மெட்ராஸ் (2014) – Analysis

by Karundhel Rajesh September 27, 2014   Tamil cinema

இரண்டு மனிதர்களுக்குள்ளான பகை அவர்களின் சுற்றுப்புறத்தை எப்படியெல்லாம் அலைக்கழிக்கும் என்பதே மெட்ராஸ். கேங்ஸ் ஆஃப் வஸேபூர் பார்த்தவர்களுக்கு இப்படிப்பட்ட கதையமைப்பு நன்றாகப் புரிந்திருக்கும். அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. ஒரு ஒப்பீட்டுக்காகச் சொன்னேன். ஆனால் இதில் கொஞ்சம் நுணுக்கமான பிரச்னை ஒன்று வருகிறது. உங்களுக்குச் சொந்தமான ஒன்று என்று நீங்கள் பலகாலமாக நினைத்துக்கொண்டிருக்கும் பொருள் ஒன்று இன்னொருவன் கைக்குப் போவதைப் போல் இருந்து, அது உங்களுக்குத் தெரிந்தால் உங்களது மனம் உளைச்சல் அடையும்தானே? அந்த மன உளைச்சல். அதுதான் இந்தப் படத்தின் ப்ளஸ் பாயிண்ட்.

ஒரு பெரிய கட்சி (மக்கள் முன்னேற்றக் கழகம்). அந்தக் கட்சியில் இருந்து இன்னொரு கட்சி பிரிகிறது. வடசென்னையின் வியாசர்பாடியில் அந்தக் கட்சியைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள். கட்சிகள் பிரிந்தபின்னர் இருவரும் எதிரிகள் ஆகிறார்கள். இரண்டு தரப்புகளுக்குள்ளும் பிரச்னைகள். அந்தப் பிரச்னைகளால் இரண்டு தலைவர்களும் இந்த எதிரெதிர் கோஷ்டிகளால் கொலை செய்யப்படுகிறார்கள். பிரச்னை தொடர்கிறது. அதில் ஒரு கும்பலின் தலைவரான கண்ணன் என்பவர் எதிர் கோஷ்டி இருக்குமிடத்தில் எப்போதும் கட்சியின் விளம்பரம் எழுதப்பட்டு வரும் ஒரு பெரிய சுவரைப் போலீஸ் துணையுடன் கைப்பற்றி, தனது தந்தையின் படத்தைப் பெரிதாக வரைந்து வைக்கிறார். அங்கே தற்செயலாக நடந்த சில விபத்துகளால் அந்தச் சுவர் மனிதர்களை பலி வாங்கும் என்ற மூட நம்பிக்கை அந்தப் பகுதியில் நிலவுகிறது. இதனைச் சாதகமாக வைத்து, தனது தந்தையின் படத்தை அவ்வளவு சுலபத்தில் அழிக்க முடியாதவாறு அந்தச் சுவற்றுக்கு முன்னரே ஒரு சிறிய கோயிலை செட் செய்கிறார் கண்ணன்.

சுவரை மையமாக வைத்து எப்போது வேண்டுமானாலும் இரண்டு தரப்புகளுக்கும் பிரச்னை வெடிக்கக்கூடிய பரபரப்பான சூழல். ஒரு கும்பலின் தலைவர் கண்ணன். சுவர் இருக்கும் பகுதியைச் சேர்ந்த கும்பலின் தலைவர் மாரி. மாரியின் வலதுகையாக இருக்கும் நபர் அன்பு. அன்புவின் நண்பன் காளி. அன்பு, காளியுடன் இன்னும் சில நண்பர்கள். காளி ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞன். அன்புவும் அவனும் கிட்டத்தட்ட சமவயதுக்காரர்கள். காளி கோபக்காரன். அன்பு திருமணமாகி, சற்றே கோபம் அடங்கிய நபர். துடிப்பானவன். அன்புக்கோ காளிக்கோ பிரச்னை ஏற்பட்டால் எப்போதும் வந்து தீர்த்து வைப்பவர் மாரி.

இதுதான் படத்தின் முதல் ஐந்து நிமிடத்தின் கதை.

அன்புவாகக் கலையரசன். அன்புவின் மனைவி மேரியாக ரித்விகா. காளியாகக் கார்த்தி. என்னுயிர்த் தோழன் படத்தின் நாயகி ரமா, இதில் கார்த்தியின் அம்மா. நந்தகுமார், ஆதி, வினோத் ஆகியவர்களும் உள்ளனர் (ஆதி, ‘மிருகம்’ ஆதி அல்ல).

படத்தின் ஆரம்பத்திலேயே என்னைக் கவர்ந்த அம்சம், இதன் இயல்பான களம். வடசென்னையைச் சேர்ந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று நமக்கெல்லாம் ஒரு முன்முடிவு உண்டுதானே? பரட்டைத்தலை, நன்கு வளர்த்த உடம்பு, சரமாரியான கெட்டவார்த்தைகள், குளிக்காமல் பழைய சட்டையைப் போட்டுக்கொண்டு திரிவது, ஆயுதங்களை வைத்துக்கொண்டு அலப்பறை செய்வது என்றுதான் வடசென்னை நபர்களை இதுவரை நாம் பார்த்து வந்திருக்கிறோம். ஆனால் இதில் நிஜமான வடசென்னை காட்டப்பட்டிருக்கிறது. கால்பந்து, கேரம்போர்ட் ஆகிய விளையாட்டுகளும், நடனப்போட்டியில் பங்கேற்கும் லோக்கல் பசங்கள், தீவிரமான போராட்டங்களில் பங்கேற்கும் மனிதர்கள், இவர்களுக்கிடையே அரசியல்வாதிகள், மரக்கிடங்கு வைத்திருக்கும் வியாபாரிகள், இவர்களுக்கிடயே இருந்து வந்து மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் கதாநாயகன் என்று பலவிதமான மனிதர்களும் படம் நெடுக வருகிறார்கள். இவர்களில் யாரையுமே நம்மால் மறக்க முடியவில்லை. சும்மா வந்துபோகாமல் ஒவ்வொருவருக்கும் இதில் ஒரு personality உண்டு. அவர்கள் பேசும் வசனங்களும் அவ்வளவு இயல்பு. இந்தப் படத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட ஜானியின் கதாபாத்திரத்தை எப்படியும் எல்லோரும் புகழத்தான் போகிறார்கள் என்பதால் அவரைத் திரையில் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் அப்படிப்பட்ட அனாயாசமான நடிப்பு எப்படிச் சாத்தியம்? அப்படி ஒரு கதாபாத்திரத்தைப் பார்த்ததே இல்லை. He just rules the screen. ஒவ்வொரு வசனத்துக்கும் இவர் கொடுக்கும் counterகள் அசர அடிக்கின்றன. படத்தின் சிறந்த நடிப்பு இவருடையதே. மிக மிக மிக இயல்பாக வந்துபோகிறார். அவரது உடல்மொழி மிகச்சிறப்பு.

அடுத்ததாக எனக்குப் பிடித்த அம்சம், சந்தோஷ் நாராயணனின் இசை. சந்தோஷ் நாராயணனின் இசை நன்றாக இருக்கிறது என்று எழுதுவது இப்போதெல்லாம் ஒரு clichéவாக ஆகிவிட்டது. பாடல்கள் நன்றாக இருக்கின்றன என்றால் பின்னணி இசை அட்டகாசம் என்றே சொல்லவேண்டும். குறிப்பாக சில காட்சிகள் (இடைவேளைக்கு முன்னர் வரும் சீக்வென்ஸ், க்ளைமேக்ஸ் சீக்வென்ஸ் ஆகியவை உதாரணங்கள்). கானா பாலா பாடும் ’மரண கானா’ எனக்கு மிகவும் பிடித்தது (’இறந்திடவா நீ பிறந்தாய்’). இந்தப் பாடலில் கானா பாலாவின் soliloquy அட்டகாசம். அதேபோல் ‘சுவர்’ தீம் இசைக்கோர்ப்பு. இதே கானா பாலா பாடியிருக்கும் ‘காகிதக் கப்பல் கடலுல விழுந்திருச்சா’ பாடலும் அதன் நடனமும் மிகவும் பிடித்தன. சந்தோஷ் நாராயணன் தனக்கென ஒரு மிக வித்தியாசமான, தனிப்பட்ட தன்மையுடன் கூடிய இடத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் என்பது உறுதி.

’நடிப்பு’ என்ற அம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், ஏற்கெனவே சொன்னதுபோல் இந்தப் படத்தில் சுவரில் வரைந்திருக்கும் வ.ஐ.ச ஜெயபாலனின் மிகப்பெரிய ஓவியம் கூட நன்றாக நடித்திருக்கிறது. குறிப்பிட்ட சில காட்சிகளில் இந்த ஓவியத்தை நமக்குக் காமெரா காண்பிக்கும்போது அது புரியும். படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறந்த நடிப்பையே நல்கியிருக்கிறது. படத்தில் வரும் சில கும்பல் கும்பலான காட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்., அந்தக் கும்பலின் வெளி ஓரத்தில் நின்றிருக்கும் நபர்களின் நடிப்புமே சரியாகப் பொருந்திப் போவதைக் கவனித்தேன். (இருந்தாலும் என்னால் கதாநாயகி கேதரீன் த்ரேஸாவுடன் ஒன்ற முடியவில்லை. என்னதான் அவருக்கான பாடல்கள், நடிப்பு, காட்சிகள் ஆகியவை படத்தில் இருந்தாலும், அவரது பாத்திரம் லேசான Odd woman out எண்ணத்தையே அளித்துக்கொண்டிருந்தது. இந்த எண்ணம் எழுந்ததுமே ‘அஞ்சாதே’யில் விஜயலக்‌ஷ்மியின் பாத்திரம் எப்படிக் கச்சிதமாக அந்தச் சூழலுக்குப் பொருந்தியது என்பதும் உடனடியாகத் தோன்றியது). கார்த்தியின் நடிப்பைப் பற்றியும் எப்படியும் அனைவரும் புகழத்தான் போகிறார்கள். ஆனால் கார்த்தி சில காட்சிகளில் எல்லாப் படங்களிலும் அவர் எப்போதும் கொடுக்கும் சில ரியாக்‌ஷன்களையே கொடுத்ததும் லேசான செயற்கைத்தன்மையை அளித்தது (கழுத்தை வெட்டிக்கொண்டு சிரிப்பது, தலையை ஆட்டிக்கொண்டே சிரிப்பது etc. வடசென்னையில் வாழும் ஷேவ் செய்த பருத்திவீரனைப் பார்த்த ஃபீலிங்). இருந்தாலும் அவை பெரிதாக உறுத்தவில்லை. ஆங்காங்கே தோன்றின. அவ்வளவே. எல்லாப் படங்களிலும் ஒரே போன்று ரியாக்ட் செய்வதைக் கார்த்தி குறைத்துக்கொள்ளலாம்.

படத்தில் காளிக்கும் கலையரசிக்கும் காதல் உருவாகும் தருணங்கள் எனக்குப் பிடித்தன. அதில் இரண்டு பாத்திரங்களுமே நன்றாக நடித்திருக்கின்றனர். அதேபோல் அன்புவுக்கும் மேரிக்குமான சில காட்சிகள் மிக இயல்பு. எனக்குக் கதாநாயகி கலையரசியை விடவும் மேரியின் பாத்திரம்தான் மிகவும் பிடித்தது. மேரியாக நடித்திருக்கும் ரித்விகா சிறப்பாகச் செய்திருக்கிறார். அவர் வடசென்னையின் பகுதிகளுக்கு மிகச்சரியாகப் பொருந்துவதும் ஒரு காரணம்.

காட்ஃபாதர் போல, உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டே அனைவரையும் கட்டுப்படுத்தும் வில்லன் இதில் உண்டு. அரசியல் எப்படி மனிதர்களை மாற்றுகிறது என்பதும் படத்தில் உண்டு. தேர்தல் வருகையில் சுவர்களில் ‘Reserved for the XXYYZZ party – full 2014’ போன்ற எழுத்துகளை நாம் அவசியம் பார்த்திருப்போம். அந்தந்தக் கட்சி அதில் அவர்களின் விளம்பரங்களை எழுதப்போகிறார்கள் என்பதுதான் அது. அப்படிப்பட்ட விளம்பரங்களை சில முறை நாம் ஒரு புன்னகையோடும் கடந்திருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு விளம்பரம் எப்படி எல்லாரின் தலையெழுத்தையும் அசைத்துப் பார்க்கிறது என்பது இத்தகைய பாத்திரங்களால் சொல்லப்படுகிறது.

படத்தின் முதல்பாதி மிகவும் இயல்பாகவும் வேகமாகவும் செல்கிறது. இதுதான் வேலையில்லா பட்டதாரியைப் போன்ற படங்களுக்கும் மெட்ராஸைப் போன்ற படங்களுக்கும் வித்தியாசம். மெட்ராஸ் துவங்கும்போதே அது எத்தகைய ஒரு பரபரப்பான – சென்ஸிடிவ் சூழல் என்பது நன்றாகப் புரியவைக்கப்பட்டுவிடுகிறது. எந்தக் காட்சியிலும் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை. இதுதான் காட்சிகளுக்குச் சுவாரஸ்யத்தைக் கொடுக்கிறது. ஆனால் வேலையில்லா பட்டதாரியில் எதுவுமே நடப்பதில்லை. வெறும் ஹீரோயிஸம் மட்டுமே பெரிதாகக் காட்டப்படுகிறது. இரண்டாவது பாதியுமே வேகம்தான். ’நான் நீ நாம் வாழவே உறவே’ பாடல் தொடங்கும் வரை. அந்தப் பாடல், அதன்பின் வரும் இருவரின் ரொமான்ஸ் காட்சிகள், பின்னர் வரும் ‘ஆகாயம் தீப்பிடிச்சா நிலா தூங்குமா’ பாடல் வரை கிட்டத்தட்ட 15 நிமிடங்களாவது இவர்களையே பார்க்கிறோம். அந்தக் காட்சிகளுக்கு முன்னர் இருந்த வேகம் இந்தக் காட்சிகளால் மிகவும் குறைந்து, படம் இழுக்கப்படுவது போன்ற ஒரு எண்ணம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. இந்தப் பதினைந்து நிமிடங்கள் மட்டும் ஓரிரு நிமிடங்களாகச் சுருக்கப்பட்டிருந்தால் படம் இன்னும் வேகமாகச் சென்று முடிந்திருக்கும் என்று தோன்றியது. அந்தக் காட்சிகளில் சொல்லப்படும் விஷயங்கள் குறைவுதான். அந்தக் காட்சிகளுக்கான முக்கியத்துவம் புரிந்தாலும், அவைகள் சுருக்கப்பட்டிருக்கலாம்.

படத்தின் ஒரே பிரச்னையாக எனக்குத் தோன்றியது அதன் நீளம் மட்டுமே. மேலே சொன்ன காட்சிகளைக் கொஞ்சம் குறைத்து, 10-15 நிமிடங்கள் முன்னதாகப் படத்தை முடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். அதேபோல் படத்தில் அன்புவுக்கும் காளிக்குமான நட்பு பற்றிக் காளி சொல்லும்போது அன்பு எப்படியெல்லாம் காளியைப் பார்த்துக்கொள்வான் என்பது சொல்லப்படுகிறது. ஆனால் துவக்கத்தில் இருந்து அந்தக் காட்சி வரை இருவரும் இயல்பான நண்பர்கள் என்பதே காட்டப்படுவதால் இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் ஒன்ற முடியவில்லை. காளி சொல்வதெல்லாம் கொஞ்சம் exaggerate செய்யப்பட்டுப் பேசப்பட்ட விஷயங்களோ என்று தோன்றுவதைத் தடுக்க முடிவதில்லை.

இதெல்லாம் சின்னச்சின்ன குறைகள் மட்டுமே. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இயக்குநர்களுக்குப் பொதுவாக வரும் ’இரண்டாம் பட’ ஃபோபியாவை ரஞ்சித் அனாயாசமாகத் தாண்டிவிட்டார் என்றே தோன்றுகிறது. அட்டக்கத்தியை விடவும் மெட்ராஸே எனக்குப் பிடித்தது. வசனங்களில் ஜே.பி. சாணக்யாவின் பங்கும் உண்டு என்பது டைட்டிலில் தெரிந்தது. எந்த அளவு என்பது தெரியவில்லை. அவசியம் இனி ரஞ்சித்தை நாம் கவனிக்க ஆரம்பிக்கலாம். மேன்மேலும் நல்ல படங்கள் எடுப்பார் என்று நம்புவோம். சென்னையின் குறிப்பிட்ட சில பகுதிகளை இவ்வளவு இயல்பாக இன்னும் யாரும் காட்டியதில்லை (மேல்தட்டு மக்களை மணி ரத்னம் ‘மௌன ராகம்’, ‘அக்னி நட்சத்திரம்’ ஆகிய படங்களில் இயல்பாகக் காட்டியிருப்பார். வடசென்னை, புறசென்னை ஆகிய பகுதிகளின் நடுத்தர மக்களை ரஞ்சித் மெட்ராஸிலும் அட்டக்கத்தியிலும் இயல்பு மாறாமல் காட்டியிருக்கிறார்). ரஞ்சித்தின் இரண்டு படங்களைப் பார்த்தபின்னர், வெங்கட் பிரபுவிடம் இருந்து ரஞ்சித் வந்திருக்கிறார் என்ற விஷயம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

இயல்பான ‘மெட்ராஸை’க் காட்டியவகையிலும், அந்த இயல்புத்தன்மையை நடிப்பாலும் இசையாலும் ஈடுகொடுத்து இறுதிவரை கெடாமல் பார்த்துக்கொண்டதிலும் ‘மெட்ராஸ்’ அவசியம் ஸ்கோர் செய்கிறது. இது கார்த்திக்கு இன்னும் சில கதவுகளையும் ஜன்னல்களையும் திறக்கக்கூடும். மறுபடியும் சகுனி, அலெக்ஸ் பாண்டியன் போன்ற கொடுமைகளில் சிக்காமல் மெட்ராஸ் போன்ற படங்களில் நடித்து மேலே மேலே செல்வது கார்த்தியின் கைகளில்தான் இருக்கிறது (அப்படி நடிக்கையில் அவரது ஒரே போன்ற ரியாக்‌ஷன்களை அவசியம் தவிர்த்தல் இன்னும் நல்லது).

பி.கு

1. படத்தை நாங்கள் பார்த்தது படுலோக்கலான தியேட்டரான முகுந்தாவில்.  26th மாலை 5:30 ஷோ.

2. படத்தைப் பற்றி ‘மெட்ராஸ் படமும் ஜெர்மனியின் சர்வாதிகார அரசியல் சொல்லும் பாடமும்’ என்று கடுமையான இலக்கியத் தொனியில், ’ரஞ்சித் எடுக்க நினைத்த படம், எடுத்ததாக வெளியிட்டுள்ள படம், எடுக்க நினைத்துப் பின்னர் எடுத்து வெளியிட்டுள்ள எடுக்க நினைக்காத படம்’ எனப் படிப்பவர்களுக்கு ஜன்னி வரும் வகையில்  யாரும் விமர்சனம் செய்துவிடக்கூடாது என்று உங்களுக்குப் பிடித்த/பிடிக்காத கடவுள்/ஏலியன்/பிசாசு போன்றோரிடம் வேண்டிக்கொள்ளவும்.

  Comments

10 Comments

  1. Arul

    Posterlaye ithu vera mathiriana padam endru therigirathu. Nalla Analysis.

    Reply
  2. Haran

    Good Review Ji!!! I’ll go for it only becoz of Santhosh Narayanan!!

    Reply
  3. ரஞ்சித்திற்காக முதல் நாள் முதல் காட்சி பார்க்க நினைத்த படம், ஆணிகள் அதிகமானதால் திங்கட்கிழமை தான் பார்க்க முடியும்…

    பின்குறிப்பு 2 : 🙂

    Reply
  4. Appo vijay kuda dha 57films layaum ore madhri nadikurar.oru village getup la nadika sollunga papom like paruthiveeran.athella solla matenga yenna avaru periya hero pant&shirt matum potu nadikarathu nadipu illa boss adha thandi innu evlavo iruku….

    Reply
    • ARAN

      Rajesh never criticised Vijay films he know there are so many people to do that vettivelai. Upto me he never waste his time in mass hero films as the same heroes does(!) for us.

      Reply
  5. raymond

    thala piniteenga,me to 26 sep 1st show kovai-ganga, //இந்தப் படத்தில் சுவரில் வரைந்திருக்கும் வ.ஐ.ச ஜெயபாலனின் மிகப்பெரிய ஓவியம் கூட நன்றாக நடித்திருக்கிறது/// – true thala… romba naal kalichu Analysis illama vimarsanam pannirukeenga…

    Reply
  6. இப்பதான் Back to form வந்திருக்கீங்க… நிறைய நாளைக்கு பிறகு ஒரு புல் மீல்ஸ் சாப்ட மாதிரி இருக்கு. செம விமர்சனம். படம் கட்டாயம் பார்க்கறேன். அப்புறம் உங்க புக் சிறீ லங்கா வந்தா கண்டிப்பா வாங்கறேன். தாங்க்ஸ் டு ஜீ….

    //படிப்பவர்களுக்கு ஜன்னி வரும் வகையில்// இவரை ஏன் எல்லாரும் திடீர்னு கலாய்க்கறாங்க? 🙂

    Reply
  7. Ram

    P.S. was awesome 🙂 MDM ku oru punch

    Reply
  8. kmv

    There is a big rumour that it is partially copied from Karuppar nagarm (movie yet to be completed)

    Reply

Join the conversation