LOTR : The Series– 4 – Miramax, ‘Turnaround’ & New Line

by Karundhel Rajesh May 31, 2011   war of the ring

ஹார்வி வெய்ன்ஸ்டீன், ஒரு வருட காலம் கஷ்டப்பட்டு முயன்று, கடைசியில் ‘The Hobbit’ நாவலைப் படமாக்குதல் முடியாத காரியம் என்று தெரிந்துகொண்டு, பீட்டர் ஜாக்ஸனிடம் பேசியபோது, ஜாக்ஸன் செய்த காரியம், வெய்ன்ஸ்டீனை கடுப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. அது என்ன என்று அறிவதற்கு முன்னர், ஹாபிட்ஸின் உரிமைகளைப் பெறுவதற்கு வெய்ன்ஸ்டீன் முயன்ற காலத்தில், ஜாக்சனின் வாழ்வில் என்ன நடந்தது என்று தெரிந்துகொள்வது அவசியம். அந்தக் காலகட்டத்தில், Frighteners படத்தை முடித்திருந்த ஜாக்ஸனுக்கு, ஒரு பிரபல இயக்குநரின் நட்பு கிடைத்திருந்தது. அந்த இயக்குனர், ஜாக்ஸனை ஹாலிவுட்டில் பெரிய அளவில் ப்ரமோட் செய்ய ஆரம்பித்திருந்தார். அவர் தான் ‘Robert Zemeckis’. ஒரு காலத்தில், ஸெமகிஸ் ஹாலிவுட்டில் நுழைந்திருந்த நேரத்தில், அவரை ஸ்பீல்பெர்க் ப்ரமோட் செய்ததால்தான் ஸெமகிஸால் பிரபலமடைய முடிந்தது. அதுபோலவே இப்போது ஸெமகிஸ் ஜாக்ஸனை ஊக்குவிக்கிறார் என்பது ஹாலிவுட்டில் பரவலாகப் பேசப்பட்டது. Tales from the Crypt படத்துக்காக, ஒரு சிறிய கதையை ஜாக்ஸன் அனுப்பியிருந்தார். அந்தக் கதையால் கவரப்பட்ட ஸெமகிஸ், அதனைத் தனியாகவே ஒரு படமாக எடுக்கத் தீர்மானித்தார். அதுதான் The Frighteners’. இப்படித்தான் இருவரும் நண்பர்களாக மாறினர். Frighteners எடுத்து முடிக்கப்பட்டிருந்த நேரம். ஹாலோவீன் அன்றுதான் படம் வெளியாவதாக இருந்தது. ஆனால், திட்டமிட்டபடி யுனிவர்சலின் ஒரு படம் வெளிவராமல் தாமதமானதால், Frighteners படத்தின் கிளிப்பிங்குகளை, ஸெமகிஸ், யுனிவர்சலின் அதிகாரிகளுக்குப் போட்டுக்காட்டுமாறு சொல்ல, அப்படியே செய்தார் ஜாக்ஸன். இதனால் யுனிவர்சல் நிர்வாக அதிகாரிகளின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது அப்படம். ஆகவே, வருட மத்தியிலேயே படம் வெளியிடப்பட்டது (ஆனால், வெளியான அன்று, சம்மர் ஒலிம்பிக்ஸும் தொடங்கியதுதான் பரிதாபம். இதனால் பட வசூல் பாதிக்கப்பட்டது).

இருந்தாலும், ஜாக்ஸனின் திறமையால் கவரப்பட்டிருந்த ஸெமகிஸ், தன்னால் முடிந்தவரை ஜாக்ஸனின் புகழைப் பரப்ப, இதனால், யுனிவர்சல் நிறுவனம், King Kong ரீமேக்கை ஜாக்ஸனைச் செய்துதரச்சொல்லிக் கேட்டது. அதே நேரத்தில், Twentieth Century Fox நிறுவனம், Planet of the Apes என்ற படத்தை ஜாக்ஸனை இயக்கச் சொல்லி ஒரு வாய்ப்பைக் கொண்டுவந்தது. கிட்டத்தட்ட இதே நேரத்தில்தான், ஹார்வி வெய்ன்ஸ்டீன், ஸான்ட்ஸுடனும் MGM / UA வுடனும் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். ஆகவே, ஒரே நேரத்தில் மூன்று potential பட வாய்ப்புகள் ஜாக்ஸனின் கதவைத் தட்டின. இது, ஜாக்ஸன் எதிர்பார்க்காத ஒரு ஜாக்பாட். எனவே, தனது ஏஜன்ட் காமின்ஸைத் தொடர்புகொண்டு, இந்த மூன்று வாய்ப்புகளில் எந்த நிறுவனம் உடனடியாகத் தயாராக உள்ளது என்பதை விசாரிக்கச்சொன்னார் ஜாக்ஸன். Planet of the Apes படத்தை ஜேம்ஸ் கேமரூன் தயாரிப்பதாகவும், கதாநாயகனாக, அதிரடி நாயகன் அர்நால்ட் ஷ்வார்ட்ஸெனிக்கர் நடிப்பதாகவும் இருந்தது. இந்த இருவரின் மத்தியில் தன்னால் பிரகாசிக்க இயலாது என்பது ஜாக்ஸனுக்குப் புரிந்ததால், அந்த வாய்ப்பை நிராகரித்தார் (டெயில்பீஸ்: இதே படம், ஐந்து ஆண்டுகள் கழித்து, 2001ல், Tim Burton இயக்கி வெளிவந்தது தெரிந்திருக்கும். அதில் நடித்தவர், மேட் டேமன்). வெய்ன்ஸ்டீன் இன்னமும் ஹாபிட்ஸுக்கு முயன்று கொண்டிருந்ததால், எஞ்சியிருந்த கிங் காங் படத்தை ஜாக்ஸன் இயக்குவதாக முடிவாகியது.

கிங் காங் படத்தை ஜாக்ஸன் இயக்கப்போகிறார் என்ற தகவல், ஹாபிட்ஸ் படத்துக்காக முட்டி மோதிக்கொண்டிருந்த ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்குத் தெரிய வந்தது. இந்தக் காரணத்தினால்தான் கடுப்பின் எல்லைக்கே சென்றார் அவர். ஏனெனில், கிங் காங் படம் முடிய ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிடும். அது வரை, ஜாக்ஸனுக்காகக் காத்துக்கொண்டு இருக்கவேண்டும். மட்டுமல்லாது, அதுவரை, தனது ஒப்பந்தத்தை (நினைவிருக்கிறதா? ஜாக்ஸன் அடுத்து எடுக்கப்போகும் படத்தின் விநியோக உரிமை, Miramax நிறுவனத்தினுடையது) நீட்டிக்க வேண்டிய விஷயத்தை எண்ணி, மேலும் கோபம் கொண்டார் வெய்ன்ஸ்டீன்.

அவரைச் சமாதானப்படுத்திய ஜாக்ஸன், வெய்ன்ஸ்டீனுக்கு ஒரு புதிய வழியைக் காட்டினார். அதாவது, யுனிவர்சல், கிங் காங்கின் அமெரிக்க விநியோகத்தையும், Miramax அதன் வெளிநாட்டு விநியோகத்தையும் செய்யும்; அதேபோல், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ் படங்களின் உள்நாட்டு விநியோகத்தை Miramax நிறுவனமும், வெளிநாட்டு விநியோகத்தை யுனிவர்சலும் செய்யும். இப்படி, வெய்ன்ஸ்டீனின் கோபம் தணிக்கப்பட்டது. இருப்பினும், ரிங்ஸ் படங்கள் இரண்டு பாகமாக இருந்ததனால், தனது இரண்டு படங்களுக்குப் பதில், யுனிவர்சலின் ஒரு படத்தின் விநியோக உரிமை தனக்குக் கிடைத்திருப்பதனால், தன்னால் திருப்தி அடைய இயலாது என்று வெய்ன்ஸ்டீன் சொன்னதால், யுனிவர்சல் நிறுவனம், வெய்ன்ஸ்டீனுக்கு, அவர்கள் அப்போது எடுத்துக்கொண்டிருந்த Shakespere in Love படத்தின் உரிமையையும் சேர்த்துக் கொடுத்தனர். இதனால் வெய்ன்ஸ்டீன் திருப்தியடைந்தார்.

ஆக, கிங் காங் படத்தின் திரைக்கதை அமைப்பதில் தனது முழு நேரத்தையும் செலவிட்டார் ஜாக்ஸன். அப்படியே, WETA வல்லுனர்களும், மினியேச்சர், ஸிஜி ஆகிய விஷயங்களில் ஹோம்வொர்க் செய்ய ஆரம்பித்தனர். சில மாதங்கள் கழிந்தன.

ஜனவரி 1997. Godzilla மற்றும் Mighty Joe Young படங்கள், போட்டி ஸ்டுடியோக்களால் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்ததால், கிங் காங் படத்தைக் கைவிடுவதாக யுனிவர்சல் முடிவு செய்தது. இந்த முடிவு, கிங் காங் படத்துக்காகக் கடின உழைப்பில் ஈடுபட்டிருந்த ஜாக்ஸனுக்குத் தெரிவிக்கப்பட்டது. WETA வின் உழைப்பும், ஜாக்ஸனின் திரைக்கதையும் வீணாகிப் போயின. மனமுடைந்துபோனார் ஜாக்ஸன்.

ஆனால், விதி அவரைப் பார்த்துப் புன்னகைத்தது. கிங் காங் படம் கைவிடப்பட்ட அதே ஜனவரி மாதத்தின் பிற்பகுதி. தேதி 22 . ஹார்வி வெய்ன்ஸ்டீன், தனது ஒரு வருட யுத்தத்தை வெற்றிகரமாக முடித்தார். ஆம். அவருக்கு, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தின் உரிமை கிடைத்துவிட்டது. அவர் நினைத்திருந்தால், ஒரு வகையில் தனக்குத் துரோகம் செய்ய எண்ணிய (அப்படி வெய்ன்ஸ்டீன் நினைத்த) ஜாக்ஸனைத் தூக்கி வீசிவிட்டு, வேறொருவரை இயக்குனராகப் போட்டிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல், தனது கோபத்திலும், கண்ணியம் காத்தார். கிங் காங் இல்லாத நிலையில், தனது கனவுத் திரைப்படமான ரிங்ஸில் முழுமனதாக நுழைந்தார் ஜாக்ஸன். WETA, ரிங்ஸ் படத்தின் ரிஸர்ச் மற்றும் டிஸைன்கள், மினியேச்சர் ப்ராப்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஆகிய விஷயங்களில் முழுவீச்சில் இறக்கிவிடப்பட்டது. இதற்குள் தனது மனைவியாகிவிட்டிருந்த தனது பார்ட்னர் வால்ஷுடன், இரண்டு பாகங்களாக அமையப்போகும் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களுக்குத் திரைக்கதையமைக்க அமர்ந்தார் ஜாக்ஸன். இவர்களுடன், வால்ஷின் தோழியான பிலிப்பா போயன்ஸ் (Philippa Boyens). பிலிப்பா இதுவரை திரைக்கதையின் பக்கமே வந்ததில்லை. இருந்தாலும், அவர் ஒரு ரிங்ஸ் வெறியர் என்பதால், இம்முயற்சியில் உதவ முன்வந்தார். வெய்ன்ஸ்டீன் மற்றும் ஜாக்ஸனின் திட்டம், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களின் இரண்டு பாகங்களையும், ஒரே நேரத்தில், மொத்தம் எழுபது மில்லியன் டாலர்கள் செலவில் படமாக்குவதாக இருந்தது.

ஒரு வருடம் கழிந்தது.

1998 . இரண்டு திரைக்கதைகளும் முடிவுறும் நேரம். இரண்டு படங்களின் பட்ஜெட்டும் மொத்தம் 140 மில்லியன் டாலர்கள் எடுக்கும் என்று தெரிந்தது. ஹார்வி வெய்ன்ஸ்டீனின் சகோதரர் பாப் வெய்ன்ஸ்டீன், இதற்குக் கடும் மறுப்பு தெரிவிக்க ஆரம்பித்திருந்தார். மிராமேக்ஸின் (அப்போதைய) தாய் நிறுவனமான டிஸ்னியிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார் ஹார்வி. ஆனால் டிஸ்னி, பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்கும் பொறுப்பு தன்னைச் சார்ந்தது என்றும், மிராமேக்ஸ் போன்ற ஒரு சிறிய நிறுவனம், இதில் பெரும்பணம் முதலீடு செய்வது நடக்காது எனவும் நிர்தாட்சிண்யமின்றி மறுத்துவிட்டதால், வேறு வழியேயின்றி, இரண்டு பாகங்களையும் சேர்த்து ஒரே படமாக எடுக்கும்படி ஜாக்ஸனிடம் கூறவேண்டிய நிர்ப்பந்தம் ஹார்விக்கு வந்தது. அடி மேல் அடி விழுந்தது ஜாக்ஸனுக்கு. இப்படத்தையே கைவிட்டுவிட்டு, இனிமேல் தொலைக்காட்சிப் படங்கள் எடுத்து வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்ற நிலைக்கு ஜாக்ஸன் தள்ளப்பட்டார்.

அப்போதுதான் ஜாக்ஸனின் மேனேஜர் காமின்ஸ், ஜாக்ஸனின் உதவிக்கு வந்தார்.

‘Turnaround’ என்ற ஒரு பதம் ஹாலிவுட்டில் பிரபலம். ஒரு படத்தைத் தங்களால் தயாரிக்க முடியாவிடில், அதனை இன்னொடு ஸ்டுடியோவுக்கு விற்றுவிடுவது. இந்த முறையால் லாபமடைந்திருந்த ஸ்டுடியோக்கள் பல. உதாரணமாக, வார்னர் பிரதர்ஸ் விற்ற ஹோம் அலோன் படத்தையும், ஸ்பீட் மற்றும் There is something around Mary படத்தையும் Twentieth Century Fox ஸ்டுடியோ வாங்கி, பெருமளவில் பணம் சம்பாதித்தது. Miramax, பல்ப் ஃபிக்‌ஷனையும் குட்வில் ஹன்டிங்கையும், முறையே ட்ரைஸ்டார் மற்றும் கேஸில்ராக்கிடமிருந்து வாங்கி லாபம் அடைந்திருந்தது. இந்த முறையை ஏன் இப்போது உபயோகப்படுத்தக்கூடாது என்பதே, ஜாக்ஸனின் மேனேஜர் காமின்ஸ், ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்குக் கொடுத்த யோசனை. ஏற்கெனவே படங்களின் ஒரு வருட pre production வேலைக்காகப் பத்து மில்லியன் செலவழித்திருந்த ஹார்விக்கும் இந்த யோசனை சரியாகப் பட்டது. ஆகவே, லார்ட் ஆப் த ரிங்ஸ் படங்களின் இரண்டு பாகங்களும், Turnaround முறையில் விற்பனைக்குத் தயாராகின. ஆனால், அதற்கு ஹார்வி போட்ட கண்டிஷன்களோ, இதுவரை ஹாலிவுட்டின் Turnaround சரித்திரத்திலேயே இல்லாத அளவு கடினமான கண்டிஷன்கள். அவற்றை பாயிண்ட் பாயிண்டாகப் பார்ப்போம்.

1. படங்களை விற்பதற்கு மூன்றே வாரங்கள்தான் அவகாசம்
2. படத்தை வாங்க ஒப்புக்கொண்ட இருபத்திநான்கு மணிநேரத்தில், அந்தப் படக்கம்பெனி, பனிரண்டு மில்லியன்கள் மிராமேக்ஸுக்குத் தரவேண்டும்
3. மிராமேக்ஸ், படங்களை விற்பதற்கு எந்த உதவியும் செய்யாது; ஜாக்ஸனேதான் படங்களை விற்கவேண்டும்
4. வெய்ன்ஸ்டீன் சகோதரர்களின் பெயர், நிர்வாகத் தயாரிப்பு என்று படங்களில் வரவேண்டும்
5. அகில உலக பாக்ஸ் ஆஃபீஸ் பணத்தில் ஐந்து சதவிகிதம், மிராமேக்ஸுக்கு அளிக்கப்பட வேண்டும்
6. Zaentz, பட வசூலில் கணிசமானதொரு பணத்தைப் பெற்றுக்கொள்வார்

இப்படி, எட்டுவித கட்டளைகள் போட்ட கிட்டுமணியைப் போல் வரிசையாகக் கண்டிஷன்களை அடுக்கினார் ஹார்வி வெய்ன்ஸ்டீன். ஜாக்ஸன் அவற்றை ஒப்புக்கொண்டாகவேண்டிய நிர்ப்பந்தம். இல்லையெனில், அவரது எதிர்காலம், சூன்யம். எனவே, துணிந்து சவாலை ஏற்றுக்கொண்டார் ஜாக்ஸன். அடுத்து அவர் செய்ததுதான் அவரது மூளைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

தடதடவென்று ந்யூஸிலாந்துக்கு ஓடிய ஜாக்ஸன், ஒரு வீடியோ தயார் செய்தார். இதுவரை Pre production வேலைகள் என்னென்ன நடந்திருக்கின்றன; இனிமேல் என்ன செய்ய உத்தேசித்திருக்கிறார்கள் ஆகிய விஷயங்கள் மட்டுமல்லாது, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் ஸ்பெஷலிஸ்டுகளான சில ஓவியர்களை அழைத்து, படத்தின் ராட்சத ஜந்துக்களை வரைந்து, பின்னணியில் நடிகர்கள் சிலரைக் குரல்கொடுக்க வைத்து, சில காட்சிகளை Story boards மூலமாக ரெடி செய்தார். கூடவே, WETA வின் வல்லுநர்கள், MASSIVE அப்ளிகேஷன் பற்றியும், தத்ரூபமான கும்பல் காட்சிகள் அதைவைத்து எப்படி எடுக்க முடியும் என்பதைப் பற்றியும் தெளிவாகப் பேசியிருந்தனர். இப்படியாக, 36 நிமிடம் ஓடும் ஒரு வீடியோ ரெடி செய்யப்பட்டது. அதே நேரத்தில், அமெரிக்காவில், காமின்ஸ், பல்வேறு ஸ்டுடியோக்களையும் அவசரகதியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருந்தார். இருப்பினும், எந்த ஸ்டுடியோவும் அவருக்கு நேரம் ஒதுக்கவேயில்லை.

ஒரு சில நாட்கள் ஓடின. கெடு நெருங்கிக்கொண்டே வந்தது. அப்போதுதான், அமெரிக்காவில் இருந்து காமின்ஸ், ஒரு சந்தோஷத் தகவலைச் சொன்னார்.

‘நம்முடன் பேசுவதற்கு இரண்டு ஸ்டுடியோக்கள் நேரம் ஒதுக்கியுள்ளன. ஒன்று, Polygram. மற்றொன்று, New Line Cinema’.

துளியும் நேரத்தை வீணாக்காமல், ஜாக்ஸன் அமெரிக்கா பறந்தார். பாலிக்ராமுடன் பேசுவதற்கு இருந்த நேரத்தில், பாலிக்ராம் ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த கதை ஜக்ஸனுக்குத் தெரிய வந்தது. எப்படியும் இப்படத்தை ஒப்புக்கொண்டாலும், பல கண்டிஷன்களைச் சந்திக்க வேண்டிவரும் என்பது நன்றாகப் புரிந்ததால், பாலிக்ராமுடனான சந்திப்பு, தோல்வியில் முடிந்தது.

அடுத்து, New line Cinema.

ந்யூ லைன் சினிமாவின் சகோதர நிறுவனமான Fine Line என்ற நிறுவனத்தின் ப்ரெஸிடெண்ட்டான மார்க் ஆர்டெஸ்கி (Mark Ordesky), ஜாக்ஸனின் நல்ல நண்பர். இந்த வரிசையின் இரண்டாவது கட்டுரையில், Nightmare on the Elm Street படத்தின் ஆறாவது பாகத்துக்கு ஜாக்ஸன் ஒரு திரைக்கதை அனுப்பினார் என்று படித்தோமல்லவா? அதற்குக் காரணமாக இருந்த நபர். ஜாக்ஸனின் Bad Taste படத்தின் தீவிர ரசிகர். இவர்தான், ந்யூலைன் சினிமாவை உருவாக்கிய அதன் தலைவர் ராபர்ட் ஷேய் (Robert Shaye) உடன் பேசி, ஜாக்ஸனைச் சந்திப்பதற்காக நேரமும் ஒதுக்க வைத்தார். ராபர்ட், கண்டிப்பான ஒரு நபர் என்று ஹாலிவுட் முழுமைக்கும் தெரியும். மட்டுமல்லாமல், இப்படிப் புதிய வாய்ப்புகளைப் பரிசீலிக்கும்போது, சட்டென்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக, தயங்காது மனதில் பட்டதைச் சொல்லி, எழுந்தும் போய் விடுவார். அப்படிப்பட்ட கறார் பேர்வழி. தனது சகா மார்க்கின் வார்த்தைக்காக மட்டுமே, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தைப் பற்றிப் பேச, நேரம் ஒதுக்கினார் ராபர்ட்.

அந்த நாள் – ஜாக்ஸன், ந்யூலைன் தலைவரான ராபர்ட் ஷேயிடம் பேசிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள் – இன்றும் பலரால் மறக்கமுடியாத நாளாக இருக்கிறது. அதில் பங்கேற்ற பலரும், நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். அவர்களது குறிப்புகளிலிருந்து, அன்று நடந்தது என்ன என்று விரிவாகப் பார்ப்போம்.

சந்திப்பில் பங்கேற்ற நபர்கள்: பீட்டர் ஜாக்ஸன், அவரது மேனேஜர் காமின்ஸ், மனைவியும் சக திரைக்கதை எழுத்தாளருமான வால்ஷ் மற்றும் Miramax நிறுவனத்தின் அதிகாரியான மார்டி காட்ஸ் (Marty Katz) ஆகியோர். சந்திப்பு தொடங்குமுன், ஜாக்ஸனைத் தனியாக அழைத்த ராபர்ட், Heavenly Creatures படம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகக் கூறி, இப்போது லார்ட் ஆஃப் த ரிங்ஸ் வாய்ப்பு தவறினால் கூட, வருங்காலத்தில் எங்களுடன் நீங்கள் கட்டாயம் வேலை செய்யவேண்டும் என்று சொல்லி, ஜாக்ஸனைப் பாராட்டினார். ஆனால் அதே சமயம், Frighteners படம் தனக்கு சற்றும் பிடிக்கவில்லை என்றும் ஜாக்ஸனின் முகத்துக்கு நேராகவே தயக்கமின்றிச் சொல்லியிருக்கிறார் ராபர்ட். அவரது இந்த நேர்மை, ஜாக்ஸனுக்குப் பிடித்திருந்தது. இதன்பின், முறையான மீட்டிங் தொடங்கியது.

ஜாக்ஸன் எழுந்து, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் பற்றிச் சுருக்கமாக ஒரு உரை நிகழ்த்தினார். அதன்பின், இதுவரை தயார் செய்திருந்த இரண்டு திரைக்கதைகளையும் பற்றிப் பேசி, Miramax நிறுவனத்தின் பணப்பற்றாக்குறையையும், மிகக்குறுகிய காலத்தில் இப்படங்களை மற்றொரு ஸ்டுடியோவுக்கு விற்க நேர்ந்த காரணங்களையும் பற்றிப் பேசினார் ஜாக்ஸன். இதன்பின், ஜாக்ஸனின் வீடியோ திரையிடப்பட்டது.

இந்த இடத்தில் ஒரு விஷயம்: ஜாக்ஸனின் நண்பரான மார்க், ஏற்கெனவே ஜாக்ஸன் குழுவை எச்சரித்திருந்தார். இதற்குமுன் பலமுறை, இப்படி வீடியோ திரையிடப்பட்ட சில நிமிடங்களிலேயே அதனை நிறுத்திவிட்டு, ராபர்ட் ‘விருட்’டென வெளியேறியிருக்கிறார் என்றும், அப்படி அவர் இப்போது செய்தால், படவாய்ப்பு பறிபோனதாகவே அர்த்தம் என்றும் இந்த மீட்டிங் நடப்பதற்கு முன்னரே மார்க் தெளிவாகக் கூறியிருந்தார்.

வீடியோ ஆரம்பிக்கிறது. மிகுந்த பதட்டத்தோடு ஜாக்ஸன், ராபர்ட்டையே பார்த்துக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறை ராபர்ட்டின் கை அசையும்போதும், ‘இதோ வீடியோவை நிறுத்தப்போகிறார்’ என்றே ஜாக்ஸன் எண்ணிக்கொண்டிருந்ததாக, அவரே சொல்லியிருக்கிறார். பரபரப்பான விநாடிகள் ஒவ்வொன்றாகக் கடந்தன. வீடியோ முடிந்தது.

விளக்குகள் போடப்பட்டன. அத்தனைபேரின் கவனமும், ராபர்ட் என்ன சொல்லப்போகிறார் என்பதிலேயே இருந்தது. உணர்ச்சிகளற்ற முகத்தோடு, ராபர்ட் வாயைத் திறந்தார்.

”இந்த இரண்டு படங்களும், கண்டிப்பாக நடக்கப்போவதில்லை”.

ஜாக்ஸனின் இதயம் சுக்குநூறாக வெடித்தது. திரையுலகில் ஜாக்ஸனின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று அவர் புரிந்துகொண்டார்.

ஆனால் . . . . . ?

தொடரும்………

  Comments

27 Comments

  1. boyinthahood…..பாஸ்…ஏன் இப்புடி……நீங்களே இப்புடி டெம்ப்ளேட் கமெண்ட்கள போட்டா…

    Reply
  2. // டெயில்பீஸ்: இதே படம், ஐந்து ஆண்டுகள் கழித்து, 2001ல், Tim Burton இயக்கி வெளிவந்தது தெரிந்திருக்கும். அதில் நடித்தவர், மேட் டேமன்//

    அது மார்க் வால்பேர்க் நடிச்சது தான…..

    Reply
  3. டீடெயில்கள் மண்ட காயுது……மேலோட்டமாலாம் வாசிக்க முடியல……பொறுமையாத்தான் வாசிக்கணும்……

    Reply
  4. ஆனால் மூன்று பாகங்களாக வரும் என்று சொன்னாரா….?

    சீக்கிரம் சொல்லுங்கப்பு….

    Reply
  5. மர்ம தேசம் தொடர் போல கொண்டு போறீங்க பாஸ்… கொஞ்சம் சஸ்பென்ஸ் இல்லாம முடிச்சிருக்கலாமே…

    இதெல்லாம் படிக்கும் போது தான் தெரியுது வெளிய வர்றது எல்லாமே தப்பி பிழைச்சி வர படங்கள் தான்னு 🙂

    சீக்கிரம் அடுத்த பாகத்த போடுங்க 🙂

    Reply
  6. இந்த பதிவுகளுக்கு என்ன கமெண்ட் போடுவதுன்னே தெரியல…அல்லாமே புதிய தகவல்கள்…….இது போன்ற பதிவுகளுக்கு என்ன சொல்ல முடியும்…..நா ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்க்கிறேன்….

    Reply
  7. // எட்டுவித கட்டளைகள் போட்ட கிட்டுமணியைப் போல் //

    // சைக்கிள் பெடலை சுற்றாமலே – போன பதிவுல //

    என்னமோ போடா மாதவா….

    Reply
  8. என்ன சொல்ல…என்ன கமெண்ட் போட…
    மூச்சு வாங்குதடி… முத்து பேச்சி…
    என்ன எழுதினாலும் சூரியனுக்கு முன்னால் சீரியல் பல்ப் போட்ட மாதிரிதான்.
    ஒண்னு சொல்றேன் அந்தக்காலத்துல குமுதத்துல கொலையுதிர்காலம் படிச்ச எஃபக்ட்

    Reply
  9. mark wahlberg starred un planet of the apes remake and not matt damon . i see a very many people confusing these actors because they look a little alike , so here is a clue the muscular one is mark wahlberg , the wimpy one is matt damon ( except in bourne series )

    Reply
  10. இப்படி சஸ்பென்ஸ் போட்டு நிப்பாட்டீடேங்கலே தல………… ராபர்ட் என்ன சொன்னார்? தலையே வெடிச்சுடும் போல இருக்கு

    Reply
  11. சஸ்பென்ஸ் நாவல் படிச்ச எபக்ட்……. அவ்வளவு தகவல்கள் ரெண்டு மூணு தடவ படிக்க வேண்டி இருக்கு ? மூச்சு முட்ட வைக்கறீங்க,கலக்கி புட்டீங்க…….கமெண்ட் கூட என்ன போடுறதுன்னு தெரியல……

    Reply
  12. இங்க போயா சஸ்பென்ஸை வைக்குறது..? கருந்தேள் அண்ணே.. சீக்கிரம் மிச்சத்தை கொட்டுண்ணே..!

    Reply
  13. @ விஸ்வா – ஆக்சுவலா இது ரெண்டு பார்ட். ரெண்டையும் சேர்த்தி எழுதலாம்னு தான் இப்புடி எழுதினேன். ஏன்னா, ஒரேயடியா ஒவ்வொரு தடவையும், ஜாக்சன் படமெடுக்குறதுக்கு முன்னால சந்திச்ச தோல்விகளைப் பத்தி நீட்டி முழக்கினா மொக்கையைப் போடும்னுதான் (ஆல்ரெடி மொக்கை போட ஆரம்பிச்சிருச்சா? டவுட்டு )

    @ கொழந்த – அது மார்க் வால்பர்க் தான். எனக்கு ரொம்ப நாளா இந்த confusion இருந்தது. அது போயிருச்சின்னு நெனச்சேன். இன்னும் போவல போல 🙂 . . பதிவு மொக்கை போட ஆரம்பிச்சிருச்சா என்று சொல்லவும். ஆம் என்றால், ஸ்டைலை மாற்றிவிடலாம்.

    @ லக்கி – //
    ஆனால் மூன்று பாகங்களாக வரும் என்று சொன்னாரா….?

    சீக்கிரம் சொல்லுங்கப்பு….// 🙂 அது நாளைக்கித் தெரிஞ்சிரும் 🙂

    @ கனகு – கட்டாயமா சொல்லலாம். பல நல்ல படங்கள் எல்லாமே, கட்டாயம் தப்பிப் பொழைச்ச படங்கள் தான் 🙂 . .

    @ உலக சினிமா ரசிகரே – கொலையுதிர்காலம்? என்னமோ ஒட்ரீங்கன்னு புரியுது 🙂 . . என்னமோ போங்க 🙂

    @ டெனிம் – உண்மைய சொல்லுங்க. இதை இதே மாதிரி எழுதலாமா இல்ல இன்னும் சுருக்கி சீக்கிரம் முடிக்கலாமா? feedback plz 🙂

    @ உண்மைத்தமிழன் – சீக்கிரம் போட்ரலாம். இதுவரை எப்புடி இருக்குன்னு உங்க உண்மையான கருத்தை சொல்லுங்க..

    Reply
  14. @ Billy the kid – 🙂 உங்க தகவலுக்கு நன்றி 🙂 . . குறிப்பா மேட் டேமன் பத்தி நீங்க சொன்னதை ரசிச்சேன் . . 🙂

    Reply
  15. வுண்டர்புல்….பியூட்டிஃபுல்…..மார்வலஸ்…….நானும் வட இந்தியாவிலும் பாத்திருக்கேன்……தென்னிந்தியாவிலும் பாத்திருக்கேன்…இந்த மாதிரி கலர்புல்லான இன்ஃபார்மேட்டிவான பதிவ பாத்ததில்ல…

    // பதிவு மொக்கை போட ஆரம்பிச்சிருச்சா என்று சொல்லவும் //அப்புடி தோனுச்சுனா நாங்களே சைடுவாக்குல ஓட்டிருவோம்ல..

    நெஜமாவே ஜுப்பரா போவுது…..எங்க யாருக்கும்…வேணாம்….எனக்கு இத பத்தி ஒரு அட்சரம் கூட தெரியாததுனால எல்லாம் புதுசா இருக்கா….அதுனால ஒண்ணும் போர் அடிக்கல….

    இந்த பதிவு கொஞ்சம் நீளமாகவே இருந்தது….WETA தயார் பண்ண கேரக்டர்கள்,அனிமேசன் இந்த மாதிரி விஷயங்களின் இமேஜ்களையோ வீடியோக்களையோ…அங்கங்க குடுத்தா..சூட்டோட சூட்டா படிச்ச மாதிரியும் இருக்கும்… டக்குனு மனசுல பதியும்…

    உதாரணமா நீங்க இத பாத்திருப்பீங்க….
    http://www.cgarchitect.com/upclose/article1_CW.asp (உங்க fbல இத போட போறேன்)….
    இத பாத்தா நீங்க சொல்ல வந்தது சுளுவா புரியுது…

    Reply
  16. நா சொல்ல வந்தது…நீங்க தனியா லின்க்கா குடுக்காம அங்கனயே போட்டா சூப்பரா இருக்கும்ன்னு தோணுது…….நா எழுதுனத படிச்சா வேற அர்த்தம் வருது……

    Reply
  17. ரொம்ப பெருசா இருக்கு .. ரெண்டு பார்ட்டா எழுதி இருக்கலாம் .. படிச்சு முடிக்கவே சும்மா கிர்ர்ர்ன்ன்னு இருக்கு …, 🙂

    Reply
  18. ராஜேஷ்.. பதிவு சும்மா அள்ளுது… பட்டய கிளப்புது ஒவ்வொரு வாட்டியும்… இதே நடை லேயே போகலாம் தல… ஸ்டைல மாத்ததிங்க… பக்கவா இருக்கு… படிக்க படிக்க ஆர்வமா இருக்கு…

    Reply
  19. யார் சொல்லுவதையும் கேட்க வேண்டாம்,உங்கள் நடை அருமையாக இருக்கு,அதுவும் கடைசி இரண்டு பதிவுகள் மிக அருமை,உங்களுக்கு போன் செய்து பாராட்டலாம் என்று இருந்தேன்,கொஞ்சம் கூட சந்தேகமே வேண்டாம்,continue பண்ணுங்க,தயவு செய்து யாருக்காகவும் compromise ஆகிவிடாதிர்கள்,சுருக்கி எழுத வேண்டாம்,

    Reply
  20. // படிச்சு முடிக்கவே சும்மா கிர்ர்ர்ன்ன்னு இருக்கு //

    படிச்சு முடிசுட்டீங்களா ???? எனக்கு படிக்க ஆரம்பிக்கும் போது கிர்ர்ர்ன்ன்னு இருக்கு…….

    Reply
  21. நண்பரே,

    எவ்வளவு இன்னல்கள், இடையூறுகள் ஒரு வெற்றிப்படைப்பின் பின்னால் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும்போது வியப்பாகவே இருக்கிறது. ஆனால் இப்படைப்பின் வெற்றியின் பின்பாக ஆவாது ஜாக்ஸனின் இன்னல்கள் குறைந்திருக்கும் என்று நம்புகிறேன் 🙂

    Reply
  22. the post is good and intresting . but kindly correct the following one
    Mark Wahelberg acted in the 2001 version of Planet of the apes and not Matt damon

    Reply

Join the conversation