LOTR: The Series – 22 – The Last March of the Ents

by Karundhel Rajesh April 2, 2012   war of the ring

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் இரண்டாம் பகுதியான ‘The Two Towers‘ படம் பார்த்திருக்கும் நண்பர்களுக்கு, நடமாடும் மரமான ‘ட்ரீபேர்ட்’ கதாபாத்திரம் நினைவிருக்கும். கதைப்படி, அது மரமல்ல. ‘Ent’ என்று அழைக்கப்பட்ட ஒரு ஜீவராசி. யார் இந்த என்ட்கள்? இவர்களுக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்மந்தம்? திரைப்படத்தில் இந்தக் கதாபாத்திரம் எப்படி உருவாக்கப்பட்டது? படத்தின் பின்னணியில் என்ன நடந்தது? முடிந்தவரை போரடிக்காமல் பார்க்கலாம் வாருங்கள்.

மிடில் எர்த்தின் வரலாற்றில், மிக மிக ஆதி காலத்தில், கடவுள் ‘இரு’ (Eru)வினால் உருவாக்கப்பட்ட ஜீவராசிகளே இந்த என்ட்கள். எப்போது எல்ஃப்கள் மிடில் எர்த்தில் தோன்றினாரோ, அப்போதே இந்த என்ட்களும் தோன்றியதாக லார்ட் ஆஃப் த ரிங்ஸ் வரலாறு சொல்கிறது. இந்த என்ட்கள் உருவானதற்கான காரணம், கிம்லியின் ஆதி இனத்தவரான ட்வார்ஃப்கள், மரங்களை அழித்துவிடாமல், அவற்றைப் பாதுகாப்பதற்கு ஏதேனும் வழிமுறை உள்ளதா என்று ஆராயப்பட்டபோது, மரங்களின் காவலாளிகளாக குறிப்பிட்ட ஜீவராசிகளைப் படைக்கலாம் என்று ‘இரு’ முடிவுசெய்ததே.

இப்படிப் படைக்கப்பட்ட என்ட்களில், நமது கதை நடக்கும்போது இடம்பெறும் ட்ரீபேர்ட் (Treebeard) என்ற என்ட்டே மிக மிக வயதான ஜீவராசி. அதாவது, மிடில் எர்த்தில் படைக்கப்பட்ட ஜீவராசிகளிலேயே அதிக வயதான ஒன்று இந்த ட்ரீபேர்ட்தான்.

இந்த என்ட்களில் பலவகைகள். ஒவ்வொரு என்ட்டும், எந்தெந்த மரங்களை அது பாதுகாக்கிறதோ அந்த மரத்தைப் போன்ற தோற்றம் கொண்டிருக்கும்.
இத்தகைய என்ட்களில், பெண்களும் உண்டு. அவர்கள், ‘என்ட்வைஃப்ஸ்’ (Entwives) என்று அழைக்கப்பட்டனர். இத்தகைய என்ட்வைஃப்ஸ் பற்றி ட்ரீபேர்ட் சொல்வதாக லார்ட் ஆஃப் த ரிங்ஸில் ஒரு இடம் வருகிறது. எங்காவது என்ட்வைஃப்ஸ்களைப் பார்த்தால், கண்டிப்பாகத் தகவல் சொல்லியனுப்புமாறு ட்ரீபேர்ட்ஹாபிட்களிடம் சொல்கிறது. இதற்குக் காரணம், மெர்ரியும் பிப்பினும் ட்ரீபேர்டிடம் ஷையரில், அது சொன்னதைப்போன்ற உருவத்தில் ஒரு பேசும் மரத்தைப் பார்த்ததாக சொல்வதுதான்.

இந்த என்ட்கள் எப்போதெல்லாம் கூடிப் பேசுகின்றனவோ, அந்தக் கூட்டம் ’என்ட்மூட்’ (Entmoot) என்ற பெயரில் அழைக்கப்படும். பொதுவாகவே, என்ட்களின் சோம்பேறித்தனம் இந்தக் கதையெங்கும் பிரசித்தி பெற்ற ஒன்று. ஆகவே, இரண்டாம் பாகத்தில் மெர்ரியும் பிப்பினும் இந்த என்ட்கள் பேசி முடிவதற்காகக் காத்துக்கொண்டிருப்பதைச் சித்தரிக்கும் காட்சி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். மொத்தம் மூன்று நாட்கள் நடக்கும் இந்த என்ட்மூட்டின் முடிவில் தான், ஹாபிட்களுக்கு உதவுவதாக அத்தனை என்ட்களும் சேர்ந்து முடிவெடுக்கும்.

The Last March of the Ents

இந்தத் தலைப்பில் அமைந்த சம்பவம், இரண்டாம் பாகத்தைப் பார்த்த நண்பர்களால் மறக்கப்பட்டிருக்க முடியாது. காடுகளை அழித்துக்கொண்டிருக்கும் ஸாருமானின் மீதான கோபத்தால், ஸாருமானின் மேல் தாக்குதல் நடத்தப்போவதாக முடிவெடுக்கும் என்ட்கள், ஐஸங்கார்டைத் தாக்கி அழிப்பதற்காகச் செல்லும் காட்சி இது. மொத்தம் ஐம்பது என்ட்களும், இவர்களுடன் ஹுவோர்ன் என்று அழைக்கப்படும் நிஜமான பேசும் மரங்களும் சேர்ந்து, பெருங்கோபத்துடன் ஐஸங்கார்டை நோக்கிச் சென்று, அங்கிருக்கும் அத்தனை பூதங்களையும் அழித்து, அடைக்கப்பட்டுள்ள அணையைத் திறந்து, ஐஸங்கார்டை மொத்தமாக மூழ்கடிக்கும் அந்தக் காட்சி எனக்கு பெர்சனலாக இந்தப் படங்களில் பிடித்த காட்சிகளில் ஒன்று.

இந்த அட்டகாசமான காட்சியை இங்கே காணலாம்.

இந்தக் காட்சிகளில், எனக்கு மிகவும் பிடித்த ஒரு துணுக்கு – உருக்-க்ஹாய்கள், ஒரு என்ட்டுக்கு தீ வைத்து விடுவார்கள். அணை திறக்கப்பட்டவுடன், எல்லோரையும் முந்திக்கொண்டு ஓடிச்செல்லும் அந்த என்ட், தண்ணீரில் தலையை முழுக்கி, தீயை அணைத்துக்கொள்ளும்.  மிகச்சில நொடிகளே வந்தாலும், ஜாக்ஸன் குழுவினரின் க்ரியேட்டிவிடிக்கு இந்தக் காட்சி ஒரு சிறந்த உதாரணம்.

இப்போது, இந்த ட்ரீபேர்ட் எப்படி உருவாக்கப்பட்டது என்று பார்க்கலாம். அதேபோல், ஐஸங்கார்ட்  மூழ்கடிக்கப்பட்டதையும் பார்த்துவிட்டு, இந்த அத்தியாயத்தை முடிக்கலாம்.

How Isengard sank

ட்ரீபேர்ட், நிஜமாகவே பெரியதோரு ரப்பர் செட்டாக உருவாக்கப்பட்டது. இதன் உச்சியில் ஹாபிட்களாக நடித்த இருவரும் உட்காரவைக்கப்பட்டனர். அதன்பின், ஐந்துபேர் அடங்கிய குழு ஒன்று, இந்த மரத்தின் அடியில் நின்றுகொண்டு, மரத்தை கண்டபடி ஆட்டி, ட்ரீபேர்ட் நடப்பதைப்போன்ற எஃபக்டை உருவாக்கியது. மரத்தில் இருந்து இறங்குவது மிகக்கடினமாக இருந்ததால், எப்போதுமே இந்த இருவரும் அதன்மேலேயே உட்காரவைக்கப்பட்டனர். சாப்பாடு, அவர்களுக்கு மேலே அனுப்பப்பட்டது.

இரண்டாவது பாகம் டிஸம்பர் 2002ல் வெளியாகப்போகிறது என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. படத்தின் அத்தனை ஷூட்டிங்கும் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்‌ஷனில் ஜாக்ஸன் முழுவீச்சாக இறங்கியிருந்த நேரம்.  ஹெல்ம்’ஸ் டீப் போரைக்கூட படமாக்கியாகிவிட்டது (படத்தின் ஷூட்டிங்கில் முழுதாக மூன்று மாதங்கள் எடுத்த பகுதி இது என்பதை பழைய கட்டுரையில் படித்திருப்பீர்கள். அதில், இரண்டு மாதங்கள் இரவில் வேறு படப்பிடிப்பு நடந்தது). ஆனால், யாருமே எண்ணிப் பார்க்கக் கூட பயந்த ஒரு பகுதியாகவே ஐஸங்கார்டின் மூழ்கடிப்பு இருந்தது. இந்த ஸீக்வென்ஸைப் படமாக்குவதை ஜாக்ஸன் உள்ளிட்டவர்கள், தள்ளிப்போட்டுக்கொண்டே வந்ததில், ஆகஸ்ட் வந்துவிட்டது. இன்னும் நான்கே மாதங்களில் படம் வெளியாகவேண்டிய நிர்ப்பந்தம்.

அப்போதுதான் இந்தப் படப்பிடிப்பைக் கையில் எடுத்தார் ஜாக்ஸன்.

படத்தின் ஆர்ட் டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்தவர்கள், மிகச்சிறிய மினியேச்சர் ஒன்றை – ஐஸங்கார்ட் மற்றும் அதன்பின்னால் உள்ள மலை + அணை – உருவாக்கினார்கள். இது ஏன் என்றால், இதனைப் பார்த்ததும், ஜாக்ஸன், அவரது மனதில் உள்ள ஐடியாக்களைச் சொல்லுவார்; அதனை வைத்து இன்னும் தத்ரூபமாக ஒரிஜினல் ஸெட் உருவாக்கலாம் என்றுதான். அதேபோல், ஜாக்ஸன் பல இன்புட்கள் கொடுத்தார்.

ஒரிஜினலாக, இதைப்போன்ற காட்சிகள் படமாக்குகையில், முதலில் ஸ்டோரிபோர்ட் ஒன்றைச் செய்துவைத்துக்கொண்டு,அதன்படி படமாக்குவதே ஜாக்ஸனின் வழக்கம். படம் முழுக்க ஸ்டோரிபோர்ட் தயார் செய்தாலும் கூட, இந்தக் குறிப்பிட்ட சீக்வென்ஸ்களுக்கு அவர் ஸ்டோரிபோர்ட் செய்யவில்லை. நேரமின்மையே காரணம். அதனால், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பேரி ஆஸ்போர்ன் (Barry Osbourne) ஜாக்ஸனின் உதவிக்கு வந்தார்.

விஷுவல் எஃபக்ட்ஸ் டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த ப்ரயன் வாண்ட் ஹல் (Brian Van’t Hul ), க்ரிஸ்டியன் ரிவர்ஸ் (Christian Rivers) மற்றும் அலெக்ஸ் ஃபங்கி (Alex Funke) ஆகியவர்களை அழைத்த ஆஸ்போர்ன், தற்போது செய்யப்பட்டிருக்கும் சிறிய அளவிலான மினியேச்சர்களை வைத்து, இந்த சீக்வென்ஸை மட்டும் ஒரு சிறிய படமாக எடுத்துத்தரச்சொல்லி ஆணையிட்டார். அதாவது, மிக அடிப்படையான ஒரு படம். அதில் எந்த விஷுவல் எஃபக்ட்ஸும் இருக்காது. குட்டி மினியேச்சர்களைச் சுற்றிச்சுற்றிப் படம் எடுக்கவேண்டும். அணை உடைந்து தண்ணீர் வரும்போது, தண்ணீருக்குப் பதில் ஒரு பாலிதீன் ஷீட்டை விரிப்பார்கள். குட்டிக்குட்டி மரப்பொம்மைகளை நீண்ட கம்பிகளின் வழியாக நீட்டி, ஐஸங்கார்டை மூழ்கடிப்பதுபோலப் படம் எடுப்பார்கள். இதுதான் வழிமுறை.
அதன்படியே, அந்தக் குறும்படம் எடுத்துமுடிக்கப்பட்டது. அந்தக் காட்சிகள், ஜாக்ஸனிடம் தரப்பட்டன. அவைகளை ஜாக்ஸனே எடிட் செய்து, இறுதியில் படத்தில் அந்தக் காட்சி எப்படி இடம்பெறவேண்டும் என்பதை கச்சிதமாகத் தெரிவித்தார். இந்தப் படம் எப்படி இருக்கிறதோ, அதே ஷாட்கள்தான் இறுதி versioனுக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்பின், மின்னல்வேகத்தில் இறுதிக் காட்சிகள் படமாக்குவதற்கு ஆயத்தங்கள் நிகழத் துவங்கின.

எட் மல்ஹோலாண்ட் (Ed Mulholland) என்பவர், மினியேச்சர்கள் (actually, அவை பிகேச்சர்கள் என்று அழைக்கப்பட்டன. காரணம், ஒவ்வொரு மினியேச்சரும் பத்தடி, பதினைந்தடி என்று இருந்ததே) உருவாக்கும் கட்டுமான சூப்பர்வைஸர். பொதுவாக, எந்தப் படமாக இருந்தாலும்,படப்பிடிப்பு முடிந்ததும், க்ளோஸப் ஷாட்கள் மற்றும் இன்னபிற குட்டி குட்டி ஷாட்களைப் பொதுவாகப் படமாக்குவார்கள். இதற்கு, பிக்கப் ஷாட்கள் என்று பெயர். இப்படிப்பட்ட பிக்கப்களில் மூழ்கியிருந்த இவரை அழைத்தார் ஆஸ்போர்ன்.

“மல்ஹோலாண்ட். இப்போது படத்தின் முக்கியக் காட்சிகளில் ஒன்றைப் படமாக்கப்போகிறோம். இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. இதனைப் படமாக்குவதற்கு முன்னர்,உங்களிடமிருந்து ஒரு விஷயத்தைக் கேட்கப்போகிறேன். இக்காட்சியை உங்களால் படமாக்க முடியும் என்று தோன்றினால் மட்டும், இதில் இறங்குங்கள். படமாக்க முடியாமல், என்னிடம் முடியும் என்று சொல்லிவிட்டு, பின்னால் சொதப்பினீர்கள் என்றால், அதுதான் இந்த படப்பிடிப்பில் நீங்கள் வேலை செய்யப்போகும் கடைசி நாளாக இருக்கும். என்ன சொல்கிறீர்கள்?”

அதிர்ச்சியடைந்தார் மல்ஹோலாண்ட். படம் இன்னும் மூன்றரை மாதங்களில் வெளியாகவேண்டும். போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பாதி முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில், பிரதான காட்சிகளில் ஒன்றைப் படமாக்கவேண்டும் என்று சொல்கிறாரே ஆஸ்போர்ன்? இதில், கறாறாக, முடியும் என்றால் மட்டும் செய்யுங்கள் என்று வேறு எச்சரிக்கிறாரே?

மனதை திடப்படுத்திக்கொண்டு சம்மதித்தார் மல்ஹோலாண்ட். அவரது தன்மானப் பிரச்னையாக அந்தப் படப்பிடிப்பு மாறியது.

ஒன்பது மீட்டர் உயரமுள்ள மினியேச்சர் அணை,அதிவேகத்தில் கட்டப்பட்டது. அந்த அணையின் பின்புறம், இரண்டு மிகப்பெரிய கண்டெய்னர்களில், பல டன்கள் தண்ணீர் நிரப்பப்பட்டது.  இரண்டு கண்டெய்னர்களின் முன்புறம், வெடிகள் இணைக்கப்பட்டன. எல்லாம் தயார். ஜாக்ஸனுக்கும் ஆஸ்போர்னுக்கும், இன்னபிற முக்கியஸ்தர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, மொத்தம் நூறு பேர் குழுமியிருக்க, ஐஸங்கார்டின் மூழ்கடிப்பு துவங்கியது.

டமால் !

வெடிச்சத்தத்தைத் தொடர்ந்து, பல்லாயிரம் டன்கள் தண்ணீர், அணையில் இருந்து பொங்கிவரத் துவங்கியது. பீறி வந்த தண்ணீர், மிகச்சரியாக மலையின் அடிஆரத்தில் இருக்கும் சமதளத்தில் பாய்ந்து, அதற்கென்று வடிவமைக்கப்பட்ட கொள்கலன்களில் சென்று சேர்ந்தது. ஆனால், ஜாக்ஸனின் முகத்தில் சிரிப்பு இல்லை. மாறாக, கோபத்தின் ரேகைகளே ஓடின. காரணம்?

அணை உடையவே இல்லை! அணையில் ஓட்டைகள் ஏற்பட்டு, அதன் வழியாகவே தண்ணீர் பாய்ந்தது. கஷ்டப்பட்டு முயன்ற அத்தனை முயற்சியும் தோல்வி.
படுவேகத்தில் அடுத்த முயற்சி ஆரம்பித்தது. இம்முறை, அணையின் மரக்கதவுகளை, பின்புறம் நன்றாக செதுக்கி, கிட்டத்தட்ட அத்தனை மரத்தையும் அகற்றிவிட்டனர். வெளியே இருந்து பார்க்கும்போது உறுதியாகத் தெரிந்த அணையின் கதவுகள், பின்னால் இருந்து பார்த்தால் லேசான மரத்தகடுகளாக இருந்தன. இரண்டாம் முயற்சி துவங்கியது. பெருவெற்றியும் அடைந்தது. கதவுகள் பிய்த்துக்கொண்டு சிதறின.

உடனேயே இந்தப் படமாக்கப்பட்ட காட்சிகள் விஷுவல் எஃபக்ட்ஸ் டீமிடம் ஒப்படைக்கப்பட்டன. ஏற்கெனவே இருந்த மாதிரி வீடியோவை வைத்துக்கொண்டு, அதேபோல் கச்சிதமாக ஸிஜி செய்யப்பட்டது. எடிட்டிங்கில் ஜாக்ஸனே இருந்து, இக்காட்சியை செதுக்கினார்.

நாம் பிரமிப்போடு பார்த்த ஐஸங்கார்டின் மூழ்கடிப்பு, இவ்வாறாக உருவானது.

Extended edition Blu Ray கலெக்‌ஷனில், அற்புதமான அந்த பழைய மினியேச்சர் வீடியோவும், ஸ்ப்ளிட் ஸ்க்ரீனில் ஸிஜி சேர்க்கப்பட்ட வெர்ஷனும் உள்ளன. அதைப் பார்த்தாலேயே ஜாக்ஸனைப் பற்றிய வியப்பு மறைய வெகு நேரம் ஆகும் !

பி.கு – ட்ரீபேர்ட் ஸிஜி காட்சிகள், ஒரு ஷாட் முழுமையாக வெளிவருவதற்கு (rendering), 48 மணி நேரங்கள் பிடித்தது! அதாவது, ஒரே ஒரு ஸிஜி ஷாட், கணினியில் முழுமையாக்கப்பட்டு, வெளிவர ஆன நேரம் அது !

தொடரும் . . .

  Comments

8 Comments

  1. எனக்கு ரொம்ப பிடித்த காட்சிகளில் – நீங்கள்லாம் என்ன பெரிய இவிங்களான்னு – ஒரு கெத்தோட மரங்கள் நடந்து வர காட்சி. ஹீரோக்கள் திருப்பி அடிக்கிற காட்சிகளின் வசீகரதுக்கு சற்றும் குறைவில்லாதது.

    மரங்களின்(மரமல்லாதவற்றின்) பெயர்கள் – Entன்னு இன்னைக்கு தான் தெரிஞ்சது….

    Reply
  2. தல ஒரு ஸ்பெஷல் எஃபெகட் புக்கில் படிச்சது.

    தண்ணீருக்கு உள்ள ஸ்பெஷல் குணம் : அதை எத்தனை தத்ரூபமா காட்டினாலும்.. ‘ஃபேக்’ன்னு தெரிஞ்சிடுமாம் (மாலிக்யூல்-ன்னு படிச்ச நியாபகம்).

    அதனால்தான் தண்ணீர் ‘அழிவுகளை’ காட்டும் படங்கள்ல அது மினியேச்சர்ன்னு தெரிஞ்சிடும். LOTR-ல் சிஜி/ஸ்பெஷல் எஃபெகட் பல்லை காட்டும் காட்சிகளில் இதுவும் ஒன்னுங்கறது என் கருத்து. குறிப்பா டேம் இடிவதும்… மரங்கள் ஓடுவதும்! கவனிச்சா.. எல்லாம்.. ‘2டி’யில் ஓடும். அவரசமா சிஜி பண்ணினது நல்லாவே தெரியும்.

    நான் மேலே சொன்னது சரியான்னு.. நம்ம மோகன் தான் சொல்லனும்.

    Reply
  3. nalla thakavalkal!
    melum aankila padaththai patriya muzhmaiyaana
    vilakkam!
    nantri!

    Reply
  4. சார். படம் பார்த்து இத்தன நாளாக ஆகியும் இப்பதான் அந்த மரங்களே என்ட்கள் என்று தெரிது..அதுவும் உங்க புண்ணியத்துல.மிக்க நன்றி,படத்தை பற்றிய இவ்வளவு தகவல்கள் ஆச்சரியப்படவைக்கின்றன..தொடருங்கள்..

    Reply
  5. வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் தொடர் மெனுவில் எங்க சார் இருக்கு… தேடி கண்டு பிடிக்க முடியல.

    Reply
  6. @ கொழந்த – ஆமாம். எனக்கும், ஒரு கெத்தோட அந்த என்ட்கள் நடந்து வர்றது ரொம்பப் புடிக்கும்.

    @ ஆள்தோட்ட பூபதி – நீங்க சொல்றது ரொம்பவே சரி. பல படங்கள்ல, தண்ணீர் சம்மந்தப்பட்ட காட்சிகளைப் பார்த்ததுமே அது தெரிஞ்சிரும். இந்தக் காட்சியும் கூடத்தான். குறிப்பா, தண்ணீர் அனில இருந்து பொங்கிவந்து ஐசங்கார்டை அழிக்கும்போது, மினியேச்சர் ரொம்ப நல்லாவே தெரிஞ்சிரும். மோகன் வனாந்திரங்களில் கோணங்கி புத்தகம் படித்துக்கொண்டு அலைவதாகக் கேள்வி. இங்க வரமாட்டாரு 🙂

    @ Seeni – உங்கள் கருத்துக்கு நன்றி

    @ குமரன் – ஜாக்சன் புண்ணியத்துல எனக்கும் நிறைய விஷயம் தெரிஞ்சிக்க முடிஞ்சுது. நன்றி

    @ Uma – மெனுல வேற்றுக்கிரக வாசிகள் தொடரை சேர்க்கல. விரைவில் சேர்க்கப்படும். நன்றி

    Reply
  7. hai sir
    நல்லாஇருக்கு
    எனக்கு கதை
    முழுவதும் தமிழ்ல வேண்டும்

    Reply

Join the conversation