The Man From Earth (2007) – English

by Karundhel Rajesh June 12, 2012   English films

பிரம்மாவைப் பற்றிய ஒரு சிறிய கணக்கு. எனதில்லை. அஃப்கோர்ஸ் நமது புராணங்களிலிருந்துதான்.

இவற்றின்படி நமது உலகத்தின் காலம், நான்கு யுகங்களாக பிரிக்கப்பட்டிருப்பது நமக்குத் தெரியும். க்ருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம் மற்றும் கலியுகம். இதன் வருடங்கள், reverse chronologyயின்படி எண்ணுவது சுலபம். கலியுகத்துக்கு 4,32,000 வருடங்கள். இதன் இரண்டு மடங்கான 8,64,000 வருடங்கள், அதற்கு முந்தைய த்வாபர யுகம். கலியுகத்தின் மூன்று மடங்கான 12,96,000 வருடங்கள் என்பது த்ரேதா யுகம். கலியுகத்தின் நான்கு மடங்கான 17,28,000 வருடங்கள் என்பது க்ருத யுகம். ஆகமொத்தம், இந்த நான்கும் சேர்ந்த 43,20,000 வருடங்கள் என்பது ஒரு சதுர்யுகம் எனப்படும். நாற்பத்து மூன்று லட்சத்து இருபதாயிரம் வருடங்கள். இந்த ஒரு சதுர்யுகத்தைப்போல் நூறு சதுர்யுகங்களை கற்பனை செய்துகொள்ளுங்கள். 43,20,000 X 100 = 43,20,00,000. இந்த நூறு சதுர்யுகங்களின் பெயர், ஒரு கல்பம் என்பது. இப்படிப்பட்ட ஒரு கல்பமாகிய 43,20,00,000 (நாற்பத்து மூன்று கோடியே இருபது லட்சம் வருடங்கள்) என்பது இந்த பிரம்மாவின் ஒரே ஒரு நாளின் பாதி. அதாவது பகல் பொழுது. இதே அளவு வருடங்கள், அவரது இரவு. ஆக, பிரம்மாவின் ஒரு நாள் என்பதில், மொத்தம் 86,40,00,000 (எண்பத்து ஆறு கோடியே நாற்பது லட்சம்) வருடங்கள் உள்ளன. கபர்தார்! இது ஒரே ஒரு நாள் மட்டுமே.

இதுபோன்று மொத்தம் நூறு வருடங்கள், பிரம்மா உயிர் வாழ்வாராம். இதுதான் பிரபஞ்சத்தின் ஆயுள் என்று புராணக்கதைகள் சொல்லும்.

இது என்னய்யா ஏதோ கதாகாலட்சேபமாக உள்ளதே என்று நினைக்கிறீர்களா? காரணம் இல்லாமல் இதை சொல்லமாட்டேன்.

நமது இந்திய புராணங்களிலும் சரி, பிற நாட்டுப் புராணங்களிலும் சரி, தற்காலத்தில் எழுதப்பட்ட கதைகளான Lord of the Rings ஆக இருந்தாலும் சரி, இவை எல்லாவற்றிலும் ஒரு common factor உள்ளதைப் பார்க்க முடியும். அதாவது, தேவர்கள். எல்லாரையும் விட அதிக சக்தியுடன், மிக அழகாகவும், சாகா வரத்துடனும், பற்பல ஆயுதங்களோடும் இவர்கள் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். இவர்களால் முடியாதது எதுவுமே இல்லை.

இதே புராணங்களில், கொடுமையான சாபங்கள் வாங்கியவர்களைப் பற்றிய கதைகளும் பரவலாக உள்ளன. கடவுளிடம் சாபம் பெற்று கல்லாக மாறியவர்கள், மரமாக மாறியவர்கள், மாயமாக மறைந்தவர்கள், உடலெங்கும் அழுகி நிணம் சொட்டும் உருவம் எடுத்தவர்கள் ஆகிய் உதாரணங்கள் நம்மூர் புராணங்களிலேயே நிறைய படிக்கலாம். அதேபோல், பிறநாட்டுப் புராணங்களிலும் உண்டு. இதைத்தவிர, வாழ்வின் கொடுமையான துயரங்களை முதுகில் சுமந்தபடி வாழும் துன்பியல் கதாபாத்திரங்களை உலக இலக்கியத்தின் பல பக்கங்களில் படிக்கலாம்.

பொதுவாக, மனித வாழ்வின் உச்சபட்ச துயரம் எது? நமது கண் முன்னர் நமது குழந்தைகள் மடிவதே. அதற்கு இணையாக இல்லாவிட்டாலும், ஓரளவு இதன் பக்கத்தில் வருவது, நமது கண் முன்னர் மனைவியோ கணவனோ மறைவது. பின்னர் பெற்றோர்கள் இறப்பது. இதன்பின் சொந்த பந்தங்கள் சாவது. எத்தகைய மனிதனாக இருந்தாலும் இது நடந்தே தீரும். அப்படித்தான் இயற்கை நியதி.

Anomaly என்று ஒரு வார்த்தை விஞ்ஞான உலகில் மிகப்பிரபலம். எந்த ஒரு நிர்ணயிக்கப்பட்ட விதியும், மிகச்சில தருணங்களில் பொய்க்க நேரலாம். அப்போது அத்தகைய மாற்றத்தை எது ஏற்படுத்துகிறதோ – அதாவது, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விஷயம் நடக்காமல் பொய்ப்பது – அப்போது, அந்த விஷயம் ஒரு அனாமலியாக மாறுகிறது. உதாரணம்: மேட்ரிக்ஸ் படத்தில் கதாநாயகன் நியோ ஒரு அனாமலி. எங்காவது பறக்கும் குதிரை இருந்தால் அது ஒரு அனாமலி. யாராவது நிஜமான சந்நியாசி வாழ்ந்து வந்தால் அவர் ஒரு அனாமலி. எந்த அரசியல்வாதியாவது தூய்மையாக வாழ்ந்தால் அவர் ஒரு அனாமலி. தமிழகத்தில் மின்சாரம் கட் செய்யப்படாமல் 24/7 ஒளிவெள்ளம் பாய்ந்தால் அது ஒரு அனாமலி. இப்படி பல அனாமலிகள் சொல்லலாம்.

பல மதங்களின் புராணங்களையும் பார்த்தால், ஏதோ ஒரு ஸ்தாபகர் இருந்ததாக படித்திருக்கிறோம். புத்தர், ஆதிசங்கரர், அல்லா, க்றிஸ்து, ஸொராஸ்த்ரர், இப்படிப் பலர். இந்த அத்தனை பேருக்கும் விசேஷ சக்திகள் இருந்ததாகவே இந்தக் கதைகள் தெரிவிக்கின்றன. இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல; கடவுள்களே இப்படி வந்தனர் என்று இவை சொல்லும். இப்போது, நேராக இவர்களின் காலத்துக்கு நாம் செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். அப்போது, இதோ தெரு முக்கில் நின்றுகொண்டு அந்தக்கால பானமாகிய டீயோ மூலிகைச்சாறோ சோமபானமோ குடித்துக்கொண்டிருக்கும் அந்த மனிதர்தான் வருங்காலத்தில் கடவுளாக வழிபடப்பெறப்போகும் நபர் என்பது அவருக்கே தெரியாமல் இருக்க ஆயிரம் மடங்கு வாய்ப்புகள் உண்டு, இன்னொரு உதாரணமாக: இதோ இந்தக் கட்டுரையின் வார்த்தைகளே இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து எதாவது ஒரு புதிய மதத்தின் வேதமாக மாறலாம். இந்த வார்த்தைகளுக்கு யாராவது பக்கம் பக்கமாக விரிவுரை எழுதலாம் (வெட்டி மவனே..இருந்தாலும் இது ரொம்பவே ஓவரு). அட ஒரு உதாரணத்துக்கு சொன்னேம்பா..

கடவுள் இருக்கிறாரா இல்லையா?

பிரபஞ்சம் என்பது என்ன?

வாழ்க்கையின் உச்சபட்சத் துயரம் எது?

ரைட். முடித்துக்கொள்கிறேன்.

The Man From  Earth பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கும். திரைக்கதையில் என்னை அசர அடித்த படங்களில் இது ஒன்று.

பி.கு

  • படத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாமல் ஒரு கட்டுரையே முடிக்கிறானே என்று எண்ணவேண்டாம். படத்தைப் பாருங்கள்.
  • இந்தப் படம் என்னிடம் கிட்டத்தட்ட ஒரு வருடமாக இருந்தது. ஆனால் இன்றுதான் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அதற்காக நண்பர் அருண்குமார் மோஹன்ராஜுக்கு நன்றிகள். (இவர் என்னால் நேற்று Serbian Film பார்த்து ஆடிப்போயுள்ளார்).
  • இத்தனை லோ பட்ஜெட்டில், இவ்வளவு குறைவான கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு சிலம்பமே ஆடியிருக்கிறார்கள் இப்படத்தில்.
  Comments

17 Comments

  1. Thanks are supposed to go to http://dubukku.blogspot.com/ for recommending this movie a year ago. I do not want to take credits for anything that is not mine 🙂

    Reply
  2. Oh Crap. I totally forgot to give credits to Dubukku.blogspot.com. Anyways, your comment had done that 🙂

    Reply
  3. Nice intro to the movie, Rajesh. I saw this one after the recommendation from dubukku blog. Blown away. Eager to read your review..

    Reply
  4. அப்பாடா…ஒரு படம் உங்களுக்கு முன்னாடி நான் பாத்துருக்கேன்…செமையான படம்..அதுலயும் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் தாறுமாறு 🙂

    Reply
  5. ராஜேஷ், கலக்குறீங்க,தினகரன் துணை புத்தகத்தில் பார்த்துவிட்டுதான் உங்கள் வலை பூவில் நுழைந்தேன். உங்கள் எழுத்துக்கு விசிறியாகிவிட்டேன்.உங்களின் war of the Ring டவுன்லோட் பண்ண முயற்சி பண்ணி கொண்டிருக்கிறேன்.ஏதோ நெட் problem.முடியவில்லை.கூடிய சீக்கிரத்தில் படித்துவிட்டு கருத்து சொல்ல வருகிறேன்…அப்புறம் ,கமலை பற்றிய ஒரு வலை பூவை பார்த்தேன்..அட்டகாசம்.கமல் ஒரு அற்புத கலைஞன்.ஆனால், அவருக்கு, தன்னுடைய சொந்த சரக்கின் மீது நம்பிக்கை இல்லை என்பது அவரின் துரதிருஷ்டம். நிறைய எழுத வாழ்த்துக்கள்..

    அன்புடன்,
    மோகன்.

    Reply
  6. This comment has been removed by the author.

    Reply
  7. நண்பா,
    விரைவில் பார்க்க இருக்கிறேன்,அனாமலி என்னும் புதிய வார்த்தையை கற்றுக்கொண்டுள்ளேன்,அதை சர்காஸ்டிக்காக பல இடங்களில் பிரயோகிக்க உள்ளேன்.

    வார் ஆஃப் ரிங்ஸ் படித்து முடிக்கும் தருணத்தில் உள்ளேன்,நான் லீனியராக படித்தேன்,முன்பு வேக வேகமாக ஓட்டிப்பார்த்தவை நன்றாக விளங்கின.

    நேற்று நண்பரின் htcமொபைலில் இதை தரவிறகினோம்,ஆனால் அதில் பிடிஎஃப் பெட்டி பெட்டியாக தெரிகிறது,ப்ளக் இன் இன்ஸ்டால் செய்ய சொல்லிஉள்ளேன்.படித்து முடித்ததும் படங்களை ஒர்ரெ சிட்டிங்கில் பார்த்துவிடும் ஆவல் எழுகிறது.

    Reply
  8. இந்த படத்தை பற்றிக் கேள்விப்பட்டது கூட இல்ல. சீக்கிரம் பார்த்து விடுகிறேன்( டெம்ப்ளேட் தான் ஒத்துக்குறேன்)….

    @கீதப்ரியன்.

    தலிவா..உங்க நண்பரின் ரீடரில் உள்ள பிரச்சனையா இருக்கும். நீங்க சொன்ன மாதிரி ப்ளக்இன் போட்டும் சரியாகலைனா, வேற வழில முயற்சிக்கலாம். நீங்க ப்ரின்ட் அவுட் எடுத்தாச்சா ?

    தினகரன் – நீங்க ப்ரூப் பார்க்கும் முன்னரே ஆர்டிக்கள் ரெடி ஆயிருச்சு. அதான் உங்க பேரு வரல 🙂

    Reply
  9. படம் முழுக்க ஒரே இடத்துல பேசிக்கிட்டே இருக்குற படத்த முழு விறுவிறுப்போட இப்பதான் பாத்தேன். கலக்கிட்டாங்க போங்க ….டாவின்சி கோட் படத்தையே 10 நிமிஷத்தில் தூக்கி சாப்பிட்டு விட்டார்கள்

    Reply
  10. @vaasagan – டுபுக்குல நீங்க பார்த்தது குறித்து சந்தோஷம். அட்டகாசமான படம். அதுல சந்தேகமே இல்ல!

    @ Kamal kanth – ஹா ஹா 🙂 .. ஆமாம் பாஸ் .. க்ளைமேக்ஸ் – ஆனா அதை கொஞ்சம் நானு எதிர்பார்த்தேன் 🙂

    @ Mohan4472 – உள்ளது உள்ளபடி நீங்க புரிந்துகொண்டமைக்கு நன்றி மோகன். பலபேரு, நான் ரஜினியின் விசிறி; அதான் கமலைப் பத்தி அவதூறு கிளப்புறேன்னு நினைச்சிகினு இருக்காங்க 🙂 .. நீங்க அப்புடி நினைக்கலை என்பதில் சந்தோஷம். விரைவில் மின்புத்தகம் படித்துவிட்டு கருத்தை சொல்லுங்க. நன்றி

    @ கீதப்ரியன் – நண்பா.. அனாமலி வார்த்தையை பல இடங்களில் பிரயோகிச்சா தர்ம அடி நிச்சயம். அதுனால, பார்த்து யூஸ் பண்ணுங்க 🙂

    @ லக்கி – சூப்பர். இந்த படம் பிடிக்கலைன்னு இன்னும் யாருமே சொல்லல. அந்த அளவு இது அத்தனை பேரையும் அட்டாக் பண்ணிருக்கு. திரைக்கதை – அட்டகாசம் ! இதுமாதிரி தமிழ்ல கூட (இதே படத்தை இல்ல) திரைக்கதையில் விளையாடலாம். ஆனா….? 🙂

    Reply
  11. ஒருவேளை உண்மையான வரலாறு இந்த கதையை போல் இருந்தால் …..நினைக்கவே முடில….அதுவும் கடவுளே நான்தான் சொல்றபோ….ரொம்ப கூல் அக்டிங் பிரதர்….டேவிட் லீ ஸ்மித்…மனுஷன் அமைதியா பேசியே மத்தவங்கள அதிர வைக்கறாரு…..கடைசியில்….இந்த சக்தி வரமா இல்ல சாபமானு நம்மள யோசிக்க வைகிறது…..எப்படி தான் யோசிகரான்களோ

    Reply
  12. நீங்கள் ஏன் Taken படத்தைப் பற்றி எழுதவில்லை?
    அப்புறம் 3 இடியட்ஸ், தாரே சமீன் பர் ?
    நேரம் இருந்தால் என் தளத்தை பார்வையிட்டு விமர்சிக்கவும். http://spraymythoughts.blogspot.in

    Reply
  13. நீங்கள் ஏன் Taken படத்தைப் பற்றி எழுதவில்லை?
    அப்புறம் 3 இடியட்ஸ், தாரே சமீன் பர் ?
    நேரம் இருந்தால் என் தளத்தை பார்வையிட்டு விமர்சிக்கவும். http://spraymythoughts.blogspot.in

    Reply
  14. படத்தை பார்க்க தூண்டும் விமர்சனம்!

    Reply
  15. இந்த படத்தை போல எந்த ஒரு ஆங்கில படத்தை பார்த்தும் நான் யோசித்தது கிடையாது..பல தகவல்களை அறிய இணையத்தில் தெரிந்துக்கொள்ள ஏகுவாக அமைந்தது…படத்தின் விமர்சனம்தான் எழுதி இருக்கீங்களோ என்ற நினைப்பில் வந்தேன்..ஆனால் பல விடயங்கள் சொல்லிருக்கீங்க..ரொம்ப நன்றி பாஸ்,

    Reply
  16. இராமசாமி

    Can you write about “The Station Agent”?

    Reply

Join the conversation