LOTR: The Series–11–MASSIVE

by Karundhel Rajesh July 6, 2011   war of the ring

Multiple Agent Simulation System in Virtual Environment.

இதுதான் MASSIVE என்ற பெயரின் விரிவாக்கம்.

MASSIVE என்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன்னர், இந்த MASSIVE என்ற விஷயம் இல்லை எனில், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படமே இருந்திருக்க முடியாது என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படங்களின் இன்றியமையாததொரு அம்சமாக விளங்கிய விஷயம் MASSIVE .

MASSIVE என்பது ஒரு அப்ளிகேஷன். எப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஃபேஸ்புக், வேர்ட், பவர்பாயின்ட் ஆகியன அப்ளிகேஷன்கள் ஆகின்றனவோ, அப்படி, MASSIVE என்பதும், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன். சரி. இதன் வேலை என்ன? மிக எளிதாக விளக்கினால், கும்பலைச் சேர்ப்பது. இப்படிச் சொன்னவுடன், இன்னொரு கேள்வி எழலாம். ஏன்? கிளாடியேட்டர், ட்ராய் ஆடிய படங்களில் கும்பலைக் காட்டவில்லையா? அதுவும் நன்றாகத்தானே இருந்தது? பின் எதற்கய்யா இன்னொரு பிரத்யேக சாஃப்ட்வேர்? இப்படிக் கேட்டால், இதற்குப் பதிலாக, லார்ட் ஆப் த ரிங்ஸின் பிரத்யேகத் தன்மையைத்தான் சொல்லவேண்டும். க்ளாடியேட்டரிலும் சரி, ட்ராயிலும் சரி, வேறு எந்தப் படமாக இருந்தாலும் சரி – அப்படத்தில், இந்த கும்பல்கள், முற்றிலுமாக ஒரே போன்ற மனிதர்களாலோ அல்லது தளவாடங்களாலோதான் (ட்ராய் படத்தின் கப்பல் அணிவகுப்பு ஒரு உதாரணம்) நிரப்பப்பட்டிருக்கும். ஆகவே, ஸிஜி செய்வது சுலபமாக இருந்தது. மட்டுமல்லாமல், மிகப்பெரிய யுத்தகளங்கள் அவற்றில் காட்டப்படவில்லை. விரிவான யுத்தங்கள் ஒரு திரைப்படத்தில் ஸிஜியால் காட்டப்படப்போவது, இதுதான் முதன்முறை என்பதால், வழக்கமான டெக்னிக்குகள் உதவாது என்று முடிவு செய்து, Frighteners படத்தில் தன்னோடு வேலை செய்த ‘ஸ்டீஃபன் ரெகலஸ்’ (Stephen Regelous) என்பவரை அழைத்து, பிரம்மாண்ட யுத்தகளங்களில் பங்குபெறும் கும்பலை உருவாக்கும் திறனுடைய அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கும் பொறுப்பை, 1996 இலேயே அளித்தார் ஜாக்ஸன்.

MASSIVE அப்ளிகேஷனுக்கு முன்னர் இருந்த அப்ளிகேஷன்கள், முற்றிலுமாக ‘True’ அல்லது ‘False’ என்னும் பைனரி விடைகளையே மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டு வந்தன. இதை, மிக எளிதான சில உதாரணங்களோடு பார்த்துவிடலாம்.

யுத்தகளம் ஒன்றைக் கற்பனை செய்துகொள்வோம். அதில், இரண்டு வீரர்கள் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்தச் சண்டையை, ஒரு அப்ளிகேஷன் மூலமாக ஸிஜி செய்தால், அந்தச் சண்டையின் போக்கு, ப்ரோக்ராம் செய்யப்பட ஒருசில விதங்களில் மட்டுமே அமையும். அதாவது, இப்படி:

  1. வீரன் 1 , தனது கத்தியை ஓங்குகிறான்
  2. வீரன் 2 தனது கேடயத்தை உயர்த்திப் பிடிக்கிறான்.
  3. வீரன் 1 , கேடயத்தைக் கத்தியால் தாக்குகிறான்
  4. வீரன் 2 , வீரன் ஒன்றைத் தனது காலால் உதைக்கிறான்
  5. வீரன் 1 , பெப்பரப்பே என்று மல்லாந்து விழுகிறான்
  6. வீரன் 2 , தனது கத்தியை வீரன் ஒன்றின் தலையிலோ கழுத்திலோ அல்லது (இயக்குநர் சாடிஸ்டாக இருந்தால்) மர்ம உறுப்பிலோ செலுத்துகிறான்

இந்த ஸ்டெப்களை உபயோகித்து, ஒரு பெரும் போர்க்களத்தில் பங்கேற்கும் வீரர்களைக் கண்ட்ரோல் செய்துவிடலாம். ஆனால், அவர்களது மூவ்மெண்ட்டுகள் பெரும்பாலும் ஒரே போன்றுதான் இருக்கும். இதுதான் மேஸிவுக்கு முன்னர் இருந்த அப்ளிகேஷன்களின் வேலை. ஆகவே, அவைகளை வைத்து, ஒரே பேட்டர்னில் (pattern) மட்டுமே இயங்க முடிந்தது. இதுதான், பைனரி. அதாவது, ஒன்றைச் செய்; அது இல்லையெனில் இன்னொன்றைச் செய் என்று கட்டளையிடுவது.

ஆனால், MASSIVE , இந்த பைனரி ஜல்லியடித்தலைத் தகர்த்தது. எப்படியெனில், பைனரிக்குப் பதிலாக – அதாவது, இது அல்லது அது என்பதற்குப் பதிலாக – அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரத்தையே யோசிக்க வைப்பது. இதனால், எண்ணிலடங்கா விதமான செயல்களை அக்கதாபாத்திரம் செய்யும். இதற்குப் பெயர், Fuzzy Logic . Fuzzy Logicகுக்கு உதாரணமாக, அதே யுத்தகளத்தை எடுத்துக்கொள்வோம். இரண்டு வீரர்கள் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். அதில், ஒரு வீரன் ஆறரை அடி. இன்னொருவன் ஐந்து அடி. ஆகவே, ஆறரை அடி வீரன், கையில் ஆளுயர வாளோடு வெறித்தனமாகத் தன்னை நோக்கி ஓடிவருவதைப் பார்த்த மாத்திரத்தில், ஐந்தடி வீரன் என்ன செய்வான்?

  1. வந்தவழியே திரும்பி தடதடவென்று ஓடிவிடுவது
  2. அந்த வீரனது காலில் விழுந்துவிடுவது
  3. அவன் அருகே வரும்வரை பொறுத்திருந்து, பின் தனது கட்டாரியை சிரித்துக்கொண்டே அவனது வயிற்றில் சொருகுவது
  4. அவனை விடப் பெரியதொரு ஓலத்தை அடி வயிற்றிலிருந்து எழுப்புவது

இதுபோல் அன்லிமிடட் ஆப்ஷன்களை வழங்குவதே Fuzzy Logic . ஆனால், அன்லிமிடட் ஆப்ஷன்கள் என்றதும், ஐந்தடி வீரன், திடீரென்று ப்ரேக் டான்ஸ் ஆடுவான் என்று எதிர்பார்க்கக்கூடாது. Fuzzy Logic கின் ஒரே ரூல் என்னவெனில்: ஆல்ரெடி முடிவுசெய்யப்பட்ட, ஒரே போன்ற வழிகளைவிட (fixed & exact = binary), ஆல்ரெடி முடிவுசெய்யப்பட்ட அல்லது அந்த முடிவுக்குள் இருக்கும் வெவ்வேறுவிதமான வழிகளை (fixed Or approximate) அளிப்பது. இதனால், ஒரு படையில் இருக்கும் அத்தனை வீரர்களும் ஒரே போன்று நடப்பது, செயல்படுவது ஆகிய விஷயங்களைத் தவிர்த்து, ஒவ்வொரு வீரனும் ஒவ்வொருவிதமாகச் செயல்படவைக்கமுடியும். இது, திரையில் காண்பதற்குத் தத்ரூபமாகவும் நம்பும்படியாகவும் இருக்கும்.

ஒரு பிரம்மாண்டக் கும்பலைத் திரட்டும்போது, கும்பலில் உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதமாகச் செயல்படவேண்டியது முக்கியம். ஆகவே, இந்த MASSIVE அப்ளிகேஷன், ஒவ்வொருவருக்கும் அவர்களது மூளையைப் பயன்படுத்தும் ஆப்ஷனை அளிக்கிறது. இந்த ஒவ்வொரு தனி மனிதனும் எவ்வாறு பார்க்கிறான், எவ்வாறு கேட்கிறான், எவ்வாறு செயல்படுகிறான், எவ்வளவு வேகமாக ஓடுகிறான், எவ்வளவு மெதுவாக இறக்கிறான் ஆகிய அத்தனை விஷயங்களும், அந்தந்தத் தனி மனிதனின் முடிவாகவே அமைவது, MASSIVE ன் ஸ்பெஷாலிடி. இந்த முடிவுகளை எடுப்பதற்கு, நிஜவாழ்வைப் போலவே, அந்த மனிதன் போட்டிருக்கும் யுத்த உடையின் கனம், உடல் அமைப்பு, சுற்றுச்சூழல் ஆகிய பல விஷயங்கள் பயன்படுகின்றன. படு கனமான உடையைப் போட்டிருக்கும் மனிதன், வேகமாகச் செயல்பட இயலாது. இதையும், அவனே முடிவு செய்துகொள்கிறான். அதேபோல், அந்த ஒவ்வொரு மனிதனின் அந்தக் கணத்தின் ஆத்திரம், கொந்தளிக்கும் மனநிலை ஆகிய விஷயங்களும், அவனது போரிடும் திறமையை முடிவுசெய்கின்றன. இப்படி, ஒரு போருக்குத் தேவையான வீரர்களை இந்த அப்ளிகேஷனில் உருவாக்கி, போரிட வைக்கையில், அதில் இருக்கும் ஒவ்வொரு வீரனும், தனக்கு இலகுவாகக் கைவரக்கூடிய முறையில் யுத்தமிடுவான். அவனது செயல்கள், முற்றிலுமாக அவனது வெளிப்பாடாகவே அமைகின்றன – இவைகளை நாம் கண்ட்ரோல் செய்யவே தேவையில்லை – என்பதுதான் MASSIVE ன் அட்டகாசமான ப்ளஸ் பாயின்ட். நிஜவாழ்வில் இரண்டு பெரும்படைகள் பொருதுகையில், அவர்களில் ஒவ்வொருவரையும் எப்படி அந்தத் தளபதிகளால் கண்ட்ரோல் செய்யமுடியாதோ, அதேபோல், இந்த அப்ளிகேஷனிலும் அப்படிச் செய்யத் தேவையில்லை. இருப்பினும், யுத்த முடிவில் எந்தப் படை வெல்லவேண்டும் என்பதை முடிவு செய்யும் ஆப்ஷன் இதில் உள்ளது (லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களைப் பொறுத்தவரை, யுத்தங்கள் கண்ட்ரோல் செய்யப்படவில்லை. அதாவது, நல்லவர்களே வெல்லவேண்டும் என்பது இதில் செயல்படுத்தப்படவில்லை. மாறாக, அது, அந்தந்த வீரர்களின் முடிவாகவே அமைந்தது என்பது துணுக்குச் செய்தி. குறிப்பிட்ட வீரர்களை கொஞ்சம் பயந்தாங்குளிகளாக உருவாக்குவது மூலம், இது நடக்கும்).

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் – முதன்முதலில் MASSIVE உருவாக்கப்பட்டவுடன், அதனைச் சோதித்துப் பார்க்க நடத்தப்பட்ட ‘மாதிரி’ போரில் – இதில், ஒவ்வொரு பக்கமும் ஆயிரம் வீரர்கள் சண்டையிட்டனர் – ஒவ்வொரு வீரனுக்குமான குணநலன்கள் அப்ளிகேஷனில் ஏற்றப்பட்டபின், இரண்டு படைகளும் மோதிக்கொள்ளும் நேரத்தில், படையின் பின்னணியில் இருந்த பல வீரர்கள், போர்க்களத்திலிருந்து ஓட்டம் பிடித்து, பக்கத்தில் இருந்த மலையின் மீது தலைதெறிக்க ஏறிக்கொண்டிருந்தார்களாம் – தப்பிக்கும் பொருட்டு. அவர்களுக்கு அப்படிப்பட்ட ஆணை கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் நோக்கமும் போரிடுவதே. ஆனால், தங்கள் படையினர் கொல்லப்படுவதைப் பார்த்து, பயந்து, இவர்களாகவே தப்பிக்கும் முடிவையும் எடுத்துவிட்டனர். இதுதான் MASSIVE அப்ளிகேஷனின் நம்பகத்தன்மை. கதாபாத்திரங்களுக்கு முடிவெடுக்கும் சக்தியை அளித்துவிடுவது. படைவீரர்களின் மூவ்களை, நிஜமான நடிகர்களை வைத்து Motion Capture செய்தனர். அவ்வளவே.

டெக்னிகல் பிரியர்களுக்காக இந்தப் பத்தி. வாருங்கள். MASSIVE எப்படிச் செயல்படுகிறது என்று பார்க்கலாம். மிகச்சுருக்கமாக, Agent என்பதே, இந்த அப்ளிகேஷனில் define செய்யப்படும் கும்பலில் உள்ள ஒரு நபருக்குப் பெயர். இந்த ஒரு நபரின் அசைவுகளுக்காக, முதலில் ஒரு நடிகரை நடிக்க வைத்து, மோஷன் கேப்சர் மூலமாக அவரது அசைவுகள் பதிவு செய்யப்பட்டு, இந்த ஏஜெண்டுக்கு இன்புட் செய்யப்படுகின்றன. இதன்பின், Motion Tree என்ற procedure மூலமாக, இந்த ஏஜண்ட் செய்யவேண்டிய சின்னச்சின்ன அசைவுகள் இன்புட்டாகக் கொடுக்கப்படுகிறது. முதுகு சொறிவது, கால் ஆட்டுவது, தும்முவது ஆகியன. இதன்பின், Rigid Body Dynamics என்ற கான்செப்ட் – அதாவது, குறிப்பிட்ட உயரம், சுற்றளவு, பருமன் உடைய ஒரு நபர் அல்லது பொருள், இத்தனைவிதமான அசைவுகளையே வெளிப்படுத்த முடியும் என்று கணக்கிடுவது – மூலமாக, அதன் அசைவு, வரையறுக்கப்பட்டுவிடுகிறது. அதாவது, அதன் boundary; Upper scale value. இதனைத்தாண்டி அந்த நபரோ அல்லது பொருளோ அசைவுகளை வெளிப்படுத்த இயலாது. மோஷன் கேப்சரோடு இந்த ரிஜிட் பாடி டைனாமிக்ஸ் சேரும்போது, தத்ரூபமான அசைவுகளை வெளிப்படுத்த முடிகிறது.

இதுகுறித்து மேலும் விவரமான டெமோ ஒன்றினைப் பார்க்க, இதோ வீடியோ. இதில், ஸ்டீஃபன் ரெகலஸே விரிவாக MASSIVE பற்றி விளக்குகிறார். இதனைப் பார்த்தால் தெளிவாகிவிடும்.

இப்படியொரு அப்ளிகேஷனை உருவாக்குவதற்கு ரெகலஸ் பட்ட கஷ்டங்கள், தனிக்கதை. ஆனால் அது இங்கே தேவையில்லை.

இந்த MASSIVE அப்ளிகேஷன், படத்தில் எங்கெங்கு உபயோகிக்கப்பட்டது என்பதையும் விரிவாகப் பார்க்கலாம்.

Fellowship Of the Ring படத்தின் prequel – அதாவது ஆரம்பக் காட்சி நினைவிருக்கிறதா? Battle Of Dagorlad . ஸாரோனுக்கு எதிராக கில்- கலாட் மற்றும் எலேண்டில் ஆகியவர்களின் பெரும்படை, ஸாரோனின் படையை எதிர்கொள்ளும் காட்சி. படத்தின் ஆரம்பத்தில் மிகச்சில நிமிடங்களே வரும் காட்சி. இதில் MASSIVE உபயோகப்படுத்தப்பட்டது. அதேபோல், படத்தின் இரண்டாம் பாகத்தில் வரும் Battle of Helm ‘s Deep என்ற பிரம்மாண்டப் போர்க்களத்திலும். கூடவே, இறுதி பாகத்தில் வரும் போர்க்களத்திலும் MASSIVE பயன்படுத்தப்பட்டது. இந்த இரண்டு போர்க்களங்களையும், extended version ல் பார்த்தால், மலைத்துப் போவீர்கள் என்பது உறுதி.

இதோ வீடியோக்கள்.

Battle of Helm’s Deep–part 1

Battle of Helm’s Deep–part 2

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் வெளிவந்ததும், MASSIVE உலகப்புகழ் அடைந்தது. இதனைத்தொடர்ந்து, எண்ணற்ற படங்களில் பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு படத்திலும் உபயோகப்படுத்தப்படுத்த, மேலும் இம்ப்ரவைஸும் செய்யப்பட்டது (Ant Bully படத்தில், மிக நெருக்கமாகப் பல எறும்புகளின் முகங்கள் காட்டப்படவேண்டியிருந்ததால், ஸிஜி இன்னமும் மேஸிவில் மெருகேற்றப்பட்டது). அதேபோல், கிங்காங் படத்தில், ந்யூயார்க் நகரின் மனிதர்களும் கார்களும் பஸ்களுமே, மேஸிவை உபயோகப்படுத்திச் செய்யப்பட்டனவே.

இப்படியாக, MASSIVE, இன்றும் திரைப்படங்களின் இன்றியமையாததொரு அம்சமாக விளங்குகிறது.

தொடரும் . . .

  Comments

16 Comments

  1. உங்கள் பதிவு படம் பார்க்கத் தூண்டுகிறது

    Reply
  2. //தனது கத்தியை வீரன் ஒன்றின் தலையிலோ கழுத்திலோ அல்லது (இயக்குநர் சாடிஸ்டாக இருந்தால்) மர்ம உறுப்பிலோ செலுத்துகிறான்//
    ‘இயக்குனர் சாடிஸ்டாக இருந்தால்’ என அடைப்புக்குறிக்குள் வார்த்தைகளை அடைத்து தப்பிக்க முடியாது .நீங்கள் இயக்குனர் பாலாவைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்பதை சின்னபுள்ள கூட சொல்லிடும்.

    Reply
  3. LOTR தொடரை வெற்றிகரமாக அதே நேரத்தில் சுவாரஸ்யமாக சொல்லி வருகிறீர்கள்…நண்பரே!
    உங்களுக்கு இனிய பரிசு காத்திருக்கிறது.கடைசிப்பகுதியில் சொல்கிறேன்.அது வரை சஸ்பென்ஸ்.

    Reply
  4. மிரட்டல்… Salute to you… வேற ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல…

    Reply
  5. இந்த massive வோட copyright மற்றும் இத்யாதி இத்யாதி உரிமங்கள் யாரிடம் இருக்கும்…. ??? WETA ???

    Reply
  6. மார்தட்டி சொல்வேன்…..

    இவனெண்ட தளபதி!!!
    இவனெண்ட நண்பேன்டா!!!

    Reply
  7. // மார்தட்டி சொல்வேன்….. //
    யாரோடதுன்னு கேக்க மாட்டேன்..ஏன்னா நா திருந்திட்டேன்………….இனிமேலு அமைதியா வந்திட்டு அமைதியா போயிருவேன்………..

    Reply
  8. // வ்வொரு பக்கமும் ஆயிரம் வீரர்கள் சண்டையிட்டனர் – ஒவ்வொரு வீரனுக்குமான குணநலன்கள் அப்ளிகேஷனில் ஏற்றப்பட்டபின், இரண்டு படைகளும் மோதிக்கொள்ளும் நேரத்தில், படையின் பின்னணியில் இருந்த பல வீரர்கள், போர்க்களத்திலிருந்து ஓட்டம் பிடித்து, பக்கத்தில் இருந்த மலையின் மீது தலைதெறிக்க ஏறிக்கொண்டிருந்தார்களாம் – தப்பிக்கும் பொருட்டு. அவர்களுக்கு அப்படிப்பட்ட ஆணை கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் நோக்கமும் போரிடுவதே. ஆனால், தங்கள் படையினர் கொல்லப்படுவதைப் பார்த்து, பயந்து, இவர்களாகவே தப்பிக்கும் முடிவையும் எடுத்துவிட்டனர். இதுதான் MASSIVE அப்ளிகேஷனின் நம்பகத்தன்மை. கதாபாத்திரங்களுக்கு முடிவெடுக்கும் சக்தியை அளித்துவிடுவது //

    அந்த அளவுக்கா இருக்குது……இது குறித்து மேலும் விரிவாக டெனிம் மோகன் மாதிரி ஆட்கள் விளக்கினால் நலம். என்ணன்னே……நீங்க சொல்றது கிட்டத்தட்ட AI ஒத்து இருக்கு…..எனக்கு இது ரொம்ப பிரமிப்பா இருக்கு…..
    video gameல வரவதும் கூட இந்த மாதிரிதானா ????

    Reply
  9. //இது குறித்து மேலும் விரிவாக டெனிம் மோகன் மாதிரி ஆட்கள் விளக்கினால் நலம்//

    அவரே விரிவாகத்தான் எழுதி உள்ளார்,இதுவே எத்தனை பேருக்கு புரிந்தது என்று தெரியவில்லை,மேலும் விளக்குரேனு கொழப்ப விரும்பவில்லை,இதைப் பற்றி விளக்க வேண்டுமானால் அதில் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பதிவு போடவேண்டும்,அவ்வளவு குழப்பும்,

    மிக தெளிவான அலசல் தேள்,படித்து புரிந்து மிக தெளிவாக எழுதி உள்ளீர்கள்,இதில் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் Fuzzy Logic மிக பயனுள்ளது,நாங்கள் ஸ்கிரிப்ட் (python,mel) டில் பயன்படுத்தக்கூடிய ஓன்று,வேற என்ன சொல்ல,கலக்கிடீங்க போங்க ..

    Reply
  10. அப்புறம் தல இன்சைட் பதிவு எப்ப?

    Reply
  11. @ boyindahood, Lucky & Veerasamy – 🙂

    @ உலக சினிமா ரசிகரே – 🙂 நான் பாலாவைச் சொல்லலன்னு சொன்னா நம்பவா போறீங்க 🙂 . . நீங்க சொன்னது கூட நல்லாத்தான் இருக்கு 🙂 . . அப்புடியே வெச்சிக்கிருவோம் . .

    அப்புறம், என்னங்க பரிசு அது? ஏதாவது பொற்கிழி குடுக்கப்போறீங்களா? ஆவலைக் கிளப்பி உட்டுட்டீங்களே பாஸ் 🙂 . . இதுக்காகவாவது 52 எபிசோட் இல்லாம, சீக்கிரமாவே முடிக்கறேன் 🙂 (ஒருவேளை, அதான் உங்க ப்ளானா?)

    @ முரளி – MASSIVE காபிரைட்ஸ், கட்டாயம் Stephen Regelous கிட்டதான் இருக்கு. அவரு கம்பெனியே ஆரம்பிச்சி பெரிய ஆள் ஆயிட்டாரு 🙂 . .

    @ புள்ளி ராஜா (எ ) ஹா.பா – உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. ஏதோ உங்களைப் போல இல்லாங்காட்டியும், என்னால முடிஞ்ச அளவு இன்ட்ரஸ்டிங்கா எழுத இது தூண்டுகிறது

    @ கொழந்த – வீடியோ கேம்ஸ் இது மாதிரி இல்ல. அது pre – defined . அதுல நாம நினைக்குற இன்புட்ஸ் குடுக்க முடியாதே . .இது exclusive . . ரொம்ப கஷ்டப்பட்டுதான் இதை உருவாக்கி இருக்காங்க

    @ டெனிம் – நன்றி. ஆக்சுவலா fuzzy Logic பத்தி நிறைய எழுதனும்னு நினைச்சேன். ஆனா அது கட்டாயம் எல்லாரையும் குழப்பும்னுதான் சில வார்த்தைகள்ல நிறுத்திபுட்டேன் 🙂 . .

    இன்சைட் பதிவு, போடணும். இந்த வீக்கெண்டு முயல்கிறேன்.

    Reply
  12. நானும் பார்க்கறேன். தொடர் ஆரம்பிச்சதுல இருந்தே… எதோ வஞ்சப்புகழ்சி அணியிலேயே பேசறீங்களே?? மீ திங்கிங்!! 🙂

    Reply
  13. மிக அழகாக தெளிவான நடையில் எழுதுகிறீர்கள். அடுத்த பாகம் எப்பொழுதுவென ஏங்க வைத்தததே உங்கள் வெற்றி.

    Reply
  14. நண்பா,
    அருமை,11 பாகமும் எழுத எவ்வளவு உழைத்தீர்களோ?அந்த உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்,ஹாலி பாலி சொன்னது போல இவனெண்ட தளபதி,இவனெண்ட நண்பேண்டா,வழிமொழிகிறேன்.

    Reply

Join the conversation