LOTR: The Series – 9–Fellowship of the Ring

by Karundhel Rajesh June 26, 2011   war of the ring

படப்பிடிப்பு துவங்கியது.

இந்த முதல் பாகத்தின் கதையைச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

மிடில் எர்த். ஸாரோன் என்ற கொடியவன், இந்த உலகைக் கைப்பற்ற விரும்பி, ஒன்பது மோதிரங்களை, ஒன்பது அரசர்களுக்குக் கொடுக்கிறான். இன்னும் சில மோதிரங்களும், எல்ஃப்களுக்கும் இன்னபிற வகையினருக்கும் கொடுக்கப்படுகின்றன. இந்த அத்தனை மோதிரங்களையும் ஒருங்கே கட்டுப்படுத்தக்கூடிய வகையில், ‘மௌண்ட் டூம்’ என்ற எரிமலையில், தனது உயிரின் சக்தியை ஊட்டி, ஒரு மோதிரத்தை உருவாக்குகிறான் ஸாரோன். இந்த மோதிரம், அவனுக்கு மட்டுமே கட்டுப்படக்கூடியது. இந்த மோதிரத்தின் சக்தியை உபயோகித்து, மிடில் எர்த்தின் ஒவ்வொரு பகுதியாகக் கைப்பற்றி வருகிறான் ஸாரோன். இவனுக்கு எதிராக, தேவதைகளான எல்ஃப்கள் மற்றும் மனிதர்கள் அடங்கிய ஒரு படை உருவாகிறது. எல்ஃப்களின் சார்பில் கில் கலாட் என்ற அவர்களின் மன்னனும், மனிதர்களின் சார்பில், காண்டோர் நகரத்து அரசனான எலெண்டிலும் இந்தப் போரில் பங்கேற்கிறார்கள். இந்தப் படையில், மோரியா என்ற குகையில் வாழும் சிறிய மனிதர்களான ட்வார்ஃப்ஸ்களும் சேர்ந்துகொள்கிறார்கள். இந்தப் படையால், முதலில், வெதர்டாப் என்ற இடத்தில், அமன் ஸூல் என்ற கண்காணிப்புக் கோபுரம் உருவாக்கப்படுகிறது. அதற்குப் பின், ரிவெண்டெல் நகரத்துக்குச் செல்லும் இந்தப் படை, மூன்று வருட காலத்துக்கு அங்கே தங்கி, தளவாடங்களை சேகரித்துக்கொள்கிறது. இதன்பின், அங்கிருந்து காண்டோர் நகரத்துக்குச் சென்று, அந்நகரத்தின் படைகளைச் சேகரித்துக்கொண்டு, முடிவில், மார்டோர் என்ற இடத்தில், ஸாரோனின் பெரும்படையைச் சந்திக்கிறது. டாகோர்லாட் பெரும்போர் (Battle of Dagorlad) என்று வர்ணிக்கப்படும் இந்த யுத்தம், கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு நடக்கிறது. ஸாரோனின் கோட்டை – பாராத் – தூர் (Barad –Dur) என்ற பெயருடையது – பெரும் முற்றுகைக்கு உள்ளாகிறது. ஏழாவது வருட முடிவில், ஸாரோனே வெளிவருகிறான். அப்போது நடக்கும் உக்கிரமான யுத்தத்தில், கில்-கலாடும், எலெண்டிலும் கொல்லப்படுகின்றனர். எலெண்டிலின் கத்தி, துண்டுகளாக உடைந்துபோகிறது. எலெண்டிலின் மகனான இஸில்டோர், உடைந்த கத்தியைப் பயன்படுத்தி, ஸாரோனின் மோதிரம் இருக்கும் விரலைக் கொய்ய, ஸாரோனின் உயிரின் பெரும்பகுதி அந்த மோதிரத்தில் இருப்பதனால், உருவம் இழந்து மறைந்துபோகிறான் ஸாரோன். இஸில்டோர், அம்மோதிரத்தை அழிப்பதற்குப் பதில், தானே வைத்துக்கொள்ள முடிவெடுக்க, சில பூதங்களால் கொல்லப்பட்டு, அந்த மோதிரமும் கோல்லும் என்ற ஜந்துவுக்குக் கிடைக்கிறது. பல நூற்றாண்டு காலம் அந்த ஜந்திடம் கழித்தபின், பில்போ பேகின்ஸ் என்ற ஹாபிட்டுக்குச் செல்கிறது இந்த மோதிரம்.

டாகோர்லாட் பெரும்போர் நடந்து இரண்டாயிரத்தைந்நூறு வருடங்களுக்குப் பிறகு:

ஹாபிட்கள் வாழும் ஷையர் என்ற இடம். அன்று, பில்போ பேகின்ஸின் 111வது பிறந்தநாள். ஒரு ஹாபிட், இப்படி நீண்டநாட்கள் வாழ்வது, மிகக் கடினம். எனவே, விமரிசையாக அந்த விழா கொண்டாடப்படுகிறது. அன்று, தனது உறவினன் ஃப்ரோடோ என்பவனுக்கு இம்மோதிரத்தை அளித்துவிட்டு, ஊரில் இருந்தே மறைந்துவிடுகிறார் பில்போ. மோதிரத்தை எடுத்துப் பார்க்கும் ஃப்ரோடோவுக்கு, அந்த மோதிரத்தில் பொறித்துள்ள எல்விஷ் மொழியிலான சொற்கள் தெரிகின்றன. இது, பில்போவின் நீண்டகால நண்பர் காண்டால்ஃபுக்குத் தெரிந்து, மோதிரத்தைப் பற்றிய உண்மையை அறிந்துகொள்கிறார். இந்த காண்டால்ஃப், மிடில் எர்த்துக்கு அனுப்பப்பட்டிருந்த ஐந்து மந்திரவாதிகளில் இரண்டாம் இடத்தில் இருப்பவர். முதலிடத்தில் இருந்து, இவர்களுக்கெல்லாம் தலைவர் ஆனவரின் பெயர், ‘ஸாருமான்’. இதற்குள், மீண்டும் தனது சக்தியின் ஒரு பகுதி கிடைக்கப்பெற்றிருக்கும் ஸாரோன், கோல்லுமைப் பிடித்து சித்ரவதை செய்ய, பில்போவின் பெயரை கோல்லும் உளறிவிடுகிறது. ஆகவே, தனது சக்திக்குக் கீழ்ப்படிந்த, தன்னிடமிருந்து ஒன்பது மோதிரங்களை இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னர் பெற்றிருந்த ஒன்பது அரசர்களை ஸாரோன் ஏவுகிறான். இந்த அரசர்கள், தற்காலத்தில், பிசாசுகளாக மாறிவிட்டிருக்கின்றனர். ஸாரோனின் மிகக் கொடிய, பலம் வாய்ந்த அடியாட்களாகிய இவர்களை, ‘நாஸ்கூல்’ என்ற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நாஸ்கூல்கள், தங்கள் நகரமான மினாஸ் மோர்குல் என்ற இடத்திலிருந்து கிளம்பி, ஷையருக்கு வருகின்றனர்.

இந்த இடத்தில், இரண்டு நகரங்களைப் பற்றிப் பார்த்துவிடலாம்.

இஸில்டோர் இளவரசனுக்கு, அனாரியன் என்ற பெயரில் ஒரு சகோதரன் உண்டு. மார்டோருக்கு அருகில் இஸில்டோர் கட்டிய ஒரு நகரமே, மினாஸ் இத்தில் (Minas Ithil). இந்த இடத்தில் இருந்து மேற்கே மிகத்தொலைவில் அனாரியன் கட்டிய நகரம், மினாஸ் அனோர் (Minas Anor). இந்த இரண்டு சகோதரர்களின் சிம்மாசனங்களும், இந்த இரண்டு நகரங்களுக்கும் மத்தியில் இருக்கும் அஸ்கீலியத் (Osgiliath) என்ற நகரத்தில் ஒருங்கே இடம்பெற்றிருந்தன. இதற்குப் பின், டாகோர்லாட் பெரும்போரில் அனாரியன் இறந்துவிட, அவனது நினைவாக, மினாஸ் அனோர் நகரின் அரண்மனைக்கு முன், முற்றத்தில், இஸில்டோர் ஒரு வெள்ளைச் செடியை நடுகிறான். பின் இஸில்டோர் இறந்துவிட, ஸாரோனின் அடியாட்களான நாஸ்கூல்களின் தலைவனால், மினாஸ் இத்தில் நகரம் கைப்பற்றப்பட்டு, நாஸ்கூல்களின் கூடாரமாக உருவாக்கப்படுகிறது. நகர் முழுதும் பச்சை வண்ணமாக ஆகிறது. நகரின் பெயரும், மினாஸ் இத்தில் என்பதிலிருந்து, மினாஸ் மோர்குல் (Minas Morgul) என்று மாறிவிடுகிறது (இந்தக் கோட்டை, மூன்றாம் பாகத்தில் விரிவாகக் காட்டப்படும்). இதனால், மினாஸ் அனோர் நகரம், இஸில்டோரின் வாரிசுகளின் நகரமாக ஆகிப்போகிறது. இந்த நகரமும், மினாஸ் அனோர் என்பதிலிருந்து, மினாஸ் திரித் (Minas Thirith) என்று பெயர்மாற்றம் அடைகிறது.

காண்டால்ஃபின் யோசனைக்கேற்ப, ஃப்ரோடோ, தனது உரையாடலை ஒட்டுக்கேட்ட ஸாம் என்ற தோட்டக்காரனுடனும், மெர்ர்ரி, பிப்பின் ஆகிய நண்பர்களுடனும், ப்ரீ என்னும் பக்கத்து ஊரின் மதுபான விடுதியில் (Prancing Pony) காண்டால்ஃபைச் சந்திக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, ஷையரிலிருந்து இவர்கள் தப்பித்துவிடுகின்றனர். தப்பிச்செல்லும் வழியில், நாஸ்கூல்களின் கண்ணில் இவர்கள் பட்டுவிட, மயிரிழையில் தப்பி, பெரும் மழைக்கு மத்தியில் ப்ரீ வந்தடைகின்றனர். அங்கே, ப்ரான்ஸிங் போனியில், இவர்களையே உற்று நோக்கிக்கொண்டிருக்கும் ரேஞ்சர் ஒருவன் – பெயர் ஸ்ட்ரைடர் – கையில் அகப்பட்டு, அவனது சமயோஜிதத்தால் வேறு அறைக்கு மாறி, நாஸ்கூல்களின் கொலைமுயற்சியில் இருந்து தப்பிக்கின்றனர்.

இந்த இடைப்பட்ட நேரத்தில், தனது தலைவன் ஸாருமானைப் பார்ப்பதற்காக, ஐஸன்கார்ட் (Isengard) என்ற இடத்துக்குப் பயணமாகிறார் காண்டால்ஃப். ஸாருமானால் தான் இந்த மோதிரத்தைப் பற்றிய தகவல்களைச் சரியாகச் சொல்லமுடியும் என்பதால். ஆனால், ஸாருமான், ஏற்கெனவே ஸாரோனின் கைப்பாவை ஆகிவிட்டது, இதன்பின்தான் கண்டால்ஃபுக்குத் தெரியவருகிறது. கண்டால்ஃபை, தனது இருப்பிடத்தின் ஆகப்பெரிய கோபுரமான ’ஆர்த்தாங்க்’ (Orthanc) என்ற கறுப்புக் கோபுரத்தில் சிறைவைக்கிறார் ஸாருமான். ஸாரோனின் எண்ணத்திற்கேற்ப, ‘உருக்-க்ஹாய்’ என்ற பெயரில் கொடிய வீரர்களை உருவாக்கவும் தொடங்குகிறார்.

அங்கே . .ப்ரான்ஸிங் போனியில் இருந்து ரேஞ்சர் ஸ்ட்ரைடரின் உதவியோடு தப்பிக்கும் ஹாபிட்கள் நால்வரையும், எல்ஃப்களின் நகரமான ரிவெண்டெலுக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லி, அவர்களுக்குப் பாதுகாவலாகச் செல்கிறான் அந்த ரேஞ்சர். தனது பெயர், அரகார்ன் (Aragorn) என்றும் சொல்கிறான். செல்லும் வழியில், வெதர்டாப் (weathertop) என்ற மலையின் அமன் ஸூல் (Amon Sul) என்ற கண்காணிப்புக் கோபுரத்தில் – இது, இரண்டாயிரதைந்நூறு வருடங்களுக்கு முன், இஸில்டோர் மற்றும் கில் – கலாட் படையினரால் கட்டப்பட்டது என்பதை முன்னரே பார்த்தோம் – இரவைக் கழிக்கிறார்கள். அங்கே, நாஸ்கூல்கள் இவர்களைத் தாக்க, நாஸ்கூல்களின் தலைவனால், கத்தியால் குத்தப்பட்டு, படுகாயமடைகிறான் ஃப்ரோடோ. அப்போது அங்கே வரும் ஆர்வென் (Arwen) என்ற எல்ஃப் அழகி – இவள், அரகார்னின் காதலியும் கூட- ஃப்ரோடோவை, தங்களது நகரமான ரிவெண்டெலுக்குக் குதிரையில் எடுத்துக்கொண்டு பறக்கிறாள். வழியில் அவளைத் தாக்க வரும் நாஸ்கூல்களிடமிருந்து தப்பி, ரிவெண்டெலுக்கு வந்துவிடுகிறாள்.

ரிவெண்டெலில், காண்டால்ஃப் ஃப்ரோடோவைச் சந்திக்க வருகிறார். சொல்லியபடி ப்ரான்ஸிங் போனியில் இந்த ஹாபிட்களைச் சந்திக்க இயலவில்லை என்று மன்னிப்புக் கோரும் காண்டால்ஃப், ஸாருமானால் சிறைப்பிடிக்கப்பட்டதையும், ஆர்த்தாங்க் கோபுரத்தில் இருந்து, வலிமை பொருந்திய கழுகு ஒன்றின் உதவியுடன் தப்பித்துவந்ததையும் நினைவுகூர்கிறார். இந்தக் கழுகுகளைப் பற்றி ஒரு துணுக்குச் செய்தி – லார்ட் ஆஃப் த ரிங்ஸ் மட்டுமன்றி, ஸில்மெரில்லியன், ஹாபிட் ஆகிய கதைகளிலும் இந்தக் கழுகுகள் வருகின்றன. நல்லவர்களுக்கு எப்போதும் உதவும் தன்மையுடையவை இக்கழுகுகள் என்றும் அறிகிறோம்.

மறுநாள். ரிவெண்டலின் அதிபதியான எல்ராண்ட் பிரபு (இவர், டாகோர்லாட் பெரும்போரில், எல்ஃப்களின் தலைவரான கில்-கலாடுக்கு அடுத்தபடியான இடத்தை வகித்தவர்), ஒரு அதிமுக்கியமான சந்திப்புக்கு அழைப்பு விடுக்கிறார். மிடில் எர்த்தின் அனைத்து மக்களின் பிரதிநிதிகளும் இச்சந்திப்புக்கு வருகை தருகின்றனர். அங்கு, ஸாரோனின் மோதிரம் கிடைத்துவிட்டதையும், அம்மோதிரத்தை அழித்தால்தான் ஸாரோன் அழிவான் என்றும் சொல்லி, இதனை ஏற்றுக்கொள்பவர் யார் என்ற கேள்வியை எல்ராண்ட் முன்வைக்கிறார். பெருங்குழப்பத்தின் இடையில், தானே மோதிரத்தை அழிக்கும் வேலையையும் செய்வதாக மனமுவந்து ஒப்புதலளிக்கிறான் ஃப்ரோடோ. ஃப்ரோடோவுக்கு உதவுவதாக, காண்டால்ஃப், அரகார்ன், எல்ஃப் லெகோலாஸ், சிறிய மனிதர்களாகிய ட்வார்ஃப்களின் பிரதிநிதி கிம்லி, காண்டோர் நகரை ஆட்சிபுரிந்துவரும் அந்நாட்டு அமைச்சர் டெனதாரின் (Denethor) மகன் போரோமிர் ஆகிய ஐவரும் உறுதியளிக்கின்றனர். இந்த ஒன்பது நபர்கள் அடங்கிய குழு, மோதிரத்தை அழிக்கும் பொருட்டு, டூம் எரிமலைக்குப் பயணமாகிறது.

கேரத்ராஸ் (Caradhras) பனிமலைத்தொடரின்மேல் பயணித்தால், தூரம் குறையும் என்பதால், அப்படியே செல்கிறது இக்குழு. ஆனால், இதனைக் கண்டறியும் ஸாருமான், பனிப்பொழிவை ஏற்படுத்துகிறார். இதனால், வேறு வழியே இல்லாமல், மலைக்குக் கீழ் இருக்கும் பாதாள உலகமான மோரியாவுக்குள் சென்றாகவேண்டிய நிர்ப்பந்தம். மோரியாவில் இருப்பவர்கள், தனது உறவினன் பாலின் என்ற மன்னனும், அவனது படைவீரர்களுமேயாதலால், இவர்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது என்று தைரியம் அளிக்கிறார் கிம்லி. ஆனால், மோரியாவுக்குள் நுழைந்தபின்னர்தான், பாலினும் அவனது வீரர்களும் இறந்தது, இக்குழுவினருக்குத் தெரிகிறது. வெளியேயும் வரமுடியாமல் ஒரு ராட்சத ஆக்டோபஸ் தொந்தரவு செய்வதால், மோரியாவுக்குள் நுழைகிறது ஃப்ரோடோ குழு. ஐந்து நாட்கள் இந்தச் சுரங்கத்தில் பயணித்தால்தான் அதன் முடிவை அடைய முடியும். செல்லும் வழியெங்கும் ட்வார்ஃப் பிணங்கள். Chamber of Mazarbul என்ற விசாலமான இடத்தில், ட்வார்ஃப்களால் எழுதப்பட்ட அவர்களது குறிப்புகள் கிடைக்கின்றன. அதில், Orcs என்று அழைக்கப்படும் பூதங்களால் தாங்கள் தாக்கப்பட்டதையும், இந்தப் பூதங்களை மிஞ்சிய வேறு ஒரு சக்திவாய்ந்த, கொடூர ஜந்து ஒன்றினால் பலரும் இறந்ததையும் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. அதே நேரத்தில், பூதங்கள் இவர்களைத் தாக்க ஆரம்பிக்கின்றன. இந்தக் குகையில் நுழைந்தவுடன், அதன் சுவர்களில் இருக்கும் ‘மித்ரில்’ (Mithril) என்ற தாதுவை, காண்டால்ஃப் இவர்களிடம் ஏற்கெனவே காட்டியிருந்தார். இந்த மித்ரில் தாதுவால் செய்யப்படும் கவசத்தை அணிந்தால், எந்த ஆயுதத்தாலும் பாதிப்பு ஏற்படாது. இத்தகைய ஒரு மித்ரில் கவசத்தை, தனது மாமா பில்போ தனக்கு அளித்து, அதைத் தற்போது அணிந்திருப்பதால், பிரம்மாண்ட பூதம் ஒன்று தாக்குகையில், உயிர்பிழைத்துவிடுகிறான் ஃப்ரோடோ. அப்போதுதான் , அந்த சுரங்கத்தின் அடியாழத்தில் பதுங்கியிருக்கும் ஒரு பிரம்மாண்ட ஜந்து, இவர்களைத் தாக்க வருகிறது.

அந்த ஜந்துவின் பெயர், பால்ரோக் (Balrog). பல நூற்றாண்டுகள் முன்னர், இந்தக் குகையில் தஞ்சமடைந்து, அங்கிருந்த ட்வார்ஃப்களில் பலரைக் கொன்றிருந்த ஒரு பண்டையகால ஜந்துவே இந்த பால்ரோக். இந்த பால்ரோகும், காண்டால்ஃபும், ஒரே வகையைச் சேர்ந்தவர்கள் (மையார் – Maiar என்ற வகை) என்பதால், காண்டால்ஃப் போடும் மந்திரங்களை எதிர்க்கும் வழி இந்த பால்ரோகுக்குத் தெரிந்திருந்தது. இருந்தாலும், ஃப்ரோடோ குழுவினரை, ஹஸாட் – டூம் (Khazad – Dum) என்ற பாலத்தின் வழியாகக் கடக்கவைத்துவிடும் காண்டால்ஃப், அந்தப் பாலத்தை இரண்டாக உடைத்து, அந்த ஜந்துவை, படுபாதாளத்தில் விழவைத்து விடுகிறார். இந்த இடத்தில், இந்த ஹஸாட்- டூம் பாலத்தைப் பற்றி ஒரு தகவல். மோரியா நகரை, அந்நியர்களின் படையெடுப்பில் இருந்து காப்பதற்கே இப்பாலம் உருவாக்கப்பட்டது. மிகச் சிறிய குறுக்களவு கொண்டதால், எதிரிகள், கூட்டமாக இதனைக் கடக்க இயலாது. ஒரே வரிசையில்தான் அவர்கள் வர இயலும். ஆகவே, அப்படி வரும் எதிரிகளை, உயரத்தில் இருந்து அம்புகளை விட்டுக் காலி செய்யும் பொருட்டே இப்பாலம், ட்வார்ஃப்களால் கட்டப்பட்டது என்று அறிகிறோம்.

காண்டால்ஃபால் பாதாளத்தில் விழும் பால்ரோக், தனது நெருப்புச் சவுக்கினால், காண்டால்ஃபின் முழங்காலைப் பிடித்து இழுத்துவிட, காண்டால்ஃபும் பாதாளத்தில் விழுகிறார். ஆனால், விழுமுன்னர், ஃப்ரோடோ குழுவினரை, அங்கிருந்து உடனே வெளியேறச்சொல்லிவிட்டே விழுகிறார் (‘Fly . . You Fools !).

மோரியாவை விட்டு வெளியேறும் ஃப்ரோடோ குழு, எல்ஃப்களின் இன்னொரு நகரமான லோத்லோரியன் (LothLorien) சென்றடைகிறது. இந்நகரை ஆட்சி செய்வது, கலாட்ரியேல் (lady Galadriel) சீமாட்டியும், அவளது கணவர் செலெபார்ன் பிரபுவும் (Lord Celeborn). இந்த கலாட்ரியேல் சீமாட்டி, நாம் ஏற்கெனவே பார்த்த ரிவெண்டல் நகரின் அதிபர் எல்ராண்ட் பிரபுவின் மனைவியின் தாயார். ஆகவே, எல்ராண்டின் மகள் ஆர்வெனின் பாட்டி. இருந்தாலும், குன்றாத இளமையுடன், எல்ஃப்களிலேயே மிகுந்த அழகும் சக்தியும் பெற்றிருப்பவர். எல்ஃப்களால் வணங்கப்பெறும் அளவு மரியாதை அளிக்கப்படுபவர். இவர், ஃப்ரோடோ குழுவினருக்கு, பல விசேடப் பொருட்களைப் பரிசாக அளிக்கிறார். ஃப்ரோடோவுக்கு, எலெண்டிலின் ஒளி என்று சொல்லப்படும் ஒரு பொருளைப் பரிசாக அளிக்கிறார் இவர். இது, கதையின் மூன்றாம் பாகத்தில், ஃப்ரோடோவுக்குப் பெரிதும் உதவுகிறது. லெகோசாஸுக்கு ஒரு சக்திவாய்ந்த வில் கிடைக்கிறது. அரகார்னுக்கு, ஒரு அற்புத மாணிக்கக்கல் கிடைக்கிறது. கிம்லி, கலாட்ரியேலின் ஒரே ஒரு தங்க முடியைக் கேட்க, அவருக்கு மூன்று முடிகள் கிடைக்கின்றன. இத்தகைய ஒரு அழகியைப் பார்த்தபின், தனது பரம்பரை விரோதியான லேகோலாஸுடன் நட்பு பாராட்டத் துவங்கிவிடுகிறார் கிம்லி.

அங்கிருந்து கிளம்பி, மார்டோர் செல்லும் வழியில், பார்த் கலேன் என்ற இடத்துக்கு வருகின்றனர் ஃப்ரோடோ குழுவினர். இந்த இடத்தில், போரோமிர், ஃப்ரோடோவின் மோதிரத்தை அபகரிக்க எத்தனித்து, அதன்பின் மனம் மாறுகிறான். ஆனால், இதற்குள், உருக்- க்ஹாய் பூதங்கள் அங்கே வந்துவிடுவதால், சண்டை துவங்குகிறது. போரோமிர் படுகாயமடைகிறான். ஃப்ரோடோவும் ஸாமும், இந்தக் குழுவிலிருந்து பிரிந்து, அக்கரை சென்றுவிடுகின்றனர். இறக்கும் தருவாயில், இஸில்டோரின் வழிவந்த அரகார்னே தனது தலைவன் – தனது மன்னன் என்று தழுதழுத்துக்கொண்டே இறக்கிறான் போரோமிர். இது ஏனெனில், போரோமிரின் நாடான காண்டோர், மோர்டோருக்கு மிக அருகில் இருக்கிறது. இஸில்டோரின் வழி வந்த மன்னர்களின் வரிசை உடைந்துவிட்டதாக எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆகவே, அமைச்சரான டெனதார், காண்டோரை ஆட்சிபுரிந்துவருகிறார். காண்டோரை ஆட்சி புரியும் டெனதாரின் மகன் போரோமிர், காண்டோருக்கு இயற்கையாகவே இருக்கும் மன்னனான அரகார்னை எதிர்ப்பதுதான் முறை. இருந்தாலும், இறக்கும் தருவாயில், அரகார்னைப் பற்றிப் புரிந்துகொண்டு, நல்லவனாக இறக்கிறான் போரோமிர் (பர்ஸனலாக, போரோமிரின் மரணம் என்னைச் சற்று பாதித்தது. இப்படத்தில், பலருக்கும் பலரைப் பிடிக்கக்கூடும். எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரம், போரோமிரின் கதாபாத்திரம்).

மோதிரத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்பது நபர்கள் குழு, இப்போது இரண்டாகப் பிளந்துவிட்டது. ஃப்ரோடோவும் ஸாமும் மோர்டோருக்குச் செல்ல, மெர்ரியும் பிப்பினும், உருக் – க்ஹாய்களால் சிறைப்பிடிக்கப்பட்டு, அவர்களால் தூக்கிச்செல்லப்படுகின்றனர். அரகார்ன், மெர்ரியையும் பிப்பினையும் விடுவிப்பதே முறை என்று சொல்லி அவர்களின் பின்னால் கிம்லியையும் லெகோலாஸையும் அழைத்துக்கொண்டு ஓடுகிறான்.

முதல் பாகம் முடிகிறது.

(தொடரும்) . . .

  Comments

12 Comments

  1. என்ன கதைய மட்டும் எழுதி இருக்கிங்க… sorry Really Disappointed… 🙁

    Reply
  2. இது வெறும் கதை இல்ல. கதையில் வரும் பல நிகழ்ச்சிகளைப் பத்தியும் இருக்கு. இந்த நிகழ்ச்சிகளெல்லாம் படத்துல வராது. அதைப்பத்தி தெளிவா எழுதலாம்னு போட்ருக்கேன் பாஸ் . . ஃபுல்லா படிங்க

    Reply
  3. தல தல.. பின்னிட்டிங்க….. எவ்ளோ விஷயம் …. இதுல பாதி படத்துல இல்லாதது…Minas Ithil, Minas anor… சூப்பர்… உங்கள் உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது.. படத்தோட கதை எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசில விமர்சனம் ஆரம்பிக்க போறீங்க போல… இத படிச்சுட்டு போய் பாத்தா இன்னும் பயங்கரமான அனுபவம் கிடைக்கும் ன்னு நினைக்கிறேன்… Fly You fools…. எனக்கும் மிக பிடித்த டயலாக்… இந்த படம் பார்த்த பலரை பாதிக்க கூடியது போரோமிரின் மரணம்…. அட்டகாசமான நடிப்பு அந்த காட்சியில் அவருடையது…

    Reply
  4. //இந்த முதல் பாகத்தின் கதையைச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.//
    சுருக்கமே இவ்வளவு பெருசா!!!!!!!!!!!!!!

    Reply
  5. //(பர்ஸனலாக, போரோமிரின் மரணம் என்னைச் சற்று பாதித்தது. இப்படத்தில், பலருக்கும் பலரைப் பிடிக்கக்கூடும். எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரம், போரோமிரின் கதாபாத்திரம்).//
    இதில் முதல் பாதியை நானும் ஏத்துக்குறேன்… எனக்கு மிகவும் பிடிச்ச பாத்திரம் அரகார்ன், அதுக்கு அப்புறம் தான் போரோமியர்.

    படத்துல இல்லாத சங்கதிகளையும், அதன் பின்னணியையும் சொல்லியிருக்கிறது ரொம்ப நன்றி, நீங்க முழுசா முடிச்சதும், திரும்ப ஒரு முறை படத்தை பாத்துட வேண்டியதுதான்.

    Reply
  6. இன்னும் தங்கத் தளபதி, செம்புத் தலைவன், பித்தளை பெருந்தலைவன் கொழந்தய காணலியே… சீக்கிரம் வந்து கும்மியை ஆரம்பிங்க……………….

    Reply
  7. வணக்கம் பாஸ்! இவ்வளவு நாளா உங்கள மிஸ் பண்ணிட்டேனே! (ஏற்கனவே சிலபேர் சொல்லியிருந்தாங்க!) 🙁
    முழுசா உங்க தளத்தைப் படிக்கணுமே!
    ஓ! காமிக்ஸ் எல்லாம்!!! 🙂

    Reply
  8. சுத்தம்…இன்னும் ரெண்டு தடவ வாசிச்சாதன் கதயே புரியும் போல……. இதுக்கு கமென்ட் போட முதல் முறையா எனக்கு வார்த்தைகளே சிக்கல….

    // கவிதை காதலன் //
    தலைவாவாஆஅ………………..இது “அன்பரே ” தான……கவிதையெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டாரா….

    ஒருவேள கவிதை காதலரே நீங்க “அவுரு” இல்லையினா பிழையை பொறுத்தருள்க..

    Reply
  9. தல சுத்துது….. ஏகப்பட்ட தகவல்கள்,ஏகப்பட்ட பெயர்கள்,கொஞ்சம் நிறுத்து ஒவ்வொரு பேராவாக நிதானமாக இரண்டு மூன்று முறை படித்தால் தான் புரிகிறது ,இரவு வந்து மீண்டும் படிக்க வேண்டும் போல் உள்ளது,உங்கள் கடின உழைப்புக்கு தலை வணங்குகின்றேன்

    Reply
  10. @ லக்கி – ஹி ஹீ

    @ முரளி – படத்தோட கதையை விமர்சனம் செய்யனும்னு தோணல. கதையை அலச வேணா செய்யலாம். மொதல்ல எல்லா பார்ட்டையும் பத்தி அத்தனை மேட்டரும் எழுதிட்டு, கடைசில, அப்பெண்டிக்ஸ் மாதிரி ஒன்னு போட்டு, படத்துல வர்ற அத்தனை முக்கியமான விஷயத்தைப் பத்தியும் அலசிருவோம். லார்ட் ஆப் த ரிங்க்ஸ்ல இருக்குற எதுவுமே இந்தத் தொடர்ல மிஸ்ஸாவக் கூடாது 🙂 . . பார்ப்போம்.

    @ உலக சினிமா ரசிகரே – பெருசா எழுதுறதுல எங்கண்ணன் உண்மைத் தமிழனின் வாரிசாக்கும் நாங்கெல்லாம் 🙂 . . ஹீ ஹீ

    @ தமிழினியன் – நானு ஆல்ரெடி இதை ஆரம்பிச்சப்புறம் ரெண்டு தடவை extended version பார்த்தாச்சு 🙂 . . ஒவ்வொரு வாட்டியும், பல புதிய தகவல்கள் ஆப்புடுது. . ஆனா அதை எழுதனும்னு நினைக்கும்போது, அந்த எழுத்துதான்… வார்த்தை… ஜாக்சன் . .ஜாக்சன் . . 🙂

    @ கவிதை காதலன் – நன்றி தலீவா

    @ ஜீ – வாங்க பாஸ் . .ஆமாம்.. காமிக்ஸ் தான். ஆனா டீட்டெயிலா இல்ல. சைட்டைப் படிச்சிட்டு சொல்லுங்கப்பு 🙂

    @ கொழந்த – //இதுக்கு கமென்ட் போட முதல் முறையா எனக்கு வார்த்தைகளே சிக்கல….// – இது என்ன உங்க டெம்ப்ளேட்டா 🙂

    @ டெனிம் – ஹாஹ்ஹா… தலை சுத்தினாலும் பரவால்ல. . இதுக்கே இப்புடின்ன, ஜாக்ஸனுக்கும், அவரோட எடிட்டருக்கும் எப்புடி இருந்திருக்கும்? 🙂

    Reply

Join the conversation