M (1931) – German

by Karundhel Rajesh May 4, 2010   world cinema

தற்போதைய காலகட்டத்தில், பல மர்மப்படங்கள் வந்திருக்கின்றன. மயிர்க்கூச்செரியும் சஸ்பென்ஸ் த்ரில்லர்கள். ஆனால், இன்றைக்கு எழுபத்தொன்பது வருடங்கள் முன், ஒரு படம் உங்களுக்கு அதே ஃபீலிங்கைத் தரமுடியுமா? முடியும் என்று பறைசாற்றிக்கொண்டு, 1931ல் எடுக்கப்பட்ட ஒரு ஜெர்மானியப்படமே இந்த ‘M’.

இப்படத்தின் இயக்குநர், ஃப்ரிட்ஸ் லாங். ஆஸ்ட்ரியாவைச் சேர்ந்த ஒரு ஜீனியஸ். மௌனப்படங்களின் காலகட்டத்தில், பல வெற்றிப்படங்களை எடுத்தவர். அந்தக் காலத்தில் இவர் எடுத்த ‘மெட்ரோபோலிஸ்’ என்ற படம், மௌனப்படங்களிலேயே மிக அதிகப் பொருட்செலவில் எடுக்கப்பட்ட பெருமை வாய்ந்தது. 1918ல் இருந்து 1933 வரை ஜெர்மனியில் இருந்துகொண்டு படங்கள் இயக்கிய இவர், அதன்பின் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து, அங்கும் கிட்டத்தட்ட 21 படங்கள் இயக்கினார்.

அவரது மிகவும் புகழ்பெற்ற படமே இந்த ‘M’. மௌனப்படங்கள் இயக்கிக்கொண்டிருந்த ஃப்ரிட்ஸ் லாங், பேசும் படங்களை எடுக்க விரும்பி, அப்படி எடுத்த முதல் படம் இது. இதில் பின்னணி இசையே கிடையாது என்பது ஒரு தகவல். அதேபோல், இப்படத்தில், பல வியத்தகு காமெரா கோணங்களை வைத்திருப்பார். அவற்றுக்கு உதாரணம், இப்பதிவில் பின்னர் காண்போம்.

இப்படம் வந்த காலகட்டத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். 1931. இன்னமும் இரண்டு ஆண்டுகளில் ஹிட்லர் பதவிக்கு வரப்போகிறார். இந்த 1931ல் உலகில் வெளிவந்துகொண்டிருந்த படங்களின் தரத்தோடு ஒப்பிட்டால், இப்படம் ஒரு மிக அழகான, புத்திசாலித்தனமான முயற்சி என்று சந்தேகத்துக்கிடமில்லாமல் சொல்லிவிடலாம்.

ஆல்ரைட். இப்படத்தின் கதை என்ன? ஃபில்ம் ந்வார் (Noir) என்று ஒரு வகை உண்டு. இருளான, மர்மமான கதைகள். கொலை செய்தவர் யார்? அவருக்கு என்ன ஆயிற்று? இப்படிப்பட்ட கேள்விகளை விளக்கும் படங்களே இந்த ஃபில்ம் ந்வார் வகையைச் சேர்ந்தவை. தமிழில் அதே கண்கள் படத்தை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். இப்படிப்பட்ட ஒரு ந்வார் க்ளாஸிக்கே இந்த ‘M’.

படம், சில குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதில் தொடங்குகிறது. ’கொலைகாரன் வரப்போகிறான்’ என்று பாடிக்கொண்டே விளையாடும் இக்குழந்தைகளை, அவற்றில் ஒரு குழந்தையின் தாய் அதட்டுகிறாள்.

இதன்பின், ஒரு குழந்தையை ஒரு ஆள் அழைத்துச் செல்வதைக் காண்கிறோம். அவனது முதுகு மட்டுமே தெரிகிறது. அக்குழந்தைக்கு ஒரு பலூன் வாங்கித் தருகிறான். அக்குழந்தை விளையாடிக்கொண்டிருந்த இடத்தில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. குழந்தைகளைக் கொல்லும் ஒரு கொலைகாரனைப் பிடித்துக்கொடுப்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என்ற போஸ்டரே அது.

அக்குழந்தையின் தாய், குழந்தையைத் தேடுகிறாள். சிறிது நேரத்திலேயே, அந்தப் பலூன், மின்சாரக் கம்பிகளின் இடையே சிக்கிக்கொண்டு படபடப்பதைக் காண்கிறோம். குழந்தையின் முடியும் நமக்குத் தெரிந்துவிடுகிறது.

போலீஸுக்குப் பிரஷர் மேல் பிரஷர். இக்கொலைகாரன், இதுவரை எட்டுக் குழந்தைகளைக் கொன்றிருக்கிறான். ஆனால், அவனைப் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. அக்குழந்தைகளின் பிணங்கள் கிடைத்திருக்கும் நிலையிலிருந்து, அக்குழந்தைகளை வன்கலவி செய்து வீசிவிட்டுச் சென்றிருக்கிறான் என்பது மட்டும் புரிகிறது. அந்நகரம் முழுவதும், ஒரு இண்டு இடுக்கு பாக்கியில்லாமல் போலீஸ் சல்லடை போட்டுத் தேடுகிறது.

அத்தேடலில், நகரின் அத்தனை கிரிமினல்களும் கூடும் மதுக்கூடங்களும் அடக்கம். அவர்களில் பலர் கைது செய்யப்படுகின்றனர். அவர்களால் தங்களது தொழிலைத் தொடர முடியாத நிலைமை. நகரின் கிரிமினல் பாஸ்கள் கூடுகின்றனர். கொலைகாரனால் தங்கள் வேலையைச் செய்யமுடியாமல் இருப்பதோடு, போலீஸின் தொல்லைகளுக்கு வேறு அடிக்கடி ஆளாவதால், இந்தக் கொலைகாரன் யார்? அவனுக்கு என்ன தேவை? அவனை எப்படிப் பிடிப்பது? என்று தங்களுக்குள் விவாதிக்கின்றனர். அதே சமயம், இண்டர்கட்டாக, போலீஸ்துறையினர் விவாதித்துக்கொண்டிருப்பதும் நமக்குக் காட்டப்படுகிறது (மறுபடியும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். படம் வெளிவந்த ஆண்டு 1931!!). மிக அருமையாகக் காட்டப்பட்டிருக்கும் ஒரு திரைக்கதை உத்தி இது.

இந்த விவாதத்தின் முடிவில், ஒரு கிரிமினல் தலைவன் சொல்லும் யோசனை, எல்லோராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்தக் கொலைகாரனைக் கண்டுபிடிக்க, நகரெங்கும் எந்தச் சந்தேகமும் இல்லாமல் நடமாடக்கூடியவர்கள் தேவை. அப்படி ஒருவரின் கவனத்தையும் கவராமல், எல்லாரையும் கண்காணிக்கக்கூடியவர்கள் யார்?

பிச்சைக்காரர்கள் !

எனவே, அவர்களது சங்கத்தை (!!!) கிரிமினல் குழு அணுகி, தங்களுக்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறது. சம்மதிக்கும் பிச்சைக்காரர்கள், நகரின் அத்தனை மூலை முடுக்குகளையும் கண்காணிக்க ஆரம்பிக்கின்றனர்.

ஒருநாள், நாம் முதலில் பார்த்த பலூன் வியாபாரி – இவர் குருடரும் கூட – தனக்கு முன்பே பழக்கப்பட்ட ஒரு விசில் சத்தத்தைக் கேட்டு, உஷாராகிறார். பல நாட்கள் முன், இதே போல் விசிலடித்துக் கொண்டு வந்த ஒரு நபர், தன்னுடன் வந்த ஒரு பெண்ணுக்குப் பலூன் வாங்கித்தந்ததை அறிந்திருக்கும் அவர், இம்முறை தன்னுடன் இருக்கும் ஒரு இளைஞனை அழைத்து, அந்த நபரைப் பின்தொடரச் சொல்கிறார்.

அந்த ஆள் ஒரு குழந்தையுடன் பேசிக்கொண்டே அவளை அழைத்துச் செல்வதைப் பார்க்கும் அந்த இளைஞன், தனது கையில், ‘M’ என்று சாக்பீஸில் பெரிதாக எழுதிக் கொண்டு, கொலைகாரனைக் கடந்து செல்லும் பாவனையில், அவன்மேல் அழுத்தமாக இடித்து, இந்த எழுத்தை அவனது கோட்டின் தோள் பக்கத்தில் பதித்து விடுகிறான். அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்துக் கிரிமினல்களும் உஷார் செய்யப்படுகின்றனர். ஒவ்வொருவராக அந்தக் கொலைகாரனைப் பின்தொடர்கின்றனர்.

இதை அறிந்துவிடும் கொலைகாரன், திடீரென்று அங்கிருக்கும் ஒரு கட்டிடத்தினுள் பாய்ந்து ஓடிவிடுகிறான். இத்தகவல் கிரிமினல்களின் தலைமையகத்துக்குச் சொல்லப்படுகிறது. ஒரு படையே அந்தக் கட்டிடத்தினுள் நுழைகிறது. அங்கிருக்கும் செக்யூரிட்டிகளைக் கட்டிப்போடும் கிரிமினல்கள், ஒவ்வொரு அறையாக அந்தக் கொலைகாரனைத் தேடத்தொடங்குகின்றனர்.

இதோ கொலைகாரன் ஒளிந்திருக்கும் அறையின் முன்னர் வந்துவிட்டனர். அந்த அறையின் கதவின் கைப்பிடி, மிக மெதுவாகத் திருப்பப்படுகிறது. . ஒவ்வொரு சாவியாக நுழைக்கப்படுகிறது. . . இதோ கதவு திறக்கப்பட்டுவிட்டது !!

இதன் பின் என்ன நடந்தது? அந்தக் கொலைகாரன் என்னவானான்? அவனைப் பிடிக்கும் ஆட்டத்தில் வென்றது போலீஸா அல்லது கிரிமினல்களா? அத்தனை கேள்விகளுக்கும் விடை தெரிய, இப்படத்தைப் பாருங்கள்.

ஒரு நிமிடம் கூட அலுக்காமல், சர்ரென்று பட்டாசைப் பற்றவைத்த வேகத்தில் செல்வது இப்படத்தின் சிறப்பு. மட்டுமல்லாமல், இப்படத்தின் காமெரா அபாரம் ! ஒரு காட்சியில், தரைத்தளத்தில் இருந்து மெல்ல மேலே எழும் காமிரா, முதல் தளத்தில் உள்ள ஜன்னலின் வெளியே ஃபோகஸ் செய்யும். அதன்பின், அந்த ஜன்னலில் மெதுவாக உள்ளே சென்று, அந்த அறையில் இருக்கும் ஒரு ஆளின் முகத்தில் ஒரு க்ளோஸப் ஷாட்டில் முடியும். இது அத்தனையும் ஒரே ஷாட் ! அதுவும் 1931ல்!

இப்படத்தின் மிக முக்கிய அம்சமாக நான் கருதுவது, இதன் நகைச்சுவை. பல காட்சிகளில் நம்மைச் சிரிக்க வைக்கும் விஷயங்கள் இப்படத்தில் உள்ளன. பகடி என்ற விஷயம், இப்படத்தில் மிக இயல்பாகக் கையாளப்பட்டிருக்கிறது.

வசனங்கள் நிறைய இல்லாமல், வெறும் காட்சிகளாலேயே திரைக்கதையை நகர்த்தும் உத்தி, ஃப்ரிட்ஸ் லாங்குக்குத் தலைகீழ் பாடம் என்று தெரிகிறது. பல காட்சிகளில் இந்த உத்தியைக் காண முடிகிறது.

அதேபோல், வாய்ஸ் ஓவர் நேரேஷன். அட்டகாசமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த உத்தி, படத்தில் நமது கவனத்தை அதிகரிக்கச் செய்கிறது. எப்பொழுதெல்லாம் நடந்துமுடிந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய விவரங்கள் இப்படத்தில் வருகின்றனவோ, அப்பொழுதெல்லாம், ஒருவர் மற்றொருவருக்குச் சொல்லும் நிகழ்வுகளின் வாயிலாக, இந்த வாய்ஸ் ஓவர் உத்தி பட்டையைக் கிளப்பிக்கொண்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவும் 1931ல் யாராலும் யோசிக்க முடியாத ஒரு உத்தியாகும்.

உலகெங்கிலும் உள்ள உலக சினிமா ரசிகர்களால் பெரிதும் சிலாகிக்கப்படும் இப்படத்தைக் காணத் தவறாதீர்கள்.

‘M’ படத்தின் ட்ரெய்லர் இங்கே.

  Comments

32 Comments

  1. நானும்.. ஒரு மாசம் முன்னாடி இதைப் பார்த்தேன் கருந்தேள்.

    நீங்க சொன்ன கேமரா ஷாட் மாதிரி, சிட்டிசன் கேன் (1941)-லும் சில காட்சிகளை எடுத்திருப்பாங்க.

    இன்னும் யோசிச்சிகிட்டுதான் இருக்கேன்.

    ஆனா… இதே மாதிரி ஷாட்களை Bad Boys II படத்தில் எடுத்திருப்பாங்க. பார்த்தப்ப ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சி. ஆனா.. இல்லாத சுவர், ஜன்னலெல்லாம்.. போஸ்ட் ப்ரொடக்‌ஷனில், க்ராஃபிக்கா பண்ணினதை எக்ஸ்ட்ராவில் பார்த்தப்பதான் விளங்குச்சி.

    1950-களில் குப்ரிக் காட்டாத வித்தையா?? 🙂

    Reply
  2. வாங்க பாலா . . என்ன மூக்குமேல விரல வெக்க வெச்சது இந்தப் படத்தோட காமெரா ஷாட்டுகள் . . 🙂 உங்களுக்கும் அதேன்னு தெரியறப்ப, குஷியாக்கீது . . 🙂

    குப்ரிக் – 2001 – ஸ்பேஸ் ஆடிஸி படத்துல டைட்டில் சீன்ல அந்த கிரகங்கள் ஒண்ணொண்ணா லைன் கட்டி நிக்குற வித்தயை காட்டிருப்பாரு . . மண்ட காஞ்சிட்டேன் . . தெய்வமே !!

    Reply
  3. ய்ப்பா எவ்வள்வு நுட்பமா ஒவ்வொரு படத்தையும் பாக்கறீங்க நீங்கள்லாம். ரொம்ப நல்ல விமர்சனம் தேள். நன்றி.

    Reply
  4. என்னான்னு சொல்ல நல்ல விமர்சனம் ,,, பாத்திட்டா போச்சு :))

    Reply
  5. நானும் இந்த படத்த ஒரு மூணு மாசம் முன்னாடி பார்த்து இருப்பேன். செமைய இருக்கும். ஒரு இடத்தில ஒரு ஆபீஸ் உள்ளுக்கே மாட்டி கொள்வானே அந்த இடம் எனக்கு பிடிக்கும். அதே மாதிரி அந்த கிளைமாக்ஸ் காட்சிகளும். அதே மாதிரி திருடர்களின் கூட்டணி, யூனியன் பார்க்கவே interesting அஹ இருக்கும் ….

    இந்த படம் you tube முழுசா கிடைக்குது http://www.youtube.com/watch?v=_O_ldOK3dDE

    சிடி கிடைக்காமல் …..யு டுப் ல தான் பார்த்தேன்….(ஆரம்ப காட்சி கொஞ்சம் கிளாஸ் யாக இருக்கும்ல)

    நானும் வாழ்க்கையை enjoy பண்ணும் ஒரு left hander தான்

    Reply
  6. ஆச்சர்யம்.இப்ப தான் இந்த படத்த பாக்கலாம்னு வச்சுருக்கேன்.இங்க பாத்தா உங்க பதிவு.படம் பாத்துட்டு என் ஒபினியன் சொல்றேன்.அதுக்கப்புறம் வந்து படிக்கிறேன். எத மிஸ் பண்ணினேன்னு பாக்க வேணாம்.ஏன்னா,நான் கொஞ்சம் தத்தி…. 🙂
    என் ப்ளாக்ல இருந்து இதுக்குள்ள தெரிஞ்சு இருக்கணுமே.என்னது தெரியலையா,அடிச்சு ஆடுறா இலுமி,அப்டியே maintain பண்ணு…..

    Reply
  7. @ இராமசாமி கண்ணன் – அட அது நுட்பம் கிட்பம் எல்லாம் இல்ல . . சும்மா தமாசா பாக்குறது தான் . . அப்பப்ப ஏதாவது டெக்கினிக்கல் வார்த்தை எல்லாம் போட்டு, இந்த மானே தேனே பொன்மானே இப்புடி எளுதுறதுதான் . . 🙂 ஹீ ஹீ

    @ Mahee – பாருங்க பாருங்க . . ரொம்ப நாளு களிச்சி ரெகுலரா வர ஆரம்பிச்சிருக்கீங்க . . நல்வரவு . .

    @ டம்பி மேவீ – சூப்பர் !! உங்களுக்கும் படம் புடிச்சது குறிச்சி சந்தோஷண்ணா . . அந்தத் திருடர்கள் கூட்டணி, பயங்கர கலக்கல் . . 🙂 . . யூட்யூப் லின்க் குடுத்ததுக்கு மிக்க நன்றி தலைவா . .

    என்னாது நீங்களும் வாழ்க்கைய எஞ்சாய் பண்ணுற லெஃப்ட் ஹேண்டரா . . . ஆகா . .சேம் பின்ச் !! 🙂

    @ இல்ல்யூமினாட்டி – ஹீ ஹீ . .. இங்கயும் அதே கத தான் பாஸ் . . நம்ம நண்பர்களுக்குத் தெரியும் நானு எவ்ளோ பெர்ர்ர்ர்ர்ரிய ட்யூப் லைட்டுன்னு . . 🙂 . . பார்த்துட்டு வந்து எழுதுங்க . . 🙂

    Reply
  8. டவுன்லோடு போட்டுடறேன். டொரண்ட் லிங்க் இருக்குதா..?

    Reply
  9. அங்கதான் மேட்டரு . . டாரண்ட்ல இத பாக்கல. . பிக்ஃப்ளிக்ஸ்ல ரெண்ட் பண்ணி பார்த்தேன் . . டாரண்ட்ல கண்டிப்பா இருக்கும்னு நினைக்குறேன். .

    Reply
  10. ஷ்ரீ

    Once of THE best movies I’ve seen in a long long time… Need to watch other movies by this guy Fritz Lang… நல்ல பதிவு… இன்னும் நிறைய எழுதுங்க 🙂

    Reply
  11. //@ ஷ்ரீ – இங்க என்ன நடக்குது? 🙂 கலக்குங்க . . :-)//

    அதை தான் நானும் கேக்குறேன்.என்ன நடக்குது இங்க? 🙂

    And here is the link

    http://thepiratebay.org/search/M%201931/0/99/200

    Reply
  12. பயணத்தில் இருப்பதால் தொடர்ந்து இணையத்துடன் இணைய முடிவதில்லை. மன்னிக்கவும்.

    அருமை.

    பதிவில் இருக்கும் ஸ்க்ரீன் ஷாட்கள் அருமையாக இருக்கும்போது படமும் அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன்.

    Reply
  13. ச்ச.. இப்படி ஒரு த்ரில்லர் படத்தை வச்சிகிட்டே பார்க்காம இருந்திருக்கேன்.. 100 நிமிஷம்தானே.. இன்னைக்கே பார்த்துடறேன்.. பதிவு அருமை கருந்தேள்.. படிக்கும்போதே விறுவிறுப்பா இருக்கு..

    Reply
  14. ஆனந்த விகடன் ல சில வருஷம் முன்னாடி மதன் எழுதி படிச்சது…அவர விட நல்லா எழுதிருக்கிங்க…தொடரட்டும்…இந்த கேமரா சோட்ஸ் சொல்லும் போது எனக்கு நம்ம தல Alfred Hitchcock நியாபகம் வருது

    ரோப் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டவை. வெர்ட்டிக்கோ படத்தில் உயரமான கட்டிடத்தை காண்பிக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அந்தக் காலத்தில் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாதவை. சைக்கோவில் ஷவ‌ரிலிருந்து நீர் கொட்டுவதை அவர் படம் பிடித்திருக்கும் விதம் இன்றும் பலருக்கு புதிராகவே உள்ளது. thatstamil சொல்லி பாத்தது

    Reply
  15. நண்பரே,

    விறுவிறுப்பான நடையில் சிறப்பான பதிவு. நேரம் ஒதுக்கி பார்த்து விடுகிறேன்.

    Reply
  16. @ விஸ்வா – பயணத்த முடிச்சிகினு வாங்க . . அப்பறமா நாம பின்னூட்ட வெளையாட்டு வெளாடுவோம் . . 🙂

    @ ஜெய் – அவசியம் பாருங்கோள் . . பார்த்துபுட்டு சொல்லவும் . .

    @ பருப்பு – இது விகடன்ல செழியன் எழுதினது இல்ல? எனிவே, ஹிட்ச்காக், நம்ம குப்ரிக் எல்லாருமே, லேட் நாற்பதுகளிலும், அதற்கு மேலும் தான் இப்படிப்பட்ட ஆங்கிள்களை வைக்க முடிந்தது.. ஆனால், நம்ம M படம் வெளிவந்தது 1931ல். ஒரு ட்ரெண்ட் செட்டர் என்றே கூறலாம் . . அந்த வகையில், இப்படம் தான் மற்ற படங்களுக்கு காட்ஃபாதர் இல்லையா?

    உங்க கருத்துக்கு நன்றி பாஸு . . .பின்னுங்க . .

    @ காதலரே – மிக்க நன்றி . . உங்களுக்கு இப்படம் பிடிக்கும் என்றே நம்புகிறேன் . .

    @ ஜெயமார்த்தாண்டன் – ஆஹா. . . ந்வார் படங்கள் ஒரு கடல்.. என்னத்த சொல்றது.. என்னத்த விடுறது . . எனிவே, உங்களுக்காகவே ஒரு மெகா லிஸ்ட் – இங்கே . . http://en.wikipedia.org/wiki/List_of_film_noir

    Reply
  17. சரியான நேரத்தில் தான் இந்த பதிவ எழுதி இருங்கீங்க. லேங்கின் மாஸ்டர் பீஸ்ஆன மெட்ரோபோலிஸ் தொலைந்ததாக கருதப்பட்ட காட்சிகளுடன் சேர்த்து 2:30 மணி முழு நீள படமாக திரைக்கு மற்றும் DVD இல் வருகிறது.

    http://www.nytimes.com/2010/05/05/movies/05metropolis.html?hp

    “M” பார்த்ததில்லை பார்த்துவிட்டு வந்து படிக்கிறேன்.

    Reply
  18. வரட்டும் வரட்டும். . . அதையும் பார்த்துருவோம் . . 🙂 மெட்ரோபோலிஸ் பிக்ஃப்ளிக்ஸ்ல இருக்கு . . . இந்தப் புது வெர்ஷன் வந்த உடனே அத வாங்கிப் பாக்கறேன் . . 🙂 தகவலுக்கு நன்றி பாஸ் . .

    Reply
  19. நண்பரே கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி இரா.செழியன் எழுதி விகடன் வெளியீடா வந்த ‘உலக சினிமா’ பொய்தவத்துல படிச்சது.ஆனால் இப்போ உங்க விமர்சனம் படிச்சவுடன் தான் பெங்களூர் கே.ஆர் புரத்துல டான்ஸ் பாத்துக்குனே பீர் அடிச்சா மாதிரி சுற்றுனு இருக்கு.சூப்பர் தல.வாழ்த்துக்கள்.

    Reply
  20. மயிலு . . எங்கடா ஆளக்காணமேன்னு பார்த்தேன் . . நம்ம ஏரியா பேர சொல்லி போட்டுத் தாக்கிட்டீங்க . . 🙂 ஹீ ஹீ

    Reply
  21. நண்பா
    சூப்பரான விமர்சனம்
    டாரண்ட் டவுன்லோடு isohunt இருந்தால் தரவும்,அது மட்டும் தான் இங்கே வேலை செய்யும்.
    இங்கு வேலை சுமார்,அதுதான் கலக்கம்,பதிவெழுதவோ கருத்து போடவோ மூடே இல்ல..மீண்டும் வருவேன்

    Reply
  22. நண்பா . . இதோ isohunt டாரண்ட் . .

    http://isohunt.com/torrent_details/47553124/M+fritz+lang?tab=summary

    ஊருக்கு வந்துட்டு மறுபடி திரும்பிப்போனதால், மனதில் அந்த நாஸ்டால்ஜியா நிரம்பியிருக்கிறது என்று நினைக்கிறேன் . . சீக்கிரம் வாங்க . . நாங்கெல்லாம் வெயிட்டிங் . .

    Reply
  23. டாரண்டுக்கு மிக்க நன்றி
    புது ப்ராஜக்ட் வந்தால் தான் பழைய மூடுக்கு திரும்பும்.
    வெயிட்டிங்.
    இதை டவுன்லோடு போட்டாச்சி.
    பாத்துடுறேன்.உங்க பேர்ல கமெண்ட் போடும் கபோதிகளுக்கு விளம்பரம் செய்யாதீர்கள்.பெயர் ஃபேன்ஸியா இருக்குன்னு போட்டிருப்பானோன்னு டவுட்டா இருக்கு.லின்க் குடுத்து போட்டிருந்தா கிழிக்கலாம்.நாரப்பயல்கள்,அவன் போட்டது கன்றாவி கமெண்ட்.

    Reply
  24. இன்னாபா நட்குது? குடும்ப சகிதமா.. கமெண்ட் போட்டுகினு?? 😉

    Reply
  25. viki

    Stanley kubrick மனுஷன் சிந்திக்கிறதுக்கு ஒரு வரைமுறையே கிடையாது..simply gr8
    citizen kane படத்தில் பல முயற்சிகள் செய்யப்பட்டன..ஒளிப்பதிவு மற்றும் ஒப்பனை(வயதான ஒர்சென் வில்லிசை பார்க்கலாம்)எப்படித்தான் 1940 இல் அப்படி ஒரு ஒப்பனை மற்றும் ஒளிப்பதிவு செய்தார்களோ..
    குறிப்பாக ஒரு காட்சியில் விஷம் சாப்பிட கோப்பையை காட்டும்போது ஒர்சென் தூரத்தில் கதவை திறந்து கொண்டு வருவார்..
    என்ன ஆச்சரியம் என்றால் இரண்டு காட்சிகளும்(ஒரு காட்சி தொலைவில் மற்றும் கோப்பை அருகில்) இரண்டும் தெளிவாக காட்டியிருப்பார்கள்..யப்பா..எப்படித்தான் யோசித்தார்களோ..

    Reply
  26. @ கார்த்திகேயன் – இனிமே இவனுங்களுக்கெல்லாம் நோ விளம்பரம் . . 🙂 ரைட்டு . .

    @ அண்ணாமலையான் – நன்றி தலைவா

    @ பாலா – அது வேற ஒண்ணுமில்ல . . நம்ம வூட்ல, இவ்வலவு சுத்தமா தமிழ் எழுதுதுறது பார்த்து எனக்கே ஆச்சசரியமா கீது . . 🙂 அதான் . . 🙂

    @ விகி – அதான் அந்தக் காலத்து க்ரேட்னஸ் . . 🙂 உங்க விரிவான அலசலுக்கு நன்றி . .:-)

    Reply

Join the conversation