LOTR: The Series – 18 – Alan Lee & John Howe
லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்கள், ஆலன் லீ மற்றும் ஜான் ஹோவ் ஆகிய இரண்டு மனிதர்கள் இல்லையேல், எடுக்கப்பட்டிருக்காது. அப்படி எடுக்கப்பட்டிருந்தாலும், தத்ரூபமாக இருந்திருக்காது. இது, நான் சொன்னதில்லை. பீட்டர் ஜாக்ஸனே சொன்னது. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இருவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டாமா?
டால்கீன் எழுதிய ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’ நாவல்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்த முக்கியமான ஓவியர்களே இவ்விருவரும். எப்படி நம்மூரில் ‘பொன்னியின் செல்வன்’ என்று சொன்னவுடன், மணியம் மற்றும் வினு ஆகிய இருவரின் ஓவியங்கள் நமக்கு நினைவு வருகின்றனவோ, அப்படி லார்ட் ஆஃப் த ரிங்ஸ் என்றவுடன், இவ்விருவரின் நினைவு வராமல் போகாது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், இவர்களின் கைவண்ணத்தின் மூலமாகவே டால்கீன் விசிறிகள் கண்டார்கள். கதையின் ஒவ்வொரு இடமும், ஒவ்வொரு கட்டிடமும், ஒவ்வொரு கட்டமும், இவர்களின் ஓவியங்கள் மூலமாகவே உயிர்பெற்றன. மிகத்தத்ரூபமாக வரைவதில் இருவரும் கைதேர்ந்தவர்கள். ‘Fantasy Art’ என்று சொல்லக்கூடிய கலையில் முக்கியமான நபர்களாவார்கள் இவ்விருவரும்.
இருவரில், அலன் லீ, தனிமை விரும்பி. தெற்கு இங்கிலாந்தில், தனிமையானதொரு இடத்தில் வாழ்ந்துவருபவர். அதேபோல், எதிலும் ராணுவ ஒழுங்கை எதிர்பார்ப்பவர். இவருக்கு நேர் எதிர், ஜான் ஹோவ். எதையுமே மனம்போனபடி செய்ய விரும்புபவர். தன்னைச்சுற்றி இறைந்துகிடக்கும் காகிதங்கள், பேனாக்கள், மைக்கூடுகள், பிரஷ்கள், காஃபி கோப்பைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் அமர்ந்துகொண்டு, நேரம் போவதே தெரியாமல் மிகப்பெரிய சைஸில் ஓவியங்கள் வரையக்கூடியவர்.
‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’ நாவல்களைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்று ஜாக்ஸன் முடிவு செய்ததும், கதாபாத்திரங்களை எப்படித் திரையில் காட்டுவது என்று யோசிக்கத் துவங்கினார். உடனேயே அவருக்கு இந்த இருவரின் நினைவுதான் வந்தது. டால்கீனின் நாவல்களை அந்த அளவு பிரபலப்படுத்தியிருந்ததில், இந்த இருவரின் பங்கு மகத்தானது. ஆகையால், இந்த இருவரையும் தனது படங்களில் இடம்பெறவைக்க ஜாக்ஸன் விரும்பினார். ஆனால்,இருவரின் குணங்களையும்பற்றி நன்கு தெரிந்திருந்ததால், இருவரையும்,அவர்களின் வழியிலேயே போய் மடக்கினார் ஜாக்ஸன்.
தெற்கு இங்க்லாந்தில் தனிமையில் வாழ்ந்துவந்த அலன் லீயைத் தேடி ஒரு பார்ஸல் வந்துசேர்ந்தது. அதில், இரண்டு திரைப்படங்கள் இருந்தன. படங்களின் பெயர்கள், ‘Forgotten Silver’ மற்றும் ‘Heavenly Creatures’ (நினைவிருக்கிறதா? இந்தத் தொடரின் ஆரம்பத்தில், இவ்விரு படங்களையும் பற்றி விரிவாகவே பார்த்திருக்கிறோம்). கூடவே, ஒரு கடிதம். அதில், பீட்டர் ஜாக்ஸன் என்பவர், தான் எடுத்த இந்த இரண்டு படங்களையும் பற்றி விவரித்திருந்தார். கூடவே, தான் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்கள் எடுக்கப்போவதாகவும், அதில் அலன் லீயின் பங்கேற்பு இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று விரும்புவதாகவும், பணிவாக ஒரு குறிப்பும் இருந்தது. முதலில் இவ்விரு படங்களையும் பார்த்துவிடுவோம் என்று எண்ணி, இரண்டையும் பார்த்தார் லீ. ஜாக்ஸனின் கேஷுவலான கதைசொல்லும் முறை அவருக்குப் பிடித்திருந்ததால், ஒரு சில நாட்களில் ஜாக்ஸனைத் தொடர்புகொண்டார். அதன்பின் என்ன? இந்த மூன்று படங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார் லீ. ‘ ஃபெலோஷிப் ஆஃப் த ரிங்’ படத்தின் துவக்கத்தில், மோதிரத்தின் கதையைக் காண்பிக்கையில் வரும் ஒன்பது மன்னர்களில் (படங்களில் ‘நாஸ்கூல்’ என்றழைக்கப்படும் கொடூர மன்னர்கள்) ஒருவராக நடிக்கவும் செய்தார்.
ஜான் ஹோவை ஒப்பந்தம் செய்வது அவ்வளவு கடினமான பணியாக இருக்கவில்லை. இந்த இருவரில், ஜான் ஹோவ், பண்டையகால ஆயுதங்களிலும் விசேஷப் பயிற்சி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அலன் லீ மற்றும் ஜான் ஹோவ் ஆகிய இருவரும், ந்யுஸிலான்ட் செல்வதற்காக விமானநிலையத்தில் காத்திருக்கும்போதுதான் முதன்முறை சந்தித்துக்கொண்டனர். ஆக்லாண்ட் விமான நிலையத்தில், ஜான் ஹோவுக்காகக் காத்திருந்த தருணத்தில், எப்படி ஹோவ் பல பெரிய பெட்டிகள் நிறைய கத்திகளையும் கேடயங்களையும் நிரப்பிக்கொண்டு, தூக்க இயலாமல் தட்டுத்தடுமாறி நடந்துவந்தார் என்பதைப் பற்றி மிகச்சுவையாக அலன் லீ விவரித்திருக்கிறார்.
அந்த நாளிலிருந்து இருவரின் நட்பு துளிர்விட ஆரம்பித்தது. WETA ஸ்டுடியோவில் இருவருக்கும் ஒரு அறை ஒதுக்கப்பட்டது. WETAவில் LOTR படங்களின் ஆயுதங்கள், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஆகியவற்றுக்கான தலைமைப் பொறுப்பில் இருந்த Richard Taylor, இருவருடனும் தினமும் கலந்தாலோசிப்பது வழக்கம். கூடவே, இந்த இருவரும் வரையும் டிஸைன்களை இறுதியாக அப்ரூவ் செய்தது, பீட்டர் ஜாக்ஸன். இந்த ரீதியில், தங்களது கற்பனைகளைக் கட்டவிழ்க்க ஆரம்பித்தனர் இருவரும். பரிசாக நமக்குக் கிடைத்ததோ, எண்ணற்ற அறிய ஓவியங்கள் மற்றும் டிஸைன்கள்.
அலன் லீ தனிமை விரும்பி என்பதால், அவரது அறையில் அமர்ந்துகொண்டு ஓவியங்களை வரைந்துதள்ளிக்கொண்டிருப்பார். ஜான் ஹோவ், சில சமயம் வரைவார். சில சமயம், கத்தியை எடுத்துக்கொண்டு, படத்தின் ஸ்டன்ட் நடிகர்களுடன் வாட்போர் புரிந்துகொண்டிருப்பார். இல்லையெனில், WETA ஸ்டுடியோவில் உருவாகிக்கொண்டிருக்கும் கத்திகளையும் கேடயங்களையும் மேற்பார்வையிட்டுக்கொண்டிருப்பார். இல்லையேல், அலன் லீயின் வெகு அருகில் அமர்ந்துகொண்டு, தான் அருந்திய காப்பிக்கோப்பைகளையோ அல்லது பிரஷ்களையோ அல்லது கேன்வாஸ்களையோ, படம் வரையும் மும்முரத்தில் லீயின் பக்கம் அவரையறியாமல் தள்ளிவிட்டுவிட்டு, லீயைத் தர்மசங்கடப்படுத்திக்கொண்டிருப்பார்.
LOTR படங்களில், ஹெல்ம்’ஸ் டீப், எல்விஷ் காடுகள், மோரியா, எடோராஸ், மினாஸ் திரித் ஆகிய இடங்களின் ஓவியங்களை, அலன் லீ வரைந்தார். அதாவது, படத்தின் ‘நல்ல’ இடங்கள். ஜான் ஹோவோ, படத்தின் ‘இருண்ட’ பக்கங்களான மினாஸ் மோர்கல், கிரித் அங்கோல், பராட் துர் (இவைகளைப் பற்றி, மூன்றாவது பாகத்தைப் பார்க்கும்போது விரிவாகப் படிக்கப்போகிறோம்) ஆகிய இடங்களை வரைந்துகொடுத்தார். கூடவே, வில்லன்களின் ஆயுதங்கள், கவசங்கள் ஆகியவற்றையும் ஜான் ஹோவ் வரைந்தார்.
இப்படி ஆரம்பித்த அலன் லீ மற்றும் ஜான் ஹோவின் பங்களிப்பு, தொடர்ந்து மூன்று வருடங்கள், எண்ணற்ற ஓவியங்கள் வரையப்படுவதில் முடிந்தது. அவர்களின் ஓவியங்களை வைத்தே செட்கள் டிஸைன் செய்யப்பட்டன. படத்திலேயே பல காட்சிகளின் பின்னணியில் இவர்களின் ஓவியங்களை நாம் பார்க்க இயலும். குறிப்பாக, லாத்லாரியனில், ஸாரோனுடன் போர்புரியும் இஸில்டூரின் பெரிய ஓவியம், ஒரு உதாரணம். ‘Concept Art’ என்று சொல்லக்கூடிய இந்த ஓவியங்கள், இணையதளம் முழுவதும் இறைந்துகிடக்கின்றன. ஒருசிலவற்றை இங்கே பார்ப்போம்.
படங்களைக் க்ளிக் செய்து பெரிய அளவில் பார்த்து ரசிக்கலாம்.
The Sketches of John Howe
The Sketches of Alan Lee
காமிக்ஸ் ரசிகனாக, எனக்கு இந்த ஓவியங்கள் மிகவும் பிடித்தன. அலன் லீ மற்றும் ஜான் ஹோவ் பற்றிய ஒரு சிறிய ஒளிப்படம் இங்கே காணலாம்.
Sketches copyright – Alan Lee and John Howe.
தொடரும்…
வந்தோம்ல பஸ்ட்
No chance boss! Hard work never fails. Intelligence of peter jackson and the greatness of the artists is uncomparable!! thank u for the article.
Wormtongue இருக்குற படம் – minimal yet striking…………
நா படத்தின் பெரிய ரசிகன்(அதாவது, உங்கள-முரளி மாதிரி) எல்லாம் கெடையாது……ஆனா, சீரியஸா நீங்க எழுதுறது படுஆவலை கிளப்புது….உதாரணமா, இதுலையா – ஆலன் லீக்கு ஜாக்சன் பார்சலை அனுப்பினார் என்ற விஷயத்தை படுஷோக்க விவரிக்கிறீங்க………….ஓகே…….மொத நாலஞ்சு பதிவு வரை அந்த டெம்போ இருக்கும்..ஆனா, பதினெட்டாவது பதிவிலும் அந்த டெம்போ இருப்பது ஆச்சரியமே…….(நடுவுல கொறஞ்ச மாதிரி எனக்கு தோணியது)
நா நாவலும் படிச்சதில்ல, படத்தையும் இவ்வளவு உன்னிப்பா பாத்ததில்ல……..அதுனால படத்தவிட – இந்த பதிவுகளின் ரசிகன் தான் நானு……….
இந்த பதிவுகள எதாச்சு செய்யணும்………WETAக்கு ஒரு மெயில் அணுப்ப போறேன்……….பாருங்க..இந்தமாதிரி உங்களால ஒருத்தர் கண்டபடி துண்டப்பட்டு எழுதி தள்ளுறாருன்னு…………….
digital@wetafx.co.nz
என்ன தல இது படத்துல வந்த முக்கியமான சீன் லாம் இருக்கு இவங்க வரைந்தது போல … கிரேட்… அற்புதமா இருக்கு … இந்த படத்தோட உயிர் நாடியே இவங்க கை வண்ணம் தான் போல… அதுவும் இந்த ட்ரீ பேர்ட் அப்டியே வரும் அதுல இம்மி பிசகாம… நிறைய விஷயங்கள், செம எழுத்து நடை… இன்னும் சூடு குறையாம எழுதுறிங்க பாத்திங்களா கொழந்த சொன்ன மாறி… உண்மையிலேயே நீங்க எங்கியோ போயிட்டிங்க….
///நா படத்தின் பெரிய ரசிகன்(அதாவது, உங்கள-முரளி மாதிரி) எல்லாம் கெடையாது……ஆனா, சீரியஸா நீங்க எழுதுறது படுஆவலை கிளப்புது….உதாரணமா, இதுலையா – ஆலன் லீக்கு ஜாக்சன் பார்சலை அனுப்பினார் என்ற விஷயத்தை படுஷோக்க விவரிக்கிறீங்க……/////
யோவ் கொழந்த… நீங்க ஒரு வாட்டி இந்த படத்த உன்னிப்பா பாருங்க… இந்த சீரீஸ் முடிச்சதுக்கு அப்புறம், இல்ல இப்பவே…. நிஜமாவே ஒரு heavenly feel அ உணருவிங்க… உங்கள கண்டிப்பா அந்த படம், அந்த ரிங் மாறி உள்ள இழுக்கும்… சனிக்கிழமை வரிங்கள, அப்ப நான் ப்ளுரே 720p பிரிண்ட் இருக்கு தரேன்.. நல்ல பிரிண்ட் உங்களுக்கு வேணும் னா… பாருங்க.. நிஜமாவே மிரட்டிடும்…
@ லக்கி – நன்றி 🙂
@ Ganesan – ஜாக்ஸனின் ஜீநியசைப் பகிரக் கிடைத்த இந்த opportunity குறித்து எனக்கு சந்தோஷம்தான். இது எனக்கே ஒரு inspiration ஆ இருக்கே 🙂
@ கொழந்த – எனக்குப் புடிச்சதா இருக்குற விஷயங்களை எழுதுவதில் எனக்கு சந்தோஷம். நடுவுல ரெண்டு மூணு கட்டுரைகள்ல அந்த டெம்போ குறைஞ்சது. எஸ். அதுக்குக் காரணம், என்னோட இன்ட்ரஸ்ட் கொஞ்சம் குறைஞ்சதுதான். ஆனா அதுக்கப்பால தொடர்ந்து இந்தப் படங்களை திரும்பத் திரும்ப பார்த்து வெறியேத்திக்கினேன் 🙂
@ முரளி – இந்த ரெண்டு பேறு இல்லைன்னா LOTR இல்ல. அந்த அளவு அதுக்கு உயிரூட்டியிருக்காங்க. கொழந்தைக்கு நீறு சொன்ன அட்வைஸை நானும் வழிமொழிகிறேன் 🙂