LOTR: The Series – 23 – Osgiliath
ஃப்ரோடோவும் ஸாமும், கோல்லுமுடன் டூம் மலைக்குப் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் நேரம். அரகார்ன், ரோஹான் நாட்டில் காண்டோரின் அழைப்புக்காக தியோடன் மன்னருடன் காத்திருக்கும் காலம். தோல்வியடைந்த ஸாருமானை, ட்ரீபேர்டுடன் சேர்ந்து ஐஸங்கார்டில் காவல்காத்துக்கொண்டிருக்கும் மெர்ரியும் பிப்பினும, ஷையரில் கிடைக்கக்கூடிய உயர்தர புகையிலையை அங்கே கொண்டாட்டத்துடன் புகைத்துக்கொண்டிருக்கும் நேரம். ஸாரோனின் வெறிகொண்ட படைகள், காண்டோரைக் குத்திக்கிழிக்க நெருங்கி…மிக நெருங்கி வந்துகொண்டிருக்கும் நேரம். எப்போது வேண்டுமானாலும் போர் நிகழலாம் என்ற சூழ்நிலை.
இத்தகைய ஒரு அட்டகாசமான களனுடன் துவங்குகிறது ‘Return of the King’.
(இந்த இடத்தில், படம் பார்க்கும்போது, எனக்கு இதோ இந்தப் பகுதி நினைவு வந்தது. என் சிற்றறிவுக்கு எட்டி, தமிழில் நான் படித்த போர் (bore அல்ல) வர்ணனைகளில் இதுவே தலைசிறந்தது. இன்னும் ஒரு வரி கூட மறக்காமல் நினைவிருக்கும் இது, என்ன என்பது எளிதில் புரிந்துவிடும்.
புலிகேசியின் படைகள் காஞ்சியை நெருங்கிக்கொண்டிருக்கின்றன. காஞ்சியின் மதிலில் இருந்து பார்த்தால், தொலைதூரத்தில் நிலவொளியில் பளிச்சிடும் அப்படையின் கொடிகள், ஆயுதங்கள் ஆகியவை, சமுத்திரத்தைப் போன்று ஓலமிட்டுக்கொண்டு, எல்லை என்பதே இல்லாமல் வந்துகொண்டிருக்கும் அந்தப் பெரும் படையின் போர்வெறியைப் பறைசாற்றுகின்றன. கோட்டை வாசலை நோக்கி ஒரு ரதம் தலைதெறிக்கும் வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது. ரதத்தை ஓட்டிவருபவன் கண்ணபிரான். கோட்டைக் கதவோ மூடியிருக்கிறது. அதனைத் திறக்க என்ன வழி என்பது அவனுக்குத் தெரியவில்லை. அப்போது, ஒரு புத்த பிட்சு ரகசிய வழியில் இருந்து வெளிவருவதைக் காணும் அவன், அந்த பிட்சுவைத் தாக்கி, படகில் தன்னுடன் போட்டுக்கொண்டு, அந்த நுழைவாயிலில் புகப்போகும் தருணம்: அக்கரையில் நிற்கும் தனது ரதம் என்ன ஆகுமோ என்ற கடைசி நிமிடப் பரபரப்பில் எட்டிப்பார்க்க நினைக்கும் அவனை, ஒரு இரும்புக்கரம் உள்ளே தள்ளுகிறது……)
ஸாரோனின் படைகள் எங்கு வரப்போகின்றன? எதைத் தாக்கப்போகின்றன? அவர்களின் திட்டம் என்ன? ஒருவருக்கும் தெரியாத நிலை. இந்த இடத்தில்தான், முதுகிழவர் காண்டால்ஃப் உதவுகிறார். ஸாருமானிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பலாண்டிர் என்ற கண்ணாடி உருண்டையில், பிப்பின் ஸாரோனை ஏற்கெனவே பார்த்துவிட்டிருக்கிறான். பிப்பினை ஃப்ரோடோ என்று நினைத்த ஸாரோன், தனது படைகள் அடுத்து தாக்கப்போகும் இடத்தை ஒரு சாம்பிள் காட்டிவிட, இதைப்பற்றி பிப்பின் சொல்கையில், அந்த இடம் ‘மினாஸ் திரித்’ (Minas Tirith) என்று காண்டால்ஃபுக்குத் தெரிகிறது.
மினாஸ் திரித் என்பது, காண்டோரின் தலைநகரம் என்பது, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆக, ஸாரோனின் படைகள், காண்டோரை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன என்பது ஐயம் திரிபற தெரிந்துவிடுகிறது. அடுத்த நொடி, தனது குதிரை ஷாடோஃபேக்ஸ் மீது துள்ளி ஏறும் காண்டால்ஃப், தன்னுடன் பிப்பினையும் அழைத்துக்கொண்டு, காண்டோர் நோக்கிப் பயணமாகிறார். பயணத்தின் நோக்கம்: காண்டோரை ஆண்டுகொண்டிருக்கும் அமைச்சர் டெனதாரை, ரோஹானைத் தனது உதவிக்கு அழைக்கும்படி வற்புறுத்தவே.
இங்கே தான் ஆஸ்கீலியத் (Osgiliath) என்ற ஒரு இடத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது.
ஆண்டூய்ன் (Anduin) என்பது, மிடில் எர்த்தின் குறுக்காக, கிட்டத்தட்ட 2233 கிலோமீட்டர்கள் ஓடும் ஒரு மிகப்பெரிய ஆறு. மிடில் எர்த்தையே இரண்டு பகுதிகளாகப் பிரிக்கக்கூடிய இந்த ஆற்றின் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஆற்றின் இரண்டு கரைகளிலும் அமைந்திருக்கும் நகரமே ஆஸ்கீலியத். ஒரு காலத்தில் மிடில் எர்த்திலேயே அதிக செழிப்பான நகரமாக இருந்துவிட்டு, நம் கதை நடக்கும்போது காண்டோர் நகரத்திற்கு முன்னே, ஒரு காவல் கோட்டம் போல செயல்பட்டுக்கொண்டிருக்கும் இடம் இது.
இந்த நகரத்தை உருவாக்கியவர்கள், இஸில்டோரும், அவனது இளைய சகோதரன் அனாரியனும். நகரம் உருவாக்கப்பட்டது, மிடில் எர்த்தின் இரண்டாவது யுகத்தில். இந்த நகரத்தைக் காப்பாற்றும் அரணாக இரண்டு கோட்டைகள் கட்டப்பட்டன. அவற்றின் பெயர்: மினாஸ் இத்தில் மற்றும் மினாஸ் அனோர். காண்டோரின் தலைநகராக விளங்கிய ஆஸ்கீலியத், மிடில் எர்த்தின் பிரதான நகரமாகவும் விளங்கியது.
இஸில்டோரின் வசம், ஆண்டூய்ன் ஆற்றின் கிழக்குப்புறம் அமைந்த பகுதி இருந்தது. மேற்குப்பகுதியை ஆண்டது அனாரியன். ஆண்டூய்ன் ஆற்றின் குறுக்காக ஒரு பிரம்மாண்டமான பாலம் கட்டப்பட்டது. அந்தப் பாலத்தின்மேல் கட்டப்பட்ட மாளிகையில்தான் இஸில்டோரும் அனாரியனும் அமர்ந்துகொண்டு காண்டோரை ஆண்டார்கள்.
மினாஸ் இத்தில் இருந்தது இஸில்டோரின் வசமிருந்த கிழக்குப்பகுதியில். மினாஸ் அனோர் இருந்தது, அனாரியனின் வசமிருந்த மேற்குப்பகுதியில்.
இரண்டாவது யுகத்தின் முடிவில், ஸாரோன் மிடில் எர்த்தைத் தாக்கியபோது (Fellowship of the Ring ஆரம்ப நிமிடங்கள்), மினாஸ் இத்தில் கோட்டை அவனது வசம் சென்றுவிட்டது. ஆனால் உடனேயே சுதாரித்த அனாரியன் அடித்த அடியில் ஸாரோன் அங்கிருந்து வெளியேறிவிடுகிறான். இதன்பின், வெகு வருடங்கள் கழித்து, ஒரு உள்நாட்டுப் போர் மூண்டதால், இந்நகரம் தனது பொலிவை இழந்தது. அதன்பின், மூன்றாம் யுகத்தின் வருடம் 2000த்தில், நாஸ்கூல் என்ற ஸாரோனின் ஒன்பது தளபதிகள், மினாஸ் இத்தில் கோட்டையைக் கைப்பற்றினர். Return of the King படத்தில், துவக்கத்தில், ஃப்ரோடோ, கோல்லும் மற்றும் ஸாம் கூட்டணி, மலையுச்சியிலிருந்து ஒரு பச்சை நிறக் கோட்டையைக் கவனிப்பார்களே, நினைவிருக்கிறதா? அதிலிருந்து பெரும் படையொன்று வெளியேறும். அது, மினாஸ் இத்தில் கோட்டைதான். அந்தக் கோட்டை கைப்பற்றப்பட்டபின், மினாஸ் மோர்கல் என்று அழைக்கப்பட்டது. நாஸ்கூல்களின் தலைவனான பிரதான தளபதியின் இடமாக இது அமைந்தது.
ஆஸ்கீலியத்தின் இருபுறமும் உள்ள மினாஸ் திரித் (மினாஸ் அனோர் கோட்டையே இப்படிப் பெயர் மாற்றப்பட்டு, காண்டோரின் தலைநகரமாக மாறியது) மற்றும் மினாஸ் மோர்கல் கோட்டைகள், ஒருவரையொருவர் எதிர்த்து அவ்வப்போது தாக்கி வந்ததால், ஆஸ்கீலியத் பாழடைந்து கிடந்தது.
நம் கதை நடந்த சமயத்தில், காண்டோரின் ஒரு படை, எதிர்வரும் படைகளைத் தாக்கி, காண்டோரை எச்சரிக்கும்பொருட்டு ஆஸ்கீலியத்தில் அமர்த்தப்பட்டிருந்தது. அந்தப் படையின் தலைவனாக, காண்டோர் அமைச்சர் டெனதாரின் மகன் ஃபராமிர் (போரோமிரின் இளைய சகோதரன்) பொறுப்பு வகித்து வந்தான். போரோமிரின் மரணத்தால் தன்வசம் இழந்திரு்ந்த டெனதார், ஸாரோனின் படைகளால் தாக்கப்பட்டு, குலையுயிராகத் திரும்பிவந்திருந்த ஃபராமிரின் படைகளை, மறுபடி ஆஸ்கீலியத் சென்று போரிடுமாறு ஆணையிட, அந்தத் தற்கொலை முயற்சியை ஃபராமிர் நிறைவேற்றுவதையும் படத்தில் பார்க்கிறோம்.
ஆக, கதைப்படி ஆஸ்கீலியத் என்பது, மிடில் எர்த்தின் வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஒரு நகரம். இன்னொரு பிரதான காரணம் என்னவென்றால், இரண்டாயிரம் கிலோமீட்டர் நீளமான ஆண்டூய்ன் நதியை ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து மற்றொரு இடம் வரை (from Cair Andros to Pelargir), பெரும்படைகள் மேலும் கீழும் சில நூறு கிலோமீட்டர்களுக்குக் கடக்க முடிந்த ஒரே இடமாகவும் ஆஸ்கீலியத் இருந்தது. ஆக, மிடில் எர்த்தின் ஒருபுறமிருந்து மறுபுறம் செல்ல இருந்த ஒரே வழி, ஆஸ்கீலியத்தைக் கைப்பற்றுவதே.
ஆண்டூய்ன், ஆஸ்கீலியத், மினாஸ் திரித், மினாஸ் மோர்கல், காண்டோர், மார்டோர் ஆகிய இடங்களை சுலபமாக நினைவில் வைப்பது எப்படி?
இப்படிக் கற்பனை செய்துகொள்ளுங்கள். நடுவில் ஒரு பெரிய கோடு(ஆண்டூய்ன்). கோட்டின் இடதுபுறம் (மேற்கு) கடைசியில் இருப்பதுதான் காண்டோர். கோட்டின் வலதுபுறம் (கிழக்கு) கடைசியில் இருப்பது, மார்டோர். காண்டோருக்கு முன்னால், மினாஸ் திரித். மார்டோருக்கு முன்னால் மினாஸ் மோர்கல்.
போரோமிர் மற்றும் ஃபராமிர் சகோதரர்கள், ஆஸ்கீலியத் நகரை இரண்டு கரைகளுக்கும் இணைத்த பாலங்களையெல்லாம் வரிசையாக உடைத்துக்கொண்டே வந்தனர். இதனால், எதிரிகள் ஆஸ்கீலியத் நகரினுள் பிரவேசிப்பது ஓரளவு கடினமாக இருந்தது. இதனால்தான் படத்தில், இரவில், ஸாரோனின் படைகள் ரகசியமாகப் படகுகளில் இந்த நகரத்துக்குள் பிரவேசிப்பதைக் காண்கிறோம்.
ஆண்டூய்ன் ஆற்றுக்குக் கிழக்குப் பக்கம் இருந்த ஆஸ்கீலியத்தின் பகுதி, எப்போதோ ஸாரோனின் படைகளால் கைப்பற்றப்பட்டிருந்தது. அவர்கள், பல மாதங்களாக, படகுகள் கட்டும் பணியில் ரகசியமாக ஈடுபட்டிருந்தனர். இதனால், மூன்றாம் பாக ஆரம்பத்தில் பச்சை வண்ண மினாஸ் மோர்கல் கோட்டையில் இருந்து வெளிப்பட்ட படையினர், இந்தக் கிழக்குப் பக்கக் கரையில் இருந்த படகுகளின் மூலம், மேற்குக் கரையில் இருந்த காண்டோரின் பகுதியான இடத்துக்கு ரகசியமாக இரவில் வந்தனர். அதன்பின் நாம் பார்ப்பதுதான் மோதிரத்துக்கான போரின் துவக்கம்.
போரைப் பற்றி விபரமாகப் பார்ப்பதற்கு முன்னர் நாம் பார்க்கவேண்டிய இன்னொரு விஷயம்……. அடுத்த கட்டுரையில்…
பி.கு – விரைவில்… வெகு விரைவில், ஒரு அட்டகாசமான சங்கதி நண்பர்களைத் தேடி வரப்போகிறது. அதைப்பற்றி அவ்வப்போது இனி ட்ரெய்லர் வரும். இதனைப் பற்றிய க்ளூ, அடுத்த கட்டுரையில். தயராக இருங்கள் !
தொடரும் . . . .
நண்பா தங்களூக்கு உலக சினிமாவில் விருப்பம் அதிகம் என் நினைக்கிறேன். எனது உற்ற தோழன் ஆங்கலத்தில் உலக சினிமா குறித்து அற்புதமாக தொடர்ந்து எழுதி வருகிறார். நீங்களும் சென்று வாசிக்கலாம், movieretrospect.blogspot.com எனும் முகவரியில். சக உலக சினிமா ஆர்வலர்களுகும் இதனைப் பகிருங்கள்.
என்ன கமெண்ட் போடுறதுன்னு தெரியல.
ஆனா நீங்க சொன்ன அந்த வர்ணனை சிறுவயதில் படித்தது போல ஒரு ஞாபகம். சிவகாமியின் சபதமா? கண்ணப்பிரான்ங்கற பேர் அதுலயும் வர்றதா ஞாபகம். க்ளியர் தி டௌட்.
அடுத்த போஸ்ட்டுக்கு வெயிட்டிங். க்ளுவுக்காக.
ஹய்யோ … மறந்தே போச்சு.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பாஸ்.
புக் படிச்சி, படத்தை பல தடவை பார்த்திருந்தால் மட்டுமே நீங்க சொல்லுறதையெல்லாம் ரீக்கால் பண்ண முடியும்.
புதுசா.. சும்மா படிச்சிப் பார்க்கலாமேன்னு படிக்கிறவங்க…. பாயை பிறாண்ட வேண்டியதுதான்.
ரிகார்ட்லஸ்… சல்யூட் யு!!!
ஆக்சுவலி.. ரெண்டையும் பண்ணின நானே.. பாயை பிறாண்டுறேன். இதையெல்லாம் படிச்ச மாதிரி கூட தெரியலை. 🙂 🙂
எங்கிருந்துதான் இத்தனை விசயங்களை பிடிக்கறீங்களோ?