LOTR: The Series – 12 – The music: Howard Shore

by Karundhel Rajesh July 14, 2011   war of the ring

Lord of the Rings படத்தின் சிறந்த ப்ளஸ்களில் ஒன்று – அதன் இசை. இதுவரை வந்த ஹாலிவுட் படங்களில், மிகச்சிறந்த இசையமைப்பு கொண்டிருக்கும் படங்களில் ஒன்றாக அமைந்தது, இப்படங்களின் இசை. ஆனால், படம் வெளிவந்திருந்த சமயத்தில், இப்படங்களின் , இசையமைப்பாளர், ஜெரி கோல்ட்ஸ்மித் போலவோ, அலன் சில்வஸ்த்ரி போலவோ, ஹான்ஸ் ஸிம்மர் போலவோ, பெரிய அளவு புகழ் அடைந்திருக்கவில்லை. அக்காலகட்டம் வரை, அந்த இசையமைப்பாளர், பல நல்ல படங்களுக்கு இசையமைத்திருந்த போதிலும், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களே அவருக்குப் பெருமளவு புகழை ஈட்டித்தந்தன.

அவர்தான் ஹோவார்ட் ஷோர்.

மிகப்பெரிய இசையமைப்பாளர்களாக இருந்த பலரை விட்டுவிட்டு, பிரம்மாண்டப் படங்களில் அனுபவம் இல்லாத ஹோவார்ட் ஷோரை ஜாக்ஸன் தேர்வு செய்த மர்மம் என்ன?

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் திரைக்கதையை எழுதிமுடித்தவுடன், ஜாக்ஸன் செய்த முக்கியமான வேலைகளில் ஒன்று, படத்திற்கான இசையை முடிவு செய்தது. படத்தின் ஒவ்வொரு அம்சமும் துல்லியமாகவும் மிகச்சிறந்ததாகவும் இருக்கவேண்டும் என்று முடிவு செய்த ஜாக்ஸன், இப்படத்துக்கான இசை, ஆபெரா (Opera) பாணியில்தான் இருக்கவேண்டும் என்று எண்ணினார். காரணம், ஆபெராக்களில், பாடுபவர்களது குரலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்கள் பண்டையதொரு காலத்தில் நடந்த கதையாக இருந்ததால், பிரம்மாண்டமான இசைக்குப் பதில், ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமான ஆபெரா முறையில் அமைந்த இசைதான் சரி என்பது ஜாக்ஸனின் முடிவாக இருந்தது. ஆகவே, இசையின் வகையைப் பற்றி யோசித்ததும், அத்தகைய இசையை எவரால் எழுத முடியும் என்ற தேடுதல் தொடங்கியது. அந்த நேரத்தில், ஹோவார்ட் ஷோர், நாவல்களை வைத்தும் இலக்கியங்களை வைத்தும் எடுக்கப்பட்டிருந்த பல படங்களுக்கு இசையமைத்திருந்ததால் (Naked Lunch – William S. Burroughs, Crash – J. G. Ballard, Silence of the Lambs – Thomas Harris, Looking for Richard – various works of William Shakespere), அவரை நேரில் பார்த்து இப்படங்களைப் பற்றி விவாதிக்க ஜாக்ஸன் விரும்பினார். இதன் காரணமாக, ந்யூஸிலாண்ட் சென்று ஜாக்ஸனை சந்தித்தார் ஷோர். இச்சந்திப்பு, ஜாக்ஸன் இப்படங்களின் திரைக்கதையை எழுதிமுடித்திருந்த காலத்தில் நடந்தேறியது. ஹோவார்ட் ஷோர், நம்மூர் இசையமைப்பாளர்களைப் போல் கர்வம் இல்லாத நபராக இருந்ததால் (’என்னாலதாய்யா அந்தப் படமே ஓடப்போவுது… நான் இசைக்கடவுளாச்சே’), ஜாக்ஸனைச் சந்திப்பதற்கு முன்னர், ஜாக்ஸனின் பிற படங்களைத் தேடிப்பிடித்துப் பார்த்தார் – அப்போதுதான் ஜாக்ஸனின் ஸ்டைல் பிடிபடும் என்பதால். இதன்பின், ஜாக்ஸனைப் பற்றிய ஒரு முடிவுடன், அவரைச் சந்தித்தார் ஹோவார்ட் ஷோர்.

ஹோவார்ட் ஷோருக்கும் ஜாக்ஸனுக்குமான சந்திப்பு, இருவருக்குமே ஒருவரையொருவரைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தைத் தோற்றுவித்ததால், ஹோவார்ட் ஷோர், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த அறிவிப்பைக் கண்டு ஆச்சரியமும் கோபமும் அடைந்தவர்களே அதிகம். ஆனால், இதையெல்லாம் பற்றி அலட்டிக்கொள்ளாத ஹோவார்ட் ஷோர், ஜாக்ஸனிடம் போட்ட கண்டிஷன் ஒன்றே ஒன்றுதான். அது – படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குத் தானும் வருவேன் என்பதே. ஆகவே, படப்பிடிப்பு தொடங்கியதும், ந்யூஸிலாண்ட் சென்றார் ஹோவார்ட் ஷோர். ஒவ்வொரு இடமாகச் சென்று, அந்த இடத்தின் முக்கியத்துவம், அதில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், அந்தக் காட்சியின் அவசியம், அதில் இடம்பெறும் உணர்ச்சிகள், கதையின் திருப்பங்கள் ஆகிய அனைத்தையும் புரிந்துகொண்டார் ஷோர். இதன்பின்னர், அங்கேயே அமர்ந்து, படத்தின் முதல் இசைத்துணுக்கை எழுதினார். அது – Mines of Moria . இது, The Doors of Durin (6:03), Moria (2:27), Gollum (2:26), Balin’s Tomb (8.30), The Bridge of Khazad – Dum (8:00) ஆகிய ஐந்து குறிப்புகள் அடங்கியது. Mines of Moria என்ற அந்த இசைக்குறிப்பை எழுத ஷோர் எடுத்துக்கொண்ட காலகட்டம் – மூன்று மாதங்கள் ! இத்தனைக்கும், படத்தில் இந்த மோரியா ஸீக்வென்ஸ் வருவது, மொத்தம் இருபதிலிருந்து இருபத்தைந்து நிமிடங்கள் மட்டுமே என்பதை எண்ணிப் பார்த்தால், ஹோவார்ட் ஷோர் செய்த ரிஸர்ச் தெரியவரும். இந்த மோரியா ஸீக்வென்ஸை எழுதுவதற்கும் முன்னர், டால்கீனைப் பற்றிப் படிக்க ஆரம்பித்திருந்தார் ஷோர். டால்கீன் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் எழுதிய காலம், அவருக்கு ஏன் இதை எழுதத் தோன்றியது என்பனபோன்ற விஷயங்கள் ஆகியவற்றையும் படித்தார் ஷோர். இதன்பின், மூன்று நாவல்களையும் படித்தார். இதற்குப் பின்னரே, மோரியாவில் கைவைத்தார் ஷோர்.

Mines of Moria என்ற அந்த இசைக்குறிப்பை மையமாக வைத்துக்கொண்டு, அதற்கு முன்னரும் பின்னரும் பயணப்பட ஆரம்பித்தார் ஷோர். ஃபெலோஷிப்பில் வரும் ஒவ்வொரு இடத்துக்கும், ஒவ்வொரு இசைக்குறிப்பு எழுதப்பட்டது. ரிவெண்டலுக்கு ஒரு இசைக்குறிப்பு, லாத்லாரியனுக்கு ஒரு இசைக்குறிப்பு (ரிவெண்டல் மற்றும் லாத்லாரியன் ஆகிய இரண்டுமே எல்ஃப்களின் இடம் என்றாலும், ஒவ்வொன்றும் மற்றொன்றை விட முற்றிலும் மாறுபட்டு இருந்ததால், இந்த இசையும் அதேபோல் மாறுபட்டே இருக்கும்), ஐஸங்கார்டுக்கு ஒரு குறிப்பு, ஷையருக்கு ஒன்று என்பதுபோலக் குறிப்புகள் ஷோரினால் எழுதப்பட்டன. இப்படத்துக்கு ஷோர் எழுதிய இசையின் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவெனில், இசையை மட்டும் கேட்டாலே, எது எந்த இடத்துக்கானது என்பது நமக்குச் சட்டென்று நினைவு வந்துவிடும்.

மட்டுமல்லாது, நாவல்கள் நெடுக டால்கீன் பற்பல மொழிகளை உருவாக்கியிருந்ததால், அந்தந்த இடங்களில் அதே மொழிகளையும் ஷோர் பயன்படுத்தினார். இதற்காக, டால்கீன் ஸ்பெஷலிஸ்ட் ஒருவர் ஷோருடனே இருந்து, பின்னணி பாடும் கலைஞர்களுக்கு அந்தந்த மொழியின் வார்த்தைகளைப் பயன்படுத்தும் உச்சரிப்பு விதத்தையும் சரியாகக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.

படத்தைக் கவனித்தவர்களுக்கு ஒரு விஷயம் புலப்பட்டிருக்கும். படத்தின் துவக்கத்தில் இருந்து, ஃபெலோஷிப் என்று அழைக்கப்படும் ஒன்பதுபேர்கள் வரும் காட்சியிலெல்லாம், ஒரு தீம் இசை உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். கம்பீரமான அந்த இசையை, இங்கே (பார்க்கவும் செய்யலாம்) கேட்கலாம். ஃப்ரோடோவும் ஸாமும் முதலில் சந்திக்கும் இடத்தில் இந்த இசை ஆரம்பிக்கிறது. அச்சமயத்தில் இரண்டு பேர் மட்டும் இணைவதால், மிக மெல்லிய இசையாக அது கேட்கும். இதன்பின்னர் பிப்பினும் மெர்ரியும் ஃப்ரோடோ மற்றும் ஸாமைச் சந்திக்கையில், சற்றே வலுப்பெறும். இதன்பின் அரகார்னும் கண்டால்ஃபும் இவர்களுடன் இணைகையில், இன்னமும் கம்பீரமாக ஒலிக்கும். ரிவெண்டலில் ஒன்பதுபேர் கொண்ட அணியினர் உருவாக்கப்பட்டு, தங்களது பயணத்தைத் தொடங்கும் அந்த நிமிடத்தில், முதன்முறையாக இந்தத் தீம் இசையை, அதன் முழுப்பரிமாணத்துடன் நாம் கேட்போம். மலைகளின் ஊடாக ஒவ்வொருவராக நடந்துவருகையில் ஒலிக்கும் அந்த இசையைக் கேட்காதவர்கள் யாரும் இருக்க இயலாது. இதன்பின், இந்த அணியில் இருந்து ஒவ்வொருவராகப் பிரியும் நேரங்களிலெல்லாம் இந்த இசை, மெதுவாக வலுவிழக்கும். முதல் பாகத்தின் இறுதியில், ஃப்ரோடோவும் ஸாமும் மட்டும் படகில் செல்லும் நேரத்தில், முற்றிலுமாகச் சிதைந்துபோய், இந்த அணியினரின் பிரிவையும், ஃபெலோஷிப்பின் சிதைவையும் நமக்குக் காட்டும் வகையில் இது இருக்கும். படத்தைப் பார்ப்பவர்கள் கவனியுங்கள்.

இந்தப் படத்தில், ஒவ்வொரு கதாபாத்திரமும் இன்னொரு கதாபாத்திரத்தோடு சேர்ந்து காணப்படும்போது, அந்தந்தக் கதாபாத்திரங்களின் தனித்தன்மையான இசை ஒன்றாகக் கலக்கப்பட்டு, ஒரு புதிய அனுபவத்தை – அதே சமயம் அக்கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் நமக்குப் புலப்படுத்தும் வகையில் – எழுதப்பட்டிருப்பது இதன் இன்னொரு சிறப்பு.

படத்தின் இசையின் மற்றொரு குறிப்பிடத்தகுந்ததொரு அம்சம் – நாம் ஏற்கெனவே பார்த்திருக்கும் ஆபெரா வடிவம். குரல்களை வைத்துப் பின்னப்பட்டிருக்கும் இசை. இதைச் சற்றே விளக்கமாகப் பார்க்கலாம். படத்தில் இடம்பெறும் ஹாபிட்கள், சிறுவர்களைப் போன்ற உருவங்களை உடையவர்கள். ஆகவே, முப்பது பேர்கள் கொண்ட ஒரு சிறுவர் குழுவை வைத்து, ஒரு இசைக்குறிப்பு எழுதப்பட்டது. இந்த இசைக்குறிப்புக்கான பாடல் வரிகள், டால்கீன் உபயோகித்த எல்விஷ் மொழியில், திரைக்கதையில் உதவியவரான பிலிப்பா போயென்ஸினால் (ஜாக்ஸனின் மனைவியும், திரைக்கதையை ஜாக்ஸனுடன் இணைந்து எழுதியவருமான ஃப்ரான் வால்ஷின் நெருங்கிய தோழியும் ஆவார் இவர் என்பதை முதல் சில பாகங்களில் பார்த்திருக்கிறோம்) எழுதிக்கொடுக்கப்பட்டன. முதன்முதலில் ஃப்ரோடோ ஷையரை விட்டுப் பிரியும் இடத்தில் ஒலிக்கத்துவங்கும் இசை இது. ஹாபிட்களுக்கு அவ்வளவு தத்ரூபமாகப் பொருந்தும். அதேபோல், நாஸ்கூல்கள் எனப்படும் ஒன்பது தீய மன்னர்களுக்கான இசை. Revelation of the Ringwraiths என்ற ஒரு பாடல் வடிவம், பிலிப்பாவினால் எழுதப்பட்டது. இது, ஆவேசமான கோரஸாகும். இந்த நாஸ்கூல்கள் வரும் காட்சிகளிலெல்லாம், ஒரு துடிப்பான கோரஸ் ஒலிக்கும். இந்தப் பாடல், டால்கீன் உருவாக்கிய Adunaic என்ற மொழியில் பிலிப்பாவினால் எழுதப்பட்டது. போலவே, ரிவெண்டல் மற்றும் லாத்லாரியன். இரண்டுமே எல்விஷ் மொழிகளில் எழுதப்பட்ட வரிகள் என்றாலும், ரிவெண்டலில், Quenya என்ற வடிவமும், லாத்லாரியனில் Sindarin என்ற எல்விஷ் மொழியின் பழைய வடிவத்திலும் பாடல் வரிகள் பிலிப்பாவினால் எழுதப்பட்டன. படம் பார்க்கும் நமக்கு எந்த மொழியும் புரியப்போவதில்லை. ஆகவே, என்ன எழுதினாலும் தப்பில்லை என்று கருதாமல், சின்சியராக அமர்ந்து அந்தந்த மொழியில் பாடல் வரிகளை எழுதிக்கொடுத்த பிலிப்பாவின் உழைப்பு, அதற்கேற்றவாறு இசையமைத்த ஷோரின் முயற்சி ஆகியவை பாராட்டத்தக்கவையா இல்லையா? இதுதவிர, படத்தில் வரும் மோதிரத்துக்கென்றே ஒரு குறிப்பிட்ட இசைவடிவம் உண்டு. அந்த மோதிரமும் படத்தில் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது. ஆகவே, இந்த மோதிரத்தின் குரலாக, சில காட்சிகளில், Black Speech என்ற கோரஸ் உபயோகப்படுத்தப்பட்டது.

ஹோவார்ட் ஷோரின் நோக்கம், இந்த மூன்று பாகங்களுக்கான இசையையும், ஃபெலோஷிப் படத்தில் அழுந்தப் பதித்துவிடவேண்டும் என்பதாக இருந்தது. முதல்பாகத்தில் வெளிப்படும் இசைதான் மற்ற இரண்டு பாகங்களுக்கு அடித்தளம் என்பதால், மிகுந்த கவனத்துடன், ஒவ்வொரு நிமிடமாக, இசையைச் செதுக்கினார் ஷோர்.

இப்போது, இதைப் படிக்கும் நண்பர்களுக்காக, மேலே நான் விவரித்த ஒவ்வொரு இசை வடிவத்தையும் இங்கே கொடுத்திருக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் மூன்று பாகங்களின் மொத்த இசைக்குறிப்புகளும், இங்கே க்ளிக்கித் தறவிறக்கிக்கொள்ளலாம். இவை, எக்ஸ்டெண்டட் எடிஷனில் உள்ளவை. படங்களில் வரும் அத்தனை இசைக்குறிப்புகளும் இதில் அடங்கும். இதைக் கேட்பதே ஒரு அட்டகாசமான அனுபவம்.

தொடரும் . . .

  Comments

13 Comments

  1. இசைக்கும் நமக்க்கும் கொஞ்சம் தூரம்.. நா அப்பாலிக்கா வரேன்…

    Reply
  2. நண்பரே!
    உங்கள் பதிவை புதிதாக படிப்பவருக்கு….
    சினிமாவின் உள்ளடக்கத்தை வெகு எளிதாக கற்று கொடுக்கிறீர்கள்.
    உங்கள் பதிவு என்னைப்போன்ற தற்குறிகளுக்கு கொண்டாட்டம்.

    Reply
  3. << Flash Game Developers க்கு இது ரொம்ப உதவியா இருக்கும் ப்ளீஸ்>>
    Flash Game Developers அதுவும் சின்ன சின்ன games பண்றவங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு, நீங்க bug இல்லாம game செய்வீங்களா? உங்களுக்கு நிரந்தர வருமானம் வேணுமா? நீங்க உங்க game-ஐ விற்க கூட வேண்டாம். இன்னும் விவரமா தெரிஞ்சுக்க இதை Dollygals Developers (http://dollygals.com/developers) கிளிக் பண்ணுங்க.

    Reply
  4. super pathivu..pesama neenkalum cablesankar madhari,ithay book-a publish pannalam..nalla usefull-a irukum nanba..ungalin eluthukal padipavargalai kavernthu ilukum.chinna doubt..eppadi ivvalvu details collect panninka..u r gr8 man.keep rocking buddy.

    Reply
  5. ஒரு மனிதனின் படைப்பை மேலும் மேலும் மெருகேற்றுவதர்க்கு எத்தனை உழைப்பு….ஜாக்சன் முதல் கருந்தேள் வரை…. பிரம்மிப்பா இருக்கு… டோல்கின் மட்டும் உயிரோட இருந்து இதலாம் பாத்துட்டும் கேட்டுட்டும் இருந்தாருன்னா அவர விட சந்தோஷ படுறவன் எவனுமில்ல…

    Reply
  6. பை த வே எனக்கு இதுல ரொம்ப புடிச்சது ஷைரோடது… எந்த வித ஆர்பட்டமும் இல்லாம் ஒரு அப்படியே ஹாபிட்ட்ஸ் னுடைய கொண்டாட்ட வாழ்வை கேட்கலாம்…

    Reply
  7. // எண்ணிப் பார்த்தால், ஹோவார்ட் ஷோர் செய்த ரிஸர்ச் தெரியவரும் //
    அவுரையே இங்க ஒருத்தர் பீட் அடிச்சுகிட்டு இருக்கார்………….

    இசையை கேக்காமல் எதுனா சொல்றது நல்லாயிருக்காது………….

    மொதல்ல Nazgul – இத்த கேக்குறேன்….இந்த பேரு கலக்கலா இருக்கு……………..

    Reply
  8. மொத்தம் இருக்குற 24 Film Craftsயையும் சுத்தி வர உத்தேசமா………………….
    அப்புடி எதாவது நெனப்பு இருந்தா முன்கூட்டியே சொல்லிருங்க…………..குறைந்தபட்சம் ஒரு missed callலாவது விடுங்க………..

    Reply
  9. @ ஆனந்த் – அடப்பாவி.. எஸ்கேப் ஆயிட்டாருய்யா 🙂

    @ உலக சினிமா ரசிகரே – நீங்க….. தற்குறி? அப்போ நான் ஞானசூன்யம்லா 🙂 . . நான் ரசித்த ஒரு விஷயத்தை, நண்பர்களிடம் பகிர்வதில் எனக்கு சந்தோஷம் 🙂

    @ kugan – விளம்பரத்த போட்டீங்க 🙂 . . ரைட்டு

    @ ரா. ராஜ்குமார் – நன்றி.

    @ பெல்பாட்டம் மொதலாளி – பேரு கலக்கலா கீது நைனா . . கிரில வடிவேலை ஆர்த்தி கூப்புதிர பேருல்லா இது? 😉 கரெக்டா புடிச்சி வெச்சிருக்கீங்க போலயே 🙂

    @ Cute Photos – மிக்க நன்றி. இத்தனை டீட்டெயிலும், இன்டர்நெட்டில் விரவிக் கிடக்கிறது. என் பணி, அதைத் தொகுப்பது மட்டுமே 🙂 . .

    @ முரளி – டோல்கீன் மட்டும் உயிரோட இருந்தா, லார்ட் ஆப் த ரிங்ஸ் பார்த்துட்டு, பீட்டர் ஜாக்சனை பாரட்டிருக்கலாம் (அல்லது, அதில் பல இடங்களில் திருத்தம் செய்த ஜாக்சனைத் திட்டியும் இருக்கலாம்) 🙂 . . எனக்கும் ரொம்பப் புடிச்ச இசைக்குறிப்பு, ஷையர். கூடவே, the caverns of Isengard 🙂

    @ கொயந்த – நாந்தான் ஆல்ரெடி சொல்லிட்டனே. . .ஐம்பத்திரண்டு எபிசோட்னு 🙂 . . கன்னித்தீவு கதை தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் 🙂 . . செத்தீங்க எல்லாரும் 🙂

    Reply
  10. // ஐம்பத்திரண்டு எபிசோட்னு //

    ணா……………வெளயாட்டுகுத்தான சொல்றீங்க ?? !!!!!

    Reply

Join the conversation