
LOTR: The Series – 20 – மீண்டும் ஐஸங்கார்ட் – The Númenóreans
கருந்தேள் தளத்தைப் பற்றிய சர்வேயின் அபரிமிதமான பதில்களில், தொடர்களை ஆரம்பித்துவிட்டு முடிக்காமல் விட்டுவிடுவது பெரும் தவறு என்ற பலத்த குட்டு ஒன்று கிடைத்தது (இதற்குத்தான் feedback வேண்டும் என்று அந்த சர்வேவையே உருவாக்கினேன்). அதனால், இந்தத் தொடரை விரைவில் முடித்துவிடலாம் என்று இருக்கிறேன். இது மட்டுமல்ல. இனி, ரெகுலராக தொடர்களைப் பார்க்கப்போகிறோம். சர்வே முடிவுகளை, வியாழனன்று சர்வே முடிந்ததும், மறுநாள் தெளிவாக விளக்கி ஒரு கட்டுரை போடுகிறேன். அதில் நண்பர்களாகிய நீங்கள் அளித்துள்ள பதில்களைக் காணலாம்.
சென்ற கட்டுரையில், அபராஜிதன் என்ற நண்பர், ஒரு கேள்வி கேட்டிருந்தார். அது இங்கே:
ரோஹானின் மேற்கு எல்லையாகிய ஐசன் ஆற்றுக்கு மேற்கே இருக்கக்கூடிய ஐசன்கார்ட் எப்படி ரோஹானின் ஒரு பகுதியாக இருக்க முடியும்?
இந்தக் கேள்விக்கான விடையைத்தான் இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கப்போகிறோம். இது ஏதோ கேள்விக்கு பதில்தானே என்று அலட்சியமாய் இதைப் படிக்கும் நண்பர்கள் விட்டுவிடாமல் இருக்க, இந்தக் கட்டுரை சுவாரஸ்யமான பல தகவல்களைத் தரப்போகிறது என்பதையும் இங்கேயே சொல்லிவிடுகிறேன்.
கட்டுரையைப் பொறுமையாகப் படித்தால், சுவாரஸ்யமாக இருக்கும். படுவேகமாகப் படித்தால், ஒரு வார்த்தை கூடப் புரியாது. ஆகவே, நிதானமாகப் படிக்கவும்.
லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கதை நடந்த காலகட்டம், மிடில் எர்த்தின் மூன்றாவது யுகம் (Third age) என்று அழைக்கப்படுகிறது. இந்த மூன்றாவது யுகத்தின் மொத்த வருடங்கள், 3021. இந்த மூவாயிரத்து இருபத்தொன்று வருடங்களில், கடைசி நான்கு வருடங்களில் நடப்பதே நமது பிரதான கதை. இந்த மூன்றாவது யுகத்திற்கு முன்னர், இரண்டாவது யுகம் (Second Age) என்று வேறு ஒன்று இருந்தது. இந்த இரண்டாவது யுகத்தின் மொத்த வருடங்கள், 3441. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் முதல் பாகத்தின் ஆரம்பத்தில், ஸாரோனுடன் எல்ஃப்களும் மனிதர்களும் போரிடும் காட்சி நினைவிருக்கிறதா? அந்தப் போரில் ஸாரோன் தோற்கடிக்கப்படுவதோடு மூன்றாவது யுகம் துவங்கியது.
மூன்றாவது யுகத்தின் வருடங்களில் என்ன நடந்தது என்பதை டால்கீன் தெளிவாக விளக்கியிருக்கிறார். ஆனால், இரண்டாம் யுகத்தில் நடந்த சம்பவங்கள் அப்படி அவரால் விளக்கப்படவில்லை. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவல்களில் அங்கங்கே கதாபாத்திரங்கள் நினைவுகூரும் சில நிகழ்ச்சிகளில் இந்த இரண்டாவது யுகம் சொல்லப்படுவதோடு சரி. அப்படி ஒரு நிகழ்வில்தான் ஐஸங்கார்டின் உருவாக்கம் பற்றிச் சொல்லப்படுகிறது.
ந்யூமனோரியன்ஸ்’ (Númenóreans)என்ற இனத்தைப் பற்றி முதலில் பார்த்துவிடுவோம். ஏனெனில், இந்த ஐஸங்கார்டுக்கும் இவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
’ந்யூமனோர்’ (Númenor) என்பது, மிடில் எர்த்தின் மேற்குப்புறத்தில் அமைந்த கண்டம். நட்சத்திர வடிவிலான இந்தக் கண்டம் புகழுடன் விளங்கியது, இரண்டாவது யுகத்தில். இரண்டாவது யுகத்தின் ஆரம்பத்தில், அதற்கும் முன்னிருந்த முதல் யுக முடிவில், மார்கோத் என்ற பெயருடைய தீயசக்தி ஒன்றுடனான யுத்தத்தில் (லார்ட் ஆஃப் த ரிங்ஸ் ஆரம்பத்தில் வரும் யுத்தம் போன்று, முதல் யுகத்தில் நடந்ததொரு யுத்தம் இது) வெற்றிபெற்ற மனிதர்கள், அந்த யுத்த முடிவில், ஓய்வெடுப்பதற்காகக் கடலில் பயணித்து வந்தடைந்த இடமே இந்த ந்யூமனோர். இந்த மார்கோத்தின் பிரதான தளபதியின் பெயர் – ஸாரோன். மார்கோத் அழிக்கப்பட்ட பின், மெல்ல மெல்ல உருவெடுத்து, மூன்றாவது யுக ஆரம்பத்தில் ஒருமுறை தோற்கடிக்கப்பட்டு அழிந்துபோய், அதன்பின் மூன்றாவது யுக முடிவில் மறுபடி அழிக்கப்பட்ட நமது ஸாரோன் தான் இவன்.
இரண்டாவது யுக ஆரம்பத்தில், 32வது வருடத்தில், ’எல்ராஸ்’ (Elros) என்ற பெயருடைய மனிதன், இந்த ந்யூமனோரின் முதல் மன்னனானான். இவன், 32ல் இருந்து, 442ம் வருடங்கள் வரை அந்த பூமியை ஆண்டான். இவனது ஆட்சியில், மனிதர்கள் மிகப்பெரும் சக்தியாக வளர்ந்தனர். ந்யூமனாரில் இருந்து கிழக்கே இருந்த மிடில் எர்த்துக்கு, இரண்டாவது யுகத்தின் 600ம் வருடத்தில், கப்பல்கள் முதன்முறையாகப் பயணித்தன. அதிலிருந்து, மிடில் எர்த்தின் மனிதர்களுடனான ந்யூமனாரின் தொடர்பு ஆரம்பித்தது. கிழக்கே பயணிக்க முடிந்தாலும், ந்யூமனாரின் மேற்கே பயணிக்க, ந்யூமனார்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை விதித்தது, ’வலர்’ (Valar) என்ற பெயருடைய ஆதி பிரஜாபதிகள். இந்தத் தொடரின் ஒரு பகுதியில், மிடில் எர்த் அமைந்துள்ள உலகத்தின் பெயர் ‘ஆர்டா’ (Arda) என்று படித்தோமே நினைவிருக்கிறதா? (பாகம் ஆறு. க்ளிக்கவும்) இந்த ஆர்டா என்ற உலகம் உருவானபின் அதில் ஆதிக் கடவுளான ‘இரு’ (Eru) வினால் அனுப்பிவைக்கப்பட்ட பதிநான்கு சக்திவாய்ந்த ஜீவன்களே இந்த வலர். இவர்கள், மிகப்பெரும் சக்திகளாக உருவெடுத்த ந்யூமனார்கள், எங்கே தங்களது ந்யூமனார் நாட்டின் மேற்கே வெகு தொலைவில் அமைந்திருக்கும் இறவா நிலப்பரப்புக்கு (Undying Lands) வந்தடைந்து சாகாவரம் பெற்றுவிடுவார்களோ என்று பயந்தே இந்தத் தடையை ஏற்படுத்தினர்.
கீழே உள்ள வரைபடத்தைக் க்ளிக்கிப் பெரிதுபடுத்தி, இரண்டு பெரிய கண்டங்களுக்கு இடையே உள்ள ந்யூமனார் கண்டத்தைக் காணலாம்.
இந்தத் தடைக்குக் கட்டுப்பட்டே ந்யூமனார்கள் மேற்கே பயணிக்காமல், கிழக்கே அமைந்திருந்த மிடில் எர்த்துக்குப் பயணப்பட்டனர். ஆனால், காலம் செல்லச்செல்ல, இந்தத் தடையை எதிர்த்துக் கேள்வி கேட்க ஆரம்பித்தனர் ந்யூமனார் நாட்டு மக்கள். சாகாவரம் தங்களுக்குக் கிடைக்காமல் இருப்பதற்கு வலர்களின் சாபமே காரணம் என்று கோபத்தில் கொதிக்க ஆரம்பித்த ந்யூமனார்கள், இதுவரை நட்புரீதியாக வியாபாரம் மேற்கொண்டுவந்த மிடில் எர்த்தைத் தங்களது முழுபலத்தையும் பிரயோகித்து, கைப்பற்றத் துவங்கினார்கள். மிடில் எர்த்தின் கிழக்குப் பகுதிகளில் பல, ந்யூமனாரின் பலத்துக்குப் பதில் சொல்லமுடியாமல் வீழ்ந்தன.
ஆண்டு, இரண்டம் யுகத்தின் 1600. இந்த ஆண்டில்தான், ஸாரோன், திருட்டுத்தனமாக ஒரு மோதிரத்தை உருவாக்குகிறான்.அடுத்த பல வருடங்களில், ஸாரோனுக்கும் எல்ஃப்களுக்கும் யுத்தம் துவங்குகிறது. மோதிரத்தின் சக்தி, எல்ஃப்களைத் தோற்கடிக்கிறது. அந்த ஆண்டு, 1699. தங்களது பக்கத்து நாட்டில் யுத்தம் நடைபெற்று, தீயவன் ஒருவன் வெற்றிபெற்றதை அறிந்த ந்யூமனார்களின் அரசன் ’டார் – மினாஸ்டிர்’ (Tar – Minastir), அந்தக் காலகட்டத்தில் உலகிலேயே பலம் வாய்ந்த தனது படையை மிடில் எர்த்தின் உதவிக்கு அனுப்புகிறான். எல்ஃப்களின் அரசர் ‘கில் கலாட்’ (Gil-Galad – இவர், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் ஆரம்பத்தில் வரும் போரில் எல்ஃப்களின் சார்பில் போரிட்டு இறப்பவர்), தனது உதவிக்கு வந்த ந்யூமனார் படைக்குத் தலைமையேற்றுப் போரிட,ஸாரோன் தோற்கடிக்கப்படுகிறான். இதைத்தொடர்ந்து, அந்தக் காலகட்டத்தில் மிடில் எர்த்தில் ஸாரோன் கைப்பற்றியிருந்த ‘எரியாடோர்’ (Eriador) நகரம் மறுபடி எல்ஃப்களால் மீட்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, மிடில் எர்த்துக்கு வந்த எரியாடோர் படைகள், மெல்ல மெல்ல மிடில் எர்த்திலேயே வாழத் துவங்குகின்றன. அந்த ஆண்டு, இரண்டாம் யுகத்தின் 1800.
பல ஆண்டுகள் கழிகின்றன. மிடில் எர்த்தில் ஒளிந்திருந்த ஸாரோன், மறுபடி வெளியே வந்து வாலாட்டத்துவங்க, அப்போது ந்யூமனாரை ஆண்டுவந்த அதன் 25வது மன்னன் ’அர் -ஃபராஸோன்’ (Ar-Pharazôn) என்பவன், பெரும்படையோடு மிடில் எர்த்தை நோக்கிக் கிளம்புகிறான். ஆண்டு, இரண்டாம் யுகத்தின் 3255. இவனது படைபலத்தைக் கண்டு பயந்த ஸாரோன், அர்-ஃபராஸோனின் கைதியாக சம்மதிக்கிறான். கைதியாக ந்யூமனாருக்குக் கொண்டுவரப்பட்ட ஸாரோன், மெதுவாக மன்னனின் நம்பிக்கையைப் பெற்று, மன்னனின் ஆலோசகராக மாறுகிறான். அதன்பின், முதல் யுகத்தில் தனது தலைவனான மார்கோத்துக்கு ஒரு கோயில் கட்டச்சொல்கிறான். அப்போது கட்டப்பட்டது ஒரு பிரம்மாண்டமான 500 அடி உயர கோபுரம் (கட்டுரையின் ஆரம்பத்தில் உள்ள படம்). இது நடந்தது ந்யூமனாரில்.
இதன்பின் ஸாரோனால் வஞ்சிக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்ட அர்-ஃபராஸோன், தனது முதுமை காரணமாக, இறவா வரம் பெறத் தலைப்பட்டு, அதுவரை தடைசெய்யப்பட்டிருந்த இறவா நிலப்பரப்பை நோக்கி, மேற்கே தனது பெரும் கப்பற்படையுடன் பயணிக்கிறான். ஸாரோன் மட்டும் வஞ்சகமாக ந்யூமனாரிலேயே தங்கிவிடுகிறான். அப்போது, அங்கு வாழ்ந்து வந்த ஆதி பிரஜாபதிகளான வலர்களின் பிரார்த்தனையின் பேரில், உலகைப் படைத்த தெய்வமான ‘இரு’ (முழுப்பெயர் – இரு இல்யுவடார் – Eru Ilúvatar) அங்கு தோன்றி, அதுவரை தட்டையாக இருந்த உலகின் வடிவை உருண்டையாக்கி,ந்யூமனார் நாட்டையே கடலில் மூழ்கடித்து, அனைவரையும் கொன்றுவிடுகிறது. கூடவே, இந்தப் பேரழிவுக்குக் காரணமான ஸாரோனுக்கும் தண்டனையாக,அவனது உடலும் அழிந்துவிடுகிறது. அன்றோடு, ஸாரோனால் ஸ்தூல வடிவை எடுக்கமுடியாமல், ஆவியாகவே அலையும் சாபம் கிடைக்கிறது.
ஆனால், இந்த அழிவை எதிர்நோக்கிய ’எலெண்டில்’ (Elendil) என்ற ந்யூமனாரின் பிரஜை – ந்யூமனாரில் இருந்துகொண்டே வலர்களை வணங்கிவந்த ‘Faithful’ என்ற மைனாரிட்டி மக்களின் தலைவனின் மகன் – தனது மக்களைத் திரட்டிக்கொண்டு ஒன்பது கப்பல்களில் மிடில் எர்த் நோக்கி மேற்கில் பயணப்பட்டு, மிடில் எர்த்தில் வந்து இறங்கி, ஸ்தாபித்த நாடுகளே ஆர்நார் (Arnor) மற்றும் காண்டோர் (Gondor). காண்டோர் பற்றி லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படம் பார்த்த நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆர்நார் நாடு, சிறுகச்சிறுக அழிந்துகொண்டே வந்து, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நடக்கும் காலத்தில், ஹாபிட்களின் ஊரான ‘ஷையர்’ மற்றும் பக்கத்து ஊரான ‘ப்ரீ’ (ஃப்ரோடோவும் நண்பர்களூம், முதல் பாகத்தில் ஆரம்பத்தில் தப்பித்து ஓடும் ஊர். அரகார்னை ஃப்ரோடோ முதன்முதலில் சந்திக்கும் மது விடுதியான ‘ப்ரான்சிங் போனி – Prancing Pony – அமைந்துள்ள இடம்) ஆகிய ஊர்கள் மட்டும் அமைந்துள்ள சிறிய நாடாக மதிப்பிழந்துபோய்விட்டது. இது, காண்டோருக்கு வடக்கே இருக்கும் பகுதி.
எலெண்டிலுடன் ந்யூமனாரில் இருந்து மிடில் எர்த்துக்கு வந்த மனிதர்கள், ‘ட்யூனடெய்ன்’ (Dúnedain) என்று அழைக்கப்பட்டனர். இந்த மக்களில் பலர், ஷையரைக் காக்கும் ரேஞ்சர்களாக மாறினர். இந்த மக்களின் தலைவனான எலெண்டில் ஸ்தாபித்த ‘காண்டோர்’ நகரம், ஒரு காலத்தில் வாரிசு இல்லாமல், அமைச்சர்களால் ஆளப்பட்டபோது, அதன் வாரிசான அரகார்ன், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் ஆரம்பிக்கும் காலத்தில் ஒரு ரேஞ்சராக இருந்தான் என்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். ரேஞ்சர் எப்படி வாரிசானான்? அவன் இந்த ட்யூனடெய்ன்களின் வழி வந்தவன் என்பதே காரணம். அதாவது, காண்டோர் மற்றும் ஆர்நார் நாடுகளின் முதல் மன்னனான எலெண்டிலின் வழிவந்தவனே அரகார்ன். ட்யூனடெய்ன்களில் ஒருவனாக, காடுகளில் அலைந்துகொண்டிருந்தவன்.
இந்த ட்யூனடெய்ன்களுக்கு ஒரு சிறப்பு சக்தி உண்டு. சராசரி மனிதர்களைவிட மும்மடங்கு அதிக ஆயுள் இவர்களுக்கு இருந்தது. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களை உற்றுக் கவனித்த ரசிகர்களுக்கு, மூன்றாவது பாகத்தில், தியோடன் மன்னர், தனது சகோதரனின் மகளான ’இயோவின்’ (Éowyn) என்ற பெண்ணிடம் (இறுதியில், ராட்சதப் பறவையில் வரும் ஸாரோனின் தளபதியின் முகத்தில் கத்தியைச் செலுத்திக் கொல்பவள்), ‘அரகார்னுக்கு என்னை விட வயது அதிகம். அவனுக்கு இப்போது 87 வயது, பெண்ணே’ என்று சொல்லும் காட்சி நினைவிருக்கும். ட்யூனடெய்ன்கள், சராசரியாக 250 வயது வாழக்கூடியவர்கள். இதுவே அவர்களது சிறப்பு சக்தி.
இப்படி ந்யூமனாரில் இருந்து வந்து காண்டோரை ஸ்தாபித்த இந்த ட்யூனடெய்ன்களால் இரண்டாவது யுகத்தின் முடிவில், தங்களது கண்டத்தில் இருந்த 500 அடி கோயிலின் நினைவாக, காண்டோரின் எல்லையில் கட்டப்பட்டதே ‘ஆர்தாங்க்’ (Orthanc) என்ற பிரம்மாண்ட கோபுரம்.
’சரி. ஆனால், கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லையே’ என்று கேட்கும் நண்பர்களுக்கு – அது அடுத்த பகுதியில் வரும். இதிலேயே இன்னும் தொடர்ந்தால், எதுவும் புரியாமல் எரிச்சலே மிஞ்சும் என்பதால்.
சீக்கிரமே ஒன்றின்பின் ஒன்றாக வரிசையாக எழுதி, இந்தத் தொடரை முடித்துவிடுகிறேன். அதன்பின் EBook ரிலீஸ் செய்யப்படும். அந்த ஈ-புக்கில், தொடரில் இல்லாத சுவாரஸ்யங்கள் சில புதிதாக இடம்பெறுகின்றன.
தொடரும் . . . . .
Middle Earth map courtesy
Númenór Painting courtesy
like 🙂
அப்பாடா.. ஒருவழியாக அடுத்த பகுதி வெளிவந்துவிட்டது. அந்தக் குட்டை வைப்பதற்காகவே நான் சர்வேயில் கலந்துகொண்டேன் :). பதிவு வழக்கம்போலவே சுவாரஸ்யம்.
//தியோடன் மன்னர், தனது சகோதரனின் மகளான ’இயோவின்’ (Éowyn) என்ற பெண்ணிடம்‘அரகார்னுக்கு என்னை விட வயது அதிகம். அவனுக்கு இப்போது 87 வயது, பெண்ணே’ என்று சொல்லும் காட்சி நினைவிருக்கும்.//
இரண்டாம் பாகத்தில் ஹெல்ம்ஸ் டீப் செல்லும் வழியில் அரகார்னுக்கு இயோவின் உணவளிக்கும் நேரத்தில், அவளுடைய கேள்விக்குப் பதிலாக அரகார்னே தனக்கு 87 வயது என சொன்னதாக ஞாபகம்.
புத்தகம் வாசித்துவருகின்றேன். சண்டைக்காட்சிகள் விவரிக்கப்படாமல் சுவாரஸ்யம் குறைவாக இருக்கின்றன. அரை மணிநேர ஹெல்ம்ஸ் டீப் சண்டை வெறும் ஒன்றரைப் பக்கங்களிலேயே முடிந்துவிடுகின்றது. நாவல் வடிவத்தை நீட்டிச் சுருக்கி சுவாரஸ்யமான திரை வடிவத்துக்கு மாற்றிய ஜாக்சன் ஜீனியஸ் தான்.
நல்ல ஒரு இடுகை
-present 🙂
@ Sampath – thanx for the like 🙂
@ Abarajithan –
//இரண்டாம் பாகத்தில் ஹெல்ம்ஸ் டீப் செல்லும் வழியில் அரகார்னுக்கு இயோவின் உணவளிக்கும் நேரத்தில், அவளுடைய கேள்விக்குப் பதிலாக அரகார்னே தனக்கு 87 வயது என சொன்னதாக ஞாபகம்.//
ஆம். ஹெல்ம்’ஸ் டீப் செல்லும் வழியில் அரகார்னே அப்படி சொல்வது உண்மைதான். அதேபோல், மூன்றாம் பாகத்திலும் தியோடன் அப்படி சொல்வதும் படத்தில் இருக்கிறது :). அதேபோல், ஜாக்சனின் ஜீனியஸ் பற்றி உங்களது கருத்தோடு முற்றிலுமாக உடன்படுகிறேன் .
@ mosikeeran – நன்றி
@ Elamparithi – நன்றி 🙂