LOTR: The Series – 7 – Costumes, Props & 2D

by Karundhel Rajesh June 11, 2011   war of the ring

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களுக்கான ஸ்க்ரிப்ட் வொர்க் நடந்துகொண்டிருந்த அதே வேளையில், WETA வில் என்ன நடந்தது?

WETA வின் ஒரு பிரிவான WETA வொர்க் ஷாப், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் ப்ராப்பர்ட்டி வேலைகளைச் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக, ஜாக்ஸனின் நண்பர் ரிச்சர்ட் டைலர் (Richard Taylor) செயல்பட்டார். இவரிடம் ஜாக்ஸன் ஒப்புவித்த வேலைகளாவன: ஆயுதங்கள், கவசங்கள், ஒப்பனை, படத்தில் இடம் பெறும் ஜந்துகளை வடிவமைத்தல் மற்றும் மினியேச்சர் மாடல்கள். டைலரும் ஜாக்ஸனும், இன்னும் சில திறமைசாலிகளை அமர்த்தினர். அவர்களில் ஒருவர் தான், சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்த ஜான் ஹோவ் (John Howe). கவசங்கள் தயாரிப்பு, இவர் வசம் ஒப்புவிக்கப்பட்டது. இவர், கவசங்களில் சிறப்பான அறிவு பெற்றிருந்ததே காரணம். இவருக்குக் கீழ், ஸ்டூ ஜான்ஸன் (Stu Johnson) என்பவரும், வாரன் க்ரீன் (warren Green) என்பவரும் பணிபுரிந்தனர். இந்த இருவரின் வேலை, கவசங்களை வடிவமைத்து, ஜான் ஹோவிடமும் ஜாக்ஸனிடமும் காட்டி, ஒப்புதல் வாங்குவது. இவர்கள், மொத்தம் 48,000 கவசங்களை வடிவமைத்ததாக விகியின் புள்ளிவிவரம் சொல்கிறது. பீட்டர் ல்யோன் (Peter Lyon) என்பவர், கத்திகளை உருவாக்கும் பணியை ஏற்றுக்கொண்டார். அதேபோல், விற்களும் அம்புகளும் உருவாக்கப்பட்டன (500 விற்கள் மற்றும் 10000 அம்புகள்). இப்படி உருவாக்கப்பட்ட அத்தனையுமே, முழுமையாக ஜாக்ஸனிடம் ஒப்புதல் வாங்கப்பட்டபின்னரே செய்யப்பட்டன. ஒப்புதல் வழங்குவதற்கு, ஜாக்ஸன், ஒரு நூதன முறையைக் கையாண்டார். ஒரு ரப்பர் சீல் உருவாக்கப்பட்டது. அதில், ஒரு நட்சத்திரத்தின் படமும், அதனுள், பீட்டர் ஜாக்ஸன் என்று பொருள்படும் P J என்ற இனிஷியல்கள் பொறிக்கப்பட்டன. எந்தெந்த டிஸைன் மாடல்களில் இந்த முத்திரை குத்தப்பட்டுள்ளதோ, அந்தந்த டிஸைன்கள், நிஜத்தில் உருவாக்கப்பட்டன.

அதேபோல், ப்ராஸ்தடிக் மேக்கப். படத்தில் வரும் ஹாபிட்டுகளின் கால்களை உருவாக்க, WETA ஒரு வருடம் எடுத்துக்கொண்டது. கவனித்துப் பார்த்தீர்களானால், அவர்களது கால்கள், பெரிதாகவும், முடி அடர்ந்ததாகவும், ஒரு பூதத்தின் கால்களைப் போலவும் இருக்கும். இவை, காலணிகளாகவும் உருவாக்கப்பட்டன. இப்படிப்பட்ட 1800 கால்கள் உருவாக்கப்பட்டு, படத்தில் வரும் நான்கு ஹாபிட்களால் உபயோகப்படுத்தப்பட்டன. அதேபோல், அவர்களுக்கு மூக்குகளும் காதுகளும் இப்படி உருவாக்கப்பட்டன. படத்தில் கிம்லியாக வரும் ஜான் ரைஸ் டேவீஸ் (John Rhys – Davies ), தினமும் நான்கரை மணி நேரங்கள் இப்படி மேக்கப்புக்காக செலவழிக்க வேண்டி வந்தது. அப்படியே, படத்தின் போர்க்களக் காட்சிகளுக்காக, எக்கச்சக்கமான பிணங்களும் உருவாக்கப்பட்டன.

இப்படியாக, கடின உழைப்பின் பலனாக, WETA வின் முதல் ‘ஜந்து’ உருவாக்கப்பட்டது. படத்தின் முதல் பாகத்தில், பெரிய பூதம் ஒன்று இந்த ஹாபிட்களைக் கொல்ல வரும் அல்லவா? அந்த Cave Troll .

அதேபோல், படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களுக்கு, ஒவ்வொரு குறிப்பிட்ட வகையில் உடை வடிவமைக்க வேண்டியிருந்தது. அந்த வடிவமைப்பிலேயே, அந்தக் கதாபாத்திரங்களின் தன்மையையும், அவற்றின் மனநிலையையும் படம் பார்ப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் ஜாக்ஸன் நினைத்தார். ஆகவே, இதற்காக ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது. படத்தில் வரும் தேவதைகளான எல்ஃப்களின் உடைகளும் இருப்பிடங்களும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், ஐரோப்பாவில் மிகப் பிரபலமாக இருந்த ‘ஆர்ட் நுவௌ’ (Art Nouveau ) பாணியில் வடிவமைக்கப்பட்டன. ஆர்ட் நுவௌ என்பது என்னவெனில், கலை என்பது வாழ்வில் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்ற மனப்பான்மையோடு வடிவமைப்பதே. வடிவமைப்பு, செடிகொடிகள், மலர்கள் ஆகியவைகளை மையமாகக் கொண்டு செயல்படும். கம்பீரமான அழகு என்பதே நோக்கம். எல்ஃப்கள் தேவதைகள் என்பதால், இத்தகையதொரு முறையில் அவர்களது உடைகளும் இருப்பிடங்களும் உருவாக்கப்பட்டன. அதே போல், ‘ட்வார்ஃப்ஸ்’ என்று அழைக்கப்படும் கிம்லியின் இனத்தாருக்காக, அவர்கள் பூமியில் குகைகள் அமைத்துக்கொண்டு வாழ்ந்துவரும் இனத்தவர் என்பதால், அத்தகைய உடைகளும் இருப்பிடங்களும் வடிவமைக்கப்பட்டன. கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், கிம்லியின் அசைவுகள், பூமியை மனதில் கொண்டே இருக்கும். அதாவது, கிம்லி சண்டையில் ஈடுபடும்போதும் சரி, ஆயுதங்களை இயக்கம் விதத்திலும் சரி, தரையை நோக்கித்தான் அது இருக்குமே தவிர, ஏனைய மனிதர்களைப் போல் இருக்காது.

இந்த வகையில், படத்தில் வரும் இவ்வொரு இனத்துக்கும், அவர்களின் இயல்பை மனதில் கொண்டே அத்தனை விஷயங்களும் வடிவமைக்கப்பட்டன.

இந்தப் படங்களில் உபயோகப்படுத்தப்பட்ட இன்னொரு மிக முக்கியமான அம்சம் – எல்விஷ் மொழி.

டால்கீனைப் பொறுத்தவரை, மொத்தம் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளை, அவற்றுக்குரிய பக்காவான இலக்கணத்தோடு ஸ்ருஷ்டி செய்து வைத்திருந்தார் என்பது ஒரு ஆச்சரியமான தகவல். அவரது கூற்றுப்படி, அவர் எழுதிய நாவல்களும் கதைகளும், இந்த மொழிகள் பயன்படுத்தப்படவேண்டிய உலகங்களை மனதில் வைத்து எழுதப்பட்டவையே. அதாவது, நாவல்களுக்காக மொழிகள் உருவாக்கப்படவில்லை. மொழிகளை உபயோகிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நாவல்கள் அவரால் எழுதப்பட்டன. அத்தகையதொரு வித்தகராகத் திகழ்ந்தார் டால்கீன்.

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கதைகளில் பலமுறை உபயோகிக்கப்படும் மொழியாக, எல்விஷ் மொழியைத் தேர்வு செய்தார் டால்கீன். அவரால் உருவாக்கப்பட்டதொரு மொழியே இது. இந்த எல்விஷ் எழுத்துக்களை ஆராய்ச்சி செய்த ஜாக்ஸன் குழுவினர், படங்களில் பல இடங்களில் அவற்றைப் பயன்படுத்தியிருக்கின்றனர். பல்வேறு வாட்களில், இந்த எல்விஷ் மொழி பொறிக்கப்பட்டிருக்கும். அதேபோல், பல மாளிகைகளின் நுழைவாயில்களிலும், கதவுகளிலும், ஏன்? அந்த மோதிரத்திலேயே கூட – எல்விஷ் மொழியைப் பயன்படுத்தியிருந்தார் ஜாக்ஸன்.

இதைத்தவிர, ஜாக்ஸன் கையாண்ட மிகத் திறமையான ஒரு வழிமுறை, அவர் மனதில் நினைத்திருந்தபடியே படத்தை எடுக்க உதவியது. அதைப்பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

Pre – Production ஆரம்பத்தில், ஜாக்ஸன், படத்தின் திரைக்கதையை விரிவான ஸ்டோரி போர்டுகளாக செய்து வைத்துக்கொண்டார் என்பதை சென்ற பாகத்தில் பார்த்தோம். அந்த வேலையை முடித்தவுடன் ஜாக்ஸன் செய்தது, அந்த ஸ்டோரிபோர்டுகளில் இருக்கும் விஷயத்தை, ஒரு 2 – டி அனிமேஷனாக மாற்றி வைத்துக்கொண்டதே. அதாவது, ஒரு காட்சி எப்படி வரவேண்டும் என்று ஜாக்ஸன் விரும்பினாரோ, அதை அப்படியே 2 – டியில் சாதாரண அனிமேஷனாக செய்துவைத்துக் கொண்டார். கூடவே, படத்தில் வரும் முக்கியமான காட்சிகளை, மினியேச்சர் செட்டுகளாகப் போட்டும் வைத்தார். உதாரணமாக, மிஸ்டி மலைகளின் பாதாள வெளியில், சரிந்து உடையும் பாலத்தின் வழியாக, ஹாபிட்களும் காண்டால்ஃபும் அரகார்னும் லெகோலாஸும் கிம்லியும் தப்பிக்கும் காட்சி இருக்கிறதல்லவா? அந்தப் பாலம், அப்படியே மினியேச்சர் மாடலாக உருவாக்கப்பட்டது. அதன்பின், சிறுசிறு பொம்மைகள் அதன்மேல் வைக்கப்பட்டன. பின்னர், தனது சின்னஞ்சிறிய கேமராவை உபயோகித்து, அந்தக் காட்சியில் காமெரா ஆங்கிள்கள் எப்படி வரவேண்டும் என்பதை ஜாக்ஸனே படமாக்குவார். அதன்பின், 2 – டியில் இது எளிதான கிராஃபிக்ஸாக மாற்றப்படும். அதன்பின், உண்மையான ஸிஜி வேலை நடக்கும்போது, இந்த 2 – டி அனிமேஷனை வைத்து, அதனை அப்படியே தத்ரூபமாக மாற்றினார்கள் WETA வல்லுனர்கள்.

இந்த வழிமுறையின் மூலம், தான் நினைத்தபடியே படத்தைக் காட்சிப்படுத்த ஜாக்ஸனால் முடிந்தது.

ஆக, படத்தின் ஸிஜி, ப்ராப்ஸ், உடைகள் ஆகிய அத்தனையும் பக்காவாக ரெடி செய்யப்பட்டன. அடுத்து?

Casting !

தொடரும் . . .

  Comments

11 Comments

  1. //ஆக, படத்தின் ஸிஜி, ப்ராப்ஸ், உடைகள் ஆகிய அத்தனையும் பக்காவாக ரெடி செய்யப்பட்டன. அடுத்து?

    Casting !//

    இப்போவாவது சீன் கானரி பத்தி எழுத வந்துள்ளீர்களே.

    Reply
  2. gr8 .. waitin for the next .. 🙂

    Reply
  3. இந்தப்பதிவில் உங்கள் ஸ்டைல் இல்லை.
    உங்கள் நடை… மவுன ராகம் கார்த்திக் போல்… நக்கல்,நையாண்டி,எள்ளல்,ரவுத்திரம்,சரசம் எல்லாம் கலந்து கட்டி பரவசப்படுத்தும்.இப்பதிவில் அது மிஸ்ஸிங் என எனக்குப்படுகிறது.தகவல்களின் கனம் கருதி எழுத்தில் தீவிரத்தன்மை காட்டி விட்டீர்கள் என நினைக்கிறேன்.

    ஆனால் நான் இங்கே ஒரு உண்மையைச்சொல்ல ஆசைப்படுகிறேன்.
    LOTR மூன்று பாகமுமே எனக்கு பிடிக்கவில்லை.[தியேட்டரில் பார்த்தேன்]
    காரணம் பேண்டஸி படங்கள் அவ்வளவாக எனக்கு பிடிப்பதில்லை.
    ஆனால் இப்படத்தை பற்றிய உங்கள் பதிவு அபாரம்.
    அளவில்லாத தகவல்கள் திகைப்பூட்டியது.
    பதிவுத்தொடர் முடிந்ததும் ஒரே நாளில் மூன்று படத்தையும் மீண்டும் பார்க்க எண்ணியுள்ளேன்.
    அடுத்தப்பதிவு…
    உங்கள் ஸ்டைலோடு கூடிய அபூர்வத்தகவல்கள்..ப்ளீஸ்…

    வரலாறு முக்கியம்…அமைச்சரே…

    Reply
  4. நண்பரே,

    உங்கள் இத்தொடர் டால்கியனின் நாவல்களை படிக்கும் ஆர்வத்தை தூண்டி வருகிறது. வழமை போன்றே தகவல்களால் வியந்து போய் இருக்கிறேன்.

    Reply
  5. உலக சினிமா ரசிகன்
    // இந்தப்பதிவில் உங்கள் ஸ்டைல் இல்லை.
    உங்கள் நடை… மவுன ராகம் கார்த்திக் போல்… நக்கல்,நையாண்டி,எள்ளல்,ரவுத்திரம்,சரசம் எல்லாம் கலந்து கட்டி பரவசப்படுத்தும்.இப்பதிவில் அது மிஸ்ஸிங் என எனக்குப்படுகிறது.தகவல்களின் கனம் கருதி எழுத்தில் தீவிரத்தன்மை காட்டி விட்டீர்கள் என நினைக்கிறேன்.//

    உண்மை…

    //WETA வின் ஒரு பிரிவான WETA வொர்க் ஷாப், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்// இப்படித்தொடங்கும் பத்தியில் ஏதோ விக்கிப்பீடியா பக்கத்திற்குள் வந்துவிட்ட உணர்வை தந்தது…

    ஏழாவது அத்தியாயத்தில் ஒரு தொய்வு வந்துவிட்ட உணர்வு இருக்கிறது, மாற்றுங்கள்

    Reply
  6. // டால்கீனைப் பொறுத்தவரை, மொத்தம் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளை, அவற்றுக்குரிய பக்காவான இலக்கணத்தோடு ஸ்ருஷ்டி செய்து வைத்திருந்தார் என்பது ஒரு ஆச்சரியமான தகவல்//

    ஆச்சரியமா இருக்கு……ஆனா அத விட இந்த ஜாக்சன் பயபுள்ளையின் வேலைகள் ஆச்சரியமா பிரமிப்பாவும்…இருக்கு…

    Flipkart LOTR வந்திருச்சா….அத கொஞ்சம் இங்க மேன்சன் பண்ணா யாராவது ஆர்வலர்கள் வாங்க வசதியா இருக்கும்…

    Reply
  7. ண்ணா…ஏன் நீங்க வாரத்துக்கு ஒரு பதிவ இந்த தொடராவும்….பிறநாட்களில் வேறத பத்தியும் எழுதக் கூடாது ???. ஒவ்வொரு வெள்ளி @ ஏதாவது ஒரு நாள் LOTR. மத்த நாள் வேற ஏதாவது..எப்புடி…கொஞ்சம் பரிசீலிக்கவும்…..பழைய கருந்தேள் இல்லாம என்னமோ மாறி இருக்குது…

    Reply
  8. தல, நான் கொழந்தயோட மாறுபடுகிறேன்.. இந்த தொடரை முழுமையாக தொடர்ச்சியாக முடிக்கவும். நடுவில் வேறு பதிவு அல்லது வேறு படத்தை பற்றி எழுதினால், உங்களுக்கே அந்த continuity போயிடும்..

    Reply
  9. நானும் கொழந்தயின் கருத்தில் மாறு படுகிறேன் தல… இந்த அதிரடி தொடர முடிச்சுட்டு தான் நீங்க அடுத்த பட வேலைகள தொடங்கணும்… உலக சினிமா ரசிகனின் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன்… டிப்பிக்கல் கருந்தேள் டச் இதுல மிஸ்ஸிங்….

    Reply

Join the conversation