
Luther – TV Series (3 Seasons)
தொலைக்காட்சி சீரீஸ்களில் BBCயின் சீரீஸ்கள் கொஞ்சம் தனித்துவம் வாய்ந்தவை. இவர்களது சீரீஸ்களின் தரத்திலும் கதைக்களன்களிலும் எனக்குத் தெரிந்து HBO சீரீஸ்கள்தான் பிபிஸியுடன் நேரடியாக மோத முடியும். ஷெர்லக், Doctor Who போன்ற தற்காலத் தொடர்கள் பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் எப்போதிலிருந்தோ இவைபோன்ற நல்ல தொடர்கள் பிபிஸியில் வந்துகொண்டுதான் இருக்கின்றன. தொண்ணூறுகளின் துவக்கத்தில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான Yes Minister சிலருக்கு நினைவிருக்கலாம். தொலைக்காட்சித் தொடர் என்றதுமே தமிழ்நாட்டில் ஒளிபரப்பப்படும் கொடூரமான தொடர்கள்தான் பலருக்கு நினைவு வரும் என்றாலும், நமது தளத்தில் ஏற்கெனவே True Detective, Game of Thrones, Sherlock, Firefly போன்ற சில தரமான தொடர்களைப் பற்றிப் பார்த்திருப்பதால், இப்படிப்பட்ட தொடர்கள் திரைப்படங்களுக்குச் சவால் விடக்கூடியவை என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான்.
அப்படி ஒரு தரமான தொடர்தான் Luther.
முதல் சீஸன் துவங்குகையில், ஜான் லூதர் என்பவர் இங்லாந்தின் போலீஸ் துறையில் Detective Chief Inspector. வயது நாற்பது இருக்கலாம். அவரது மனைவியின் பெயர் ஸோயி (Zoe). பதினெட்டு வருடங்கள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு ஸோயி லூதரைப் பிரிந்து மார்க் நார்த் என்பவனுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். ஸோயி லூதரைப் பிரிந்ததற்குக் காரணம் என்ன என்பது லூதரைப் பற்றிப் பார்த்தால் தெரிந்துவிடும்.
லூதர் தனது வேலையை மிகவும் நேசிக்கும் நபர். முரடர். எதற்கும் பயப்படாத ஆள். எதாவது குற்றம் நடந்தால், அதில் சம்மந்தப்பட்ட நபரை உயிரைக் கொடுத்தாவது பிடித்துவரும் நபர். ஆனால் அதற்காகப் போலீஸ் துறையின் அத்தனை சட்டதிட்டங்களையும் கச்சிதமாகப் பின்பற்றும் நபர் அல்ல. எதாவது ஒரு குற்றம் நமக்கு நடக்கையில், அந்தக் குற்றம் செய்த நபரைக் கொன்றுவிடவேண்டும் என்று நமக்குள் ஒரு வெறி கிளம்பும் அல்லவா? அத்தகைய வெறியைத் தனது பல வருடப் போலீஸ் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களால் போர்த்தி மூடிக்கொண்டு வாழும் நபர்தான் லூதர். எதாவது ஒரு தருணத்தில் அந்தப் போர்வையைத் தூக்கி வீசிவிட்டுத் தனது இயல்புப்படி நடப்பவர். சமயங்களில், சந்தர்ப்பம் அமைந்தால் குற்றவாளிகள் இவரது கண்முன்னர் இறப்பதைத் தடுக்காத கதாபாத்திரம். பலசாலி. தந்திரமான மூளை உடையவர். கிட்டத்தட்ட, ஷெர்லக் ஹோம்ஸும் டர்ட்டி ஹாரியும் சேர்ந்த கலவை.
இந்த விவரிப்பைப் படித்ததும், இதுபோல் ஆயிரம் படங்கள்/சீரீஸ்களைப் பார்த்தாயிற்று என்று தோன்றலாம். ஆனால் லூதர் நீங்கள் பார்த்திருக்கும் ஆயிரம் சீரீஸ்களிலிருந்தும் வித்தியாசமானது.
இதுவரை மூன்று சீஸன்கள் ஒளிபரப்பாகியிருக்கின்றன. முதல் சீஸனில் ஆறு எபிஸோட்கள். இரண்டு மற்றும் மூன்றில் தலா நான்கு எபிஸோட்கள். ஒவ்வொரு எபிஸோடும் ஒருமணிநேரம்.
இங்லாந்தில் பலவகையான குற்றங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு குற்றத்தையும் தனக்கே உரிய பாணியில் துப்பறிகிறார் லூதர். அதனால் நடக்கும் விளைவுகளைப் பற்றிய சீரீஸ் இது. ஆனால் அந்த விளைவுகள் நாடகபாணியில் அமைந்தவை அல்ல. மிகவும் சுவாரஸ்யமாக, ஸீட் நுனிக்கே நம்மைக் கொண்டுசெல்லக்கூடியவை. ஒரு தரமான தொலைக்காட்சி சீரீஸைப் பார்க்கையில், மகிழ்ச்சி, மனநிறைவு, கோபம், வெறுப்பு, எரிச்சல் போன்ற உணர்ச்சிகள் ஆங்காங்கே நம்மைத் தாக்குவது இயல்பு. லூதரில் இப்படிப்பட்ட பல உணர்ச்சிகள் ஆடியன்ஸைப் பாதிக்கும். அவை செயற்கையாகவும் இருக்காது என்பதே இந்த சீரீஸின் பலம். இதற்குக் காரணம் இதில் வரும் கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் இயல்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட கதை உண்டு. தனித்துவம் உண்டு. மாறுதல்களுக்கு உள்ளாவார்கள். ஆடியன்ஸின் மனதில் இடம்பெறவும் செய்வார்கள்.
முதல் சீஸனில் ஐந்து கேஸ்கள். இரண்டு மற்றும் மூன்றாவது சீஸன்களில் தலா இரண்டு கேஸ்கள். இவை ஒவ்வொன்றும் படுவேகமாகச் செல்லக்கூடியவை.
லூதரின் மிகவும் சுவாரஸ்யமான அம்சத்தின் பெயர் – ஆலிஸ் (Alice Morgan). முதல் சீஸனின் முதல் எபிஸோடில் அறிமுகமாகும் இந்தக் கதாபாத்திரம் மூன்று சீஸன்களிலும் வருகிறது. ஆலிஸ் லூதரைவிடவும் புத்திசாலி. இயற்பியலில் ஒரு research scientist. இந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி எதுவுமே சொல்ல இயலாது. ஏன் என்பது சீரீஸைப் பார்க்கையில் விளங்கும். லூதரும் ஆலீஸும் பேசும் வசனங்களைக் கவனித்துப் பாருங்கள். லூதருக்கு இணையான பாத்திரம் இது.
லூதருடன் கூடவே இருக்கும் போலீஸ் அதிகாரியின் பெயர் – ஜஸ்டின் ரிப்ளி. இளைஞன். லூதரின் மேல் பெரும் மரியாதை கொண்டவன். லூதர் என்ன செய்தாலும் அதன்பின்னால் ஒரு காரணம் இருக்கும் என்று உறுதியாக நம்புபவன். லூதரின் தீவிர விசுவாசி.
போலீஸ் துறையில் இருக்கும் லூதரின் உற்ற நண்பனின் பெயர் இயன் ரீட். முதல் சீஸனில் இயன் ரீடுக்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு. லூதர் எதையாவது ரகசியமாகப் பேசவேண்டும்/செய்யவேண்டும் என்றால் முதலில் நம்புவது இயன் ரீடைத்தான்.
இவர்களைத் தவிரவும் ஒவ்வொரு சீஸனிலும் முக்கியமான பாத்திரங்கள் சிலர் உண்டு.
பிற போலீஸ் சீரீஸ்களீலிருந்து லூதரைத் தனியாகக் காட்டுவது என்னவென்றால், நிஜவாழ்க்கையில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுபவிக்கும் பிரச்னைகளை மிகவும் இயல்பாகக் காட்டியிருப்பதுதான். போலீஸ் துறையில் இருக்கும் ஒரு நபரின் அன்றாட வாழ்க்கை, ரத்தம், பிணங்கள், துரோகம், எரிச்சல், நம்பிக்கையின்மை, வெறுப்பு, தற்கொலை உணர்ச்சி போன்றவற்றால் எப்போதும் சூழப்பட்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு உணர்ச்சியாலும் பல சமயங்களில் லூதர் பாதிக்கப்படுவதை எல்லா எபிஸோட்களிலுமே நாம் காணமுடியும். இத்தனை பிரச்னைகள் இருந்தபோதும் லூதர் தனது வேலையை உயிரைப்போல் கருதும் ஆள். அதனாலேயே அவருக்குப் பல துன்பங்கள் வருகின்றன. ஒவ்வொன்றையும் இறுதி நிமிடம் வரை வளரவிட்டு, வேரோடு வெட்டி எரிவது லூதருக்குப் பிடிக்கும். சிலமுறை வேண்டுமென்றே இதைச் செய்வார். சில முறை எதேச்சையாக அப்படி நடக்கும்.
ஆட்டத்தின் விதிகளை அத்துபடியாக அறிந்துகொண்டு போலீஸ் துறையின் விதிகளை மீறாமல் உள்ளுக்குள்ளேயே புகுந்து விளையாடும் நபருக்குப் போலீஸ் துறையிலேயே எதிரிகள் இருப்பார்கள். எப்படியென்றால், ஒரு குற்றவாளியைப் பிடிப்பதில் எழுதப்பட்டுள்ள எல்லா விதிகளையும் பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள். இந்த விதிகளை ஒழுங்காகப் பின்பற்றினால் யரையும் பிடிக்கமுடியாது என்பதையும் நன்றாக அறிந்தவர்கள். இருப்பினும் பிடிவாதமாக விதிகளைப் பிடித்துக்கொண்டு தொங்கும் ஆட்கள் (இதை எழுதும்போது/படிக்கும்போது ஏற்படும் ஒருவித வெறுப்புணர்ச்சியை இந்த சீரீஸ் பார்க்கையில் அந்தந்தக் காட்சிகளில் முழுமையாக உணர்வீர்கள்). எனவே இவர்களுக்கு லூதரின்மேல் இயல்பான கோபம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. இவர்கள் லூதரை எப்படியாவது பிடித்து சஸ்பெண்ட்/கைது செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள். அவ்வப்போது இவர்களுடன் லூதர் விளையாடும் போலீஸ் திருடன் ஆட்டம் இந்த சீரீஸுக்கு வலு சேர்க்கிறது.
எனக்குப் பிடிக்காத அம்சம் இந்த சீரீஸில் ஒன்றே ஒன்றுதான். மூன்றாவது சீஸனில் வரும் மேரி டே என்ற பாத்திரம். லூதருக்கு இந்தப் பெண்ணைப் பிடிக்கும். இதனாலேயே இவளுக்குப் பிரச்னைகள் வருகின்றன. மூன்றாவது சீஸனின் இறுதி எபிஸோட் இந்தப் பெண்ணை வைத்துத்தான் சுழல்கிறது. இருந்தாலும் அந்த எபிஸோடில் இந்தப் பெண்ணை வைத்து முடித்திருந்த விதம் பிடிக்கவில்லை. காரணம் எப்போது பார்த்தாலும் பிறர் லூதரைப் பற்றிச் சொல்வதையே நம்பிக்கொண்டு லூதரை வெறுக்கும் பாத்திரம் இது. அந்தப் பாத்திரத்தைப் பார்க்கையில் எரிச்சலே மிஞ்சியது (ஒருவேளை இதுவும் சீரீஸை உருவாக்கியவர்களின் திட்டமிடப்பட்ட உணர்வாகக்கூட இருக்கலாம்).
மூன்று சீஸன்களிலும் சேர்த்து மொத்தம் 14 எபிஸோட்கள். ஒவ்வொன்றும் ஒரு மணி நேரம் நீளம். இருந்தாலும் இந்தப் பதினான்கு மணி நேரம் எப்படிப் போனது என்றே தெரியவில்லை என்பதே இந்த சீரிஸின் பலம். மிகமிக விறுவிறுப்பான, சஸ்பென்ஸ் நிறைந்த, ஸீட் நுனிக்கு ஆடியன்ஸை வரவழைக்கக்கூடிய, உணர்ச்சிபூர்வமான, அட்டகாசமான சீரீஸ் ஒன்றைப் பார்த்த திருப்தியே இறுதியில் மிஞ்சியது.
லூதராக நடித்திருப்பவர் இட்ரிஸ் எல்பா (Idris Elba). Pacific Rim பார்த்தவர்களுக்கு அதில் வரும் கேப்டன் ஸ்டாக்கர் பென்டகோஸ்ட்டை மறக்கமுடியாது. அந்தப் பாத்திரத்தில் நடித்தவர். மேலும் Thor படத்தின் இரண்டு பாகங்களிலும் அஸ்கார்டின் காவல்காரனாக இருக்கும் ஹெய்ம்டாலை நினைவிருக்கும். அந்த வேடத்தில் நடித்தவர். இந்த மூன்று சீஸன்களையும் பார்த்தால் உங்கள் மனதில் நிலைத்து நிற்பார். இவரை இதன்பின் மறப்பது கடினம்.
மூன்று சீஸன்களோடு தொடர் நின்றுவிட்டது. காரணம் அல்பா தற்போது மிகவும் பிஸி. ஷெர்லக்குக்கு நடந்த அதே கதைதான். பெனடிக்ட் கம்பர்பேட்ச்சும் மார்ட்டின் ஃப்ரீமேனும் மிகவும் பிஸியாகிவிட்டதால் அதிலும் நான்காவது சீஸன் வருமா என்பது இன்றுவரை சந்தேகமே. இருப்பினும் பிபிஸி அறிவிப்பின்படி ஷெர்லக்கின் நான்காவது சீஸன் படப்பிடிப்பு, 2015ன் இறுதியில் துவங்கும் என்று தெரிகிறது. எனவே ஷெர்லக் 2016ல் வந்துவிடும். அதேசமயம் 2015 ஜனவரியில் ஒரு பெரிய ஷெர்லக் ஸ்பெஷல் ஷோவின் படப்பிடிப்பும் துவங்குகிறது. எனவே 2015 மத்தியில் இந்த ஸ்பெஷல் ஷோ – ஒரு எபிஸோட் – ஒளிபரப்பப்படும் என்றும் தெரிகிறது.
செய்திகளை வைத்துப் பார்த்தால், லூதர் ஒரு திரைப்படமாக வெளியாகலாம் என்று தெரிகிறது. பொதுவாக எந்த சீரிஸாக இருந்தாலும், முதல் சீஸனின் விறுவிறுப்பு அடுத்த சீஸன்களில் இருக்காது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஒரு உதாரணம். முதலிரண்டு சீஸன்களுக்குப் பிறகு அதைப் பார்க்கவே முடியவில்லை. ஷெர்லக்கின் மூன்றாவது சீஸன் மிகவும் அலுப்பானது. ஆனால் லூதரின் மூன்று சீஸன்களும் விறுவிறுப்பில் ஒன்றுக்கொன்று குறைந்தவை அல்ல. முதல் சீஸனின் முதல் எபிஸோடிலிருந்து மூன்றாவது சீஸனின் இறுதி எபிஸோட் வரை ஒரு அத்தியாயம் கூட அலுக்கவில்லை.
லூதர், அவசியம் தொலைக்காட்சி சீரீஸ் ரசிகர்கள் தவறவிடக்கூடாத தொடர்.
Watch “White Collar” You may like it.
have they made any attempt on Jekyll and Hyde in television format like this in BBC?