LOTR: The Series–10–Fellowship: Bigatures & Scales

by Karundhel Rajesh July 4, 2011   war of the ring

சென்ற அத்தியாயத்தில், ஃபெலோஷிப் ஆஃப் த ரிங் படத்தின் கதையைப் பார்த்தோம். இக்கதையில், ஜாக்ஸன் நமக்குக் காண்பித்த மிடில் எர்த்தின் உலகங்களும், அதன் மாந்தர்களும், தனித்தன்மை வாய்ந்தவர்கள். டால்கீன், தனது நாவல்களில் விவரித்து எழுதிய இவ்விஷயங்களை, திரையில் காண்பிக்க எத்தனித்த ஜாக்ஸன், இப்படத்தை உருவாக்குகையில் சந்தித்த இடர்களும் பிரச்னைகளும் பல. படத்தை உருவாக்குகையிலும், அதன் போஸ்ட் ப்ரொடக்‌ஷனிலும் அவர் சந்தித்த இடர்களையும், எப்படி அவரால் அவைகளைத் தவிர்க்க முடிந்தது என்பதையும் இன்று பார்க்கப்போகிறோம்.

ஃபெலோஷிப் ஆஃப் த ரிங்கில் விவரிக்கப்பட்டுள்ள உலகங்களைப் பற்றிய ஒரு சிறிய ரீகேப். அப்படியே, இவற்றுடன் சேர்த்து மற்ற விஷயங்களையும் பார்க்கலாம்.

The Shire & the Hobbits

படம் தொடங்குகையில், முதன்முதலில் மிடில் எர்த்தில் நாம் பார்க்கும் இடம், ஷையர். ஹாபிட்கள் வாழுமிடம். இங்குதான் பில்போ மற்றும் ஃப்ரோடோவின் வீடு உள்ளது. இவர்களது வீட்டின் தோட்டக்காரனே, ஸாம் என்று அழைக்கப்படும் மற்றோரு ஹாபிட். படம் தொடங்குமுன்னரே, செடி கொடிகளோடு தயாராக இருந்த செட் இது. விஸ்தாரமான ஒரு புல்வெளியில் போடப்பட்டிருந்த செட். இந்த செட்டில், மொத்தம் நாற்பத்தொன்பது சிம்னிகள் வடிவமைக்கப்பட்டன. படம் ஓடுகையில், இந்த செட்டில், அத்தனை வீடுகளிலும் ஏதேனும் சமைக்கப்பட்டிருப்பது போல இந்தச் சிம்னிகளின் வழியே புகையெழும்புவதைக் காணலாம். காண்டால்ஃப், முதன்முதலில் பில்போவின் வீட்டுக்கு வருகையில், அந்த வீட்டினுள் நுழைய சிரமப்பட்டு, டங்குடக்கென்று அங்கங்கே அடிபட்டுக்கொள்வார். மிகச்சிறியதாக, பில்போவின் உயரத்துக்கு ஏற்றதாக ஒரு செட்டும், காண்டால்ஃபின் உயரத்துக்கு ஏற்றவாறு மற்றொரு செட்டும், ஸ்டுடியோவில் நிர்மாணிக்கப்பட்டன. அந்த செட்டில், எல்லாப் பொருள்களும், பெரியதாக வடிவமைக்கப்பட்டன. இவற்றில், மெக்கெல்லனுக்காக வடிவமைக்கப்பட்ட செட்டில் ஹோல்ம் நடமாடுவார். அப்போதுதான் அந்த வீடு அவருக்கு மிகப் பெரியதாக இருக்கும்படிக் காட்ட முடியும். அதேபோல், ஹோல்முக்காக வடிவமைக்கப்பட்ட சிறிய செட்டில், மெக்கெல்லன் இடித்துக்கொள்வார்.

செட் தயாராகிவிட்டது. ஆனால், கிட்டத்தட்ட சம உயரம் உள்ள இயான் ஹோல்மையும் (பில்போ பேகின்ஸாக நடித்தவர்) இயான் மெக்கெல்லனையும் (காண்டால்ஃப்) எப்படி வேறுபடுத்திக் காட்டுவது? காண்டால்ஃப், உயரமான மனிதர். ஹாபிட்களோ, உயரத்தில் ஒரு சிறுவனை ஒத்தவர்கள்.

இந்த உயரப் பிரச்னைக்காக, படத்தில் பல டெக்னிக்குகள் கையாளப்பட்டன. அவைகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். ஸ்கேல்ஸ் (scales) என்று அழைக்கப்படும் இந்த டெக்னிக்குகள், படு ஸ்வாரஸ்யமானவை.

Forced Perspective

ஆதிகாலத்திலிருந்து சினிமா உலகில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் டெக்னிக். ஒரு ஆளைக் குள்ளமாகக் காட்டவேண்டுமா? கேமராவில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் அந்த நடிகரை நிறுத்திவிட்டு, கேமராவுக்கு மிக அருகில் அவருடன் பேசும் கதாபாத்திரங்களை நிற்கவைத்துவிடுவது. தமிழ் சினிமாவில் இந்த டெக்னிக் பல படங்களில் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடியும் (அபூர்வ சகோதரர்கள், அலாவுதீனும் அற்புத விளக்கும், லிட்டில் ஜான்). ஃபெலோஷிப் ஆஃப் த ரிங் படத்தை உற்றுக் கவனித்தால், சில காட்சிகளில், ஹாபிட்கள், கேமராவுக்கு சற்றுத் தள்ளி நிற்பதைக் கண்டுபிடித்துவிட முடியும் (உதாரணம்: காண்டால்ஃபும் ஃப்ரோடோவும், பில்போவின் வீட்டில், மோதிரத்தைப் பற்றிப் பேசும் காட்சி. அதேபோல், துவக்கத்தில் குதிரை வண்டியில் காண்டால்ஃப் வரும்போது, அவருக்குப் பக்கத்தில் அமராமல், பின்னே தள்ளி ஃப்ரோடோ அமர்ந்திருப்பதையும் கண்டுபிடித்துவிடலாம்). இப்படியாக, படத்தின் சில காட்சிகளில், இந்த அரதப்பழைய முறை உபயோகிக்கப்பட்டது.

எக்ஸ்டெண்டட் எடிஷன் வீடியோவில், இம்முறையை விவரித்திருப்பதை இங்கே காணலாம்.

Forced Perspective with a moving camera

மேலே கண்ட ஃபோர்ஸ்ட் பர்ஸ்பக்டிவ் முறை, கேமராவை நகர்த்தாமல் இருக்கும் காட்சிகளுக்கு மட்டுமே உபயோகப்படும். காமராவை நகர்த்திவிட்டால், இந்தக் கதாபாத்திரங்கள் தள்ளி நிற்பது தெரிந்துவிடும். ஆனால், சில காட்சிகளில், கேமரா கதாபாத்திரங்களைச் சுற்றி நகர்வது தேவைப்பட்டது. என்ன செய்யலாம் என்று யோசித்து, பின் படக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட முறையே இது. கேமராவை நகர்த்துகையில், குட்டு வெளிப்படாமல் இருப்பது எவ்வகையில் சாத்தியம்?

வழி இருக்கிறது. கதாபாத்திரங்கள் நகராமல் இருந்தால்தான், கேமரா நகருகையில் நமக்கு உண்மை தெரிந்துவிடும். ஆனால், கேமராவோடு சேர்ந்து கதாபாத்திரமும் நகர்ந்தால்? தத்ரூபமான காட்சி அமைந்துவிடும். ஒரு உதாரணத்தைக் கண்டால், எளிதில் இது புரிந்துவிடும். படத்தில், ஃப்ரோடோவும் காண்டால்ஃபும் பேசிக்கொண்டிருக்கையில், அவர்களது மேஜையில், ஃப்ரோடோ, காண்டால்ஃபுக்கு டீயை ஊற்றித்தரும் சிறிய காட்சி உண்டு. இதில், உற்றுப் பார்த்தால், காண்டால்ஃப் காமெராவுக்கு மிக அருகிலும், ஃப்ரோடோ கேமராவை விட்டுத் தள்ளியும் அமர்ந்திருப்பது தெரியும். இக்காட்சியில், இவர்களைச் சுற்றிக் காமெரா சற்றுத்தூரத்துக்கு இயங்கும். உண்மையில், மெக்கெல்லனையும் அவரது மேஜையையும், டாலி (Dolly) என்று அழைக்கப்படக்கூடிய ஒரு ட்ராலியில் அமரவைத்திருந்தனர். இந்த ட்ராலி, கேமரா அமைக்கப்பட்டிருக்கும் பெரிய ட்ராலியுடன் இணைக்கப்பட்டிருந்தது. எனவே, கேமரா நகருகையில், மெக்கெல்லனும் மெதுவாக நகருவார். ஆனால் அது நமக்குத் தெரியவே தெரியாத வகையில் எடுத்திருப்பார்கள்.

இதோ எக்ஸ்டெண்டட் எடிஷன் வீடியோ.

Scale Compositing

ஸ்கேல் கம்பாஸிட்ஸ் என்பது, இன்னொரு மிகச் சுலபமான டெக்னிக். பொதுவாக, திரைப்படங்களில் டபிள் ஆக்ட் என்ற இரட்டை வேடங்கள் வருகையில், கேமராவின் ஒரு பாதியை மூடிவிட்டு, மறுபாதியில் ஒரு கதாபாத்திரத்தைப் படம் எடுத்துவிட்டு, பின்னர் மறுபாதியைத் திறந்து, இரட்டை வேடத்தின் இன்னொரு கதாபாத்திரத்தைப் படமாக்குவார்கள் என்பது இதைப் படிக்கும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதையே கொஞ்சம் இம்ப்ரவைஸ் செய்வதே இந்த ஸ்கேல் கம்பாஸிடிங் என்ற வழிமுறை.

குள்ளமான கதாபாத்திரம், வழக்கப்படி காமெராவுக்கு சற்றுத் தொலைவில், குறிப்பிட்ட காட்சிக்குத் தேவையான முறையில் படமாக்கப்படும். அந்தக் காட்சியில் இடம்பெறும் உயரமான கதாபாத்திரங்கள், அதே செட்டில், கேமராவுக்கு அருகில் மறுபடி படமாக்கப்படுவார்கள். இதன்பின், போஸ்ட் ப்ரொடக்‌ஷனில், இந்த இரண்டு காட்சிகளும் சேர்க்கப்பட்டு, ஒரே காட்சியில் அத்தனை பேரும் இடம்பெற்றிருப்பது போன்ற ஒரு மாயை உருவாகும்.

உதாரணம்: ஃபெலோஷிப் படத்தில், ஒன்பது நண்பர்கள் சேரும் இடம். எல்ராண்டின் ரிவெண்டெல் அரண்மனை. ஃப்ரோடோ, மோதிரத்தை அழிப்பதற்காக முன்வந்ததும், ஒவ்வொருவராக ஃப்ரோடோவுக்கு ஆதரவு தெரிவிக்கும் இடம். இந்தக் காட்சியில், பின்புலத்தில் அரகார்ன், காண்டால்ஃப், லெகோலாஸ் & போரோமிர் ஆகிய உயரமான மனிதர்கள் நிற்க, அவர்களுக்கு முன்னால், நான்கு ஹாபிட்களும், பக்கத்திலேயே கிம்லியும் நிற்பது போன்ற ஷாட் ஒன்று உண்டு. இந்த ஷாட் வரும்போது உற்றுக் கவனியுங்கள். கிம்லி நிற்குமிடமும், அந்த சுற்றுப்புறமும் கொஞ்சம் செயற்கையாக இருப்பது தெரியவரும். இந்த ஷாட்டும், வேறு பல ஷாட்களும், இப்படி எடுக்கப்பட்டவையே. இக்காட்சியில், ஹாபிட்களும் கிம்லியும், ப்ளூ ஸ்க்ரீன் பின்னணியில் முதலில் படமாக்கப்பட்டனர். அதன்பின், உயரமான நான்கு நபர்களும் படமாக்கப்பட்டு, பின்னர் இரண்டு காட்சிகளும் சேர்க்கப்பட்டன.

இந்த எக்ஸ்டெண்டட் எடிஷன் வீடியோ, இதனைத் தெளிவாகச் சொல்லும்.

Big Rigs

ஹாபிட்களை உயரமானவர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்ட, நிஜமாகவே படு உயரமான செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன. நம்மூர் சந்தைகளில், இரண்டு கம்புகளைப் பிடித்துக்கொண்டு நடந்துவரும் உயரமான மனிதனைப் பார்த்திருக்கிறொமல்லவா? அதேதான். இவையே பிக் ரிக்ஸ். படத்தில், ஹாபிட்கள் வரும் சில காட்சிகளில், பின்னணியில், இடுப்பு வரையே நமக்குத் தெரியும் உயரத்தில், சில மனிதர்கள் குறுக்கும் நெடுக்கும் அவ்வப்போது நடப்பார்கள். இவர்கள், இந்த பிக் ரிக்ஸ் உபயோகப்படுத்தித்தான் நடந்தனர். இவர்களது இடுப்பு வரை மட்டுமே நமக்குக் காட்டப்படும். அதற்கு மேல் காட்டினால், உண்மை தெரிந்துவிடுமே?

இதோ வீடியோ.

Scale Doubles

மேலே சொல்லப்பட்ட டெக்னிக்குகள் மட்டுமல்லாது, பல காட்சிகளிலும், உண்மையிலேயே உயரம் குறைந்த டூப்கள் உபயோகப்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு, நான்கு ஹாபிட்களின் முகமூடிகளும் கொடுக்கப்பட்டன. சில காட்சிகளில், இந்த நடிகர்கள் பின்னாலிருந்து காட்டப்படுகையில், இது நன்றாகத் தெரியும். படத்தின் சில காட்சிகளில், இந்த ஹாபிட்களைத் தூக்கிக்கொண்டு போரோமிரோ அல்லது மற்ற கதாபாத்திரங்களோ ஓடுவதுபோலவும் எடுக்கப்பட்டிருக்கும். இக்காட்சிகளில், டூப்களின் முகத்தை மட்டும், உண்மையான நடிகர்கள் முகத்தோடு மார்ஃபிங் செய்துவிட்டனர்.

இந்த ஐந்து முறைகளை உபயோகப்படுத்தியே, ஹாபிட்கள் வரும் அத்தனை காட்சிகளும் எடுக்கப்பட்டன.

Isengard

ஐஸங்கார்ட் என்பது, வில்லனின் அடியாளாக மாறிவிட்ட ஸாருமானின் தலைமையகம். இது, ஒரு மிகப்பெரிய கறுப்புக் கோபுரமான ஆர்தாங்க் (Orthanc) என்பதையும் உள்ளடக்கியது. இந்த கோபுரத்தைச் சுற்றியும் பெரிய குழிகள் அமைக்கப்பட்டு, அக்குழிகளில், பூதங்களான உருக்-க்ஹாய்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த கோபுரம், செட் தான். இந்தப் படங்களில், ஸிஜியை விடவும் பீட்டர் ஜாக்ஸன் நம்பிய விஷயம் ஒன்று உண்டு என்றால், அவை – மினியேச்சர்கள். பீட்டர் ஜாக்ஸன், மினியேச்சர்களை உருவாக்கி, மிகச்சிறிய காமெரா ஒன்றை வைத்து அவற்றைப் படமாக்கியதை முன்னமே பார்த்தோம். அப்படிப்பட்டதொரு அட்டகாசமான மினியேச்சரே இந்த ஐஸங்கார்ட்.

ஐஸங்கார்ட் கோபுரத்தை, ஆலன் லீ, பலமுறை வரைந்துள்ளார். அவரது ஓவியங்களைப் பார்க்கும் எவருக்கும், ஐசங்கார்டைப் பற்றிய பயம் வராமல் போகாது. ஆனால், இந்த ஒவியத்தில், அதன் கீழ்பாதிதான் இருக்கும். அதுவே படு பிரம்மாண்டமாக வரையப்பட்டிருக்கும் (இக்கட்டுரையின் முகப்பில் உள்ள ஓவியம்). ஆகவே, அவரை அழைத்த ஜாக்ஸன், அதன் மேல் பாதியையும் வரைந்துதரச்சொல்லி, அப்படித் தரப்பட்ட கோபுரத்தை, மினியேச்சர் செட்டாக வடிவமைத்தார். இந்த மினியேச்சரே, பனிரண்டு அடிகளுக்கும் மேல். இந்த மினியேச்சரில், படு நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. ஆலன் லீயே இந்த மினியேச்சரிலும் வேலை செய்திருக்கிறார். இந்த மினியேச்சரைப் படு க்ளோஸப்பில் படம் எடுத்துப் பார்த்து, திருப்தியடைந்தார் ஜாக்ஸன். படத்தில் ஐஸங்கார்ட் காண்பிக்கப்படும்போதெல்லாம், பின்னணியில் பிரம்மாண்டமாகத் தெரியும் அந்த கோபுரத்தின் மொத்த உயரம் – வெறும் பனிரண்டு அடிதான் என்று அறிக. அதேபோல், படத்தில், முதன்முதலில் காண்டால்ஃப் தனது தலைவர் ஸாருமானைச் சந்திக்க வருகையில், அந்தக் கோபுரத்தின் படிகளில் மெதுவாக இறங்கி வருவார் ஸாருமான். அவர்கள் பேசுகையில், பின்னணியில் அந்தப் படிகள் தெரியும். அது – உண்மையான மினியேச்சரின் படிகளை, படு டைட் க்ளோஸப்பில் ஜாக்ஸன் எடுத்த வீடியோவே. படத்தில் அது தெரியாது. ஸிஜி போல இருக்கும்.

இந்த கோபுரம் இருக்கும் வட்ட வடிவான மைதானம் – மொத்தம் அறுபது அடி சுற்றளவில் செட்டாக உருவாக்கப்பட்டது. அந்த அறுபது அடியிலும், கோபுரத்தைச் சுற்றிக் குழிகள் தோண்டி (மொத்தம் 24 குழிகள்), (உருக் – க்ஹாய்களின்) கட்டுமானத்துக்குத் தேவையான மர சாமான்கள் (மொத்தம் ஆயிரம்) அங்கே வைக்கப்பட்டன. எல்லாமே மினியேச்சர்கள்.

ஐஸங்கார்டைப் பொறுத்தவரையில், இசையமைப்பாளர் ஹோவார்ட் ஷோர் (Howard Shore), அதை, மிடில் எர்த்தின் தொழிற்புரட்சி நடக்கும் இடம் என்றே மனதில் வைத்திருந்தார். ஆகவே, தொழிற்புரட்சி செய்யும் இடத்துக்குத் தேவையான ஒரு இசையை அவர் தேர்ந்தெடுத்தார். ட்ரம்பெட்கள், ட்ரம்கள் ஆகியன ராஜகம்பீரமாக ஒலிக்கும் இசை அது. இப்படத்தின் பின்னணி இசைத் தீம்களில், எனக்கு மிகமிகப் பிடித்த இசை, ஐஸங்கார்டின் தீமே. அதை இங்கே கேட்கலாம். இன்று இரவில் இருந்து எனது ரிங்டோனாகவும் இது மாற இருக்கிறது.

Rivendell & LothLorien

ஆலன் லீ வரைந்த ரிவெண்டெலின் ஓவியங்களை மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டதே ரிவெண்டல். அவரே வந்து, பெயிண்டிங் வேலையைச் செய்தும் கொடுத்தார். ஐஸங்கார்டைப் போலவே, படு டைட் க்ளோஸப் காட்சிகளிலும், தத்ரூபமாகத் தெரிவது போல ரிவெண்டலின் வேலைப்பாடு அமைந்தது. ஒவ்வொரு செண்டிமீட்டரும் இழைத்து இழைத்து செய்யப்பட்ட இந்த ரிவெண்டலின் தத்ரூபம், படத்தில் ரிவெண்டல் முதன்முதலில் காண்பிக்கப்படும் காட்சியில் இருந்து, ஒவ்வொரு முறை ரிவெண்டல் நகரம் நம் கண் முன்னர் விரியும் சமயங்களிலெல்லாம், பின்னணியில் தெரியும் மினியேச்சர்களின் தத்ரூபத்தில் இருந்தே விளங்கும். இந்த மினியேச்சர்களைப் பின்னணியில் வைத்தே, ப்ளூ ஸ்க்ரீன் முறையில், காட்சிகள் படமாக்கப்பட்டன.

லாத்லாரியனைப் பொறுத்தவரை, எட்டு பெரிய மரங்களின் செட்டுகள் போடப்பட்டன. இந்த மரங்களைச் சுற்றியும், மரங்களின் மீதும் பாதைகள் அமைக்கப்பட்டு, க்ரிஸ்துமஸ் விளக்குகள் பொறுத்தப்பட்டு, இந்த எட்டு மரங்கள் அடங்கிய ஷாட்டுகள் முடிந்தபின்னர், மறுபடி அதே மரங்களை வேறு ஆங்கிளில் காண்பித்து (அப்போதுதான் லாத்லாரியன் பிரம்மாண்டமான ஒரு இடத்தைப் போல இருக்கும் என்பதால்), படப்பிடிப்பு நடந்தது. லாத்லாரியன் என்பது, எல்ஃப்களின் இடம். இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்பவர்கள் எல்ஃப்கள் என்பதால், மரங்களுக்கு இடையில் பாதைகள் இருக்கும். அதேபோல், மரங்களின் இடையிலும், உச்சியிலும், எல்ஃப்களின் வீடுகள் இருக்கும். இவையெல்லாமே மினியேச்சர்களாக அமைக்கப்பட்டன என்று சொல்லவும் வேண்டுமா?

பி.கு – Bigatures என்பது, மினியேச்சர்களையே பிரம்மாண்டமாக வடிவமைக்கும் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் டெக்னிக்குக்குப் பெயர். Crew குழு வைத்த பெயர்.

தொடரும் . . .

  Comments

13 Comments

  1. vandutten .. :):):)
    superb na..

    Reply
  2. வீடியோலாம் போட்டு கலக்கிட்டீங்க தலைவா… 3D படத்தில் Forced Perspective டெக்னிக் சாத்தியமா பாஸ்…..

    Reply
  3. @denim mohan
    யோவ்…அந்த கமென்ட்ட போட வேணாம்…..பெரிய பிரச்சனை ஆகும்னு சொன்னா கேக்குறியா…..

    இருந்தாலும் நீயே மனசு உறுத்தி டெலீட் பண்ணதுக்கு என் பாராட்டுகள்….

    ஆண்டவா..அந்த இடைப்பட்ட நேரத்தில கருந்தேள் அதை பாக்காம இருந்திருக்கணும்…….

    Reply
  4. இந்த இசையமைப்பாளர் பத்தி எங்கேயோ கேள்விபட்ட மாதிரி இருக்குதேன்னு விக்கிய பாத்தா – அவர்தான்.தலைவர் Scorses கூட நாலு படங்களில்: The Aviator, The Departed, Gans of new york,After Hours-பணிபுரிந்தவர்.இப்ப அஞ்சாவதா Hugo Cabretபடத்துக்கும் அவரே…

    ஒழுங்கா நைட் பொய் படிக்கிறேன்…
    // எக்ஸ்டெண்டட் எடிஷன் வீடியோவில் // நீங்க உங்க டிவிடில இருந்து கட் பண்ணி அப்லோட் பண்ணீங்களா????

    நண்பர் ஒருவர் – இயக்குனர் – ” கருந்தேள பாருயா, சும்மா எழுதனும்னு எழுதாம, மிகந்த நேரத்த செலவழிச்சு – ஒவ்வொன்னா வாங்கி , பல பின்-கள ஆய்வு செஞ்சு செமைய எழுதுறார்..hats off to him. நீங்கலாம் என்ன எழுதுறீங்க ??”

    சத்தியமா சொன்னார்…….

    Reply
  5. @ Rushanth – 🙂 . . நன்றி. இனி அடிக்கடி வரும். நெட் வந்துவிட்டது.. யாஹூ 🙂

    @ லக்கி – த்ரீடி படத்துல, Forced Perspective ரொம்ப கஷ்டம். அவதார்ல அது இருக்கும் (ஆனா, என்ன ஒண்ணு. . அதில் க்ரியேட் ஆன ஏலியன்கள், சிஜி வொர்க்) . . Scale Compositing கட்டாயம் உபயோகப்படுத்தலாம். LOTR ல உபயோகப்படுத்துன Forced Perspective , 3d ல வொர்க் அவுட் ஆகாது. ஹாபிட் 3d ல யா எடுக்குறாங்க? எஸ் அப்புடீன்னா, ஜாக்சன் ஒரு புது டெக்னிக் (forced perspective with a moving camera – திரையுலகத்துலயே, LOTR ல தான் பார்ஸ்ட்) கட்டாயம் கண்டுபுடிப்பாருன்னு தோணுது 🙂

    @ மதுரை சரவணன் – மிக்க நன்றி

    @ டெனிம் – 🙂 . . விட்டுப்போன எல்லா பதிவுலயும் கமெண்டு போட்டாச்சி. இப்ப இதுலயும் 🙂 . . இனிதான் நெட்டு செம பாஸ்ட்டா வந்துருச்சே.. பின்னலாம் 🙂

    @ கொயந்த – ஹீ ஹீ… நாரதர் கலகம் நன்மையில் முடியும்??

    அப்பால, அந்த இயக்குநர் நண்பர், மணிரத்னம் இல்லையே? ஏன்னா, அப்புறம் அவரு என்னை வில்லனாவோ அல்லது திரைக்கதைக்காகவோ கூப்புட்டா, என் கொள்கை காரணமா நான் அதை மறுக்க வேண்டி வரும் 🙂 . . நஷ்டம், தமிழ் உலகத்துக்குத்தான் 🙂 . . ஹோவர்ட் ஷோர் – இந்தப் படங்கள்ல பின்னிருக்காறு.. எடிட்டிங் பத்தியும் இசை பத்தியும் தனியா ஒரு பதிவு ரெடியாய்ட்டு இருக்கு 🙂

    Reply
  6. எந்த கேப்புல பதிவை போடுறீங்க. ஒரு வாரமா அட்லீஸ்ட் 1-2 முறை வந்து பார்த்துகிட்டேயிருந்தேன். நேத்து கூட.

    நல்லவேளைங்க. அந்த பாலாவாண்ட இந்த சீரீஸ் சிக்கலை. இதை விட நேர்த்தியா, டெடிகேஷனா… எழுத இந்த ப்லாக் உலகில் யாருமே பிறக்கலை-ன்னு சொன்னா கிண்டலா எடுத்துக்கூடாது.

    அப்புறம் PS3 வாங்குங்க. ஆனா LOTR Ext Blu-Ray வாங்கறதுக்கு முன்னாடி திரும்ப ஒரு முறை, எல்லா எக்ஸ்ட்ராவையும் கம்பேர் பண்ணிட்டு வாங்குங்க தல. ஏன்னா இவங்க ஏகப்பட்ட டிவிடி எடிஷன் ரிலிஸ் பண்ணியிருக்காங்க.

    ப்ளூரேவில் இருக்கும் எல்லா எக்ஸ்ட்ராவும் எதாவது ஒரு வெர்ஷனில் வெளியாகியிருக்கு.

    Reply
  7. @ அன்புடன் மணிகண்டன் – மிக்க நன்றி நண்பரே . .

    @ புள்ளி ராஜா – //நல்லவேளைங்க. அந்த பாலாவாண்ட இந்த சீரீஸ் சிக்கலை// – தல.. இதுக்குப் பேருதான் சுய எள்ளலா? நீங்க இத்த எழுதியிருந்தா, இன்னமும் நல்ல வந்திருக்கும்ன்றது என்னோட ஒப்பீனியன்.

    PS 3 சீக்கிரமே வாங்கிருவேன். LOTR ப்ளூ ரே – இப்ப யூட்யூப்லயே எல்லா எக்ஸ்ட்ரா வீடியோவும் வந்திருச்சி. அதுனால, என்னாண்ட ஆல்ரெடி extended version இருக்குறதுனால, கட்டாயம் அத்தை (அதை) செக் பண்ணிப்புட்டே வாங்குறேன்.

    நான் பதிவு போடுற frequency – அது எனக்கே தெரில. ரெண்டு வாரமா நெட்டு இல்லைன்னு, நேத்துதான் போட்டேன். இனி ரெண்டு நாளைக்கு ஒருவாட்டி போட முயல்கிறேன்.

    Reply
  8. பதிவோடு கூடிய இந்த லிங்குகள் மேலும் சுவை கூட்டுகிறது…. படித்து விட்டு லிங்கை பார்க்கையில் நல்லதொரு அனுபவம்….

    Reply

Join the conversation