LOTR: The Series – 17 – Creation of Helm’s Deep

by Karundhel Rajesh November 7, 2011   war of the ring

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தின் இரண்டாம் பாகமான ‘The Two Towers’ படத்தின் மைய இழையானது, ஹெல்ம்’ஸ் டீப் என்ற இடத்தில் நடக்கும் பிரம்மாண்டமான போரைப் பற்றியது. ஸாருமானின் உருக்-க்ஹாய்களுக்கும், தியோடன் மன்னர் மற்றும் அரகார்னின் படைகளுக்கும் இடையே ஐந்து நாட்கள் நடக்கும் உக்கிரமான போர் அது. இந்தப் போரில் ஸாருமான் வென்றால், ரோஹான் முழுக்க அவருக்குச் சொந்தமாகிவிடும். மட்டுமல்லாமல், அடுத்து காண்டோரின் மீது ஸாரோன் தொடுக்கும் போரில், காண்டோரின் உதவிக்கு ரோஹான் வர இயலாமல் போய்விடும். ஆகையால், மிடில் எர்த்தே ஸாரோனுக்குச் சொந்தமாகிவிடும். எனவே, இந்த ஹெல்ம்’ஸ் டீப் போர், மிடில் எர்த்தின் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான யுத்தம்.

படத்தின் extended versionல், முப்பத்திரண்டு நிமிடங்களும், Theatrical versionல் இருபத்தி நான்கு நிமிடங்களும் இடம்பெறும் இந்தப் போர், எப்படிப் படமாக்கப்பட்டது?

’எனது படங்களில், ஒரு மிகப்பெரிய போரைப் படமாக்கவேண்டும் என்பது எனது லட்சியமாகவே இருந்தது. அதற்கு ஒரு நல்ல வாய்ப்பு, இந்த ஹெல்ம்’ஸ் டீப் போரின் மூலமாக வந்தது. ஆனால், அப்போதுதான் இது ஒரு வரமல்ல; சாபம் என்பதைக் கண்டுகொண்டேன்’ – பீட்டர் ஜாக்ஸன்.

ஹெல்ம்’ஸ் டீப் செட்கள், ஒரு குவாரியில் உருவாக்கப்பட்டன. இங்குதான், தொடர்ந்து நான்கு மாதங்கள் – அவற்றில் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் இரவுப் படப்பிடிப்பும், நான்காவது மாதம், பகலிலும், படப்பிடிப்பு நடந்தது. தொடர்ந்து இரவில் மட்டும் மூன்று மாதங்கள் படப்பிடிப்பு நடந்ததால், நடிகர்கள் அனைவருமே வெளுத்துப் போனார்கள் – சூரிய ஒளி இல்லாமையால். இதுமட்டுமல்லாமல், அந்த நான்கு மாதங்களும், செயற்கை மழை வேறு உருவாக்கப்பட்டது. கனத்த இரும்புக் கவசங்களை அணிந்துகொண்டு, கொட்டும் மழையில், மேக்கப்புடன் நடிக்கவேண்டிய நிர்ப்பந்தம். இதில், உருக்-க்ஹாய்களாக நடித்த நூறு ஸ்டண்ட் நடிகர்களின் பாடுதான் திண்டாட்டம். கனத்த உருக்-க்ஹாய் மேக்கப்பை அணிந்துகொண்டு, மழையில், நான்கு மாதங்கள் நடித்தனர் அவர்கள்.

நடிகர்கள் அனைவரும் துவண்டு போனார்கள்.

இந்தக் கொடிய சூழ்நிலையிலும், அத்தனை பேரையும் ஒருங்கிணைத்த விஷயம் – அவர்களுக்குள்ளிருந்த அற்புதமான நட்பு. ஒருவர் துவண்டுபோனால், மற்றவர்கள் தட்டிக்கொடுத்தனர். அதேபோல், உருக்-க்ஹாய்களின் வேடம் பூண்ட சில ஸ்டண்ட் நடிகர்கள், சூழ்நிலையைக் கலகலப்பாக்குவதற்காக, அந்தக் காஸ்ட்யூமிலேயே கவர்ச்சி நடனம் ஆடினர்.

இந்த ஹெல்ம்’ஸ் டீப் காட்சிகளைப் படத்தில் கவனித்தால், பல்லாயிரக்கணக்கான உருக்-க்ஹாய்கள், ஹெல்ம்’ஸ் டீப் கோட்டையின் முன் நின்றுகொண்டு, தங்கள் ஈட்டிகளைத் தரையில் தட்டிக்கொண்டு, ஒரு சத்தத்தை உருவாக்குவதைக் கவனிக்க முடியும். அதுவும் இந்த ஸ்டண்ட் நடிகர்கள் எதேச்சையாக உருவாக்கிய விஷயம்தான். மேக்கப் அணிந்துகொண்டு, ஷாட்டுக்காகக் காத்திருக்கும்போது, ஒவ்வொருவராக இப்படி ஈட்டிகளைத் தரையில் தட்ட ஆரம்பித்து, அதுவே படத்தின் காட்சியாக மாறியது.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை, method actingகைக் கடைப்பிடித்தவர், அரகார்னாக நடித்த Viggo Mortensen என்பதை நாம் ஆரம்பத்திலேயே பார்த்திருக்கிறோம். எங்கு சென்றாலும் தனது பெரிய வாளை எடுத்துக்கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார் விக்கோ. ஆகவே, இந்தப் போர்க்களக் காட்சிகளில், நிஜமான அரகார்னாகவே மாறினார். அப்படி ஒருமுறை சண்டையிட்டுக்கொண்டிருந்தபோது, எதிரியின் வாள் அவரது வாயில் இடிக்க, அவரது முன்பல் உடைந்து சிதறியது! உடனேயே அதனை மருத்துவரிடம் சென்று பொருத்திக்கொண்டு, அடுத்த ஒரே மணி நேரத்தில் மறுபடியும் சண்டையிட வந்து குதித்தார் அரகார்ன் விக்கோ. பல் மருத்துவர், பல்லைப் பொருத்திக்கொண்டிருந்த வேளையிலும், தனது பெரிய வாளை விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தார் விக்கோ என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கோ மார்ட்டென்ஸனின் அறையில், கண்ணாடியின் மேல், ஒரு வாசகத்தை அவர் ஒட்டியிருந்தார்.

‘Adapt and Overcome’.

இந்த வாசகம்தான் அவருக்கும், பிற நடிகர்களுக்கும் இன்ஸ்பிரேஷனாக அமைந்தது. எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும், அதனைப் புரிந்து, அந்தச் சூழ்நிலைக்குத் தக்கவாறு தன்னை வடிவமைத்துக்கொண்டு, அந்த நிலையைத் தாண்டிவருவதற்கு அனைவருக்கும் உதவிபுரிந்த வாசகம் இது.

Alan Lee and the paintings of Helm’s Deep

படம் எடுக்கப்படுவதற்குப் பத்து வருடங்கள் முன்னர், அலன் லீ, ஹெல்ம்’ஸ் டீப் பற்றி வரைந்திருந்த படம் ஒன்றை ஜாக்ஸன் பார்த்துவிட்டிருந்தார். அந்தப் படத்தைப் போல சிறிதளவாவது திரைப்படத்தில் ஹெல்ம்’ஸ் டீப்பைக் காட்ட முடியாவிடில், படத்தை எடுக்கவே தேவையில்லை என்பதே ஜாக்ஸனின் எண்ணமாக இருந்தது. அத்தனை கச்சிதமாக இருந்தன அலன் லீயின் ஓவியங்கள்.

ஆகவே, இந்த ஓவியங்களை மாதிரியாகக் கொண்டு, ந்யூஸிலாந்தின் குவாரி ஒன்றைப் பிடித்து, அதில் செட் அமைக்க ஆரம்பித்தனர் படக்குழுவினர். கற்பனை செய்து பாருங்கள். ஒரு மிகப்பெரிய கல் குவாரி. ஒரு மலை. அதனை இடித்து, அதன் உச்சியில் ஒரு கோட்டை. இவையெல்லாமே உண்மையில் கட்டப்பட்டவை.

இவற்றில், ஹெல்ம்’ஸ் டீப் கோட்டையின் சுவர் – ஸாருமானின் அடியாட்களால் படத்தில் தகர்க்கப்படப்போகும் சுவர் – பெரிய அளவில் கட்டப்பட்டது. அப்போதுதான் தகர்க்கப்படும்போது நன்றாக இருக்கும் என்பதால். அதேபோல், படத்தில், கோட்டைக்கதவை இடிக்க உபயோகப்படும் பெரிய Battering Ram – வாயில் நெருப்புடன் இருக்கும் ஒரு டிராகன் போன்ற அமைப்பு – நிஜமாகவே பெரிய அளவில் உருவாக்கப்பட்டது.

இதனால் உருவன பிரச்னை என்னவெனில், இந்த Ramஇன் அளவைப் பார்த்த ஆர்ட் டிபார்ட்மெண்ட், அதன் அளவுக்கேற்ற கதவை உருவாக்கிவிட, நிஜமாகவே அந்தக் கதவை இந்த Ramஇனால் இடித்தே உடைக்கவேண்டிய சூழ்நிலை. ஆகவே, படத்தில் நீங்கள் பார்க்கும் கோட்டைக்கதவு இடிபடும் காட்சி, ஷாட் பை ஷாட்டாக, நிஜமாகவே உருவாக்கப்பட்டதே. அதில் எந்த ஸிஜியும் இல்லை என்பதை நினைவுகொள்ளுங்கள்.

இறுதியில் – மூன்று மாதங்கள் இரவிலும், ஒரு மாதம் பகலிலும் படம்பிடித்தபின் – ஹெல்ம்’ஸ் டீப் சீக்வென்ஸ் படமாக்கிமுடிக்கப்பட்டது (ஒரு முழு திரைப்படம் எடுக்கப்படும் காலம் இது).

ஹெல்ம்’ஸ் டீப்பைப்பற்றி ஒரு வீடியோ.

தொடரும்…

  Comments

7 Comments

  1. எப்படி தல உங்கனால மட்டும் இப்படி எப்பொழுது முழு energy யோட இயங்கமுடியுது …..
    Hats off 2 u

    Reply
  2. // எப்படி தல உங்கனால மட்டும் இப்படி எப்பொழுது முழு energy யோட இயங்கமுடியுது …. //

    ?????????????????????????????????????????????????????

    Reply
  3. // படத்தின் extended versionல், முப்பத்திரண்டு நிமிடங்களும், Theatrical versionல் இருபத்தி நான்கு நிமிடங்களும் இடம்பெறும் இந்தப் போர் //

    அவ்வளவு நேரமா படத்துல இருக்கு ?????????? இப்பதான் உறைக்குது…………..

    யூடியுப் வீடியோவ பாத்தா மலைப்பா இருக்கு…யப்பா……….

    Reply
  4. ஒரு படத்தை (படைப்பை) தவமாக எடுத்துக்கொண்ட படைப்பாளிகளின் வரலாற்றைத் தந்துகொண்டிருக்கிறீர்கள். காட்பாதர் போன்ற மிகச்சில படங்களைத் தவிர ஆத்மதிருப்திக்காக எடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று எனப் புரிகிறது. அந்தக்காலத்து ஓட்டைக் கம்ப்யூட்டர்களை வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட சிஜி, நடிகர்களின் விடாமுயற்சிகள்.. சான்சே இல்லை.. Hats off dear LOTR team.

    இவ்வளவு கஷ்டமும், உங்கள் ஹோம்வொர்க்கும் எழுத்துநடையும் வாசகர் வீச்சும் இல்லாவிட்டால் தமிழ் பேசும் மக்களுக்கு தெரியாமலே போயிருக்கும். போஸ்டரைக் கூட காப்பியடித்து படமெடுத்து பணம் சம்பாதிக்கும் ஈனப்பிறவிகளுக்கு நடுவே தவமாக, ஆத்மா திருப்திக்காக படம் ஒன்று எடுக்கப்பட்ட வரலாற்றைப் பதிவு செய்கிறீர்கள். Hat’s off Scorpio..

    உங்கள் சீரிசை தொடந்து படித்து வருகிறேன். திரைத்துறையில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கும் பரிந்துரை செய்கிறேன். Really breathtaking.. அடிக்கடி பின்னூட்ட முடியவில்லை. இருந்தாலும் எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதுமே உண்டு..

    -அபராஜிதன்

    Reply
  5. @ டெனிம் & கொழந்த – எந்தப் படமாயிருந்தாலும் சரி. இன்ட்ரஸ்ட் இருந்தா கட்டாயம் நல்லா எழுதமுடியும்னு உங்களுக்கே தெரியுமே 🙂 . . அதான்…

    @ அபராஜிதன் – உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. போஸ்டர்களைக் கூட காப்பியடிக்கும் காலத்தில், முனைந்து இந்தக் காவியத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதனைப் பற்றி எழுதவேண்டும் என்பதே நோக்கம். உங்கக் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    Reply
  6. தேளு நாலு நாளா கொஞ்சம் டைட்… இப்ப தான் பதிவெல்லாம் படிச்சேன்…வெறித்தனமா இந்த சீரீஸ் முடிச்சே ஆகணும் ன்னு உக்கந்துட்டிங்க போல.. செமையா எழுதிருக்கிங்க தல… இந்த சீரீஸ் மொத்தமா ஒரு இது வரைக்கும் ஒரு பத்து தடவ பாத்துருப்பேன்… ரொம்ப கஷ்ட பட்டுருப்பாங்கன்னு தெரியும்… ஆனா இத படிக்கும்போது இப்புடி ஒரு படத்துக்கு ஒரு வெறியனா இருக்கறதுல ரொம்ப பெருமையா இருக்கு… ஆலன் லீயோட ஓவியம் அற்புதம்… hats off to the peter crew.. …

    Reply
  7. @ முரளி – முடிச்சே தீரணும்னுதான் நினைச்சேன். கட்டாயமா சீக்கிரம் முடிச்சி, Ebook போட்ரலாம். அதுல இன்னும் விவரமா நிறைய தகவல்கள் இருக்கும். இந்தக் கட்டுரைகளைக் கொஞ்சம் திருத்தி, மாத்தி, கரெக்ட் பண்ணிருவேன். முடிஞ்சவரை அந்த ஈ புக்கை நல்லா கொடுக்க முயற்சி பண்ணுறேன்

    Reply

Join the conversation