில், மற்ற கதாபாத்திரங்களோடு ஆன்டி செர்கிஸை நடிக்கவைத்தார் ஜாக்ஸன். அதன்பின், செர்கிஸ் இல்லாமல் மற்ற கதாபாத்திரங்கள் அதே காட்சியை நடித்தனர். செர்கிஸ் நின்றுகொண்டிருந்த இடம், காலியாக விடப்பட்டது. காமெராவுக்குப் பின்னிருந்து செர்கிஸ் வசனத்தை மட்டும் பேசுவார். அதன்பின், ஸ்டுடியோவில் மோஷன் காப்சர் உடை அணிந்துகொண்டு, அந்தக் காட்சியில் தனது பகுதியை மட்டும் தனியாக நடிப்பார் செர்கிஸ். இதன்பின், செர்கிஸ் உடையில் இருக்கும் சென்ஸார்கள் மூலமாக கணினியில் கோல்லும் கதாபாத்திரம் இயங்கும். அதை வைத்து, செர்கிஸை அகற்றிவிட்டு, கோல்லுமை அங்கே சேர்ப்பார்கள்.

படம் முழுக்க இப்படியே, கோல்லும் வரும் காட்சிகளெல்லாம் மூன்று மூன்று முறைகள் எடுக்கப்பட்டன. ஜாக்ஸனின் பொறுமையும் ஜீனியஸும் அப்படிப்பட்டது.

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தில் கோல்லும் உருவாக்கப்பட்ட விதத்தைப் பற்றிய வீடியோ இங்கே காணலாம்.

சிப்ஸ்: கோல்லும் கதாபாத்திரத்தில் நடித்த ஆன்டி செர்கிஸ் தான் ஜாக்ஸனின் ‘King Kong ‘ படத்தில் ராட்சஸக் குரங்காகவும் நடித்தார். அதுமட்டுமல்ல. அவரேதான் ‘Rise of the planet of the Apes ‘ படத்திலும் சீஸர் என்ற குரங்காகவும் நடித்துப் பட்டையைக் கிளப்பினார். ஸ்பீல்பெர்க் எடுத்துவரும் ‘The Adventures of Tintin: Secret of the Unicorn‘ அனிமேஷன் படத்தில் கேப்டன் ஹேட்டாக்காக நடித்துவருபவரும் இவரே.

தொடரும் . . . .

  Comments

9 Comments

  1. வடை…. மீ தி பர்ஸ்ட்… சுடு சோறு…

    Reply
  2. பதிவு மிக அருமை.
    அனிமேசன் பற்றி மிக நுட்பமான தகவல்களை திரட்டி அளித்த உங்கள் தேடல் தொடரட்டும்.
    பதிவில் உள்ள விசயங்களைப்பற்றி முன்பே என் நண்பன் அனிமேட்டர் ஜெகதீசன் மாய்ந்து,மாய்ந்து விளக்குவான் அதையே உங்கள் பதிவில் படிக்கும்போது என் நண்பனின் மீதும் மதிப்பு கூடுகிறது. தகவல்களை திரட்டி அளித்த உங்கள் தேடல் தொடரட்டும்.
    பதிவில் உள்ள விசயங்களைப்பற்றி முன்பே என் நண்பன் அனிமேட்டர் ஜெகதீசன் மாய்ந்து,மாய்ந்து விளக்குவான் அதையே உங்கள் பதிவில் படிக்கும்போது என் நண்பனின் மீதும் மதிப்பு கூடுகிறது.

    Reply
  3. இந்த key frame மேட்டருக்கு நேத்து நைட்… ஜெயமோகன் – சாருவை வச்சி பெரிசா ஒரு கமெண்ட் எழுதினேன். அப்புறம் அரசியல் வேணாம்னு முடிவு பண்ணி விட்டுட்டேன்.

    Reply
  4. simply superb,

    Reply
  5. யப்பா………….அந்த விடியோ……..ஆன்டி செர்கிஸ்……..ஆடி போயிட்டேன்……….தன் முகம், வெளிய தெரியாது, வேற எதுவும் எதுவும் தெரியாது…ஆனாலும் இதுபோல நடிக்க நிச்சயம் ஒரு பக்குவும் வேணும்…….

    முகத்துல எப்படி அவ்வளவு தத்ருபமா உணர்ச்சிகள் வந்தது…….முகம் காலியா தான இருந்தது ?? அந்த ஸ்லைடர் விஷயம் எனக்கு புரியல…………

    Reply
  6. //முகத்துல எப்படி அவ்வளவு தத்ருபமா உணர்ச்சிகள் வந்தது…….//

    அவதார் தொடர்

    // அந்த ஸ்லைடர் விஷயம் எனக்கு புரியல………… //

    பிக்ஸார் ஸ்டோரி

    Reply
  7. // அவதார் தொடர்

    பிக்ஸார் ஸ்டோரி //

    அப்ப…….கருந்தேள் பதிவு..வளவளன்னு இருக்கு…..ஒண்ணும் புரியாது…..புரிஞ்சுக்க யாரோ……ஒருகாலத்துல எழுதன அந்த ரெண்டு பதிவுகளையும் படிங்கன்னு சொல்றீங்களா……..

    Reply

Join the conversation