Mad Max: Fury Road (2015) – English: 3D

by Karundhel Rajesh May 19, 2015   English films

‘I’ve gone from being very male dominant to being surrounded by magnificent women. I can’t help but be a feminist’ – George Miller.

ஜார்ஜ் மில்லர் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்காது. எந்தப் படம் வந்தாலும் அது பரவலாகப் பேசப்பட்டால்தான் பலரும் அதன் இயக்குநரைப் பற்றித் தெரிந்துகொள்வது வழக்கம். எண்பதுகளின் action பட ரசிகர்களுக்கு மட்டுமே ஜார்ஜ் மில்லரைப் பற்றித் தெரிந்திருக்கும். ஆனால் அக்காலகட்டத்தில் வெளியான டெர்மினேட்டர், ராம்போ, ராக்கி, ஏலியன், இண்டியானா ஜோன்ஸ் போன்ற படங்களின் பிரம்மாண்டத்தால் ஜார்ஜ் மில்லரின் பெயர் மங்கிவிட்டது. ஸ்பீல்பெர்க், கேமரூன், ஸ்டாலோன், லூகாஸ், ரிட்லி ஸ்காட் போன்ற பரவலான action பட இயக்குநர்களுக்கும் ஜார்ஜ் மில்லருக்கும் ஒரு வித்தியாசம் – Vision. அடிப்படையில் ஜார்ஜ் மில்லர் ஒரு திரைப்பட இயக்குநர் அல்ல. கல்லூரியில் மருத்துவம் படித்த நபர் அவர். ஒரு க்ராபிக் நாவல் எழுத்தாளரைப்போன்ற லேசான madness மில்லரிடம் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகிறது. தனிப்பட்ட முரையில், கியர்மோ டெல் டோரோவுக்கும் ஜார்ஜ் மில்லருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு என்பது என் கருத்து. இவர்களின் படங்களில் இவர்களது madness கலந்த தாக்கம் ஏராளமாக இருக்கும். ஸ்பீல்பெர்க், லூகாஸ், கேமரூன், ஸ்காட் போன்ற இயக்குநர்களின் படங்களில் அவர்களது தனிப்பட்ட பார்வை பெரும்பாலும் இருக்காது. இவர்களின் படங்கள் பெருவாரியான கமர்ஷியல் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டவை. ஆனால் ஜார்ஜ் மில்லர், கியர்மோ டெல் டோரோ போன்ற இயக்குநர்களின் படங்கள், இவர்களைப்போன்றே ஒருவித குயுக்தியான, வித்தியாசமான சிந்தனை உடைய ரசிகர்களுக்கானவை. பெருவாரியான ஜனத்திரளுக்கு இவர்களின் படங்கள் பிடிக்காமல் போக எக்கச்சக்க வாய்ப்பு உண்டு. இப்போதும் முதல் Mad Max படம் பிடிக்காத பலர் இங்கே உண்டு. ஹெல்பாய், பஸிஃபிக் ரிம் போன்ற படங்கள் ஓடாததற்கும் இதுதான் காரணம். திரைப்படங்களில் கிடைக்காத – க்ராஃபிக் நாவல்களில் மட்டுமே கிடைக்கும் ஒரு madness இவர்களின் படங்களில் கிடைக்கும். அந்த உலகத்தை அனுபவித்திராவிட்டால் இவர்களின் படங்களைப் பார்த்துப் பயன் இல்லை.

Mad max: Fury Road படத்தின் படப்பிடிப்பு நடக்கையில், ஜார்ஜ் மில்லர் ஒரு குறிப்பிடத்தகுந்த வேலை செய்தார். ஈவ் என்ஸ்லர் (Eve Ensler) என்ற பெண்ணை அழைத்து, திரைப்படத்தில் நடித்த நடிகைகளுக்காக ஒரு workshop நடத்தினார். இது ஒரு சாதாரண செய்தியாகப் படிக்கையில் தோன்றலாம். ஆனால் இந்த ஈவ் என்ஸ்லர்தான் வெஜைனா மோனோலாக்ஸ் (Vagina Monologues) என்ற நாடகத்தை உருவாக்கினார் என்பதும், இந்த நாடகம் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட நாடகம் என்றும் அறிந்தால்தான் இது குறிப்பிடத்தகுந்த செய்தியாக மாறும். உலகப்புகழ்பெற்ற ஒரு பெண்ணியவாதி இவர். ‘வஜைனா’ (Vagina) என்ற வார்த்தையை வாய்விட்டு ஓரிருமுறைகள் சொல்லிப் பார்க்க முடியுமா? ரகசியமாக உச்சரிக்கப்படும் வார்த்தையாகத்தானே அது உள்ளது? பாலியல் தொடர்பான பெண்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேசும் நாடகமே வஜைனா மோனோலாக்ஸ். பல ஆண்களுக்கு வஜைனா என்பது செக்ஸ் தொடர்பானது. ஆனால் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் வஜைனா தொடர்பான, சமுதாயத்துக்குச் சொல்லக்கூடிய பல கதைகள் உண்டு. இவற்றைப்பற்றிப் பேசுவதுதான் வஜைனா மோனோலாக்ஸ். அவரைப்பற்றியும் அவரது நாடகத்தைப் பற்றியும் ஈவ் என்ஸ்லர் பேசும் அருமையான ஒரு வீடியோவை முதலில் பார்த்தால் நல்லது.

இந்த ஈவ் என்ஸ்லர், Mad Max: Fury Road படத்தில் நடித்த எல்லா நடிகைகளுக்காகவும் ஒரு சிறிய workshop நடத்த, மெதுவாகப் படத்தில் பணிபுரியும் சில தொழில்நுட்பக் கலைஞர்களும் அதில் பங்குகொண்டனர். இதன்பின்னரே படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்றது. இது ஏன்? படத்தைப் பார்த்தால் தெரிந்துவிடும். படம் Mad Max என்ற தலைப்பைக் கொண்டிருந்தாலும், இது படத்தில் நாயகியாக வரும் ஃப்யூரியோஸாவின் (சார்லீஸ் தெரான்) கதைதான். இந்தக் கதையில் மேட் மேக்ஸாக வரும் டாம் ஹார்டி துணைக் கதாபாத்திரம்தான் ஏற்றுள்ளார். படம் முழுக்கவே ஃப்யூரியோஸாவின் தோள்களிலேயேதான் படம் பயணிக்கிறது. அவள் மட்டும் இல்லாமல், படத்தில் வரும் பெரும்பாலான முக்கியமான கதாபாத்திரங்கள் அனைவருமே பெண்கள். அதேசமயம் படத்தில் வில்லன்களாக வருபவர்கள் அனைவரும் ஆண்கள். (உபரித் தகவல்: படத்தின் எடிட்டரான மார்கரெட் சிக்ஸல் (Margaret Sixel), ஜார்ஜ் மில்லரின் மனைவிதான். படத்தில் வரும் சில முக்கியமான பெண்களின் வஜைனாக்களைத் தங்கத்தால் ஆன ஒரு பூட்டால் பூட்டியிருப்பார்கள் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்க).

Mad Max படங்களின் முதல் மூன்று பாகங்கள், மெல் கிப்ஸன் கதாபாத்திரத்தின் பயணத்தைப்பற்றிய படங்கள். அவைகளில் ஜார்ஜ் மில்லரின் பாணி அழுத்தமாகவே இருந்திருந்தாலும், இப்போது வந்திருக்கும் ஃப்யூரி ரோட்தான் அந்த சீரீஸிலேயே சிறந்த படம் என்பது என் கருத்து. இதற்குக் காரணம், ஒரு இயக்குநராக இப்படத்தில் ஜார்ஜ் மில்லர் அவசியம் முழுமையடைந்திருக்கிறார். அவரது திரைவாழ்க்கையில் அவர் பெற்ற பல அனுபவங்களால் கனிந்தே இப்படத்தை எடுத்திருக்கிறார்.

வழக்கமான மேட் மேக்ஸ் படங்களில் வருவதுபோலவே இதிலும் ஒரு பரந்துவிரிந்த பாழ்நிலம். உயிர்ப்புக்கான எந்த அறிகுறியும் இல்லாத இடம். Fallout 3 வீடியோகேமை விளையாடியவர்களுக்கு இந்தப் பாழ்நிலத்துக்கான அறிமுகம் தேவையில்லை. கிட்டத்தட்ட அதேபோன்ற இடம். அதில் ஒரு குடியிருப்புப் பகுதி. அந்த மக்களின் தலைவன் இம்மார்ட்டன் ஜோ (Toecutter என்ற கதாபாத்திரத்தில் பழைய மேட் மேக்ஸ் படத்தில் வில்லனாக நடித்த ஹ்யூ கீஸ் பைர்ன் (Hugh Keays-Byrne) நடித்திருக்கிறார். இவன் ஒரு கொடுங்கோலன். தான் ஒரு கடவுள் போன்றவன் என்ற நம்பிக்கையை மக்களின் மனதில் பதித்திருப்பவன். இவனது அடியாட்கள் இவனை வழிபடும் அளவு முட்டாள்கள். இவனது பணியில் இறந்தால் அவர்கள் சாகாவரம் பெறுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது. தண்ணீரைக் கட்டுப்படுத்தி, இவர்களின் அடிமைகளான மக்களுக்கு அவ்வப்போது குறைந்த அளவில் விநியோகிப்பது இவர்களின் வழக்கம். இந்த இம்மார்ட்டன் ஜோவுக்கு சில மனைவிகள். இவர்கள் அந்தப் பிராந்தியத்தின் பெரும்பாலான மக்களைப்போல் பஞ்சத்தில் அடிபட்டு வாழ்பவர்கள் அல்ல. மாறாக, எந்தக் குறைபாடும் இல்லாத அழகிகள். இவர்களின்மூலம் முழுமையான மனிதர்களைக் குழந்தையாகப் பெறவேண்டும் என்பது இம்மார்ட்டன் ஜோவின் நோக்கம். ஏற்கெனவே வேறு பெண்கள் மூலம் இம்மார்ட்டன் ஜோவுக்குப் பிறந்த இரண்டு மகன்களில் ஒருவன் உருவக் குறைபாடும், இன்னொருவன் அபரிமிதமான உடல் வளர்ச்சியும் பெற்றவர்களாக இருக்கின்றனர். இதனால் இந்தப் பெண்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறான் ஜோ. இவர்களில் ஒரு பெண் கர்ப்பமாகவும் இருக்கிறாள். இதுதான் படத்தின் துவக்கம்.

இவர்களிடம் மேட் மேக்ஸ் சிக்குகிறான். அவனது ரத்தத்தை இவர்களின் உடலில் செலுத்திக்கொண்டு பலம் பெறுகிறான் ஒரு குறிப்பிட்ட அடியாள். இதுபோன்ற சம்பவங்கள் அந்த உலகில் சகஜம். இம்மார்ட்டன் ஜோவின் பிரதான தளபதியான ஃப்யூரியோஸா, அவர்களின் பிரதேசமான ஸிடாடலிலிருந்து மற்றொரு இடத்துக்கு எரிபொருள் கொண்டுவரச் செல்வதில் இருந்துதான் படத்தின் action துவங்குகிறது. உண்மையில் இம்மார்ட்டன் ஜோவின் மனைவிகளை அந்த இடத்தில் இருந்து அதன் மறுகோடியில், ஃப்யூரியோஸா பிறந்த பசுமையான இன்னொரு இடத்துக்குக் கொண்டுசென்று அவர்களை இம்மார்ட்டன் ஜோவின் பிடியில் இருந்து விடுவிப்பதே அவளது நோக்கம். இதைக் கண்டுபிடித்துவிடும் இம்மார்ட்டன் ஜோ, தனது படைகள் அனைத்தையும் திரட்டி அவளது வாகனத்தைத் துரத்த ஆரம்பிக்கிறான். அவர்களுக்கிடையே மேட் மேக்ஸும் சிக்கிக்கொள்கிறான். படம் முழுதும் இந்தத் துரத்தல்தான் இடம்பெறுகிறது.

இந்தப் படத்தின் கதையைப் பதினேழு வருடங்கள் முன்னரே யோசித்துவிட்டார் ஜார்ஜ் மில்லர். அதன்பின் படத்தைத் தயாரிப்பதற்காக ஸ்டுடியோ கிடைப்பதில் பல சிக்கல்கள் நேர்ந்தன. இந்த இடைவெளியில் படத்தின் அத்தனை ஷாட்களையும் துல்லியமாக ஸ்டோரிபோர்ட்கள் மூலம் தயார்செய்துவிட்டு, அதன்பின்னர் திரைக்கதையை எழுதினார் மில்லர். அதில் அவருக்கு உதவியவர்களில் க்ராபிக் நாவல்களில் சித்திரங்கள் வரையும் ப்ரெண்டன் மெக்கார்த்தியும் ஒருவர். அப்போதே படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் நீண்ட கேரக்டர் ஸ்கெட்ச்களும் தயார்செய்துகொண்டார் மில்லர். அவர்கள் உபயோகிக்கும் ஆயுதங்கள், வண்டிகள் என்று எதையும் விட்டுவைக்கவில்லை. இதனால்தான் படத்தில் வரும் அத்தனை விஷயங்களும் துல்லியமாக உள்ளன.

ஹாலிவுட் படங்களில் பலவற்றில் ஒருசில சீக்வென்ஸ்களை இணைத்துதான் மொத்தப்படமும் உருவாக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் மொத்தம் மூன்றே சீக்வென்ஸ்கள். ஆரம்பத் துரத்தல் + ஒரு rest period + மீண்டும் துரத்தல் என்று. இப்படிப்பட்ட சீக்வென்ஸ்கள் எழுதுவதில் உலகப் புகழ்பெற்றவர் ஜேம்ஸ் கேமரூன். ஆனால் அவரது படங்களில்கூடக் கிடைக்காத ஒரு ஆழம் இதில் உண்டு. இதைப் படம் பார்த்தவர்கள் உணரலாம்.

சமீபகாலமாக வந்துகொண்டிருக்கும் டிபிகல் ஹாலிவுட் படங்களில் இது மிகவும் வித்தியாசமானது. நல்ல கதை, கதாபாத்திரங்களுக்கு இருக்கும் உணர்வுபூர்வமான பின்கதை, இந்த இரண்டையும் இணைத்து எழுதப்படும் விறுவிறுப்பான திரைக்கதை என்று ஒரு சிறந்த கமர்ஷியல் படத்துக்கான எல்லா அம்சங்களும் இந்தப் படத்தில் மிகச்சரியாகக் கையாளப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டின் தவறவே விடக்கூடாத சிறந்த படமாக இது இருக்கிறது. அவசியம் பாருங்கள்.

  Comments

1 Comment;

  1. katawarayan

    இந்த தகவல் அருமையிலும் அருமை நான் நிச்சயமாக இந்த திரைப்படம் பார்ப்பேன் நன்றி

    Reply

Join the conversation