LOTR: The Series – 5– Lights, Camera & Action . . .
”இந்த இரண்டு படங்களும், கண்டிப்பாக நடக்கப்போவதில்லை”.
ந்யுலைன் சினிமாவின் தலைவரான ராபர்ட் ஷேய், ஜாக்ஸனிடம் இப்படிச்சொன்னவுடன், ஜாக்ஸன் தொய்ந்துபோனார். அதனால், அடுத்து அவர் கூறிய வார்த்தைகளை முதலில் ஜாக்ஸன் கவனிக்கவில்லை.
“டோல்கீன் மூன்று நாவல்களையல்லவா எழுதினார்? எனவே, நீங்கள் மூன்று படங்கள் எடுப்பதைத்தான் நான் அனுமதிப்பேன்”.
உயிரே போய்விட்டதைப்போல் அமர்ந்திருந்த ஜாக்ஸனின் காதுகளில், இந்த வார்த்தைகள் மிகத்தாமதமாகத்தான் விழுந்தன.
‘என்ன அது? என்ன அது?’ . .
“இதோ பாருங்கள் ஜாக்ஸன். . மூன்று படங்கள் எடுப்பதாக இருந்தால், உங்களுடன் வேலை செய்வதற்கு நாங்கள் தயார்” . .
ஜாக்ஸனுக்குள் ஒரு புதிய உயிர்ப்பு சக்தியை ஊற்றியதைப் போல அமைந்தன ராபர்ட்டின் வார்த்தைகள். துள்ளி எழுந்தார் ஜாக்ஸன். ”மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.. விரைவில் சந்திக்கலாம்”, என்று சொல்லிவிட்டு, ராபர்ட் கூலாக எழுந்துபோய்விட்டார்.
இந்த நிமிடத்தைப் பற்றிப் பிந்நாட்களில் கூறிய ஜாக்ஸன், “எனது வாழ்நாளிலேயே நான் படமாக்கிய மிக முக்கியமான முப்பது நிமிடங்கள்” என்று அந்த வீடியோவைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரே படம்தான் எடுக்கவேண்டும் என்று எக்கச்சக்க நிபந்தனைகள் போட்ட Miramax ஒருபுறம்; தானாக வந்து மூன்று படங்கள் எடுக்கச் சொல்லிய NewLine Studios மறுபுறம். உடனடியாக, ந்யூலைன், பனிரண்டு மில்லியன்கள் மிராமேக்ஸுக்கு அளித்தது. ஹார்வி வெய்ன்ஸ்டீனால் இதை நம்பவே முடியவில்லை. எப்படியும் எந்த ஸ்டுடியோவும் இப்படத்தை வாங்காது; ஜாக்ஸன் திரும்பத் தன்னிடம் தான் வரவேண்டும் என்று எண்ணியிருந்த வெய்ன்ஸ்டீனுக்கு விழுந்தது அடி (பிந்நாட்களில், சொன்னபடியே, படங்களின் உலக வசூலில் ஐந்து சதவிகிதம் மிராமேக்ஸுக்கு வழங்கப்பட்டது. அதையும் பாதியாகப் பிரித்து, தாய் நிறுவனமான டிஸ்னி, அதில் 2.5 சதவிகிதத்தை எடுத்துக் கொண்டது. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களின் மொத்த உலக வசூல்: மூன்று பில்லியன் டாலர்கள். அதில் ஐந்து சதவிகிதம்: 150 மில்லியன்கள்!. இதில் டிஸ்னிக்குச் சென்றது 75 மில்லியன்கள். டிஸ்னி, மிராமேக்ஸை 1993ல் வாங்கிய மொத்தத்தொகை, 80 மில்லியன்). இன்னொரு துணுக்கு என்னவெனில், ஹார்வி மற்றும் பாப் வெய்ன்ஸ்டீன்களின் பெயரும், அவர்களது ஒப்பந்தத்திற்கிணங்க, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களில் திரையிடப்பட்டது. அந்தக் காட்சியில், பெயர்களின் பின்னணியில், ஒரு ஒல்லி இளைஞன், இரண்டு பெரிய பூதங்களை, ஒரு சிறு குச்சியின் உதவியால் சமாளிப்பதைப்போன்ற படம் ஒன்று இருக்கும்.
ஆகஸ்ட் 24. 1998. ந்யூ லைன் சினிமாவின் பத்திரிகை அறிக்கை ஒன்று, ‘Lord Of the Rings’ என்ற பெயரில் மூன்று படங்கள் வெளிவரப்போவதைப் பற்றிய செய்தியைத் தாங்கியிருந்தது. படப்பிடிப்பு 1999 பாதியில் தொடங்கி ஒரு ஆண்டுகாலம் நடைபெறப்போவதாகவும், அதன்பின் அறு மாத இடைவெளியில் மூன்று படங்களும் வெளியிடப்படும் என்றும் அதே செய்தி கூறியது. ஆனால், அதே நேரத்தில், ஜாக்ஸன், அவரது வழக்கப்படி, பெரிய அளவில் ஹோம் வொர்க் செய்துகொண்டிருந்தார். ஸ்டோரிபோர்டிங் வேலையை முழுதும் முடித்தபின்தான் படத்தைத் தொடங்குவேன் என்று அவர் கண்டிப்பாக இருந்ததால், திட்டமிட்டபடி படம் தொடங்காமல், பத்து நாட்கள் கழித்து, அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கி, 22ம் டிசம்பர் 2000 வரை, ஒரு வருடம் இரண்டு மாதங்கள் நடந்து, ஒரு வருடம் கழித்து 2001 க்ரிஸ்துமஸில் ஆரம்பித்து, தொடர்ந்து மூன்று வருடங்கள் திரையிடப்பட்டன.
படப்பிடிப்பை ந்யூஸிலாந்தில் வைத்ததால், பல விதங்களிலும் பணத்தை மிச்சப்படுத்திக் கொடுத்தார் ஜாக்ஸன். நடித்தவர்கள் பலரும் ந்யூஸிலாந்து எக்ஸ்ட்ராக்கள் (படங்களின் டைட்டிலில், மொத்தம் 1200 எக்ஸ்ட்ராக்களின் பெயர் வருகிறது என்பது இன்னொரு துணுக்கு). மட்டுமல்லாமல், ஒரே சமயத்தில் மூன்று படங்களையும் எடுத்ததால், ஒருமுறை கட்டப்பட்ட செட், தொடர்ந்து உபயோகிக்கப்பட்டது. இதேபோல் படத்தின் பல விஷயங்கள், ஒவ்வொரு பாகத்துக்காகவும் மறுபடி உருவாக்கப்படாமல், ஒரே முறையில் பயன்படுத்தப்பட்டதால், எக்கச்சக்க லாபம் ந்யூலைனுக்கு. படங்களின் இறுதியில் கணக்கிடப்பட்ட தகவலின்படி, 100 மில்லியன் டாலர்களை இவ்வகையில் மிச்சப்படுத்திக் கொடுத்தார் ஜாக்ஸன் (இதேபோல் எடுக்கப்பட்ட வேறு சில திரைப்படங்கள்: Pirates of the Caribbean படத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது பாகங்கள், மற்றும் Back to the Future படத்தின் இரண்டாம் பாக எடிட்டிங் நடைபெறும் வேளையில், மூன்றாவது பாகத்தை எடுத்துமுடித்துவிட்டார் Zemeckis). ஒரே சமயத்தில் மூன்று படங்களை எடுத்ததன் மிக முக்கியமான அம்சம், நடிகர்களின் சம்பளம் ஏறாமல் பார்த்துக்கொண்டது. இதை இங்கு குறிப்பிடுவது ஏனெனில், ந்யூலைனின் Dumb and Dumber மற்றும் The Mask படங்களில் நடித்திருந்த ஜிம் கேரி, இப்படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிக்க, படங்களின் பட்ஜெட்டை விடவும் அதிகமான பணம் கேட்டது, ந்யூலைனின் மனதில் படிந்திருந்த ஒரு காயமாகவே இருந்தது. அதேபோல், Dumb and Dumber படத்தை முடித்தவுடனே, Batman Forever படத்தில் வில்லனாக நடிக்க, அதிக சம்பளத்துக்கு ஜிம் கேடி ஓடிவிட்டிருந்தார். இது எல்லாமே ஜாக்ஸனுக்கும் தெரிந்திருந்தது. எனவே, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு, அதில் நடித்திருந்த நடிகர்களின் சம்பளம் வானத்தைத் தொடுவதுபோன்ற நிலையில், அடுத்த இரண்டு பாகங்களை எடுப்பது அவருக்கு உவப்பில்லாமல் இருந்தது. இதுதான் முக்கியக் காரணம்.
இப்படங்கள் எடுக்கப்படும்போது, படங்களின் ஸிஜி வேலைகளை, மிகவும் குறைந்த விலையில், WETA செய்து கொடுத்தது. ஒரு உதாரணமாக, Return of the King படத்தின் மொத்த 1500 ஸிஜி ஷாட்டுகள், ஹாலிவுட்டில் மட்டும் எடுக்கப்பட்டிருந்தால், இதற்கே 100 மில்லியன் டாலர்கள் செலவாகியிருக்கும் என்பது நிதர்சனம். ஆனால், WETAவோ, வெறும் 47 மில்லியன் டாலர்களில் வேலையை முடித்துக் கொடுத்து விட்டது.
இப்போது, ஒரு சுவாரஸ்யமான கணக்கைப் பார்ப்போம். ஹாலிவுட்டில் ஒரு படம் எடுக்கப்படுவதற்கும், ந்யூஸிலாந்தில் எடுக்கப்படுவதற்கும் உள்ள வித்தியாசம், இக்கணக்கில் எளிதில் புரிந்துவிடும்.
Titanic. ஜேம்ஸ் கேமரூனின் காவியம். இதன் மொத்த செலவு, 200 மில்லியன் டாலர்கள். அதாவது, படத்தின் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஆன செலவு, 1.03 மில்லியன்கள். இப்போது, ரிங்ஸ் படங்களின் மொத்த செலவு, 330 மில்லியன்கள். இதில், ஒவ்வொரு நிமிடத்துக்குமான செலவு, வெறும் 500,000 டாலர்கள் மட்டுமே (அரை மில்லியன்). ஒருவேளை ரிங்ஸ் படங்கள் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டிருந்தால், தோராயமாக, 1.03 X 677 (படத்தின் extended version மொத்த நிமிடங்கள்) = 700 மில்லியன் டாலர்கள். அதாவது, படங்களுக்கான செலவைப்போல், இரு மடங்கு. இதுதான் ஹாலிவுட்டுக்கும் ஏனைய சிறு நாடுகளுக்கும் வித்தியாசம்.
படத்தின் Pre – production வேலைகள் முடிந்தவுடன், படத்தின் casting தொடங்கியது. முதன்முதலில் தேர்வுசெய்யப்பட்ட நடிகர், Elijah Wood (8th July 1999). பின்னர் Ian Mckellen (26th July). பின் Christopher Lee (26th August), Liv Taylor (27th August), Viggo Mortensen (15th October), Cate Blanchett ( 27th October) போன்ற நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல், படத்தின் Crew. இவர்களில் பலர், ஜாக்ஸனின் முந்தைய படங்களில் வேலை செய்தவர்களாக இருந்தனர்.
அக்டோபர் 11, 1999. நான்கு குட்டி ஹாபிட்கள், கறுப்பு நிறக் குதிரை வீரன் ஒருவனிடமிருந்து தப்பித்து ஓடுவது போன்ற ஒரு காட்சியோடு, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களின் படப்பிடிப்பு தொடங்கியது.
இப்படியாக, ஜாக்ஸன் பட்ட கஷ்டங்கள் வீணாகிப்போகாமல், தனது கனவுத் திரைப்படத்தின் படப்பிடிப்பை அவர் துவக்கினார்.
Note: Harvey Weinstein & Bob Weinstein title credits photo and the LOTR geniology photo credit – Kristin Thompson.
வந்தோம்ல பஸ்ட்
வழக்கம் போல சூப்பர்.
கிங் விஸ்வா
எதிர்நீச்சல் – வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு
Short and Sweet …,
என்னாப்பா இது சும்மா Circuit Diagram கணக்கா கொழப்பமா இருக்கு …..
சீக்கிரமாக காஸ்டிங் விஷயத்துக்கு வாங்க. நம்ம சீன் கானெரி மேட்டருக்காக வெயிட்டிங்.
கிங் விஸ்வா
எதிர்நீச்சல் – வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு
damn i missed tha vada this time !!
மீண்டும் அருமை… 🙂 ஆனால் அந்த கடைசி சர்க்யூட் படம் தான் வழமை போல எனக்கு புரியவில்லை… எழுத்தில் நீங்கள் எழுதிய போதே சுமாராக யோசித்து புரிந்து வைத்திருந்தேன்… ஹீம்ம்ம்ம்.. 🙂
1200… தலை சுத்துது… இதுல இவ்ளோ பேருக்கும் மேக்கப்.. அப்புறம் மேய்க்க நாலு பேரு….
//
Titanic. ஜேம்ஸ் கேமரூனின் காவியம். இதன் மொத்த செலவு, 200 மில்லியன் டாலர்கள். அதாவது, படத்தின் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஆன செலவு, 1.03 மில்லியன்கள். இப்போது, ரிங்ஸ் படங்களின் மொத்த செலவு, 330 மில்லியன்கள். இதில், ஒவ்வொரு நிமிடத்துக்குமான செலவு, வெறும் 500,000 டாலர்கள் மட்டுமே (அரை மில்லியன்). ஒருவேளை ரிங்ஸ் படங்கள் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டிருந்தால், தோராயமாக, 1.03 X 677 (படத்தின் extended version மொத்த நிமிடங்கள்) = 700 மில்லியன் டாலர்கள். அதாவது, படங்களுக்கான செலவைப்போல், இரு மடங்கு. இதுதான் ஹாலிவுட்டுக்கும் ஏனைய சிறு நாடுகளுக்கும் வித்தியாசம்.//
இந்த புள்ளிவிவரத்துலயே ஹாலிவுட் எம்மாம் பெரிய அப்பாடேக்கருன்னு புரியுது…
//Batman Forever படத்தில் வில்லனாக நடிக்க, அதிக சம்பளத்துக்கு ஜிம் கேடி ஓடிவிட்டிருந்தார்//
ஸ்பெல்லிங் மிஸ்டேக்தான்..ஆனால் கருத்துக்கு புது சுவையூட்டியது.மாற்றவேண்டாம்.ப்ளீஸ்…
திகைக்க வைக்கும் புள்ளிவிபரங்கள்…ஒப்பீடுகள்…அனைத்தும் விறுவிறுப்பு.
வாழ்க..வளர்க
இப்படி படம் வரைந்து பாகங்களை குறித்து இருக்கீங்களே…. கணக்கு வழக்கு பட்டய கெளப்புது,இந்தப் படத்திற்கு நியூ ஜிலாந்து விட வேறு சிறந்த இடம் இருக்க முடியுமா என்ன? அவ்வளவு அழகான லோக்கேசன்ஸ்,ஜாக்சன் மலைக்க வைக்கிறார்,உங்கள் தகவல்கள் மிரள வைக்கிறது,இந்த தொடர் உங்களை மேலும் உயரத்திற்கு கொண்டுசெல்லும்,
ராஜேஷ் ஒவ்வொரு வாட்டியும் பெரிய அளவுல போகுது… மற்றுமொரு அற்புத பதிவு… வரைபடம்… பதிவுக்கு நச்சுன்னு பொருந்துது…
This comment has been removed by the author.
Just read all the 5 parts…great going Rajesh…Snippets like title photo credits are amazing…Keep Rocking 🙂
ஹல்லோ, நேத்து ஏன் பதிவு போடலை? உங்க மேல கேஸ் பைல் பண்ணலாம்னு பல பேர் காத்து இருக்கிறார்கள். உடனடியாக பதிவிடுங்கள்.
கிங் விஸ்வா
குங்ஃபூ பாண்டா (2011) – திரைவிமர்சனம்!!
LITTLE BIG SOLDIER (2010) – ஆசிய சிங்கத்தின் ஒலக சினிமா – திரை விமர்சனம்!
நண்பரே,
சுவையான தகவல்களிற்கு தங்கள் பதிவில் பஞ்சமே இல்லை. எவ்வாறு ஒரு கலைஞன் தன் மனவேதனையை கலாரசனையுடன் வெளிப்படுத்துவான் என்பதற்கு நீங்கள் வழங்கியிருக்கும் பூதம் vs மனிதன் ஒரு உதாரணம். நல்ல தேர்வு அது நண்பரே.
@ லக்கி – 🙂 . . நன்றி
@ விஸ்வா – காஸ்டிங் விஷயம் சீக்கிரம் விவாதிக்கப்படும் 🙂 . . நன்றி
@ ஆனந்த் – இது ரொம்ப சுலபம் பாஸ் . . அம்புக்குறிகளை மட்டும் பார்த்துக்கினே வாங்க. டபக்கான்னு புரிஞ்சிரும்
@ boyindahood – பரவாயில்ல உடுங்க 🙂 .. இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கு 🙂
@ தமிழினியன் – கரெக்ட் தான். ஹாலிவுட் ஒரு பெரிய திமிங்கிலம் மாதிரி. . கபளீகரம் பண்ணிரும். . ஆனா ஜாக்ஸன்ட்ட பாச்சா பலிக்குமா? கிளம்பிட்டாருள்ள இப்ப மறுபடி மூணு வருஷத்துக்கு படமெடுக்க 🙂
@ உலக சினிமா ரசிகரே – மிக்க நன்றி 🙂
@ டெனிம் – இனிமேல், தொடர் கொஞ்சம் வேறு மாதிரி பயணிக்கப்போகிறது. இனிமேல் ஒவ்வொரு படங்களையும் விரிவாக அலசலாம் என்பது உத்தேசம். எப்புடி போவுதுன்னு பார்க்கலாம் 🙂 . . நன்றி
@ முரளி கிருஷ்ணன் – மிக்க நன்றி. தொடர்ந்து பீட்பேக் குடுத்துக்கினே இருங்க தலைவா 🙂
@ சிவன் – பொறுமையா உக்காந்து அஞ்சு பாகத்தையும் படிச்சிருக்கீங்க. . மிக்க நன்றி 🙂
@ காதலரே – இந்த மாத்ரி கில்லாடி வள்ளல் வேலைல ஜாக்ஸன் பெரிய ஆளு 🙂 . . இருக்கவே இருக்கு அவரோட sick டேஸ்ட்டின் மிச்சம் மீதி 🙂 . . இதைப்பத்தி இன்னமும் விரிவா பார்க்கலாம். மிக்க நன்றி
இன்னாபா நீ, இம்மா கேப் விட்ற.. சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க.. 🙂