Lucia (2013) – Kannada

by Karundhel Rajesh September 15, 2013   Kannada films

பெங்களூரிலேயே சில வருடங்களாக இருந்தாலும், கமர்ஷியல் கன்னடப்படம் ஒன்றுகூட இன்றுவரை பார்த்ததில்லை. பயமும் பீதியும்தான் காரணம். கமர்ஷியல் கர்நாடகப்படங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு சுருள்முடி வைத்துக்கொண்டு சன்க்ளாஸ் ஒன்றும் போட்டுக்கொண்டு அபாயகரமான இடங்களில் ஹீரோயின்களை கடிப்பார்கள். ஆனால், கலைப்படங்கள் பார்த்திருக்கிறேன். உபயம் – கிரீஷ் காசரவள்ளி. நேற்றுதான் முதன்முறையாக ஒரு கமர்ஷியல் கன்னடப்படம் ஒன்றை பார்த்தேன்.

இந்தப் படத்தின் விசேட அம்சத்தைப் பற்றி திரு.சிவராமன், தினகரன் வெள்ளிமலரில் சில வாரங்களுக்கு முன்னர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். மக்களிடம் பணம் வசூலித்தே எடுத்து முடிக்கப்பட்ட படம் இது. பட்ஜெட் – 75 லட்சம். தனது படத்தை தயாரிக்க எந்தத் தயாரிப்பாளரும் முன்வராததால், தனது ப்லாக்கில் அதைப்பற்றிப் புலம்பியிருந்தார் இயக்குநர் பவன் குமார். இதோ இங்கே அவரது கட்டுரையைப் படிக்கலாம். கன்னடப்படங்கள் ரீமேக்களாகவே இருப்பது தவறு என்றும், சொந்தமாக ஒரு திரைக்கதையை எழுதியிருக்கும் தனக்கு எந்த வாய்ப்பும் இதுவரை வரவில்லை என்றும் அவர் குமுறியிருந்தார்.

இதன் பலனாக, ஒவ்வொருவராக அவரது படத்துக்கு ஃபைனான்ஸ் செய்ய முன்வர, இப்படிப்பட்ட பொதுஜனங்களிடமிருந்து பெற்ற தொகையை வைத்தே முழுக்க முழுக்க இந்தப் படத்தை இயக்கி வெளியிட்டிருக்கிறார் பவன் குமார். இதுவரை நெட்டில் கிடைத்த தகவல்களின்படி, உதயா டிவி இந்தப் படத்தை 95 லட்சத்துக்கு வாங்கியிருக்கிறது. தவிர இதுவரை ஒரு கோடி ரூபாயை திரையரங்குகளில் வசூலித்திருக்கிறது இந்தப்படம்.

Lucid Dreaming என்பதே இந்தப் படத்தின் மைய இழை. அதைப்பற்றி எழுத முற்பட்டால் படத்தின் முக்கியமான சஸ்பென்ஸ் வெளியே வந்துவிடும் என்பதால் அதைப்பற்றி நீங்களே படித்துக்கொள்ளுங்கள். கூடவே, கன்னடக் கவியான கனகதாஸரின் ஒரு முக்கியமான பாடலை வைத்தே இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பாடலும் படத்திலேயே வருகிறது.

படத்தின் ஹீரோ – நிகில். ஒரு சராசரி தியேட்டரில் டார்ச் அடித்து மக்களை இருட்டில் அமர வைப்பவன். ஒருநாள் அவனது ஏரியாவில் ஒரு பெண்ணை கவனிக்கிறான். அந்தப் பெண் – ஸ்வேதா. பார்த்தவுடன் அவனுக்கு அந்தப்பெண்ணை பிடித்துப்போகிறது. அந்தப் பெண், அங்கு ஒரு பீட்ஸா ஹட்டில் வேலை செய்வதை தெரிந்துகொள்கிறான். அவனுக்குப் பெண் பார்க்கும் அவனது பெற்றோர், தற்செயலாக ஸ்வேதாவையே செலக்ட் செய்ய, நிகிலுக்கு சந்தோஷம். ஆனால், தியேட்டரில் டார்ச் அடிப்பவனை மணந்துகொள்ள எந்தப் பெண் முன்வருவாள்?

இதனால் பிரச்னை துவங்குகிறது. இதன்பின் என்ன ஆனது என்பதே இந்தப்படத்தில் சொல்லப்படும் மூன்று கதைகளில் ஒரு கதை.

பல்ப் ஃபிக்‌ஷனைப் போன்று இந்தப் படத்தில் மூன்று கதைகள் சொல்லப்படுகின்றன. நான் – லீனியர் வடிவில். மூன்று கதைகளும் அவ்வப்போது இண்டர்கட் ஆகின்றன. படம் முழுக்கவே இப்படித்தான். ஆனால், அதிலும் இருக்கும் சுவாரஸ்யம், அந்த மூன்று கதைகளும் தெளிவாகவே விளங்கும்படி இயக்குநர் செய்திருக்கும் சாமர்த்தியம். அதையெலாம் இங்கே எழுத முடியாது. மூன்று கதைகளுக்குமே மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

படத்தின் சஸ்பென்ஸ் ஆரம்பத்திலேயே வெளிப்பட்டுவிடும் வகையான திரைக்கதை இது. ஆனால் அதை யாராலும் உணர முடியாது. படத்தின் இறுதியில் முடிச்சுகள் அவிழும்போதுதான் உண்மை புரியும். ஆனால் அதற்கான மிகத்தெளிவான க்ளூ படத்தின் பாதியில் வருகிறது.

இத்தகைய படத்தை தமிழில்கூட நான் இதுவரை பார்த்ததில்லை. மிக மிக வித்தியாசமான படத்தை அளித்த பவன் குமார் பாராட்டத்தக்கவர். இந்தப் படம் தமிழ்நாட்டில் வெளியாகாது என்பது ஒரு குறைதான். பெங்களூரில் இருக்கும் நண்பர்கள் இதை அவசியம் பார்க்கலாம். ஓல்ட் மெட்ராஸ் ரோட்டில் இருக்கும் கோபாலன் மாலில் இதை நான் பார்த்தேன். டிக்கெட் விலை – கம்மிதான். 150/-. இங்கே இங்லீஷ் சப்டைட்டில்கள் உண்டு.

  Comments

4 Comments

  1. பெங்களூரிலேயே சில வருடங்களாக இருந்தாலும், கமர்ஷியல் கன்னடப்படம் ஒன்றுகூட இன்றுவரை பார்த்ததில்லை”

    நானெல்லாம் பெங்களூரில் இருந்தபோது கன்னட கமர்ஷியல் படங்கள் மட்டுமே பார்த்து வீணடித்தேன் ..ஹி ஹி

    Reply
  2. தேளு… அட்டகாசம்… பெங்களுரு வரும்பொழுது கண்டிப்பாக பார்த்துவிடுகிறேன்…. இப்படி ஒரு படத்தை அறிமுகப்படுதியதற்கு மிக்க நன்றி…

    Reply
  3. ஆஹா…சூப்பரா இருக்கே…எப்புடி புடுச்சிங்க இந்த படத்த ???

    Reply
  4. ” ஆர்யா சூர்யா ” படத்தை பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரை போடுவிங்கனு எதிர்பார்த்தேன் இப்புடி ஏமாத்திபுட்டீங்களே தல!

    Reply

Join the conversation