மரியான் & Raanjhanaa – 2013
மரியான் மற்றும் ராஞ்ஜனா ஆகிய இரண்டுக்கும் ஒருசில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆகையால், தனியே இவற்றைப்பற்றி எழுதி, படிப்பவர்களின் பொறுமையை சோதிப்பதற்குப் பதில் இரண்டு படங்களையும் ஒரே போஸ்ட்டில் போட்டுவிடலாம் என்று தோன்றியது.
முதலில், ஒரு கடற்கரை கிராமத்துக்கு செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த கிராமத்தில் நமது அனுபவம் எப்படியெல்லாம் இருக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அவசியம் நமது மனதில் இருக்கும். உள்ளே நுழைந்ததும் அந்த கிராமத்தில் மெக்டொனால்ட்ஸ் கிளை ஒன்று இருக்கிறது. பக்கத்திலேயே KFCயின் பிரம்மாண்டமான கிளை. அந்த கிராமத்தில் இருக்கும் மக்களில் ஒரே ஒரு பெண் மட்டும் அந்த பிராந்தியத்துக்கே சம்மந்தமில்லாமல், எந்த வேலையை செய்தாலும், எப்படிப் பார்த்தாலும் மிகவும் அழகாக, க்யூட்டாக இருக்கிறாள். அப்படியே மேலே நடக்கும்போது அங்கே எதுவுமே இல்லை என்பது தெரிகிறது. ‘இதுவும் மற்றொரு கிராமம்தான் போலும்’ என்று சோர்ந்துபோய் வெளியே வருகிறோம்.
இதுதான் மரியான்.
மரியானின் கதாநாயகி பனிமலரின் கதாபாத்திரம் மிகவும் செயற்கையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. உடையிலிருந்து, புருவம், உடல்மொழி, பேச்சு ஆகிய எதுவும் இயல்பாக இல்லை. அந்த வேடத்தை ஏற்றிருக்கும் பார்வதியின் நடிப்பு நன்றாக இருக்கிறதா இல்லையா என்ற விஷயத்துக்கே போகவேண்டாம். ஆனால், அவரது கதாபாத்திரம் அந்த பிராந்திய மக்களிடமிருந்து மிகவும் அந்நியப்பட்டிருக்கிறது என்பது படம் பார்க்கும்போதே தெரிகிறது. ஒரு சிறிய உதாரணமாக, ’பருத்திவீரன்’ கதாநாயகி ப்ரியாமணியை எடுத்துக்கொண்டால், இதுபோன்ற படங்களில் கதாநாயகியின் சித்தரிப்பு எப்படி இயல்பாக இருக்கவேண்டும் என்று உதாரணமாகக் காட்டமுடியும். எந்த ஃப்ரேமில் கதாநாயகியைக் காட்டினாலும் மிகவும் அழகாக அவர் தெரியவேண்டும் என்று மரியானில் அவரது வேடம் இடம்பெறுவது, படத்தின் ஆரம்பத்தில் இருந்தே மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது.
அடுத்த உறுத்தல் – தனுஷ். கதாநாயகன் மரியான் வேடத்தில் அவர் பொருந்திப் போகிறார். ஆனால், ஒரு சில காட்சிகளுக்குப் பிறகு, இதுபோன்ற வேடங்களையே அவர் தேடித்தேடி நடிப்பது புரிந்தது (அல்லது இதுபோன்ற வேடங்களே அவரைத் தேடித்தேடி வருகின்றன என்றும் வைத்துக்கொள்ளலாம்). உணர்ச்சிமயமான காட்சிகளில், எப்படி இதற்கு முந்தைய ‘ராஞ்ஜனா’, ’மயக்கம் என்ன’, ‘புதுப்பேட்டை’ போன்ற அவரது படங்களில் அவரது நடிப்பைப் பார்த்தோமோ, அதேபோன்றுதான் மரியானிலும் அவர் தெரிகிறார். இதனால், மரியானைப் பார்ப்பது போய், தனுஷையே மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்றே இருந்தது. அவரது உடல்மொழிகூட இதற்கு முன்பு நாம் பார்த்த படங்களையே ஒத்திருந்தது. மிகவும் அதிகமான நடிப்பை அவர் நல்கியிருக்கிறாரோ?
படத்தில் சில காட்சிகள் மனதில் சந்தோஷத்தை விளைவிக்கும் ரொமாண்டிக் காட்சிகளாக இருக்கின்றன. குறிப்பாக சர்ச்சில் மரியானைப் பார்க்கும் பனிமலர். கூடவே மரியானின் மனதில் பனிமலரைப் பற்றிய காதல் வெளிப்படையாக வெடிக்கும் காட்சி. அதைப்போலவே படத்தின் ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன’ பாடலுக்கு முன்னால் வரும் காட்சிகள். ஆனால், மொத்த படத்திலும் எனக்குப் பிடித்த காட்சிகளாக அவை மட்டுமே இருந்தன.
படத்தின் ஒரு நெகட்டிவ் அம்சம் – தடால் என்று பாடல்கள் இடம்பெறுவது. ‘எங்க போன ராசா’ பாடலின் முக்கியத்துவம் என்ன? அந்தப் பாடலுக்கான காட்சிகளே செயற்கையாக இருந்தன. ரேடியோவை சுற்றி சிலர் அமர்ந்திருக்கிறார்கள். அதில் புயல் பற்றிய செய்தி ஒலிக்கிறது. ’கடலுக்குப் போன மரியானும் பிறரும் இன்னும் வரவில்லை’ என்று யாரோ ஒருவர் வந்து பனிமலரிடம் சொல்லிவிட்டு செல்கிறார். உடனேயே பாடல் ஆரம்பித்துவிடுகிறது. அதேபோல் முடிந்தும் விடுகிறது. உடனேயே மரியான் வந்துவிடுகிறான். இந்தக் காட்சிகளில் எந்த வகையான உணர்வுகளும் வெளிப்படுவதில்லை. இதைப்போலவே இரண்டாம் பாதியில் டெரரிஸ்ட்களுக்கு மத்தியில் மரியான் பாடும் ‘கடல் ராசா நான்’ பாடலும் எந்த வகையான உணர்ச்சிகளையும் நமது மனதில் வரவழைக்க மறுக்கிறது. அந்த சிச்சுவேஷனே நகைச்சுவையாக இருந்தது இன்னுமொரு குறைபாடு.
படத்தில் வேகம் மிகவும் கம்மியாக இருந்தது. படத்தின் கதையில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதற்கான அம்சங்கள் எதுவுமே இல்லாததால், கதையோடு ஒன்ற முடியவில்லை. எனக்குப் புரிந்தவரை, படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை மரியான் வெறுமனே ரியாக்ட் தான் செய்துகொண்டிருக்கிறான். அவனைச் சுற்றிலும் சம்பவங்கள் நடக்கின்றன. அவற்றுக்கான எதிர்வினை மட்டுமே இறுதிவரை மரியான் புரிந்துகொண்டே இருக்கிறான். அவனாக எதையுமே செய்வதில்லை. அவனாக எதையும் செய்யாமல் இருப்பதால் படமும் சுவாரஸ்யமாக இல்லை. இதனால் படத்தின் இரண்டாம் பாதியில் டெரரிஸ்ட்களுக்கு மத்தியில் மரியான் அவஸ்தைப்படும்போது நமக்கு பச்சாதாப உணர்ச்சி வருவதே இல்லை. மாறாக, அந்தக் காட்சிகளில் அலுப்பே எழுகிறது. உங்களுக்குப் பிடித்த படங்களின் கதாபாத்திரங்களை எண்ணிப்பாருங்கள். படத்தின் ஆரம்பத்தில் ரியாக்ட் செய்தாலும், அதன்பின் அவர்களாக செயல்புரிவதில்தான் சுவாரஸ்யம் அடங்கியிருக்கும். பல வெற்றிகரமான தமிழ்ப்படங்களை இதற்கு உதாரணமாக சொல்லமுடியும். கமர்ஷியல் படங்களில் கதாநாயகன் சுறுசுறுப்பாக, தான் மேற்கொண்ட குறிக்கோளை நோக்கி செய்யும் செயல்களே படங்களை சுவாரஸ்யம் ஆக்கும். இதில் அது மிஸ்ஸிங். கதாநாயகன் வெறுமனே ரியாக்ட் மட்டுமே செய்வது, கலைப்படங்களின் டெக்னிக். மரியான் மட்டுமல்ல – பனிமலரும் தேமே என்று இரண்டாம் பாதி முழுக்க ஃபோனின் பக்கத்தில் அமர்ந்துகொண்டிருப்பதோடு சரி. எந்த செயலும் இல்லை.
டெரரிஸ்ட்களைப் பற்றிப் பேசும்போது – சூடானின் பின்னணி நமக்குப் புதியது. எத்தகைய படமாக இருந்தாலும், அதில் வரப்போகும் பிரதான பாத்திரங்களைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகம் இருந்தால், அவர்கள் படத்தின் பின்னால் வரும்போது ஆடியன்ஸ் தயாராக இருக்கமுடியும். ஆனால் இந்தப் படத்தில் சூடானுக்கு தனுஷ் போகப்போவதை அறிகிறோம். அடுத்த ஷாட்டில் இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. அடுத்த காட்சியில் தனுஷ் கடத்தப்படுகிறார். அதுகூட ஓகே. ஆனால் கடத்தப்படும் காரணம் என்ன? கடத்துபவர்களின் பின்னணி என்ன? ஒன்றுமே நமக்கு சொல்லப்படுவதில்லை. ஒரே ஒரு டயலாக் மூலம், ‘எண்ணை வளம், நிறுவனங்களின் சுரண்டல்’ போன்றவை லேசாக கேட்கின்றன. ஆனால், இந்த கடத்தல் காட்சிகளின்மீது நமக்கு ஈர்ப்பு வருவதற்கு இது போதாது. இதே போன்ற பின்னணியுடைய ‘ரோஜா’ படத்தை எடுத்துக்கொண்டால், வாஸிம் கானின் பின்னணி நமக்கு முன்னமேயே சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகனை கடத்தும் லியாகத்துக்குமே பலமான காரணம் இருக்கிறது. அர்விந்த்ஸ்வாமியிடம் அவன் ஆவேசமாக பேசும் வசனம் மூலமாக, அவனது நோக்கம் தெள்ளத்தெளிவாக நமக்கு சொல்லப்படுகிறது. இதுதான் படத்தில் சுவாரஸ்யம் அதிகரிப்பதற்கும், அது அடியோடு இல்லாமல் போவதற்குமான வித்தியாசம். அதுவேதான் ரசனைக்கும் ரசனையின்மைக்குமான வித்தியாசம்.
கூடவே பல தமிழ்ப்படங்களில் நாம் பார்த்த மொக்கை வில்லன் இதிலும் இருப்பதால், அது இன்னும் படத்தை இழுக்கிறது. உதாரணமாக, மரியான் ஊருக்குப் போனதுமே வில்லனுக்கு லைன் க்ளியர் ஆகிவிடுகிறது. ஆனால் இரண்டு வருடங்கள் கழித்து அவன் கடத்தப்படும்வரை காத்திருந்து, அதன்பின்னர்தான் பனிமலரிடம் வருகிறான் அவன். அதற்கு ஜஸ்டிஃபிகேஷனாக, ‘உன்னை அப்பவே தூக்கிருக்கணும்டி’ என்று ஒரு டயலாக். 80க்களின் காலகட்டத்தில்தான் இப்படிப்பட்ட வில்லன் வருவதை பார்த்திருக்கிறேன்.
படத்தில் கதாநாயகி பார்வதியின் கதாபாத்திரம் எப்படி எனக்கு மிகவும் அந்நியமாக தோன்றியதோ, அப்படித் தோன்றிய இன்னொரு அந்நியமான விஷயம் – ஒளிப்பதிவாளர் மார்க் கோனிங்ஸின் கேமரா. படத்தில் வரும் அத்தனை காட்சிகளும், ஒரு துணியை வைத்து ஒவ்வொரு ஷாட்டின் முன்பும் கேமராவை துல்லியமாக துடைத்து எடுத்ததுபோன்று பளிச்சென்று இருந்தன. எனக்குத் தெரிந்து ஷாட்களில் Out of Focus இல்லாத ஒரே தமிழ்ப்படம் இதுதான் என்று தோன்றியது (எனது திரைத்துறை நண்பர்களும் இதனை உறுதி செய்தனர்). இதனால் ஒவ்வொரு காட்சியின்போதும் அந்தக் காட்சி துருத்திக்கொண்டு தெரிவது புரிந்தது. அதாவது, எல்லா காட்சிகளுமே ‘என் அழகைப் பார்’ என்று வெளிப்படையாக பறைசாற்றும்விதமான காட்சிகள். மணிரத்னத்தின் தற்போதைய படங்களிலும் இந்த பிரச்னை இருக்கும். இப்படி ஒளிப்பதிவாளரை டாமினேட் செய்யவிட்டால், இயக்குநர் அங்கே பளிச்சிட முடியாது. ஆகவே, ஏற்கெனவே வீக்காக இருக்கும் மரியானின் கதை, ஒளிப்பதிவினால் மேலும் வீக் ஆகிறது. போலவே, அப்படிப்பட்ட ஒரு கடல்புறத்துக் கதைக்கு இது கொஞ்சம் ஓவரன தொழில்நேர்த்தி என்றும் தோன்றியது.
பின்னணி இசையில், Swades படத்தில் ரஹ்மான் செய்திருந்த அற்புதத்தின் ஒரு சில தீற்றல்கள் மட்டும் உணர முடிந்தது. அதுவும் காதல் காட்சிகளில் மட்டும். பாடல்கள் வழக்கப்படி அட்டகாசம். ஆனால் ஒரே குறை – ரஹ்மானின் இசையில் தனுஷுக்கு ஒரு பாடலைக் கொடுத்திருக்கலாம். அவரது குரல் எனக்குப் பிடிக்கும்.
ஒரு இயக்குநராக பரத்பாலா இந்தப் படத்தில் எதுவுமே செய்யவில்லை. மணிரத்னத்தின் பாணியையே (டெக்னீஷியன்களின் தரத்தால் படத்தை கரையேற்ற முயல்வது) பின்பற்றியிருக்கிறார். ஆனால் மணிரத்னத்தின் ரசனை பரத்பாலாவிடம் இல்லை.
ஒட்டுமொத்தமாக, ஒரு வலுவான கதை இல்லாமல், படம் முழுதும் வெறும் காட்சிகளின் தொகுப்பாக இருந்ததால், மரியான் மிகவும் அலுப்பான ஒரு அனுபவமாக இருந்ததை தவிர்க்கமுடியவில்லை.
பி.கு – இதோ இந்த மரியான் விமர்சனத்தையும் க்ளிக்கிப் படியுங்கள். நான் படித்தவற்றில் மிகச்சிறந்த விமர்சனம் இதுதான்.
எனக்குப் பிடித்த ஒரு பாடலின் மேக்கிங் வீடியோ இங்கே.
[divider]
Raanjhanaa
வழக்கமாக ரொமாண்டிக் ஹிந்திப்படங்களில், ஹீரோயினை துரத்தித்துரத்தி காதலிக்கும் ஹீரோ இருப்பான். படத்தின் இறுதிவரை இந்த வேலையை செவ்வனே செய்து, ஹீரோயினை கரம்பிடிப்பது இவனது வேலை. இந்தமுறை, ராஞ்ஜனாவில் செக்கச்செவேல் ஹிந்தி ஹீரோவுக்குப் பதில், சாதாரணமான, பக்கத்து வீட்டு நபர் போன்று இருக்கும் தனுஷ்.
படத்தின் முதல்பாதி வேகமாக செல்கிறது. மரியானின் மரியானுக்கும், ராஞ்ஜனாவின் குந்தன் ஷங்கருக்கும் பிரதான வித்தியாசம் இங்கேதான். குந்தன் ஷங்கர், படம் முழுவதிலும் செயல்புரிந்துகொண்டே இருக்கிறான். முதல்பாதியில் கதாநாயகியை துரத்துகிறான். இரண்டாம் பாதியில் கதாநாயகியின் அருகிலேயே இருந்துகொண்டு அரசியலில் ஈடுபடுகிறான். ஆகமொத்தம் படம் முழுக்க சுறுசுறுப்பாக இருப்பதால், படமும் அதனைச்சுற்றி ஆக்டிவாக இருக்கிறது. ஆனால், மரியானில் இது இல்லை.
ராஞ்ஜனாவில் எனக்குப் பிடிக்காமல் போனது, படத்தின் இரண்டாம் பகுதி. அதில் கதை மிகவும் மந்த நிலையில் நகர்கிறது. அந்த இரண்டாம் பகுதியில் தனுஷைத் தவிர வேறு யாருக்கும் ஸ்கோப் இல்லை. அப்படி தனுஷுக்கு வாய்ப்பு இருந்தாலும், கதையே படுமொக்கையாக இந்த இரண்டாம் பாதியில் செல்வதால் எப்போது படம் முடியும் என்றே தோன்றிக்கொண்டிருந்தது. கூடவே, அதில் இருக்கும் ஒரு so called ட்விஸ்டுமே கொடுமை.
முதல் பாதி இல்லை என்றால் இந்தப் படம் படுதோல்வி அடைந்திருக்கும். முதல்பாதியில் ஒட்டுமொத்த படமும் தனுஷால்தான் நகர்கிறது. செம ஜாலியான நடிப்பை வழங்கியிருக்கிறார். வசனங்களை அட்டகாசமான உச்சரிப்பில் அவர் பேசுவது பிரமாதம். இந்தப் படத்தை பார்க்கும்போது, ஒரு நடிகராக, ஒரு முழுப்படத்தையும் தன் தோளில் தூக்கி சுமக்கும் பொறுப்பும் மெச்சூரிட்டியும் தனுஷுக்கு வந்தாயிற்று என்பது புரிந்தது. அதேசமயம் இந்தப் படத்தின் இரண்டாம் பாதியில் தனுஷை பார்த்தால் வழக்கமான அதே நடிப்புப் பிரச்னைதான் தெரிகிறது. மரியானைப் பார்த்தால் ராஞ்ஜனாவில் நடித்ததுபோலவே தெரிகிறது. ராஞ்ஜனாவைப் பார்த்தால் மயக்கம் என்ன, புதுப்பேட்டை சாயல். படத்தின் நாயகி சோனம் கபூர், கொடுமைக்கு இளைத்துப்போய், அவரைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. படத்தின் பிரமாதமான அம்சம் – குந்தனுக்கும் அவனது நண்பர்களுக்கும் இடையே நிலவும் அருமையான நட்பு. குறிப்பாக, பிந்தியா என்ற பெண்ணுக்கும் குந்தனுக்கும் இருக்கும் நட்பு கலந்த அன்பு கலந்த காதல். அந்த பிந்தியாவின் வேடம் ஏற்று நடித்த ஸ்வரா பாஸ்கர் என்ற நடிகையை எனக்கு மிகவும் பிடித்தது.
ரஹ்மானின் அனைத்துப் பாடல்களும் எனக்குப் பிடித்தன.
ஹிந்தியில் தனுஷின் முதல் படம் ஹிட். முப்பத்தைந்து கோடி பட்ஜெட்டில், இதுவரை நூறு கோடியை வசூலித்திருக்கிறது. இதுவரை கமல், ரஜினி உள்பட வேறு எந்த தமிழ் ஹீரோவுக்கும் கிடைத்திராத பெருமை இது. ஹிந்தியில் அற்புதமான நடிகராக வர தனுஷுக்கு வாழ்த்துகள் (ஆனால், அதற்கு அவரது நடிப்புப்பாணியை அவர் மாற்றிக்கொள்ளவேண்டும்).
இதோ ராஞ்ஜனாவில் இருந்து சில அட்டகாசமான பாடல்கள்.
//80க்களின் காலகட்டத்தில்தான் இப்படிப்பட்ட வில்லன் வருவதை பார்த்திருக்கிறேன்.//
படமே 80ஸ்லதான் நடக்குதுன்றது உங்க்ளுக்கு புர்ல, அதான் பாட்டெல்லாம் எம்.எஸ்.வி ஸ்டைல்ல வேணும்னு ரஹ்மான்ட்ட கேட்டேன், டெலிபோன் பாத்தீங்கள்ள… அதான் வில்லன 80ஸ் டைப்புல புடிச்சேன். ஆனா, அந்த பாயின்ட்டை நீங்க கரெக்ட்டா கண்டுட்டேள்.
போனையும் பாட்டையும் புடிச்சேள், புல்லட்டை விட்டுட்டேளே மிஸ்டர் கோலா
அட புல்லட்டை கூட விட்டுரலாம். சுவத்துல இருக்கும் கேலண்டரை விட்டுட்டேளே . அதுல 2010 காட்டுதே
போலி ஐடிக்களில் வருபவர்களை சுறிலும் நெருப்பு வைத்து எரித்து விடுவேன்.
வொய் ஸோ சீரீஸ்?
மரியானில் உறுத்திக்கொண்டிருந்த ‘அழகை ரசி” ஒளிப்பதிவு என்பது மிகச்சரி!
நான் மட்டும் தான் அப்படி பார்த்துக்கொண்டிருந்தேனோ என்று யோசித்தேன்.பரவாயில்லை..!
அந்தளவுக்கு கமெரா மேன் செயல்பட்டிருக்கிறார்!
ஆமாம். அவரை பற்றி நிறைய கேள்விப்பட்டேன். அதைப்பற்றி பிறகு பேசலாம் :-).
அந்த புருவம் matter சூப்பர். கடற்கரையோரம் எந்த beauty parlour ல eyebrow எடுத்தானுங்க @mariyaan parvathi
அங்கதான் பிரச்னை
3 படத்திற்கு பிறகு தனுஷ் தனது நடிப்பை மட்டுமே அபரிமிதமாக வெளிபடுத்தும் கதா பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிபதாகவே எனக்கு தோன்றுகிறது ..
படத்தில் அந்த புருவம் கொஞ்சம் அல்ல ரொமபவே உறுத்தியது.
அந்த மாதிரி தனுஷ் தேர்ந்தெடுப்பது எனக்கு புடிச்சிருக்கு. ஆனா அதுக்கு ஸ்கோப், மரியான்லையும் ராஞ்ஜனாலயும் இருந்தாலுமே, அந்த ரெண்டு படங்களும் ஸ்லோ மூவீஸா போயிடுச்சு. அதான் பிரச்னை
மரியான் படம் பார்த்தபோது எனக்கு அரைகுறையாகவே பிடித்தது….ஏன் என்று யாராவது கேட்டால் என்னால் முழுமையானதொரு பதிலை சொல்லமுடியவில்லை…! படத்தில் இனம்புரியாத துறுத்தல்கள் இருந்ததை மட்டும் என்னால் உணர முடிந்தது….! எனக்குள் எழுந்த அந்த இனம்காணமுடியா துறுத்தல்களை உங்களது இந்த பதிவின் மூலம் இனம் கண்டு கொண்டேன்…! – நன்றி..!
வெள்ளி மலரில் உங்களது திரைக்கதை தொடர் வெகு அற்புதம்….! திரைக்கதை சம்மந்தமாக எனக்கு இருந்த பல சந்தேகங்களை தீர்த்து வைத்தது உங்கள் ரைட்டிங் ஸ்டைல்….! எளிமையான வார்த்தைகளால் கட்டுரையை நகர்த்திக் கொண்டு போவதற்கு மிக்க நன்றி….!!!!!
நன்றி வசந்த்… Cheers 🙂
நெய்தலும் பாலையும் கலக்கும் இடத்தைப் பயன்படுத்தியது, நெய்தல் நிலக் காதலன் அத்தினைக்குரிய கருப்பொருளை காதலிக்கு பரிசாக தருவது என ஒழுங்காகச் செய்த இயக்குனர், பாடல் காட்சியில் நெய்தலோடு தொடர்பில்லாத மருத நிலத்தைப் பயன்படுத்தியதை எல்லாம் தலையிலடித்துக் கொண்டு பார்க்க வேன்டியதாய் இருக்கிறது. ஏன் இத்தனை குழப்பமோ?
நெய்தல், பாலை – இந்த மாதிரி ஒரு கோணத்துல நான் யோசிக்கவே இல்லையே …. பாரத்பாலாவுக்கு இந்த நெய்தல், பாலை, மருதமெல்லாம் தெரிஞ்சிருக்கும்னு நம்புறீங்க ?
அவருக்குக் கண்டிப்பாத் தெரியுங்க, அதுக்குத்தான் கூடவே ஜோ.டி.க்ரூஸ், குட்டி ரேவதின்னு பல பேரை கூடவே வச்சி சுத்துனது.
என்னாது மரியான் ரிலீஸ் ஆயிருச்சா ?!!!!???!!! என்னாது ராஞ்சனாவும் ரிலீஸ் ஆயிருச்சா..!!!??!!!!
http://publichubs.com/blogimages/hub/101-6-vijays-friends-tamil-movie.jpg
ஆனா விமர்சனம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டு தல..!! 🙂
//ஆனால் ஒரே குறை – ரஹ்மானின் இசையில் தனுஷுக்கு ஒரு பாடலைக் கொடுத்திருக்கலாம். அவரது குரல் எனக்குப் பிடிக்கும்.//
தல, எனக்கும் தான்.. இசை வெளியீடு பண்ணப்போ இதே ஃபீலிங்கி எனக்கும் இருந்துச்சி.. ஆனா தனுஷ் படத்துக்கு ரகுமான் இசை அமைச்சதே தனுஷ் போன ஜென்மத்துல செஞ்ச புண்ணியம்ங்கறது ஞாபகம் வந்து ஃபீலிங்கி போயிருச்சி.. என்னா புண்ணியமோ ஒன்னுக்கு ரெண்டு படம் அமைஞ்சிருச்சி.. தனுஷோட வாழ்நாள் சாதனைல தேசிய விருதோட சேத்து இதையும் சொல்லிக்கலாம்.. 🙂 🙂
அடப்பாவி. தனுஷை குறைஞ்சி எடை போட்டுட்டீங்களே… 🙂 … அவரு மேல நம்பிக்கை வைத்திருப்பவர்களில் நானும் ஒருத்தன் 🙂
அண்ணா, சும்மானா.. எனக்கும் தனுஷ் ரொம்ப பிடிக்கும்.. டை ஹார்டு விசிறி.. 🙂
ஆனா அவுர விட ரகுமான் ரொம்ப பிடிக்கும்.. அதான் சும்மானாச்சிக்கும்..!! தனுஷ் படத்துக்கு ரகுமான் ம்யூசிக் போட்டதுல தனுசுக்கும் பெருமைதானே.. அதத்தான்னா சொன்னேன்..!!
மிகவும் அலுப்பான ஒரு அனுபவம். பாடல்கள் கேற்பதோடு விட்டுவிடுங்கள்.:(
Expecting ship of theseus review..
தனுஷ் பற்றி நீங்கள் சொல்வது சரிதான்! அதே போல உங்களுடைய எந்த பதிவை படித்தாலும் ஒரே பாணியில்தான் இருக்கிறது! வசந்தத்தில் எழுதுவது வலைப்பூவில் எழுதுவது போல இருக்கிறது, முகநூலிலும் அதே எழுத்து நடை! மாற்றிக் கொள்ளலாமே?!
neenga ethana padam eduthu oscar vangirukinga boss ?
ஆஸ்கர் அவார்ட் ஒண்ணுதான் சினிமா பத்தி எழுத தகுதியானதா பிரபாகரன்? அப்புடி பார்த்தா நீங்க இதுவரை எல்லா படத்தையும் கேள்வியே கேக்காம ஒத்துக்குறீங்கன்னு வெச்சிக்கலாமா? எந்தப் படத்தையும் நீங்க யாருகிட்டயும் விமர்சிச்சதே இல்லையா?
ஒளிப்பதிவு தொழில்நேர்த்தி எப்படி பலவீனமாகும்? புரியவில்லை. யாராவது விளக்கலாம்
இதோ நானே விளக்குறேனே… பொதுவா ஒளிப்பதிவு, அந்தப் படத்துக்குன்னு இருக்கும் திரைமொழியோட ஒத்துவந்தாதான் அந்தப் படம் இன்னும் சிறப்பா இருக்கும். காரணம், ஒரு படத்தின் சுவாரஸ்யத்துக்கு திரைக்கதை தவிர ஒளிப்பதிவு, இசை, ஆர்ட், நடிப்பு போன்றவையும் அதனதன் பங்கை அளிக்குது. அப்போ ஒரு படத்துல அதோட கதையையும் மீறி ஒளிப்பதிவு அல்லது இசை அல்லது ஆர்ட் அல்லது நடிப்பு போன்றவை அதிகமா, துருத்திக்கிட்டு தெரிஞ்சா, அதுலதான் கவனம் போகுமே தவிர கதைல இண்ட்ரஸ்ட் கம்மி ஆயிடும்.
உதாரணம் – மரியான், காதல் வைரஸ் போன்ற படங்களில் ரஹ்மானின் இசை அட்டகாசமா இருக்கும். அந்த அளவு கதை அதுல இருக்காது. ஸோ ரஹ்மான் மேலதான் முழு கவனமும் போகும். அதேதான் இதுல ஒளிப்பதிவு. இதைத்தான் சொல்ல விரும்பினேன்.