LOTR: The Series – 16 – Helm’s Deep

by Karundhel Rajesh November 2, 2011   war of the ring

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் ஸீரிஸின் இரண்டாம் பாகமான ‘The Two Towers‘ படத்தின் பிரதான பாகம், ஹெல்ம்’ஸ் டீப் என்ற இடத்திலேயே நடக்கிறது. அந்த இடத்தை மையமாக வைத்துத்தான் இந்த இரண்டாம் பாகத்தின் கதை பின்னப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம். அப்படிப்பட்ட முக்கியமான இடமான இந்த ஹெல்ம்’ஸ் டீப் என்பது என்ன?

மிடில் எர்த்தின் வரைபடத்தை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அதில், கிழக்கில் மோர்டார் இருக்கிறதல்லவா? அதற்கு நேர் எதிரில் – மேற்கில் – ஒரு மலைத்தொடர் இருக்கும். Ered Nimrais என்ற பெயரில். அந்த மலைத்தொடரின் முன்னால் அமைந்திருக்கும் பெரிய திறந்தவெளியே ஹெல்ம்’ஸ் டீப். இந்த இடத்தின் வடக்கே Fangorn என்றழைக்கப்படும் கடும் அடர்த்தியான காடு உள்ளது. இந்தக் காட்டில்தான் Treebeard என்ற பெயரில், பேசும் மரமாகிய Ent வகையைச் சேர்ந்த ஜீவன் இருக்கிறது (அதனைப் பிறகு காணலாம்).

ஹெல்ம்’ஸ் டீப் சமவெளியின் வடமேற்கே, அதற்கு மிக அருகில், Isengard உள்ளது. வில்லன் சாரோனுக்கு உதவும் முதுகிழவர் ஸாருமான் இருக்கும் இடமே இந்த ஐஸங்கார்ட் என்பது, இப்படங்களையோ அல்லது இந்தத் தொடரையோ (click to read) பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

ரோஹான் என்ற பெரும் நாட்டின் ஒரு பகுதியே இந்த ஹெல்ம்’ஸ் டீப்.

கதை நடக்கும் சமயத்தில், ரோஹானை ஆண்டுவந்தவர், தியோடன் மன்னர் என்பதையும் முன்னர் நாம் பார்த்திருக்கிறோம் (click to read). ரோஹானுக்கும் காண்டோருக்கும் இருக்கும் பகை, அதன் காரணமாக ஒருவரின் உதவிக்கு மற்றொருவர் செல்லாதது ஆகிய விஷயங்களையும் பார்த்தாயிற்று. ஆனால், சாரோனால் ஏற்படும் யுத்தத்தை சமாளிக்க, இந்த இரண்டு நாடுகளுமே ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டால் மட்டுமே முடியும். இது, கதையின் பிதாமகர் காண்டால்ஃபுக்குத் தெரியும்.

தியோடன் மன்னர், அவரது மந்திரியாக இருந்த வார்ம்டங்கின் (Wormtongue) மூலம், ஸாருமானால் பீடிக்கப்பட்டு, நடைபிணமாக வாழ்ந்துவந்தார். அப்படி வாழ்ந்துவந்தபோது, தனது மகனான இயோமரை நாடுகடத்தியும் விடுகிறார். இயோமர், தியோடனின் வளர்ப்பு மகன். தியோடனின் நிஜ மகனான தியோட்ரெட், ஒரு போரில் (இதனைப்பற்றி விரிவாக நாம் பார்க்கப்போகிறோம்) மரண காயமடைந்துவிடுகிறான். ஆகவே, வளர்ப்பு மகனான இயோமர், ரோஹானின் வாரிசு ஆகிவிடுகிறான். ஆனால், அவனை நாடு கடத்திவிடுகிறார் மன்னர். இதனால், தனக்கு விசுவாசமான படைவீரர்களைத் திரட்டிக்கொண்டு, ரோஹானின் எல்லைப்பகுதியில் அலைந்துகொண்டிருக்கிறான் இயோமர். அங்கு சுற்றிக்கொண்டிருக்கும் ஸாருமானின் ஆட்களான உருக்-க்ஹாய்களைக் கொல்லவேண்டி.

இந்த நேரத்தில்தான் காண்டால்ஃபும் அரகார்னும் லெகோலாஸும் கிம்லியும் தியோடன் மன்னரைச் சந்திப்பதற்காக ரோஹான் வருகின்றனர். இதன்பின்னரே, தியோடனுக்குள் புகுந்து அவரைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஸாருமானை காண்டால்ஃப் விரட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன்பின்னர் சுயநினைவு அடையும் தியோடன் மன்னர், தனது படைகளைத் திரட்டி, இறந்துபோயிருக்கும் தனது மகனான தியோட்ரெட்டைப் புதைத்துவிட்டு, ஹெல்ம்’ஸ் டீப் என்ற இடத்தில் அமைந்திருக்கும் கோட்டையை நோக்கிக் கிளம்புகிறார். அந்தக் கோட்டை, இதுவரை எவராலும் தோற்கடிக்கவோ, கைப்பற்றவோ பட்டதேயில்லை. அவ்வளவு பலமான, தகர்க்க இயலாத கோட்டை அது. ஆகவே, அதனுள் தனது பிரஜைகளை வைப்பதே நல்லது என்பது அவரது எண்ணம்.

அவர் அவசரமாக ஹெல்ம்’ஸ் டீப் நோக்கிக் கிளம்புவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. ஸாருமான், தனது படைகளைத் திரட்ட ஆரம்பித்திருந்ததே அந்தக் காரணம். ஸாருமானின் இருப்பிடமான ஐஸங்கார்ட், ரோஹானின் மிக அருகில் இருப்பது நமக்குத் தெரியும்.

ஹெல்ம்’ஸ் டீப் நோக்கிக் கிளம்பும் படைகளுடன் அரகார்னையும் லெகோலாசையும் கிம்லியையும் விட்டுவிட்டு, திடீரென்று காண்டால்ஃப் எங்கோ கிளம்புகிறார். யுத்தத்தில் நண்பர்களிடம் இருக்காமல், அவர் கிளம்புவதன் காரணம்?

கிளம்பும்போது அவர் சொல்லும் வாசகம், மிகப்பிரசித்தமானது. அது – “ஐந்தாம் நாளின் காலையில், முதல் வெளிச்சம் பூமியின் மேல் விழும்போது, கிழக்குத் திசையில் எனது வருகையை எதிர்நோக்குங்கள்“. இப்படிச் சொல்லிவிட்டு, புயலெனப் பறந்து மறைகிறார் காண்டால்ஃப்.

இதற்குள், தியோடன் மன்னரிடமிருந்து தப்பித்து, ஸாருமானிடம் தஞ்சம் புகுந்துவிட்ட வார்ம்டங், தியோடனின் யுத்த தந்திரங்களைப் பற்றி விளக்குகிறான். ஸாருமான், ஒரு இரும்புப் பானையில் கருப்பான ஏதோ ஒரு பொடியை நிரப்புவதைக் காண்கிறோம்.

கந்தகப் பொடி!

ஹெல்ம்’ஸ் டீப் கோட்டையைப் பற்றிச் சொல்லும் வார்ம்டங், அந்தக் கோட்டைச் சுவரை எப்படியாவது தகர்த்துவிட்டால், அதன்பின் தியோடனை வீழ்த்திவிடலாம் என்றும், இதன்பின், காண்டாரின் மீதான சாரோனின் படையெடுப்பு, வெற்றிகரமாக நடந்தேறிவிடும் என்றும், அதன்பின், மிடில் எர்த் சாரோனின் கையில் வீழ்வது தவிர்க்கமுடியாது எனவும் சொல்வதைப் பார்க்கிறோம். அதைக்கேட்டு, ஸாருமானின் முகத்தில் குரூரமான புன்னகை நிரம்புகிறது.

ஆனால், கோட்டைச்சுவரைத் தகர்க்க பலநூறு வீரர்கள் வேண்டுமே?

“ஆயிரமாயிரம் வீரர்கள்” என்று வார்ம்டங்கைத் திருத்துகிறார் ஸாருமான்.

“நம்மிடம் அவ்வளவு வீரர்கள் இல்லவே இல்லையே” என்று உதட்டைப் பிதுக்குகிறான் வார்ம்டங்.

இதற்குள், இருவரும், பிரம்மாண்டமான கரும் கோபுரமான ஆர்த்தாங்கின் உச்சியை அடைந்துவிட்டிருக்கின்றனர்.

“பாஆஆஆஆஆஆங்ங்ங்ங்ங்ங்”

கம்பீரமான ஒரு எக்காள ஒலி கேட்கிறது. யுத்தத்தின்போது வாசிக்கப்படும் எக்காளம் அது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும், தரையே கறுப்புத் தூசியால் மூடப்பட்டுவிட்டதைப்போல், ஆயிரமாயிரம் உருக்-க்ஹாய்கள்! சதுரம் சதுரமாக, பல நூறு…ஆயிரம்… பத்தாயிரம் வீரர்கள்! பெரும் ஓலம் ஒன்று அனைவரிடம் இருந்தும் எழுகிறது.

அத்தனை பேரையும் கையமர்த்துகிறார் ஸாருமான். அத்தனை பேரையும், ஹெல்ம்’ஸ் டீப் நோக்கிச் செல்லுமாறு பணிக்கிறார். பிரம்மாண்டமான, கோரமான, ரத்தவெறி கொண்ட அந்தப் படை, சீரான நடையில் ஹெல்ம்’ஸ் டீப் நோக்கி நடைபோட ஆரம்பிக்கிறது.

ஸாருமானும் வார்ம்டங்கும் பேசிக்கொள்ளும் அந்தக் காட்சி இதோ. இந்தப் படத்திலேயே எனக்குப் பிடித்த காட்சியும் இதுதான். ஸாருமான் பேசும்போது, கேமரா சர்ரென்று அந்தப் பிரம்மாண்டப் படைகளைக் கிழித்துக்கொண்டு பயணிப்பதைக் கவனியுங்கள். ஸாருமானிடமிருந்து படுவேகமாகக் கீழிறங்கும் கேமரா, அந்தப் படைகளினூடே பயணிக்கையில், பின்னணியில் ஸாருமானின் இடிமுழக்கக் குரல். கூடவே, ஐசங்கார்டின் தீம் இசை (இந்த இசைதான் படத்தின் அத்தனை தீம்களிலும் எனக்குப் பிடித்த இசையும்கூட). இப்படித்தான் ஒரு படத்தின் பிரதான காட்சி இருக்கவேண்டும். ஒருமுறை பார்த்தாலே நமக்கும் அந்த வெறி தொற்றிக்கொள்ளும்வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சி.

அதுதான் ஜாக்ஸனின் ஜீனியஸ்.

தொடரும் . . .

(அடுத்த கட்டுரையில், ஹெல்ம்’ஸ் டீப்பின் பெரும் போர்). . .

  Comments

11 Comments

  1. போன வாரம் ப்ளு ரே 720p டவுன்லோடு பண்ணி கடந்த நாளு நாளா பாத்துட்டு டூ டவர்ஸ் ஓட நிருத்திருக்கேன்… திடிர்னு பாத்தா உங்க பதிவு.. செம டைமிங்… பை தி வே கம்மிங் பாக் டூ தி பாயின்ட்… Treebeard sequence எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. அவங்கள அழிக்கிற காட்சிகள் அப்டியே இந்த காலத்துல நாம நிறைய இயற்க்கைய அழிக்கிறத பிரதிபலிக்கிற மாதிரி எனக்கு தோணும்… அந்த கதை மாறி மரங்களும் இப்ப திருப்பி அடிச்சா எவ்ளோ நல்லாருக்கும்…

    Reply
  2. ரொம்ப நாளு கேப் விட்டு எழுதுனாலும் அந்த ப்ளோ குறையாம எழுதுறிங்க தல.. சூப்பர்… ஆனா ரொம்ப நாளு எடுத்துட்டிங்க இந்த வாட்டி…

    Reply
  3. ///ஸாருமான் பேசும்போது, கேமரா சர்ரென்று அந்தப் பிரம்மாண்டப் படைகளைக் கிழித்துக்கொண்டு பயணிப்பதைக் கவனியுங்கள். ஸாருமானிடமிருந்து படுவேகமாகக் கீழிறங்கும் கேமரா, அந்தப் படைகளினூடே பயணிக்கையில், பின்னணியில் ஸாருமானின் இடிமுழக்கக் குரல்.////

    மிரட்டல் சீன் அது… பாக்கரச்சவே கதி கலங்க வைக்கும்….

    Reply
  4. சுத்தம்……………இதெல்லாம் ஒரு மார்க்கமா மங்கலா ஞாபகம் வருது….அதனால பதிவை படித்து ரசித்ததுடன் நிறுத்திக் கொள்கிறேன்….

    இன்னொன்னு கேக்கனும்னே இருந்தேன்……

    The Adventures of Tom Bombadil …….

    நெட்ல வேற எதையோ தேடிக் கொண்டிருந்த போது, ஏதேச்சையாக கண்ணில்பட்டது….

    ஓகே….விக்கில பாத்து தெரிஞ்சுகிட்டாலும், LOTR படத்துல Tom Bombadil கதாபாத்திரம் எங்காச்சு வருதா ???

    Reply
  5. Why was Tom Bombadil not included in the film?

    Jackson has said that he purposefully left Tom Bombadil out of the film because he felt that Tom’s meeting with the travelling hobbits did not advance the story, but rather held it up. It is possible to remove Bombadil from the story completely without affecting any later events. Another factor is that after trying very hard to convince the audience that the Ring corrupts everyone and is dangerous, Tom is seen to be apparently immune, reducing the threat of the Ring. However, in a small nod to Tom Bombadil, Treebeard uses Bombadil’s incantation to save Merry (Dominic Monaghan) and Pippin (Billy Boyd) when they become trapped by the roots of an old tree in Fangorn Forest.

    IMDBல பாத்தது…….

    Reply
  6. @ ரதியழகன் – மிக்க நன்றி 🙂

    @ முரளி – treebeard சீக்வென்ஸ் எனக்கும் புடிக்கும். அது, படத்துல ரோக்ம்ப மெதுவா வரும். ஆனாலும், அந்த மெதுவான ஃப்ளோ, அப்படி இருக்கனும்னே வெச்சதுதான் என்பது ஜாக்சனின் கூற்று 🙂 . அதைப்பத்தி எழுதும்போது இன்னும் விரிவா எழுதறேன் 🙂

    @ கொழந்த – //’The Adventures of Tom Bombadil …….// – எஸ். நீங்க குடுத்துருக்குற விக்கி மேட்டர் உண்மைதான். படத்ஹோட ப்ளோ பாதிக்கப்படும்னு ஜாக்சன் நினைச்சதால், படத்திலிருந்து அந்தப் போர்ஷனை தூக்கிபுட்டாரு.அதேமாதிரி, Treebeard பேசும் அந்த வசனம், டாமின் வஜனம்தான். அதான் நீங்களே சொல்லிட்டீங்களே.. அப்புறம் என்ன ? 🙂

    @ Raj – அந்த வெப்துனியா செய்தியை நேத்தே படிச்சாச்சு. செம்ம காமெடி 🙂 .. . ப்ரீயா உடுங்க பாஸ் 🙂

    Reply
  7. தெய்வத்திருமகளுக்கு சிக்கல்வியாழன், 3 நவம்பர் 2011( 17:29 IST )ஓடி முடிந்தப் படத்துக்கு அப்படி என்னப்பா சிக்கல் என்று விசா‌ரித்தால் பெய‌ரி பூகம்பமே ஏற்படும் போலிருக்கிறது.

    சினிமாவுக்கு வெளியேதான் நிஜமான சினிமா ஆர்வலர்கள் இருக்கிறார்கள். நம்ம தமிழ் சினிமா ஹாலிவுட்டை காப்பி அடிச்சே சீரழியுதே என பலருக்கு கவலை. இதில் ஒருவர் கருந்தேழ் என்ற பெய‌ரில் எழுதி வருகிறார். வேலை பார்ப்பது பெங்களூருவில். இவரும் இவரது நண்பர் ஒருவரும் சேர்ந்து தெய்வத்திருமகள் படத்தின் மூலமான ஐ யம் சேம் படத்தின் தயா‌ரிப்பாளருக்கு மெயில் அனுப்பியிருக்கிறார்கள். அய்யா இந்த மாதி‌ரி உங்க படத்தை தமிழில் விஜய்ங்கிறவர் சுட்டுட்டார் என்று வி‌ரிவாக எழுதியிருக்கிறார்கள்.

    ஹாலிவுட் படத்தை சுட்டதற்காக ஏற்கனவே பாலிவுட்டில் இருவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். விரைவில் விஜய்க்கும் ஆப்பு வரலாம்.

    கொசுறு செய்தி கருந்தேழுக்கு. படம் பார்த்து கதை சொல் என்றொரு படம் தயாராகி வருகிறது. இது கொ‌ரியன் படமான டெய்சியின் அப்பட்டமான காப்பி. மெயிலை தட்டிவிடுங்க பாஸ்.

    boss ungaluku vetri see tamil.webdunia.com

    http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1111/03/1111103037_1.htm

    Reply
  8. @ எனது எண்ணங்கள் – 🙂 அந்த செய்தியை நேத்தே படிச்சாச்சு. ஹாலிவுட் பாலாவையும் என்னையும் புடிச்சி அதுல ஓட்டிருக்காங்க :-). ஆனா நல்லாத்தான் காமெடி பண்ணிருக்காங்க 🙂

    Reply

Join the conversation