LOTR: The Series – 21 – மீண்டும் ஐஸங்கார்ட் – part 2

by Karundhel Rajesh March 19, 2012   war of the ring

சென்ற கட்டுரையில், ஐஸங்கார்ட் எப்படி உருவானது என்பதைப் பார்த்தோம் அல்லவா? அதில் சொல்லப்படாத சில விஷயங்களுக்காகவே இந்தக் கட்டுரை. முதலில், அதனை ஒருமுறை மேய்ந்துவிடுங்கள். அதன்பின் இந்தக் கட்டுரையைப் படிக்கத் துவங்குங்கள்.

பலாண்டிர் என்ற கண்ணாடிப் பந்து ஒன்றை லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களில் கண்டிருப்பீர்கள். ஸாருமான், இந்தப் பந்து மூலமாக ஸாரோனுடன் பேசுவதையும் பார்த்திருப்பீர்கள். இக்கதை நடக்கும் ‘ஆர்டா’ என்ற உலகில், மிக ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்டவை இந்த பலாண்டிர்கள். உருவாக்கப்பட்ட பல பலாண்டிர்களில், ஏழு பலாண்டிர்களை எலெண்டில் (யார் என்று தெரிகிறதா? சென்ற கட்டுரையில், ந்யூமனாரில் இருந்து தப்பித்து, மிடில் எர்த் வந்து, காண்டோர் மற்றும் ஆர்நார் நகரங்களை உருவாக்கிய மனிதன்)தன்னுடன் எடுத்துவந்து, ஆர்நாரில் மூன்றும், காண்டோரில் நான்கும் விநியோகித்ததாகத் தெரிகிறது.

பலாண்டிரின் செயல்பாடு என்ன?

பலாண்டிர் என்பது, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கதைகளின்படி, ஒரு தகவல் தொடர்பு சாதனம். ஒரு பலாண்டிரில் இருந்து, மற்ற பலாண்டிரைச் சுற்றி  நடப்பவைகளை அறிந்துகொள்ளலாம். அதாவது, வீடியோ கான்ஃபரன்ஸிங் போல. இப்படி, ஆரம்ப காலத்தில், ஆட்சியாளர்களால், இந்த ஏழு பலாண்டிர்களின் மூலம் ஆர்நார் மற்றும் காண்டோரில் நடப்பவைகளை அறிந்துகொண்டு, தக்க நடவடிக்கைகள் எடுக்க முடிந்தது.

இப்படி ஆர்தாங்க் என்ற மிகப்பெரிய 500 அடியில் அமைந்த கட்டிடத்தை ஐஸங்கார்டில் கட்டியவுடன், அதில் ஒரு பலாண்டிர் வைக்கப்பட்டது.
இதெல்லாம் நடந்தது, மிடில் எர்த்தின் இரண்டாவது யுகத்தில்.

இப்படிக் கட்டப்பட்ட ஆர்தாங்க் கோபுரம், காண்டோர் நகரின் படைகளால் – அதாவது, எலெண்டில் மற்றும் அவனது வாரிசுகளின் படைகளால் – பாதுகாக்கப்பட்டது. ஒரு படை இதற்கென்றே உருவாக்கப்பட்டு, ஆர்தாங்க் அமைந்துள்ள ஐஸங்கார்ட் என்ற இடத்தில் அமர்த்தப்பட்டது. இந்தப் படையின் தலைவர்களின் புதல்வர்களால் தலைமுறை தலைமுறையாக இந்தக் கோபுரம் காக்கப்பட்டது. அதனைச் சுற்றியுள்ள பிராந்தியம், சிறுகச்சிறுக வாழ்பவர்கள் அற்றுப்போய், காடாக மாறியது. அந்தப் பிராந்தியத்தில் வாழ்ந்துவந்த காட்டுவாசிகள் – ட்யூன்லெண்டிங்ஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த மனிதர்கள் – மெல்ல மெல்ல இந்தக் கோபுரத்தைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தனர்.

இது நடந்தது, மூன்றாவது யுகத்தின் ஆரம்ப வருடங்களில்.

இதன்பின், நாம் ஏற்கெனவே பார்த்த கதை – காண்டோர் எதிரிகளால் முற்றுகையிடப்பட்டதும், காண்டோரின் உதவிக்கு, அதன் அருகே வாழ்ந்துவந்த மனிதர்கள் சென்றதும், காண்டோர் காப்பாற்றப்பட்டதும், இதனால் மகிழ்ந்த காண்டோரின் மன்னன் ஸிரியன், ஒரு நிலப்பகுதியை அந்த மனிதர்களுக்கே கொடுத்ததும், அங்கே வாழத்துவங்கிய அந்த மனிதர்கள், ரோஹிர்ரிம் என்று அழைக்கப்பட்டதும், அந்தப் பிராந்தியம் ரோஹான் என்ற பெயரால் அழைக்கப்பட்டதும் நடந்தது.

ரோஹான் என்ற அந்த நாட்டின் எல்லையில் தான் இந்த ஐஸங்கார்ட் அமைந்திருந்தது. அப்போது, ஐஸங்கார்டைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த காட்டுவாசியினர், ரோஹானை அவ்வப்போது தாக்கி வந்தனர். இந்தக் காட்டுவாசிகளின் பெயர் – ட்யூன்லெண்டிங்ஸ் (Dunlendings). இந்த ட்யூன்லெண்டிங்ஸ் மக்கள், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தின் இரண்டாம் பகுதியில் வருகின்றனர். ரோஹான் நாட்டை, ஸாருமானின் ஆணையின் பேரில் தாக்கும் காட்டுவாசிகளே இந்த ட்யூன்லெண்டிங்ஸ். நாம் பார்த்துக்கொண்டிருக்கும் கதை நடந்த ஆரம்பகாலத்தில், ஐஸங்கார்ட் இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஒரு காலகட்டத்தில் இந்த ட்யூன்லெண்டிங்ஸ், ரோஹானைத் தாக்கி, அந்த நாட்டைக் கைப்பற்றும் தருவாயில், எப்படியோ ரோஹான் அந்தப் போரில் வென்றது. வென்ற கையோடு, இந்த ட்யூன்லெண்டிங்ஸ் மக்கள், அருகே இருந்த மலைகளுக்குத் துரத்தப்பட்டனர். ஐஸங்கார்டும், ரோஹானின் கட்டுப்பாட்டில் வந்தது.

அப்படிக் கைப்பற்றப்பட்ட ஐஸங்கார்டை, பழைய சரித்திரத்தை மறவாத ரோஹான் ஆட்சியாளர்கள், காண்டோருக்காகக் காவல் புரிய ஆரம்பித்தனர்.   அன்றிலிருந்து, ஐஸங்கார்ட், ரோஹானின் பகுதியாக மாறியது. ஆர்தாங்கின் சாவி, காண்டோரின் ஆட்சியாளர்களிடம் வந்து சேர்ந்தது.   சிறுகச்சிறுக, காண்டோரின் அரச வம்சம் நசித்துப்போய், அமைச்சர்களால் ஆளப்படும் அவலத்துக்குத் தள்ளப்பட்டது. அப்படி காண்டோரை ஆண்ட ஒரு அமைச்சரின் ஆட்சிக்காலத்தில் – பெயர் பெரன் – மிடில் எர்த்தின் கிழக்கில் இருந்த இறவா நிலப்பரப்பில் இருந்து வந்த ஸாருமான் என்ற மூத்த மந்திரவாதி, பெரனிடம் வந்து, தான் இனி ஐஸங்கார்டில் தங்க விரும்புவதாகச் சொல்ல, மறுப்பே இல்லாமல் ஆர்தாங்கின் சாவியை ஸாருமானிடம் அளித்தார் பெரன். ஐஸங்கார்ட் ஸாருமானுக்கு அளிக்கப்பட்டதற்கு பிரதான காரணம், காண்டோரிடம் ஐஸங்கார்டைக் காவல் காப்பதற்கான படைகள் இல்லாததே. ரோஹானின் வசம் ஐஸங்கார்டை ஒப்புவிக்கவும் காண்டோரால் இயலவில்லை. ஏனெனில், ஆதி காலத்தில் இருந்தே ஐஸங்கார்ட் ரோஹானின் ஒரு பகுதியாகக் கௌரவத்துடன் இருந்து வந்ததே.  இப்படி ஒரு குழப்பத்தில் பெரன் சிக்கிக்கொண்டபோதுதான் திடீரென்று அங்கு வந்த ஸாருமான், ஐஸங்கார்டைத் தன்னால் காவல் புரிய முடியும் என்று சொன்னதால், அதன் சாவி, ஸாருமானிடம் ஒப்புவிக்கப்பட்டது.

இப்படித்தான் ஸாருமான் ஐஸங்கார்டுக்கு வந்து சேர்ந்தார்.

முதலில், காண்டோரின் சார்பில் ஐஸங்கார்டைக் காவல் காக்கும் தளபதியாகத்தான் இருந்துவந்தார் ஸாருமான். அங்கே இருந்த பலாண்டிரின் மூலம், மெதுவே ஸாரோனின் கட்டுப்பாட்டுக்கு வந்த ஸாருமான், இதன்பின் தீய மனமுடையவராக மாறி, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கதை ஆரம்பித்த தருணத்தில், ஸாரோனின் பொம்மையாக மாறிப்போனார்.

தன்னுடைய சொந்தப் படையின் மூலம் ’உருக்-க்ஹாய்’ என்ற மனித – பூத கலப்பில் ஒரு புதிய படையை ஸாருமான் உருவாக்கியதும், மோதிரத்தைக் கொண்டு சென்ற ஹாபிட்களைத் துரத்தியதும், மர வடிவான ‘எண்ட்’ என்ற இனத்தினர் மூலம் ஐஸங்கார்ட் முற்றுகையிடப்பட்டதும், ஸாருமான் ஆர்தாங்க்கில் சிறை வைக்கப்பட்டதும், ஸாருமானின் அடியாளான ‘க்ரிமா’ என்ற மனிதனின் மூலம் ஸாருமான் கொல்லப்பட்டதும் (ஸாருமான் கொல்லப்படுவது, படத்தின் extended version ல் மட்டுமே உள்ளது) லார்ட் ஆஃப் த ரிங்ஸ் விசிறிகளுக்குத் தெரிந்திருக்கும்.

உண்மையில், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவல்களில், ஆர்தாங்க்கில் சிறை வைக்கப்பட்ட ஸாருமான், எல்லாம் முடிந்த பிறகு, தன்னைக் காவல் காத்து வந்த ‘ட்ரீபேர்ட்’ (Treebeard) என்ற எண்ட்டின் மனதை மாற்றி, அங்கிருந்து ஹாபிட்களின் இடமான ஷையருக்கு வந்து, காட்டில் ஒரு திருடனாக வாழ்ந்துவருவார். அதன்பின் தனது கையாளான க்ரிமாவின் மூலம் கழுத்தறுபட்டு சாவார். அது, படத்தில் வேறு மாதிரி காட்டப்பட்டது.

நண்பர் அபராஜிதன் கேட்ட கேள்வியான “ ரோஹானின் மேற்கு எல்லையாகிய ஐசன் ஆற்றுக்கு மேற்கே இருக்கக்கூடிய ஐசன்கார்ட் எப்படி ரோஹானின் ஒரு பகுதியாக இருக்க முடியும்?“ என்பதற்கு இப்படியாக பதிலை விரிவாகப் பார்த்துவிட்டோம்.

வரிசையாக லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கட்டுரைகளை எழுதி, இந்தத் தொடரை முடிப்பதே என் உத்தேசம். ஆகவே, ஒவ்வொன்றாக இனி கட்டுரைகளை எதிர்பார்க்கலாம். விரைவில் இந்தத் தொடரையும், மற்ற தொடர்களையும் முடித்துவிடுவோம். அதன்பின் படு சுவாரஸ்யமான இரண்டு தொடர்கள் துவங்க இருக்கின்றன.  இந்த இரண்டு தொடர்களுமே அத்தனை நண்பர்களுக்கும் பிடிக்கும்.

Saruman Photo courtesy

  Comments

11 Comments

  1. ஈ புக் எப்போ வரும் சார்!!! பயங்கர சுவாரசியமா இருக்கும்னு நம்புறேன்!

    இதே மாதிரி ஹாரிபாட்டர் எழுதுற ஐடியா இருக்கா!!!!?

    இல்ல யாராவது எழுதிட்டு இருக்காங்களா!!?

    Reply
  2. @ karthik – இந்தத் தொடர் முடிஞ்சவுடனே E book போட்ருவோம். இந்தத் தொடர் எப்ப முடியும்? ஈ புக் வரும்போதுதான் :-)…. ஹீ ஹீ… Jokes apart , வெகு விரைவில் தொடரை முடிச்சிருவோம் தலைவா

    Reply
  3. LOTR படிச்சிருந்தாதன எதுனா சொல்ல……

    பின்னுட்டத்துல தலைகாட்டும் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

    Reply
  4. ” சில சுவாரஸ்யமான BLOGS . . “

    இப்ப சுளவா இருக்கு…அதே மாதிரி கொஞ்சம் கீழ – Link name 1, Link name 2..அதியும் ஒரு பார்வ பாத்திருங்க

    Reply
  5. ///வரும் நாட்களில், ஒவ்வொன்றாக மற்ற ஹாரி பாட்டர் படங்கள் நாவல்களையும் அலசலாம். ஏழு பாகங்களையும் பார்த்துவிட்டு, இறுதியாக, ஹாரி பாட்டர் கதைகளில் சொல்லப்படும் விஷயங்களைப் பற்றியும் மிக விரிவாகப் பார்த்துவிடலாம். Trust me. It’ll be real fun/////

    தலைவா இத சொல்லி ரொம்ப நாளாச்சு!! ( harry potter and sorcerer’s stone விமர்சனம் போது சொன்னது)

    Reply
  6. //தலைவா இத சொல்லி ரொம்ப நாளாச்சு!! ( harry potter and sorcerer’s stone விமர்சனம் போது சொன்னது)//

    இவ்ளோ கமிட்மெண்டுக்கு நடுவில்.. 700 பக்க நாவலுக்கு ஆங்கில ட்ரேன்ஸ்லேஷன் வேறயா? தெய்வமே!!!!!!

    Reply
  7. This comment has been removed by the author.

    Reply
  8. அசத்தல்.. பேசாம நீங்களும் ஒரு LOTR என்சைக்ளோபீடியா ஆரம்பிச்சுடலாம். ஒவ்வொருமுறை உங்க கட்டுரைகள வாசிக்கும்போதும் LOTRங்கிறது சிலப்பதிகாரம், இலியட், ஒடிசி மாதிரி மிடில் ஏர்த் பற்றின ஒரு மகா காவியத்தின் துணைக்கதைதான்னு தோணுது.

    //இந்த இரண்டு தொடர்களுமே அத்தனை நண்பர்களுக்கும் பிடிக்கும்.//

    எனக்கென்னவோ LOTR Series முடியறது கவலையாத்தான் இருக்கு. புத்தகம் படிக்கறதவிட, படம் பாக்கறதவிட, இப்படி துண்டுதுண்டா முன்கதை, பின்கதை எல்லாம் கலந்து தெளிவா தமிழ்ல படிக்கறது செம இன்ட்ரஸ்டிங்… 🙂

    Reply

Join the conversation